திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் பிறந்த விஞ்ஞானி சி.வி.ராமன் 1928ஆம் ஆண்டு பிப்.28 ஆம் தேதி தனது ஒளிச் சிதறல் குறித்த ஆய்வை அறிவித்த நாள் ஆகும். அந்த ஆய்விற்காக 1930ல் முதல் முதலாக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர், ஆசிய விஞ்ஞானி சி.வி.ராமன் ஆவார். அவருடைய கண்டுபிடிப்பையும் அவருடைய அறிவியல் சார்ந்த முயற்சிகளையும் போற்றும் விதமாக 1986 ஆம் ஆண்டு முதல் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் மனப்பான்மையையும் குழந்தைகளிடையே, பொதுமக்களிடையே கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஞ்ஞானி சி.வி.ராமன் முகமூடியும் அவரைப் பற்றிய சிறு நூலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டன.
பள்ளிகளில் குழந்தைகள் விஞ்ஞானி ராமன் அவர்களின் முகமூடி அணிந்து மகிழ்ந்தனர். தேனியில் அரண்மனைப்புதூர், அன்னஞ்சி, ஆண்டிபட்டியில் வரதராஜபுரம், பெருமாள் கோவில் பட்டி, போடிநாயக்கனூர், கடமலைக்குண்டு ஒன்றியத்தில் சிறப்பாறை, தும்மக்குண்டு, காமராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் கம்பம் ஒன்றியத்தில் கூடலூர், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் பெரியகுளம் பகுதியில் டி.வாடிப்பட்டி, சில்வார்பட்டி மற்றும் சின்னமனூர் ஒன்றியம் சீலையம்பட்டி, உத்தமபாளையம் ஒன்றியத்தில் தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஊர்வலம், கண்காட்சிகள், கருத்துரைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.
சுருளிப்பட்டியில் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியின் சார்பில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின ஊர்வலத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் பறையிசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், இணைச் செயலாளர்கள் வெங்கட்ராமன், ஞானசுந்தரி, ஜெயந்தி, பொருளாளர் மணிமேகலை, மாவட்டத் தலைவர் மகேஷ், சதீஷ், தாழைக்குமரன், பாண்டி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர்.