முதல் பக்கம்

Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

Mar 4, 2020

மார்ச்-8 : மகளிர் தினத்தை முன்னிட்டு அறிவியல் இயக்கம் சார்பில் போட்டிகள் அறிவிப்பு

அன்புடையீர், வணக்கம்.

மார்ச்-8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என அறிவியல் இயக்கம் சார்பில் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டின் மகளிர் தினத்தை முன்னிட்டு பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன..



6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி - பாலின சமத்துவம், ஓவியப்போட்டி - பெண் விடுதலை, கவிதைப் போட்டி - நாம் வெல்லுவோம் ஆகிய தலைப்புகளில் நடைபெறும். 9-12 வகுப்பு குழந்தைகளுக்கு கட்டுரை - பெண் கல்வி : நேற்று இன்று நாளை, ஓவியம்: சிகரம் தொட்ட பெண்கள், கவிதை -  சிகரம் நோக்கி ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.

கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை - இன்றைய பெண் குழந்தைகளின் நிலை, ஓவியம் - விண்ணைத் தொட்ட பெண் இனம் , கவிதை - சரிபாதிப் பெண்ணே ஆகிய தலைப்புகளிலும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு (பெண்கள் மட்டும்) கட்டுரை - பெண்ணும் பரிணாமமும், கவிதை - சரிபாதிப் பெண்ணே ஆகிய தலைப்புகளிலும் நடைபெறும்..

படைப்புகள் மார்ச் 25க்குள் வந்து சேர வேண்டும். மார்ச் 31 அன்று தேனி மாவட்ட அளவிலான முடிவுகள் www.tnsftheni.blogspot.com என்கிற வலைப்பக்கத்தில் வெளியிடப்படும்.

படைப்புகள் சொந்தமானதாகவும் இதுவரை வெளிவராத, புதிய படைப்புகளாக இருக்க வேண்டும்.

கட்டுரைகள் ஏ4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதைகள் எனில் 25 வரிகளுக்குள் இருக்க வேண்டும். ஓவியம் ஏ4 தாளில் வரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.

படைப்புகளில் பெயர், வகுப்பு மற்றும் பிரிவு, பள்ளி, கல்லூரி முகவரி தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அவசியம் குறிப்பிட வேண்டும்.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மாநில மையத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.. மாநில அளவிலான பரிசளிப்பு நிகழ்ச்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தேனி மாவட்ட படைப்புகள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: அருணா சுந்தர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மகளிர் தின போட்டிகள்-2020, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 203/9, நாராயணத் தேவன்பட்டி, தேனி மாவட்டம்- 625521 அலைபேசி: 9047140584

மேலும் விவரங்களுக்கு:
மு.தெய்வேந்திரன்
மாவட்டச் செயலாளர்
9080825194
தேனி மாவட்டம்

முத்துலட்சுமி
மாநில ஒருங்கிணைப்பாளர்
9994024245

Feb 27, 2018

பிப்.28-தேசிய அறிவியல் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு

அன்புடையீர் 

வணக்கம்.பிப்.28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா இயக்கத்துடன் இணைந்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50 பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாவட்ட அளவில் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.. 

போட்டி முடிவுகள்: 

4,5 வகுப்பு மாணவர்களுக்கான ஒளியோடு விளையாடு என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியின் இரா.ஹேமா வைஷ்ணவி முதல் இடத்தையும் கு.இலட்சுமிபுரம் அரசு துவக்கப் பள்ளியின் கு.மகாலட்சுமி இரண்டாம் இடத்தையும் காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பி.சுவேதா மற்றும் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தேவிபிரித்திஸ்கா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் வானில் மேரிகியூரி என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எஸ்.யுவதர்ஷனி முதல் இடத்தையும் வரதராஜபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எஸ்.சாய்குமார் இரண்டாம் இடத்தையும் பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியின் அஸ்ரூல் நிஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

9-12 வகுப்பு மாணவர்களுக்கான எனது பார்வையில் விஷன் இந்தியா-2020 என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் மு.சங்கவி முதல் இடத்தையும் புலிகுத்தி அரசு உயர்நிலைப்பள்ளியின் நா.சிவானி இரண்டாம் இடத்தையும் வடபுதுப்பட்டி ஸ்ரீமுத்தாலம்மன் மேல்நிலைப்பள்ளியின் செ.தாரணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

கல்லூரி மாணவர்களுக்கான டார்வினுக்கே என்றும் வெற்றி என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியின் என்.ஷர்மிளாதேவி முதல் இடத்தையும் இலட்சுமிபுரம் இரா.கௌசல்யா இரண்டாம் இடத்தையும் போடிநாயக்கனூர் வி.பவித்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

ஆசிரியர்களுக்கான இந்திய அறிவியல் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு.அ.ஞானதெரஸ் முதல் இடத்தையும் உப்பார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.ஜி.விஜயலட்சுமி இரண்டாம் இடத்தையும் உப்பார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் உதவி ஆசிரியை திருமிகு.வி.ஹேமலதா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 


ஆர்வலர்களுக்கான கட்டுரைப் போட்டியில் கம்பம் ஜெ.தனலட்சுமி முதல் இடத்தையும் ஆண்டிபட்டி எஸ்.ஆர்.எஸ்.ரெங்கநாதன் இரண்டாம் இடத்தையும் அல்லிநகரம் எஸ்.கௌசல்யா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

பரிசளிப்பு & பாராட்டு விழா: 
  • பரிசளிப்பு விழா பிப்.28 மாலை 5 மணிக்கு தேனி கான்வெண்ட் அருகில் உள்ள அம்பி வெங்கிடசாமி மக்கள் மன்றத்தில் நடைபெறும்.. 
  • போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
  • பள்ளி & மாவட்ட அளவில் முதல் மூன்று படைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.. 
  • பங்கேற்ற பள்ளிகளுக்கான நினைவுப்பரிசுகளும் வழங்கப்படும்.. 
  • அனுமதி இலவசம். 
அன்புடன் 
ஈ.ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
9789411022

Feb 14, 2018

பிப்.28-தேசிய அறிவியல் தின போட்டிகள்-2018

வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 35 ஆண்டுகளாக எழுத்தறிவு இயக்கம் தொடங்கி தொடர்ச்சியாக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கல்வி, அறிவியல் பரப்புதல் ஆகியவற்றிற்கான செயல்பாடுகளைக் கொண்டு செல்லும் மிகப்பெரும் தன்னார்வ அமைப்பாக இயங்கி வருகிறது. பிப்.28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அப்துல் கலாமின் விஷன் இந்தியா அமைப்புடன் பல்வேறு போட்டிகள், வினாடிவினா, அறிவியல் கண்காட்சி ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.  இந்நிகழ்வுகளில் தங்கள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.. 

Mar 8, 2016

மகளிர் தின போட்டிகள் அறிவிப்பு

கூடலூர் : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வெங்கட் அறிக்கை: கட்டுரைப்போட்டி: 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தலைப்பு-கல்வியல்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்.கவிதை: 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தலைப்பு - அணைகளை உடையுங்கள், ஆறுகள் பாடட்டும்.கவிதை: ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, தலைப்பு- புவியை பொதுவில் நடத்து.கதை: எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு, தலைப்பு-பறக்க மறந்த பறவை. சிறந்த படைப்புகளுக்கு மாவட்டம், மாநில அளவில் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேற்கண்ட தலைப்புகளின் படைப்புகள் மார்ச் 20க்குள் வெங்கட், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கதவு எண் 6, சவுடம்மன் கோயில் தெரு, கூடலூர், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94886 83229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Mar 7, 2016

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக மகளிர் தின போட்டிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் போட்டிகள்...


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. குடும்பம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு தினமும் மனதில் நினைத்து போற்றுதலுக்குரியது. உலகம் பெண்களால் இயங்குகிறது என்பது புதுமொழி.பெண்களின் பெருமைகளை போற்றும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போட்டிகளை அறிவித்துள்ளது...

அதன் விவரம் பின்வருமாறு...

கட்டுரைப்போட்டி
6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள்-தலைப்பு:கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம் போன்றவர்கள்..

கவிதைப்போட்டி
9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள்
தலைப்பு: அணைகளை உடையுங்கள், ஆறுகள் பாடட்டும்..

கவிதைப்போட்டி
ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள்
தலைப்பு: புவியை பொதுவில் நடத்து....

கதைப்போட்டி
எழுத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள்
தலைப்பு: பறக்க மறந்த பறவை ..


சிறந்த படைப்புகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.. மேற்கண்ட தலைப்புகளில்


படைப்புகள் மார்ச் 20 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டிய முகவரி: வி.வெங்கட், மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 6/10வார்டு, சௌடம்மன் கோயில் தெரு, கூடலூர்-625518, தேனி மாவட்டம், மேலும் தொடர்புக்கு அலைபேசி: 9488683929

Nov 30, 2015

தேனி மாவட்ட குழந்தைகள் தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு

23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.27-29) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.. அதில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இளநிலை, முதுநிலை இரு பிரிவுகளில் தமிழகம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. 

அதில் நம்முடைய தேனி மாவட்டத்திலிருந்து பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் கணிதமேதை சகுந்தலாதேவி துளிர் இல்ல மாணவி எ.பி.ஆர்த்திகா தலைமையிலான குழுவினரின் “நலிந்துவரும் தென்னை விவசாயத்தில் காலநிலையின் தாக்கம்” என்ற ஆய்வும் ஒன்று.. இக்குழந்தைகளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் அனைவரின் பாசத்திற்குரிய விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் வருகின்ற 27-31 தேதிகளில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று தங்களது ஆய்வறிக்கையினைச் சமர்ப்பிக்க உள்ளனர்.. நம்முடைய நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்குவர்..



தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொள்ளக்குடிய குழந்தை விஞ்ஞானிகளையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் எஸ்.ஞானசுந்தரி மற்றும் எம்.கே.மணிமேகலை ஆகியோரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் வி.வெங்கட் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகிறோம்..

Aug 15, 2015

ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின போட்டிகள்

கூடலூர், :ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலை ஆக்கத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், உலக ஒற்றுமைக்காகவும் மட்டுமே பயன்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: "அணுயுத்தத்தால் அகதிகளாய் குழந்தைகள்' என்ற தலைப்பில் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. "அணு ஆயுத குவிப்பால் அமைதி கிட்டுமா' என்ற தலைப்பில் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, "அணு ஆயுத போருக்கு அசோகர் சாட்சியானால்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி நடைபெறும். சுயஉதவிக்குழு மற்றும் ஆசிரியர்கள், ஆர்வலர்களுக்காக "அணு ஆயுத போட்டியும் அன்றாட உணவுக்கான போராட்டமும்' என்ற தலைப்பில் கதைப்போட்டியும் நடைபெறும். படைப்புகளை ஆகஸ்ட் 22 க்குள் அனுப்பவேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசும் கலந்து கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் பாராட்டு சான்றும் வழங்கப்படும். படைப்புகளை வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சவுடம்மன் கோயில் தெரு, கூடலூர், தேனி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். விபரங்களுக்கு 94886 83929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Oct 7, 2014

இளம் விஞ்ஞானியர் விருது-குழந்தைகள் அறிவியல் மாநாடு-வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் அறிவிப்பு-2014

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 21 ஆண்டுகளாக இளம் விஞ்ஞானியர் விருது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ மக்கள் அமைப்பு. அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், குழந்தைமையக் கல்விக்கான முயற்சிகள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வாசிப்பு முகாம்கள் என ஏராளமான அறிவியல், கல்வி விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

குழந்தைகள் பள்ளியில் படிக்கின்ற அறிவியலை வாழ்வியல் நடைமுறையோடு பொருத்திப் பார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவுகின்ற இம்மாநாட்டில் இந்தியா முழுவதுமாக சுமார் 9 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்து வருகின்றனர்.

மாவட்டத்திற்கு சராசரியாக 200 ஆய்வுகள் வீதம் மாநிலம் முழுவதும் 6000 ஆய்வுகள் வரையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு ஆய்வுக்குழுவிற்கு 5 பேர் வீதம் 6000 ஆய்வுகளின் மூலம் 30,000 குழந்தைகள் ஆண்டுதோறும் இந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இம்முப்பதாயிரம் குழந்தைகள் மூலமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் இலட்சக்கணக்கான மக்களையும் சென்றடைகின்றது. மாவட்ட / மாநில / தேசிய அளவிலான மாநாடுகள் நடைபெறும் இடங்களில் ஒவ்வொரு குழந்தையும் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைவருடனும் ஒன்றாகக் கலந்து பழகும்போது இந்தியாவின் தேசிய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை, நாட்டின் பன்முகத்தன்மையை நிச்சயம் உணரமுடியும்.

மேலும் கடந்த 6 ஆண்டுகளாக தெற்கு ஆசிய நாடுகளான நேபாளம், பூடான், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் எனப் பல நாட்டு குழந்தைகளும் ஆசிரியர்களும் கூட பங்கேற்றுவருகின்றனர். அவர்களுடன் பழகும் வாய்ப்பையும் இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் பெறுகின்றனர். 

மேலும் இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் நாட்டின் முக்கிய விஞ்ஞானிகளுடன் நேரடியாகவும், வீடியோ கான்பரன்சிங் மூலமும் கலந்துரையாடுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளாகக் கருதி கொண்டாடுகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் வாழ்வின் இலட்சியப் பயணத்திற்கு வித்திடுவதாக இம்மாநாடு அமைகிறது.



மாநாட்டின் மையக்கருப்பொருள்:

இந்த ஆண்டிற்கான மையக் கருப்பொருளாக வானிலை மற்றும் காலநிலையைப் புரிந்துகொள்வோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஏற்படக்கூடிய வெப்பம், மழையளவு, ஈரப்பதம், காற்றழுத்தம் இவைகளில் காணப்படும் மாறுபாடுகளை வானிலை என்றும் ஒரு மாதமோ அல்லது வருடமோ அல்லது குறிப்பிட்ட கால அளவின் வானிலைத் தொகுப்பை நாம் காலநிலை என்றும் குறிப்பிடுகின்றோம்.

வானிலை மற்றும் காலநிலையைத் தீர்மானிக்கும் இயற்கை காரணிகளாக உயரத்தையும் நில மற்றும் நீர் அமைப்புகள், அதில் அமைந்துள்ள தாவர விலங்கினங்களையும் குறிப்பிடுகிறோம். வானிலைக்கும் காலநிலைக்கும் இயற்கை காரணிகளுக்கும் பிரிக்க இயலாத தொடர்பு உண்டு. இதில் எங்கு மாற்றம் எங்கு நிகழ்ந்தாலும் பாதிப்பு நிச்சயம் இருக்கும். அனுகூலமான நிலை ஒரு காலத்தில் இருந்தாலும் மனிதத் தலையீடுகளால் ஏராளமான பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றது. அது நம் வாழ்வாதாரச் சூழலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் சூழலை, சூழலின் வானிலை மற்றும் காலநிலையைப் பற்றி புரிந்துகொள்ளும் விதமாகவும் எதிர்கால தலைமுறையினரிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவுமே இத்தலைப்பு மையக்கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொதுத் தலைப்பின் கீழ் 6 துணைத்தலைப்புகள் உள்ளன. அவை...

1. நம்மைச் சுற்றியுள்ள வானிலை மற்றும் காலநிலை..

2. வானிலை மற்றும் காலநிலையில் மனிதத் தலையீடுகளால் ஏற்படும் விளைவுகள்..

3. சூழல் மண்டலமும் வானிலை & காலநிலையும் ...

4. சமூகம், கலாச்சாரமும் வானிலை & காலநிலையும் ...

5. விவசாயமும் வானிலை & காலநிலையும் ...

6. ஆரோக்கியமும் வானிலை & காலநிலையும் ...



மாநாட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:

இந்தியா முழுவதும் உள்ள 10-17 வயதுக்குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம். அரசு, தனியார், மெட்ரிக் என அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்கலாம். பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளும் இரவுப்பள்ளி மற்றும் துளிர் இல்லக் குழந்தைகள், சிறப்பியல்புக் குழந்தைகள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகள் என அனைவரும் பங்கேற்கலாம். உரிய வயது மட்டுமே ஒரே தகுதி..

இம்மாநாட்டிற்கான் ஆய்வினை குழுவாக மேற்கொள்ள வேண்டும். ஒரு குழுவிற்கு 3 முதல் 5 பேர் வரை இருக்கலாம். ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

வழிகாட்டி ஆசிரியராகச் செயல்படுபவர் ஆசிரியராகவோ, தன்னார்வலராகவோ, பெற்றோராகவோ கூட இருக்கலாம்.

ஆய்வு எப்பொழுதும் உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகள் உள்ளதாய் இருக்கவேண்டும். ஒரு மாவட்டத்திற்குரியவர் அடுத்த மாவட்ட தகவல்களை எடுத்து ஆய்வு மேற்கொள்ளுதல் கூடாது.

ஆய்வு சோதனையாகவோ கணக்கெடுப்பு முறையாகவோ மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தியதாகவோ இருக்கலாம். ஆனால் உயிர்ப்பொருட்கள், ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் மற்றும் மனிதனின் உணவு, பானம் ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல் கூடாது.

இந்நிகழ்வு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி சிந்தனையை வளர்த்து அதற்கு அறிவியல் கண்ணோட்டத்தோடு உரிய வடிவம் கொடுக்கும் நல்ல வாய்ப்பை அளிக்கும் மாநாடே தவிர போட்டி அல்ல. 

10-13 வயதுடைய இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 14-17 வயதுடைய முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும். ஆய்வறிக்கையை தட்டச்சு செய்தோ , கையெழுத்திலோ சமர்ப்பிக்கலாம்.

ஆய்விற்கான செலவு ரூ.250க்கு மிகாமல் இருக்க வேண்டும்.



வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்:

இந்த ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகச் செயல்பட விரும்பும் ஆசிரியர், பெற்றோர், ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாம் அக்.9 அன்று கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.



மாவட்ட / மாநில / தேசிய மாநாடு நடைபெறும் விபரம்:

தேனி மாவட்ட அளவிலான மாநாடு நவம்பர் இரண்டாவது வாரம் தேனியிலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் இறுதியில் தஞ்சாவூரிலும் தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் நடைபெற உள்ளது.


தேனி மாவட்டத்தின் இளம் விஞ்ஞானியர்:

நமது மாவட்டத்தில் கடந்து 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆய்வுகள் குழந்தைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் ஆர்.நிவேதா என்ற மாணவி (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன் பட்டி) நாகலாந்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2009ஆம் ஆண்டில் ஷெரின் பர்கானா என்ற மாணவி (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன் பட்டி) குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2010ஆம் ஆண்டில் செல்லத்துரை என்ற மாணவன் (எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, கோம்பை) சென்னையில் நடைபெற்ற மாநாட்டிலும் 2011ஆம் ஆண்டில் பொ.சுரேந்தர் என்ற மாணவன் (விக்ரம் சாராபாய் துளிர் இல்லம், கூடலூர்) ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் 2012ஆம் ஆண்டில் ஜெனிபர் பாத்துமா என்ற மாணவி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்) வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டிலும் 2013ஆம் ஆண்டில் என்.லிசா என்ற மாணவி (அரசு மேல்நிலைப் பள்ளி, ஜி.கல்லுப்பட்டி) போபாலில் நடந்த மாநாட்டிலும் கலந்துகொண்டு குழந்தை விஞ்ஞானியர் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் விபரங்களுக்கு: 
 வி.வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர்:8870703929
தே.சுந்தர், மாநிலச்செயலாளர்: 9488011128 

Sep 30, 2014

செப்.5 ஆசிரியர் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு -2014

அன்புடையீர், வணக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களுக்கான கவிதை, கட்டுரைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. மாவட்ட அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:

9-12 வகுப்பு மாணவர்களுக்கான என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர் கட்டுரைப்போட்டியில் சின்னமனூர் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.கிருபமதிவதனி முதலிடத்தையும் ஜி.கல்லுப்பட்டி புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.திவயதர்ஷினி இரண்டாமிடத்தையும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவன் அ.தீபக் ராஜ் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

ஆசிரியர்களுக்கான வகுப்பறையில் வசந்தம் கட்டுரைப்போட்டியில் பழனிசெட்டிபட்டி ஆசிரியை கெ.மணிமாலா முதலிடத்தையும் கூடலூர் அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் தெ.அழகேசன் இரண்டாமிடத்தையும் சீலையம்பட்டி பாரதி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை த.ச.பத்மாவதி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

கல்லூரி மாணவர்களுக்கான இப்படித்தான் இருக்கவேண்டும் வகுப்பறை என்ற கவிதைப்போட்டியில் வீரபாண்டி தேனி கலை அறிவியல் கல்லூரி மாணவி ஈ.பாண்டீஸ்வரி முதலிடத்தையும் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி ரேவதி விஸ்வநாதன் இரண்டாமிடத்தையும் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவி எ.அரபத் நிஷா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். ஆர்வலர்களுக்கான அரசுப்பள்ளிகள்: நேற்று இன்று நாளை கட்டுரைப்போட்டியில் ஆண்டிபட்டி ஜெ.எட்வர்டு இன்பராஜ் முதலிடமும் தேவாரம் இரா.வே.இளங்கோவன் இரண்டாமிடமும் மொட்டனூத்து துரை.சுப்ரமணியன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

வெற்றிபெற்ற, போட்டிகளில் பங்குபெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர், மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச்செயலாளர் வெங்கட்ராமன், மாவட்டப்பொருளாளர் மஹபூப் பீவி, மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துக்கண்ணன் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Feb 24, 2014

பிப்ரவரி-28 தேசிய அறிவியல் தினம்-போட்டிகள்

வணக்கம்.. இந்தியர்களின் அறிவியல் சாதனையை இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னரே தனது இராமன் விளைவு எனும் அற்புத கண்டுபிடிப்பின் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியவர் சர்.சி.வி.இராமன்.1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று வானம்,கடல் ஆகியவை நீல நிறமாக இருப்பதற்கான காரணத்தை தனது இராமன் விளைவு எனும் தத்துவத்தின் மூலம் சி.வி.இராமன் கண்டுபிடித்தார்.அவரது சாதனையை போற்றும் வகையில் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக நாடு முழுவதும் வெகு சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.அறிவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் தேசிய அறிவியல் தினத்தை தேனி மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெகு சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக பள்ளி.கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய,கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.வகுப்புகள்,தலைப்புகள் பின்வருமாறு…..

ஓவியம்:  5,6,7,8 ம் வகுப்பு : அறிவியலும் சுற்றுச்சூழலும் : A4 அளவு சார்ட்


கட்டுரை: 9.10,11,12 ம் வகுப்பு : உள்ளூர் வளர்ச்சியில் அறிவியல் : 4 பக்கம் மிகாமல்

கட்டுரை: கல்லூரி :சமூக வளர்ச்சியில் அறிவியலின் பங்கு : 6 பக்கம் மிகாமல்

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
வருகிற பிப்ரவரி 28(வெள்ளிக்கிழமை) 

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்படும்…..

மாணவர்கள் தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

க.முத்துக்கண்ணன்(தேசிய அறிவியல் தினம்-போட்டிகள்)

வார்டு-20 கதவு எண்-2,வ.உ.சி தெரு,

கூடலூர்.625518.தேனி மாவட்டம்..

அன்புடன் 

வி.வெங்கட்ராமன்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.தேனி மாவட்டம்.

Sep 14, 2013

மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச்செயற்குழு கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

1.மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்த மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர தபேல்கர் அவர்கள் புனேயில் படுகொலை செய்யப்பட்டத்தைக் கண்டித்தும்,அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் தீர்மானமாக நிறைவேற்றுகிறது.


2.இன்றைக்கு நாடகங்களுக்கும்,சினிமாவிற்கும் தணிக்கைக் குழு இருப்பதுபோல் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களில் வருகிற விளம்பரங்களுக்கும் தணிக்கைக்குழு அமைக்க வேண்டும்.தொலைக்காட்சிகளில் வருகிற பெரும்பாலான விளம்பரங்கள் அறிவியலுக்குப் புறம்பானதாக இருப்பதால் எல்லாம் விளம்பரங்களையும் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே ஊடகங்களில் வெளியிட வேண்டும் என செயற்குழு கோருகிறது.


3.இந்திய அரசு தற்போது கொண்டுவர முயலும் உயிரித்தொழில் நுட்ப மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்றும் நிறைவேற்றக் கூடாது என்றும் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.கூட்டாட்சி தத்துவம் கோலோச்சும் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய மத்தியப்படுத்தப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட்தில்லை என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது. மாநில சுயாட்சியை பாதிக்கும் எந்தவொரு சட்டமும் ,மாநிலங்கள் நலனில் அக்கறையுள்ளவர்களிடமும் விவாதம் நட்த்திய பின்னரே இம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.எனவே இந்த உயிரி தொழில் நுட்ப மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படக்கூடாது என கேட்டுக்கொள்கிறது.


4.மத்திய அரசால் 2010ல் மருத்துவ மனைகளை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.இச்சட்டத்தில் தரமான சிகிச்சை,குறைந்த கட்டணம்,நோயாளிகளின் உரிமை காத்தல்,மருத்துவ சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை ,மருத்துவமனைகளை மூடக்கூடாது.மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உட்படுத்தி திருத்தப்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என செயற்குழு கோருகிறது.

Sep 12, 2013

7வது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு-2013:

அறிவியல் கற்பிக்கும் பணியில் இருப்போர்க்கு அறிவியல் கல்வி மற்றும் கற்பித்தல் குறித்த அவர்களின் அறிவை, திறமையை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டும் அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுக்கும் பொருட்டும் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் அறிவியல் & தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புகளால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

மாநாட்டின் நோக்கம்:
அறிவியல் கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களின் விமர்சனப்பூர்வமான கருத்துகளை வெளிக்கொண்டுவருதல், அதே நேரத்தில் அவர்களை உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலுமாக அத்துறையில் நிபுணத்துவம் பெறச்செய்தல்.

அறிவியல் கோட்பாடுகளை, விதிமுறைகளை விளக்க ஆசிரியர்கள் சுயமாகக் கண்டுபிடித்து பயன்படுத்தும் அவர்களது வகுப்பறை சார்ந்து பயன்படுத்தும் புதிய வழிமுறைகளையும் எளிய, குறைந்த செலவிலான அல்லது செலவற்ற கற்றல் கற்பித்தல் கருவிகளையும் வெளிக்கொண்டு வருதல், ஊக்குவித்தல்.

அறிவியல், தொழில்நுட்பத்துறையில் ஆய்வுகளை ஊக்குவித்தல்,

நடைமுறைப் படுத்தப்படுகின்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் சூழலில் அறிவியல்பூர்வமான கல்வியில் விளைவுகள் குறித்த ஒரு பரந்த, விரிந்த கருத்துப்பரிமாற்றத்தினை உருவாக்குதல், அதன் மூலமாக தரமான கல்வியை மக்களுக்கு வழங்குதல்.

நடைமுறையில் இருக்கின்ற கல்வி அமைப்பிற்கு அப்பால் நாட்டின் தன்னிறைவான வளர்ச்சிக்கு உதவுகின்ற புதிய கல்விக்கோட்பாடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகளை ஊக்குவித்தல் ஆகியவை இம்மாநாட்டின் நோக்கங்களாக உள்ளன.

மாநாட்டில் பங்கேற்கக் கூடியவர்கள்:

துவக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், அனைவரும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பரப்பும் பணிகளை மேற்கொள்கின்ற அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் பங்கேற்கலாம்.

மையக் கருப்பொருள்: நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் கல்வி:
அறிவியல் ஒன்றால் மட்டுமே நாட்டில் நிலவுகின்ற பசிக்கொடுமையையும் வறுமையையும், சுகாதாரக் குறைபாடுகளையும், எழுத்தறிவின்மையையும், மக்களிடையே இருக்கின்ற மூடப்பழக்கவழக்கங்களையும், கண்மூடித்தனமான நடைமுறைகளையும் குருட்டு நம்பிக்கைகளையும் களைய முடியும்.. லட்சக்கணக்கான மக்கள் பசியால் வாடுகின்ற நாட்டில் வீணாகும் இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தும் நிலையைக் கொண்டுவரமுடியும்- பண்டிட்.ஜவஹர்லால் நேரு-1960ல்.. அலகாபாத் பல்கலை விழாவில்..

நிலைத்த நீடித்த வளர்ச்சி ஒன்றே இந்தியாவின் அடிப்படைத் தேவையாக இருக்க முடியும்-அபதுல் கலாம்.

ஆக நிலைத்த நீடித்த வளர்சிக்கு தேசமானது எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளை உணர்ந்து செயல்படவேண்டும். அதே நேரத்தில் மக்களை அறிவியல் விழிப்புணர்வுடையவர்களாக மாற்ற வேண்டும். அறிவியல் கொள்கைகளை நடைமுறையில் தங்களுடைய சொந்த வாழ்விலும் சமூகப் பிரச்சினைகளிலும் பயன்படுத்துபவர்களாக, அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுபவர்களாக உருவாக்க வேண்டும்.

நவீன அறிவியல் தொழில்நுட்பங்களே இன்றைய வாழ்க்கையின் இயக்குசக்தியாக இருக்கின்றன. இந்த நேரத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களில், செயல்பாடுகளில் மிக ஆழமான அறிவியல்பூர்வமான தலையீடுகளின் அவசியம் அதிகரித்திருக்கிறது. ஒரு அறிவியல் பூர்வமான சமூகத்தில் இயல்பாகவே சிக்கலுக்கான தீர்வுகளை எளிதாகக் கண்டறிதல், ஆழமாகச் சிந்தித்தல், இணைந்து செயல்படுதல், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துதல், தொடர்ந்து கற்றல் ஆகிய பண்புகளைக் கொண்டவர்களாக மக்கள் திகழமுடியும். ஆக கல்வியை, குறிப்பாக அறிவியல் கல்வியை முழுமையாகக் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே நிலைத்த வளர்ச்சி என்ற இலக்கை எட்ட முடியும்.

துணைக்கருப்பொருட்கள்:


1.நிலைத்தகு வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு


Ø அறிவியல் மற்றும் கணிதத்தினை நன்கு கற்றல் கற்பித்தல்:


பாரம்பரியமான கற்பித்தல் முறைகளிலிருந்து வேறுபட்டு ஆசிரியர்கள் பின்பற்றக்கூடிய/ அறிமுகப்படுத்தக்கூடிய கதை கூறுதல், விளையாட்டு முறை, புதிர்கள், வினாடிவினா, களப்பயணம், தனியாள் ஆய்வு போன்ற முறைகளால் ஏற்படும் கற்றல் விளைவுகளை ஒப்பிட்டு ஆய்வுகள் செய்தல்..

Ø அறிவியல் உணர்வை மேம்படுத்துதல்:

அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் அறிவியல் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதோடு மாணவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அறிவியல் கற்பித்தலால் கற்றலால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள நடத்தை மாற்றங்கள், மனப்பான்மைகள் குறித்த ஆய்வுகள், அளவீட்டிற்கான புதிய கருவிகள், மதிப்பீட்டு உத்திகள் தொடர்பான ஆய்வுகள்..

Ø அறிவியல் கல்வியில் பல்லூடகம், அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் எளிய அறிவியல் பரிசோதனைகள்:

அறிவியல் கற்பித்தலில் ஆசிரியர்களின் ஈடுபாடும் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்கள் பயன்படுத்திய புதிய, எளிய கற்றல் கற்பித்தல் கருவிகளால் நிகழ்ந்த கற்றல் அடைவை முன், பின் தேர்வுகளால் அளவீடு செய்தல்.

Ø அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தலில் புதுமைகளைப் பயன்படுத்துதல்:

ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பயன்படுத்திய புதுமையான கற்பித்தல் முறை, அணுகுமுறை, செயல்திட்டங்கள் குறித்த ஆய்வுகள்..

Ø ஆசிரியர்களுக்கான தரமான பயிற்சி:

கல்வியின் வெற்றியில் ஆசிரியர்களின் பங்கே முதன்மையானது. எனவே அவர்களுக்கான பணிமுன், பணியிடைப் பயிற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே ஆசிரியர் பயிற்சி சார்ந்த நடைமுறைகள், தேர்வு நடைமுறைகள், இருக்கின்ற பொதுவான நிலைமை, பயிற்சி உத்திகள் போன்ற ஆசிரியர் பணியை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள்..

Ø அறிவியல் கல்விக்கான ஒருங்கிணைந்த கல்வி முறை:


மாணவர்களின் தனியாள் வேற்றுமைகளுக்கேற்ப, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட புதிய கற்பித்தல் முறைகள், கருவிகள் குறித்த ஆய்வுகள்..



2. பாரம்பரிய அறிவு, பழக்க வழக்கங்கள் மற்றும் நிலைத்தகுவளர்ச்சி:

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்களிடையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியமான பழக்கவழக்கங்கள், புரிதல்கள் குறிப்பாக நிலம், விலங்குகள், தாவரங்கள், சுற்றுச்சூழல் குறித்தவை. பயிர்பாதுகாப்பு, விலங்குகளைப் பேணுதல், வானிலை, காலநிலையை முன்கூட்டியே கணித்தல், உடல்நலம், ஊடுபயிரிடுதல், நிலவளத்தை நிர்வகித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை உற்றுநோக்குதல். அவற்றில் இருக்கின்ற அறிவியல் பூர்வமான நடைமுறைகளை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைத்தல் போன்றவை.

Ø பாரம்பரிய அறிவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள அறிவியலை கண்டறிதல்:

Øநிலைத்தகுவளர்ச்சிக்காக பாரம்பரிய அறிவினையும் பழக்கவழக்கங்களையும் பயன்படுத்துதல்

3 .சமூகத்திற்கான அறிவியல்:

சமூகத்தில் நிலவுகின்ற பல்வேறு செயல்பாடுகளில் உள்ள அறிவியல் அணுகுமுறைகள், பிற்போக்கு மூடநம்பிக்கைகள், நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் வாழ்வில் இயல்பாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் இந்த உபதலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படலாம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பிரச்சார அமைப்புகளின் தொடர்முயற்சிகளின் விளைவாக குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட சமுதாய மக்களிடையே அல்லது பொதுவாக சமூகத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை இத்தலைப்பின் கீழ் மேற்கொள்ளலாம்.

Ø மூடநம்பிக்கைகளை களைவதில் அறிவியலின் பயன்பாடு

Ø சுகாதாரம் மற்றும் சுத்தம்,விவசாயம், சக்தி சுற்றுச்சூழல் தண்ணீர் போன்றவற்றின் பங்களிப்பில் அறிவியல்

Ø அறிவியல் பரப்புவதால் ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பான ஆய்வுகள்

முக்கிய தேதிகள்:
பதிவுப்படிவம், ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரை அனுப்பக் கடைசி நாள் 2013 அக்டோபர் 10. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு முடிவு விவரங்கள் அக்டோபர் 20ம் தேதிக்குள் தெரிவிக்கப்படும். தேசிய அளவிலான மாநாடு நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெறும். தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அனுப்பவேண்டிய முகவரி: ashokntsc@gmail.com, tnsf.kalvikulu@gmail.com

கூடுதல் விவரங்கள்:

தயாரிக்கும் கட்டுரையானது A4 தாளில் 12 ஆம் எண் எழுத்துருவில் times new roman எழுத்துருவில் 1.5 இடைவெளியில் இருக்கவேண்டும். சுமார் 3000 முதல் 4500 வார்த்தைகளில் கட்டுரை அமைதல் நலம். போஸ்டராகவும் தயாரிக்கலாம் அதன் வடிவமைப்பு 70செமீ X 55 செமீ ஆக இருக்கலாம்.

ஆய்வுக்கட்டுரைகளானது வழக்கம் போல ஆய்வுச் சுருக்கம், முன்னுரை, நோக்கங்கள் அய்வு முறை, புள்ளிவிவரங்கள் சேகரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், ஆய்வு முடிவுகள், எதிர்கால திட்டங்கள், நன்றியுரை, மேற்கோள் நூல்கள், இணையதளங்கள் போன்ற உள்ளடக்கத்தில் இருக்கவேண்டும். கூடுதல் விவரங்களை www.ncstc-network.org, (ஆங்கிலத்தில்) www.tnsftheni.blogspot.com (தமிழில்) என்ற இணையதள முகவரிகளில் காணலாம்

மேலும் விபரங்களுக்கு:

முனைவர்.என்.மாதவன், மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் அறிவியல் மாநாடு, 94437 24762 மின்னஞ்சல்:thulirmadhavan@gmail.com

தே.சுந்தர், மாநிலச் செயலாளர் / மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி உபகுழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அலைபேசி:9488011128 மின்னஞ்சல்:sundar.tnsf@gmail.com


Sep 8, 2013

நரேந்திரா தபோல்கர் படுகொலை: அறிவியல் இயக்கம் கண்டனம்


மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான நரேந்திரா தபோல்கர் படுகொலையை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வன்மையாகக் கண் டித்துள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆக. 25 அன்று புதுக்கோட்டையில் நடைபெற் றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

இந்நாட்டின் சில அரசியல்வாதிகளின் குருவாக விளங்கும் ஆசாராம் பாபு என் பவர் ஹோலி பண்டிகையின்போது சுமார் 5000 வறட்சியில் வாடுகையில் இது தேவை யற்றது என கொதித்தெழ்ந்தவர் தபோல்கர். தனது வாழ்வின் இன்னொரு பகுதியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போரா டினார். முற்போக்குவாதிகளும், சீர்திருத்தவாதி களும் தபோல்கர் கனவு கண்ட மூடநம் பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னி லும் வேகமாக எடுத்துச் செல்ல வேண்டு மென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தபோல்கரின் படுகொலைக்குப்பின் கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம் போல் நாடு முழு வதும் உடனடியாக இயற்றப்படுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வினை உருவாக்கு வதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட கிளைகள் அரங்கக்கூட்டங்கள் கண்டன அறிக்கை வெளியிடுதல், துண்டு பிர சுரங்கள் வெளியிடுதல், அரங்க கூட்டங்கள் நடத்துதல் ஆகிய பல்வேறு வடிவங்களில் இந்தப் படுகொலைக்கு எதிரான கண்டன முழக்கத்தை எழுப்புவதோடு தபோல்கரின் கனவு மெய்ப்பட நம்மால் இயன்ற பணி களை செய்யவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

21ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அறிவிப்பு-2013


 வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 20 ஆண்டுகளாக இளம் விஞ்ஞானியர் விருதிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு. கல்லாமையைப் போக்க தமிழகம் முழுவதும் அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சிகள், போஸ்டர் கண்காட்சிகள் என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

மாநாட்டின் நோக்கம்:
குழந்தைகள் பள்ளியில் படிக்கின்ற அறிவியலை வாழ்வியல் நடைமுறையோடு பொருத்திப் பார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவுகின்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்தியா முழுவதுமாக சுமார் 9 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். தேசிய அளவிலான மாநாட்டில் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்கின்ற குழந்தைகளுக்கு நமது நாட்டின் குடியரசுத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு  இளம் விஞ்ஞானி விருது வழங்கிச் சிறப்புச்செய்வது பொதுவான நடைமுறையாகும்.

மாநாட்டின் மையக்கருத்து:
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் உலகின் அன்றைய சூழல் மற்றும் தேவையை ஒட்டி ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாட்டிற்கான மையக்கருத்து அறிவிக்கப்படுகிறது. 1993ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட தலைப்புக்கள் விபரம் பின்வருமாறு:

ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் & பாதுகாத்தல்:
இந்த ஆண்டு 21ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான  பொதுத்தலைப்பாக ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1. ஆற்றல் வளங்கள் 2. ஆற்றல் அமைப்புகள், 3. ஆற்றலும் சமூகமும் 4. ஆற்றலும் சுற்றுச்சூழலும் 5. ஆற்றல் மேலாண்மை மற்றும் சேமிப்பு 6. ஆற்றல் திட்டமிடலும் மாதிரிகளும் ஆகியவை துணைத்தலைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தலைப்புக்களின் கீழ் குழந்தைகள் ஆய்வு மேற்கொண்டு மாநாட்டின்போது சமப்பிக்கவேண்டும்.

பங்கேற்க தகுதியுடையவர்கள்:
இந்தியா முழுவதும் உள்ள 10 முதல் 17 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்கலாம். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரவுப்பள்ளிகள், துளிர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் என எங்கிருந்தும் குழந்தைகள் பங்கேற்கலாம். பள்ளிசாராக்குழந்தைகளும் இடைநின்ற குழந்தைகளும் கூட பங்கேற்கலாம்.  பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டுமே.

மாநாட்டிற்கான சில விதிமுறைகள்:
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் தங்கள் ஆய்வை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். (பதிவு செய்யக் கடைசி நாள்: செப்டம்பர்,15)
3 முதல் 5 குழந்தைகள் இணைந்து குழுவாக மட்டுமே ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
10 முதல் 13 வயது வரை இளநிலையாகவும் 14 முதல் 17 வயது வரை முதுநிலையாகவும் கருதப்படும்.
இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயாரித்தல் வேண்டும்.
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கலாம்.
ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
தேர்ந்தெடுத்த தலைப்பு குறித்து மூன்று மாதகாலம் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆய்வுகள் எப்போதும் உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளவேண்டும்.
ஆய்வாளர் அடுத்த மாவட்ட தகவல்களைக்கொண்டு ஆய்வு செய்தல் கூடாது.
இணையதளத்தில் இருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்துகொண்டு வரக்கூடாது.
தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்கவேண்டும்.
ஆய்விற்கான செலவினம் ரூ.250க்குள் இருக்கவேண்டும்.

வழிகாட்டி பயிற்சி முகாம்கள்:
 இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் வழிகாட்டி ஆசிரியர்களாகச் செயல்படலாம். அவர்களுக்காக மாவட்ட அளவிலான பயிற்சி முகாமினை செப்டம்பர்,6 அன்று பெரியகுளத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் / ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆய்வு வழிமுறைகளை விளக்குகின்றனர். மேலும் ஆய்விற்கான விளக்கக் கையேடுகளும் பதிவுப்படிவங்களும் வழங்கப்படும்.

மாநாட்டிற்கான முக்கிய தேதிகள்:
மாவட்ட அளவிலான மாநாடு நவம்பர் முதல்வாரம் தேனியிலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் 29,30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் திருப்பூரிலும் நடைபெறும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் வாரணாசியில் நடைபெறுகிறது.

மாநாட்டில் தேனி மாவட்டத்தின் சாதனைகள்:
நமது தேனி மாவட்டத்தில் கடந்து 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆய்வுகள் குழந்தைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் ஆர்.நிவேதா என்ற மாணவி நாகலாந்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2009ஆம் ஆண்டில் ஷெரின் பர்கானா என்ற மாணவி குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2010ஆம் ஆண்டில் செல்லத்துரை என்ற மாணவன் சென்னையில் நடைபெற்ற மாநாட்டிலும் 2011ஆம் ஆண்டில் பொ.சுரேந்தர் என்ற மாணவன் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் 2012 ஆம் ஆண்டில் பெரியகுளம் மாணவி ஜெனிபர் பாத்திமா வாரணாசி இந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் கலந்துகொண்டு இளம் விஞ்ஞானியர் விருது பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் சார்பில் மாணவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக விருதுபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு:
               மாநாடு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு திரு.வி.வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எண்.8, குட்டியாபிள்ளைத்தெரு, கம்பம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி: 9488683929 / 9942112203 / 9789529655