முதல் பக்கம்

Showing posts with label கல்விக்கூட பகிர்வுகள். Show all posts
Showing posts with label கல்விக்கூட பகிர்வுகள். Show all posts

Apr 10, 2012

கணக்கும் இனிக்கும்-புதிய ஆசிரியன் கட்டுரை


 தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை கணக்கு! பிடிக்காத பாடம்  கணக்கு! பிடிக்காத வாத்தியார் கணக்கு வாத்தியார்! கணித ஆண்டு என்று சொன்னதுமே எனக்குச் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது. அதன்விளைவுதான் இந்த பகிர்வு. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு. ரோஜா டீச்சர் கணக்கில் வடிவியல் பாடம் நடத்துனாங்க. கையிலே வடிவியல் நோட்டு,  காம்பஸ் எல்லாம் எடுத்தாச்சு. வரையுறேன்.. வரையுறேன்.. தப்புத் தப்பா வருது.. கடைசி வரைக்கும் வட்டம் மட்டும் வரவேயில்லை.  நாங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம். டீச்சர் போட்டாங்க பாருங்க முதுகுல.. அன்னைக்குத் தொடங்கியதுதான் பகை.! ஒரு கட்டத்துல கணக்குப் பாடத்துக்குப் பயந்தே எட்டாம் வகுப்பிற்கு பிறகு நான் படிக்கவில்லை. திராட்சைத் தோட்டத்துக்கு காக்கா விரட்டப் போறேன்னு சொல்லி தெருத்தெருவாக நான் ஓட, எங்கப்பா சைக்கிள எடுத்துக்கிட்டு தேட... அது ஒரு சில வாரங்கள்...

ஒருவழியாக பக்கத்து ஊரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். அங்க ஒரு கணக்கு வாத்தியார். இன்னிக்கும் கூட சுருளிமுத்து வாத்தியார்`னா பலபேருக்கு டவுசர் நனைஞ்சுடும். அந்த அளவுக்கு அதிரடி மன்னன் அவரு. ஏண்டி, கெழவி புருஷா.. இந்தக் கணக்குத் தெரியலையா?ன்னு விட்டு விலாசுவாரு. பொதுத்தேர்விலும் கூட மிகக் குறைந்த மார்க் எடுத்தே நான் தப்பி வந்தேன். மேல்நிலை வகுப்பில் எந்த பிரிவு தேர்ந்தெடுப்பது என யோசிக்கையில் எந்த பிரிவில் படம் வரையும் தொல்லையில்லையோ, கணக்குச் சனியன் இல்லையோ- அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நான் படிக்கத் தயார் என வணிகவியல் பிரிவில் சேர்ந்தேன்..

அப்படி இப்படின்னு கவுன்சிலிங்கில் சீட் கிடைக்க ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கும் ஒரு கணக்கு வாத்தியார், மனுசன் சிரிக்கவே மாட்டார்.. பாஸ் பண்ணும் அளவுக்கு தியரி இருந்ததால் அங்கும் தப்பித்தேன். இப்ப நான் ஒரு அரசுப் பள்ளியில் வாத்தியார். என்னால் முடிந்த அளவு சின்சியராகப் பணிபுரிகிறேன். ஆனாலும் என் வகுப்பு மாணவர்கள் கணக்கில் அவுட்தான். என்னையும் அறியாமல் எனக்குச் சொல்லிக்கொடுத்த வாத்தியார்கள் போலவே நானும் கணக்கு வகுப்பில் செயல்பட்டிருக்கிறேன். அந்த வகுப்பில் மட்டும் எங்கிருந்துதான் வருமோ.. அவ்வளவு கோபம்! சிடுசிடுப்பு!

பின் நானாக உணர்ந்தேன். கணக்கு, அறிவியல் படிக்காமல் விட்டதால் நான் இழந்த வாய்ப்புகளை நினைத்தேன். நாம் புரிந்துகொண்ட நிலையில் இருந்து கற்பிக்காமல் மாணவர்கள் ஒரு கணக்கை, கருத்தை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என அறிந்து அதற்கேற்றவாறு கற்பிக்கவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஒரு கல்வி கருத்தரங்கில் கிடைத்த பாடம், என்னை அடியோடு மாற்றிவிட்டது என்றே சொல்லலாம். கடினமான பாடங்களை குறிப்பாக கணக்கு, ஆங்கிலம் போன்றவற்றை துவக்கநிலை வகுப்புகளில் கற்பிக்கும்போது குறைந்தபட்சம் அன்புடனாவது கற்பிக்க வேண்டுகிறேன். வகுப்பில் சிறுசிறு பயிற்சிகளின் மூலம் அவனுக்கு எளிய கணக்குகளில்  வெற்றிகிடைக்கச் செய்கிறேன். நம்பிக்கையூட்டுகிறேன். ஏனென்றால் இங்கு வெற்றிபெற வேண்டியது ஆசிரியரோ, கணக்குப் பாடமோ அல்ல.. மாணவன்! அதிக அளவு கணக்கு பாடங்களை நடத்தி அவனை ஒருபோதும் நான் மிரட்டுவதில்லை. விரட்டுவதில்லை. குறைந்த அளவு பாடம்.. அதிக பயிற்சி. விருப்பத்தை ஏற்படுத்திய பிறகு நீங்கள் போதும் என்றாலும் அவன் விடமாட்டான்.


சின்ன வகுப்புல இருந்தே மத்த பாடத்தில் எல்லாம் சிறப்பான மதிப்பெண்கள் எடுக்கும் என்னால் கணக்குல மட்டும் அவ்வளவு எளிதாக தேர்ச்சி கூட பெற முடியலை. காரணம்.. பிடிக்கலை! கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் என்னைப்பொறுத்தவரை ஒரே ஒரு வேண்டுகோள், கணக்கும் இனிக்கும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துங்கள். கணக்குப் பாடம் கடினம் என்பதை உடைத்தெறியுங்கள்! கணக்குப்பாடம் நடத்தச் செல்லும்போது கோபத்தை வாசலில் நிற்க வைத்துவிட்டு நீங்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள்.. நிறைய சிரியுங்கள்.. உடம்புக்கு நல்லது. உங்க மனசுக்கு நல்லது.!

பல நேரங்களில் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் திருக்குறள் ஒன்று உள்ளது...

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை யாதார்.(குறள் 650)

-தேனி.சுந்தர்-9488011128
நன்றி: புதிய ஆசிரியன்,ஏப்ரல்,2012_www.puthiyaaasiriyan.com

Mar 10, 2012

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்..



அன்று எங்கள் பள்ளியில் கம்பம் பகுதியில் பிரபலமான கண் மருத்துவமனை ஒன்றின் சார்பில் கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது..

வழக்கம்போல ஊசிபோடத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்து ஒன்று மற்றும்  இரண்டாம் வகுப்புகளுக்குள் ஒரே கலவரம்.. அழுகையால் பள்ளியே அல்லோல கல்லோலப் பட்டது.

சார்.. எனக்கு காய்ச்சல் இல்ல சார்.. கழுத்தக்கூட தொட்டுப்பாருங்க சார்.. இருமல் போயிருச்சு சார்.. மூக்கு ஒழுகல சார்.. ஊசிக்குப் பயந்த குட்டீஸ்கள் ஒரே கலாட்டா..

ஒருவழியாக ஊசிபோட வரல. கண் செக்கப் தான்னு சொல்லி சமாதானப் படுத்தி ஒவ்வொரு வகுப்பாக அனுப்பினோம்.

அடுத்து என்னுடைய மூன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒவ்வொருத்தராக அழைக்கப்பட்டனர். போர்டில் 1.. 2.. 3.. என 9 வரையிலான எண்கள் பல அளவுகளில் எழுதப்பட்டு மாணவர்களைப் பத்து அடி தூரத்தில் நிறுத்தி கேட்கும் எண்களைச் சரியாகச் சொல்கின்றனரா எனப் பரிசோதனை செய்யப்பட்டனர். சரியாகச் சொல்லி விட்டால் கண்பார்வையில் ஒரு பிரச்சனையுமில்லை..

பெரும்பாலான மாணவர்கள் சரியாகச் சொல்லிவிட்ட மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். ஆனால் நானும் என்னோடு பணிபுரியும் சக நண்பரும் ஒரு மாணவனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம்.. ஆமாம். அவன் பெயர் சங்கிலி மாசானம்.

நாங்கள் சுருக்கமாக அவனை சங்கிலி என்று கூப்பிடுவோம். மனவளர்ச்சி குன்றிய மாணவன். சங்கிலியோடு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் எல்லாம் இப்போது ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றனர்.

நம்மாளு இப்பதான் மூன்றாம் வகுப்பைத் தொட்டிருக்கிறான். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடங்கள்.. வெரி ஸ்ட்ராங் பவுண்டேசன்.. ஆனால் ஆளப்பார்த்தால் மூன்றாம் வகுப்பு மாணவனுக்கே உரிய வளர்ச்சிதான். சின்ன முகம். சிறுத்த உடல்..


பேசுவான். மாணவ ட்ரான்ஸ்-லேட்டர்களைப் பயன்படுத்திப் புரிந்து கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் அவனே தனது கோரிக்கைகளை விளக்கிப்பேச கூட ஒருத்தனைக் கூப்பிட்டு வருவான்.

இப்ப என்ன பிரச்சனை என்றால்.. சங்கிலிக்கு கண் சரியாகவே தெரிந்தாலும் 1,2,3-எண்கள் தெரிந்தால் தானே..! சங்கிலி என்ன சொல்லப்போகிறான் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தோம். ஆர்வமிகுதியில் எங்களோடு இன்னொரு நண்பரும் சேர்ந்து கொண்டார்.

சங்கிலி வந்தான். முதலில் வலது கண்ணை ஒருகையால் மூடிக்கொண்டு இடது கண்ணில் பார்த்தும் அடுத்து இடது  கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணில் பார்த்தும் எண்களைச் சரியாகச் சொல்ல வேண்டும்..

சங்கிலி சொல்லியே விட்டான். அதுவும் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட கண்களைத் தேய்த்துக் கொண்டும் உற்றுப் பார்த்துக்கொண்டும் சில எண்களைச் சொன்னார்கள்.. ஆனால் சங்கிலி டக்டக்`கென யோசிக்காமல் சொன்னான்.

சொன்னவன் அப்படியே போகாமல் எனக்கு நேரே வந்தான். “சார்.. நெறைய பேரு நான் நம்பரச் சொல்லமாட்டேன்னு நெனச்சாங்க சார். ஆனா கரெக்டா சொல்லிட்டேன் சார்..” எனச் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போய்விட்டான்.. அவனுடைய அந்தச் சிரிப்பில் மனவளர்ச்சி குன்றியவன் நான் மட்டும்தானா? என்ற கேள்விகளும் அர்த்தங்களும் நிறைந்திருந்தது.
-தேனி.தே.சுந்தர்

நன்றி: விழுது(ஆசிரியர் இணைய இருமாத இதழ்-ஜனவரி-பிப்ரவரி,2012)


Mar 5, 2012

உனக்குரிய இடம் எங்கே.....?- புதிய ஆசிரியன் கட்டுரை

 காமய கவுண்டன் பட்டியில் நாங்க பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் நல்லா படிப்பேன்.. நான் என்ன சொன்னாலும் பாராட்டுதான்.. அந்த அளவிற்கு ஆசிரியர்களுக்கு என்மேல் நம்பிக்கை.. ஆனால் சில நண்பர்கள் எந்த விதத்திலும் தன்னை ஆசிரியரும் பிறரும்  ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு தன்னை ஒருபோதும் வெளிப்படுத்திக் கொள்வதேயில்லை..

சில நேரங்களில் சரியான விடையையே சொல்லிவிட்டாலும் எங்க வாத்தியார் என்ன செய்யமாட்டார்.. பாராட்டவே மாட்டார். திட்டு மட்டுமே அவர்களுக்கு பரிசு. அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவன் தான் சரவணன்.. அவன் கெட்டிக்காரனுமில்லை.. அதே நேரத்தில் அவனால் வகுப்பறைக்கு ஒரு பிரச்சனையுமில்லை.. யாரோடும் அவ்வளவாக பேசுவதுகூட இல்லை.

அவன் எந்தவிதத்திலும் எங்களைப் பாதித்ததே இல்லை. ஒருநாள் தமிழாசிரியர் சங்கரலிங்கம் ஐயா அவர்களின் ஏற்பாட்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எங்க பக்கத்தில் உட்கார்ந்து ஏதோ ஒரு பாட்டை தன் வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டிருந்தான்.. யாருக்கும் கேட்டு தன்னை கிண்டல் செய்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருந்தான்..

சில சேட்டைக்கார நண்பர்கள், ஐயா, சரவணன் பாட்டுப்பாட போறானாம் என கொளுத்திவிட, சரி பாடு என அவரும் அனுமதி கொடுக்க, சிக்கினாண்டா மாப்ள என நாங்க விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க...

தங்கக் கலப்பை கொண்டு தரிசுழுகப் போனாராம்... சொக்கநாத சாமி.. என் சொக்க நாத சாமி.. கிராமத்துப் பாணியில், அதற்கேற்ற குரலில் ஒரு பாடலை எடுத்து விட்டான். ஒரே கைதட்டு.. நாங்க அதுவரை அவன் பாட பாத்ததுமில்லை, கேட்டதுமில்லை.. ஒரே ஆச்சரியம்.. பாராட்டு...

தேர்வு வந்தது. எழுதினோம்.. பிரிந்தோம்.. பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஏறக்குறைய எங்கள் நினைவுகளில் இருந்து சரவணன் என்ற கேரக்டர் மறைந்தே விட்டது. பத்து, இருபது நண்பர்கள் மட்டும் தொடர்பில் இருந்தோம்.. ஆளுக்கொரு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் ஒருநாள், பள்ளி முடித்துவிட்டு வழக்கம்போல இயக்கவேலை காரணமாக கம்பம் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.. பேருந்துக்காக யாரோ ஒரு நண்பர் தனியாக நின்று கொண்டிருப்பதைக் கண்டு அருகில் சென்று ஏறிக்கிங்க என்றேன்.. யாருன்னு பார்த்தா.. நம்ம சரவணன்.. வண்டியிலே போகும் போதே என்னடா எப்படி இருக்கன்னு கேட்டேன். என்ன சார் என்றான்.. பிறகு என்னை நினைவுபடுத்தினேன்..

அடுத்து விசாரிப்பு.. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. எம்.எ., பி.எட்., எம்.பில்., முடித்துவிட்டு இப்போ கிராமிய தாலாட்டுப் பாடல்கள் குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு-பி.எச்.டி.-செய்து கொண்டிருக்கிறேன் என்றான்.. எங்க ஊருக்கும் வந்து நிறைய பாடல்களைச் சேகரித்ததாகவும் சொன்னான்.. ஒருபக்கம் அளவில்லா மகிழ்ச்சி.. வியப்பு..  அதே நேரத்தில் அவனது குடும்பம் மிக வறுமையில் வாடுவதாய்ச் சொன்னபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

இருவரும் டீ சாப்பிட்டு விட்டு, கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.. பல்கலைக் கழகத்தில் நமக்குத் தெரிந்த அறிவியல் இயக்க பேராசிரியர்கள் சிலரது அலைபேசி எண்களைக் கொடுத்து, வேலைவாய்ப்புக்கு நிச்சயம் உதவுவார்கள் என்ற உறுதிமொழியும் கொடுத்தேன். அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கொடுத்தால் பாடுகிறேன் என்றான் சரவணன்.. மனம் நிறைந்த மகிழ்வோடு வீடு திரும்பினேன்.. மாடசாமி சார் சொன்னது போல இவனுக்கு எங்க வகுப்பறையில் ஒரு இஞ்ச் இடம் கூட யாரும் தரவில்லையே? என்கிற கேள்வி சரவணனுக்குப் பதிலாக என் வண்டியில் ஏறிக்கொண்டு என்கூடவே வந்தது.. இன்னும் இறங்கிய பாடில்லை.

(கட்டுரையாளர் அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் -அவரது தொடர்பு எண்:9488011128).

ஆசிரியருக்கு குறிப்பு: சரவணன் போட்டோவை நீங்கள் கேட்டதால் சிலபல முயற்சிகள் செய்து ஒருவழியாக சரவணன் வீட்டிற்கு வந்தபோது இரவு 10.40க்கு மேல் இருக்கும்.. கரண்ட் இல்லை. மண்ணெண்ணெய் விளக்கில் எனக்காக சில சொலவடைகளை எழுதிக்கொண்டிருந்தான்.

அப்போது முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டின்போது அவன்செய்த கிராமியத் தாலாட்டு பாடல்களில் சமூகப்பார்வை என்ற ஆய்வையும் எம்.பில்.காக செய்த தலித்திய நாட்டுப்புறக் கதைகள் என்ற ஆய்வையும் காண்பித்தான். இதை புத்தகமாக வெளிக்கொணர ஏதேனும் வழியுள்ளதா எனக்கேட்டான். அதற்கும் சில நண்பர்களைத் தொடர்பு கொள்ள வழியுண்டு என நம்பிக்கையளித்து திரும்பினேன். எதேச்சையான ஒரு சந்திப்பு பல நல்ல முயற்சிகளுக்கும் முடிவுகளுக்கும் வித்திட்டது மகிழ்ச்சியே..
-தேனி.சுந்தர்

நன்றி: புதிய ஆசிரியன்_மார்ச்_2012
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

Dec 16, 2011

புத்தகங்களை என்ன செய்வது ? -எஸ். ராமகிருஷ்ணன்

To add a library to a house is to give that house a soul. Your library is your portrait.

- Cicero

புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி என்று ஒத்துக் கொள்கிறவர்கள். புத்தகம் வைக்க இடமில்லை என்று சொல்வது என்னவிதமான மனநிலை, இது போல சங்கடங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் தானே இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் டி. எஸ். வெங்கட் என்ற நண்பர் ஒரு மின்னஞசல் அனுப்பியிருந்தார், இதே விசயத்தைப் பற்றி சென்ற முறை கோவை வந்த போது ஒரு நண்பரின் மனைவி என்னிடம் நேரடியாகவே சண்டையிட்டார், அநேகமாக வாசிக்கும் விருப்பம் உள்ள எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது

வாசிக்க விருப்பமுள்ளவர்கள் அத்தனை பேரின் கனவும் வீட்டில் ஒரு நல்ல நூலகம் அமைக்க வேண்டும் என்பது தான், ஆனால் அதை எங்கே வைப்பது, யார் பராமரிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கின்றன

ஒருவகையில் புத்தகங்களை வைக்க இடமில்லாத நெருக்கடி தான் புத்தகம் படிப்பதைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பேன், வீட்டில் மிகப் பெரிய நூலகங்களை அமைத்தவர்கள் அதன்பிறகு படிப்பதையே விட்டகதையை நான் அறிவேன், நெருக்கடியான இடத்திற்குள் மறைத்தும் ஒளித்தும் சண்டையிட்டும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களே நம்மை மறுபடி வாசிக்கத் தூண்டுகின்றன,

ஒரு வணிகநிறுவன உரிமையாளர் தனது தாத்தா வாங்கிச் சேகரித்து வைத்திருந்த இரண்டாயிரம் புத்தகங்களை என்னிடம் காட்டி, இது புத்தகங்களின் கல்லறை போலதானிருக்கிறது, முப்பது வருசமாக யாரும் இதில் ஒன்றைக்கூட புரட்டிப் படிக்கவேயில்லை, அதே நேரம் புத்தகங்களை கடைக்குப் போட மனதுமில்லை, இதை என்ன செய்வது என்று கேட்டார், இது இன்னொரு விதமான நெருக்கடி.

உண்மையில் நமக்கு விருப்பமான ஒரு நூறு புத்தகங்களே போதுமானது தான், அது எந்த நூறு என்று தெரியாமல் தான் பலநூறு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்,

வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை தேர்வு செய்வது ஒரு குறிப்பிட்ட மனநிலையே, அப்படிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகின்ற மனநிலையில் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் போய்விட்டால் அடையும் வேதனைக்காகவே புத்தகங்கள் பாதுகாக்கபடுகின்றன, இன்னொன்று புத்தகங்கள் கூட இருப்பது ஏதோவொரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன, அதுவும் ஒரு காரணம் தான்,

புத்தகங்களைச் சேகரிப்பதற்கு முன்பு அதை எதற்காகச் சேமிக்கிறோம், எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும், அத்துடன் புத்தகப்பூச்சி, கரையான், தூசியில் இருந்து அதை எப்படிப் பாதுகாப்பது என்பது முக்கியமானது, அதற்காக ஆண்டிற்கு ஒருமுறை புத்தகங்களை முறையாக உதறி வெயில்பட வைத்து கிருமிநாசினி அடித்து மறுமுறை அடுக்கவேண்டும்,

பல ஆண்டுகளாக புத்தகங்களுக்குள்ளாக அலைந்து நான் சுவாச ஒவ்வாமையால் அவதிப்படுகிறேன், மருத்துவர் சொல்லும் முதல் அறிவுரை எந்தப் பழைய புத்தகத்தையும் கையால் தொடாதே, பழைய நூலகம் எதற்குள்ளும் போகாதே என்பது தான், இரண்டையும் தவறாமல் செய்துவருகிறேன் நான், பின்பு எப்படி ஒவ்வாமை நீங்கும்,

என்னிடம் நாலாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன, அதில் பாதி அரிய புத்தகங்கள். முதற்பதிப்புகள். பல அரிய மொழியாக்கங்கள், இதை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாது என்று ஆங்காங்கே பிரித்து ஊருக்குக் கொஞ்சமாக தனியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்,

சமீபமாக இணையத்தில் கிடைக்கின்ற மின்னூல்களைப் படிக்கப் பழகி அதற்கென சோனி ஈபுக் ரீடரை வாங்கி அதில் ஐநூறு புத்தகங்களுக்கும் மேலாகச் சேகரித்து கையில் எடுத்துப்போய் பயணத்தில் படித்துவருகிறேன், கணிணியிலும் மடிக்கணிணியிலுமாக பலநூறு மின்னூல்கள் இருக்கின்றன, இவற்றைப் பொருள்வாரியாகப் பிரித்து தனியே தொகுத்து வைத்திருப்பதால் பயன்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இருபது புத்தகங்கள் வாங்கிவிடுகிறேன், நான் வாசிக்க வேண்டும் என அனுப்பபடும் கதை, கட்டுரை, கவிதைப்புத்தகங்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டிவிடும். இவை தவிர புத்தகக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகள் என்று வாங்கிக் குவித்த புத்தகங்கள் வீட்டில் நிரம்பிப் போயிருக்கின்றன, பலநேரங்களில் வாசிக்க பத்துத் தலைகள் வேண்டும் போலிருக்கிறது.

சிலநேரங்களில் ஒரே புத்தகத்தின் வேறுவேறு பதிப்புகளாக பத்துப் பிரதிகள் வாங்கி வைத்திருக்கிறேன், அது எதற்கு என்று எனக்கே புரியவில்லை, அது போலவே படித்த புத்தகங்களை ஆண்டுக்கு ஒரு முறை முதியோர் காப்பகம் அல்லது கிராமநூலகங்களுக்குத் தந்துவிடுகிறேன், அப்படியிருந்தாலும் புத்தகங்கள் வைக்க இடமேயில்லை,

கன்னிமாரா நூலக அளவில் ஒரு கட்டிடம் தந்துப் புத்தகங்களை வைக்கச்சொன்னாலும் இடம் போதவில்லை என்ற எண்ணம் இருக்கவே செய்யும், அது இடம் தொடர்பான பிரச்சனையில்லை, படிக்கவேண்டும் என்ற தீராத ஆசை தொடர்பானது.

புத்தகங்களை ஒரு முறைப் படித்து முடித்தவுடன் அதன் ஆயுள் முடிந்து போய்விட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள், பிறகு எப்போதாவது ஒரு முறை அதை இருபது முப்பது பக்கங்கள் புரட்டுவதோடு சரி, தனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்று அடுத்தவர் நம்பவேண்டும் என்பதற்குத் தான் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது,

பழைய உடைகள். வீட்டுஉபயோகப்பொருள்கள். பொம்மைகள். நாற்காலிகள் மெத்தைகள். கரண்டி டம்ளர்கள் என்று வேண்டாத பலநூறு பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் நிரம்பியிருக்கின்றன, ஆனால் அவை எல்லாம் என்றாவது உதவும் என்று நம்புகிறார்கள், புத்தகத்தை அப்படி நினைக்கவேயில்லை

அதைப் படித்து முடித்துவிட்டதும் எடைக்குப் போட்டால் கிலோவிற்கு ஐந்து ரூபாய் தருவார்கள், அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,

உண்மையில் பழைய இரும்பு ஆணிகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கூட புத்தகங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை,

ஆனால் புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக. நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தகவாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,

உலகின் கண்களில் புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள், ஆனால் வாசகன் கண்ணில் அது ஒளிரும் ஒரு வைரக்கல், அதன் மதிப்பை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள்ளிருக்கிறது, ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மாயிருக்கிறது, அதை வாசகனால் நன்றாகவே உணர முடிகிறது, புத்தகத்தோடு உள்ள உறவு எப்போதுமே தனித்துவமான நினைவாகிவிடுகிறது, பலநேரங்களில் வாழ்க்கை அனுபவத்தை விடவும் புத்தகங்களே நம்மை வழிநடத்துகின்றன. ஆறுதல்படுத்துகின்றன.

எனது படுக்கையில், எழுதும் மேஜையில், நாற்காலியின் அடியில், அலமாரியில். காரில். என எங்கும் புத்தகங்களே இருக்கின்றன, ஒரு இரவு ரயில்பயணத்திற்கு துணையாக மூன்று புத்தகங்கள் கொண்டு போகின்ற ஆள் நான், காத்திருக்கும் எந்த இடத்திலும் படிக்க கையில் ஒரு புத்தகம் வைத்திருப்பேன், அப்படி விமானநிலையம் ரயில்நிலையத்தில் படித்தவை ஏராளம். இவையின்றி சிலவேளைகளில் படிப்பதற்காகவே தனியே பயணம் செய்திருக்கிறேன், ஆள் அற்ற தனியிடங்களில் தங்கியிருக்கிறேன்.

படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்கிறார்கள்,

ஒன்று நான் தினசரி படிக்கின்றவன், மற்றது நான் தேர்வு செய்து படிக்கின்றவன், மூன்றாவது நான் தொலைக்காட்சியே பார்ப்பது கிடையாது, ஆகவே போதுமான நேரம் எனக்கிருக்கிறது, படிப்பதில் திட்டமிடல் தான் முக்கியம்,

நான் ஒரே நேரத்தில் நாலு புத்தகங்கள் படிக்கின்ற ஆள், காலையில் ஒன்று. மதிய உணவுவேளையில் வேறு ஒன்று. காரில் செல்லும் போது படிப்பது வேறு, இரவு ஒன்று. என்று ஒவ்வொன்றிலும் ஐம்பது நூறு பக்கங்கள் படித்துவிடுவேன், நான் படிக்கின்ற வேகம் அதிகம், ஆகவே விரைவாக வாசித்துவிட முடியும்,

அப்படியானால் நிறைய பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிவிடுவீர்களோ என்று சந்தேகமாக கேட்பார்கள், நாம் அரைமணி நேரம் சைக்கிள் ஒட்டும் தூரத்தை ரேஸில் ஒட்டுகின்றவன், எப்படி ஐந்து நிமிசத்தில் கடந்து போய்விடுகிறானோ அது போல படிப்பிலும் வேகமும் கூர்ந்த கவனமும் இருந்தால் வாசிப்பது சாத்தியமே, நான் எனது பதிநாலாவது வயதிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன், அன்று காமிக்ஸ் இன்று நீட்சே அவ்வளவு தான் வேறுபாடு.

ஒரு ஆண்டில் எந்த்த் துறை சார்ந்து முதன்மையாகப்படிப்பது என்பதைத் திட்டமிட்டு அது குறித்த ஆதாரப்புத்தகங்களை வாங்கி அந்த ஆண்டிற்குள் படித்துவிடுவேன், மற்றபடி நண்பர்கள் மூலமும் இணையதளம் வழியாகவும் வேண்டிய புத்தகங்கள் கிடைத்துவிடுகின்றன.

அதிகம் விற்பனையாகிறது, பரபரப்பாகப் பேசப்படுகின்றது., யாரோ ஒரு பிரபலம் சிபாரிசு செய்கிறார் என்பதற்காக எதையும் நான் படிப்பதேயில்லை, பெரும்பாலும் நான் படிக்க ஆசைப்படுகின்றவை நூறு வருசங்களுக்கு முன்பாக எழுதப்பட்டவையாக இருப்பதே பிடித்திருக்கிறது, இது தற்போதைய மனநிலை, பத்துவருசங்களுக்கு முன்பாக சமகால இலக்கியமாகத் தேடித்தேடி வாசித்தேன், இன்றுள்ள சமகாலச்சூழல் மீது அதிக ஈர்ப்பு இல்லை,

அகழ்வாய்வுகள், மன்னர்கள் எழுதிய புத்தகங்கள். வரலாற்று ஆவணங்கள். அறிவியலின் வரலாறு. நுண்கலையின் மகத்தான ஆளுமைகள், போன்றவற்றை வாசிக்கையில் துப்பறியும் கதைகள் படிப்பது போலவே இருக்கிறது,

தமிழில் வாசிப்பது போல நாலு மடங்கு ஆங்கிலத்தில் வாசிக்கிறேன், எனது வாசிப்பின் முக்கியத்துறைகள். இலக்கியம், காமிக்ஸ். வரலாறு, வாழ்க்கைவரலாறு, விஞ்ஞானம் மற்றும் நுண்கலைகள். ஜென் கவிதைகள் சார்ந்த புத்தகங்கள்

பயணம் சார்ந்த நூற்களைப் பெரும்பாலும் படிக்க விரும்ப மாட்டேன், அது போலவே கல்விப்புலஆய்வுகள். அசட்டு நகைச்சுவை எழுத்து, விஞ்ஞானக்கதைகள். திரில்லர் பேய்க்கதைகள். மனவியல் சார்ந்த புத்தகங்கள். இலக்கியக் கோட்பாடு சார்ந்த விளக்கங்கள். ஆய்வுகள் போன்றவை என் விருப்பமானவையில்லை,

சினிமாவின் புதிய தொழில்நுட்ப சார்ந்த விசயங்கள் மற்றும் உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்களை வாசிப்பேன், சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை, பௌத்த தத்துவம் எனது விருப்பங்களில் ஒன்று, அதில் ஆழமாக தேடித்தேடி வாசிக்க கூடியவன்,

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்கள் தான் எனது விருப்பமான இலக்கியக்களம், அவற்றை மறுவாசிப்பு செய்வது பிடித்தமானது.

ஜப்பானிய மற்றும் சீனப்பண்பாடு கலாச்சாரம். இலக்கியம் கலைகள் குறித்து அறிந்து கொள்ளவும் வாசிக்கவும் அதிக நாட்டமுள்ளவன் அவற்றை நமது மரபின் நீட்சி என்று கருதுவதால் அதிகமாகவே வாசிப்பேன், அதை போலவே என் எழுத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த ருஷ்ய இலக்கியங்களை அடிக்கடி மீள்வாசிப்பு செய்தபடியே இருப்பேன்.

ஒரு புத்தகம் படிக்க எவ்வளவு நேரம் ஆகும், அதில் எவ்வளவு படிக்க முடியும் என்று நாள், மணி, நேரம் கணக்கிட்டு நான் படித்த புத்தகங்கள் குறித்து என்னை சந்தேகப்பரிசோதனை செய்யும் சில அடிமுட்டாள்களை நான் கண்டுகொள்வதேயில்லை, காரணம் படிப்பது எனது விருப்பத்திற்காக மட்டுமே, அவர்களது பாராட்டுகளைப் பெறுவதற்கு அல்ல,

வீட்டிலே சிறிய நூலகம் வைத்துள்ள பலரையும் எனக்கு தெரியும், அவர்கள் என்னை விடவும் அதிகமான குடும்ப நெருக்கடியைச் சந்திக்கின்றவர்கள், ஆனால் அவர்கள் எந்த நெருக்கடியிலும் சேகரித்த புத்தகங்களை இழக்கவேயில்லை,

சென்னையில் கவிஞர் ராஜமார்த்தாண்டன் அறையில் ஒரு ஆள் படுக்கப் போதுமான அளவு கூட இடமில்லாத அளவு புத்தகங்கள் நிரம்பியிருந்தன, அதற்குள்ளாக தான் அவர் வசித்து வந்தார், மொழிபெயர்ப்பாளர் சா,தேவதாஸ் அறைமுழுவதும் புத்தகங்களாகவே இருக்கும், கோணங்கியின் நூலகம் மிகப்பெரியது, அபூர்வமான பல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறார், நாவலாசிரியர் பா.வெங்கடேன், தமிழவன், சுந்தர ராமசாமியின் நூலகங்கள் முறையாக. பகுக்கப்பட்டு துறைவாரியாக அடுக்கிவைக்கப்பட்ட சிறப்பான நூலகங்கள், கவிஞர் நா. முத்துகுமாரின் தந்தை மிகப்பெரிய புத்தக வாசகர், காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நூலகம் மிக அற்புதமானது, பல முக்கிய எழுத்தாளர்களின் முதல்புத்தகங்கள் அவர்கள் கையெழுத்துடன் அவரிடமிருந்தன,

எண்பதுகளின் துவக்கத்தில் நானும் கோணங்கியும் கோட்டையூரில் உள்ள ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்றோம், தமிழ்நாட்டில் தனிநபராக ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் சேகரித்து தனியே நூலகம் வைத்திருந்தவர் அவர், அவரது சேமிப்பைத் தான் சிகாகோ பல்கலைகழகம் விலைக்கு வாங்கி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி இன்று ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் என சென்னையில் நடத்திவருகிறது, தரமணியில் உள்ள இந்த நூலகம் தமிழின் மிகப்பெரிய பொக்கிஷம்

நாங்கள் ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்று டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளைக் கேட்டபோது அவர் எங்களை வரவேற்று உபசரித்து தன்னிடம் அதன் பிரதிகள் இருப்பதாக எடுத்து வந்து படிக்கத் தந்தார், புத்தகங்களை பாதுகாக்க ரோஜா முத்தையா தனி ஆட்கள் வைத்திருந்தார், அவரது சேமிப்பில் அரிய பல தமிழ் நூல்கள் இருந்தன, இலக்கியப் புத்தகங்கள். இதழ்கள். நாடக சினிமா நோட்டீஸ். இசைத்தட்டுகள். விளம்பரங்கள் என்று அவரது சேமிப்பு இன்று ஒரு பெரிய ஆவணக்களஞ்சியமாக விளங்குகிறது

ரோஜா முத்தையா நூலகம் போலவே புதுக்கோட்டையில் ஞானாலயா என்ற அரிய நூலகம் இயங்கிவருகிறது, அதை நடத்திவருபவர்கள் பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதிகள், தமது வாழ்நாள் முழுவதும் உழைத்துச், சேகரித்த புத்தகங்களை கொண்டு பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

எனது நண்பரும் மிகச்சிறந்த தமிழ் அறிஞருமான பல்லடம் மாணிக்கம் அவர்கள் தனது புத்தகச் சேமிப்பை கொண்டு தமிழ் நூல் காப்பகம் என மிகப்பெரிய நூலகம் ஒன்றை விருத்தாசலத்தில் நடத்திவருகிறார்

பல்லடம் மாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே வாங்கிச் சேகரித்த ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்குள்ளன, .இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரையான பல முதல் பதிப்புகள், கம்பராமாயணத்திற்குப் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள். திருக்குறள் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.

வேதங்கள், உபநிடதங்கள்,கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகள். ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் என அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பம்சம்.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் கொண்டதாக இது அமைந்திருக்கிறது.

இது போலவே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகமும் மிக முக்கியமான ஒன்றே, இங்கே பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முந்நூற்றுக்கும் அதிகமான தமிழ்நூல்களை வெளியிட்டும் மறுபதிப்புச் செய்தும், திருத்தப்பதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது இவ் ஆதீனம்.

தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் தற்போது 10 மொழிகளைச் சேர்ந்த 69,000 நூல்கள், 39,000 ஓலைச்சுவடிகள் மற்றும் சோழர்கால கலைநயமிக்க ஓவியங்கள் உள்ளன.

நாயக்கர் காலத்தில் சரஸ்வதி பண்டார் என்ற பெயரில் 1918 வரை அழைக்கப்பட்ட இந்த நூலகம், மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சை மன்னர் சரபோஜியால் சரஸ்வதி மகால் நூலகம் என்று மாற்றம் பெற்றது. 1918-ல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட இந்த நூலகத்தில் அரிய ஒலைச்சுவடிகளை பாதுகாக்கவும் முறைப்படுத்தி பதிப்பிக்கவும் படுகின்றன.

தமிழ் இலக்கியங்களின் மூலச் சுவடிகளை தேடி சேமித்து, பகுத்து, பாடபேதம் கண்டு, தொகுத்து அச்சிலேற்றும் பணியாற்றும் நூலகம் உவேசா நூலகம், இது சென்னையில் உள்ளது, செவ்வியல் இலக்கியங்களுக்கான 61 ஓலைச் சுவடிகளைக் கொண்ட நூல் நிலையம் இதுவொன்றேயாகும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வெளியீடுகள் டாக்டர். உ.வே.சா. கி.வா.ஜ. போன்ற பேரறிஞர்கள் சேகரித்தவை. அனைத்துத் தமிழ் ‌ இலக்கியநூல்கள். இலக்கண நூற்கள் இங்கே உள்ளன

இது போலவே சென்னையில் ஒரு தமிழ் புத்தகம் கூட இல்லாத ஒரு நூலகமிருக்கிறது, அது சென்னை இலக்கிய சங்க நூலகம், அது நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள D.P.I வளாகத்தினுள் உள்ளது,

1812ஆம் ஆண்டுசென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதியாக இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது ஒன்றரை லட்சம் புத்தகங்கள் இங்கே உள்ளன. இலத்தின், பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் புத்தகங்கள் மட்டுமே இங்குள்ளன, தமிழ் புத்தகமே கிடையாது, இதில் உறுப்பினராவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள 134 ஆண்டு பழமை வாய்ந்த பென்னிங்டன் பொதுநூலகம் முக்கியமான ஒன்று, 1953-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் ஆசியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமசந்திரராவ், டி. ராமஸ்வாமி ஐயர், டி.கிருஷ்ணராவ், முத்துஐயங்கார் மற்றும் முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து, இந்த நூலகத்தை ஆரம்பித்தனர். இங்கே தமிழில் 20,113 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 21,277 புத்தகங்கள் என மொத்தம் 41,390 புத்தகங்கள் உள்ளன.

இது போலவே சேலம் தமிழ்சங்க நூலகம். கும்பகோணம் கோபால்ராவ் நூலகம் மதுரை ரீகல் தியேட்டரின் பின்பக்கம் உள்ள விக்டோரியா நூலகம். சிரவணபெலகோலாவில் உள்ள சமண நூலகம். சித்தாமூரில் உள்ள குந்தகுந்தார் நூலகம். கயாவில் உள்ள பௌத்தநூலகம். பூனாவில் உள்ள பண்ட்ராகர் நூலகம். ராஜபாளையத்தில் உள்ள மு,கு,ஜெகநாத ராஜா நூலகம். பிஎஸ்கே,சமஸ்கிருத நூலகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம், கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய நூலகம். டெல்லி பொது நூலகம், சாகித்ய அகாதமி நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், சென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம். பெரியார் நூலகம். மதுரை காந்தி மியூசிய நூலகம், நெய்வேலி மத்திய நூலகம். பனாரஸில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரி நூலகம். பரோடாவில் உள்ள மத்திய நூலகம், போன்றவை நான் பார்த்த நூலகங்களில் முக்கியமானவை,

புத்தகங்களை இரவல் கொடுப்பதைப் பற்றி எழுத்தாளர் அனதோலியா பிரான்சு வேடிக்கையாக குறிப்பிட்டது தான் நினைவிற்கு வருகிறது

Never lend books, for no one ever returns them; the only books I have in my library are books that other people have lent me.

ஆனால் கைவிடப்பட்ட புத்தகங்களை விடவும் படிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்ற புத்தகங்கள் வேதனைமிக்கவை, இதைக் கேலி செய்து ஸ்விப்ட் பேடில் ஆப் புக்ஸ் என்ற ஒரு புனைவு எழுதியிருக்கிறார், வர்ஜீனியா வுல்ப் கூட நடைபாதைக்கடைகளில் விற்கப்படும் புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்கிறார்,

புத்தகங்களை கண்ணாடி அலமாரியில் வைத்துப் பூட்டி சவமாக்கிவிடுவதை விட அவற்றை யாரோ படிக்கட்டும் என்று உலகின் கைகளுக்கே திரும்ப தந்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது, அது தான் எப்போதும் புத்தகங்களின் விதிவசம் போலும்,

••

உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்-தொ.பரமசிவன் உரை

மதுரை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் “உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவரான தொ.பரமசிவன் அய்யா ஆற்றிய நீண்ட உரையை எனது அலைபேசியில் பதிந்து என் நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். உலகமயமாக்கலுக்கு எதிரான அவரது உரையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். தொ.பரமசிவன் அய்யாவின் உரையை தொகுத்ததில் எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் அமைந்தால் என்னையே சேரும். மற்றபடி எல்லாப்புகழும் தொ.பரமசிவன் அய்யாவுக்கே! என்னால் அய்யாவிடம் தமிழ் கற்க முடியவில்லை என்ற ஏக்கத்தை நான் கேட்ட அவரது பல உரைகள் போக்கியது. எனவே, நானும் தொ.ப’வின் மாணவன்தான். தொ.ப’வின் அற்புதமான உரையை அனைவரும் வாசியுங்கள்! 

‘’பேசுகிற இடம் மதுரை. பேசப்படுகிற விசயம் புத்தகம். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில் தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன. ‘கலித்தொகை’ என்ற செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ‘பரிபாடல்’ என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம். அப்பேற்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு. இந்த ஊரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல்.

“உலகமயமாக்கலில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு.

புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது. நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது. எனக்கு இங்கு வந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் சந்தை என்று போட்டிருப்பார்கள். இங்கு புத்தகத் திருவிழா என்று போட்டிருக்கிறார்கள். “திருவிழா என்பது கொண்டாடப்பட வேண்டியது. அதே போல் புத்தகங்களும் கொண்டாடப்பட வேண்டியவை”. உலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது? மதுரையை எப்படி மதுரைமயமாக்குவது? மதுரையை வண்ணமயமாக்கவேண்டும், ஒளிமயமாக்கவேண்டும் என்று சொல்லுங்கள். புரிகிறது. ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடையிது. இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள். அதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. நான் கட்சி அரசியலை சொல்லவில்லை.

உலகமயமாக்குவது என்றால் உலகையே சந்தையாக மாற்றுவது. உலகிலே சந்தை மட்டும் இருந்தால் போதுமா? இம்மதுரையிலே சந்தையும் இருக்கும், தமுக்கமும் இருக்கும், மீனாட்சிகோயிலும் இருக்கும், மனநோயாளிகளுக்கான மருத்துவமனையும் இருக்கும். சந்தையில் ஐந்து வயது சிறுவர், சிறுமிகளுக்கு இடம் இருக்க முடியுமா? அல்லது கம்பூன்றி நடக்கும் வயதானவர்களுக்கு இடம் இருக்குமா? வயதானவரை தெருவில் பார்த்தால் ஒதுங்கி நடப்போம். ஆனால் சந்தையில் “சந்தையில இடிக்கிறதெல்லாம் சகஜம்” என்று போய் விடுவார்கள். பாக்கெட்டில் பணமில்லாதவனுக்கு சந்தையில் இடமிருக்குமா? கன்னிப் பெண்களுக்கு அங்கு இடமிருக்குமா? சந்தை என்பது வாங்குவதற்கான இடமே தவிர அங்கு மனித உறவுகள் மலராது. சிறைச்சாலைகளில் கூட மனித உறவுகள் மலரும். மருத்துவ மனைகளில் கூட மனித உறவுகள் மலரும். நான் ஒரு மாதம் மருத்துவ மனையில் இருந்தேன். பக்கத்து அறையில் இருந்தவர்களெல்லாம் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் சந்தையில் “அஞ்சால் விற்றால் லாபம் என்றால் அஞ்சால் விற்போம். நஞ்சை விற்றால் லாபம் என்றால் நஞ்சை விற்போம்”. இது சந்தையின் தன்மை. உலகமயமாக்கலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். அறிஞர்கள் எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு. நமது பண்பாட்டை குலைப்பதற்கான முயற்சி. இதை பண்பாட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.

பண்பாடு என்பது பொருள் உற்பத்தியில் தொடங்குகிறது. ஒரு குழந்தை இலையில் தனக்கான பீப்பியை செய்து கொள்கிறது. தனக்கான வண்டியை செய்து கொள்கிறது. தனக்கான காகிதப்பையை செய்து கொள்கிறது. இப்படி தனக்காக செய்து கொள்கிறபோதுதான் கலாச்சாரம் பிறக்கிறது. பொருள் உற்பத்தியில்தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாசாரம் உடையவன் ஆகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்து போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக்க முயல்கிறார்கள். சந்தையில் எதைவிற்றால் லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது. மரபு வழியான அறிவுச்செல்வத்தைத் (இதைத்தான் மார்க்ஸ் ‘’தொகுக்கப்படாத விஞ்ஞானம்’’ என்றார்) திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது உலகமயமாக்கம்.. நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளை கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். கால்ல புண்ணு வந்தா மஞ்சளையும் வெங்காயத்தையும் அரைச்சுப் போடுவோம். இனி எதாவது ப்ரெஞ்ச் கம்பெனியோ, கனடா கம்பெனியோ மஞ்சள், வெங்காயத்தையெல்லாம் நான்தான் கண்டுபிடிச்சேன்னு காப்பிரைட் வாங்கி வச்சுகிருவான். அப்புறம் வெங்காயம், மஞ்சளப் பயன்படுத்த நாம அவன்ட்ட அனுமதி கேட்கணும். பணம் கட்டணும். இப்படி மரபுரீதியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டே கொள்ளையடிக்கிறார்கள். அறிவு என்பது 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. நமக்கு அறிவு பற்றிய சரியான பார்வை இல்லை. பி.எஸ்.சி ரசாயனம் படிக்கும் மாணவனைப் பார்த்து ரசாயனம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால்தானே அவன் சொல்வான். மனிதன் வேட்டையாடியபோது உணவு மீதம் ஆகி டிஹைட்ரேட் ஆகி நாளை பயன்படுத்தலாம் என்ற போதே ரசாயனம் தொடங்கிவிட்டது. அதில் உப்பைச் சேர்க்கும் போது இன்னும் கொஞ்சநாள் பயன்படுத்தலாம் என்ற போது ரசாயணம் வளரத்தொடங்கியது.

மனிதகுல வரலாறு தெரியாத கல்வி முறையில் வளரும் இன்றைய தலைமுறையில் பண்பாடு பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம். உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்று சொல்லிச்சொல்லியே நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று கேட்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். அதை ஒரு தலைவர் சொன்ன போது ஊரே திரண்டது. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று சொன்னால் சைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இது திருமூலரின் திருமந்திரம். “ஒன்றே குலம், ஒருவனே தேவன் – அவன்தான் இராமன்” என்னும் போது தான் பிரச்சனை வெடிக்கிறது. எல்லா பிரம்மாண்டங்களும் மனித விரோதமானவை. ஜனங்களின் வாழ்வுக்கு பிரமாண்டம் தேவையில்லை. பிரமாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். 60 மாடி, 70 மாடின்னு கட்டடம் கட்ற போது தானே பின்லேடன் வர்றான். உலகின் அறிவுச் செல்வங்களை கொள்ளையடிக்கவே உலகமயமாக்கம் பயன்படுகிறது. ஆப்ரிக்காவில் உள்ள காடுகளிலும், கடற்கரையோரங்களிலும் இருந்த தாதுக்களைக் கண்டுபிடித்து கொள்ளையடிக்கிறாங்களே அது தான் இன்பஃர்மேசன். இது தான் இன்பஃர்மேசன் டெக்னாலஜி. எதற்கும் பயன்படாத தேரிக்காடு. அங்கே கல்லுமுள்ளும் ஓணானும் குடிகொண்டு இருக்கும். அங்கே தோரியம் இருக்குன்னு சொல்றானே அது இன்பஃர்மேசன். அங்கே பெரிய கம்பெனிக்காரன் வர்றானே அது உலகமயமாக்கம். எல்லா இடத்திலும் கையவச்சுட்டு இப்ப சமையலுக்குள்ளயே வந்து கையவச்சுட்டாங்க. பீட்ஸான்னு ஒரு இத இப்ப திங்க கொடுக்கிறாங்க. அதுல என்னா இருக்குன்னு நமக்கு தெரியுமா? நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்னா இருக்குன்னு நமக்கு தெரியும். “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”. நம்ம உணவுச் செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளையடிக்கிறானே அது உலகமயமாக்கம். நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது. திருமலைநாயக்கர் மகாலும், மீனாட்சியம்மன் கோயிலும் மட்டும் நமது முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து அல்ல. தூய நீரும், காற்றும் நமது சொத்தில்லையா? எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பது தான் உலகமயமாக்கம். விற்க முடியாத பொருள் மனிதனிடம் இருக்கிறது.
நாம் இங்கு திருவள்ளுவரையே விற்றுக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் “எற்றிற்கு உரியர் கயவர்?’’ என்கிறார். திருக்குறளுக்கு உயிர் இருக்கிறது. அதை எழுதியவனுக்கு ஆன்மா இருக்கிறது. அதனால் தான் எழுதியவனுக்குச் சாவு இல்லை என்கிறோம். வடநாட்டில் வியாசர் மகாபாரதத்தைச் சொல்ல அதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதியதாக மரபு இருக்கிறது. ஆனால், இதைவிடச் சீரிய மரபு தென்னாட்டில் இருக்கிறது. விநாயகருடைய அப்பா சிவனே திருவாசகம் எழுதியதாக கூறப்படுகிறது. திருவாசகம் காணாமல் போய் அனைவரும் தேடுகிறார்கள். காணவில்லை. ஒரு புத்தகத்தை காணாமல் ஆக்குவது தேசத்துரோகம். அதை தொலைத்தவர்களுக்குத்தான் தெரியும். திருவாசகம் இறுதியில் சிதம்பரத்தில் இருந்தது. சிவபெருமான் கையிலே இருந்தது. சிவபெருமானிடம் கேட்டால் இது என் பெர்சனல் காப்பி என்கிறார். என்னவென்றால் அந்தப் புத்தகத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகன் சொல்ல உடையார் திருச்சிற்றம்பலமுடையார் எழுத்து என்று அதில் இருக்கிறது. இதை ஏன் சிவன் வைத்திருந்தார் எனப் பின்னால் வந்த அறிவியலாளர் தத்துவப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொல்கிறார்: “உலகைப் படைத்து காத்து அழித்து பிறகு மீண்டும் உலகை படைக்கும் முன் உள்ள ஒரு லன்ச் பிரேக்கில் படிக்க ஒரு புத்தகம் வேண்டும் அல்லவா? அதற்குத்தான் போரடிக்காமல் இருக்க சிவன் திருவாசகத்தை வைத்திருந்தார்’’ என கூறுகிறார் தன் மனோன்மணியத்தில். இவ்வாறு கடவுளே ஸ்க்ரைப்பாக இருந்திருக்கிறார் நம் நாட்டில்.

ஒன்றைத் திட்டமிட்டே பழசாக்குவது உலகமயமாக்கம். இந்த வருடம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் அடுத்த வருடம் ஒரு சின்ன மாற்றத்துடன் புதிதாக ஒன்று வரும். இப்படித் திட்டமிட்டுப் பழசாக்கி அடுத்த பொருளை விற்பதுதான் உலகமயமாக்கம். எல்லாவற்றையும் சந்தைப்படுத்திக்கொண்டிருக்கும்போது நாம் இந்த ஏமாளிகளிடம் பண்பாடு பற்றி பேசுவது எல்லாம் முட்டாள்தனம். பண்பாடு பற்றி பேசுவதே நாம் ஏமாளித்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
உலகமயமாக்கம் எழுத்துலகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது எனப் பார்ப்போம். சென்னை புத்தகத் திருவிழாவில் 10 லட்சம் புத்தகம் விற்றிருக்கிறது என சொன்னார்கள். மகிழ்ச்சி. மனிதன் வாசிக்க தொடங்கிவிட்டான். வாசிக்கும் மனிதன்தான் யோசிக்கிறான். சமூகம் மாற்றம் அடையத் தொடங்கியதா எனப்பார்த்தால் மாற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் பாதிக்குப் பாதி வாஸ்து புத்தகங்கள்தான் விற்றிருக்கிறது. இங்கு இப்பொழுது விற்கும் புத்தகங்களைவிட பல மடங்கு குருபெயர்ச்சி பலன் புத்தகம் வித்திருக்கும். குருவே வருசம் வருசம் இடம் பெயர்றார்ன்னா நீ உன் சிந்தனையில் இடம் பெயரக்கூடாதா? மாறுதல் ஒன்றே மாறாதது. 15 வருசமா அப்படியே இருக்கீங்கன்னு சொன்னா அது உண்மையில்ல. முடி லேசா நரைச்சுருக்கும். வழுக்கை கூடியிருக்கணும். அப்படியே எதுவும் இருக்க முடியாது. மாற்றங்களை உருவாக்குவது புத்தகங்கள். மார்க்சிம் கார்க்கியுடைய தாய் காவியம் போன்ற புத்தகங்கள் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியவை. அறிந்தும் அறியாமலும் படித்த புத்தகங்கள் தான் நமக்குள் ஒரு மாற்றம் ஏற்பட உதவுகிறது. அதென்ன அறியாமல் படித்த புத்தகம்? கொல்லைப்பக்கம் போட்ட தக்காளி திடீர்ன்னு செடியா முளைப்பது போல. நாம் தெரியாமல் இப்படி வாசித்த புத்தகங்கள் தான் அறியாமல் படித்த புத்தகங்கள்.
மனித மனத்திலும் விழும் விதைகள் முளைக்கத் தவறுவதே இல்லை. நான் எங்க ஊர் மாவட்ட நூலகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு புத்தகம் எடுத்தேன். அது சரித்திரத்தை மாற்றிய “அங்கிள் டாம்” புத்தகம் என்று தெரியாமல் அதன் குழந்தைப் பதிப்பின் தலைப்பைப் பார்த்து எடுத்தேன் – தாமு மாமாவின் கதை. இந்த புத்தகத்தை இப்பொழுது காணவே முடியவில்லை. நாம் அடிமையாகவே இருக்க சம்மதித்துவிட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வரியைப் படிக்கும் போது அங்கிள் டாம் புத்தகம் ஞாபகம் வரும். மேல்மண் கீழ்மண் ஆவதும், கீழ்மண் மேல்மண் ஆவதும் வரலாறு. புரட்சியை ஒரு புத்தகம் எப்பொழுதும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது. இப்பொழுது சிலர் தினமும் ஒரு புத்தகம் எழுதுகிறான். என்ன செய்யிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஒரே வரியில் அப்போதிருந்த சாதிக்கோட்பாடுகளை உடைத்த வள்ளுவரிடம் இருந்த கலகக்குரலை விடவா இனி எழுத முடியும்? எழுத்துல எதிர்ப்பு இருக்கலாம். கலகக்குரலாய் எழுதலாம். ஆனால், வெறுப்பு இருக்க கூடாது. இப்ப எழுதும் சிலரின் எழுத்த வாசிச்சா வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். கோவம் வரலைன்னா அவன் மனுசனே இல்ல. கடவுள் பற்றி இருக்காரா, இல்லையான்னு எழுதலாம். பேசலாம். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணத்தினால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது.

எதை வேண்டுமானாலும் எழுதலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உலகமயமாக்கம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்த முயல்கிறது. என்னிடம் வந்து ஒரு இளங்கவிஞர் மழை பற்றிய கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு கேட்டார். “தீங்கின்றி நாடெல்லாம்” என்று சொன்னேன். மழையைப் பார்த்தால் ஒவ்வொரு சமயமும் ஒரு வித்தியாசம் காட்டும். ஒரிசா வெள்ளத்தை பார்த்தால் புரியும் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி” என்ற வரி. அதைப்போலத் தண்ணீர் இல்லாம தவிக்கிறப்ப தெரியும் “நீரின்றி அமையாது” என்ற வரி. வாசிப்பது மூலம் யோசிக்கிறான். யோசிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறான். உலகமயமாக்கலில் எல்லாவற்றையும் சந்தைப்படுத்துகிறோம். திருக்குறளை மட்டுமல்ல. திருவள்ளுவரையே சந்தைப்படுத்துகிறோம். இன்று எல்லாவற்றையும் விற்க தொடங்கிவிட்டோம். நுகர்வுக் கலாசாரம் ரொம்பப் பெருகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் ஒரு சோப்பு இருந்தது. இப்ப ஆறு பேர் இருக்கிற வீட்ல ஏழு சோப்பு இருக்குது. வெளிநாட்டுக் கம்பெனி எல்லாம் “ஒனக்கு ஒண்ணுந்தெரியாது நான் குடுக்கிறேன் இத சாப்புடு”ன்னு சொல்றான். அதுவும் நம்ம மதுரைல சொல்லலாம்மாங்க? தினம் ஒரு கண்டுபிடிப்பா கண்டுபுடிக்கிற ஊரு. போண்டாக்குள்ள முட்டைய வைச்சு கண்டுபுடிச்ச ஊரு. கென்டகி சிக்கன்னு ஒரு கம்பெனி நான் கோழிக்கறி தர்றேன். அத சமைன்னு சொல்றான். நம்ம ஊருல நம்ம பொண்ணுகளுக்கு கோழிக்கறி சமைக்கத் தெரியாதா? மருத்துவ சம்மந்தமான அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. இதற்காகவே ஆராய்ச்சி பண்ண ரொம்ப பேர் இங்கு வந்து இருக்காங்க. இதற்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் பணங்கொடுக்கிறார்கள்.
உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற சொல்லிலேயே நாம் ஏமாந்து போகிறோம். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” யார் என்ன சொன்னாலும் இந்த நுகர்வு கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். இப்ப கடன் திருவிழா, லோன் மேளா எல்லாம் நடத்துறாங்க. இந்த திருவிழாவிற்கு எப்ப கொடி ஏத்துவாங்க? எப்ப இறக்குவாங்கன்னு தெரியல. எந்த நாடும் உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை. “மாற்ற முடியாதது எதுவோ அது அறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு”. உலகமயமாக்கல் என்ற ஆரவாரத்திற்கு நாம் ஏமாந்து போகிறோம். நாம் தினமும் பங்கு சந்தை பார்க்கிறோம். எனக்கு என்னவென்றே புரியவில்லை. இப்பதான் தெரிந்தது அது இரண்டு சதவீத மக்களுக்கான செய்தியென்று. நாம் பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை உண்டு பண்ண வேண்டும். நாயகம் ஜனங்களின் நாயகமாக இருந்தால் அது ஊடகங்களின் நாயகமாக இருக்க முடியாது. ஒரு நாள் அறிஞனை முட்டாளாகக் காட்டும். பண்பாடு பற்றியெல்லாம் வாசிக்கிறவங்க கொறச்சல். இதப்பத்தி யோசிக்கிறவங்க ரொம்பக் கொறச்சல். பேசுறவங்க கொறச்சல். எழுதுறவங்க ரொம்ப கொறச்சல். எனக்கு ஒரு இங்கிலீஸ் படம் ஞாபகத்துக்கு வருது. ஆண்டவர் கொடுத்த பல கட்டளைகளை மோசஸ் தொலைத்து விட்டு கடைசியாக உள்ளவற்றைத்தான் கடவுள் கொடுத்தார் என சாதிப்பார். அது போல நாம் எதை இழந்தோம் என்பதைக்கூட மறந்து விட்டோம். “இழந்தோம் என்பதைவிட இழக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம்” என வருத்தப்படுகிறார் ஆழ்வார். இதை பாரதி “கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்கிறார். நாம் எப்போதும் மேற்கேதான் பார்ப்போம். கிழக்கே சீனா, ஜப்பானை எல்லாம் பார்க்க மாட்டோம். எத்தனை பேருக்கு மோஸி என்ற அறிஞரைத் தெரியும்?
இறுதியாக வாசிப்பு என்பது யோசிப்பை தரும். யோசிப்பது மூலம் சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டும். எதையும் விற்கலாம், ஒன்றை திட்டமிட்டுப் பழசாக்கி புதியதைச் சந்தைப்படுத்தலாம் என்பது போன்ற பிரம்மாண்டங்களுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும். நன்றி’’

தொ.பரமசிவன் அய்யாவின் உரையை வாசித்து மற்றவர்களிடம் இதைக் குறித்து பேசுங்கள், எழுதுங்கள். பிரம்மாண்டங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். மேலும் தொ.பரமசிவன் அய்யாவின் கட்டுரைகளை படிக்கக் கீற்று வலைத்தளத்தை பார்க்கவும். மேலும் இவரது புத்தகங்கள்பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயம், சமயங்களின் அரசியல்வாசியுங்கள். தொ.பரமசிவன் அய்யாவிற்கு நன்றிகள் பல!
நன்றி-ஹரிஸ்

கல்விச் சிந்தனைகள்

” அறிவு நமக்கு ஆற்றலை அளிக்கிறது. அன்பு நம்மை முழுமையடையச் செய்கிறது”- டாக்டர். ராதாகிருஷ்ணன் முன்னாள் குடியரசு தலைவர்

நமது இந்தியாவில் 504 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மொத்தக் கல்லூரிகள் 25,951. இதில் மகளீர் கல்லூரிகள் 2565. இக் கல்லூரிகளில் படிக்கம் மாணவர்களின் எண்ணிக்கை 1.36 கோடி. இதில் பெண்கள் 56.49 லட்சம்.

” கல்வி என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவி. உலகை மாற்றுவதற்கு அதைப் பயன்படுத்த முடியும்” -நெல்சன் மண்டேலா

” அடிப்படை அறிவை வளர்க்கின்ற கல்வியைப் புகட்ட நினைக்காமல், பட்டதாரிகளை உற்பத்தி செய்வது பல்கலைக் கழகங்களின் நோக்கமாக இருக்கக்கூடாது. - ஜவஹர்லால் நேரு.

” அனைத்து குழந்தைகளும் ஓவியர்களே, பிரச்சனை என்னவென்றால்  வளர்ந்த பிறகும் எப்படி ஓவியராகவே இருப்பது என்பதுதான்” - பிக்காஸோ

”ஒரு மாணவனுக்கு உண்மையான பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியர்தான்” - மஹாத்மா காந்தி

”வீட்டுக்கொரு புத்தகசாலை வேண்டும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருட்களுக்கும், போக போக்கியப் பொருட்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகச் சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை அடிப்படை தேவை. அந்த தேவையை பூர்த்தி செய்ததானதும் முதல் இடம் புத்தகச் சாலைக்கே தரப்படவேண்டும்.  - அண்ணாத்துரை

“நான் நிலவு வரை செல்வதற்கு உதவியது தாய்மொழி தமிழ்தான்.”   - மயில்சாமி அண்ணாத்துரை

” இயல்பிலேயே எதையும் கற்கும் ஆற்றல் குழந்தைகளிடம் உண்டு, மாணவர்களுக்கு எந்த ஆசிரியரும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கற்றுகொள்கிற வாய்ப்பை மகிழ்ச்சிக்குரியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் ஏற்படுத்தித் தருவது மட்டும்தான்.” - ஜே. ஷாஜஹான்

கல்வியில் தோல்விக்கு இடமில்லை, அனுமதியில்லை என்ற நிலை கொணருவது பெரும் புரட்சிதான். - டாக்டர். ஆர். ராமானுஜம்

”மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பழைய நிலைமைகளை நியாயப்படுத்தினால் எந்த மாற்றமும் கல்வியில் வரமுடியாது”  - எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க

”கூட்டாக சேர்ந்து கற்பது சிறந்த அரசியல். தனியாகக் கற்பது சுயநலம் என்று புரிந்துகொண்டோம்.” - பார்பியானா மாணவர்கள்

” அவர் பிரதமாராக இருக்கும்போது லிப்டில் வந்தார். திடீரென்று லிப்ட் பழுதாகிவிட்டது. 20 நிமிடங்கள் போராடி லிப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் அதிகாரிகளை அழைத்தார். ஓர் ஆலோசனை சொன்னார். ”லிப்டில் சிறியதாய் ஒரு நூலகம் அமைக்கலாம்” என்றார்” - ஜவஹர்லால் நேரு

மொ.பாண்டியராஜன். மதுரை

Feb 23, 2011

கரும்பலகையில் எழுதாதவை

*தமிழில் பேசினால்
தண்டனை தரும் பள்ளி
தினமும் தொடங்குகிறது
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி..

*‘சார்''
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.

‘சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.
நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.


*கரும்பலகை அழிப்பதற்கு
காகிதம் கேட்டேன்.
கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..
இப்படித்தான்

வீணாய்ப் போகிறது.
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்...

*சறுக்கல் விளையாட ஆசைப்பட்டான்.
‘சார்..
ஏறி, ஏறி
சறுக்கப் போகிறேன்''
‘மாற்றிச் சொல் குழந்தாய்
சறுக்கச் சறுக்கஏறப் போகிறேன்.''
சறுக்கல் இயற்கை.
ஏறுதலே முயற்சி.!

*பிள்ளைகளே
பாடமாகிறார்கள் சிலபோது.
பக்கம் இருப்பவன் மேல்
வெறுப்பு மேலிட்டால்
வேரறுப்பதில்லை.
காய் விடுதலோடு
நின்று விடுகிறார்கள்
பழம் விடுவதற்கு வசதியாய்!

_பழ.புகழேந்தி.

Nov 25, 2010

அன்றொரு நாள் 3

அன்று
குட்டீஸ்களுக்கு
சூழ்நிலையியல் பாடம்
நடத்திக் கொண்டிருந்தேன்.
பாடத்தின் தலைப்பு
கவிதாவின் குடும்பம்.

பாடத்தின் நோக்கம்
குழந்தைகளுக்கு
அம்மா,அப்பா,
தாத்தா,பாட்டி,
அக்காள்,அண்ணன்,
தங்கை போன்ற குடும்ப உறவுகளை அறிமுகப் படுத்துவதுதான்.

அதற்காக
அழகழகாய் ஏழெட்டு
படங்களைத் தீட்டியுள்ளனர்.
அவை தொடர்பான
கேள்விகளுக்கு
விடையாய்
அம்மா,அப்பா..
என வரிசையாகக்
குடும்ப உறவுகளைக்
குழந்தைகள் கூறுவார்கள்.
அதன் மூலம் பாடத்திறனை எளிதில் அடையச்செய்யலாம்
என்பது பாடத்திட்ட
வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.
நம்முடையதும் கூட.!

ஆனால் நடந்தது என்ன?
நான் கேட்டேன்..
உங்க வீட்டுல கோலம்
போடுவது யார்?
குழந்தைகள் கோரஸாகச்
சொன்னார்கள்: 'அம்மா'!

அடுத்த கேள்வி.
சமைப்பது யார்?
அம்மா...

பாத்திரங்களைக் கழுவுவது யார்?
அம்மா...

வீட்டில் தண்ணீர் பிடிப்பது? அம்மா...

காய்கறிகள் வாங்கி
வருவது? அம்மா...

காய்கறிகளை நறுக்குவது? அம்மா...

வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்வது? அம்மா...

அழுக்குத்துணிகளைத்
துவைப்பது? அம்மா...

குளிக்க வைப்பது? அம்மா...

இப்படி எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மா அம்மா அம்மாதான்..!
அவர்களின் பதில்கள்

முற்றுப்புள்ளிகளாய்
அல்லாமல்
அடுத்தடுத்து
பல கேள்விகளை
எழுப்புகிறது.

இன்னுமொரு
கொடுமை என்னவென்றால்..
உங்க வீட்டுல யார் கதை
சொல்வதெனக் கேட்டபோது
வகுப்பறையில் ஒரு
நீண்ண்ண்ண்ட மெளனம்!

முன்பு
நாங்கள் சிறுவயதினராய் இருந்தபோதெல்லாம்
இருட்டிவிட்டால் போதும்
சாப்பிட்டு முடித்ததும்
பாய்,தலகாணிகளோடு
தெருவுக்கு வந்துவிடுவோம்.

எங்கள் வீடு முக்குவீடு.
நான்கு தெருவுகள் சந்திக்கும் இடம்.
பாட்டிகளின் மீட்டிங் அடிக்கடி நடக்கும்.
இரண்டு மூன்று பாய்களை
வரிசையாக விரித்துக் காத்திருப்போம்.
வீட்டு வேலைகளை
முடித்துவிட்டு
கருப்பாயி ஆத்தா
சின்னத்தாயி ஆத்தா
அமராவதி ஆத்தா
என ஒவ்வொருத்தராய்
வருவார்கள்.
பாக்யராஜ்
பாரதிராஜா
மணிரத்னமெல்லாம்
மண்டியிட வேண்டும்.
அவ்வளவு நேர்த்தியாகக்
கதை சொல்லுவார்கள்.
கதைகளென்றால்
கற்பனைக்கதையெல்லாம்
கிடையாது.
விறகுக்குப் போன கதை
புல்லறுக்கப் போன கதை
தண்ணிக்குப் போன கதை
திருவிழாவுக்குப் போன கதை
என எல்லாக்கதைகளுமே
அவர்களது வாழ்க்கை
நிகழ்வுகள்தான்.
அதில்
அங்கங்கே கொஞ்சம்
பிட்டுகளைச் சேர்த்து
புனைவுகளோடு
சொல்வார்கள்.
நகைச்சுவைகளைக்
கேட்டு
வயிறு வலிக்கச் சிரித்ததுமுண்டு.
த்ரில்லிங்கான
பேய்க்கதைகளைக் கேட்டு
பயந்து அழுததுண்டு.
அந்த கதைமாந்தர்களை
கதை நிகழ்வுகளை எண்ணி
கண்களை இறுக்கி மூடி
போர்வையை இழுத்துப்போர்த்தி
பயத்தோடு படுத்த நாட்கள் நிறைய உண்டு.

இன்று
டி.வி. என்னும் குட்டிப்பிசாசு வந்தபிறகு அன்றாட வாழ்வின் பல
அற்புத தருணங்கள்
இல்லாமல் போய்விட்டன.
கதைகளைத் தொலைத்த
கிராமங்களின் நிலை
நம்மைக் கலங்க வைக்கிறது.


விஷயத்திற்கு
வருவோம்!
நம்முன்
தனித்துக்கிடக்கும்
குடும்பங்களில்
என்ன சொல்லி மற்ற உறவுகளை அறிமுகப்படுத்துவது!?

சரி,
நீங்களாவது
சொல்லுங்களேன்..
_சுதேசு

Nov 7, 2010

அன்றொருநாள்_2

பணியேற்ற முதல்நாள்.

நான் பணியேற்கும் போது
மிகவும் குறைந்த வயது.
19 வயதுகூட முழுமையாக முடியவில்லை.

எட்டாம் வகுப்பைக்கடந்து தான்
தலைமை ஆசிரியர் அறை.
வாட்டசாட்டமாக
நல்ல
முரட்டு முரட்டுப்பயலுக
எட்டாம் வகுப்பிற்குள்.
பார்த்தவுடன்
வியர்த்துப்போனது எனக்கு.
சொல்லப்போனால்
ஒரு மணப்பெண்ணுக்கு
தோன்றும் புகுந்தவீட்டு அச்சங்கள் போல
அடுத்தடுத்து அத்தனை கேள்விகள்!

தலைமை ஆசிரியர் என்ன டைப்போ?
மற்ற வாத்தியாரெல்லாம்
டிப்டாப்'பாக இருக்கிறார்களே
நம்மோடு சகஜமாகப் பழகுவார்களா?
இந்த
முரட்டுப்பயலுக
நம்மை மதிப்பார்களா?
சொல்வதைக் கேட்பார்களா?
சின்னப்பையனாக
இருக்கிறேன் என்பதால்
கிண்டல் செய்வார்களா?

இப்படி
பல கேள்விகள்
மனதிற்குள் இடமின்றி
முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன.
இதுதெரியாமல்
ஆளாளுக்கு
புத்திமதிகள்,
ஆலோசனைகள்.

ஒருவழியாக
எல்லாம் முடிந்து
எனக்கொரு வகுப்பை ஒதுக்கினார்கள்.
மூன்றாம் வகுப்பு..

உள்ளே நுழைகிறேன்...
வகுப்பறையில் கலகலப்பான சிரிப்போடும்
மலர்ந்த முகத்தோடும்
குழந்தைகள்!
நடுக்கத்தோடு நான்.!

தலைமை ஆசிரியர் என்கூடவே வந்து குழந்தைகளிடம் சொல்லி....விட்டுச்சென்றதோடு சரி.

நான் நானாக
ஒரு
சம்பிரதாயமான
அறிமுகம் கூட
செய்துகொள்ளவில்லை.

கடமையே
கண்ணாக..
'தமிழ் புத்தகத்தை எடுங்க..
முதல் பாடத்தை (உண்மையைச் சொன்னால் அது பாடமில்லை.. நல்ல பாட்டு) எடுங்க..
நான் சொல்லச்சொல்ல திருப்பிச் சொல்லுங்க..'

'வனத்திலேஒருவிழா..'

அக்னி டிஎம்டி கம்பிகள்போல
உறுதியாக எந்த
வளைவு நெளிவும்
இல்லாமல் ஒரு வரியைச்சொன்னேன்..

ஒரு ரியாக்சனும் இல்லை.
அடுத்து கைகளை லேசாக ஆட்டி
அந்த வரியை ஓரிடத்தில் ஒடித்து இரண்டாகச் சொன்னேன்..

வனத்திலே...
ஒருவிழா...

அத்தனை குழந்தைகளும்
ஆக்டிவேட் ஆயினர்.'

பல ஆண்டுகள் கடந்துவிட்டன.
இன்னும்
குழந்தைகளை
முழுமையாக
ஆக்டிவேட் செய்வதற்கான
பாஸ்வேர்டுகளைத்
தேடிக்கொண்டே
இருக்கிறேன்.

காலம்தான் பதில்சொல்ல வேண்டும்...

என்னிடம்
சிக்கி
அந்தக் குழந்தைகள்
சின்னாபின்னமாகிப்
போகிறார்களா?
இல்லை
அவர்களிடம் சிக்கிச்சிக்கி
இந்தச் சிடுமூஞ்சி
சிற்பமாகப் போகிறதோ?
என்று!
_சுதேசு

Nov 3, 2010

அன்றொரு நாள்_1

எனது
நண்பர் ஒருவர்
திண்டுக்கல் மாவட்டத்தில்
ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
பொத்தாம்பொதுவான
ஆசிரியர்களைப்போல
அல்லாமல்
ஓரளவு அர்ப்பணிப்பு
உணர்வும் நிறைய திறமையும் உள்ளவர்.
ஆனாலும் அவர் ஒரு
தேர்ந்த சந்தர்ப்பவாதி.
இதை அடிக்கடி அவரிடமும் சொல்வதுண்டு.
இருவரும் இருவேறு துருவங்கள்.
இருந்தபோதும் பத்து ஆண்டுகால நெருங்கிய நண்பர்கள்.

அவர் சொன்ன
ஒரு நிகழ்வு வினோதமானது.

நண்பர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காகச்
சென்றிருக்கிறார்.

ஒருவீட்டில்
இவருடைய பள்ளி
மாணவரின் பெற்றோர்.

அந்த அம்மா
அப்பாவியாகக் கேட்டிருக்கிறார்.
'ஏம்ப்பா தம்பி,
ஒங்க பள்ளிக்கூடத்துல
............ங்கிற வாத்தியார் யாருப்பா?'

என்னம்மா என்ன விஷயம்?

'அந்த ஆளுனால எங்கவீட்டு கன்னுக்குட்டி
அடிவாங்கிச் சாகுதப்பா..'

என்னவாம்?

அந்த வாத்தியார்
தெனமும் எம்மகன அடிக்கிறாராம்.
அவருமேல இருக்கிற
கோபத்துல
கன்னுக்குட்டிக்கு
அவருபேர வச்சு
போகையிலும் வரையிலும் பேரச் சொல்லிச்சொல்லி
அடிக்கிறான் தம்பி!'

பதில்சொல்லாமல்
பல்லிளித்துவிட்டுத் திரும்பினார் நம் நண்பர்.
காரணம்?
நம்மாளுதான் அவர்கள் தேடும் அந்த ஆசிரியர்.

ஆசிரியர்களின் பிரம்படி
எங்குபோய் பிரதிபலிக்கிறது
பார்த்தீர்களா?

மாணவர்களின்
இடம்மாறும் கோபத்திற்கு
இன்னும் எத்தனை
ஆடுமாடுகள் ஆளாகிக்கொண்டிருக்கின்றனவோ?
_சுதேசு