முதல் பக்கம்

Showing posts with label முக்கிய தினங்கள். Show all posts
Showing posts with label முக்கிய தினங்கள். Show all posts

Aug 22, 2013

தாய்ப்பால் வாரம்:ஆகஸ்ட் 1-7 : தேனி.சுந்தர்



தாய்ப்பால் அவசியம்:

WHO, UNICEF, WABA (World Alliance for Breastfeeding Action), IBFAN (International Baby Food Action Network போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் தாய்ப்பால் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக்காக பல பணிகளைச் செய்து வருகின்றன. இந்தியாவில் இதற்கெனவே ஒரு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. அதுதான் BPNI (Breastfeeding Promotion Network of India) இந்த அமைப்பு உலக தாய்ப்பால் வார நிகழ்வை 1992 முதல் இந்தியாவில் ஒருங்கிணைத்து வருகிறது. 
 

தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் உகந்தது. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது. முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் குழந்தை மரணங்களைத் தவிர்க்க முடியும் (யுனிசெப்).


தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக்கும், தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 50% குறைகிறது. சரியான தாய்ப்பால் பெற்ற குழந்தைகளின் நுண்ணறிவு பிற குழந்தைகளை விடவும் 8 புள்ளிகள் அதிகமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது தவிர நம்மை அதிர்ச்ச்க்குள்ளாக்கும் ஆய்வுகளும் சில புள்ளி விபரங்களும் இருக்கின்றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 6.9 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 14000 குழந்தைகள் இறந்துகொண்டுதான் இருக்கின்றனர். சரியான முறையில் தாய்ப்பாலூட்டுவதன் மூலம் 8,30,000 குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் பாலூட்டுவதன் மூலம் 22% இறப்புகளையும் 24 மணி நேரத்திற்குள் பாலூட்டுவதன் மூலம் 16% இறப்புகளையும் தவிர்க்க இயலும். குழந்தை பிறந்தவுடன் 1 முறை பாலூட்டுவதும் 1 நாள் கழித்து 3 முறை பாலூட்டுவதும் சமமே. 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் நிமோனியாவில் இறப்பதற்கு 15 மடங்கும் வயிற்றுப்போக்கால் இறப்பதற்கு 11 மடங்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் 93 பில்லியன்/ மூன்றில் இரண்டு மடங்கு குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்குள்ளாகவே தாய்ப்பால் தவிர்த்த செயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான பால் வர்த்தகம் மட்டுமே உலக அளவில் 25 பில்லியன் டாலர் அளவிற்கு நடைபெறுகிறது. குழந்தை உணவுப்பொருள் தயாரிப்பு தொழில் வளர்ச்சியில் 31% இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் முக்கிய வியாபாரச் சந்தையாக / இலக்காக இருப்பது நமது ஆசியக் கண்டமே.

தாய்ப்பால் வாரம்:

WABA அமைப்புதான் சர்வதேச அளவில் இந்த தாய்ப்பால் வாரம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.
 
 
 ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையக்கருத்தாக தாய்ப்பாலுக்கு ஆதரவு: அன்னையருக்கு நெருக்கமாக.. (Breastfeeding Support: Closed to Mothers)) என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை அனுசரிப்பதற்கான காரணங்கள் ஐந்து. 1. தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கவனத்தை ஈர்ப்பது 2. பேறுகாலப் பெண்களுக்கு அனுபவ தாய்மார்களின் ஆலோசனைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது. பேறுகால பெண்களுக்கான ஆலோசனை முகாம்களை நடத்துவது. 3. தாய்ப்பால் ஆதரிப்போரை பயிற்சிகள் மூலம் மேம்படுத்துவது 4. பேறுகால பெண்களுக்கு ஆதரவாக உள்ளூர் சமுக ஆதரவைத் திரட்டுவது 5. பேறுகாலப் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 படிநிலைகளைப் பின்பற்ற அரசுகளை வலியுறுத்துவது. முழுமையாக தாய்ப்பால் வழங்குவோர் சராசரியை உயர்த்தவும் அரசுகளை வலியுறுத்துவது.


உலக சுகாதார நிறுவனம் & யுனிசெப் தாய்ப்பால் ஆதரவு, விழிப்புணர்வுக்காக அறிவித்துள்ள பத்து படிநிலைகள்:

1. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எழுத்துப்பூர்வமான தகவலறிக்கைகளின் மூலமாக அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும்.

2. தாய்ப்பால் ஊட்டச்செய்வதற்கான பணிகளைச் செய்வதற்கான முறையான பயிற்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

4. பிரசவம் நிகழ்ந்த அரை மணிநேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டத் தொடங்கிட உதவ வேண்டும்.

5. குழந்தையிடமிருந்து தனித்திருந்தாலும் தாய்மார்களுக்கு பாலூட்டலுக்கான பயிற்சியளித்தல் வேண்டும்.

6. மருத்துவ உதவிக்காக மட்டும் அன்றி வேறெவ்வித காரணத்திற்காகவும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர்த்த திட, திரவ உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

7. தாயும் சேயும் ஒன்றாக இருக்க செய்தல் வேண்டும்.

8. தேவைக்கேற்ப தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க வேண்டும்

9. பால் பாட்டில்கள் தடை செய்வது

10. தாய்ப்பால் ஆதரவு குழுக்கள் அமைத்து மருத்துவமனை, கிளினிக்-ல் இருந்து சென்ற பின்பும் தாய்மார்களுக்கு ஆலோசனை, ஆதரவு அளித்திட வேண்டும்.

மேலும் பேறுகாலப் பெண்கள் குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பாலூட்ட ஐந்து புறச்சூழல் ஆதரவு தேவை எனவும் WABA அமைப்பு வலியுறுத்துகிறது. அதாவது 1.குடும்ப, சமூக ஆதரவு, 2.பணியிடம்,சுற்றுச்சூழல் 3.அவசரகாலச்சூழலிலும் உரிய ஏற்பாடுகள் (உம்.உத்தரகாண்ட் வெள்ளப்பாதிப்பு போன்ற பேரழிவு நேரங்களில் கூட) 4. சுகாதார நிலைமை 5.அரசுத்தரப்பு (ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, சட்ட திட்டங்கள் வகுப்பதில்)

தாய்ப்பால் வழங்குவதில் என்ன பிரச்சினை?:

தாய்ப்பால் வழங்குவதை அப்பெண்ணின் சமூக, பண்பாடு, கலாச்சார, பொருளாதார, கல்விப் பின்புலங்களும் தீர்மானிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக எங்கும் எதிலும் லாபம் ஒன்றே குறியெனத் திரியும் பன்னாட்டு, உள்நாட்டு பகாசுரக் கம்பெனிகளின் அநியாயம் தாங்கமுடியாத அநியாயமாக இருக்கிறது. தாய்ப்பாலை, தாய்-சேய் பாசத்தை, குழந்தை வளர்ப்பை மூலதனமாகக் கொண்டு பல்வேறு கம்பெனிகள் தமது தயாரிப்புகளைச் சந்தைக்கு கொண்டு வருகின்றன. தாய்ப்பால் தனியுணவாக குறைந்த பட்சம் 6 மாதங்கள் வழங்குவதில் கூட உலக அளவில் திருப்திகரமான சராசரி நிலையை அடைய முடியாததற்கு இந்தக் கம்பெனிகளின் வியாபார தில்லுமுல்லுகளும் தந்திரங்களுமே பெருங்காரணமாய் இருக்கின்றன. 
 

இவர்களைக் கட்டுப்படுத்தவே IBFAN என்ற அமைப்பின் முயற்சியால் உலக சுகாதார நிறூவனம், யுனிசெப் ஆகியவை 1981ல் பால்துணைப்பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளை (International Code of Marketing Breastmilk Substitute) வகுத்துள்ளன.

பால் துணைப்பொருட்கள், பால் பாட்டில்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை முன்னெடுத்துச் செல்லும்பொருட்டு விளம்பரங்கள் செய்வது, பொருட்களை பிரபலப்படுத்தும்பொருட்டு பரிசாகத் தருவது, சாம்பிள்-ஆகத் தருவது, இதற்காக மருத்துவமனை மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள், பணியாளர்களைப் பயன்படுத்துவது, பொருட்களில் குழந்தையுடன் கூடிய தாய்மார்களின் படங்களைப் பயன்படுத்துவது, தாய்ப்பாலின் மகத்துவத்தைக் குறைக்கும் வகையில் வாசகங்களை அச்சிடுவது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளைக் “கவனிப்பது”, நன்கொடை வழங்குவது, கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளுக்கான அச்சு, காட்சி ஊடகங்களை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்துவது, மருத்துவர்களுக்கு சன்மானம் கொடுப்பது, அவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்வது ஆகியவை தடைசெய்யப்படுகின்றன.

சரி இந்தியாவின் நிலைமை?

IBFAN- (ஆசியா) அமைப்பால் தாய்ப்பால் வழங்குவதில் உள்ள முன்னேற்றம், கொள்கை ரீதியான பிரச்சினைகள், கள நிலைமைகளை ஆசிய அளவில் 50 நாடுகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. 2012-ல் வெளியான WBTi (-World Breastfeeding Trends Initiative) அறிக்கை நம் தாய்த்திருநாட்டைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. 15 அம்சங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இந்தியாவில் இருக்கின்ற மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதில் பின்னடைவு, IYCF (Infant and Young Child Feeding) குறித்த தேசிய வழிகாட்டு நெறிமுறைகளை கீழ்மட்ட அளவுகளில் கொண்டுசெல்வதில் பின்னடைவு, உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் ஒதுக்கப்படுகின்ற நிதி அளவினைக் கருத்தில் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதற்கான சர்வதேச பத்து படிநிலைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை. BFH (Baby Friendly Hospital) அமைப்பை உருவாக்குவதில் 2005 முதல் எவ்விதத்திலும் முன்னேற்றம் காணப்படவில்லை. (உலக அளவில் 156 நாடுகளில் 20,000 மருத்துவமனைகள் மட்டுமே பாஸ். BFH அமைப்பை 82% மகப்பேறு மருத்துவமனைகளில் நிறுவிய உலகின் முதல் மாநிலமாக கேரளா(இந்தியா) வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஆனாலும் தற்போதும் இந்தியாவில் 10% மருத்துவமனைகள் தான். கியூபாவில் 87%, சீனாவில் ஊரகப்பகுதிகளில் 68% நகர்ப்பகுதிகளில் 48% என 6000 மருத்துவமனைகள்-UNICEF & StC அறிக்கை)

IMS-2003 சட்டத்தை முழுமையாக, வலுவாக கொண்டு செல்ல தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. சட்டத்தை மீறுபவர்கள் குறித்த நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில அளவுகளில் வலுவான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதைக் கண்காணிக்க பயிற்சி பெற்ற உரிய அலுவலர்கள் இல்லை.இச்சட்டம் குறித்து மக்களிடையே மிகமிகக் குறைந்த அளவே விழிப்புணர்வு உள்ளது. (WBTi)

(இந்தியாவில் இளம்குழந்தைகளுக்கான பால் துணைப்(பதிலி)பொருட்கள், உணவு மற்றும் பால்பாட்டில்கள் தயாரிப்பு, விநியோக ஒழுங்குமுறைச்சட்டம் (IMS ACT-1993) கொண்டு வரப்பட்டது. 2003ல் அச்சட்டத்திற்கு (-Infant Milk Substitute, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Amendment Act,2003) வலுவூட்டும் பொருட்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்தாய்மார்களை குறிவைத்து செய்யப்படும் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டன.

பிறந்த 6 மாதங்களுக்குள் பகுதியாகவோ, முழுமையாகவோ தாய்ப்பாலுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பால் துணைபொருட்கள் (Lactogen-1, Lactogen-2, Nestogen-1, Nestogen2, Lactodex- 1, Lactodex - 2, Amul Spray, Zerolac, Dexolac, ProSoyal , Simyl-MCT, Similac Neosure போன்றவை), பால் பாட்டில்கள்: Bonny Baby, Hello Baby, Wipro போன்ற அனைத்து வகைக் கம்பெனிகளின் தயாரிப்புகளும்.. உணவுகள்: 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கான உணவுகளாக முன்வைக்கப்படும் Nestum,Cerelac, Farex, Weano, Veelac, Infacare, First Food, Dexrice, Easum, Junior Horlicks, Growing up milk, health drinks போன்றவையும் இச்சட்ட வரையறைக்குள் வருகின்றன. பால்துணைப்பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளுள் (International Code of Marketing Breastmilk Substitute) பல சரத்துகள் இச்சட்டத்திலும் பிரதிபலிக்கின்றன.)

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணிமுன் பயிற்சி போதுமானதாக இல்லை. அங்கன்வாடி, ANM, ASHA பணியாளர்களுக்கான பயிற்சியில் IYCF குறித்த கருத்துகள் இடம்பெறவே இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

நமது இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர்(NFHS-3). அதில் 25% குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த 1 மணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 20 மில்லியன் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மட்டும் கூட முழுமையாக தாய்ப்பால் உணவு கிடைப்பதில்லை. 13 மில்லியன் குழந்தைகளுக்கு 6-9 மாதங்களில் தாய்ப்பாலுடன் சரியான இணை உணவுகள் கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதில் கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. 20% குழந்தைகள் மட்டுமே ஆறு மாதங்களுக்குப் பிறகும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் பெறுகின்றனர். மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிப் பணியாளர்களின் சேவையைப் பெறுகின்றனர். நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சத்துணவு பெறுகின்றனர். 18% குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்துள்ளனர்.

இந்தியா பாரம்பரியமாகவே தாய்ப்பாலுக்கு சிறப்பான இடம் அளிக்கும் நாடு. ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு சரியான தகவல்கள், வீடு, பணிபுரியும் இடங்களில் உரிய ஏற்பாடு, மகப்பேறு விடுப்பு, குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில் இந்நிலை மேலும் உயரும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. 40.5% பெண்கள் பிறந்த உடனேயே தாய்ப்பால் வழங்குகின்றனர். 46.8% பெண்கள் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் வழங்குகின்றனர். அதிகபட்சமாக 24.4 மாதங்கள் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 12.5% பெண்கள் பாட்டில் பால் கொடுக்கின்றனர். 57.1% பெண்கள் தாய்ப்பால் தவிர்த்த உணவுகளைக் கொடுக்கின்றனர். (WBTi)

மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்குக் கூட முழுமையான தாய்ப்பால் (6மாதங்கள்) வழங்க இயலாத பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.(தாய்ப்பால் குறித்த சர்வதேச மாநாடு-2012 அறிக்கையில் யுனிசெப்)

இந்தியாவில் 2010ல் உரிய நாட்களுக்கு முன்னதாகவே 13% குழந்தைகள் பிறப்பதாகவும் 20% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமலும் 47.9% குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சியில்லாமலும் இருப்பதாகவும் கூறுகிறது உலக சுகாதார அறிக்கை-2013.

சரி, மேற்கண்ட ஆய்விற்கு வருவோம். WBTi ஆய்வில் கொள்கை மற்றும் திட்டங்கள் சார்ந்த 10 அம்சங்களில் 43/100 மதிப்பெண்களும் குழந்தைகளுக்கு உணவூட்டுதல் சார்ந்த 5 அம்சங்களில் 31/50 மதிப்பெண்களும் ஆக மொத்தம் இந்தியா 74/150 மதிப்பெண்கள் பெற்று C கிரேடில் இருக்கிறது. இருந்தபோதிலும் 2005, 2008 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது 5 மதிப்பெண்கள் அதிகமாகவே பெற்றிருக்கிறது.

இதுவரை போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களில் கடந்த 10, 11 மற்றும் 12வது ஐந்தாண்டுத் திட்டங்களில் தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக 1% ல் இருந்து 2% ஆக உயர்த்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி, மருத்துவம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கின்ற இருக்கின்ற பாய்ச்சல் வேகம் இதுபோன்ற செயல்பாடுகளில் இருந்தால் மக்கள் நலம் பெறுவர். திறன் மிக்க குடிமக்களாய்த் திகழ்வர். உழைப்பு பெருகும். உற்பத்தி பெருகும். பொருளாதார வளர்ச்சியால் நாடு நலம் பெறும்.! வளம் பெறும்..! 
 
நன்றி: விஞ்ஞானச்சிறகு-ஆகஸ்ட்.2013

Jul 18, 2013

ஜூலை,18: நெல்சன் மண்டேலா-சர்வதேச தினம்

நெல்சன் மண்டேலாவின் 95-வது பிறந்ததினம் இன்று.

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டுவருவதாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் ஜூமா தெரிவித்துள்ளார்

நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க விடுதலை வீரரும் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா 67 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்துள்ளார்.தென்னாப்பிரிக்காவில் மீள் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்காக உழைத்தமையைப் பாராட்டி அவரது பிறந்த நாளை மண்டேலா தினம் என்று ஐநா பிரகடனப்படுத்தியுள்ளது.

அவரது சமூக அர்ப்பணிப்பை கௌரவிக்கும் முகமாக, மக்கள் இன்றைய நாளில் 67 நிமிடங்களை சமூகத் தொண்டுகளில் செலவிட வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நுரையீரல் தொற்று காரணமாக மண்டேலா தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, பிறப்பு: ஜூலை 18, 1918), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர்(வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.

தொண்ணூற்று நான்கு வயதான மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இளமை:  நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடிஇன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.


1937ஆம் ஆண்டளவில் மண்டேலா: அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958-ஆம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

அரசியல்: தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார்.[3] 1948 ஆம் ஆண்டுதென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார் மெதுவாக . கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை Sharpeville நகரில் நடாத்தினர். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்ப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961 அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்து கொண்ட மண்டேலா ஆயத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர்.

1961-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்துபணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

1961 டிசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்குஎதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலாஅமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை நடைமுறையில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress ] தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

சிறை: மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைக்கான போராட்டங்கள்:மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.

விடுதலை: அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.[4].1990 இல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது

வரவேற்பு: தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில்ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-


இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

விருதுகள்:உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது

தென்னாப்பிரிக்காவின் அதிபராதல்: 1994 மே 10 ந் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.

உடல்நலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 ஜூன் மாதம் 8-ம் தேதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 ஜூன் 23-ம் தேதி அறிவித்துள்ளது.

மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், 2013 ஜூன் 27-ம் தேதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணம் ரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு, உறக்கத்தை துறந்து மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப கண்ணீர் மல்க பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
நன்றி: விக்கிபீடியா