முதல் பக்கம்

Dec 13, 2016

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேனி குழந்தைகள் தேர்வு

24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.. அதில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இளநிலை, முதுநிலை இரு பிரிவுகளில் தமிழகம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.

அதில் நம்முடைய தேனி மாவட்டத்திலிருந்து பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் கணிதமேதை சகுந்தலாதேவி துளிர் இல்ல மாணவி எ.பி.ஆர்த்திகா தலைமையிலான குழுவினரின் “நலிந்துவரும் தென்னை விவசாயத்தில் காலநிலையின் தாக்கம்” என்ற ஆய்வும் ஒன்று.. இக்குழந்தைகளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் அனைவரின் பாசத்திற்குரிய விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் வருகின்ற 27-31 தேதிகளில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று தங்களது ஆய்வறிக்கையினைச் சமர்ப்பிக்க உள்ளனர்.. நம்முடைய நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்குவர்..


தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொள்ளக்குடிய குழந்தை விஞ்ஞானிகளையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் எஸ்.ஞானசுந்தரி மற்றும் எம்.கே.மணிமேகலை ஆகியோரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் வி.வெங்கட் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகிறோம்..