முதல் பக்கம்

Nov 30, 2015

தேனி மாவட்ட குழந்தைகள் தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு

23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.27-29) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.. அதில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இளநிலை, முதுநிலை இரு பிரிவுகளில் தமிழகம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. 

அதில் நம்முடைய தேனி மாவட்டத்திலிருந்து பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் கணிதமேதை சகுந்தலாதேவி துளிர் இல்ல மாணவி எ.பி.ஆர்த்திகா தலைமையிலான குழுவினரின் “நலிந்துவரும் தென்னை விவசாயத்தில் காலநிலையின் தாக்கம்” என்ற ஆய்வும் ஒன்று.. இக்குழந்தைகளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் அனைவரின் பாசத்திற்குரிய விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் வருகின்ற 27-31 தேதிகளில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெறக்கூடிய தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று தங்களது ஆய்வறிக்கையினைச் சமர்ப்பிக்க உள்ளனர்.. நம்முடைய நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது பிரதமர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்குவர்..



தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொள்ளக்குடிய குழந்தை விஞ்ஞானிகளையும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் எஸ்.ஞானசுந்தரி மற்றும் எம்.கே.மணிமேகலை ஆகியோரையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டச் செயலாளர் வி.வெங்கட் ஆகியோரின் சார்பில் வாழ்த்துகிறோம்..

Nov 15, 2015

23ஆவது குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகியவற்றுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தக்கூடிய 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நவ.15 அன்று போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் தலைமை வகித்தார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட் வரவேற்றார். அறிவியல் இயக்கத்தின் போடி ஒன்றியக் கிளைத் தலைவர் எஸ்.குமரேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவாஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.அம்மையப்பன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆண்டிபட்டி, கம்பம், போடி, பெரியகுளம், கடமலைக்குண்டு, தேனி என மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டு பள்ளி, துளிர் இல்லக்குழந்தைகள் தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். பேரா.சி.கோபி, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் எஸ்.சேசுராஜ் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் இல.நாராயணசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.முத்துலட்சுமி, மா.வீரையா, போடி சி.பி.ஏ.கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் பேரா.ஆர்.பாண்டி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கலந்துகொண்டு ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்த அனைத்துக் குழந்தைகளுக்கும், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநிலச் செயலாளர் தே.சுந்தர் நிறைவுரையாற்றினார். போடி கிளைச் செயலாளர் ப.ஸ்ரீதர் நன்றி கூறினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மு.தெய்வேந்திரன், எம்.கே.மணிமேகலை, கொ.ஜெகதீசன், ஜி.பாண்டி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகள்:

தமிழ் முதுநிலை பிரிவில் லோயர்கேம்ப் சுப்ரமணிய சந்திரசேகர் துளிர் இல்ல மாணவர் பொ.தினேஷ்குமார் தலைமையிலான குழுவினரின் “மானாவாரி விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகளும் பருவநிலை மாற்றமும்” என்ற ஆய்வும் தேனி இலட்சுமிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் எம்.கோகுலக் கண்ணன் தலைமையிலான குழுவினரின் “டெங்கு காய்ச்சல்” பற்றிய ஆய்வும் தும்மக்குண்டு அரசு உயநிலைப்பள்ளி மாணவி கா.ரோகரஞ்சனி தலைமையிலான குழுவினரின் “ காலநிலை மாற்றமும் மூலவைகை ஆற்றின் போக்கும்” என்ற ஆய்வும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.

தமிழ் இளநிலை பிரிவில் பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப்பள்ளி மாணவர் எஸ்.முகமது வாஹித் தலைமையிலான குழு மேற்கொண்ட “இன்றைய விவசாயத்தில் நீர்ப்பாசனமுறையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்” என்ற ஆய்வும் டி.வாடிப்பட்டி சகுந்தலாதேவி துளிர் இல்ல மாணவி எ.பி.ஆர்த்திகா தலைமையிலான குழுவினரின் “நலிந்துவரும் தென்னை விவசாயத்தில் காலநிலையின் தாக்கம்” என்ற ஆய்வும் போடி ஒன்றியம் முந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் க.அசோக் தலைமையிலான குழுவினரும் மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.


தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக்குழுவினர் நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 27,28,29 தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பிக்க உள்ளனர்.. மாநிலம் முழுவதுமிருந்து கலந்துகொள்ளும் சுமார் 250 ஆய்வுகளில் சிறந்த 30 ஆய்வுகள் டிசம்பர் 27-31 தேதிகளில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெறும் தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு செய்யப்படுவர். தேசிய அளவில் கலந்துகொள்ளும் ஆய்வுக்குழு மாணவர்களுக்கு குழந்தை விஞ்ஞானி விருது வழங்கப்படும்..