முதல் பக்கம்

Dec 3, 2011

x கதிர் படிகவியலாளர்.. இசபெல்லா கார்லே பிறந்த தினம்..டிசம்பர்,2

 




இயற்பியல் வேதியலின்(physical chemistry) துவக்க கால விஞ்ஞானி இசபெல்லா கார்லே (Isabella Karle)என்பவர்தான்.இசபெல்லா முதல் எலெக்ட்ரான்( first electron ) மற்றும் x கதிர் பிரித்தல்( x-ray diffraction) மூலம் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து மூலக்கூறுகளின் அமைப்பை அறிய ஒரு புதிய பாதையை போட்டுக் கொடுத்தவர் என்ற பெருமை இவருக்கே சேரும். இசபெல்லா அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு x கதிர் படிகவியலாளர்(an American x-ray crystallographer).இவர் வேதியலில் அசகாய சூரர்.அது போலவே.. இயற்பியலையும் வெளுத்து வாங்குவார்.இவரது இயற்பெயர் இசபெல்லா ஹெலன் லூகோஸ்கி ( Isabella Helen Lugoski )என்பதே.இசபெல்லா, போலந்திலிருந்து புலம் பெயர்ந்து வந்து அமெரிக்காவில் வாழ்ந்த தம்பதியர்க்கு மகளாக, மிச்சிகன் நகருக்கு அருகிலுள்ள டெட்ராய்ட்டில்(Detroit, Michigan) 1921 , டிசம்பர் 2 ம் நாள் பிறந்தார்.


சிறுவயதிலிலேயே மிகவும் இசபெல்லா மிகவும் சுறு சுறுப்பாகவும் , சூட்டிகையாகவும் இருந்தார். வயதுக்கு மீறிய அறிவு. பள்ளியில் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததைவிட அதிகமாகப் படித்தார். இச்பெல்லாவுக்கு இளமை முதலே அறிவியலின் மேல் அடங்காத காதல். அரசின் உதவி யுடனேயே பல்கலையில் படித்தார். இசபெல்லா தனது ௧௯ வது வயதில் இயல்-வேதியலில் பட்டப்படிப்பு முடித்துவிட்டார். இசபெல்லாவுக்கு 22 வயது முடிந்ததும், ,1944 லேயே, மேற்பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சியையும் முடித்து,மிச்சிகன் பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்று விட்டார்; படு கில்லாடி இசபெல்லா. இசபெல்லா படித்த பொதுப்பள்ளியின் பெண ஆசிரியர் ஒருவரே மானசீக குரு மட்டுமல்ல.. இசபெல்லா எதிர்காலத்தில் வேதியலில் சிறந்து விளங்கவும், வேதியலை விருப்ப பாடமாக எடுக்க முழுமுதற் காரணியானவர்.



இசபெல்லா தன்னுடன் கல்வி பயின்ற ஜெரோம் கார்லை (Jerome Karle)மனதார நேசித்தார். 1940 ல் இசபெல்லா ஜெரோமைத் திருமணமும் செய்து கொண்டார். பின்னர் இந்த தம்பதியர் இணையாகவே சிக்காகோ பல்கலையின் மன்ஹாட்டன் திட்டத்தில்(Manhattan Project during World War II) பணி புரிந்தனர். அதில் ஒரு வியப்பான தகவல் என்ன தெரியுமா? அந்த பல்கலைக்கழகத்தின் முதல் வேதியல் பெண பணியாளார் இசபெல்லாதான் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா? இரண்டாம் உலகப் போரின் போது, இசபெல்லா புளூட்டோனியம் ஆக்சைடிலிருந்து(plutonium oxide) புளூட்டோனியம் குளோரைடைப் (plutonium chloride ) பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்தார். பிறகு 1946 ல் இருவரும் ஒன்றாக வாஷின்டனின், கப்பல் ஆய்வு ஆய்வகத்துக்கு பணி செய்ய மாற்றப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் முடியும் வரை அங்கேயே பணி புரிந்தனர்.



இசபெல்லாவின் கணவர் ஜெரோம் கார்லே ஒரு நோபல் விஞ்ஞானி. x கதிர் சிதறல் யுக்தி மூலம், படிகங்களின் அமைப்பை கண்டறிவதற்கான முறைக் கண்டுபிடித்ததிற்காக , ஜெரோம் கார்லேவுக்கு, 1985 ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம் உயிரியல், வேதியல், உலோகவியல் மற்றும் இயற்பியல் தன்மைகளை அறிய உதவ முடியும் என நிரூபித்தார். இந்த கண்டுபிடிப்பும், இதன் கையாளும் முறையும் புதிய மருந்தியல் துறையிலும் மேலும் மற்ற செயற்கைப் பொருட்களைக் செய்யவும் பெரிதும் பயன்பட்டு சக்கைபோடு போடுகிறது.

X-ray diffraction

இசபெல்லா படிகவியல் மற்றும் மூலக்கூறு அமைப்பு மட்டுமின்றி , இயற்கைப் பொருள்களின் தன்மையையும் உயிரியலில் மிகத் தேவையான பொருட்களையும் கண்டறிந்து நிர்ணயம் செய்தலிலும் சிறந்து விளங்கினார். இதனால் இவரது தலைமையில் ஒரு குழு இயங்கி, இயற்கையாகவே மிக அரிதான பனமானியன் மரத்தில்(Panamanian wood) உள்ள புழுக்கள், கரையான்கள் மற்றும் சில பூச்சிகளை எதிர்க்கும் வேதிப் பொருட்களை உருவாக்கினார். இவையே பூச்சிக்கொல்லியாக திறமையுடன் செயல்படுகின்றன. மேலும் இசபெல்லா, 
 
south american frogஅமெரிக்கத் தவளையின் நஞ்சில் ஆராய்ச்சி செய்தார். இசபெல்லாவின் குழு முப்பரிமாண மாதிரியையும், அதன் உருவமைப்பையும் செய்து காண்பித்தது.அதிலிருந்து மிக மிகக் குறைவான அளவில் சுத்திகரிக்கப்பட்ட திறன் மிகுந்த நஞ்சினைத் தயாரித்தனர். இவை மருத்துவத் துறையில் மிகவும் மலிவாக, விடத்திற்கு மாற்றாகப் பயன்படுகின்றன. தவளையிளிருந்து எடுத்த வேதிப் பொருள்/நஞ்சு,மரபணுத் தகவல்களை சுமந்து செல்லும் டி.என்.ஏ வின் நரம்பினை தடுத்து நிறுத்தும் கேடயமாகப் பயன்படுகிறது.மேலும் இசபெல்லா,டி.என்.ஏ வின் அமினோ அமிலங்கள் மற்றும் உட்கரு அமிலங்களின் தன்மையை/ அடிப்படை கட்டமைப்பை கதிர்வீச்சின் மூலம் எவ்வாறு மாற்றலாம் என்பதையும் சோதனைகள் மூலம் விளக்கிக் காட்டினார்.


இசபெல்லா ஜெரோம் தம்பதியருக்கு மூன்று பெண் மகவுகள். மூவரும் அறிவியலில் ஆர்வம் கொண்டு அதே துறையில் பணி புரிகின்றனர். 1946 ல் பிறந்த லூயிஸ் (Louise ,born 1946) ஒரு கொள்கையியல் வேதியாலாளர்.( a theoretical chemist). இரண்டாவதாக 1950 ல் பிறந்த ஜீன் ஒரு கனிம வேதியியலாளர். மூன்றாம் மகவு மாடலைனே (Madeleine ,1955) அருங்காட்சியகத்துறையின் நிபுணர். மேலும் இவர் புவியியலிலும் விற்பன்னர்.

National Medal of Science in 1995,

இசபெல்லா பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும்,வகித்து, பரிசு சான்றிதழகளையும் பெற்றிருக்கிறார். 1995 , ல் அமெரிக்காவின் மிக உயர்ந்தபட்ச அறிவியல் விருதான தேசிய அறிவியல் பதக்கம் பெற்று பெருமை பெற்றவர் இசபெல்லா. 250 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை இதுவரை எழுதி உள்ளார்.

 
Drs. Jerome and Isabella Karle's retirement ceremony 090721-N-7676W-052 Washington, D.C. (July 21, 2009) The Secretary of the Navy (SECNAV) the Honorable Ray Mabus gives his remarks at Drs. Jerome and Isabella KarleÕs retirement ceremony from the Naval Research Laboratory (NRL) following a combined 127 years of government service. Among their many awards and honors, Dr. Jerome Karle's work in crystal structure analysis was recognized by the 1985 Nobel Prize in Chemistry and Dr. Isabella Karle was awarded the National Medal of Science from President Clinton in 1995 for her pioneering work in devising methods to determine crystal structure. (U.S. Navy Photo by John F. Williams/RELEASED) Office of Naval Research

இசபெல்லாவும் அவரது கணவர் ஜெரோமும், 2009 ம் ஆண்டு, கடலூர்த்தி ஆராய்ச்சி ஆயவகத்திலிருந்து, ஓய்வு பெற்றனர். இதுவரை தம்பதியர் இருவரும் இணைந்து சுமார் 127 ஆண்டுகள் அமெரிக்க அரசுக்கும் , இந்த துறைக்கும் ஏராளமான சேவைசெய்திருக்கின்றனர். 1968 ல் அந்த ஆண்டின் கண்டுபிடிப்புகளுக்காக இசபெல்லாவுக்கு, அதிகமான பரிசுகள் வந்து கொட்டினர். .1986 ல் வாழ்நாள் சாதனைப் பெண்மணி விருது கிடைத்தது. இந்த சாதனைப் பெண இன்னும்கூட நம்முடன் படிகம்போல் துல்லியமாக நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பயனாளியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
-பேரா.சோ.மோகனா.

Dec 2, 2011

மாவட்டச்செயற்குழுக் கூட்டம்-நவம்பர்,22,2011

தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக்கூட்டம் நவம்பர்,22 அன்று மாலை, தேனி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் நடைபெற்ற வேலைகள், எதிர்காலப் பணிகள் குறித்துப் பேசினார். மாநிலச்செயலாளர் திருமிகு.மு.தியாகராஜன் மாநிலத் தகவல்களைக் கூறினார். 

பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்த பரிசீலனை நடைபெற்றது. அனைத்துக் கிளைச் செயலாளர்களும் (கம்பம் தவிர்த்து) தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஒருங்கிணைத்த பெரியகுளம் கிளைக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்ட்து.தேனி ஜெகநாதன் வேதியியல் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சிமுகாம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த ஆண்டு துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டியில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், தேனி, சின்னமனூர் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 800க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்கின்றனர். அதற்காக உழைத்த அனைத்துக் கிளை நண்பர்களுக்கும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள். அதே நேரத்தில் நாம் தவறவிட்ட சில நல்ல வாய்ப்புகளால் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பதை நாமே தடுத்திருக்கிறோம்.

மதுரை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்த பள்ளி வேதியியல் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சிமுகாமில் லட்சுமிபுரம் ஜெகநாதன், இராயப்பன்பட்டி ஜஸ்டின் ரவி ஆகியோர் பங்கேற்று மிகுந்த திருப்தியுடன் திரும்பியுள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி வேதியியல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை, வேதியியல் திருவிழாக்களை நடத்த கிளைகள் முயற்சி எடுக்கலாம்.

மாவட்ட அளவிலான தொண்டர்கள் பயிற்சி முகாமை டிசம்பர், 17,18 தேதிகளில் போடி வட்டாரக்கிளையின் சார்பில் நடத்திக் கொடுப்பது.

மாவட்டத்தில் இன்னும் விரிவாக அறிவியல் இயக்கப் பணிகளை எடுத்துச் செல்வதற்காக ஒரு முழுநேர ஊழியரை ஜனவரி மாதம் நியமிப்பது. அதற்கான நிதி ஏற்பாட்டிற்காக மீண்டும் திட்டமிடுவது.

மே மாதம் மாநிலச் செயற்குழுவை நடத்திக் கொடுப்பது எனவும்,இனிவரும் காலங்களில் மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டமும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கிளைச்செயலாளர்கள் கூட்டமும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டச் செயற்குழுக் கூட்டமும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. மாவட்டப்பொருளாளர் எஸ்.சிவாஜி நன்றி கூறினார்.
அறிவியல் வணக்கங்களுடன்..
தே.சுந்தர்
மாவட்டச்செயலாளர்

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள்-2011

வணக்கம்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு, துளிர் அறிவியல் திருவிழா, துளிர் அறிவியல் வினாடிவினா போன்ற பல்வேறு பணிகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகளை நடத்தி வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத்திறனறிதல் போட்டிகள் நடத்தப்படுகின்றது.

இவ்வாண்டிற்கான போட்டிகள் டிசம்பர்,2,2011 அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் உயர்நிலைப்பள்ளி, கூடலூர் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,கருநாக்கமுத்தன்பட்டி சி.வி.ராமன் துளிர் இல்லம், இராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் முகமது பாத்துமா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சின்னமனூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி, நாகலாபுரம் பாலவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, பெரியகுளம் டிரையம்ப் நடுநிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெற்றது. திறனறிதல் போட்டியில் சுமார் 30 பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.

அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் திருமிகு.மா.சிவக்குமார், பேரா.சிவரெங்கநாதன், தொண்டர்கள் சி.ஈஸ்வரன் ஆர்.ராஜ்குமார், பெ.ஆண்டவர், எம்.மைதீன், தங்கராஜ், ஆர்.அம்மையப்பன், சுரேஷ், ஈ.ஜெகதீசன் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர்.  திறனறிதல் போட்டி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர்  பா.செந்தில்குமரன், மாவட்ட செயலாளர் தே.சுந்தர், கிளைச்செயலாளர்கள்  மு.தெய்வேந்திரன், எஸ்.ராம்சங்கர், வி.வெங்கட்ராமன், க.முத்துக்கண்ணன்  ஆகியோர் செய்திருந்தனர்.

* 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
*6-8 இளநிலை எனவும், 9-12 முதுநிலை எனவும் இருபிரிவுகளில் தேர்வு நடைபெற்றது.
*தேர்வில் மாணவர்கள் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதிலளிக்க
வேண்டும். வினாக்கள் பொது அறிவியலாகவும் அறிவியல் விழிப்புணர்வுத்
தகவல்களாகவும் துளிர் அறிவியல் செய்திகளாகவும் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வுத் திறனை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும்.
*வினாக்களுக்கு பதில்களை 4 விடைகளிலிருந்து 1 விடையைத்தேர்வு
செய்யும் வகையிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்கான
போட்டித் தேர்வுகளில் பங்கேற்கப் பயிற்சி அளிக்கும் வகையிலும் இருக்கும்.
*பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரணகாரிய அறிவையும் அறிவியல் குறித்த புரிதலையும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
*வினாக்கள் ஆங்கிலம்,தமிழ் ஆகிய இருமொழிகளிலும் இருக்கும்.
*எழுத்துத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான
பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.
*தேர்வில் மாநில அளவில் முதல் பத்து இடங்கள் பெறும் மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் வாய்ப்பும் சிறப்புப்பரிசும் வழங்கப்படும்.
*அதிக மாணவர்கள் கலந்துகொண்ட பள்ளிகளுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.
*திறனறிதல் தேர்வு மதிப்பீடு முனைவர்.அ.வள்ளிநாயகம் அவர்களது தலைமையில் தஞ்சையில் நடைபெறும்.