முதல் பக்கம்

Jun 22, 2020

பகுதி சூரிய கிரகணம்

 

ஜூன்,21.2020 அன்று காலை 10.15 முதல் பிற்பகல் 1.20 மணி வரை என மூன்று மணி நேரம்  பகுதி சூரியகிரகணம் தெரிந்தது. அதிகபட்சமாக 11.45 மணி அளவில் 25% வரை சூரியன் நிலவினால் மறைக்கப்பட்டது. மேகமூட்டமாக இருந்தாலும் சில நேரங்களில் மட்டுமே முழுவதும் சூரியன் தெரியாத நிலை இருந்தது. கிரகணத்தின் பெரும்பாலான நேரம் காணக்கூடியதாகவே இருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த டிச.26ல் தெரிந்த வளையசூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அளவில் பள்ளி, கல்லூரிகளிலும் பொது இடங்களிலும் கிரகணம் தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 2000 சூரிய வடிகட்டிக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அதே கண்ணாடிகளைக் கொண்டு  பகுதி சூரிய கிரகணத்தை 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சூரிய வடிகட்டிக் கண்ணாடி கொண்டு பாதுகாப்பாக கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர். தேனி மாவட்டத்தில் அடுத்த பகுதி சூரிய கிரகணம் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி தான் பார்க்கமுடியும்..

கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கிரகணம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். பந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளியை சுவரில் விழச்செய்தும் அரிகரண்டி மூலம் ஏற்படும் நிழலைக் கொண்டும் விளக்கம் அளிக்கப்பட்டது. கிரகணத்திற்கும் கொரானா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரகணத்தின் பொழுது எந்தவிதமான சிறப்புக் கதிர்களும் வெளிவருவதில்லை. உணவுகள் கெட்டுப்போகாது. கிரகணத்தின் போது தாராளமாக உணவு உண்ணலாம். கிரகணம் என்பது சூரியன், நிலவு, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் மறைப்பு விளையாட்டு போன்றதே ஆகும். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளிக்கப்பட்டது. பொதுமக்கள் சூரியக் கண்ணாடி கொண்டு கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

தேனி முல்லை நகர், இரத்தினம் நகர், ஆண்டிபட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, தேவாரம், போடி மற்றும் கம்பம் நகரில் பல இடங்களில் சூரியக்கண்ணாடியை வைத்து அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், ஜெகநாதன், கமல், சதீஷ், முத்துப்பாண்டி, ஸ்ரீராமன், சிவக்குமார், தாழைக்குமரன், ராம்குமார், ஜெகதீசன் உள்ளிட்டோர் ஆங்காங்கே வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சூரியக்கண்ணாடி மூலம் பார்க்கச் செய்து விளக்கமளித்தனர்

Mar 22, 2020

மேகமலையில் குறையும் மழை வளம் - மூல வைகையில் வறட்சி: 5 மாவட்டங்களின் நீராதாரம் பாதுகாக்கப்படுமா?


தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மழை வளம் குறைந்து வருவதாலும், சிற்றாறுகளின் வழித்தடம் மாற்றப்பட்டு மூல வைகை ஆற்றுக்கு தண்ணீா் வரத்து தடைபட்டுள்ளதாலும், 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வைகை அணையின் முக்கிய நீரதாரமான மூல வைகை ஆறு, மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் 64 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் அடா் காடுகள், சமவெளி, பள்ளத்தாக்கு, மலையருவிகளைக் கொண்டது மேகமலை.

இம்மலைப் பகுதியில் உற்பத்தியாகும் உடங்கனாறு, சந்தனக்காப்பு ஆறு, கூட்டாறு, பொம்மாறு, புலிக்கட்டு ஓடை, பாலாறு, யானை கெஜம், சிறு ஆறு, பஞ்சந்தாங்கி ஓடை, அல்லால் ஓடை, சுக்கான் ஓடை உள்ளிட்ட 52 சிற்றாறுகளின் சங்கமமே மூல வைகை ஆறு.

மூல வைகை ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு கடந்த 1958 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. மூல வைகை ஆறு மேகமலையில் உற்பத்தியாகி வருஷ நாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு வழியாக 72 கி.மீ.,தூரம் பயணித்து, அமச்சியாபுரம் பகுதியில் முல்லையாற்றுடன் சங்கமித்து வைகை அணையைச் சென்றடைகிறது. 


வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி-சேடப்பட்டி, மதுரை, வத்தலகுண்டு கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவடங்களின் பாசனத்திற்கும் தண்ணீா் திறக்கப்படுகிறது.

குறையும் மழை வளம்: ஆண்டுக்கு 11 மாதங்கள் மழை பொழிவுள்ள மேகமலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மழை வளம் குறைந்து வருகிறது. கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மழைக் காலங்களில் மூல வைகை ஆற்றிலிருந்து வைகை அணைக்கு சராசரியாக விநாடிக்கு 6,000 கன அடி வரையும், அதிகபட்சமாக விநாடிக்கு 22,661கன அடியும் தண்ணீா் வரத்து இருந்தது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மேகமலை வனப் பகுதியில் போதிய மழையின்றி, மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 19 ஆண்டுகளில் மொத்தம் 9 முறை மட்டும் மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணைக்கு சராசரியாக விநாடிக்கு 1,100 கன அடி வரையும், அதிக பட்சமாக விநாடிக்கு 4,566 கன அடியும் மட்டுமே தண்ணீா் வரத்து இருந்தது.

மேகமலையில் விதியை மீறி பட்டா நிலங்களில் மட்டுமின்றி வனப் பகுதியிலும் மரங்களை வெட்டி காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், வணிக நோக்குடன் சில்வா் ஓக் மரங்களை அதிக அளவில் வளா்த்து வெட்டி விற்பதாலும் வன வளம், மழை வளம் குறைந்து மூல வைகையில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று வன ஆா்வலா்கள் கூறுகின்றனா்.


வழித்தடம் மாற்றப்படும் சிற்றாறுகள்: மேகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகும் சிற்றாறுகளின் வழித்தடங்கள் பல இடங்களில் மாற்றப்பட்டுள்ளன. சிற்றாறுகளின் தண்ணீரை பயன்படுத்தி சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவில் தைலப்புல் (வங்ப்ப்ா்ஜ் எழ்ஹள்ள்) சாகுபடியும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தைலம் தயாரிப்பு தொழிற் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன.

வனப் பகுதியில் உள்ள சில தனியாா் எஸ்டேட்டுகள் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்கு வழங்கும் அனுமதியை பயன்படுத்தியும், விதியை மீறியும் சிற்றாறுகள் மற்றும் ஓடையோரங்களில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனா். இதனால், நீா் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு மூல வைகை ஆற்றுக்கு தண்ணீா் வரத்து தடை படுகிறது.

வைகை அணையில் தண்ணீா் நிரம்புவதில் சிக்கல்

வைகை அணையில் இருந்து கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 30 முறை உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது. மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து குறையும் காலங்களில், வைகை அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை வைகை அணையில் தேக்கி, 5 மாவட்டங்களில் குடிநீா் மற்றும் பாசனத் தேவைகள் சமாளிக்கப்பட்டு வருகிறது.

மூல வைகை வறண்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளாக வைகை அணையில் போதிய தண்ணீா் இருப்பு வைப்பதற்காக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் நீா் மட்டத்தை நிலை நிறுத்துவதிலும், தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவில் 2ஆம் போக நெல் சாகுபடிக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையில், 6,879 மில்லியன் கன அடி வரை தண்ணீா் தேக்க முடியும். ஆனால், கடந்த 2000 ஆம் ஆண்டு பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிறுவனம், வைகை அணையில் ஆய்வு செய்ததில் அணையில் 20 அடி உயரம் வரை, அதாவது 974 மில்லியன் கன அடிக்கு சேறும், சகதியும் தேங்கியுள்ளதும், அணை நீா்பிடிப்பில்
14.16 சதவீதம் பரப்பளவில் மண், மணல் மற்றும் சவுடுமண் படிந்திருப்தும் தெரிய வந்தது. இதனால், ஆற்றில் தண்ணீா் வரத்து உள்ள காலங்களிலும், அணையில் அதன் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க முடியாமல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

நீராதாரம் பாதுகாக்கப்படுமா?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ள மூல வைகை ஆற்றை பாதுகாப்பதற்கு மேகமலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள சிற்றாறுகள், காட்டாட்டாற்று ஓடைகளை மீட்கவும், ஆற்றுப்படுகைகளில் உறைகிணறு, ஆழ்துளைக் கிணறு அமைத்து விதியை மீறி தண்ணீா் உறிஞ்சுவதை தடுத்து, ஆற்றில் தண்ணீா் வரத்தை உறுதி செய்வதற்கு வனத் துறை, வருவாய்த்துறை, பொதுப் பணித் துறை மற்றும் மின் வாரியம் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். வைகை அணையை தூா்வாரி அதன் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. படம்: ரா.ரஞ்சித்

கொரோனா, இது சீன வைரஸா? – த.வி.வெங்கடேஸ்வரன்




சீனாவின் ரகசிய ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயாரிக்கப்பட்ட கிருமி தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கொரோனா வைரஸ் என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு. அமெரிக்காவின் ‘ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற நிறுவனத்தை (scripps research institute) சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவானது புகழ் பெற்ற‘நேச்சர் மெடிஸன்’ ஆய்விதழில் மார்ச் 17, 2020 – செவ்வாயன்று வெளியாகியுள்ளது.

SARS – coV – 2 என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த வைரஸின் மரபணுக்களை ஆய்வு செய்த நிபுணர்கள், அவை ஆய்வகத்தில் செயற்கையாகவோ அல்லது மரபணுமாற்றம் செய்யப்பட்டோ உருவாகவில்லை என்றும் இயற்கையில் பரிணமித்த புதிய இனப்பிரிவு என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் SARS – coV – 2 இனப்பிரிவைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியது. வுஹான் நகரில் வைரஸ் ஆய்வு நிறுவனம் உள்ளதால் கொரோனா வைரஸ் அங்கே ரகசியமாக தயாரிக்கப்பட்ட செயற்கை கிருமி என்ற புரளி எழுந்தது. “ஏற்கெனவே நாம் அறிந்துள்ள வேறு கொரோனா வைரஸ் இனப்பிரிவுகளின் மரபணு தொடரோடு புதிய இனப்பிரிவை ஒப்பிட்டு பார்க்கும்போது SARS – coV – 2 இனப்பிரிவு வைரஸ் இயற்கையில் பரிணமித்த ஒன்று என தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பூட்டும் வைரஸ்களின் கள்ளசாவியும்

ஓம்புயிரிகளின் செல்களில் புகுந்து அந்த உயிரியின் செல்அமைப்பை பயன்படுத்தித்தான் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே எப்படியாவது ஓம்புயிரி செல்களுக்குள் செல்ல வைரஸ் துடிக்கும். ஓம்புயிரிகளின் செல்கள் தங்கள் கதவை திறந்த வைத்து வா வா என்று வைரஸ்களை அழைக்காது. செல் சுவர் கொண்டு வைரஸ்களை உள்ளே எளிதில் நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தும். ஆனால் கதவு பூட்டிய கோட்டை போல எல்லா நேரமும் செல்கள் இருந்துவிட முடியாது. செல்பிரிதல், செல் செயல்படுதல் போன்ற எல்லா இயக்கத்துக்கும் ஆற்றல் தேவை. பற்பல புரத பொருள்கள் தேவை. ரத்தம் எடுத்துவரும் புரத பொருள்கள், ஆக்ஸிஜன் போன்ற பொருள்கள் செல்களுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்ல வேண்டும். உள்ளே ஏற்படும் வேதி வினை காரணமாக உருவாகும் மாசுகளை அப்புறப்படுத்த வேண்டும். எனவே, செல்களின் சுவர்களில் கதவு போன்ற அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது மட்டும் கதவு திறந்து வெளியே உள்ள பொருள் உள்ளே வரும். உள்ளே உற்பத்தியாகும் மாசுகள் வெளியேற்றப்படும்.


சரியான புரதப்பொருள்கள் வந்து சேரும்போது, அவற்றை செல்களின் சுவர்களில் பற்றிப் பொருத்துவதற்காக கைப்பிடி போன்ற ஏற்பிகள் இருக்கும். அந்த புரதங்களின் ஒரு பகுதி சாவியின் வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள கதவு பூட்டின் உள்ளே இந்த சாவி வடிவம் நுழையும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும். பூட்டை உடைத்து திருடன் நுழைவது போல கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து வைரஸ்கள் உள்ளே நுழையும். ஒவ்வொரு பூட்டின் சாவியும் வெவ்வேறு வடிவில் இருக்கும் அல்லாவா? அதுபோல ஒவ்வொரு உயிரியின் பூட்டும் கைப்பிடியும் வெவ்வேறு வடிவில் இருக்கும். இதனால்தான், எல்லா வைரஸ்களும் எல்லா உயிரிகளின் செல்களிலும் புகுந்துவிட முடிவதில்லை. இதன் காரணமாகவே, மாட்டுக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள், பல சமயம் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை. அதாவது ஒவ்வொரு வைரஸுக்கும் அதற்கு ஏற்ற ஓம்புயிரிகள் உள்ளன. தனது ஓம்புயிரி செல்களைப்பற்றி துளையிட்டு புகுந்து செல்வதற்காக அந்த குறிப்பிட்ட வைரஸ்களுக்கும் அதன் மேலுறையில் செல்களின் ஏற்பிகளை பற்றி பிடிக்கும் RBD புரதம் மற்றும் செல்சுவரின் கதவை திறக்கும் சாவி போன்ற அமைப்பு, புரதம் போன்ற சிறப்பு அமைப்புகள் இருக்கும்.

மரபணு தொடர் வரிசை

தொற்றுநோய் பரவல் ஏற்பட்ட சில நாட்களிலேயே சீன விஞ்ஞானிகள் SARS – coV – 2 வைரஸின் மரபணு தொடரை வரிசை செய்து அனைத்து ஆய்வாளர்களும் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் பொதுவெளியில் வெளியிட்டனர். ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், முதலில் ஒரே ஒரு மனிதருக்கு இந்தவைரஸ் தொற்று ஏற்பட்ட அதன் பின்னர் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவித்தான் சீனாவில் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது என்பது விளங்கியது. ஏறக்குறைய பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கூர் முனைகள் உள்ளன. இந்த கூர் முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை இந்த வைரஸ் பற்றிக் கொண்டு துளையிட்டு உள்ளே நுழைகிறது.

ஆண்டர்சன் மற்றும் அவரது சக பணியாளர்கள் SARS – coV – 2 மரபணு தொடரை ஆராய்ந்த போது, இந்த வகை வைரஸ்களின் கூர் முனைகளில் மனித செல்களின் மீது உள்ள ACE2 என்ற ஏற்பியை பற்றிக்கொள்ளும் விதத்தில் ‘ஏற்பி பற்று’ புரதம் பரிணமித்துள்ளது என கண்டறிந்தனர். அதாவது ACE2 என்ற பூட்டை திறக்கும் சரியான சாவி SARS – coV – 2 -யிடம் இருந்தது.

ஒப்பீடு ஆய்வு


இந்த சாவியை ஏனைய SARS – coV வைரஸ்களின் சாவியோடு ஒப்பிட்டு பார்த்தனர். புதிதாக உருவான SARS – coV – 2 -ன் சாவி புரதம் ஏற்கெனவே SARS – coV வைரஸ்களிடம் இருந்த சாவி புரதத்தை விட ஆற்றல் குறைந்தது. செயற்கையாக உயிரியல் ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் மேலும் ஆற்றல் கூடிய பற்று புரதத்தை தான் உருவாக்குவார்கள். ஆற்றல் குறைவான ஒன்றைஅல்ல. ஒருவேளை, செயற்கை SARS – coV வைரஸை, கிருமி யுத்தத்துக்கு தயார் செய்தால், அது ஏற்கனவே மனிதர்களை கொல்லும் மிகவும் கொடிய வகை வைரஸை அடிப்படையாக கொண்டு தான் அமையவேண்டும். SARS – coV – 2 -ன் அடிப்படை அமைப்பு ஏற்கனவே மனிதரை தாக்கும் SARS – coV வைரஸ்கள் போல இல்லாமல் அழுங்கு மற்றும் வவ்வால்களை தாக்கும் SARS – coV வைரஸ்கள் போல அமைந்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் கூர் கத்தியை மழுங்கடித்து போர் தளவாடங்களை தயார் செய்ய மாட்டார்கள் அல்லவா? அதன்படி பார்த்தால்,SARS – coV வைரஸ்களின் வீரியம் கூட இந்த நோவல் SARS – coV – 2 வைரஸுக்கு இல்லை. “SARS – coV – 2 கூர்முனையின் RBD பற்று புரதம் மற்றும் வைரஸின் அடிப்படை மூலக்கூறு வடிவம் இரண்டையும் சேர்த்து பார்க்கும்போது, செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கிய கிருமியாக இருக்க முடியாது” என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தார்கள்.

எப்படி உருவானது?

இரண்டு வகையில் இந்த நோவல் SARS – coV – 2 வைரஸ் பரிணமித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலாவதாக, வேறு விலங்குகளில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் உருவாகி, பின்னர் மனிதர்களிடம் நோய் ஏற்படுத்தும் கிருமியாக பரிணமித்து பரவியிருக்கக் கூடும் . இல்லையெனில், முதலில் நோயற்ற வடிவில் மனிதரிடம் பரவி, பின்னர் மனிதரிடம் பரிணமித்து நோய் ஏற்படுத்தும் கிருமியாக உருவாகியிருக்கலாம். வவ்வால்களிடம் பரவும் SARS – coV – 2 வைரஸின் சாயல் இந்த கொரோனா வைரஸில் காணப்படுகிறது. எனவே, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவி இருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது. SARS மற்றும் MERS வகை SARS-CoV கரோனா வைரஸ்கள் இப்படித்தான் முதலில் புனுகுப் பூனை மற்றும் ஒட்டகங்களில் முறையே உருவாகி பின்னர் மனிதரிடம் பரவியது. எனினும், வவ்வால்களிடம் நோய் ஏற்படுத்தும் அதே இனம் மனிதரிடம் நோய் ஏற்படுத்த முடியாது. எனவே இரண்டுக்கும் இடைப்பட்ட இனப்பிரிவு பரிணமித்து இருக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட இனப்பிரிவு இனம் காணப்படவில்லை. எனவே, வவ்வால்களிடம் உருவாகி மனிதனுக்கு இது பரவியது என தீர்மானமாக கூற முடியாது.

மாற்றாக நோய் விளைவிக்கின்ற திறன் அற்ற வகை வைரஸ் மனிதர்களிடம் பரவி, பின்னர் காலப்போக்கில் பரிணாமத்தின் காரணமாக, நோய் விளைவிக்கின்ற தன்மை கொண்ட இனப்பிரிவாக உருவெடுத்து இருக்கலாம். அழுங்கு எறும்புண்ணிகளில் இந்த சாயல் கொண்ட வைரஸ் உள்ளது. அந்த விலங்கிடம் காணப்பட்ட வைரஸ்களிலும், SARS-CoV-2 வைரஸ்களிலும் ஒரே வகை RBD அமைப்புதான் உள்ளது. எனவே நேரடியாக எறும்புண்ணியிடமிருந்தோ அல்லது பூனை இன விலங்குகளிடம் இருந்தோ இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவி இருக்கலாம். மனிதர்களிடம் பரவிய பின்னர் பரிணாம படிநிலை வளர்ச்சியில் மனித செல்களை துளைத்து திறக்கும் ‘சாவி புரதம்’ பரிணமித்து தொற்று நோயாக உருவாகியிருக்கலாம் என்கிறார்கள்.

இரண்டில் எது சரி என்பதை இப்போது நம்மிடம் உள்ள தரவுகளைக் கொண்டு இறுதி செய்ய முடியாது. தொற்று விளைவிக்க கூடிய திறனோடு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றால் மறுபடி இந்த வைரஸின் வேறு ஒரு வடிவம் எதிர்காலத்தில் பரவி புதிய தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் ஏற்படுத்தும் திறனற்ற வடிவில் மனிதர்களிடம் பரவி பின்னர் நோய்த் தன்மை கொண்ட வைரஸ் பரிணமித்துள்ளது என்றால் மறுபடியும் அதேபோன்ற நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. எப்படி இந்த வைரஸ் உருவானது என்பதை கூடுதல் ஆய்வுதான் நமக்கு தெளிவுப்படுத்தும்.

கிரீடம் அணிந்த வைரஸ்..
பூனைக் குடும்பத்தில் பூனை, புலி என பல விலங்குகள் உள்ளதுபோல இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு. நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது கிரீடம் (கிரவுன்) போல அல்லது சூரியனை சுற்றி இருக்கும் ஒளிக்கதிர்கள் (கொரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் கொரோனா வைரஸ் குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது.


நமக்கு தெரிந்த வரையில் மனிதர்களை தாக்கும் ஆறு கொரோனா வைரஸ்களில் 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் ஆபத்து அற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். MERS – CoV மற்றும் SARS – coV ஆகிய இரண்டும் கிருமி தாக்கியவர்களில் சிலருக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு நோயை ஏற்படுத்தும். ஏழாவதாக உருவானதுதான் இந்த SARS – coV – 2 . எனவேதான், புத்தம் புதிதாக சமகாலத்தில் பரிணமித்த இனப்பிரிவு என பொருள்படும் ‘நோவல்’ என்ற அடைமொழியோடு ‘நோவல் கொரோனா வைரஸ்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர்தான் கோவிட் -19.

கட்டுரையாளர்- 
த.வி.வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி
விஞ்ஞான் பிரச்சார்
தொடர்புக்கு : tvv123@gmail.com
நன்றி : தி இந்து (தமிழ்), 19.3.2020.