தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11ஆவது மாவட்ட மாநாடு ஜூலை 23- ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தேனி மாயா கூட்ட அரங்கில் மாவட்டத் துணைத்தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ஆர்.அம்மையப்பன், சேசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் இல.நாராயணசாமி மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன் செயல்பாட்டறிக்கையினையும் மாவட்டப் பொருளாளர் ஞானசுந்தரி வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பித்துப் பேசினர். அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்வு :
அறிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக மா.மகேஷ், மாவட்டச் செயலாளராக ஈ.ஜெகநாதன் மாவட்டப் பொருளாளராக எம்.கே.மணிமேகலை ஆகியோரும் துணைத்தலைவர்களாக பேரா.ஜி.செல்வராஜ், பேரா.சி.கோபி, ஜான்சன், ஜி.பாண்டி, செ.சிவாஜி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக எஸ்.சேசுராஜ், எஸ்.ஞானசுந்தரி, ஆர்.அம்மையப்பன், வி.வெங்கட் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மூட்டா அமைப்பின் துணைத்தலைவர் பேரா.ஆர்.பாண்டி வாழ்த்திப் பேசினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சங்கரநாராயணன் தண்ணீர் நமது உரிமை என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மாநாட்டு நிறைவுரையாற்றினார். தேனி கிளைச் செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மேலும் மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை மீறியும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசனஅமர்வு தீர்ப்பான மருத்துவக் கல்வி பொதுப் பட்டியலில் வருகிறது. எனவே இது தொடர்பான விசயங்களில் மத்திய மாநில அரசுகள் ஒத்திசைந்து முடிவெடுத்து செயல்படவேண்டும் என்று தீர்ப்பை மீறியும் அரசியல் சாசனத்தின் பிரிவு 14 மற்றும் பிரிவு 21 ஐ மீறியும் நீட் தேர்வு விலக்குக்கான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு மத்தியஅரசு குடியரசு தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தர மறுக்கிறது. இந்த அராஜக போக்கைக் கைவிட்டு உடனடியாக, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவ சேர்க்கைக்குகாத்திருக்கும் மாணவர்கள் கஷ்டத்தை போக்கவும் மாநில உரிமைகளை நிலைநாட்டவும் உடனடியாக காத்திருப்பில் உள்ள தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இணைந்துஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று தர வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு மத்தியஅரசைக் கேட்டுக் கொள்கிறது...
தீர்மானம்...2:
தமிழக அரசு பள்ளிக்கல்வியில் மேற்கொண்டு வருகின்ற ஆரோக்கியமான முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மனதார பாராட்டுகின்றது..வரவேற்கிறது.. அதே நேரத்தில் பொது பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும் அனைத்து அதிகாரங்களையும்மையப்படுத்துகின்ற வகையிலும் மத்திய அரசு மேற்கொண்டு வருகின்ற அனைத்து முயற்சிகளையும் வலுவான முறையில் எதிர்க்க வேண்டும் எனவும் கல்வியில் மாநிலஉரிமைகளை நிலைநாட்ட வேண்டும் எனவும் தமிழக அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு கேட்டுக் கொள்கிறது...
தீர்மானம்..3
தமிழக அரசு பள்ளிக்கல்வியில் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் பெரும்பாலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களை மையப்படுத்தியதாகவேஇருக்கின்றது.. ஒட்டுமொத்த மாணவர்களில் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகள், குழந்தைகள் இருப்பது தொடக்கக் கல்வியில் தான்.. தொடக்கக் கல்வியில் நடைமுறையில் உள்ள செயல்வழிக்கற்றல மற்றும் தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு முறைகளை சரியாகநடைமுறைப்படுத்த போதிய கவனம் செலுத்தப்படாத நிலைமை தொடர்கிறது.. குழந்தைகளின் தொடக்கக் கல்வி சிறப்பாக அமைவதை பொறுத்துதான் அவர்களின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக் கல்வி அமையும்.. எனவே தமிழககுழந்தைகளின் தொடக்கக் கல்வி மேம்பட கல்வியாளர்களை ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு கேட்டுக் கொள்கிறது...