தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (செப்.1) மாநிலம் முழுவதும் சுமார் 60,000 குழந்தைகள் வரையிலும் பங்கேற்ற துளிர் அறிவியல் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இளநிலை, உயர்நிலை மற்றும் முதுநிலை ஆகிய மூன்று நிலைகளில் குழந்தைகளின் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்த அறிதலைச் சோதிக்கும் விதமான கேள்விகள் இடம்பெற்றன. தேனி மாவட்டத்தில் 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1000 குழந்தைகள் 11 மையங்களில் தேர்வு எழுதினர். நமது கம்பம் பகுதியில் சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று முற்பகல் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயரூபி, அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டத் துணைத்தலைவர் பாண்டியன், செயலாளர் சுரேஷ்கண்ணன் மற்றும் அறிவியல் ஆசிரியர் செந்தில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
முதல் பக்கம்
Sep 1, 2018
Aug 20, 2018
அறிவியல் இயக்கம் சார்பில் கேரள வெள்ள நிவாரணப் பொருட்கள்
கடந்த ஓரிரு வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலம் வரலாறு காணாத வகையில் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் அடைந்துள்ளது. உடைமைகளை உறவுகளை இழந்து தவிக்கும் அம்மக்களுக்கு உதவிகள் செய்திடும் வகையில் தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அரிசி மூட்டைகள், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கான மளிகைப் பொருட்கள், பெண்கள், குழந்தைகளுக்கான நாப்கின்கள், குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள், சீனி, சில்வர், அலுமினியப் பாத்திரங்கள், அனைத்து வயதினருக்குமான புதிய ஆடைகள், போர்வைகள், பாய்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட சுமார் 1.5 இலட்சம் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருட்கள் பெறப்பட்டு இன்று பிற்பகல் கேரள மாநிலம் பாலக்காடு, வயநாடு பகுதிகளுக்கு தனி வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர், மாவட்டச் செயலாளர் மு.தெய்வேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹ.ஸ்ரீராமன், கிளைச் செயலாளர்கள் ஸ்ரீதர், சுரேஷ்கண்ணன், ஞானசுந்தரி, ராம்குமார், பி.எஸ்.என்.எல். சங்க பொறுப்பாளர்கள் சிரில், சீனிவாசன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
May 6, 2018
இந்திய நாத்திகம்: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா..
இந்திய தேசம் ஒரு ஆன்மீக தேசம்.. இந்திய தத்துவ மரபே ஆன்மீக மரபு தான்.. அதற்கு எதிராகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்திய மரபார்ந்த பாரம்பரிய, பண்பாட்டு, தத்துவ விரோதிகள் என்பது போல தான் சித்தரிக்கப்படுகிறது..
ஆனால் உண்மை அதுவல்ல. இந்திய தத்துவ மரபு நாத்திக மரபே என்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும் சிறப்பான ஆய்வுநூல் “இந்திய நாத்திகம்”.. புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களால் எழுதப்பட்டது. திரு.சாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதிபுத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.. இது தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் நூற்றாண்டுக் காலம்.. இவர் புகழ்பெற்ற தத்துவாசான்கள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா ஆகியோரிடம் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாணவராகப் பயின்றவர்.. அதேபோல டி.டி.கோசாம்பி, ரொமிலாதாபர் போன்ற அறிஞர்கள் வரிசையில் வைத்தெண்ணத்தக்க சிறப்புடையவர்.
மத்தியில் ஒரு மதவாத அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில் இவருடைய நூல்கள் அவசியம் வாசிக்கவும் பரவலாக கொண்டுசெல்லப்படவும் வேண்டியவை..
சோசலிசத்திற்கான இந்திய முயற்சி என்பது இந்திய தத்துவ மரபுக்கான போராட்டத்துடன் தொடர்புடையது என்கிற புரிதலே இந்நூலின் அடிப்படை என்று துவங்குகிறார் நூலாசிரியர்.
மார்க்சியம் ஒரு மிகக் கடுமையான நாத்திகவாதம் ஆதலால் அது இறைவன் ஒருவனில் மட்டுமே இப்பேரண்டத்தின் இருத்தலைக் காண்கிற நமது தேசிய மரபினை அழித்தொழித்துவிடும் என்கிற கூற்றுதான் மார்க்சியத்துக்கு எதிரான பிரச்சாரங்களிலேயே மிகவும் ஓங்கி ஒலிப்பது.. அவர்களைப் பார்த்து ஒரேயொரு எளிய கேள்வியை முன்வைக்கிறார் நூலாசிரியர்.” நீங்கள் எப்போதாவது நமது இந்திய தத்துவ ஞானிகளின் எழுத்தை கருத்திலிருத்த முயன்றதுண்டா...? அல்லது மார்க்சியத்தின் மீதான உங்களது குற்றச்சாட்டை நிரூபிக்க அவையனைத்தையும் அழித்தொழித்துவிடப் போகிறீர்களா?” என்கிறார்...
”இந்திய நாத்திகம் பற்றிய போதிய தெளிவில்லையேல் இந்திய ஞானம் பற்றிய நமது அறிவு முழுமை பெற்றதாகாது.. இதற்கான காரணம் எளிதானது.. இந்திய ஞான மரபின் புகழ்வாய்ந்த பிரதிநிதிகளிடையே ஏதேனும் ஒரு விசயத்தில் பரந்த அளவில் உடன்பாடு இருந்ததெனில் அது நாத்திகம் பற்றிய கருத்தில் தான்.. கடவுள் என்பது வெறும் கற்பனையே- மாயையே எனத் தருக்கவியலின் அடிப்படையில் நிறுவிட இந்திய தத்துவ ஞானிகள் தங்களால் இயன்ற வரை முயன்றுள்ளார்கள்.. உண்மையில் இந்திய தத்துவ நூல்களை அலசுகிறபோது கடவுள் நம்பிக்கைக்கு எதிரான வாதங்களில் இத்தனை வகைகளா என வியப்பும் மலைப்புமே மேலோங்குகிறது..
ஆனாலும் நாம் மிகவும் அறிந்த தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் இந்திய தத்துவம் சாராம்சத்தில் ஆன்மீக வயமானது.. காலத்தின் கரடுமுரடான சோதனைகளையும் வரலாற்று விபத்துகளையும் எதிர்த்து தாக்குப்பிடிக்க இந்தியாவுக்கு பேருதவியாக இருந்தது அதன் தீவிரமான ஆன்மீகமேயன்றி வேறெந்த அரசியல் அல்லது சமூக அமைப்புமன்று என நிறுவிட விளைகிறார்.. மேற்கத்திய மனம் அறிவியல், தருக்கம், மனிதநேயவாதம் ஆகியவற்றிற்கே மிகுந்த அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் இந்தியர்கள் புலனறிவுக்கப்பாற்பட்ட படைப்பூக்க உள்ளுணர்வுடன் செயல்படுபவர்கள் என்கிறார்..
மேலும் கம்யூனிச மதத்தின் இறைத்தூதர் லெனின் என்று இராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். இறப்புக்கு பிந்தைய சொர்க்கத்தைப் பேசியவர்களுக்கு மத்தியில் வாழும்போதே மண்ணில் சொர்க்கத்தைப் படைக்கமுடியும் என நிரூபித்த பாட்டாளிவர்க்கத் தலைவனை இறைத்தூதராகப் பார்க்கும் அவரது பார்வை நகைப்பையும் வியப்பையுமே தருகிறது நமக்கு...
ஆனால் தன்னுடைய ஆசானாகிய இராதாகிருஷ்ணனுக்கு கொஞ்சமும் ஈவுஇரக்கமற்ற வகையிலேயே பதிலடி கொடுக்கிறார் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.. வாழ்வின் உன்னதமான உண்மை எதுவோ அதை உணர்வது தெய்வீகத் தன்மையை எய்துவதற்குச் சமம் என்றெல்லாம் பேசப்படுகிற கடவுளைப்பற்றி நீங்கள் புகழ்ந்தோதும் நூல்கள் என்ன கூறுகின்றன என்று கேட்கிறார்.. இத்தேசத்தின் மெய்யான தத்துவார்த்த இலக்கியம் இக்கூற்றுக்கு ஆதரவாக இல்லை என்பது சற்று வருத்தமளிக்கும் செய்தியே எனக் கிண்டலடிக்கிறார்.. உலகின் உன்னதமான உண்மை கடவுள் என்ற கருத்தை அந்நூல்கள் ஆமோதிக்கவில்லை என்பதோடு கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதில் உறுதியாகவும் நிற்கிறார்கள்.. நாத்திகக் கோட்பாட்டுக்கு விமர்சனப்பூர்வமான மதிநுட்பத்தை நம்பினார்களேயொழிய படைப்பூக்க உள்ளுணர்வை அல்ல என்பதையும் தெளிவுபட விளக்குகிறார்..
இவ்வுலகப்படைப்பின் இறுதிக்காரணி எது என்பது குறித்து பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற விவாதங்களை அழகுற எடுத்துக்காட்டுகிறார். இந்திய தத்துவ மரபுகளில் ஈஸ்வர வாதத்தை தூக்கிபிடிக்கும் அதாவது கடவுள் இருக்கிறார்.. கடவுளே இப்பேரண்டக் குயவன் என வாதிடும் ஆத்திக மரபினர் அய்யோ பாவமாக தனித்து விடப்பட்டிருப்பதை ஏராளமான உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். இந்திய தத்துவ மரபில் வேதாந்தம், சாங்கியம், சாருவாகம், சமணம், பௌத்தம், வைபாசிகம், நியாயவைசேசிகம், மீமாம்சம் ஆகியவற்றில் வேதாந்தம், நியாயவைசேசிகம் தவிர்த்து இதர அனைத்துவிதமான தத்துவங்களும் கடவுளை விரட்டிவிரட்டி அடிக்கும் இயற்பண்பு வாத நாத்திக மரபினைச் சேர்ந்தவையே.. வேதாந்தமும் கூட கடவுள் இருப்பை நிரூபிக்க முன்வரவில்லை.. மாறாக வேதக்கட்டளைகளே கடவுள் இருப்புக்கு சாட்சி.. அதைக் கேள்விக்குட்படுத்துவது கூடாது என்பதோடு முடித்துக் கொள்கிறது.. நியாய வைசேசிகப் பிரிவினரே வாதிட்டு வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.. குணரத்னா, சாந்தரக்சிதர், சாந்திதேவர், நாகார்ஜூனா, குமாரிலர், பிரபாகர் உள்ளிட்ட பலரின் நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளையும் வாரி வழங்கியுள்ளார்..
எல்லாத் தத்துவக் கண்ணோட்டங்களும் கடவுளைப் புறக்கணித்தபோதும் அது இந்திய மண்ணில் தன்னைத் தக்கவைத்துக் கொண்டது.. அதற்கான சூழலை நமது தத்துவ ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கடவுள் கருத்து வெறும் கற்பனையாக-மாயையாக-இருந்தபோதும் மனித உணர்வை, மனதை கவ்விப்பிடித்திருப்பது எப்படி?
இதற்கான தெளிவை இறுதியாக மார்க்ஸ் மட்டுமே வழங்குகிறார்.. “உணர்வு நிலையிலுள்ள அனைத்து வடிவங்களும் அவற்றின் விளைவுகளான கோட்பாடுகளும் ஆன்மீகப் பாங்கிலான விமர்சனத்தாலோ அல்லது தன்னை அறிதலில் மூழ்குவதாலோ அழியமாட்டா.. இந்தக் கற்பனாவாதப் பித்தலாட்டங்களைப் பெற்றெடுத்த அசலான சமூக உறவுகளை அழித்தொழித்தாலேயே அவையும் மறையும்..
மனிதனது சூழ்நிலையை அடியோடு மாற்றுவதன் மூலமே அந்தச் சிந்தனைகளை மாற்றமுடியும்.. மனிதனது வாழ்நிலையில் மாற்றம் ஏற்படுமேல் மதத்தைப் புறந்தள்ளவும் செய்வான்.. இது வெளியிலிருந்து புகுத்தப்பட்டதன்று.. திண்ணமான பொருளாதாயச் சூழலில் மனித உணர்வில் தோன்றிய கருத்து. அப்பொருளாதாயச் சூழல்கள் அடியோடு மாறும்போது அக்கருத்தும் பட்டுப்போகும்..” என்கிறார் மார்க்ஸ்.
தங்களை மார்க்சியவாதிகளாகக் கருதிக் கொண்டிருக்கிற நம்மில் பலர் அடிக்கடி காணத்தவறுகிற விசயம் ஒன்றுண்டு. இன்னும் வளர்ச்சியடையாத மக்களிடம் மதங்கள் குறித்த அறிவார்ந்த கண்ணோட்டத்தையும் அறிவார்ந்த விமர்சனத்தையும் தோற்றுவிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அது என இறுதியாகச் சொல்லி திசைவழிகாட்டி முடிக்கிறார் நூலாசிரியர்..
- தேனிசுந்தர், மே,6.2018
Feb 27, 2018
பிப்.28-தேசிய அறிவியல் தின போட்டி முடிவுகள் அறிவிப்பு
அன்புடையீர்
வணக்கம்.பிப்.28 தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா இயக்கத்துடன் இணைந்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.. மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 50 பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாவட்ட அளவில் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன..
போட்டி முடிவுகள்:
4,5 வகுப்பு மாணவர்களுக்கான ஒளியோடு விளையாடு என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப்பள்ளியின் இரா.ஹேமா வைஷ்ணவி முதல் இடத்தையும் கு.இலட்சுமிபுரம் அரசு துவக்கப் பள்ளியின் கு.மகாலட்சுமி இரண்டாம் இடத்தையும் காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பி.சுவேதா மற்றும் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தேவிபிரித்திஸ்கா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் வானில் மேரிகியூரி என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எஸ்.யுவதர்ஷனி முதல் இடத்தையும் வரதராஜபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எஸ்.சாய்குமார் இரண்டாம் இடத்தையும் பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியின் அஸ்ரூல் நிஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
9-12 வகுப்பு மாணவர்களுக்கான எனது பார்வையில் விஷன் இந்தியா-2020 என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் மு.சங்கவி முதல் இடத்தையும் புலிகுத்தி அரசு உயர்நிலைப்பள்ளியின் நா.சிவானி இரண்டாம் இடத்தையும் வடபுதுப்பட்டி ஸ்ரீமுத்தாலம்மன் மேல்நிலைப்பள்ளியின் செ.தாரணி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
கல்லூரி மாணவர்களுக்கான டார்வினுக்கே என்றும் வெற்றி என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பெண்கள் கல்லூரியின் என்.ஷர்மிளாதேவி முதல் இடத்தையும் இலட்சுமிபுரம் இரா.கௌசல்யா இரண்டாம் இடத்தையும் போடிநாயக்கனூர் வி.பவித்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
ஆசிரியர்களுக்கான இந்திய அறிவியல் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு.அ.ஞானதெரஸ் முதல் இடத்தையும் உப்பார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.ஜி.விஜயலட்சுமி இரண்டாம் இடத்தையும் உப்பார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் உதவி ஆசிரியை திருமிகு.வி.ஹேமலதா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
ஆர்வலர்களுக்கான கட்டுரைப் போட்டியில் கம்பம் ஜெ.தனலட்சுமி முதல் இடத்தையும் ஆண்டிபட்டி எஸ்.ஆர்.எஸ்.ரெங்கநாதன் இரண்டாம் இடத்தையும் அல்லிநகரம் எஸ்.கௌசல்யா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்..
பரிசளிப்பு & பாராட்டு விழா:
- பரிசளிப்பு விழா பிப்.28 மாலை 5 மணிக்கு தேனி கான்வெண்ட் அருகில் உள்ள அம்பி வெங்கிடசாமி மக்கள் மன்றத்தில் நடைபெறும்..
- போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- பள்ளி & மாவட்ட அளவில் முதல் மூன்று படைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்..
- பங்கேற்ற பள்ளிகளுக்கான நினைவுப்பரிசுகளும் வழங்கப்படும்..
- அனுமதி இலவசம்.
அன்புடன்
ஈ.ஜெகநாதன், மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9789411022
Feb 14, 2018
பிப்.28-தேசிய அறிவியல் தின போட்டிகள்-2018
வணக்கம். தமிழ்நாடு அறிவியல்
இயக்கம் கடந்த 35 ஆண்டுகளாக எழுத்தறிவு இயக்கம் தொடங்கி தொடர்ச்சியாக ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கல்வி, அறிவியல் பரப்புதல் ஆகியவற்றிற்கான செயல்பாடுகளைக்
கொண்டு செல்லும் மிகப்பெரும் தன்னார்வ அமைப்பாக இயங்கி வருகிறது. பிப்.28 தேசிய அறிவியல்
தினத்தை முன்னிட்டு அப்துல் கலாமின் விஷன் இந்தியா அமைப்புடன் பல்வேறு போட்டிகள், வினாடிவினா,
அறிவியல் கண்காட்சி ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் தங்கள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்யுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
Jan 8, 2018
தேனி மாணவிகளுக்கு குழந்தை விஞ்ஞானி விருது
தேனி : தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டை முன்னிட்டு மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு சார்பில், ஆய்வு கட்டுரைகள் மூலம் குழந்தை விஞ்ஞானிகள் கண்டறியப்பட்டனர்.இதனையொட்டி குஜராத்தில் நடந்த மாநாட்டை அம்மாநில முதல்வர் விஜய ரூபானி துவக்கிவைத்தார். கொலம்பியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளியின் 8 ம் வகுப்பு மாணவி யு.சிரின் தலைமையில் கே.பாண்டிமீனா, எம்.பிரதீபா, பி.நித்யஸ்ரீ, வி.ஸ்ரீ புவியா குழுவினர் ஆய்வை சமர்ப்பித்தனர்.தேனி மாவட்டம் அன்னஞ்சி கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழித்தல் குறித்த புலனறிவை அடிப்படையாக கொண்டு ஆய்வுக் கட்டுரையை மாணவிகள் தயார் செய்திருந் தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், ஆயிரம் கட்டுரைகளில் சிறந்ததாக தேனி மாணவிகளின் கட்டுரை தேர்வாகி உள்ளது. இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு 'குழந்தை விஞ்ஞானி' விருதிற்கான சான்றிதழ் அங்கு வழங்கப்பட்டது.ஆய்வு கட்டுரையின் வழிகாட்டி ஆசிரியர் ராம்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் சுந்தர், மாவட்ட செயலர் ஜெகநாதன், வெங்கட், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உஸ்மான் அலி, கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள், பள்ளி செயலர் ஸ்ரீதர், இணைச்செயலர் கண்ணன், பொரு ளாளர் ஜெயராமன், முதல்வர் ஜாய்ஸ் ஆகியோர் மாணவிகளை பாராட்டினர்.
நன்றி: தினமலர் நாளிதழ்
Subscribe to:
Posts (Atom)