முதல் பக்கம்

Jun 24, 2013

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 9வது மாவட்ட மாநாடு & குழந்தைகள் அறிவியல் திருவிழா

9வது மாவட்ட மாநாடு:




தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 9வது மாவட்ட மாநாடு ஜூன்,23,2013 அன்று உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் நடைபெற்றது. முற்பகல் மாவட்ட மாநாடு அறிவியல் இயக்க கருத்தாளர் எஸ்.தேவராஜின் குழலிசையுடன் துவங்கியது. மாநாட்டிற்கு மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாவட்டத்துணைத்தலைவர் முனைவர்.மு.முகமது செரீப் முன்னிலை வகித்தார். மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மாநாட்டைத் துவங்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் கடந்த இரண்டாண்டுகள் நடைபெற்ற வேலைகள் பற்றிய செயலறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். பொருளறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிளைவாரியாக அறிக்கையின் மீதான விவாதமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.


புதிய நிர்வாகக்குழு:

மாவட்டத்தலைவராக பா.செந்தில்குமரன், மாவட்டச்செயலாளராக வி.வெங்கட்ராமன், பொருளாளராக ஜெ.மஹபூப் பீவி துணைத்தலைவர்களாக முனைவர்.ஜி.செல்வராஜ், முனைவர்.சி.கோபி, செ.சிவாஜி, இணைச்செயலாளர்களாக தே.சுந்தர், எஸ்.சேசுராஜ், எஸ்.ஞானசுந்தரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



புதிய செயற்குழு:

நிர்வாகக்குழுவை உள்ளடக்கிய ஹ.ஸ்ரீராமன், க.முத்துக்கண்ணன், ஜி.பாண்டி, எஸ்.ராம்சங்கர், முத்துமணிகண்டன், எஸ்.மனோகரன், வி.ஜெயந்தி, எம்.கே.மணிமேகலை, ப.ஸ்ரீதர், ப.மகேந்திரன், முனைவர்.மு.முகமது செரீப், சே.ஜஸ்டின் ரவி, பா.வன்னியராசன், மு.தெய்வேந்திரன், ஆர்.அம்மையப்பன், கரிசல்கருணாநிதி, ரா.அழகுகணேசன், பா.இரத்தினசாமி ஆகியோரைக் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.


புதிய பொதுக்குழு:

செயற்குழுவை உள்ளடக்கிய மா.சிவக்குமார், ஜெ.முருகன், மொ.தனசேகரன், சி.பிரகலாதன், ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், எஸ்.ஏ.செல்வராஜ், எஸ்.காளிதாஸ்,, கோ.ஜெகதீசன், எஸ்.வளையாபதி, எஸ்.குமரேசன், அ.அழகர்சாமி, ஜெ.வேல்ராஜேஷ், ப.மோகன்குமாரமங்கலம், மா.மகேஷ், அ.சதீஷ், பா.ஜான்சன், எஸ்.செந்தில்குமார், ரா.ஹரிகோவிந்த், ச.லோகநாதன் ஆகியோரைக் கொண்ட பொதுக்குழுவும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டது.


துளிர் இல்லங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் அ.அமலராஜன் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார். மாவட்டத்துணைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் நன்றி கூறினார். பிரதிநிதிகள் மாநாட்டில் மொத்தம் 50 நண்பர்கள் கலந்துகொண்டனர்.



குழந்தைகள் அறிவியல் திருவிழா

ஜூன்,23 பிற்பகல் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் திருவிழாவிற்கு மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் முனைவர்.சி.கோபி முன்னிலை வகித்தார். பெரியகுளம் கிளைச் செயலாளர் எஸ்.ராம்சங்கர் வரவேற்றார். மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் அறிமுக உரையாற்றினார். கருத்தராவுத்தர் கல்லூரி முதல்வர் முனைவர்.எம்.ஹௌது முகைதீன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் எம்.வீரையா மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சியை நடத்தினார்.

மாநிலக் கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் இயற்கை வளமேலாண்மை-ஓர் அறிவியல் பார்வை என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.என்.மணி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் முனைவர்.எஸ்.கண்ணன் மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்திப்பேசினார். 


100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் உத்தமபாளையம் வட்டாரவளமைய மேற்பார்வையாளர் பெ.பவுன் நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்திப்பேசினார். நல்லாசிரியர் விருதுபெற்ற இயக்க நண்பர்களுக்கு வானியல் கருத்தாளர் இல.நாராயணசாமி நினைவுப்பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார். மேலும் தேனி மாவட்டத்திலிருந்து கடந்த 2008ஆம் ஆண்டு முதல்  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மூலமாக தேசிய அளவில் இளம் விஞ்ஞானி விருதுபெற்ற மாணவர்கள் கம்பம் ஹரிகரன்.-2008,(நாகலாந்து) கே.கே.பட்டி செரீன் பர்கானா-2009(குஜராத்),கோம்பை அஜித்குமார்-2010(சென்னை) கூடலூர் சுரேந்தர்-2011(ஜெய்ப்பூர்) பெரியகுளம் ஜெனிபர் பாத்திமா-2012(வாரணாசி) ஆகியோர் தங்களது ஆய்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அந்த மாணவர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. 

மாநிலத்துணைத்தலைவர் பேரா.சோ.மோகனா நிறைவுரையாற்றினார். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார். 67 பள்ளிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட குழந்தைகள் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் சுமார் 800 பேர் கலந்துகொண்டனர்.

Jun 5, 2013

காசு... பணம்... துட்டு...



நகராட்சித் தொடக்கப்பள்ளியில் கல்வியைத் தொடங்கினேன். -நீதிபதி சந்துரு


உங்களது குழந்தைப் பருவம், கல்வி, அரசியல் ஆர்வம் போன்ற விஷயங்கள் குறித்துக் கூறுங்கள் . . .

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில்தான் எனது தாயாரின் ஊர். தந்தையின் ஊர் பட்டுக்கோட்டை அருகே பெரிய கோட்டை. எங்களது தொடர்பு பெரிதும் தாய்வழியிலேயே அமைந்திருந்தது. தந்தை ரயில்வேயில் வேலை பார்த்து வந்ததால் பல ஊர்களுக்கும் மாறுதல் பெற்று சென்றுவிடுவது வழக்கமாக இருந்தது. நான் 1951இல் ஸ்ரீரங்கத்தில் பிறந்தேன். குடும்பத்தில் மொத்தம் 5 பேர். மூத்தவர் எனது அக்கா. தாயார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். எங்கள் கல்விக்காக 1954இல் எனது தந்தை சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டார். வட சென்னையில் நகராட்சித் தொடக்கப்பள்ளியில் கல்வியைத் தொடங்கினேன். பின்னர் நாங்கள் தென் சென்னையில் தி. நகருக்கு இடம்பெயர்ந்தோம். நானும் எனது சகோதரர்களும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தோம். 1956இல் எனது தாயார் இறந்துவிட்டார். மறுமணம் செய்ய எனது தந்தை மறுத்துவிட்டதால் அவரே எங்களைப் பார்த்துக்கொண்டார். இதே சமயத்தில் எனது சகோதரி மண வயதை அடைந்துவிட்டதால் தந்தை அவருக்கு மணம் செய்துவைத்துவிட்டார். எனவே நாங்கள் ஆண்களாக ஒரு வீட்டில் வாழ்ந்துவந்தோம். மூத்த சகோதரர் பொறியியல் கல்விக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். எங்களைப் பராமரிக்க வேண்டியதிருந்ததால் எனது தந்தை ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் பணி செய்ய உத்தரவு பெற்றுப் பணியாற்றினார். சாதாரண நடுத்தரக் குடும்ப வாழ்வுதான் எங்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் சென்னையில் வசித்ததால் உறவினர் ஆதரவு என எதுவும் கிடைக்கவில்லை. தாயுமானவர் போல் எங்கள் தந்தை எங்களைப் பராமரித்துவந்தார்.

அப்போது சீன எல்லைத் தகராறு, பாகிஸ்தான் போர் எனப் பலவிதச் சிக்கல்கள் நாட்டில் நிலவின. உணவுப் பொருள்கள் அனைத்தையும் ரேசனில் வரிசையில் நின்று பெற்றுவருவோம். காய்கறி, பால் போன்ற அனைத்துப் பொருள்களையும் தினசரி வாங்கிவர வேண்டும். கடைகளுக்குப் போய்வருவது எனது வழக்கமாக இருந்ததால் பள்ளியில் ஆசிரியர்கள் என்னைக் கடைகளுக்கு அனுப்புவார்கள். அந்த வேலைகள் செய்வது பெருமையாக இருக்கும். சாதாரண வாழ்க்கைக்கே பெரும்பாடாக இருக்கும். அப்போதுதான் வாழ்க்கையில் பொறுமை என்றால் என்ன என்று கற்றுக்கொண்டேன். வரம்புக்குட்பட்ட வருமானத்தில் வாழ்ந்ததால் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருந்தது.

அந்த வயதிலேயே எனக்கு வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. வீட்டில் குமுதம் போன்ற வாரப் பத்திரிகைகளை அப்பா வாங்கமாட்டார். அதனால் அவற்றை சலூனில் சென்று படிப்பது வழக்கமாகிவிட்டிருந்தது. எந்த வழிகாட்டுதலும் இல்லாததால் கிடைத்த புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன். வாசிப்பதில் பெரிய தேர்வு என்று எதுவும் இல்லை. நாங்கள் இருந்த வீட்டின் உரிமையாளர் பெரியார் புத்தகங்களை வைத்திருந்தார். ஆனால் அவர் அப்புத்தகங்களைப் படிக்க அனுமதிக்கமாட்டார். எனவே அவர் இல்லாத சமயங்களில் அந்தப் புத்தகங்களைப் படிப்பேன். அதுவரை மதம் குறித்து இருந்த நம்பிக்கைகள் மெதுவாக விலக ஆரம்பித்தன.

பெரியாரின் எழுத்துக்களைப் படிப்பதற்கு முன்னர் ராமஜெயம் எழுதி சங்கர மடத்தில் காண்பித்து வெள்ளிக் காசு பெற்றுவருவேன். கிருபானந்த வாரியார் போன்றோர் நடத்தும் மதச் சொற்பொழிவுக்குச் செல்வேன். ஒருமுறை கிருபானந்த வாரியார் ஆட்டையும் நம்பலாம் மாட்டையும் நம்பலாம் என்று கூறி சிறிது இடைவெளிவிட்டார். நான் உடனே ஆட்டை நம்பலாம் மாட்டை நம்பலாம் ஆனால் சேலை கட்டிய மாந்தரை நம்பக் கூடாது என்றேன். உடனேயே அவர் எனது காதைச் செல்லமாகத் திருகிச் சில புத்தகங்களைப் படிக்கத் தந்தார். இப்படியான சூழலில் பெரியார் புத்தகங்கள் மத சம்பந்தமான விஷயங்களில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. அந்தச் சந்தேகங்களை யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் வகுப்பில் மாணவர்களிடம் கூறிவிடுவேன். அவர்கள் வாத்தியார்களிடம் அவற்றைத் தெரிவிப்பார்கள். எனவே ஆசிரியர்களுக்கு என்மீது சிறிது பயம் ஏற்பட்டது.

இவையெல்லாம் எந்த ஆண்டு நிகழ்ந்த சம்பவங்கள்?

நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது அதாவது 1966வாக்கில் நடைபெற்றவை. இதே மனநிலையில் நான் உயர்நிலைப்பள்ளிக்குப் படிக்கச் சென்றேன். அங்கும் ஆசிரியர்களுக்கு என்மீது கோபம் ஏற்பட்டது. உடன் படிக்கும் மாணவர்களின் மனதைக் கலைத்துவிடுகிறேன் என என்மீது புகார் தெரிவித்தனர். ராமர் வீரர் என்றால் ஏன் வாலியை மறைந்திருந்து கொன்றார் என்பது போன்ற ஏடாகூடக் கேள்விகளைக் கேட்பேன். அப்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குபெற்றேன். அந்தச் சமயத்தில் திமுக தலைவர்களின் பேச்சுகள் எழுத்துகள் எல்லாம் கவர்ச்சிகரமாகத் தெரிந்தன. எனவே அவர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் கலந்துகொள்வேன். இதைத் தொடர்ந்து 67 தேர்தலில் திமுக பூத் ஏஜண்டாக இருந்தேன். எழுதப் படிக்கத் தெரிந்ததால் என்னைப் பயன்படுத்திக்கொண்டனர். திக, திமுக போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருந்த அந்தத் தருணத்தில் எனது தந்தையார் மறைந்துவிட்டார். நாங்கள் சகோதரர்கள் மூவர் மட்டும்தான். யாருக்கும் சம்பாத்தியம் கிடையாது. அது ஒரு இக்கட்டான சூழ்நிலை.

எப்படிச் சமாளித்தீர்கள் இந்தச் சூழ்நிலையை?

அப்போது அமெரிக்காவில் இருந்த எனது சகோதரர், தான் பெறும் கல்வி உதவித்தொகையில் 100 டாலரை எங்களுக்காக அனுப்புவார். அதை வைத்துதான் நாங்கள் வாழ்க்கை நடத்தினோம். இதனிடையே எனக்கு நேர் மூத்த சகோதரர் கான்பூர் ஐஐடிக்குப் படிக்கச் சென்றார். படிப்பதற்கு அவருக்குக் கல்வி உதவித்தொகை கிடைத்தது. வீட்டில் நானும் எனது தம்பியும் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருவரும் தனியே வசிக்க முடியாத நிலை இருந்ததால் எனது தம்பியை மாயவரத்தில் உள்ள அக்கா பொறுப்பில் விடுதியில் சேர்த்தோம். நானும் விடுதிக்குச் சென்றுவிட்டேன். மவுண்ட் ரோடு அரசினர் கலைக்கல்லூரியில் பட்டப் படிப்புகாகச் சேர்ந்தேன்.

கன்னிமாரா ஓட்டலுக்கு எதிரில் இப்போது காயிதேமில்லத் கல்லூரி இருக்கிறதே அங்குதான் முதலில் கலைக் கல்லூரி இருந்தது. அந்த வளாகத்தில்தான் ‘ரத்தத் திலகம்’ படத்தில் வரும் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடல் படமாக்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் மாணவர்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. நகரத்தில் மாணவர்கள் மத்தியில் காங்கிரஸுக்கு அதிக ஆதரவு இருந்தது. கிராமத்தில்தான் மாணவர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு இருந்தது. அப்போதும் ஓர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கருணாநிதி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அவர்தான் போராட்டம் எல்லாம் வேண்டாம், அரசுக்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்று எங்களைத் தடுத்தார். அங்குப் பல போராட்டங்கள் நடந்ததால்தான் கல்லூரியை நந்தனத்திற்கு மாற்றினார்கள். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நந்தனத்தில் புதுக் கட்டடம் கட்டி கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறுதல் செய்தனர்.

1968ஐ ஒட்டிய காலகட்டத்தில் உலகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் அமைதியின்மையும் போராட்ட உணர்வும் இருந்தன. அதைப் போலவே இங்கும் இருந்தது. ஆனால் இதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது போன்ற கருத்து ரீதியான வலுவான காரணம் எதுவும் இல்லை. பெரிய குறிக்கோள்களுக்காக அல்லாமல் சின்னச் சின்ன விஷயங்களுக்காக எல்லாம் போராட்டங்கள் நடைபெற்றன. தட்டிக்கேட்க பெரியவர்கள் என யாரும் இல்லாததால் நான் பல போராட்டங்களில் பங்குகொண்டேன்.

இந்தச் சமயத்தில் ப. சிதம்பரம், என். ராம், மைதிலி சிவராமன் போன்றோர் ‘சாட்டர் டே ஈவினிங் கிளப்’ என்ற ஒன்றையும் ‘ராடிக்கல் ரிவியூ’ என்னும் காலாண்டு இதழையும் நடத்தினார்கள். அதில் மாணவர்களின் அமைதியின்மை குறித்து ‘இன்னசண்ட் ஆஃப் ஐடியாலஜி’ என்னும் ஒரு கட்டுரையை ப. சிதம்பரம் எழுதினார். அந்தக் கட்டுரைக்காக மாணவர் தலைவர்களிடம் நேர்காணல் நடத்தினார். நான் அதிகாரப்பூர்வ மாணவர் தலைவர் இல்லை என்றபோதிலும் என்னிடமும் நேர்காணல் நடந்தது. மாணவர்களுக்கு அரசியல், கருத்தியல் ரீதியில் அறியாமை உள்ளது என்னும் ரீதியில் அமைந்திருந்த அந்தக் கட்டுரை மாணவர்கள் மத்தியில் கண்டனத்தையே பெற்றது. எனவே மாணவர்களை ஒன்றுதிரட்டுவதற்காக ஸ்டூடண்ட்ஸ் சோஷியல் ஃபோரம் என்னும் அமைப்பை உருவாக்கினோம். இவர்கள் மூவரும் வழிநடத்தினார்கள்.

பின்னர் லயோலா கல்லூரியில் சேர்ந்த பிறகும் இந்த அமைப்பு மூலம் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தினோம். இவர்கள் மூலம் தொழிற்சங்க தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்போது கல்லூரியில் நடந்த பலப் பிரச்சினைகளை நாங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தோம். இந்து பத்திரிகையில் ராம் உதவி ஆசிரியராக இருந்தார். அவர் இந்து நாளிதழில் ஒதுக்கிய கல்லூரிப் பக்கத்தில் நான் எழுதினேன். அப்போது கல்லூரி விடுதி குறித்து எழுதியதால் என்னைக் கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டனர். எனவே நாங்கள் அரசியல் கட்சியில் சேரலாம் என முடிவுசெய்து, சிபிஎம் ஐ அணுகினோம். அவர்கள் நேரடியாகக் கட்சியில் சேர முடியாது எனத் தெரிவித்து மாணவர்கள் அமைப்பில் சேரச் சொன்னார்கள். நாங்கள் சிபிஎம் இன் தமிழக மாணவர் அமைப்பில் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினோம். பின்னர் சிபிஎம் கட்சியிலும் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள்.

இதனிடையே என். ராம் மூலம் தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு படித்தபோது எம் ஆர் எஃப் தொழிலாளர்கள் போராட்டம் நடந்தது. 100 நாட்களுக்குப் பின்னர் எம் ஆர் எஃப் போராட்டத்திற்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து ஊர்வலம் நடத்தியதற்காக என்னைக் கைதுசெய்து 15 நாள்கள் சிறையில் அடைத்துவிட்டனர். உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். யாரும் என்னைப் பார்க்க வரவில்லை. கல்லூரிக்குப் பல தலைவர்களை அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தினோம். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகத்திற்கும் என்மீது அதிருப்தி ஏற்பட்டது. எனவே டிகிரி முடித்த பின்னர் மேற்கொண்டு எதுவும் படிக்க வேண்டாம் என முடிவுசெய்துவிட்டேன். முழு நேரமாகக் கட்சி அலுவலகத்தில் வேலை செய்தேன். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் இல்லை என்பதால் ஊதியம் கிடைக்காது. தொழிலாளர்கள், மாணவர்கள் அனைவரின் பிரச்சினையிலும் தலையிட்டு உதவுவேன். யாரோ சாப்பாடு போடுவார்கள். எப்படியோ வாழ்க்கை கழியும். ஆனால் அந்தக் காலம்தான் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவியது. மக்களோடு மக்களாகப் பழகியபோது வாழ்க்கையை, மக்களை, சமூகத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அக்காலகட்டத்தில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களை நினைவுகூருங்கள் . . .

இந்தச் சமயத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கருணாநிதிக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை மாணவர் அமைப்பினர் ஒருங்கிணைத்திருந்தனர். ஆனால் போலீசார் உதவியுடன் இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டுவிட்டது. இந்தப் பட்டமளிப்பு விழாவுக்குப் பெற்றோருக்கும் அனுமதி உண்டு. எனவே அவர்களும் வந்திருந்தனர். பெற்றோருக்கென வைக்கப்பட்டிருந்த உணவைப் போலீசார் உண்டதால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் பல்வேறு இடங்களுக்கும் கலைந்து ஓடினர். இதில் நெல்லிக்குப்பம் பெருமாள்சாமி என்னும் ஆசிரியரின் மகனான உதயகுமார் என்ற மாணவரின் சடலம் ஏரியில் மிதந்தது. போலீஸ் தடியடி மூலம் அவர் கொல்லப்பட்ட செய்தி நாளிதழ் ஒன்றின் மூலம் தெரியவந்தது. எனவே உண்மை அறியும் குழுவை ஏற்படுத்தி நீதி விசாரணை கோரினோம். கருப்புக் கொடி காட்டும் போராட்டம் என்னும் பெயரில் தன்னைக் கொல்ல மாணவர்கள் சதித் திட்டம் தீட்டியதாகவும் இறந்தது உதயகுமார் இல்லை என்றும் சட்ட மன்றத்தில் கூறி இந்தப் பிரச்சினையைத் திசை திருப்ப முயன்றார் கருணாநிதி. ஆனால் மாணவர் அமைப்புகள் இதை விடவில்லை. எனவே வேறுவழியின்றி என்.எஸ். ராமசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. கடலூரில் விசாரணை நடைபெற்றது. எனக்குக் கடலூரில் எந்த லாட்ஜிலும் இடம்தரக் கூடாது என அரசு எச்சரித்திருந்ததால் நான் பாண்டிச்சேரியிலிருந்து வந்து சென்றேன். திமுக விலிருந்து யாரும் சாட்சியாக வரவில்லை, நாங்கள் 21 பேரை சாட்சியாக விசாரித்தோம். எங்களுக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை என நாங்கள் கேட்டுக்கொண்டதால் இறுதி விசாரணைக்கு சிதம்பரம் வந்தார். 3 மணி நேரம் சிறப்பாக வாதாடினார். தனது தீர்ப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தடியடி நடத்தப்பட்டது என்று தெரிவித்த நீதிபதி இறந்தது உதயகுமார்தான் என்று குறிப்பிட்டுவிட்டார். அதுவரை இறந்தது உதயகுமாரே இல்லை என்று கருணாநிதி கூறிவந்தார். ஆனால் இந்தத் தீர்ப்பின் மூலம் இறந்தது உதயகுமார்தான் என்பது உறுதியாகிவிட்டது.

நீதிபதி என்.எஸ். ராமசாமி என்னைச் சட்டம் படிக்கச் சொன்னதாக அவரது கிளர்க் என்னிடம் கூறினார். அவர் என்னிடம் பேசமாட்டார். ஏனெனில் அவர் விசாரணைக் கமிஷனுக்கு நீதிபதியாக இருப்பது சரியல்ல என நான் வாதிட்டேன். ஏனெனில் அப்போது அவர் கூடுதல் நீதிபதியாக இருந்தார். அவர் பதவி நிரந்தரம் பெற அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டது. இந்தச் சூழலில் விசாரணைக் கமிஷனை எப்படி நியாயமாக நடத்துவார் என்ற சந்தேகத்தில் நான் அவரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகக் கோரினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற பல போராட்டங்களில் நான் பங்குபெற்றதால் அரசுக்கு என்மீது கோபம் ஏற்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கலவரத்திற்கு தீவிரவாத மாணவர்களின் சதியே காரணம் எனக் கூறி அரசு என்மீது எஃப்ஐஆர் பதிவுசெய்தது.

இந்தச் சூழலில் தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களில் மட்டுமே ஈடுபட்டுக்கொண்டிருந்தால் என் வாழ்க்கை பாழாகிவிடும் என எனது நலம் விரும்பிகள் நினைத்தனர். அமெரிக்காவிலிருந்த எனது சகோதரரும் என்னை மேற்கொண்டு படிக்கச்சொல்லி வற்புறுத்தினார். எனவே நானும் அரசியல் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடச் சட்டம் படித்தால் உதவியாக இருக்கும் என நம்பினேன். எனவேதான் சட்டக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.

சட்டக் கல்லூரியில் எனக்கும் அதிமுகவைச் சேர்ந்த அழகு திருநாவுக்கரசுக்கும் விடுதியில் இடம்தர மறுத்துவிட்டார்கள். நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம். மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பின்னர் விடுதியில் இடம் ஒதுக்கினர். சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, 1975இல் நெருக்கடி நிலைக் காலங்களில்தான் அரசியல் அமைப்பு, அரசியல் சட்டம், ஜனநாயகப் பாதுகாப்பு, மனித உரிமை பாதுகாப்பு பற்றியெல்லாம் முழுமையான புரிதல் ஏற்பட்டது. எனவே தொழிலாளர்களுக்கு உதவ விரும்பினேன். இந்தச் சூழலில் ராவ் அண்ட் ரெட்டி நடத்திய சட்ட அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினேன். பின்னர் சட்டம் படித்து முடித்தவுடன் அங்கு சேர்ந்து பணியாற்றினேன். 1976இல் நெருக்கடி நிலையைக் கண்டித்து முதன்முறையாக 200 வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து ஊர்வலம் நடத்தினோம்.

மிசா சமயத்தில் சிறையில் நடந்த கொடுமைகளை விசாரிக்கக் கமிஷன் அமைக்கக் கோரி ஆளுநரிடம் மனு கொடுத்தோம். இதற்காக அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷனில் சிபிஎம் சார்பாக நான் ஆஜரானேன். இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எனக்குச் சிறப்புக் கவனம் கிடைத்தது. இஸ்மாயிலுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் வழக்கறிஞராக தொடர்ந்து வீரியத்துடன் செயல்பட்டேன். பின்னர் 1983இல் தனியாக அலுவலகம் தொடங்கி நடத்தினேன். 1983இலிருந்து 88வரை பார் கவுன்சில் உறுப்பினராக இருந்தேன். அப்போது பல போராட்டங்களை உயர் நீதிமன்றத்தில் நடத்தியுள்ளேன். நீதிமன்றப் புறக்கணிப்பு என்பதையே நாங்கள்தான் தொடங்கினோம். 1983இலிருந்து 88வரையான காலகட்டத்தில் இலங்கைப் பிரச்சினை உச்சக்கட்டத்தில் இருந்தது. சிபிஎம்க்கு இவ்விஷயத்தில் தெளிவான பார்வை இல்லை என நினைத்தேன். 84இல் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். கட்சி இது குறித்து என்னிடம் கேள்விகேட்டது. 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டம் போட்டேன். இது கட்சிக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுத்தனர். கட்சி விரோத நடவடிக்கை எனத் தெரிவித்து வெளியேற்றினர்.

சிபிஎம்ஐ விட்டு வெளியேற்றிய பின்னர் பல அரசியல் கட்சிகள் என்னிடம் வழக்குகளைக் கொண்டுவந்தன. நானும் அவர்களுக்காக வாதாடினேன். கல்கி பத்திரிகைக்காக பாரதி என்னை நேர்காணல் செய்ய வந்தார். அந்தத் தொடர்பில் 1990இல் அவரை மணந்து கொண்டேன். 1995இல் எனது மகள் பிறந்தார். அந்தச் சமயத்தில் எனது பணியும் அதிகரித்தது. மேலும் எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. எனவே மூத்த வழக்கறிஞரானேன். 2005வரை மூத்த வழக்கறிஞராக இருந்தேன். 2001இலிருந்து 2005வரை தமிழகத்தில் நடந்த அனைத்துப் பொடா வழக்குகளிலும் ஆஜரானேன்.

2001இல் என்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. 2004இல் என் பெயர் பரிந்துரைக்கப்பட்டும் பயனில்லை. 2006இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியானேன்.

நெருக்கடி நிலைக்குப் பிறகு தமிழகத்தில் மனித உரிமை அமைப்புகள் வலுவடைந்தன. இந்த அமைப்புகளில் உங்களது பங்களிப்புகள் என்ன?

நான் பியூசிஎல்லில் நேரடி உறுப்பினரல்ல. ஆனால் அவர்களது அனைத்து வழக்குகளையும் நடத்தியுள்ளேன்.

அந்தச் சமயத்தில் நீங்கள் நடத்திய முக்கிய வழக்குகள் எவை?

1984இல் நடைபாதை வாசிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் அவர்களை வெளியேற்றக் கூடாது எனக் குறிப்பிட்டது. அதன் பின்னர்தான் சென்னையில் கண்ணகி நகர் போன்ற பகுதிகள் உருவாயின contd............

நேர்காணல்: தேவிபாரதி, செல்லப்பா, மண்குதிரை
தொகுப்பு: செல்லப்பா