முதல் பக்கம்

Oct 28, 2014

மங்கள்யான்: விஞ்ஞானி சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில் அக்டோபர் 27 திங்கள் கிழமை அன்று விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஒரே நாளில் மூன்று பள்ளிகளில் இந்நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பாக திட்டமிடப்பட்டு இருந்தது. காலை 10 மணி அளவில் கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளியில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளோடு விஞ்ஞான பிரச்சார் விஞ்ஞானி த.வி .வெங்கடேஷ்வரன் உரையாற்றினார். மதியம் சுருளிப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைப்பெற்றது.மாலை கூடலூர் என்.எஸ்.கே,பி,மேல்நிலைப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.மாநிலச் செயலர் தே.சுந்தர், மாவட்ட செயலர் வி.வெங்கட் பாளையம் கிளைத்தலைவர் திருமிகு வளையாபதி மற்றும் அறிவியல் இயக்க ஆர்வலர்கள் பெரோஸ் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.மங்கள்யான் செயற்கைகோள் தொடர்பாகவும் இந்திய அறிவியல் ஆய்வுகள் குறித்தும் விஞ்ஞானி விளக்கம் அளித்தார்.

Oct 14, 2014

வழிகாட்டி ஆசிரியர்களுக்கான NCSC பயிற்சி முகாம் 2-2014


தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அக்டோபர் 13 திங்கள் அன்று பெரியகுளம் சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. பெரியகுளம் கிளைத்தலைவர் ஏ.எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.பள்ளிதலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் பா.செந்தில குமரன் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடர்பாக அறிமுகவுரை ஆற்றினார். மாநிலக்கருத்தாளர் திருமிகு.பேரா.சோ.மோகனா கலந்து கொண்டு மாநாட்டிற்கான கருப்பொருள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர்.80 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.ஆசிரியர் ராஜா நன்றியுரை வழங்கினார்.

Oct 10, 2014

வழிகாட்டி ஆசிரியர்களுக்கான NCSC பயிற்சி முகாம் 1-2014


தேசிய குழந்தைகள அறிவியல் மாநாட்டிற்கான உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவிலான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அக்டோபர் 9 வியாழன் அன்று கம்பம் நாகமணிஅம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஓவியர் பாண்டி தலைமை தாங்கினார்.பள்ளி முதல்வர் முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் வி.வெங்கட் வரவேற்புரை ஆற்றினார். உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் வனஜா மேரி அறிமுகவுரை ஆற்றினார்.மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கலந்து கொண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மா நாடு தொடர்பாக அறிமுகவுரை ஆற்றினார். மாநிலக்கருத்தாளர் முனைவர் தினகரன் மற்றும் மாவட்ட இணைச்செயலர் திருமிகு.ஞானசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டிற்கான கருப்பொருள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர்.60 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

Oct 7, 2014

இளம் விஞ்ஞானியர் விருது-குழந்தைகள் அறிவியல் மாநாடு-வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் அறிவிப்பு-2014

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 21 ஆண்டுகளாக இளம் விஞ்ஞானியர் விருது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ மக்கள் அமைப்பு. அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், குழந்தைமையக் கல்விக்கான முயற்சிகள், ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான வாசிப்பு முகாம்கள் என ஏராளமான அறிவியல், கல்வி விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

குழந்தைகள் பள்ளியில் படிக்கின்ற அறிவியலை வாழ்வியல் நடைமுறையோடு பொருத்திப் பார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவுகின்ற இம்மாநாட்டில் இந்தியா முழுவதுமாக சுமார் 9 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்து வருகின்றனர்.

மாவட்டத்திற்கு சராசரியாக 200 ஆய்வுகள் வீதம் மாநிலம் முழுவதும் 6000 ஆய்வுகள் வரையிலும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு ஆய்வுக்குழுவிற்கு 5 பேர் வீதம் 6000 ஆய்வுகளின் மூலம் 30,000 குழந்தைகள் ஆண்டுதோறும் இந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இம்முப்பதாயிரம் குழந்தைகள் மூலமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் இலட்சக்கணக்கான மக்களையும் சென்றடைகின்றது. மாவட்ட / மாநில / தேசிய அளவிலான மாநாடுகள் நடைபெறும் இடங்களில் ஒவ்வொரு குழந்தையும் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைவருடனும் ஒன்றாகக் கலந்து பழகும்போது இந்தியாவின் தேசிய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை, நாட்டின் பன்முகத்தன்மையை நிச்சயம் உணரமுடியும்.

மேலும் கடந்த 6 ஆண்டுகளாக தெற்கு ஆசிய நாடுகளான நேபாளம், பூடான், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் எனப் பல நாட்டு குழந்தைகளும் ஆசிரியர்களும் கூட பங்கேற்றுவருகின்றனர். அவர்களுடன் பழகும் வாய்ப்பையும் இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் பெறுகின்றனர். 

மேலும் இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் நாட்டின் முக்கிய விஞ்ஞானிகளுடன் நேரடியாகவும், வீடியோ கான்பரன்சிங் மூலமும் கலந்துரையாடுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளாகக் கருதி கொண்டாடுகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் வாழ்வின் இலட்சியப் பயணத்திற்கு வித்திடுவதாக இம்மாநாடு அமைகிறது.



மாநாட்டின் மையக்கருப்பொருள்:

இந்த ஆண்டிற்கான மையக் கருப்பொருளாக வானிலை மற்றும் காலநிலையைப் புரிந்துகொள்வோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் ஏற்படக்கூடிய வெப்பம், மழையளவு, ஈரப்பதம், காற்றழுத்தம் இவைகளில் காணப்படும் மாறுபாடுகளை வானிலை என்றும் ஒரு மாதமோ அல்லது வருடமோ அல்லது குறிப்பிட்ட கால அளவின் வானிலைத் தொகுப்பை நாம் காலநிலை என்றும் குறிப்பிடுகின்றோம்.

வானிலை மற்றும் காலநிலையைத் தீர்மானிக்கும் இயற்கை காரணிகளாக உயரத்தையும் நில மற்றும் நீர் அமைப்புகள், அதில் அமைந்துள்ள தாவர விலங்கினங்களையும் குறிப்பிடுகிறோம். வானிலைக்கும் காலநிலைக்கும் இயற்கை காரணிகளுக்கும் பிரிக்க இயலாத தொடர்பு உண்டு. இதில் எங்கு மாற்றம் எங்கு நிகழ்ந்தாலும் பாதிப்பு நிச்சயம் இருக்கும். அனுகூலமான நிலை ஒரு காலத்தில் இருந்தாலும் மனிதத் தலையீடுகளால் ஏராளமான பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றது. அது நம் வாழ்வாதாரச் சூழலில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் சூழலை, சூழலின் வானிலை மற்றும் காலநிலையைப் பற்றி புரிந்துகொள்ளும் விதமாகவும் எதிர்கால தலைமுறையினரிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவுமே இத்தலைப்பு மையக்கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பொதுத் தலைப்பின் கீழ் 6 துணைத்தலைப்புகள் உள்ளன. அவை...

1. நம்மைச் சுற்றியுள்ள வானிலை மற்றும் காலநிலை..

2. வானிலை மற்றும் காலநிலையில் மனிதத் தலையீடுகளால் ஏற்படும் விளைவுகள்..

3. சூழல் மண்டலமும் வானிலை & காலநிலையும் ...

4. சமூகம், கலாச்சாரமும் வானிலை & காலநிலையும் ...

5. விவசாயமும் வானிலை & காலநிலையும் ...

6. ஆரோக்கியமும் வானிலை & காலநிலையும் ...



மாநாட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:

இந்தியா முழுவதும் உள்ள 10-17 வயதுக்குழந்தைகள் அனைவரும் பங்கேற்கலாம். அரசு, தனியார், மெட்ரிக் என அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்கலாம். பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளும் இரவுப்பள்ளி மற்றும் துளிர் இல்லக் குழந்தைகள், சிறப்பியல்புக் குழந்தைகள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகள் என அனைவரும் பங்கேற்கலாம். உரிய வயது மட்டுமே ஒரே தகுதி..

இம்மாநாட்டிற்கான் ஆய்வினை குழுவாக மேற்கொள்ள வேண்டும். ஒரு குழுவிற்கு 3 முதல் 5 பேர் வரை இருக்கலாம். ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

வழிகாட்டி ஆசிரியராகச் செயல்படுபவர் ஆசிரியராகவோ, தன்னார்வலராகவோ, பெற்றோராகவோ கூட இருக்கலாம்.

ஆய்வு எப்பொழுதும் உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகள் உள்ளதாய் இருக்கவேண்டும். ஒரு மாவட்டத்திற்குரியவர் அடுத்த மாவட்ட தகவல்களை எடுத்து ஆய்வு மேற்கொள்ளுதல் கூடாது.

ஆய்வு சோதனையாகவோ கணக்கெடுப்பு முறையாகவோ மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தியதாகவோ இருக்கலாம். ஆனால் உயிர்ப்பொருட்கள், ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் மற்றும் மனிதனின் உணவு, பானம் ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல் கூடாது.

இந்நிகழ்வு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி சிந்தனையை வளர்த்து அதற்கு அறிவியல் கண்ணோட்டத்தோடு உரிய வடிவம் கொடுக்கும் நல்ல வாய்ப்பை அளிக்கும் மாநாடே தவிர போட்டி அல்ல. 

10-13 வயதுடைய இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் 14-17 வயதுடைய முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும். ஆய்வறிக்கையை தட்டச்சு செய்தோ , கையெழுத்திலோ சமர்ப்பிக்கலாம்.

ஆய்விற்கான செலவு ரூ.250க்கு மிகாமல் இருக்க வேண்டும்.



வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்:

இந்த ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகச் செயல்பட விரும்பும் ஆசிரியர், பெற்றோர், ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாம் அக்.9 அன்று கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.



மாவட்ட / மாநில / தேசிய மாநாடு நடைபெறும் விபரம்:

தேனி மாவட்ட அளவிலான மாநாடு நவம்பர் இரண்டாவது வாரம் தேனியிலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் இறுதியில் தஞ்சாவூரிலும் தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் நடைபெற உள்ளது.


தேனி மாவட்டத்தின் இளம் விஞ்ஞானியர்:

நமது மாவட்டத்தில் கடந்து 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆய்வுகள் குழந்தைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் ஆர்.நிவேதா என்ற மாணவி (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன் பட்டி) நாகலாந்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2009ஆம் ஆண்டில் ஷெரின் பர்கானா என்ற மாணவி (விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன் பட்டி) குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2010ஆம் ஆண்டில் செல்லத்துரை என்ற மாணவன் (எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, கோம்பை) சென்னையில் நடைபெற்ற மாநாட்டிலும் 2011ஆம் ஆண்டில் பொ.சுரேந்தர் என்ற மாணவன் (விக்ரம் சாராபாய் துளிர் இல்லம், கூடலூர்) ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் 2012ஆம் ஆண்டில் ஜெனிபர் பாத்துமா என்ற மாணவி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்) வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டிலும் 2013ஆம் ஆண்டில் என்.லிசா என்ற மாணவி (அரசு மேல்நிலைப் பள்ளி, ஜி.கல்லுப்பட்டி) போபாலில் நடந்த மாநாட்டிலும் கலந்துகொண்டு குழந்தை விஞ்ஞானியர் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் விபரங்களுக்கு: 
 வி.வெங்கட்ராமன், மாவட்டச் செயலாளர்:8870703929
தே.சுந்தர், மாநிலச்செயலாளர்: 9488011128