முதல் பக்கம்

Showing posts with label மாவட்டக்கிளை. Show all posts
Showing posts with label மாவட்டக்கிளை. Show all posts

Jun 22, 2020

பகுதி சூரிய கிரகணம்

 

ஜூன்,21.2020 அன்று காலை 10.15 முதல் பிற்பகல் 1.20 மணி வரை என மூன்று மணி நேரம்  பகுதி சூரியகிரகணம் தெரிந்தது. அதிகபட்சமாக 11.45 மணி அளவில் 25% வரை சூரியன் நிலவினால் மறைக்கப்பட்டது. மேகமூட்டமாக இருந்தாலும் சில நேரங்களில் மட்டுமே முழுவதும் சூரியன் தெரியாத நிலை இருந்தது. கிரகணத்தின் பெரும்பாலான நேரம் காணக்கூடியதாகவே இருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த டிச.26ல் தெரிந்த வளையசூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அளவில் பள்ளி, கல்லூரிகளிலும் பொது இடங்களிலும் கிரகணம் தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 2000 சூரிய வடிகட்டிக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அதே கண்ணாடிகளைக் கொண்டு  பகுதி சூரிய கிரகணத்தை 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சூரிய வடிகட்டிக் கண்ணாடி கொண்டு பாதுகாப்பாக கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர். தேனி மாவட்டத்தில் அடுத்த பகுதி சூரிய கிரகணம் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி தான் பார்க்கமுடியும்..

கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கிரகணம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். பந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளியை சுவரில் விழச்செய்தும் அரிகரண்டி மூலம் ஏற்படும் நிழலைக் கொண்டும் விளக்கம் அளிக்கப்பட்டது. கிரகணத்திற்கும் கொரானா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரகணத்தின் பொழுது எந்தவிதமான சிறப்புக் கதிர்களும் வெளிவருவதில்லை. உணவுகள் கெட்டுப்போகாது. கிரகணத்தின் போது தாராளமாக உணவு உண்ணலாம். கிரகணம் என்பது சூரியன், நிலவு, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் மறைப்பு விளையாட்டு போன்றதே ஆகும். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளிக்கப்பட்டது. பொதுமக்கள் சூரியக் கண்ணாடி கொண்டு கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

தேனி முல்லை நகர், இரத்தினம் நகர், ஆண்டிபட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, தேவாரம், போடி மற்றும் கம்பம் நகரில் பல இடங்களில் சூரியக்கண்ணாடியை வைத்து அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், ஜெகநாதன், கமல், சதீஷ், முத்துப்பாண்டி, ஸ்ரீராமன், சிவக்குமார், தாழைக்குமரன், ராம்குமார், ஜெகதீசன் உள்ளிட்டோர் ஆங்காங்கே வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சூரியக்கண்ணாடி மூலம் பார்க்கச் செய்து விளக்கமளித்தனர்

Mar 7, 2020

அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தினக் கருத்தரங்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (மார்ச்,7) இராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது..


தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை வகித்தார். உத்தமபாளையம் கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றுப் பேசினார்.. பள்ளியின் தாளாளர் பிரபாகர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் தே.சுந்தர் அறிமுக உரையாற்றினார். 



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநில தலைவர், அறிவியல் எழுத்தாளர் பேரா.மோகனா மகளிர் தினம் உருவான வரலாறு, பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் சம உரிமைக்காகவும் சந்தித்த போராட்டங்கள் மற்றும் அறிவியல் துறையில் பெண் விஞ்ஞானிகள் சந்தித்த சவால்கள், அடைந்த சாதனைகள் ஆகியவை குறித்து சிறப்புரையாற்றினார்.. அவள் விகடன் சார்பில் சூப்பர் பெண் விருது பெற்றதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 


தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மு தெய்வேந்திரன் நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்துக் கொண்டனர்.. செயற்குழு உறுப்பினர் அருணா நன்றி கூறினார்..


Feb 29, 2020

தேனி மாவட்டம் முழுவதும் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் பிறந்த விஞ்ஞானி சி.வி.ராமன் 1928ஆம் ஆண்டு பிப்.28 ஆம் தேதி தனது ஒளிச் சிதறல் குறித்த ஆய்வை அறிவித்த நாள் ஆகும். அந்த ஆய்விற்காக 1930ல் முதல் முதலாக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர், ஆசிய விஞ்ஞானி சி.வி.ராமன் ஆவார். அவருடைய கண்டுபிடிப்பையும் அவருடைய அறிவியல் சார்ந்த முயற்சிகளையும் போற்றும் விதமாக 1986 ஆம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் மனப்பான்மையையும் குழந்தைகளிடையே, பொதுமக்களிடையே கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஞ்ஞானி சி.வி.ராமன் முகமூடியும் அவரைப் பற்றிய சிறு நூலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டன.

பள்ளிகளில் குழந்தைகள் விஞ்ஞானி ராமன் அவர்களின் முகமூடி அணிந்து மகிழ்ந்தனர். தேனியில் அரண்மனைப்புதூர், அன்னஞ்சி, ஆண்டிபட்டியில் வரதராஜபுரம், பெருமாள் கோவில் பட்டி, போடிநாயக்கனூர், கடமலைக்குண்டு ஒன்றியத்தில் சிறப்பாறை, தும்மக்குண்டு, காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் கம்பம் ஒன்றியத்தில் கூடலூர், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் பெரியகுளம் பகுதியில் டி.வாடிப்பட்டி, சில்வார்பட்டி மற்றும் சின்னமனூர் ஒன்றியம் சீலையம்பட்டி, உத்தமபாளையம் ஒன்றியத்தில் தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஊர்வலம், கண்காட்சிகள், கருத்துரைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.

சுருளிப்பட்டியில் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியின் சார்பில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின ஊர்வலத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் பறையிசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், இணைச் செயலாளர்கள் வெங்கட்ராமன், ஞானசுந்தரி, ஜெயந்தி, பொருளாளர் மணிமேகலை, மாவட்டத் தலைவர் மகேஷ், சதீஷ், தாழைக்குமரன், பாண்டி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர்.

Feb 13, 2020

கம்பம் சந்திப்பு 2

கம்பம் சந்திப்பு- 2 ஆம் நிகழ்வு அறிவியல் அறிஞர் டார்வின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்.12 மாலை கம்பம் நகரில் நடைபெற்றது.. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் தே.சுந்தர் தலைமை வகித்தார்.. பொதுக் குழு உறுப்பினர் மா.சிவக்குமார் வரவேற்று பேசினார்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவர் பேரா.தினகரன் அவர்கள் கலந்து கொண்டு டார்வின் தின கருத்துரை வழங்கினார்.. டார்வின் குறித்து, பரிணாமம், மரபணு மற்றும் ஜீன் தெரபி, பாலின வேறுபாடுகள், மனித இனத்தின் 20க்கும் மேற்பட்ட கிளை இனங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் விளக்கங்கள் அளித்து, வழக்கம் போல கிளை கிளையாக புதிய புதிய தகவல் மழைதனைப் பொழிந்து சென்றார்..

உதாரணத்திற்கு சில..

டார்வின் ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த நூலை வெளியிடவில்லை.. பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்து தான் வெளியிட்டார்.. அதற்கு அடிப்படையாக அமைந்தது உயிரைப் பணயம் வைத்து டார்வின் மேற்கொண்ட ஹெச்.எம்.எஸ்.பீகிள் கடற்பயணம்.. 

நேரடியாக குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்றெல்லாம் டார்வின் கூறவில்லை.. அதே போல Survival of the fittest எனும் பதம் டார்வின் சொன்ன பதமல்ல! டார்வினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. தரைக்கு அடியில் உருளைக்கிழங்கு, மேலே தக்காளி என ஒரே செடியில் இரு உணவுப் பொருள் பொமேட்டோ குறித்த ஆராய்ச்சி பற்றிய தகவல்கள்..

தேசம், இனம், மதம், சாதி எனப் பலவாறாக பிரிந்து நாம் நின்றாலும் மோதிக் கொண்டாலும் போரிட்டாலும் கூட நாம் அனைவருக்கும் ஆதித் தாய் ஒருத்தி தான் என்பது அறிவியல் நிரூபணம் .. ஆண், பெண், திருநங்கை, திருநம்பி மட்டுமின்றி இன்னும் பல மாற்றுப் பாலினங்களும் உண்டு..

தினகரன் சார் உரை கேட்க போடியில் இருந்து ஆசிரியர் சுரேஷ் குமார் தனது மாணவர்கள் இருவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தது சிறப்பு... தேனி, ஆண்டிபட்டி, தேவாரத்தில் இருந்தும் கூட அறிவியல் ஆர்வமுள்ள நண்பர்கள், மாணவர்கள் வந்திருந்தனர்.. டார்வின் மற்றும் சி.வி.ராமன் முகமூடிகள் வெளியிடப்பட்டன. அவர்கள் குறித்த சிறு நூல்களும் வெளியிடப்பட்டன..

மாவட்ட தலைவர் மா.மகேஷ் நிறைவுரை வழங்கினார். மாவட்ட செயலாளர் மு தெய்வேந்திரன் நன்றி கூறினார்.. மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.. பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

Jan 26, 2020

கம்பம் சந்திப்பு 1

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் சந்திப்பு என்கிற பெயரில் புதியதொரு மாதாந்திர நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஜன.25 அன்று நடைபெற்ற முதல் நிகழ்வைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் சுந்தர் தொடங்கி வைத்தார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராமன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் தஞ்சை களப்பிரன் அறிவியல் பார்வையில் தமிழ் இலக்கியங்கள் என்ற நோக்கில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் ஜெகநாதன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Dec 27, 2019

வளைய சூரிய கிரகணம்

 2019 டிசம்பர் 26ஆம் தேதி வளைய சூரிய கிரகண நிகழ்வை தேனி மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.. குறிப்பாக கம்பம் வ.உ.சி. திடலில் பனியாரம் சாப்பிட்டுக் கொண்டே நூற்றுக்கும் மேற்பட்டோர் கிரகணம் கண்டு மகிழ்ந்தனர்.. மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார இயக்கமாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.. மாநிலச் செயலாளர் சுந்தர் ஏற்பாடுகள் செய்திருந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீராமன், பாண்டி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.. தேனி முல்லை நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன் ஒருங்கிணைப்பில் கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத்தில் தெளிவாக தெரிந்தது: சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

பதிவு: டிசம்பர் 27, 2019 03:45 AM
கம்பம்

தேனி மாவட்டத்தில் சூரிய கிரகணத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி அருகே முல்லை நகர், கம்பம், போடி உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் நேற்று சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. இதனால் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


முல்லைநகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்தனர். சிறுவர், சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் பிரத்ேயக கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர். கிரகணம் பார்க்க வந்த மக்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் பனியாரம் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தேனி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் சூரிய கிரகணத்தையொட்டி தெருவில் உலக்கையை நிறுத்தி வைத்து பொதுமக்கள் சோதித்து பார்த்தனர். கிரகணம் நடந்த நேரத்தில் உலக்கை சரியாமல் நேராக நின்றது. இதை மக்கள் வியந்து பார்த்தனர்.

சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. கிரகண நேரம் முடிந்த பின்னரே கோவில் நடை திறக்கப்பட்டது. தேனியில் காலை 10.30 மணி வரை கிரகணம் தெளிவாக தெரிந்தது.

இதேபோல் கம்பம் வ.உ.சி. திடலில் சூரிய கிரகணத்தை பார்வையிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோமநாதன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த தொலை நோக்கி மற்றும் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர்.

Dec 8, 2019

இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா

தேனி, டிச. 8- 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேனியில் ஜான் பென்னிகுயிக் படிப்பகத்தில் - மாநில அள வில் தேர்ச்சிபெற்ற நாளைய விஞ்ஞானிகள் - தேசிய அள வில் பங்குபெறும் இளம் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா 29.11.2019 மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க தேனி மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் மாநில செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் தெய்வேந்திரன், தலைமை ஆசிரியர்கள் கே. ஜே.கோபிநாத் - வெங்கடேசன் - குப்புசாமி - கவிஞர்கள் கவிக் கருப்பையா கழகப் பொதுக் குழு உறுப்பினர் மு.அன்புக்கர சன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்: ரியாஜில்ராசித், சந்துரு இருவரும் தேசிய அளவில் பங்குபெறும் இளம் விஞ்ஞானிகள் மற்றும் பெரிய குளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கள் மற்றும் தேனி கம்மானுர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள்: முகமது அப்துல்காதர் ஜெய் லானி, கார்த்திகேயன், ரூ.ஜர்ப்ரின், ப.ஸிரின், கே.பாண்டி மீனா, வி.ஸ்ரீபுவியா ஆகியோர் மாநில அளவில் தேர்ச்சிபெற்ற நாளைய விஞ்ஞானிகள் - அரிமா. பெரிய சாமி நினைவு பரிசுகள் வழங் கினார். செட் பவுண்டேஷன் நித்தியானந்தம் நன்றி கூறினார்.




Oct 31, 2019

மந்திரமா தந்திரமா?

அக்.2019ல் டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மந்திரமா தந்திரமா – அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் மா.மகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலக் கருத்தாளர் வீரையா மேஜிக் செயல்பாடுகளை செய்து காட்டினார். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவ மாணவியர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. இந்நிகழ்வு குறித்த செய்திகள் ஊடகங்களில் சிறப்பாக வெளியானது குறிப்பிடத்தக்கது.. 

அதே நாள் மாலை முல்லை நகரிலும் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்..

Sep 8, 2019

புத்தகங்களுடன் தேநீர் விருந்து நிகழ்ச்சி..

செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் ஆசிரியர்கள் மத்தியில் கல்விசார்ந்த நூல்களை அறிமுகப்படுத்தும் பொருட்டும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் பொருட்டும் மாநிலம் முழுவதும் புத்தகங்களுடன் தேநீர் விருந்து என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் கம்பம் கிளையின் சார்பில் செப்.5 அன்று மாலை ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாநிலச் செயலாளர் சுந்தர் தலைமை வகித்தார். பங்கேற்ற ஆசிரியர்கள் அவர்கள் வாசித்த நூல்களை அறிமுகப்படுத்திப் பேசினர். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் நன்றி கூறினார். கிளைச் செயலாளர் சுரேஷ் கண்ணன் ஒருங்கிணைத்தார்.
அதே நாள் தேனி முல்லை நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேனி கிளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு தேனி கிளைத் தலைவர் தாழைக்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், இணைச் செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளைச் செயலாளர் ராம்குமார் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
செப்.6 அன்று மாலை உத்தமபாளையம் கிளை சார்பில் ஞானம்மன்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளைத்தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். கிளைப் பொருளாளர் சத்யா வரவேற்றார். மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் அருணா நன்றி கூறினார். அக்.5 சர்வதேச ஆசிரியர் தினத்தை கிளையின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

Aug 26, 2019

அறிவியல் மனப்பான்மை தினம்

பகுத்தறிவுச் செயல்பாட்டாளரான நரேந்திர தபோல்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஆகஸ்ட்-20ஐ தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்க அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம் அறைகூவல் விடுத்தது. எனவே அந்நாளை அறிவியல் மனப்பான்மை தினமாக அறிவிக்க அரசுகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட்த்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜெகநாதன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்..

Sep 1, 2018

சுருளிப்பட்டியில் துளிர் திறனறிதல் தேர்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (செப்.1) மாநிலம் முழுவதும் சுமார் 60,000 குழந்தைகள் வரையிலும் பங்கேற்ற துளிர் அறிவியல் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இளநிலை, உயர்நிலை மற்றும் முதுநிலை ஆகிய மூன்று நிலைகளில் குழந்தைகளின் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த அறிதலைச் சோதிக்கும் விதமான கேள்விகள் இடம்பெற்றன. தேனி மாவட்டத்தில் 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1000 குழந்தைகள் 11 மையங்களில் தேர்வு எழுதினர். நமது கம்பம் பகுதியில் சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று முற்பகல் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயரூபி, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் துணைத்தலைவர் பாண்டியன், செயலாளர் சுரேஷ்கண்ணன் மற்றும் அறிவியல் ஆசிரியர் செந்தில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Aug 20, 2018

அறிவியல் இயக்கம் சார்பில் கேரள வெள்ள நிவாரணப் பொருட்கள்

கடந்த ஓரிரு வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலம் வரலாறு காணாத வகையில் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் அடைந்துள்ளது. உடைமைகளை உறவுகளை இழந்து தவிக்கும் அம்மக்களுக்கு உதவிகள் செய்திடும் வகையில் தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அரிசி மூட்டைகள், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கான மளிகைப் பொருட்கள், பெண்கள், குழந்தைகளுக்கான நாப்கின்கள், குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள், சீனி, சில்வர், அலுமினியப் பாத்திரங்கள், அனைத்து வயதினருக்குமான புதிய ஆடைகள், போர்வைகள், பாய்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சுமார் 1.5 இலட்சம் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருட்கள் பெறப்பட்டு இன்று பிற்பகல் கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு பகுதிகளுக்கு தனி வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச் செயலாளர் மு.தெய்வேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹ.ஸ்ரீராமன், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீதர், சுரேஷ்கண்ணன், ஞானசுந்தரி, ராம்குமார், பி.எஸ்.என்.எல். சங்க பொறுப்பாளர்கள் சிரில், சீனிவாசன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

Feb 27, 2018

பிப்.28-தேசிய அறிவியல் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு

அன்புடையீர் 

வணக்கம்.பிப்.28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா இயக்கத்துடன் இணைந்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50 பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாவட்ட அளவில் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.. 

போட்டி முடிவுகள்: 

4,5 வகுப்பு மாணவர்களுக்கான ஒளியோடு விளையாடு என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியின் இரா.ஹேமா வைஷ்ணவி முதல் இடத்தையும் கு.இலட்சுமிபுரம் அரசு துவக்கப் பள்ளியின் கு.மகாலட்சுமி இரண்டாம் இடத்தையும் காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பி.சுவேதா மற்றும் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தேவிபிரித்திஸ்கா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் வானில் மேரிகியூரி என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எஸ்.யுவதர்ஷனி முதல் இடத்தையும் வரதராஜபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எஸ்.சாய்குமார் இரண்டாம் இடத்தையும் பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியின் அஸ்ரூல் நிஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

9-12 வகுப்பு மாணவர்களுக்கான எனது பார்வையில் விஷன் இந்தியா-2020 என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் மு.சங்கவி முதல் இடத்தையும் புலிகுத்தி அரசு உயர்நிலைப்பள்ளியின் நா.சிவானி இரண்டாம் இடத்தையும் வடபுதுப்பட்டி ஸ்ரீமுத்தாலம்மன் மேல்நிலைப்பள்ளியின் செ.தாரணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

கல்லூரி மாணவர்களுக்கான டார்வினுக்கே என்றும் வெற்றி என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியின் என்.ஷர்மிளாதேவி முதல் இடத்தையும் இலட்சுமிபுரம் இரா.கௌசல்யா இரண்டாம் இடத்தையும் போடிநாயக்கனூர் வி.பவித்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

ஆசிரியர்களுக்கான இந்திய அறிவியல் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு.அ.ஞானதெரஸ் முதல் இடத்தையும் உப்பார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.ஜி.விஜயலட்சுமி இரண்டாம் இடத்தையும் உப்பார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் உதவி ஆசிரியை திருமிகு.வி.ஹேமலதா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 


ஆர்வலர்களுக்கான கட்டுரைப் போட்டியில் கம்பம் ஜெ.தனலட்சுமி முதல் இடத்தையும் ஆண்டிபட்டி எஸ்.ஆர்.எஸ்.ரெங்கநாதன் இரண்டாம் இடத்தையும் அல்லிநகரம் எஸ்.கௌசல்யா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.. 

பரிசளிப்பு & பாராட்டு விழா: 
  • பரிசளிப்பு விழா பிப்.28 மாலை 5 மணிக்கு தேனி கான்வெண்ட் அருகில் உள்ள அம்பி வெங்கிடசாமி மக்கள் மன்றத்தில் நடைபெறும்.. 
  • போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். 
  • பள்ளி & மாவட்ட அளவில் முதல் மூன்று படைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.. 
  • பங்கேற்ற பள்ளிகளுக்கான நினைவுப்பரிசுகளும் வழங்கப்படும்.. 
  • அனுமதி இலவசம். 
அன்புடன் 
ஈ.ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
9789411022

Jan 8, 2018

தேனி மாணவிகளுக்கு குழந்தை விஞ்ஞானி விருது

தேனி : தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு சார்பில், ஆய்வு கட்டுரைகள் மூலம் குழந்தை விஞ்ஞானிகள் கண்டறியப்பட்டனர்.இதனையொட்டி குஜராத்தில் நடந்த மாநாட்டை அம்மாநில முதல்வர் விஜய ரூபானி துவக்கிவைத்தார். கொலம்பியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளியின் 8 ம் வகுப்பு மாணவி யு.சிரின் தலைமையில் கே.பாண்டிமீனா, எம்.பிரதீபா, பி.நித்யஸ்ரீ, வி.ஸ்ரீ புவியா குழுவினர் ஆய்வை சமர்ப்பித்தனர்.தேனி மாவட்டம் அன்னஞ்சி கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் குறித்த புலனறிவை அடிப்படையாக கொண்டு ஆய்வுக் கட்டுரையை மாணவிகள் தயார் செய்திருந் தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், ஆயிரம் கட்டுரைகளில் சிறந்ததாக தேனி மாணவிகளின் கட்டுரை தேர்வாகி உள்ளது. இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு 'குழந்தை விஞ்ஞானி' விருதிற்கான சான்றிதழ் அங்கு வழங்கப்பட்டது.ஆய்வு கட்டுரையின் வழிகாட்டி ஆசிரியர் ராம்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் சுந்தர், மாவட்ட செயலர் ஜெகநாதன், வெங்கட், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உஸ்மான் அலி, கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள், பள்ளி செயலர் ஸ்ரீதர், இணைச்செயலர் கண்ணன், பொரு ளாளர் ஜெயராமன், முதல்வர் ஜாய்ஸ் ஆகியோர் மாணவிகளை பாராட்டினர்.

Dec 17, 2017

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேனி, குஜராத்தில் தேசிய அளவில் நடக்க உள்ள குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டிக்கு தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டிகள் அல்லிநகரம் அரசு பள்ளியில் நடத்தப்பட்டன. இதில் பெரியகுளம் விக்டோரியா மெமோரியல் அரசு பள்ளி, கெங்குவார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குப்பிநாயக்கன்பட்டி கலைமகள் நடுநிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இப்பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் சென்னை சத்தியபாமா பல்கலையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இளநிலை, முதுநிலை பிரிவுகளில் 282 ஆய்வு குழுவினர் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.  இளம் விஞ்ஞானியர் விருதிற்கு 30 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. 

இதில் தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் யு.சிரின், கே.பாண்டிமீனா, எம்.பிரதீபா, பி.நித்யஸ்ரீ, வி.ஸ்ரீபுவியா ஆகியோரின் ஆய்வு கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் குஜராத்தில் டிச. 27 முதல் 30 வரை நடக்கும் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள், பள்ளி செயலர் ஸ்ரீதர், இணைச்செயலர் கண்ணன், பொருளாளர் ஜெயராமன், முதல்வர் ஜாய்ஸ், ஆசிரியர் ராம்குமார், தமிழக அறிவியல் இயக்க மாநில செயலர் சுந்தர், மாவட்ட செயலர் ஜெகநாதன், வெங்கட் ஆகியோர் இம்மாணவிகளை பாராட்டினர்.

Nov 15, 2017

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நடந்தது.

மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் பாலசுப்ரமணியன், அம்மையப்பன் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலர் ராம்குமார் வரவேற்றார். மாவட்ட செயலர் ஜெகநாதன், மாநில செயலர் வெண்ணிலா பேசினர். முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, குழந்தை விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் நாராயணசாமி வாழ்த்தினர். பேராசிரியர்கள் செல்வராஜ், கோபி, சேசுராஜ் ஆய்வறிக்கையை மதிப்பிட்டனர். சுந்தர் ஆசிரியர் தினப் போட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ஜெகநாதன் கூறியதாவது: நிலைத்த மேம்பாட்டிற்கான அறிவியல் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற தலைமைப்பில் மாணவர்கள் 40 ஆய்வறிக்கையை சமர்பித்தனர். 25 பள்ளிகளை சேர்ந்த 200 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெறுவோர் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். அங்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கப்படும், என்றார்.

Nov 14, 2017

25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு-தேனி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இளம் விஞ்ஞானியர் விருதிற்கான 25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.. தேனி கிளைத்தலைவர் தாழைக்குமரன் வரவேற்றார். மாவட்டத் துணைத்தலைவர்கள் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், ஆர்.அம்மையப்பன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்துணைத்தலைவர் அ.வெண்ணிலா மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் துளிர் இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகள் இளநிலை, முதுநிலை ஆகிய இருபிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளின் செயல்பாட்டிற்கு உதவும் வகையில் நிலைப்புறு மேம்பாட்டிற்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற மையக்கருப்பொருளின் கீழ் 36 ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். 

அவற்றில் இருந்து இளநிலை பிரிவில் 4 முதுநிலை பிரிவில் 1 ஆக மொத்தம் 5 ஆய்வுகள் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்த குழந்தை விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.வசந்தி, பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வம், உத்தமபாளையம் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். புதுவிழுது கல்வி இதழின் ஆசிரியர் தே.சுந்தர் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் ஜி.பாண்டியன், உஸ்மான் அலி, ராம்குமார், சுரேஷ்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..


மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வான ஆய்வுகள் விபரம் : 

விளைநிலம் தரிசுநிலமாக மாறுதல் பற்றிய ஆய்வு:  அரசு மேல்நிலைப்பள்ளி, கெங்குவார்பட்டி , குழுத்தலைவர் : ஓவியா , வழிகாட்டி ஆசிரியர் : பொ.சத்யவதி 

தேவதானப்பட்டியில் சந்தனமரங்கள் பற்றிய ஆய்வு : ஊ.ஒ.ந.பள்ளி, டி.வாடிப்பட்டி ,  குழுத்தலைவர்: எஸ்.ஆர்.அருண் , வழிகாட்டி ஆசிரியர் : எஸ்.ஞானசுந்தரி 

ஆற்றல் சேமிப்பு : கலைமகள் ந.நி.பள்ளி, குப்பிநாயக்கன்பட்டி , குழுத்தலைவர்:  பா.தனபாக்கியம் , வழிகாட்டி ஆசிரியர் : கா.தாழைக்குமரன் 

அன்னஞ்சி கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் பற்றிய ஆய்வு: தேனி கம்மவார் மெட்ரிக் பள்ளி , குழுத்தலைவர்: ஷெரின் , வழிகாட்டி ஆசிரியர் : ராம்குமார் 

புற்றுநோய்க்கு மருந்தாகும் மாதுளைச்சாறு : வி.எம்.அ.ஆ.மே.பள்ளி, பெரியகுளம் , குழுத்தலைவர்:  முகமது ஆசிக் , வழிகாட்டி ஆசிரியர் : ஆர்.அம்மையப்பன் 

டிச.1,2,3 ஆகிய தேதிகளில் சென்னை அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டு இக்குழந்தைகள் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்க உள்ளனர். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 30 ஆய்வுக்குழுக்களுக்கு மத்திய அரசின் இளம் விஞ்ஞானியர் விருது வழங்கப்படும். அதற்கான தேசிய அளவிலான மாநாடு டிச.27-31 தேதிகளில் மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் நடைபெற உள்ளது.

Oct 25, 2017

மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (அக்.25) மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா தேனி-கொடுவிலார்பட்டி கம்மவார் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் போட்டிகளைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 30 குழுக்கள் கலந்து கொண்டன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தமிழ், விளையாட்டு, பொது அறிவு ஆகிய சுற்றுகளில் கேள்விகள் கேட்கப்பட்டன.

4,5 வகுப்புகளுக்கான பிரிவில் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளி, போடி சௌண்டேஸ்வரி நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. 6,7,8 வகுப்புகளுக்கான பிரிவில் அரண்மனைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போடி சௌண்டேஸ்வரி நடுநிலைப்பள்ளி, வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன..

9,10 வகுப்புகளுக்கான பிரிவில் லட்சுமிபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி, சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் நல்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. 11,12 வகுப்புகளுக்கான பிரிவில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றன.

வெற்றி பெற்ற பள்ளிகளுக்கான நினைவுப்பரிசுகளை கம்மவார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் வழங்கினார். மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட நிர்வாகிகள் வி.வெங்கட்ராமன், ஆர்.அம்மையப்பன், ஜி.பாண்டியன், தாழைக்குமரன், ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர். வினாடிவினா போட்டியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராம்குமார் நன்றி கூறினார்.

Aug 21, 2017

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 1

ஆக.21 அன்று தேனி மாவட்டம் முழுவதுமுள்ள நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான குழந்தைகள் அறிவியல் மாநாடு- வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உஸ்மான் அலி வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் அறிமுக உரையாற்றினார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ் , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வீராசாமி ஆகியோர் ஊக்க உரையாற்றினர். மாநிலத் தலைவர் பேரா.மோகனா மாநாட்டு கருப்பொருள் குறித்த விளக்கவுரையாற்றினார். சுமார் 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அறிவியல் இயக்க நிர்வாகிகள் பெரியகுளம் பாலு, ஞானசுந்தரி, போடி கிளைச்செயலாளர் ஸ்ரீதர், தேனி கிளைச்செயலாளர் ராம்குமார் ஆண்டிபட்டி கிளைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக 85 உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் 54 துளிர் சந்தாக்கள் பெறப்பட்டன.