ஜூன்,21.2020 அன்று காலை 10.15 முதல் பிற்பகல் 1.20 மணி வரை என மூன்று மணி நேரம் பகுதி சூரியகிரகணம் தெரிந்தது. அதிகபட்சமாக 11.45 மணி அளவில் 25% வரை சூரியன் நிலவினால் மறைக்கப்பட்டது. மேகமூட்டமாக இருந்தாலும் சில நேரங்களில் மட்டுமே முழுவதும் சூரியன் தெரியாத நிலை இருந்தது. கிரகணத்தின் பெரும்பாலான நேரம் காணக்கூடியதாகவே இருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த டிச.26ல் தெரிந்த வளையசூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அளவில் பள்ளி, கல்லூரிகளிலும் பொது இடங்களிலும் கிரகணம் தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 2000 சூரிய வடிகட்டிக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அதே கண்ணாடிகளைக் கொண்டு பகுதி சூரிய கிரகணத்தை 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சூரிய வடிகட்டிக் கண்ணாடி கொண்டு பாதுகாப்பாக கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர். தேனி மாவட்டத்தில் அடுத்த பகுதி சூரிய கிரகணம் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி தான் பார்க்கமுடியும்..
கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கிரகணம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். பந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளியை சுவரில் விழச்செய்தும் அரிகரண்டி மூலம் ஏற்படும் நிழலைக் கொண்டும் விளக்கம் அளிக்கப்பட்டது. கிரகணத்திற்கும் கொரானா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரகணத்தின் பொழுது எந்தவிதமான சிறப்புக் கதிர்களும் வெளிவருவதில்லை. உணவுகள் கெட்டுப்போகாது. கிரகணத்தின் போது தாராளமாக உணவு உண்ணலாம். கிரகணம் என்பது சூரியன், நிலவு, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் மறைப்பு விளையாட்டு போன்றதே ஆகும். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளிக்கப்பட்டது. பொதுமக்கள் சூரியக் கண்ணாடி கொண்டு கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
தேனி முல்லை நகர், இரத்தினம் நகர், ஆண்டிபட்டி, கோட்டூர்,
சீலையம்பட்டி, தேவாரம், போடி மற்றும்
கம்பம் நகரில் பல இடங்களில் சூரியக்கண்ணாடியை வைத்து அறிவியல் இயக்கப்
பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன்,
ஜெகநாதன், கமல், சதீஷ்,
முத்துப்பாண்டி, ஸ்ரீராமன், சிவக்குமார், தாழைக்குமரன், ராம்குமார்,
ஜெகதீசன் உள்ளிட்டோர் ஆங்காங்கே வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம்
சூரியக்கண்ணாடி மூலம் பார்க்கச் செய்து விளக்கமளித்தனர்