முதல் பக்கம்

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Mar 22, 2020

மேகமலையில் குறையும் மழை வளம் - மூல வைகையில் வறட்சி: 5 மாவட்டங்களின் நீராதாரம் பாதுகாக்கப்படுமா?


தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மழை வளம் குறைந்து வருவதாலும், சிற்றாறுகளின் வழித்தடம் மாற்றப்பட்டு மூல வைகை ஆற்றுக்கு தண்ணீா் வரத்து தடைபட்டுள்ளதாலும், 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வைகை அணையின் முக்கிய நீரதாரமான மூல வைகை ஆறு, மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் 64 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் அடா் காடுகள், சமவெளி, பள்ளத்தாக்கு, மலையருவிகளைக் கொண்டது மேகமலை.

இம்மலைப் பகுதியில் உற்பத்தியாகும் உடங்கனாறு, சந்தனக்காப்பு ஆறு, கூட்டாறு, பொம்மாறு, புலிக்கட்டு ஓடை, பாலாறு, யானை கெஜம், சிறு ஆறு, பஞ்சந்தாங்கி ஓடை, அல்லால் ஓடை, சுக்கான் ஓடை உள்ளிட்ட 52 சிற்றாறுகளின் சங்கமமே மூல வைகை ஆறு.

மூல வைகை ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு கடந்த 1958 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. மூல வைகை ஆறு மேகமலையில் உற்பத்தியாகி வருஷ நாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு வழியாக 72 கி.மீ.,தூரம் பயணித்து, அமச்சியாபுரம் பகுதியில் முல்லையாற்றுடன் சங்கமித்து வைகை அணையைச் சென்றடைகிறது. 


வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி-சேடப்பட்டி, மதுரை, வத்தலகுண்டு கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவடங்களின் பாசனத்திற்கும் தண்ணீா் திறக்கப்படுகிறது.

குறையும் மழை வளம்: ஆண்டுக்கு 11 மாதங்கள் மழை பொழிவுள்ள மேகமலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மழை வளம் குறைந்து வருகிறது. கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மழைக் காலங்களில் மூல வைகை ஆற்றிலிருந்து வைகை அணைக்கு சராசரியாக விநாடிக்கு 6,000 கன அடி வரையும், அதிகபட்சமாக விநாடிக்கு 22,661கன அடியும் தண்ணீா் வரத்து இருந்தது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மேகமலை வனப் பகுதியில் போதிய மழையின்றி, மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 19 ஆண்டுகளில் மொத்தம் 9 முறை மட்டும் மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணைக்கு சராசரியாக விநாடிக்கு 1,100 கன அடி வரையும், அதிக பட்சமாக விநாடிக்கு 4,566 கன அடியும் மட்டுமே தண்ணீா் வரத்து இருந்தது.

மேகமலையில் விதியை மீறி பட்டா நிலங்களில் மட்டுமின்றி வனப் பகுதியிலும் மரங்களை வெட்டி காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், வணிக நோக்குடன் சில்வா் ஓக் மரங்களை அதிக அளவில் வளா்த்து வெட்டி விற்பதாலும் வன வளம், மழை வளம் குறைந்து மூல வைகையில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று வன ஆா்வலா்கள் கூறுகின்றனா்.


வழித்தடம் மாற்றப்படும் சிற்றாறுகள்: மேகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகும் சிற்றாறுகளின் வழித்தடங்கள் பல இடங்களில் மாற்றப்பட்டுள்ளன. சிற்றாறுகளின் தண்ணீரை பயன்படுத்தி சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவில் தைலப்புல் (வங்ப்ப்ா்ஜ் எழ்ஹள்ள்) சாகுபடியும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தைலம் தயாரிப்பு தொழிற் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன.

வனப் பகுதியில் உள்ள சில தனியாா் எஸ்டேட்டுகள் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்கு வழங்கும் அனுமதியை பயன்படுத்தியும், விதியை மீறியும் சிற்றாறுகள் மற்றும் ஓடையோரங்களில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனா். இதனால், நீா் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு மூல வைகை ஆற்றுக்கு தண்ணீா் வரத்து தடை படுகிறது.

வைகை அணையில் தண்ணீா் நிரம்புவதில் சிக்கல்

வைகை அணையில் இருந்து கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 30 முறை உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது. மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து குறையும் காலங்களில், வைகை அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை வைகை அணையில் தேக்கி, 5 மாவட்டங்களில் குடிநீா் மற்றும் பாசனத் தேவைகள் சமாளிக்கப்பட்டு வருகிறது.

மூல வைகை வறண்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளாக வைகை அணையில் போதிய தண்ணீா் இருப்பு வைப்பதற்காக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் நீா் மட்டத்தை நிலை நிறுத்துவதிலும், தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவில் 2ஆம் போக நெல் சாகுபடிக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையில், 6,879 மில்லியன் கன அடி வரை தண்ணீா் தேக்க முடியும். ஆனால், கடந்த 2000 ஆம் ஆண்டு பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிறுவனம், வைகை அணையில் ஆய்வு செய்ததில் அணையில் 20 அடி உயரம் வரை, அதாவது 974 மில்லியன் கன அடிக்கு சேறும், சகதியும் தேங்கியுள்ளதும், அணை நீா்பிடிப்பில்
14.16 சதவீதம் பரப்பளவில் மண், மணல் மற்றும் சவுடுமண் படிந்திருப்தும் தெரிய வந்தது. இதனால், ஆற்றில் தண்ணீா் வரத்து உள்ள காலங்களிலும், அணையில் அதன் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க முடியாமல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

நீராதாரம் பாதுகாக்கப்படுமா?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ள மூல வைகை ஆற்றை பாதுகாப்பதற்கு மேகமலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள சிற்றாறுகள், காட்டாட்டாற்று ஓடைகளை மீட்கவும், ஆற்றுப்படுகைகளில் உறைகிணறு, ஆழ்துளைக் கிணறு அமைத்து விதியை மீறி தண்ணீா் உறிஞ்சுவதை தடுத்து, ஆற்றில் தண்ணீா் வரத்தை உறுதி செய்வதற்கு வனத் துறை, வருவாய்த்துறை, பொதுப் பணித் துறை மற்றும் மின் வாரியம் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். வைகை அணையை தூா்வாரி அதன் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. படம்: ரா.ரஞ்சித்

மிக மோசமான உண்மையையும் சொல்லப் பழகுங்கள்.. -- ஜான் பாரி

1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் நமக்கு கற்றுத் தந்திருக்கும் மிக முக்கியமான பாடம் “அரசாங்கம் பொய் சொன்னது. எல்லாவற்றையும் பற்றி அவர்கள் பொய்யை மட்டுமே சொன்னார்கள் ”: 1918ஆம் ஆண்டு என்ன தவறு நடந்தது என்பது பற்றி வரலாற்றாசிரியர் ஜான் பாரி.
சீன் இல்லிங்
2020 மார்ச் 20, 2020

“நாங்கள் முழுமையான கட்டுப்பாட்டிலே வைத்திருக்கிறோம். சீனாவிலிருந்து வந்திருக்கிற ஒருவரை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இனி ஒன்றும் பிரச்சனை இல்லை”. கொரோனா வைரஸ் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்று ஜனவரி 22 அன்று சிஎன்பிசி நிருபர் கேட்ட கேள்விக்கு அதிபர் டிரம்ப் தந்த பதில் இது. இப்போது ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தொடர்ந்து அவரது பத்திரிகையாளர் சந்திப்புகள் பொருத்தமற்றவையாக, தவறான தன்மை கொண்டவையாக இருந்தாலும், வைரஸின் அச்சுறுத்தலை முற்றிலும் புறக்கணிக்க முடியாத அளவிற்கு அதிபரின் குரல் மாறியிருக்கிறது.


வைரஸைப் பற்றிய முரண்பாடான செய்திகள், அத்தகைய செய்திகளை ஊக்குவிக்கும் நேர்மையற்ற தன்மை போன்றவை இப்போது மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. மக்களிடம் உண்மையைச் சொல்ல மறுப்பது, அதிக உயிரிழப்பிற்கே வழியேற்படுத்தி தரும். ஏனெனில் சமூக விலகல் போன்ற நடைமுறைகளால், இந்த தொற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதற்கான நமது முயற்சிகளை இதுபோன்ற நடவடிக்கைகள் பலவீனப்படுத்துகின்றன. மேலும் அவை அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கின்றன. இதுதான் இப்பொஒது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

கேட்பதற்கு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், உண்மையை மட்டுமே தலைவர்கள் சொல்ல வேண்டும் என்பதே 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் நமக்கு கற்று கொடுத்து சென்றிருக்கும் மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது என்று வரலாற்றாசிரியர் ஜான் எம். பாரி கருதுகிறார். 1918ஆம் ஆண்டு தொற்றுநோயைப் பற்றி மிகப் பிரபலமான புத்தகத்தை எழுதியிருக்கும் பாரி, 1918இல் ஏற்பட்ட நெருக்கடியின் தீவிரம் குறித்து தரப்பட்ட பொய்களே அதிக அளவிலான அச்சத்தையும், தனிமைப்படுத்தலையும், அனைவருக்கும் அதிக துன்பத்தையும் உருவாக்கின என்கிறார்.


“நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட்உ இயங்குகின்ற சமூகம், அதிகாரத்தின் மீதான நம்பிக்கையை இழந்தது” என்று அண்மையில் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் பாரி எழுதியிருந்தார். மேலும் “யாரை அல்லது எதை நம்புவது என்று தெரியாத மக்கள் தங்களுக்கிடையே இருந்த நம்பிக்கையை இழந்த போது, அந்நியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடையே இருந்த நெருக்கம் அழிக்கப்பட்டது. ” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். பொதுமக்களிடம் பொய் சொன்னதால் 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்புகள் குறித்து பாரியுடன் தொலைபேசியில் பேசிய நான், அப்போது அரசாங்கம் செய்த தவறுகளையே இப்போது நாம் மீண்டும் செய்கிறோம் என்று அவர் கருதினால், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதைச் சொல்வதற்கும், வெகுஜன மக்களிடையே பதட்டத்தை உருவாக்காத வகையில் சொல்லாமல் இருப்பதற்கும் இடையிலான நிலையை தலைவர்கள் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? என்று கேட்டேன். எங்களிடையே நடந்த உரையாடலின் உரைவடிவம் பின்வருமாறு.

சீன் இல்லிங்: உங்கள் வாழ்நாளில் 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்க்கு மிக நெருக்கமானதாக கொரோனா வைரஸ் இருப்பதாக நீங்கள் காண்கிறீர்களா?

பாரி: வேறு எதுவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்க்கு பக்கத்தில் செல்ல முடியாது. 2009ஆம் ஆண்டு எச் 1 என் 1 பரவத் தொடங்கிய போது, அது மிகவும் மோசமாக இருக்கக்கூடும் என்ற அச்சங்கள் இருந்தது உண்மைதான். ஆனால் அது மிகவும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியது. மூலக்கூறு உயிரியல் இல்லாதிருந்தால், அது ஒருபோதும் இந்த அளவிற்கு கவனிக்கப்பட்டிருக்காது. 1918 முதல் நாம் கண்டிருக்கும் எந்த நோயும் இப்போது நடந்து கொண்டிருப்பதை நெருங்கவில்லை. இது வெறுமனே ஒரு தலைமுறைக்கான வைரஸ் என்றாகி விட்டால், நாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்.

சீன் இல்லிங்: 1918ஆம் ஆண்டு நாம் எதிர்கொண்ட சூழலிருந்து இன்றைய நிலைமை எவ்வாறு வேறுபடுகிறது?

பாரி: மிகப் பெரிய வித்தியாசம் இந்த நோயின் இலக்காக இருக்கும் மக்கள் ஆகும். 1918ஆம் ஆண்டு, இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 18 வயது முதல் 45 வயது வரை இருந்தவர்கள். அப்போதைய இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு தோராயமாக அந்த வயதினரிடையே இருந்தது. 1918ஆம் ஆண்டில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இறப்புகள் 65 வயதிற்கு குறைவானவர்களிடமே இருந்தன. 1918ஆம் ஆண்டில் இருந்த வயதானவர்கள் தங்களுடைய இளமைப் பருவத்தில், 1918 வைரஸுக்கு நிகரான மிதமான வைரஸ்ஸை எதிர்கொண்டு அனுபவித்திருக்கிறார்கள். அதன் விளைவாக அவர்களிடம் இருந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்குப் போதுமானதாக இருந்தது.


மற்றொரு வேறுபாடு நோயரும்பும் காலம் குறித்ததாக இருக்கின்றது. 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சாவின் சராசரி நோயரும்பும் காலம் இரண்டு நாட்கள் ஆகும். அது நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. ஆனால் கொரோனா வைரஸின் சராசரி நோயரும்பும் காலம் இரண்டு மடங்கு அதிகமானது. அதை இன்னும் சற்று கூடுதலாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்பது ஒரு நல்ல விஷயமாக இருக்கின்ற நேரத்தில், மிகவும் மோசமானதாகவும் இருக்கின்றது.இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்களின் போது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்த தொடர்பு, தடமறிதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களுக்குத் தேவைப்படுகின்ற கால அவகாசத்தைத் தருவதாக கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால், அது நன்மை தருவதாக இருக்கிறது. ஆனால் மிக நீண்ட காலத்திற்கு நீள்வதால், மேலும் அதிகமான மக்களைப் பாதிக்கக்கூடும் என்பது இந்த வைரஸைப் பொறுத்த வரை மிகவும் மோசமானதாக இருக்கிறது. இன்ஃப்ளூயன்ஸாவை விட மிக மோசமான தொற்றுநோயாக இது இருப்பது தெரிகிறது.

இங்கே ஒரு நேர்மறையான வேறுபாடும் உள்ளது. இது மிக மோசமான தொற்றுநோயாக இருந்தபோதிலும், இந்த வைரஸால் ஏற்படுகின்ற இறப்பு விகிதம் 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்ஸாவை விட மிகக் குறைவாகவே இருப்பது தெரிகிறது. 1918ஆம் ஆண்டில் இறப்பு விகிதமானது, மேற்குலக நாடுகளில் குறைந்தது 2 சதவீதம் என்ற அளவில் இருந்தது. உலகின் பிற பகுதிகளில் இது இன்னும் அதிகமாக இருந்தது. அப்போது ஈரானின் மொத்த மக்கள்தொகையில் 7 சதவிகிதம் பேர் இறந்து போயினர். மெக்ஸிகோவின் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் பேர் இறந்திருக்கலாம். 1918 காய்ச்சல் ஏற்படுத்திய உண்மையான இறப்பு விகிதம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வாறாயாயினும், 1918 ஆம் ஆண்டில் மொத்தம் 5 முதல் 10 கோடி உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.


சீன் இல்லிங்: அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள், தனிநபர்கள் 1918 ஆம் ஆண்டு செய்த மிகப்பெரிய, மிக மோசமான தவறு எது என்று உங்களால் சொல்ல முடியுமா?

பாரி: அரசு அப்போது பொய் சொன்னது. எல்லாவற்றையும் பற்றி அவர்கள் பொய் சொன்னார்கள். அப்போது நாம் போரில் ஈடுபட்டிருந்தோம். போருக்கான முயற்சியைத் தவிர்க்க விரும்பாததால், அவர்கள் பொய் சொன்னார்கள். பொது சுகாதாரத்தை ஒருங்கிணைத்தவர்கள், இது வேறு பெயரில் உள்ள ஒரு சாதாரண காய்ச்சல் என்று மக்களிடம் கூறினார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் மக்களிடம் சொல்லவே இல்லை.

சீன் இல்லிங்: அந்த பொய்களைத் தகர்ப்பதற்கு, உண்மைக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?

பாரி: அதிக நாள் தேவைப்படவில்லை. நோயின் அறிகுறிகள் முதலில் தோன்றிய 24 மணி நேரத்திற்குப் பிறகு தங்கள் அருகே வசித்து வந்தவர்கள் இறக்கத் தொடங்கியபோதே, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மிக விரைவிலேயே உணர்ந்து கொண்டனர். மூக்கிலிருந்து, வாயிலிருந்து, கண்கள் மற்றும் காதுகளில் இருந்து ரத்தப்போக்குடன் தெருக்களில் மக்கள் காணப்பட்டனர். அது மிகவும் பயங்கரமாக இருந்தது. சாதாரண காய்ச்சல் இல்லை என்பதை அனைவரும் மிக விரைவாகவே புரிந்து கொண்டனர்.

சீன் இல்லிங்: அந்த பொய்யின் விளைவுகள் எவ்வாறு இருந்தன?

பாரி: அது மிகப் பெரிய பேரழிவாகவே இருந்தது. தங்கள் அரசாங்கத்தின் மீது, தங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் மீது, மேலும் ஒருவருக்கொருவர் என்று மக்கள் முழுமையாக நம்பிக்கையை இழந்து நின்றனர். அது மக்களை மேலும் தனிமைப்படுத்தியது. நம்பிக்கை சரிகின்ற போது, இந்த அளவிலான நெருக்கடியில் மிக மோசமான உள்ளுணர்வாக, அனைத்தையும் தாமே சுமந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது.


பெரும்பாலான பேரழிவுகளின் போது, சமூகங்கள் ஒன்றிணையும். மிகப் பெரிய சமூக கட்டமைப்புகள் அச்சுறுத்தலுக்குள்ளான வேளையில் சில இடங்கள், நகரங்கள் அவ்வாறு இருந்தன. சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் படிப்படியாக நம்பிக்கை எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பது பற்றியும், அதன் விளைவாக ஏற்பட்ட தொடர்விளைவுகளைப் பற்றியும் நான் எனது புத்தகத்தில் எழுதியிருந்தேன். நடைமுறை விளைவுகளும் அப்போது ஏற்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக, அப்போது உருவாகியிருந்த நம்பிக்கையின்மை, முக்கியமான பொது சுகாதார நடவடிக்கைகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை கடினமாக்கி விட்டது. தங்களிடம் சொல்லப்படுவதை மக்கள் நம்பவில்லை. நிலைமை குறித்து அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோது, அது பெரும்பாலும் தாமதப்படுத்தப்பட்டு விட்டது. வைரஸ் ஏற்கனவே பரவலாக பரவி விட்டது. பொய்யும், நம்பிக்கையின்மையும் இணைந்து ஏராளமான உயிர்களைப் பறித்துக் கொண்டன.

சீன் இல்லிங்: அந்த நேரத்தில் ’பூமியிலிருந்து மறைந்து விடப் போகிறோம்’ என்பதாக, மனித நாகரிகத்திலிருந்து வெளியேறுகின்ற சில வாரங்கள் தொலைவிலேயே நாம் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்த அறிவியலாளர் ஒருவரை நீங்கள் மேற்கோள் காட்டி இருந்தீர்கள். அப்போது நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது?

பாரி: மிகவும் மோசமாக இருந்தது. சில இடங்கள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன என்றாலும் கிராமப்புற சமூகங்களில் மக்கள் பட்டினியால் அவதிப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருந்தது. அவர்களுக்கான உணவைக் கொண்டு சென்று அளிக்க அனைவரும் பயந்தார்கள். பீதியும் பயமும் அப்போது அந்த அளவிற்குத் தீவிரமாக இருந்தது. அந்த நிலைமை சமூகத்தை அதன் விளிம்பிற்குத் தள்ளியது.

சீன் இல்லிங்: பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதைச் சொல்வதற்கும், வெகுஜன மக்களிடையே பதட்டத்தை உருவாக்காத வகையில் அவற்றைச் சொல்லாமல் இருப்பதற்கும் இடையில் இருக்கின்ற கடினமான பதற்றம் குறித்து, 1918 தொற்றுநோய் குறித்து ஆய்வு செய்திருக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


பாரி: இது எப்போதும் இருக்கின்ற கேள்விதான். நான் சொல்வது சரிதான் என்பதை உறுதிப்படுத்துகின்ற அறிவியல் ஆய்வுகள் என்னிடம் இல்லை, ஆனாலும் எனது பார்வை என்னவாக இருக்கிறதென்றால், நிச்சயமற்ற நிலைமையை சமாளிப்பதை விட, யதார்த்தத்தையும் உண்மையையும் மக்கள் எளிதாகச் சமாளிப்பார்கள். நீங்கள் ஒரு திகில் படம் பார்க்கிறீர்கள் என்றால், அதில் வருகின்ற அசுரனை மிகவும் பயமுறுத்துகின்றவனாக பார்ப்பதாகவே உங்கள் கற்பனை எப்போதும் இருக்கும். அந்த அசுரன் திரையில் தோன்றியவுடன், அவன் எவ்வளவு கொடூரமானவாக இருந்தாலும், உங்களுக்குள் அந்த பிம்பம் உறுதியானதும் பயம் குறைந்து போய் விடும். இதனால்தான் ’வருதீங்கு குறித்த அறிவிப்பு’ என்பதை நான் வெறுக்கிறேன். ஏனெனில் அது உண்மை நிர்வகிப்படுவதை குறிப்பதாகவே இருக்கிறது. எனது பார்வையில், நீங்கள் உண்மையை நிர்வகிக்க வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லுங்கள்.

சீன் இல்லிங்: இந்த நெருக்கடி குறித்து அதிபர் ட்ரம்ப்பின் ஆரம்பகட்ட பதில்களாக நோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவது, விமர்சனங்களை எல்லாம் ‘புரளி’ என்று நிராகரித்ததே இருந்தன. மிகஅண்மையில் ஃபாக்ஸ் நியூஸ் அதை குறைத்தே மதிப்பிட்டது. இப்போது அனைவரின் தொனியும் மாறிவிட்டது என்றே நான் நினைக்கிறேன். இருந்தாலும் அந்த ஆரம்பகாலத் தவறுகள் நமக்கு தீங்கிழைக்குமா?

பாரி: நிச்சயமாக. அது நமக்கு தீங்கிழைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், நேர்மை என்பது ட்ரம்பின் சுயநலத்திற்கானதாக இருப்பதுதான். மூடிய கதவுகளுக்குப் பின்னால், இப்போதிருக்கும் நிலைமை குறித்த முழு உண்மைகளும் அவருக்கு சொல்லப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை பகிரங்கமாகச் சொல்வதை அவர் குறைத்துக் கொள்கிறார் என்பது கணக்கிட முடியாத வழிகளில் நமக்கு தீங்கையே விளைவிக்கும்.

சீன் இல்லிங்: 1918இல் இருந்த கூட்டு எதிர்வினையில் எந்த அளவிற்கு இப்போது நமது எதிர்வினை இருக்கிறது?


பாரி: உண்மையில் 1918இல் அவ்வாறு கூட்டு எதிர்வினை இருந்ததாக உங்களால் சொல்ல முடியாது. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்தில் மிகவும் மாறுபட்டதாகவே அது இருந்தது. ஆனாலும் பாருங்கள், அதிபர் பதவியைக் கேவலப்படுத்துகின்ற ஜனநாயக சதி என்று இந்த வைரஸ்ஐக் கூறுபவர்கள் இங்கே இருக்கிறார்கள். இப்போது யாரும் அதைச் சொல்லவில்லை என்றாலும், இந்த சவாலை நாம் கூட்டாக எதிர்கொள்வோமா என்பது பதிலளிக்க வேண்டிய திறந்த கேள்வியாகவே உள்ளது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, நாம் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றோம்.

ஆரம்பகால சோதனைகளை நாம் மோசமாகவே செய்தோம். சமூக விலகலுக்கான அழைப்பை பொதுமக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் விஷயங்கள் விரைவாக மாறிக் கொண்டே இருக்கின்றன. இது எந்த அளவிற்கு மோசமாகப் போகிறது அல்லது தென்கொரியா போன்ற நாடுகளைப் போன்று மிக விரைவாகத் திறம்பட வெல்லப் போகிறது என்பதை, பொதுமக்கள் எந்த அளவிற்கு முன்வருகிறார்கள், பொது சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளுடன் எந்த அளவு அவர்கள் இணங்கிப் போகிறார்கள் என்பதே தீர்மானிக்கப் போகின்றது. நமக்கும் அதே போன்ற வெற்றி கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாது. இப்போது அதைச் சொல்ல முடியாது.

நன்றி: https://bookday.co.in

Mar 15, 2020

கொரோனோ தொற்று நோய் : மக்கள் சாசன அறிக்கை -- JSA & AIPSN



கொரோனோ தொற்று நோய் - அறிக்கை - மக்கள் சாசனம்: மக்கள் ஆரோக்கிய இயக்கம் ( JSA) மற்றும் அனைத்திந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு (AIPSN) சார்பாக வெளியிடப்பட்டது..

இப்போதே செயல்பட்டு, உயிர்களைக் காக்கவும் பொது சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் அரசைக் கோருதல்.

ஜனவரி,30 அன்று Covid- 19 ன் முதல் பாதிப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மார்ச்,15 வரை இந்தியாவில் 107 பேர் பாதிக்கப்பட்டு அதில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசு இதில் சர்வதேச பயணங்களைக் கட்டுப்படுத்தியும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களையும் அவர்களின் தொடர்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால்  அவர்களை தனிமையில் வைத்தும் அறிகுறிகள் தென்படாவிட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தியும் துரிதமாக செயல்படுத்தியுள்ளது. இது  நோயின் பரவலை தாமதப்படுத்துவதற்கு உதவியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசுக்கு தெரியும்.. இன்னும் பெரிய அபாயம் வர இருக்கிறது என்று...

இந்த உடனடியான, வழக்கமான நடவடிக்கைகளான நோயாளிகளை தனிமைப்படுத்துதல், தனியாக வைத்தல் மற்றும் சமூக விலகல்களை செயல்படுத்த தீவிரப் பிரச்சாரம் ஆகியவற்றை வரவேற்கும் அதே வேளையில் இந்த நோய் சமூக அளவில் பரவினாலோ அல்லது இந்த நோய்த் தொற்று உச்சத்தை அடைந்தாலோ, இந்தப் பணிகள்  போதுமானதாக இருக்காது. இந்த நாடு, பொது சுகாதார சேவைகளை பெரிய அளவில் புறக்கணித்ததாலும் , பொது சுகாதாரத்தைத் தனியார் மயமாக்கியதாலும் இது மாதிரியான நோய்களால் எளிதில் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக போராடிக்கொண்டு இருப்பதாலும் கடந்த பத்தாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் காரணமாக விளிம்பிற்கு தள்ளப்பட்டு இருப்பதாலும் நாடு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறது. 

இது மாதிரியான சமூக மற்றும் பொருளாதார சூழலில் அரசு கீழ்க்கண்ட எங்களது அனைத்து கோரிக்கைகளின் சாசனத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Covid -19 _  கரோனா தொற்று நோயின் முக்கிய அம்சங்கள்..

Covid-19 என்பது உலகம் முழுவதும் பரவி வருகிற கரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட வகையால் ஏற்படும் நோயின் பெயராகும். இதன் அறிகுறிகள், பருவகால ப்ளூ, இதற்கு  முன்னால் வந்த ஃப்ளூ காய்ச்சல்  ஆகியவற்றோடு குறிப்பிடும் வகையில் ஒத்துப்போகிறது. ஆனால் இதன் இறப்பு விகிதம் பருவகால ப்ளூவை விட அதிகமாகவும் மற்ற ப்ளூ மற்றும் கரோனா தொற்று ஆகியவற்றை விட குறைவாகவும் இருக்கும். எண்பத்தொரு சதவீதத்தினருக்கு நோய் பாதித்த  அறிகுறிகள் மிகக்குறைந்த அளவே தென்படும்.

15 சதவீதம் பேருக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும் அளவிற்கு தீவிர அறிகுறிகள் தென்படும். நான்கு சதவீதம் பேருக்கு தீவிர கவனிப்பு மற்றும் சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் இது வயது குறைய குறைய குறைந்து கொண்டு வரும். குழந்தைகளை ஒப்பீட்டளிவில் அதிகம் பாதிக்காது.

1918 இல் வந்த ப்ளூ தொற்றுநோய் தாக்கியதை போல ஒரு சூழ்நிலை தற்போது உள்ள சுகாதார வசதிகளின் காரணமாக ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், அது ஏற்பட முடியாதது அல்ல. அடுத்த சில மாதங்களுக்குள் இதற்கேற்ற மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ கிடைக்க வாய்ப்பில்லை. ஆகையால், காலம் காலமாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளான தனிமைப்படுத்துதல், தனியாக வைத்தல் மற்றும் சமூக விலகல் ஆகியவற்றை சார்ந்து இருப்பது தொடரும்.

இந்த நோயின் சமூக பரவல் உறுதி செய்யப்பட்டு விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவு அதிகமாகும். அதிலும் அறிகுறி தென்படாத நோய் பரப்புபவர்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமாகும் அல்லது மக்கள் தொகையில் மிக அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்த நோய் நாட்டின் தற்போதைய பெரியவர்களின் மக்கள் தொகையில் முப்பதிலிருந்து ஐம்பது சதவிகிதம் பேரை பாதிக்கும். மிகக் குறைந்த அளவு இறப்பு விகிதம் ஆக 1 % முதல் தீவிர கவனிப்பு தேவைப்படும் 4% வரை வைத்துக் கொண்டாலும், பலவீனமான இந்த பொது சுகாதார முறைமையால் கவனிக்க முடியாத அளவிற்கு அதிகமாகி, வரும் ஆண்டுகளில் பல மில்லியன் இறப்புகளுக்கு இட்டுச் செல்லும்.

இந்த வைரஸை ஆய்வு செய்து கண்டுபிடிக்க அதிக வசதிகள் இல்லாத காரணத்தால் தற்போது சமூகப் பரவல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது உண்மையிலேயே எவ்வளவு தூரம் இந்த நோய் பரவி இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அம்மாதிரியான பரிசோதனைகள் செய்ய இயலாத போது திட்டுத் திட்டாக பல இடங்களில் நோய் பரவி , கண்டுபிடிப்பதற்கு முன்பாக அபாய அளவை எட்டும்.

ஆனால் விலக்கி வைத்தல் என்ற பெயரில் , நோய் பரவலை தடுப்பது மற்றும் உயிர் இழப்புகளைத் தடுப்பது ஆகிய பொறுப்புகளை மக்கள் மீது, அதிலும் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாக கூடிய சாதாரண மக்கள் மீது சுமத்துவது கவலை அளிக்கிறது. நோய் பரவலை தடுப்பதில் தற்போதைய நடைமுறையான பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்பது தொடர முடியாதது மற்றும் தற்காலிகமாக நன்மை தரக் கூடியதாகும். இந்த நோய் பரவலின் உச்சம் பல மாதங்களுக்குப் பின்னர் வரும், இப்போது அல்ல. இந்த தாமதம் அல்லது நோய் பரவல் நேராக்குவது, அரசாங்க மருத்துவமனைகளுக்கு பணிகளை முடுக்கி விட நேரம் கிடைக்கும் என்பதால் பயனுள்ளது. ஆனால் மருத்துவமனைகளை தயார் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாமலோ அல்லது பரிசோதனை கூடங்களை விரிவு படுத்தாமலோ இருந்தால் இந்த தாமதம் பெரும்பான்மையான மக்களை நீண்டகால பொருளாதார மற்றும் சமூக பாதிப்புக்கு உள்ளாக்கி ஆரோக்கிய நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்படுமே தவிர , தீர்க்கப்படாது.

சமூகத்தில் உள்ள மக்கள் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை என்னவென்றால், அவர்களுடைய சுகாதாரம் தொடர்பான பழக்க வழக்கங்களில் வேகமான முன்னேற்றங்களை கொண்டுவருவது ஆகும். இந்த நோய் பரவலால் அரோக்கிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூகம் ஒற்றுமையும் ஆதரவையும் தெரிவிக்க வேண்டும். இந்தத் தடுப்பு நடவடிக்கைகளால் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்படும் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மத்திய  மற்றும் மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


கொரோனா தொற்று நோய்
மக்கள்  கோரிக்கைச் சாசனம்...
(மக்கள் ஆரோக்கிய இயக்கம் (JSA)மற்றும் அனைத்திந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு(AIPSN) சார்பாக வெளியிடப்பட்டது )
உயிர்களைக் காப்பாற்றுங்கள்...
வாழ்வாதாரங்களைக் பாதுகாத்திடுங்கள்...
மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்....
மேலே விவாதிக்கப்பட்ட புரிதலின் அடிப்படையில் (மற்றும் COVID-19 தொற்றுநோய் குறித்த பின்னணி ஆய்வறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளபடி ), மக்கள் அறிவியல் இயக்கங்களும் மக்கள் ஆரோக்கிய இயக்கமும் அதன் புரிதலையும் அதன் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தும் பின்வரும் மக்கள் கோரிக்கை சாசனத்தை ஏற்றுக்கொள்கின்றன..

சுகாதாரப் பராமரிப்பு  தொடர்புடையது..
1. பொது மருத்துவமனைகளை வலுப்படுத்துவதன் மூலம் சுகாதார மற்றும் மருத்துவமனையில் தேவைப்படும் நோயாளிகளின் அதிகரிப்புக்கு தக்கவாறு அரசு பொது சுகாதார சேவைகளை விரைவாக தயார்படுத்த  வேண்டும். இதற்கு குறைந்தபட்சம், ஒவ்வொரு ஐந்து முதல் பத்து லட்சம் மக்கள்தொகையிலும் அவசர சிகிச்சைப் பிரிவு; சாத்தியமான தனிமை வார்டுகள் மற்றும் வென்டிலேட்டர்கள்; ஆக்ஸிஜன் வழங்கல் கொண்ட ஒரு மருத்துவமனை தேவை.

தொடர்புடைய சுகாதார  நுகர் பொருட்களின்  விநியோகத்திலும் மனித வளத்தைப் பயன்படுத்துவதிலும்  முன்னேற்றம் இதற்குத் தேவைப்படும். எப்படியிருந்தாலும் , அத்தகைய விரிவாக்கம்,  நீண்ட காலமாக  தயார்படுத்தாது தாமதமானது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும் , இந்த தொற்றுநோய் அத்தகைய தயாரிப்புகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகக் கொள்ளலாம்.

2. நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தத் தொற்றுநோய் ஒரு முழுமையாக உருவெடுத்த  அவசரநிலையாக மாறினால், தற்போதுள்ள அனைத்து மருத்துவ வசதிகளும், அனைத்து தனியார் மருத்துவமனைகள் உட்பட,  ஒரு மையப்படுத்தப்பட்ட மாவட்ட அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். சந்தை வழிமுறைகளால் அல்லாமல், மருத்துவ வசதிகளை பிரித்தளிப்பது , இந்த  மாவட்ட அதிகாரத்தால் மட்டும்  செயல் படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்குத் தேவையான நெறிமுறைகளும் நிர்வாகமும்  நிதி சார்ந்த நடவடிக்கைகளும்  தொற்றுநோய்க்கான  தயார்நிலையின் ஒரு பகுதியாக கொள்ள வேண்டும்.

3. நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதும் , எங்கிருந்து நோய் தொற்றியதெனக் கண்டறிவதும், பெரும் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து திரும்பும் நபர்களை விலக்கி வைப்பதும் நீண்ட காலத்திற்கு தொடர்வது தேவை. சமூக ஊடுறுவலைத் தடுக்க இந்த ஏற்பாடு அவசியம். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நோய் அறிகுறிகளைக் கொண்ட ஒவ்வொரு நோயாளிக்கும், தேவையான பரிசோதனை வழங்கப்பட வேண்டும் .

4. இந்த நோயை பரிசோதிக்கும் திறனை அதிகரிப்பதன் மூலமும்  அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலிருந்து  அனைத்து பருவகால காய்ச்சல் மற்றும் காய்ச்சல் தொடர்பான பிற மரணங்கள் குறித்து தகவல் சேகரிப்பதின் மூலமும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தினை (Integrated Disease Surveillance Programme) உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.

இத்தகைய விரிவாக்கம் இல்லையென்றால் , நாடு இத்தகைய தொற்றுநோயால்  கடப்பதைக் கூட அறியாமலோ அல்லது எதிர்பாராத இடங்களில் கூட மையப்பட்டு நோய் பரவல் ஆச்சரியப்படும் வகையில் வெடிக்கக் கூடும் என எச்சரிக்கிறோம்.

5.   ஒரு நீண்ட கால நடவடிக்கையாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் கட்டுப்பாட்டுக்கான  அரசு மையம் ( Government Centre for Disease Control) ஒன்றினை நிறுவுவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இது தற்போதைய சார்-கோவ் 2 தொற்றுநோய் போன்ற நோய்க்கிருமி தாக்குதல்களுக்கு சோதனை செய்யவும் அடையாளம் காணவும் எச்சரிக்கை தரவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்கவும் உதவிடும்..

6. சுகாதார மற்றும் பிற உதவி ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணி நிலைமைகள் மற்றும்  போதுமான பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்யப்பட வேண்டும். இவை, மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், வீடுகளில் தனிமைப்படுத்துதலிலும் விலக்கி வைப்பதிலிலும் ஈடுபட்டிருக்கும் முன்னணி தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதற்கு முன்னிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தரமான முகமூடிகள் மற்றும் கிருமி நாசினி திரவங்கள் போன்ற மருத்துவ கருவிகள் அளிக்கப்பட வேண்டும்.

7. பரவலான நோய் பரவல் ஏற்பட்டால் , தேவையான   பொருட்களுக்கான பற்றாக்குறைகளை சமாளிக்க ,வெளிச் சந்தையில்  அதிக விலைக்கு விற்பனைபவர்களிடம் விட்டு விடாமல் பொது சுகாதாரத் தேவைகளின் தெளிவான மதிப்பீட்டால் நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.   2009 இல் H1N1 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்களின் போது இந்த பிரச்சனை வெளிப்பட்டது. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். மேலும், காப்புரிமை ஏகபோக வாதிகள்  அவசியமான சிகிச்சையின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதைக் கவனமாக தடுக்க வேண்டும்.

சமூக விலகல்  மற்றும் மனித உரிமைகள்..

8. சமூக விலகல் என்பது பொது மக்களுக்கான  விழிப்புணர்வு  மற்றும் ஏற்றுக்கொள்ள வைப்பதால்  செயல்படுத்தப் பட வேண்டும். கட்டாய நடவடிக்கைகள் நியாயமற்றது , உதவாது. சமூகம், மதம், விளையாட்டு தொடர்பான, கலாச்சாரம் அல்லது அரசியல் வெகுஜன கூட்டங்கள், பொது நிகழ்வுகள் இன்னும் சில காலம் நிறுத்தலாம் - ஆனால் தடை செய்யக்கூடாது.

9. வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகள் மூடுதலாலோ சேவைகள் கிடைப்பதில் உள்ள பிரச்சனைகள் காரணமாகவோ சமூக பாதுகாப்பு சலுகைகள் குறைக்கப்படுவோருக்கான சமூக ஆதரவு மற்றும் மேம்பாட்டு சேவைகளை உருவாக்குதல்  வேண்டும்.

வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களில் பலருக்கு பிற நோய்களும் இருக்கலாம். அவற்றிக்கு தொடர்  மருந்துவ சேவைகள் மருந்துகள் தேவைப்படும். பல குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து திட்டங்கள்  தேவைப்படும். குறிப்பாக அவர்களின் பெற்றோர்களின் வாழ்வாதாரம்  தடைபடும்போது மாற்று வழிகளை உருவாக்காமல் அத்தகைய சேவைகளை நிறுத்துவது நியாயமற்றது.

10. மக்கள்தொகை முடக்கப்படுதல் அல்லது தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படும் போது, இது ஒரு மனிதாபிமான முறையில் செய்யப்படுவதையும், முக்கிய மனித உரிமைகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கைகள் வேண்டும்.

அரசுகளின், மிகவும் நல்ல நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளுக்கும் மனித உரிமைகள் நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தீவிரமான ஈடுபாடு தேவை. இந்தப் பிரச்சனைகளும் வழக்குகளுக்கு உட்பட்டதுதான் என்பதாக, மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.

11. தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகள் குறித்து அறிக்கைகள் வெளியிட ஊடகங்களின் சுதந்திரம் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், நோய்த்தொற்றின் பரவலின் தன்மை, ஆதாரம் மற்றும் சிகிச்சையின் அடிப்படை செய்திகளை வெளியிடும்போது அரசாங்க சேனல்கள், சர்வதேச சுகாதார நிறுவன சேனல்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை செய்தி ஊடகங்கள்  கடைபிடிக்க வேண்டும். இந்த ஆதாரங்களுக்கு வெளியில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு வெளியிடும் போது, இது சரிபார்க்கப்படாதது . தவறானதாகவும் இருக்கலாம் என்ற மறுப்புடன்(disclaimer) இருக்க வேண்டும். ஊடக சுதந்திரங்களுக்கு எந்தவொரு ஒட்டு மொத்த தடையும் தேவையற்றது, எதிர்க்க வேண்டியது.

பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்தல் - காரணம் மற்றும் விளைவு..

12. வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளை பராமரித்தல் என்பது முதன்மையாக பெரும்பாலோரின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதாகும். பொது சுகாதார முன்னுரிமையாகவும்   ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இது போன்ற காலங்களில், பொது மக்களின் விழிப்புணர்வு மூலம் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். சம்பளப் பிரிவு மற்றும் வசதி படைத்தவர்களை விட, உழைப்பாளர்களின்  ஏழைகளின் வாழ்வாதாரம் சீர்குலைப்பதால் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்- இதை புரிந்து கொள்ள வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தப் படுவதாலும், இத்தகைய அடைபடுதலுக்கு ஆட்படுதலாலும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவர்களுக்கு சமூக ஆதரவும் முதலாளிகளிடமிருந்து  ஆதரவும்  இருக்க  வேண்டும்.

13. பொதுச் செலவினங்களில் உடனடியாக  அதிகரிப்பு இருக்க வேண்டும், இது கூடுதலான  பொது வேலைவாய்ப்புக்கும் சமூக பாதுகாப்புக்கும் ஆதரவளிக்கும். இரண்டின் வடிவத்தில் பரவலான கேட்புப் பக்க ஆதரவுக்கு வழிவகுக்கிறது, இது உலகளாவிய அடிப்படை வருமானத்தை உறுதி செய்கிறது.
பெரும்பான்மையினரின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதலை நிவர்த்தி செய்ய இது அவசரமாக தேவைப்படுகிறது, இது ஏற்கனவே ஒரு பத்தாண்டு கால பொருளாதாரக் கொள்கைகளால் சமரசம் செய்யப்பட்டு மூலதனக் குவிப்பை தீவிரப்படுத்தி வாழ்வாதாரங்களை அழித்தது. கார்ப்பரேட  தொழிற்துறையினருக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான கூடுதல் சலுகைகள், எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் . நியாயமற்றதும் கூட.

Nov 20, 2013

ஐசான் வால்நட்சத்திரம் காண்போம்! : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பிரச்சாரம்.


           வானவியல் என்பது அனைவருக்கும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது. இதற்குக் காரணம் வானம் அனைவருக்கும் ஒரு பொதுவான ஆராய்ச்சிக் கூடமாக விளங்குவதேயாகும். எனவேதான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் இரவில் வானத்தை நோக்குவது என்பது மனிதன் தோன்றிய கலத்தில் இருந்து பிடித்தமான செயலாக இருந்து வருகிறது. இதுவே வானவியல் அறிவியல்களின் தாயாக அமையக் காரணமாகவும் விளங்கியது.


              குழந்தைகள் மட்டும் அல்லாது அனைவருமே அறிவியலைப் படிப்பதை விட நேரடியாகச் செய்து பார்ப்பதின் மூலம் எளிதில் கற்றுக் கொள்கிறோம். மேலும் ஆர்வமும் அதிகமாகிறது. அறிவியல் ஆர்வத்தை மக்களிடம் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் Vigyan Prasar மற்றும் NCSTC-network ஆகியவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற நம்நாடு முழுவதும் உள்ள பல தன்னார்வ அறிவியல் இயக்கங்களுடன் சேர்ந்து பல பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த சர்வதேச வனவியல் ஆண்டு – 2009, வளைய சூரியகிரகணம்-2010, வெள்ளி இடைநகர்தல் – 2012 (Transition of Venus) போன்றவற்றை மக்களிடத்தில் ஒரு இயக்கமாகக் கொண்டு சென்றதை உதாரணமாகக் கூறலாம்.
         தற்போது சூரியனை நெருங்கிவரும் ஐசான் (C/2012 ISON) என்ற வால்நட்சத்திரம் அறிவியலை மக்களிடத்தே பரப்புவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வால்நட்சத்திரம் நவம்பர் முதல் இரண்டாம் வாரத்திலிருந்து தெரிய ஆரம்பிக்கிறது.நவம்பர் 28ம் தேதி சூரியனுக்கு வெகுஅருகில் சென்று பின் டிசம்பர் முதல் மீண்டும் தெரியும். இந்த நூற்றாண்டின் மிக பிரகாசமன வால் நட்சத்திரமாய் அமையலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த வான் நிகழ்வினை அனைத்து பள்ளிக் குழந்தைகளும் குறிப்பாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு வானவியலின் ஆர்வத்தை ஏற்படுத்துவற்கான ஓர் வாய்ப்பாகக் கருதலாம்.
         இதுவரை வால் நட்சத்திரத்தினை கண்டுபிடித்த ஒரே ஒரு இந்தியர் இந்திய நவீன வானவியலின் தந்தையான வைணு பப்பு என்ற ஒரே ஒருவர்தான்; அதுவும் அமெரிக்காவில் படிக்கும்போது. இந்திய மண்ணிலிருந்து இதுவரை யாரும் புதிய வால்நட்சத்திரங்களை கண்டுபிடித்த்து இல்லை. எனவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடத்தே இதுபற்றிய விழிப்புணர்வையும் ஆராய்ச்சி மனப்பான்மையை தூண்டுவதும் இந்த ”ஐசான் காண்போம்’ பிரச்சாரத்தின் ஒரு நோக்கம் ஆகும்.


Sep 8, 2013

விநாயகர் சதுர்த்தியும் சுற்றுச்சூழலும்



விநாயகர் சதுர்த்தி, இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகை. குறிப்பாக இந்தியாவின் மகாராட்டிரம், தமிழ்நாடு, கோவா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிகமாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்தியா மட்டுமல்லாமல், நேபாளம், கனடா, மொரீசியஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், பிஜி தீவுகள், டிரினிடாட் மற்றும் டொபகோ போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

சத்ரபதி சிவாஜிதான் இந்த விழாவை ஒரு சமூக விழாவாக உருவாக்கினார் என ஒரு சாராரும், சுதந்திர போராட்டத்திற்கென மக்களை ஒருங்கிணைப்பதற்காக பாலகங்காதர திலகர் தான் சமூகத் திருவிழாவாக உருவாக்கினார் (பொதுமக்கள் கூடுவதற்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்த காலம்) என இன்னொரு சாராரும், பிராமணர்களையும், பிராமணர் அல்லாதவர்களையும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட சமூகத் திருவிழா என பிரிதொரு சாராரும் கூறி வருகிறார்கள். விநாகர் சதுர்த்தியை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடிவிட்டுப் போகட்டும். அது அவரவர் விருப்பம். ஆனால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஒரு திருவிழாவாக இருக்கக்கூடாது என்பதே அறிவியல் ஆர்வலர்களின் விருப்பம்.

விநாயகர் சிலைகள் எவற்றால் உருவாக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகள் நம் சுற்றுச் சூழலில் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

முன்பெல்லாம் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டது. கண்களுக்கு மட்டும் குன்றிமணி விதைகள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் களிமண் தட்டுப்பாட்டின் காரணமாகவும், சிலை மண் விலை அதிகமானதாலும் வெவ்வேறு கச்சாப் பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டன. இப்பொதெல்லாம் விநாயகர் பொம்மைகள் சாக் பொடிகளாலும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற வேதிப்பொருட்களாலும் உருவாக்கப்படுகிறது. மூன்று நாட்கள் ( வட நாடுகளில் பத்து நாட்கள் கொண்ட விழாவாக கொண்டாடப்படுகிறது) கழித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளான ஆற்றிலோ, கண்மாயிலோ, குளங்களிலோ, ஓடைகளிலோ அல்லது கடலிலோ கரைக்கப்படும்.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஃ: ஜிப்சத்திலிருந்து பெறப்பட்ட கால்சியம் சல்ஃபேட் ஹெமி ஹைட்ரேட்டே பிளாஸ்டர் ஆஃப் பாரிஃ ஆகும். தாது ஜிப்சத்தை வெப்பப்படுத்துவதன் மூலம் அதிலுள்ள ஈரத்தன்மையை நீக்கி உருவாக்கப்படுவதுதான் இந்த பிளாஃடர் ஆஃப் பாரிஸ். பாரிஸூக்கு அருகில் முதன் முதலாக எடுக்கப்பட்டு பயன்படுத்தி வந்ததால் இந்த பெயர் வந்திருக்கலாம். இவை தோலில் பட்டால் கொப்புளமாகி விடும். இவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சுலபத்தில் கரைவதில்லை. சில மாதங்களிலிருந்து சில வருடங்கள் கூட ஆகலாம். அது மட்டுமல்ல இவை நீர்நிலைகளின் அமிலத்தன்மையை கூட்டிவிடும். அதோடு நீரில் கரைந்துள்ள துகள்களின் அளவையும் 100 சதவீதமாக மாற்றிவிடும் அபாயமுள்ளது.
சாக் பவுடர்: சாக் பொடி என்பது கால்சியம் கார்பனேட் என்ற வேதிமப் பொருளாகும். இவற்றால் செய்யப்படும் விநாயகர் சிலைகளைத் தண்ணீரில் கரைக்கும்போது, கார்பானிக் அமிலமாகவும், கால்சியிம் ஹைட்ராக்ஸைடுகளாகவும் உருமாறிவிடும். அதனால் நீரின் அமிலத் தன்மை அதிகரிக்கும். சார்ந்த உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மை பாதிக்கப்படும்.

விநாயகர் சிலைகளுக்கு பூசப்படும் வண்ணங்கள்:

வண்ணங்களைக் கொண்டு அழகு படுத்தும் போது, அவற்றிலுள்ள மெர்குரியும், காட்மியமும் நீரில் கலக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு தெர்மாமீட்டரில் (வெப்பமானி) உள்ள மெர்குரி ஒரு பெரிய ஏரியையே பாழ்படுத்திவிடும். மெர்குரி மாசுவினால் ஜப்பானில் "மினமேட்டா" என்ற நோயினால் பாதிக்கப்பட்டு ஏராளமான மீன்கள் இறந்து போயின. பல்லுயிர் வளம் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. அது மட்டுமல்லாமல், உயிர்ப்பெருக்கத்தின் வாயிலாக அந்த மீன்களை நாம் உண்ணும்போது நமக்கும் மெர்குரிக் கசடுகள் நம் உடலிலும் தங்கி உபாதைகளை ஏற்படுத்தும்.

பொதுவாக நம் உடலில் காட்மியத்தின் அளவு அதிகரிக்கும்போது, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, சில சமயம் எலும்பு முறிவு, மலட்டுத்தன்மை, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பலமிழந்த செயல்பாடு, மரபணுச்சேதம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

அதேபோல் மெர்குறி நமது நரம்பு மண்டலத்தையும், மூளையையும் பதம் பார்க்கும். தோல்புண், தலைவலி மற்றும் மரபணுச் சேதம் ஆகிய பக்க விளைவுகளையும், ஆண்களுக்கு விந்தணுக் குறைவும், பெண்களுக்கு கருச்சிதைவும் ஏற்பட வாய்ப்புண்டு. பத்து நாட்களென்ன வருடம் முழுவதும் கூட கொண்டாடுங்கள். ஆனால் சூழலை மாசுபடுதுதவது என்பது நம்மை மட்டுமல்ல நம் சந்ததியினரையும் கூட பாதிக்கும். ஏற்கனவே நம் நீர் நிலைகள் பல்வேறு மாசுக்களால் பாழ்பட்டுக்கொண்டே வருகின்றன. மழை அளவும் குறைந்து விட்டது. இருக்கும் நீர் நிலைகளையும் இதுபோல் மாசுபடுத்தினால் நம் ஆரோக்கியம் என்ன ஆகும்? சற்றே சிந்திப்பீர்!

கடலில் கரைக்கப்படும் சிலைகளும், கடலின் அமிலத் தன்மையை அதிகரித்து விடுகின்றன. ஆதலால் கடல் சார்ந்த பல்லுயில் வளம் குறையும். ஏற்கனவே புவி வெப்பமடைதலால் கடலின் அமிலத்தன்மை கூடியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கடலின் அமிலத்தன்மையை மேலும் கூட்டிவிடும். ஆகையால் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதைத் தவிர்ப்போம்! சுற்றுச் சூழல் காப்போம்!

எஸ்.தினகரன்- மதுரை
thanks:VINGANASIRAGU-SEP.2013

Jul 14, 2013

ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும் : ஐக்கிய நாடுகள் மன்றத்தில் மலாலா போர்க்குரல்


ஐக்கிய நாடுகள் மன்றம் (நியூயார்க்), ஜூலை 13-ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும் என்று ஐக்கிய நாடுகள் மன் றத்தில் மலாலா போர்க்குரல் எழுப் பினார். தலிபான் இயக்கத்தினரால் சுடப் பட்டு, காப்பாற்றப்பட்ட 16 வயது சிறு மியான பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப் சாய் பிறந்த தினமான ஜூலை 12ம் நாளை ஐக்கிய நாடுகள் மன்றம் மலாலா தினமாக அறிவித்துக் கொண்டாடியது. அதனையொட்டி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், சிறுமி மலாலா ஐ.நா. மன்றத்திற்கு வரவழைக் கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். அப் போது மலாலா பேசியதாவது: ‘‘மாண்புமிகு மக்கள் மத்தியில் உரையாட எனக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். என் உரையை எங்கிருந்து தொடங் குவது என்று எனக்குத் தெரியவில்லை. இங்கு கூடியிருக்கும் மக்கள் என் னிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறார் கள் என்றும் எனக்குத் தெரியவில்லை. முதற்கண் என்மீது அன்பு செலுத்தி என் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களில் ஒருத்தி

அன்பார்ந்த சகோதர, சகோதரி களே, ஒரு விஷயத்தை நன்கு நினை வில் வைத்துக்கொள்ளுங்கள். மலாலா தினம் என்பது என்னுடைய தினம் அல்ல. இன்றைய தினம், தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ் வொரு சிறுவனுக்கும், ஒவ்வொரு சிறுமிக்குமான தினமாகும். மனித உரி மைகளுக்காகவும், கல்வி, சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காகவும் குரல் கொடுக்கிற நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஊழியர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு குரல் கொடுத்த பல்லாயிரக்கணக்கா னோர் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்டிருக்கிறார்கள், லட்சக்கணக்கா னோர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். நானும் அவர் களில் ஒருத்தி. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தியாக இங்கே நான் உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். நான் எனக்காகப் பேசவில்லை, இவ் வாறு உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த சிறுவர்களுக்காகவும், சிறுமிகளுக்காகவும் பேசுகிறேன். உரிமைகளுக்காகப் போராடியவர்கள் சார்பாக நான் பேசுகிறேன். அமைதியுடன் வாழ்வதற்கான உரிமைக்காக, கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற உரி மைக்காக, எல்லோருக்கும் சமமான விதத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற உரிமைக்காக, எல் லோருக்கும் கல்வி வேண்டும் என்ற உரிமைக்காக, நான் பேசுகிறேன்.

அதே அபிலாசை,அதே நம்பிக்கை, அதே கனவு

அன்பார்ந்த நண்பர்களே, 2012 அக்டோபர் 9 அன்று தலிபான் இயக் கத்தினர் என் நெற்றியின் இடது பக்கத் தில் சுட்டார்கள். அவ்வாறு என் நண் பர்கள்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி னார்கள். அவ்வாறு துப்பாக்கிக் குண் டுகள் மூலம் எங்களை மவுனமாக்கி விடலாம் என்று அவர்கள் நினைத் தார்கள். ஆனால் அவர்கள் தோல்வி யடைந்து விட்டார்கள். எங்கள் மவு னத்திலிருந்து ஆயிரக்கணக்கான குரல்கள் எழுந்தன. எங்கள் லட்சியங் களை மாற்றிவிடலாம், எங்கள் அபி லாசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்று பயங்கரவாதிகள் நினைத்தார்கள். ஆனால் என்னிடமி ருந்த பலவீனம், பயம், நம்பிக்கை யின்மைதான் இறந்தனவேயொழிய, என் வாழ்க்கையில் வேறெந்த மாற்ற மும் இல்லை. அவற்றிற்குப் பதிலாக பலம், சக்தி, துணிவுடைமை ஆகிய வைதான் புதிதாகப் பிறப்பெடுத்திருக் கின்றன. முன்பிருந்த அதே மலாலா வாகத்தான் இப்போதும் இருக்கிறேன். என் அபிலாசைகளும் அதேதான். என் நம்பிக்கைகளும் அதேதான். என் கனவுகளும் அதேதான்.

துப்பாக்கி இருந்திருந்தால் கூட....

அன்பார்ந்த சகோதர, சகோதரி களே, நான் யாருக்கு எதிராகவும் இல்லை. தலிபான் இயக்கத்தின ருக்கு எதிராகவோ அல்லது இதர பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரா கவோ தனிப்பட்ட முறையில் எவரி டமும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்கிற உணர்வுடன் இங்கே நான் பேசவில்லை. ஒவ்வொரு குழந்தை யின் கல்வி உரிமைக்காக இங்கே நான் பேசுகிறேன். அனைத்துத் தீவிர வாதிகளின், குறிப்பாக தலிபான் இயக்கத்தினரின் பையன்களுக்கும், பெண்களுக்கும் கல்வி வேண்டும் என்றுதான் நான் குரல் கொடுக்கி றேன். என்னைத் துப்பாக்கியால் சுட் டவரைக்கூட நான் வெறுக்கவில்லை. அவர் என் முன் நின்று என்னிடம் துப்பாக்கி இருந்திருந்தால்கூட நான் அவரைச் சுட்டிருக்க மாட்டேன். இது நான் நபிகள் நாயகத்திடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும், புத்த பெருமானிடமிருந்தும் கற்றுக் கொண்ட அன்புடைமையாகும். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மாண்டேலா, முகம்மது அலி ஜின்னா ஆகியோரிடமிருந்து நான் பெற்றி ருக்கிற பாரம்பரியச் சொத்து இதுவே யாகும். காந்திஜி, பாஷாகான் மற்றும் அன்னை தெரசா ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்ட அஹிம்சைத் தத்து வம் இதுவேயாகும்.


புத்தகம், பேனாவின் முக்கியத்துவம்

இன்னா செய்தாருக்கும் இனிய வையே செய்ய வேண்டும் என்று என் தாயும் தந்தையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது இதுவேயாகும். எல்லோ ரையும் நேசி என்றும் எப்போதும் அமைதியுடன் இரு என்றும்தான் என் ஆத்மா எனக்குச் சொல்லிக் கொடுக் கிறது.இருட்டில் இருக்கும்போதுதான் வெளிச்சத்தின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். நாம் மவுனப்படுத்தப் படும்போதுதான் நம் குரலின் முக்கியத் துவத்தை உணர்கிறோம். அதே போன்று நாங்கள் பாகிஸ்தானின் வடக்குப் பகுதியான ஸ்வாட் பகுதி யில் வாழ்ந்தபோதுதான், துப்பாக்கி களை நாங்கள் பார்த்தபோதுதான் பேனாக்கள் மற்றும் புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந் தோம்.‘‘வாளின் முனையைவிட பேனா வின் முனை வலிமை வாய்ந்தது’’ என்கிற முதுமொழி உண்மையே யாகும். தீவிரவாதிகள், புத்தகங்களை யும் பேனாக்களையும் கண்டு பயப் படுகிறார்கள். கல்வியின் வீரியம் அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தி யுள்ளது. பெண்களைப் பார்த்தாலே அவர்கள் அஞ்சுகிறார்கள். பெண் களின் குரலின் சக்தி அவர்களை நடு நடுங்க வைக்கிறது. அதன் காரண மாகத்தான் சமீபத்தில் அவர்கள் குவெட்டாவில் 14 அப்பாவி மருத்துவ மாணவர்களைக் கொன்றார்கள். அதன்காரணமாகத்தான் பல பெண் ஆசிரியர்களையும், போலியா மருந்து செலுத்தும் பெண் ஊழியர்களையும் அவர்கள் கொலை செய்தார்கள். அத னால்தான் அவர்கள் பள்ளிக்கூடங் களைத் தகர்த்துக்கொண்டிருக்கிறார் கள். ஏனெனில் அவர்கள் மாற்றத் தைக் கண்டு பயப்படுகிறார்கள், சமத் துவத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். எங்கள் சமூகத்தில் அதனை நாங்கள் கொண்டுவருவோம்.

அமைதி அவசியம்

பயங்கரவாதிகள் இஸ்லாமின் பெய ரைத் தங்கள் சொந்த ஆதாயத்திற் காகத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் ஜனநாயக நாடாகும். இஸ்லாம் மதமும் அமைதி, மனிதாபிமானம், சகோதரத் துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றாகும். இஸ்லாம், கல்வி பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை மட்டுமல்ல, அவர்களின் கடமையும் பொறுப்புமாகும். கல்வி கற்க அமைதி அவசியம். உலகின் பல பகுதிகளில், குறிப்பாக பாகிஸ்தானிலும் ஆப்கா னிஸ்தானிலும் பயங்கரவாதம், யுத்தங் கள் மற்றும் மோதல்கள் குழந்தை களை தங்கள் பள்ளிகளுக்குச் செல் லாமல் தடுத்து நிறுத்தியுள்ளன. யுத் தங்களினால் உண்மையிலேயே நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டோம். உலகின் பல பகுதிகளில் பல விதங்களில் பெண்களும் குழந் தைகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.இந்தியாவில், அப்பாவி மற்றும் ஏழைக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக வாடிக் கொண் டிருக்கின்றனர். நைஜீரியாவில் பல பள்ளிக் கூடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஆப்கானிஸ்தான் மக்கள் பத்தாண்டுகளாக தீவிரவாதம் என்னும் தடைக்கற்களால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இளம் சிறுமிகள் வீடுகளில் குழந்தைத்தொழிலாளர் களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மிகவும் குறைந்த வயதிலேயே திரு மணமும் செய்விக்கப்படுகிறார்கள். வறுமை, கல்லாமை, அநீதி, மதவெறி, இனவெறி மற்றும் அடிப்படை உரிமை கள் மறுக்கப்படுதல் ஆகியவை ஆண் கள் -பெண்கள் அனைவரின் பிரச்சனை களாகவும் மாறிப்போயுள்ளன.

பெண்கள் - குழந்தைகளின் உரிமை

அன்புடையீர், நான் இன்றைய தினம் பெண்களின் உரிமைகள் மற் றும் கல்வி குறித்து உங்களின் கவ னத்திற்குக் கொண்டு வர விரும்புகி றேன். ஏனெனில் அவர்கள்தான் மிக வும் பாதிக்கப்பட்டவர்கள். பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற சுயேச் சையாகவே போராட முன்வர வேண் டும்.உலகத் தலைவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கி றேன். உலகம் முழுவதும் உள்ள ஒவ் வொரு குழந்தைக்கும் கல்வி அளிக் கப்படுவதைக் கட்டாயமாக்கிட வேண் டும் என்று அனைத்து அரசாங்கங் களையும் கேட்டுக்கொள்கிறேன்.அதேபோன்று உலகில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் பயங்கர வாதத்திற்கு எதிராகப் போராட வேண் டும் என்றும் குழந்தைகளை கொடு மைப் படுத்துவதிலிருந்து பாதுகா த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று எழுத்தறிவின்மை, வறுமை, பயங்கரவாதத்திற்கு எதிராக உலக அளவிலான போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வோம். ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு பேனா, ஒரு புத்தகம் உலகையே மாற்ற முடியும். கல்வி ஒன்றே தீர்வாகும். கல் விக்கே முன்னுரிமை கொடுத்திடு வோம் என்றார்.