முதல் பக்கம்

Aug 9, 2017

அறிவியலுக்காக அணிவகுப்போம் இந்தியா பேரணி


“அறிவியல் வளர்ச்சிக்காக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதி ஒதுக்க வேண்டும். கல்விக்காக 10% நிதி ஒதுக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51 A(h) வலியுறுத்துவதன் படி மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். பாடத்திட்டம் மற்றும் நாட்டின் கல்விக் கொள்கைகள் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்..” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.9- நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட நகரங்களில் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் அறிவியலுக்காக அணிவகுப்போம் இந்தியா… என்ற பெயரில் பேரணிகள் நடைபெற்றன..


நமது பகுதியில் கம்பம் நகரில்  ஆக.9  அன்று மாலை பேரணி நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட துணைத் தலைவர் பேராசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் அறிமுக உரையாற்றி பேரணியைத் துவங்கி வைத்தார். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கம்பம் காந்தி சிலை அருகில் துவங்கி காமராசர் சிலை அருகே நிறைவுற்றது. இறுதியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் ஜெயமுருகன், வாலிபர் சங்க செயலாளர் லெனின், கலிலியோ அறிவியல் மையத்தின் சத்யமாணிக்கம் ஆகியோர் பேசினர். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன், தேனி கிளைச் செயலாளர் இராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பத்தில் வினாடி வினா போட்டி

ஆக.9 அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் ஒன்றியக் கிளை சார்பில் வினாடிவினா போட்டி கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பெரோஷ், வளையாபதி, தலைமை ஆசிரியர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 பள்ளிகள் கலந்துகொண்டன. நிறைவாக மாநிலச் செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், ஜி.பாண்டி, மருத்துவர் இன்பசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தனசேகரன், சோமநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Jul 24, 2017

11ஆவது தேனி மாவட்ட மாநாடு :


தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11ஆவது மாவட்ட மாநாடு ஜூலை 23- ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தேனி மாயா கூட்ட அரங்கில் மாவட்டத் துணைத்தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ஆர்.அம்மையப்பன், சேசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் இல.நாராயணசாமி மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன் செயல்பாட்டறிக்கையினையும் மாவட்டப் பொருளாளர் ஞானசுந்தரி வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பித்துப் பேசினர். அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.



புதிய நிர்வாகிகள் தேர்வு :
அறிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக மா.மகேஷ், மாவட்டச் செயலாளராக ஈ.ஜெகநாதன் மாவட்டப் பொருளாளராக எம்.கே.மணிமேகலை ஆகியோரும் துணைத்தலைவர்களாக பேரா.ஜி.செல்வராஜ், பேரா.சி.கோபி, ஜான்சன், ஜி.பாண்டி, செ.சிவாஜி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக எஸ்.சேசுராஜ், எஸ்.ஞானசுந்தரி, ஆர்.அம்மையப்பன், வி.வெங்கட் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மூட்டா அமைப்பின் துணைத்தலைவர் பேரா.ஆர்.பாண்டி வாழ்த்திப் பேசினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சங்கரநாராயணன் தண்ணீர் நமது உரிமை என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மாநாட்டு நிறைவுரையாற்றினார். தேனி கிளைச் செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மேலும் மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தீர்மானம் 1:
நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை மீறியும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசனஅமர்வு தீர்ப்பான மருத்துவக் கல்வி பொதுப் பட்டியலில் வருகிறது. எனவே இது தொடர்பான விசயங்களில் மத்திய மாநில அரசுகள் ஒத்திசைந்து முடிவெடுத்து செயல்படவேண்டும் என்று தீர்ப்பை மீறியும் அரசியல் சாசனத்தின் பிரிவு 14 மற்றும் பிரிவு 21 ஐ மீறியும் நீட் தேர்வு விலக்குக்கான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு மத்தியஅரசு குடியரசு தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தர மறுக்கிறது. இந்த அராஜக போக்கைக் கைவிட்டு உடனடியாக, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவ சேர்க்கைக்குகாத்திருக்கும் மாணவர்கள் கஷ்டத்தை போக்கவும் மாநில உரிமைகளை நிலைநாட்டவும் உடனடியாக காத்திருப்பில் உள்ள தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இணைந்துஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று தர வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு மத்தியஅரசைக் கேட்டுக் கொள்கிறது...



தீர்மானம்...2:
தமிழக அரசு பள்ளிக்கல்வியில் மேற்கொண்டு வருகின்ற ஆரோக்கியமான முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மனதார பாராட்டுகின்றது..வரவேற்கிறது.. அதே நேரத்தில் பொது பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும் அனைத்து அதிகாரங்களையும்மையப்படுத்துகின்ற வகையிலும் மத்திய அரசு மேற்கொண்டு வருகின்ற அனைத்து முயற்சிகளையும் வலுவான முறையில் எதிர்க்க வேண்டும் எனவும் கல்வியில் மாநிலஉரிமைகளை நிலைநாட்ட வேண்டும் எனவும் தமிழக அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு கேட்டுக் கொள்கிறது...


தீர்மானம்..3
தமிழக அரசு பள்ளிக்கல்வியில் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் பெரும்பாலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களை மையப்படுத்தியதாகவேஇருக்கின்றது.. ஒட்டுமொத்த மாணவர்களில் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகள், குழந்தைகள் இருப்பது தொடக்கக் கல்வியில் தான்.. தொடக்கக் கல்வியில் நடைமுறையில் உள்ள செயல்வழிக்கற்றல மற்றும் தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு முறைகளை சரியாகநடைமுறைப்படுத்த போதிய கவனம் செலுத்தப்படாத நிலைமை தொடர்கிறது.. குழந்தைகளின் தொடக்கக் கல்வி சிறப்பாக அமைவதை பொறுத்துதான் அவர்களின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக் கல்வி அமையும்.. எனவே தமிழககுழந்தைகளின் தொடக்கக் கல்வி மேம்பட கல்வியாளர்களை ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு கேட்டுக் கொள்கிறது...