வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக குழந்தைகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு, கல்வி குறித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்தி வரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் விதமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில அளவிலான வாசிப்பு முகாம்களை நடத்தி வருகிறது.கல்வி குறித்து ஏராளமான நூல்களை வாசிக்கவும் விவாதிக்கவும் கல்வியாளர்களோடு கலந்துரையாடவுமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக மாற்றுக்கல்விக்கான வாசிப்பு முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
10வது வாசிப்பு முகாம்: நமது தேனி மாவட்டம், கூடலூர் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் மாற்றுக்கல்விக்கான பத்தாவது வாசிப்பு முகாம் கடந்த மே,3,4,5 ( சனி, ஞாயிறு, திங்கள்) தேதிகளில் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை துவங்கிய இந்த முகாமிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் தே.சுந்தர் தலைமை வகித்தார். தேனி மாவட்டச்செயலாளர் வி.வெங்கட்ராமன் வரவேற்றுப் பேசினார். அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் பேரா.என்.மணி துவக்கிவைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் எல்.நீலா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெ.பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது நாள் 1955ல் கன்னடத்தில் சிரஸ்மரணா என்ற பெயரில் வெளிவந்து இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நிரஞ்சனாவின் நினைவுகள் அழிவதில்லை என்ற புத்தகம் ஆசிரியர்களால் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. கல்வியாளர் பேரா.ச.மாடசாமி ஆசிரியர்களின் வாசிப்பு அனுபவப்பகிர்வுகளைத் தொடர்ந்து தொகுப்புரை வழங்கினார்.
அதனையடுத்து 2012 ஜூன்,30-ஜூலை 1 தேதிகளில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு மற்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு இணைந்து நடத்திய பொதுப்பள்ளி முறையைக் கட்டமைப்பதற்கான அகில இந்திய மாநாட்டில் முன்மொழியப்பட்ட சென்னை அறிக்கை வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் செயலாளர் பேரா.பெ.விஜயகுமார் சென்னை அறிக்கை குறித்த அறிமுக உரையாற்றினார். அறிமுக உரையை அடுத்து ஆசிரியர்கள் குழுவாக அமர்ந்து அறிக்கையை வாசித்து விவாதித்தனர்.
மூன்றாவது நாள் சென்னை அறிக்கை குறித்த விவாதக் கருத்துகளை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர். பொதுப்ப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு விவாதக் கருத்துகளின் மீதான தொகுப்புரை வழங்கினார். இறுதியாக மூட்டா அமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பேரா.ஆர்.மனோகரன் நிறைவுரையாற்றினார். தேனி மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் கூடலூர் நகரத்தலைவர் மோகன், நகரச்செயலாளர் சூர்யபிரகாஷ், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஜி.பாண்டி மற்றும் துளிர் இல்ல மாணவர்கள் ஒருங்கிணைப்பில் உதவினர்..
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், புதுச்சேரி, ஈரோடு, கரூர், நாகைப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, நாமக்கல் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 120 ஆசிரிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment