முதல் பக்கம்

Jun 22, 2020

பகுதி சூரிய கிரகணம்

 

ஜூன்,21.2020 அன்று காலை 10.15 முதல் பிற்பகல் 1.20 மணி வரை என மூன்று மணி நேரம்  பகுதி சூரியகிரகணம் தெரிந்தது. அதிகபட்சமாக 11.45 மணி அளவில் 25% வரை சூரியன் நிலவினால் மறைக்கப்பட்டது. மேகமூட்டமாக இருந்தாலும் சில நேரங்களில் மட்டுமே முழுவதும் சூரியன் தெரியாத நிலை இருந்தது. கிரகணத்தின் பெரும்பாலான நேரம் காணக்கூடியதாகவே இருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த டிச.26ல் தெரிந்த வளையசூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அளவில் பள்ளி, கல்லூரிகளிலும் பொது இடங்களிலும் கிரகணம் தொடர்பாக செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 2000 சூரிய வடிகட்டிக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அதே கண்ணாடிகளைக் கொண்டு  பகுதி சூரிய கிரகணத்தை 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சூரிய வடிகட்டிக் கண்ணாடி கொண்டு பாதுகாப்பாக கிரகணத்தை கண்டு மகிழ்ந்தனர். தேனி மாவட்டத்தில் அடுத்த பகுதி சூரிய கிரகணம் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி தான் பார்க்கமுடியும்..

கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கிரகணம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். பந்து கண்ணாடி மூலம் சூரிய ஒளியை சுவரில் விழச்செய்தும் அரிகரண்டி மூலம் ஏற்படும் நிழலைக் கொண்டும் விளக்கம் அளிக்கப்பட்டது. கிரகணத்திற்கும் கொரானா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரகணத்தின் பொழுது எந்தவிதமான சிறப்புக் கதிர்களும் வெளிவருவதில்லை. உணவுகள் கெட்டுப்போகாது. கிரகணத்தின் போது தாராளமாக உணவு உண்ணலாம். கிரகணம் என்பது சூரியன், நிலவு, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் மறைப்பு விளையாட்டு போன்றதே ஆகும். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விளக்கமளிக்கப்பட்டது. பொதுமக்கள் சூரியக் கண்ணாடி கொண்டு கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

தேனி முல்லை நகர், இரத்தினம் நகர், ஆண்டிபட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, தேவாரம், போடி மற்றும் கம்பம் நகரில் பல இடங்களில் சூரியக்கண்ணாடியை வைத்து அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், ஜெகநாதன், கமல், சதீஷ், முத்துப்பாண்டி, ஸ்ரீராமன், சிவக்குமார், தாழைக்குமரன், ராம்குமார், ஜெகதீசன் உள்ளிட்டோர் ஆங்காங்கே வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் சூரியக்கண்ணாடி மூலம் பார்க்கச் செய்து விளக்கமளித்தனர்

Mar 22, 2020

மேகமலையில் குறையும் மழை வளம் - மூல வைகையில் வறட்சி: 5 மாவட்டங்களின் நீராதாரம் பாதுகாக்கப்படுமா?


தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதியில் மழை வளம் குறைந்து வருவதாலும், சிற்றாறுகளின் வழித்தடம் மாற்றப்பட்டு மூல வைகை ஆற்றுக்கு தண்ணீா் வரத்து தடைபட்டுள்ளதாலும், 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் பாசனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வைகை அணையின் முக்கிய நீரதாரமான மூல வைகை ஆறு, மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மேகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் 64 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் அடா் காடுகள், சமவெளி, பள்ளத்தாக்கு, மலையருவிகளைக் கொண்டது மேகமலை.

இம்மலைப் பகுதியில் உற்பத்தியாகும் உடங்கனாறு, சந்தனக்காப்பு ஆறு, கூட்டாறு, பொம்மாறு, புலிக்கட்டு ஓடை, பாலாறு, யானை கெஜம், சிறு ஆறு, பஞ்சந்தாங்கி ஓடை, அல்லால் ஓடை, சுக்கான் ஓடை உள்ளிட்ட 52 சிற்றாறுகளின் சங்கமமே மூல வைகை ஆறு.

மூல வைகை ஆற்றை முக்கிய நீராதாரமாகக் கொண்டு கடந்த 1958 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. மூல வைகை ஆறு மேகமலையில் உற்பத்தியாகி வருஷ நாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு வழியாக 72 கி.மீ.,தூரம் பயணித்து, அமச்சியாபுரம் பகுதியில் முல்லையாற்றுடன் சங்கமித்து வைகை அணையைச் சென்றடைகிறது. 


வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி-சேடப்பட்டி, மதுரை, வத்தலகுண்டு கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கும், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவடங்களின் பாசனத்திற்கும் தண்ணீா் திறக்கப்படுகிறது.

குறையும் மழை வளம்: ஆண்டுக்கு 11 மாதங்கள் மழை பொழிவுள்ள மேகமலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மழை வளம் குறைந்து வருகிறது. கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மழைக் காலங்களில் மூல வைகை ஆற்றிலிருந்து வைகை அணைக்கு சராசரியாக விநாடிக்கு 6,000 கன அடி வரையும், அதிகபட்சமாக விநாடிக்கு 22,661கன அடியும் தண்ணீா் வரத்து இருந்தது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மேகமலை வனப் பகுதியில் போதிய மழையின்றி, மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 19 ஆண்டுகளில் மொத்தம் 9 முறை மட்டும் மூல வைகை ஆற்றில் இருந்து வைகை அணைக்கு சராசரியாக விநாடிக்கு 1,100 கன அடி வரையும், அதிக பட்சமாக விநாடிக்கு 4,566 கன அடியும் மட்டுமே தண்ணீா் வரத்து இருந்தது.

மேகமலையில் விதியை மீறி பட்டா நிலங்களில் மட்டுமின்றி வனப் பகுதியிலும் மரங்களை வெட்டி காடுகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், வணிக நோக்குடன் சில்வா் ஓக் மரங்களை அதிக அளவில் வளா்த்து வெட்டி விற்பதாலும் வன வளம், மழை வளம் குறைந்து மூல வைகையில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று வன ஆா்வலா்கள் கூறுகின்றனா்.


வழித்தடம் மாற்றப்படும் சிற்றாறுகள்: மேகமலை வனப் பகுதியில் உற்பத்தியாகும் சிற்றாறுகளின் வழித்தடங்கள் பல இடங்களில் மாற்றப்பட்டுள்ளன. சிற்றாறுகளின் தண்ணீரை பயன்படுத்தி சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவில் தைலப்புல் (வங்ப்ப்ா்ஜ் எழ்ஹள்ள்) சாகுபடியும், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தைலம் தயாரிப்பு தொழிற் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன.

வனப் பகுதியில் உள்ள சில தனியாா் எஸ்டேட்டுகள் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்கு வழங்கும் அனுமதியை பயன்படுத்தியும், விதியை மீறியும் சிற்றாறுகள் மற்றும் ஓடையோரங்களில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்தி வருகின்றனா். இதனால், நீா் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு மூல வைகை ஆற்றுக்கு தண்ணீா் வரத்து தடை படுகிறது.

வைகை அணையில் தண்ணீா் நிரம்புவதில் சிக்கல்

வைகை அணையில் இருந்து கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 30 முறை உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது. மூல வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து குறையும் காலங்களில், வைகை அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை வைகை அணையில் தேக்கி, 5 மாவட்டங்களில் குடிநீா் மற்றும் பாசனத் தேவைகள் சமாளிக்கப்பட்டு வருகிறது.

மூல வைகை வறண்டு வருவதால், கடந்த சில ஆண்டுகளாக வைகை அணையில் போதிய தண்ணீா் இருப்பு வைப்பதற்காக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் நீா் மட்டத்தை நிலை நிறுத்துவதிலும், தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவில் 2ஆம் போக நெல் சாகுபடிக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையில், 6,879 மில்லியன் கன அடி வரை தண்ணீா் தேக்க முடியும். ஆனால், கடந்த 2000 ஆம் ஆண்டு பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிறுவனம், வைகை அணையில் ஆய்வு செய்ததில் அணையில் 20 அடி உயரம் வரை, அதாவது 974 மில்லியன் கன அடிக்கு சேறும், சகதியும் தேங்கியுள்ளதும், அணை நீா்பிடிப்பில்
14.16 சதவீதம் பரப்பளவில் மண், மணல் மற்றும் சவுடுமண் படிந்திருப்தும் தெரிய வந்தது. இதனால், ஆற்றில் தண்ணீா் வரத்து உள்ள காலங்களிலும், அணையில் அதன் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க முடியாமல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

நீராதாரம் பாதுகாக்கப்படுமா?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக உள்ள மூல வைகை ஆற்றை பாதுகாப்பதற்கு மேகமலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவும், ஆக்கிரமிப்பில் உள்ள சிற்றாறுகள், காட்டாட்டாற்று ஓடைகளை மீட்கவும், ஆற்றுப்படுகைகளில் உறைகிணறு, ஆழ்துளைக் கிணறு அமைத்து விதியை மீறி தண்ணீா் உறிஞ்சுவதை தடுத்து, ஆற்றில் தண்ணீா் வரத்தை உறுதி செய்வதற்கு வனத் துறை, வருவாய்த்துறை, பொதுப் பணித் துறை மற்றும் மின் வாரியம் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். வைகை அணையை தூா்வாரி அதன் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பு. படம்: ரா.ரஞ்சித்

கொரோனா, இது சீன வைரஸா? – த.வி.வெங்கடேஸ்வரன்




சீனாவின் ரகசிய ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயாரிக்கப்பட்ட கிருமி தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கொரோனா வைரஸ் என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு. அமெரிக்காவின் ‘ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற நிறுவனத்தை (scripps research institute) சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவானது புகழ் பெற்ற‘நேச்சர் மெடிஸன்’ ஆய்விதழில் மார்ச் 17, 2020 – செவ்வாயன்று வெளியாகியுள்ளது.

SARS – coV – 2 என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இந்த வைரஸின் மரபணுக்களை ஆய்வு செய்த நிபுணர்கள், அவை ஆய்வகத்தில் செயற்கையாகவோ அல்லது மரபணுமாற்றம் செய்யப்பட்டோ உருவாகவில்லை என்றும் இயற்கையில் பரிணமித்த புதிய இனப்பிரிவு என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் SARS – coV – 2 இனப்பிரிவைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியது. வுஹான் நகரில் வைரஸ் ஆய்வு நிறுவனம் உள்ளதால் கொரோனா வைரஸ் அங்கே ரகசியமாக தயாரிக்கப்பட்ட செயற்கை கிருமி என்ற புரளி எழுந்தது. “ஏற்கெனவே நாம் அறிந்துள்ள வேறு கொரோனா வைரஸ் இனப்பிரிவுகளின் மரபணு தொடரோடு புதிய இனப்பிரிவை ஒப்பிட்டு பார்க்கும்போது SARS – coV – 2 இனப்பிரிவு வைரஸ் இயற்கையில் பரிணமித்த ஒன்று என தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பூட்டும் வைரஸ்களின் கள்ளசாவியும்

ஓம்புயிரிகளின் செல்களில் புகுந்து அந்த உயிரியின் செல்அமைப்பை பயன்படுத்தித்தான் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே எப்படியாவது ஓம்புயிரி செல்களுக்குள் செல்ல வைரஸ் துடிக்கும். ஓம்புயிரிகளின் செல்கள் தங்கள் கதவை திறந்த வைத்து வா வா என்று வைரஸ்களை அழைக்காது. செல் சுவர் கொண்டு வைரஸ்களை உள்ளே எளிதில் நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தும். ஆனால் கதவு பூட்டிய கோட்டை போல எல்லா நேரமும் செல்கள் இருந்துவிட முடியாது. செல்பிரிதல், செல் செயல்படுதல் போன்ற எல்லா இயக்கத்துக்கும் ஆற்றல் தேவை. பற்பல புரத பொருள்கள் தேவை. ரத்தம் எடுத்துவரும் புரத பொருள்கள், ஆக்ஸிஜன் போன்ற பொருள்கள் செல்களுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்ல வேண்டும். உள்ளே ஏற்படும் வேதி வினை காரணமாக உருவாகும் மாசுகளை அப்புறப்படுத்த வேண்டும். எனவே, செல்களின் சுவர்களில் கதவு போன்ற அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது மட்டும் கதவு திறந்து வெளியே உள்ள பொருள் உள்ளே வரும். உள்ளே உற்பத்தியாகும் மாசுகள் வெளியேற்றப்படும்.


சரியான புரதப்பொருள்கள் வந்து சேரும்போது, அவற்றை செல்களின் சுவர்களில் பற்றிப் பொருத்துவதற்காக கைப்பிடி போன்ற ஏற்பிகள் இருக்கும். அந்த புரதங்களின் ஒரு பகுதி சாவியின் வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள கதவு பூட்டின் உள்ளே இந்த சாவி வடிவம் நுழையும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும். பூட்டை உடைத்து திருடன் நுழைவது போல கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து வைரஸ்கள் உள்ளே நுழையும். ஒவ்வொரு பூட்டின் சாவியும் வெவ்வேறு வடிவில் இருக்கும் அல்லாவா? அதுபோல ஒவ்வொரு உயிரியின் பூட்டும் கைப்பிடியும் வெவ்வேறு வடிவில் இருக்கும். இதனால்தான், எல்லா வைரஸ்களும் எல்லா உயிரிகளின் செல்களிலும் புகுந்துவிட முடிவதில்லை. இதன் காரணமாகவே, மாட்டுக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள், பல சமயம் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை. அதாவது ஒவ்வொரு வைரஸுக்கும் அதற்கு ஏற்ற ஓம்புயிரிகள் உள்ளன. தனது ஓம்புயிரி செல்களைப்பற்றி துளையிட்டு புகுந்து செல்வதற்காக அந்த குறிப்பிட்ட வைரஸ்களுக்கும் அதன் மேலுறையில் செல்களின் ஏற்பிகளை பற்றி பிடிக்கும் RBD புரதம் மற்றும் செல்சுவரின் கதவை திறக்கும் சாவி போன்ற அமைப்பு, புரதம் போன்ற சிறப்பு அமைப்புகள் இருக்கும்.

மரபணு தொடர் வரிசை

தொற்றுநோய் பரவல் ஏற்பட்ட சில நாட்களிலேயே சீன விஞ்ஞானிகள் SARS – coV – 2 வைரஸின் மரபணு தொடரை வரிசை செய்து அனைத்து ஆய்வாளர்களும் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் பொதுவெளியில் வெளியிட்டனர். ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், முதலில் ஒரே ஒரு மனிதருக்கு இந்தவைரஸ் தொற்று ஏற்பட்ட அதன் பின்னர் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவித்தான் சீனாவில் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது என்பது விளங்கியது. ஏறக்குறைய பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கூர் முனைகள் உள்ளன. இந்த கூர் முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை இந்த வைரஸ் பற்றிக் கொண்டு துளையிட்டு உள்ளே நுழைகிறது.

ஆண்டர்சன் மற்றும் அவரது சக பணியாளர்கள் SARS – coV – 2 மரபணு தொடரை ஆராய்ந்த போது, இந்த வகை வைரஸ்களின் கூர் முனைகளில் மனித செல்களின் மீது உள்ள ACE2 என்ற ஏற்பியை பற்றிக்கொள்ளும் விதத்தில் ‘ஏற்பி பற்று’ புரதம் பரிணமித்துள்ளது என கண்டறிந்தனர். அதாவது ACE2 என்ற பூட்டை திறக்கும் சரியான சாவி SARS – coV – 2 -யிடம் இருந்தது.

ஒப்பீடு ஆய்வு


இந்த சாவியை ஏனைய SARS – coV வைரஸ்களின் சாவியோடு ஒப்பிட்டு பார்த்தனர். புதிதாக உருவான SARS – coV – 2 -ன் சாவி புரதம் ஏற்கெனவே SARS – coV வைரஸ்களிடம் இருந்த சாவி புரதத்தை விட ஆற்றல் குறைந்தது. செயற்கையாக உயிரியல் ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் மேலும் ஆற்றல் கூடிய பற்று புரதத்தை தான் உருவாக்குவார்கள். ஆற்றல் குறைவான ஒன்றைஅல்ல. ஒருவேளை, செயற்கை SARS – coV வைரஸை, கிருமி யுத்தத்துக்கு தயார் செய்தால், அது ஏற்கனவே மனிதர்களை கொல்லும் மிகவும் கொடிய வகை வைரஸை அடிப்படையாக கொண்டு தான் அமையவேண்டும். SARS – coV – 2 -ன் அடிப்படை அமைப்பு ஏற்கனவே மனிதரை தாக்கும் SARS – coV வைரஸ்கள் போல இல்லாமல் அழுங்கு மற்றும் வவ்வால்களை தாக்கும் SARS – coV வைரஸ்கள் போல அமைந்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் கூர் கத்தியை மழுங்கடித்து போர் தளவாடங்களை தயார் செய்ய மாட்டார்கள் அல்லவா? அதன்படி பார்த்தால்,SARS – coV வைரஸ்களின் வீரியம் கூட இந்த நோவல் SARS – coV – 2 வைரஸுக்கு இல்லை. “SARS – coV – 2 கூர்முனையின் RBD பற்று புரதம் மற்றும் வைரஸின் அடிப்படை மூலக்கூறு வடிவம் இரண்டையும் சேர்த்து பார்க்கும்போது, செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கிய கிருமியாக இருக்க முடியாது” என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தார்கள்.

எப்படி உருவானது?

இரண்டு வகையில் இந்த நோவல் SARS – coV – 2 வைரஸ் பரிணமித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலாவதாக, வேறு விலங்குகளில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் உருவாகி, பின்னர் மனிதர்களிடம் நோய் ஏற்படுத்தும் கிருமியாக பரிணமித்து பரவியிருக்கக் கூடும் . இல்லையெனில், முதலில் நோயற்ற வடிவில் மனிதரிடம் பரவி, பின்னர் மனிதரிடம் பரிணமித்து நோய் ஏற்படுத்தும் கிருமியாக உருவாகியிருக்கலாம். வவ்வால்களிடம் பரவும் SARS – coV – 2 வைரஸின் சாயல் இந்த கொரோனா வைரஸில் காணப்படுகிறது. எனவே, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவி இருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது. SARS மற்றும் MERS வகை SARS-CoV கரோனா வைரஸ்கள் இப்படித்தான் முதலில் புனுகுப் பூனை மற்றும் ஒட்டகங்களில் முறையே உருவாகி பின்னர் மனிதரிடம் பரவியது. எனினும், வவ்வால்களிடம் நோய் ஏற்படுத்தும் அதே இனம் மனிதரிடம் நோய் ஏற்படுத்த முடியாது. எனவே இரண்டுக்கும் இடைப்பட்ட இனப்பிரிவு பரிணமித்து இருக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட இனப்பிரிவு இனம் காணப்படவில்லை. எனவே, வவ்வால்களிடம் உருவாகி மனிதனுக்கு இது பரவியது என தீர்மானமாக கூற முடியாது.

மாற்றாக நோய் விளைவிக்கின்ற திறன் அற்ற வகை வைரஸ் மனிதர்களிடம் பரவி, பின்னர் காலப்போக்கில் பரிணாமத்தின் காரணமாக, நோய் விளைவிக்கின்ற தன்மை கொண்ட இனப்பிரிவாக உருவெடுத்து இருக்கலாம். அழுங்கு எறும்புண்ணிகளில் இந்த சாயல் கொண்ட வைரஸ் உள்ளது. அந்த விலங்கிடம் காணப்பட்ட வைரஸ்களிலும், SARS-CoV-2 வைரஸ்களிலும் ஒரே வகை RBD அமைப்புதான் உள்ளது. எனவே நேரடியாக எறும்புண்ணியிடமிருந்தோ அல்லது பூனை இன விலங்குகளிடம் இருந்தோ இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவி இருக்கலாம். மனிதர்களிடம் பரவிய பின்னர் பரிணாம படிநிலை வளர்ச்சியில் மனித செல்களை துளைத்து திறக்கும் ‘சாவி புரதம்’ பரிணமித்து தொற்று நோயாக உருவாகியிருக்கலாம் என்கிறார்கள்.

இரண்டில் எது சரி என்பதை இப்போது நம்மிடம் உள்ள தரவுகளைக் கொண்டு இறுதி செய்ய முடியாது. தொற்று விளைவிக்க கூடிய திறனோடு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றால் மறுபடி இந்த வைரஸின் வேறு ஒரு வடிவம் எதிர்காலத்தில் பரவி புதிய தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் ஏற்படுத்தும் திறனற்ற வடிவில் மனிதர்களிடம் பரவி பின்னர் நோய்த் தன்மை கொண்ட வைரஸ் பரிணமித்துள்ளது என்றால் மறுபடியும் அதேபோன்ற நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. எப்படி இந்த வைரஸ் உருவானது என்பதை கூடுதல் ஆய்வுதான் நமக்கு தெளிவுப்படுத்தும்.

கிரீடம் அணிந்த வைரஸ்..
பூனைக் குடும்பத்தில் பூனை, புலி என பல விலங்குகள் உள்ளதுபோல இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு. நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது கிரீடம் (கிரவுன்) போல அல்லது சூரியனை சுற்றி இருக்கும் ஒளிக்கதிர்கள் (கொரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் கொரோனா வைரஸ் குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது.


நமக்கு தெரிந்த வரையில் மனிதர்களை தாக்கும் ஆறு கொரோனா வைரஸ்களில் 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் ஆபத்து அற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். MERS – CoV மற்றும் SARS – coV ஆகிய இரண்டும் கிருமி தாக்கியவர்களில் சிலருக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு நோயை ஏற்படுத்தும். ஏழாவதாக உருவானதுதான் இந்த SARS – coV – 2 . எனவேதான், புத்தம் புதிதாக சமகாலத்தில் பரிணமித்த இனப்பிரிவு என பொருள்படும் ‘நோவல்’ என்ற அடைமொழியோடு ‘நோவல் கொரோனா வைரஸ்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர்தான் கோவிட் -19.

கட்டுரையாளர்- 
த.வி.வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி
விஞ்ஞான் பிரச்சார்
தொடர்புக்கு : tvv123@gmail.com
நன்றி : தி இந்து (தமிழ்), 19.3.2020.

மிக மோசமான உண்மையையும் சொல்லப் பழகுங்கள்.. -- ஜான் பாரி

1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் நமக்கு கற்றுத் தந்திருக்கும் மிக முக்கியமான பாடம் “அரசாங்கம் பொய் சொன்னது. எல்லாவற்றையும் பற்றி அவர்கள் பொய்யை மட்டுமே சொன்னார்கள் ”: 1918ஆம் ஆண்டு என்ன தவறு நடந்தது என்பது பற்றி வரலாற்றாசிரியர் ஜான் பாரி.
சீன் இல்லிங்
2020 மார்ச் 20, 2020

“நாங்கள் முழுமையான கட்டுப்பாட்டிலே வைத்திருக்கிறோம். சீனாவிலிருந்து வந்திருக்கிற ஒருவரை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இனி ஒன்றும் பிரச்சனை இல்லை”. கொரோனா வைரஸ் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்று ஜனவரி 22 அன்று சிஎன்பிசி நிருபர் கேட்ட கேள்விக்கு அதிபர் டிரம்ப் தந்த பதில் இது. இப்போது ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தொடர்ந்து அவரது பத்திரிகையாளர் சந்திப்புகள் பொருத்தமற்றவையாக, தவறான தன்மை கொண்டவையாக இருந்தாலும், வைரஸின் அச்சுறுத்தலை முற்றிலும் புறக்கணிக்க முடியாத அளவிற்கு அதிபரின் குரல் மாறியிருக்கிறது.


வைரஸைப் பற்றிய முரண்பாடான செய்திகள், அத்தகைய செய்திகளை ஊக்குவிக்கும் நேர்மையற்ற தன்மை போன்றவை இப்போது மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. மக்களிடம் உண்மையைச் சொல்ல மறுப்பது, அதிக உயிரிழப்பிற்கே வழியேற்படுத்தி தரும். ஏனெனில் சமூக விலகல் போன்ற நடைமுறைகளால், இந்த தொற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதற்கான நமது முயற்சிகளை இதுபோன்ற நடவடிக்கைகள் பலவீனப்படுத்துகின்றன. மேலும் அவை அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கின்றன. இதுதான் இப்பொஒது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

கேட்பதற்கு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், உண்மையை மட்டுமே தலைவர்கள் சொல்ல வேண்டும் என்பதே 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் நமக்கு கற்று கொடுத்து சென்றிருக்கும் மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது என்று வரலாற்றாசிரியர் ஜான் எம். பாரி கருதுகிறார். 1918ஆம் ஆண்டு தொற்றுநோயைப் பற்றி மிகப் பிரபலமான புத்தகத்தை எழுதியிருக்கும் பாரி, 1918இல் ஏற்பட்ட நெருக்கடியின் தீவிரம் குறித்து தரப்பட்ட பொய்களே அதிக அளவிலான அச்சத்தையும், தனிமைப்படுத்தலையும், அனைவருக்கும் அதிக துன்பத்தையும் உருவாக்கின என்கிறார்.


“நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட்உ இயங்குகின்ற சமூகம், அதிகாரத்தின் மீதான நம்பிக்கையை இழந்தது” என்று அண்மையில் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் பாரி எழுதியிருந்தார். மேலும் “யாரை அல்லது எதை நம்புவது என்று தெரியாத மக்கள் தங்களுக்கிடையே இருந்த நம்பிக்கையை இழந்த போது, அந்நியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடையே இருந்த நெருக்கம் அழிக்கப்பட்டது. ” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். பொதுமக்களிடம் பொய் சொன்னதால் 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்புகள் குறித்து பாரியுடன் தொலைபேசியில் பேசிய நான், அப்போது அரசாங்கம் செய்த தவறுகளையே இப்போது நாம் மீண்டும் செய்கிறோம் என்று அவர் கருதினால், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதைச் சொல்வதற்கும், வெகுஜன மக்களிடையே பதட்டத்தை உருவாக்காத வகையில் சொல்லாமல் இருப்பதற்கும் இடையிலான நிலையை தலைவர்கள் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? என்று கேட்டேன். எங்களிடையே நடந்த உரையாடலின் உரைவடிவம் பின்வருமாறு.

சீன் இல்லிங்: உங்கள் வாழ்நாளில் 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்க்கு மிக நெருக்கமானதாக கொரோனா வைரஸ் இருப்பதாக நீங்கள் காண்கிறீர்களா?

பாரி: வேறு எதுவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்க்கு பக்கத்தில் செல்ல முடியாது. 2009ஆம் ஆண்டு எச் 1 என் 1 பரவத் தொடங்கிய போது, அது மிகவும் மோசமாக இருக்கக்கூடும் என்ற அச்சங்கள் இருந்தது உண்மைதான். ஆனால் அது மிகவும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியது. மூலக்கூறு உயிரியல் இல்லாதிருந்தால், அது ஒருபோதும் இந்த அளவிற்கு கவனிக்கப்பட்டிருக்காது. 1918 முதல் நாம் கண்டிருக்கும் எந்த நோயும் இப்போது நடந்து கொண்டிருப்பதை நெருங்கவில்லை. இது வெறுமனே ஒரு தலைமுறைக்கான வைரஸ் என்றாகி விட்டால், நாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்.

சீன் இல்லிங்: 1918ஆம் ஆண்டு நாம் எதிர்கொண்ட சூழலிருந்து இன்றைய நிலைமை எவ்வாறு வேறுபடுகிறது?

பாரி: மிகப் பெரிய வித்தியாசம் இந்த நோயின் இலக்காக இருக்கும் மக்கள் ஆகும். 1918ஆம் ஆண்டு, இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 18 வயது முதல் 45 வயது வரை இருந்தவர்கள். அப்போதைய இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு தோராயமாக அந்த வயதினரிடையே இருந்தது. 1918ஆம் ஆண்டில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இறப்புகள் 65 வயதிற்கு குறைவானவர்களிடமே இருந்தன. 1918ஆம் ஆண்டில் இருந்த வயதானவர்கள் தங்களுடைய இளமைப் பருவத்தில், 1918 வைரஸுக்கு நிகரான மிதமான வைரஸ்ஸை எதிர்கொண்டு அனுபவித்திருக்கிறார்கள். அதன் விளைவாக அவர்களிடம் இருந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்குப் போதுமானதாக இருந்தது.


மற்றொரு வேறுபாடு நோயரும்பும் காலம் குறித்ததாக இருக்கின்றது. 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சாவின் சராசரி நோயரும்பும் காலம் இரண்டு நாட்கள் ஆகும். அது நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. ஆனால் கொரோனா வைரஸின் சராசரி நோயரும்பும் காலம் இரண்டு மடங்கு அதிகமானது. அதை இன்னும் சற்று கூடுதலாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்பது ஒரு நல்ல விஷயமாக இருக்கின்ற நேரத்தில், மிகவும் மோசமானதாகவும் இருக்கின்றது.இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்களின் போது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்த தொடர்பு, தடமறிதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களுக்குத் தேவைப்படுகின்ற கால அவகாசத்தைத் தருவதாக கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால், அது நன்மை தருவதாக இருக்கிறது. ஆனால் மிக நீண்ட காலத்திற்கு நீள்வதால், மேலும் அதிகமான மக்களைப் பாதிக்கக்கூடும் என்பது இந்த வைரஸைப் பொறுத்த வரை மிகவும் மோசமானதாக இருக்கிறது. இன்ஃப்ளூயன்ஸாவை விட மிக மோசமான தொற்றுநோயாக இது இருப்பது தெரிகிறது.

இங்கே ஒரு நேர்மறையான வேறுபாடும் உள்ளது. இது மிக மோசமான தொற்றுநோயாக இருந்தபோதிலும், இந்த வைரஸால் ஏற்படுகின்ற இறப்பு விகிதம் 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்ஸாவை விட மிகக் குறைவாகவே இருப்பது தெரிகிறது. 1918ஆம் ஆண்டில் இறப்பு விகிதமானது, மேற்குலக நாடுகளில் குறைந்தது 2 சதவீதம் என்ற அளவில் இருந்தது. உலகின் பிற பகுதிகளில் இது இன்னும் அதிகமாக இருந்தது. அப்போது ஈரானின் மொத்த மக்கள்தொகையில் 7 சதவிகிதம் பேர் இறந்து போயினர். மெக்ஸிகோவின் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் பேர் இறந்திருக்கலாம். 1918 காய்ச்சல் ஏற்படுத்திய உண்மையான இறப்பு விகிதம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வாறாயாயினும், 1918 ஆம் ஆண்டில் மொத்தம் 5 முதல் 10 கோடி உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.


சீன் இல்லிங்: அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள், தனிநபர்கள் 1918 ஆம் ஆண்டு செய்த மிகப்பெரிய, மிக மோசமான தவறு எது என்று உங்களால் சொல்ல முடியுமா?

பாரி: அரசு அப்போது பொய் சொன்னது. எல்லாவற்றையும் பற்றி அவர்கள் பொய் சொன்னார்கள். அப்போது நாம் போரில் ஈடுபட்டிருந்தோம். போருக்கான முயற்சியைத் தவிர்க்க விரும்பாததால், அவர்கள் பொய் சொன்னார்கள். பொது சுகாதாரத்தை ஒருங்கிணைத்தவர்கள், இது வேறு பெயரில் உள்ள ஒரு சாதாரண காய்ச்சல் என்று மக்களிடம் கூறினார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் மக்களிடம் சொல்லவே இல்லை.

சீன் இல்லிங்: அந்த பொய்களைத் தகர்ப்பதற்கு, உண்மைக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?

பாரி: அதிக நாள் தேவைப்படவில்லை. நோயின் அறிகுறிகள் முதலில் தோன்றிய 24 மணி நேரத்திற்குப் பிறகு தங்கள் அருகே வசித்து வந்தவர்கள் இறக்கத் தொடங்கியபோதே, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மிக விரைவிலேயே உணர்ந்து கொண்டனர். மூக்கிலிருந்து, வாயிலிருந்து, கண்கள் மற்றும் காதுகளில் இருந்து ரத்தப்போக்குடன் தெருக்களில் மக்கள் காணப்பட்டனர். அது மிகவும் பயங்கரமாக இருந்தது. சாதாரண காய்ச்சல் இல்லை என்பதை அனைவரும் மிக விரைவாகவே புரிந்து கொண்டனர்.

சீன் இல்லிங்: அந்த பொய்யின் விளைவுகள் எவ்வாறு இருந்தன?

பாரி: அது மிகப் பெரிய பேரழிவாகவே இருந்தது. தங்கள் அரசாங்கத்தின் மீது, தங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் மீது, மேலும் ஒருவருக்கொருவர் என்று மக்கள் முழுமையாக நம்பிக்கையை இழந்து நின்றனர். அது மக்களை மேலும் தனிமைப்படுத்தியது. நம்பிக்கை சரிகின்ற போது, இந்த அளவிலான நெருக்கடியில் மிக மோசமான உள்ளுணர்வாக, அனைத்தையும் தாமே சுமந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது.


பெரும்பாலான பேரழிவுகளின் போது, சமூகங்கள் ஒன்றிணையும். மிகப் பெரிய சமூக கட்டமைப்புகள் அச்சுறுத்தலுக்குள்ளான வேளையில் சில இடங்கள், நகரங்கள் அவ்வாறு இருந்தன. சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் படிப்படியாக நம்பிக்கை எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பது பற்றியும், அதன் விளைவாக ஏற்பட்ட தொடர்விளைவுகளைப் பற்றியும் நான் எனது புத்தகத்தில் எழுதியிருந்தேன். நடைமுறை விளைவுகளும் அப்போது ஏற்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக, அப்போது உருவாகியிருந்த நம்பிக்கையின்மை, முக்கியமான பொது சுகாதார நடவடிக்கைகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை கடினமாக்கி விட்டது. தங்களிடம் சொல்லப்படுவதை மக்கள் நம்பவில்லை. நிலைமை குறித்து அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோது, அது பெரும்பாலும் தாமதப்படுத்தப்பட்டு விட்டது. வைரஸ் ஏற்கனவே பரவலாக பரவி விட்டது. பொய்யும், நம்பிக்கையின்மையும் இணைந்து ஏராளமான உயிர்களைப் பறித்துக் கொண்டன.

சீன் இல்லிங்: அந்த நேரத்தில் ’பூமியிலிருந்து மறைந்து விடப் போகிறோம்’ என்பதாக, மனித நாகரிகத்திலிருந்து வெளியேறுகின்ற சில வாரங்கள் தொலைவிலேயே நாம் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்த அறிவியலாளர் ஒருவரை நீங்கள் மேற்கோள் காட்டி இருந்தீர்கள். அப்போது நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது?

பாரி: மிகவும் மோசமாக இருந்தது. சில இடங்கள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன என்றாலும் கிராமப்புற சமூகங்களில் மக்கள் பட்டினியால் அவதிப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருந்தது. அவர்களுக்கான உணவைக் கொண்டு சென்று அளிக்க அனைவரும் பயந்தார்கள். பீதியும் பயமும் அப்போது அந்த அளவிற்குத் தீவிரமாக இருந்தது. அந்த நிலைமை சமூகத்தை அதன் விளிம்பிற்குத் தள்ளியது.

சீன் இல்லிங்: பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதைச் சொல்வதற்கும், வெகுஜன மக்களிடையே பதட்டத்தை உருவாக்காத வகையில் அவற்றைச் சொல்லாமல் இருப்பதற்கும் இடையில் இருக்கின்ற கடினமான பதற்றம் குறித்து, 1918 தொற்றுநோய் குறித்து ஆய்வு செய்திருக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


பாரி: இது எப்போதும் இருக்கின்ற கேள்விதான். நான் சொல்வது சரிதான் என்பதை உறுதிப்படுத்துகின்ற அறிவியல் ஆய்வுகள் என்னிடம் இல்லை, ஆனாலும் எனது பார்வை என்னவாக இருக்கிறதென்றால், நிச்சயமற்ற நிலைமையை சமாளிப்பதை விட, யதார்த்தத்தையும் உண்மையையும் மக்கள் எளிதாகச் சமாளிப்பார்கள். நீங்கள் ஒரு திகில் படம் பார்க்கிறீர்கள் என்றால், அதில் வருகின்ற அசுரனை மிகவும் பயமுறுத்துகின்றவனாக பார்ப்பதாகவே உங்கள் கற்பனை எப்போதும் இருக்கும். அந்த அசுரன் திரையில் தோன்றியவுடன், அவன் எவ்வளவு கொடூரமானவாக இருந்தாலும், உங்களுக்குள் அந்த பிம்பம் உறுதியானதும் பயம் குறைந்து போய் விடும். இதனால்தான் ’வருதீங்கு குறித்த அறிவிப்பு’ என்பதை நான் வெறுக்கிறேன். ஏனெனில் அது உண்மை நிர்வகிப்படுவதை குறிப்பதாகவே இருக்கிறது. எனது பார்வையில், நீங்கள் உண்மையை நிர்வகிக்க வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லுங்கள்.

சீன் இல்லிங்: இந்த நெருக்கடி குறித்து அதிபர் ட்ரம்ப்பின் ஆரம்பகட்ட பதில்களாக நோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவது, விமர்சனங்களை எல்லாம் ‘புரளி’ என்று நிராகரித்ததே இருந்தன. மிகஅண்மையில் ஃபாக்ஸ் நியூஸ் அதை குறைத்தே மதிப்பிட்டது. இப்போது அனைவரின் தொனியும் மாறிவிட்டது என்றே நான் நினைக்கிறேன். இருந்தாலும் அந்த ஆரம்பகாலத் தவறுகள் நமக்கு தீங்கிழைக்குமா?

பாரி: நிச்சயமாக. அது நமக்கு தீங்கிழைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், நேர்மை என்பது ட்ரம்பின் சுயநலத்திற்கானதாக இருப்பதுதான். மூடிய கதவுகளுக்குப் பின்னால், இப்போதிருக்கும் நிலைமை குறித்த முழு உண்மைகளும் அவருக்கு சொல்லப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை பகிரங்கமாகச் சொல்வதை அவர் குறைத்துக் கொள்கிறார் என்பது கணக்கிட முடியாத வழிகளில் நமக்கு தீங்கையே விளைவிக்கும்.

சீன் இல்லிங்: 1918இல் இருந்த கூட்டு எதிர்வினையில் எந்த அளவிற்கு இப்போது நமது எதிர்வினை இருக்கிறது?


பாரி: உண்மையில் 1918இல் அவ்வாறு கூட்டு எதிர்வினை இருந்ததாக உங்களால் சொல்ல முடியாது. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்தில் மிகவும் மாறுபட்டதாகவே அது இருந்தது. ஆனாலும் பாருங்கள், அதிபர் பதவியைக் கேவலப்படுத்துகின்ற ஜனநாயக சதி என்று இந்த வைரஸ்ஐக் கூறுபவர்கள் இங்கே இருக்கிறார்கள். இப்போது யாரும் அதைச் சொல்லவில்லை என்றாலும், இந்த சவாலை நாம் கூட்டாக எதிர்கொள்வோமா என்பது பதிலளிக்க வேண்டிய திறந்த கேள்வியாகவே உள்ளது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, நாம் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றோம்.

ஆரம்பகால சோதனைகளை நாம் மோசமாகவே செய்தோம். சமூக விலகலுக்கான அழைப்பை பொதுமக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் விஷயங்கள் விரைவாக மாறிக் கொண்டே இருக்கின்றன. இது எந்த அளவிற்கு மோசமாகப் போகிறது அல்லது தென்கொரியா போன்ற நாடுகளைப் போன்று மிக விரைவாகத் திறம்பட வெல்லப் போகிறது என்பதை, பொதுமக்கள் எந்த அளவிற்கு முன்வருகிறார்கள், பொது சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளுடன் எந்த அளவு அவர்கள் இணங்கிப் போகிறார்கள் என்பதே தீர்மானிக்கப் போகின்றது. நமக்கும் அதே போன்ற வெற்றி கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாது. இப்போது அதைச் சொல்ல முடியாது.

நன்றி: https://bookday.co.in

Mar 15, 2020

கொரோனோ தொற்று நோய் : மக்கள் சாசன அறிக்கை -- JSA & AIPSN



கொரோனோ தொற்று நோய் அறிக்கை - மக்கள் சாசனம்: மக்கள் ஆரோக்கிய இயக்கம் ( JSA) மற்றும் அனைத்திந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு (AIPSN) சார்பாக வெளியிடப்பட்டது..

இப்போதே செயல்பட்டு, உயிர்களைக் காக்கவும் பொது சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் அரசைக் கோருதல்.

ஜனவரி,30 அன்று Covid- 19 ன் முதல் பாதிப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து மார்ச்,15 வரை இந்தியாவில் 107 பேர் பாதிக்கப்பட்டு அதில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசு இதில் சர்வதேச பயணங்களைக் கட்டுப்படுத்தியும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களையும் அவர்களின் தொடர்புகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால்  அவர்களை தனிமையில் வைத்தும் அறிகுறிகள் தென்படாவிட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தியும் துரிதமாக செயல்படுத்தியுள்ளது. இது  நோயின் பரவலை தாமதப்படுத்துவதற்கு உதவியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அரசுக்கு தெரியும்.. இன்னும் பெரிய அபாயம் வர இருக்கிறது என்று...

இந்த உடனடியான, வழக்கமான நடவடிக்கைகளான நோயாளிகளை தனிமைப்படுத்துதல், தனியாக வைத்தல் மற்றும் சமூக விலகல்களை செயல்படுத்த தீவிரப் பிரச்சாரம் ஆகியவற்றை வரவேற்கும் அதே வேளையில் இந்த நோய் சமூக அளவில் பரவினாலோ அல்லது இந்த நோய்த் தொற்று உச்சத்தை அடைந்தாலோ, இந்தப் பணிகள்  போதுமானதாக இருக்காது. இந்த நாடு, பொது சுகாதார சேவைகளை பெரிய அளவில் புறக்கணித்ததாலும் , பொது சுகாதாரத்தைத் தனியார் மயமாக்கியதாலும் இது மாதிரியான நோய்களால் எளிதில் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக போராடிக்கொண்டு இருப்பதாலும் கடந்த பத்தாண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் காரணமாக விளிம்பிற்கு தள்ளப்பட்டு இருப்பதாலும் நாடு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சூழ்நிலையில் இருக்கிறது. 

இது மாதிரியான சமூக மற்றும் பொருளாதார சூழலில் அரசு கீழ்க்கண்ட எங்களது அனைத்து கோரிக்கைகளின் சாசனத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Covid -19 _  கரோனா தொற்று நோயின் முக்கிய அம்சங்கள்..

Covid-19 என்பது உலகம் முழுவதும் பரவி வருகிற கரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட வகையால் ஏற்படும் நோயின் பெயராகும். இதன் அறிகுறிகள், பருவகால ப்ளூ, இதற்கு  முன்னால் வந்த ஃப்ளூ காய்ச்சல்  ஆகியவற்றோடு குறிப்பிடும் வகையில் ஒத்துப்போகிறது. ஆனால் இதன் இறப்பு விகிதம் பருவகால ப்ளூவை விட அதிகமாகவும் மற்ற ப்ளூ மற்றும் கரோனா தொற்று ஆகியவற்றை விட குறைவாகவும் இருக்கும். எண்பத்தொரு சதவீதத்தினருக்கு நோய் பாதித்த  அறிகுறிகள் மிகக்குறைந்த அளவே தென்படும்.

15 சதவீதம் பேருக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும் அளவிற்கு தீவிர அறிகுறிகள் தென்படும். நான்கு சதவீதம் பேருக்கு தீவிர கவனிப்பு மற்றும் சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் இது வயது குறைய குறைய குறைந்து கொண்டு வரும். குழந்தைகளை ஒப்பீட்டளிவில் அதிகம் பாதிக்காது.

1918 இல் வந்த ப்ளூ தொற்றுநோய் தாக்கியதை போல ஒரு சூழ்நிலை தற்போது உள்ள சுகாதார வசதிகளின் காரணமாக ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், அது ஏற்பட முடியாதது அல்ல. அடுத்த சில மாதங்களுக்குள் இதற்கேற்ற மருந்தோ அல்லது தடுப்பு மருந்தோ கிடைக்க வாய்ப்பில்லை. ஆகையால், காலம் காலமாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளான தனிமைப்படுத்துதல், தனியாக வைத்தல் மற்றும் சமூக விலகல் ஆகியவற்றை சார்ந்து இருப்பது தொடரும்.

இந்த நோயின் சமூக பரவல் உறுதி செய்யப்பட்டு விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவு அதிகமாகும். அதிலும் அறிகுறி தென்படாத நோய் பரப்புபவர்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமாகும் அல்லது மக்கள் தொகையில் மிக அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள். இந்த நோய் நாட்டின் தற்போதைய பெரியவர்களின் மக்கள் தொகையில் முப்பதிலிருந்து ஐம்பது சதவிகிதம் பேரை பாதிக்கும். மிகக் குறைந்த அளவு இறப்பு விகிதம் ஆக 1 % முதல் தீவிர கவனிப்பு தேவைப்படும் 4% வரை வைத்துக் கொண்டாலும், பலவீனமான இந்த பொது சுகாதார முறைமையால் கவனிக்க முடியாத அளவிற்கு அதிகமாகி, வரும் ஆண்டுகளில் பல மில்லியன் இறப்புகளுக்கு இட்டுச் செல்லும்.

இந்த வைரஸை ஆய்வு செய்து கண்டுபிடிக்க அதிக வசதிகள் இல்லாத காரணத்தால் தற்போது சமூகப் பரவல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது உண்மையிலேயே எவ்வளவு தூரம் இந்த நோய் பரவி இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அம்மாதிரியான பரிசோதனைகள் செய்ய இயலாத போது திட்டுத் திட்டாக பல இடங்களில் நோய் பரவி , கண்டுபிடிப்பதற்கு முன்பாக அபாய அளவை எட்டும்.

ஆனால் விலக்கி வைத்தல் என்ற பெயரில் , நோய் பரவலை தடுப்பது மற்றும் உயிர் இழப்புகளைத் தடுப்பது ஆகிய பொறுப்புகளை மக்கள் மீது, அதிலும் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாக கூடிய சாதாரண மக்கள் மீது சுமத்துவது கவலை அளிக்கிறது. நோய் பரவலை தடுப்பதில் தற்போதைய நடைமுறையான பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்பது தொடர முடியாதது மற்றும் தற்காலிகமாக நன்மை தரக் கூடியதாகும். இந்த நோய் பரவலின் உச்சம் பல மாதங்களுக்குப் பின்னர் வரும், இப்போது அல்ல. இந்த தாமதம் அல்லது நோய் பரவல் நேராக்குவதுஅரசாங்க மருத்துவமனைகளுக்கு பணிகளை முடுக்கி விட நேரம் கிடைக்கும் என்பதால் பயனுள்ளது. ஆனால் மருத்துவமனைகளை தயார் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படாமலோ அல்லது பரிசோதனை கூடங்களை விரிவு படுத்தாமலோ இருந்தால் இந்த தாமதம் பெரும்பான்மையான மக்களை நீண்டகால பொருளாதார மற்றும் சமூக பாதிப்புக்கு உள்ளாக்கி ஆரோக்கிய நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்படுமே தவிர தீர்க்கப்படாது.

சமூகத்தில் உள்ள மக்கள் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை என்னவென்றால், அவர்களுடைய சுகாதாரம் தொடர்பான பழக்க வழக்கங்களில் வேகமான முன்னேற்றங்களை கொண்டுவருவது ஆகும். இந்த நோய் பரவலால் அரோக்கிய ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூகம் ஒற்றுமையும் ஆதரவையும் தெரிவிக்க வேண்டும். இந்தத் தடுப்பு நடவடிக்கைகளால் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்படும் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மத்திய  மற்றும் மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.


கொரோனா தொற்று நோய்
மக்கள்  கோரிக்கைச் சாசனம்...
(மக்கள் ஆரோக்கிய இயக்கம் (JSA)மற்றும் அனைத்திந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பு(AIPSN) சார்பாக வெளியிடப்பட்டது )
உயிர்களைக் காப்பாற்றுங்கள்...
வாழ்வாதாரங்களைக் பாதுகாத்திடுங்கள்...
மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்....
மேலே விவாதிக்கப்பட்ட புரிதலின் அடிப்படையில் (மற்றும் COVID-19 தொற்றுநோய் குறித்த பின்னணி ஆய்வறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளபடி ), மக்கள் அறிவியல் இயக்கங்களும் மக்கள் ஆரோக்கிய இயக்கமும் அதன் புரிதலையும் அதன் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தும் பின்வரும் மக்கள் கோரிக்கை சாசனத்தை ஏற்றுக்கொள்கின்றன..

சுகாதாரப் பராமரிப்பு  தொடர்புடையது..
1. பொது மருத்துவமனைகளை வலுப்படுத்துவதன் மூலம் சுகாதார மற்றும் மருத்துவமனையில் தேவைப்படும் நோயாளிகளின் அதிகரிப்புக்கு தக்கவாறு அரசு பொது சுகாதார சேவைகளை விரைவாக தயார்படுத்த  வேண்டும். இதற்கு குறைந்தபட்சம், ஒவ்வொரு ஐந்து முதல் பத்து லட்சம் மக்கள்தொகையிலும் அவசர சிகிச்சைப் பிரிவு; சாத்தியமான தனிமை வார்டுகள் மற்றும் வென்டிலேட்டர்கள்; ஆக்ஸிஜன் வழங்கல் கொண்ட ஒரு மருத்துவமனை தேவை.

தொடர்புடைய சுகாதார  நுகர் பொருட்களின்  விநியோகத்திலும் மனித வளத்தைப் பயன்படுத்துவதிலும்  முன்னேற்றம் இதற்குத் தேவைப்படும். எப்படியிருந்தாலும் , அத்தகைய விரிவாக்கம்,  நீண்ட காலமாக  தயார்படுத்தாது தாமதமானது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும் , இந்த தொற்றுநோய் அத்தகைய தயாரிப்புகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகக் கொள்ளலாம்.

2. நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தத் தொற்றுநோய் ஒரு முழுமையாக உருவெடுத்த  அவசரநிலையாக மாறினால், தற்போதுள்ள அனைத்து மருத்துவ வசதிகளும், அனைத்து தனியார் மருத்துவமனைகள் உட்பட,  ஒரு மையப்படுத்தப்பட்ட மாவட்ட அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். சந்தை வழிமுறைகளால் அல்லாமல், மருத்துவ வசதிகளை பிரித்தளிப்பது , இந்த  மாவட்ட அதிகாரத்தால் மட்டும்  செயல் படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதற்குத் தேவையான நெறிமுறைகளும் நிர்வாகமும்  நிதி சார்ந்த நடவடிக்கைகளும்  தொற்றுநோய்க்கான  தயார்நிலையின் ஒரு பகுதியாக கொள்ள வேண்டும்.

3. நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதும் , எங்கிருந்து நோய் தொற்றியதெனக் கண்டறிவதும், பெரும் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து திரும்பும் நபர்களை விலக்கி வைப்பதும் நீண்ட காலத்திற்கு தொடர்வது தேவை. சமூக ஊடுறுவலைத் தடுக்க இந்த ஏற்பாடு அவசியம். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நோய் அறிகுறிகளைக் கொண்ட ஒவ்வொரு நோயாளிக்கும், தேவையான பரிசோதனை வழங்கப்பட வேண்டும் .

4. இந்த நோயை பரிசோதிக்கும் திறனை அதிகரிப்பதன் மூலமும்  அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவ மனைகளிலிருந்து  அனைத்து பருவகால காய்ச்சல் மற்றும் காய்ச்சல் தொடர்பான பிற மரணங்கள் குறித்து தகவல் சேகரிப்பதின் மூலமும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தினை (Integrated Disease Surveillance Programme) உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.

இத்தகைய விரிவாக்கம் இல்லையென்றால் , நாடு இத்தகைய தொற்றுநோயால்  கடப்பதைக் கூட அறியாமலோ அல்லது எதிர்பாராத இடங்களில் கூட மையப்பட்டு நோய் பரவல் ஆச்சரியப்படும் வகையில் வெடிக்கக் கூடும் என எச்சரிக்கிறோம்.

5.   ஒரு நீண்ட கால நடவடிக்கையாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய் கட்டுப்பாட்டுக்கான  அரசு மையம் ( Government Centre for Disease Control) ஒன்றினை நிறுவுவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இது தற்போதைய சார்-கோவ் 2 தொற்றுநோய் போன்ற நோய்க்கிருமி தாக்குதல்களுக்கு சோதனை செய்யவும் அடையாளம் காணவும் எச்சரிக்கை தரவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவக்கவும் உதவிடும்..

6. சுகாதார மற்றும் பிற உதவி ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணி நிலைமைகள் மற்றும்  போதுமான பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்யப்பட வேண்டும். இவை, மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், வீடுகளில் தனிமைப்படுத்துதலிலும் விலக்கி வைப்பதிலிலும் ஈடுபட்டிருக்கும் முன்னணி தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இதற்கு முன்னிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தரமான முகமூடிகள் மற்றும் கிருமி நாசினி திரவங்கள் போன்ற மருத்துவ கருவிகள் அளிக்கப்பட வேண்டும்.

7. பரவலான நோய் பரவல் ஏற்பட்டால் , தேவையான   பொருட்களுக்கான பற்றாக்குறைகளை சமாளிக்க ,வெளிச் சந்தையில்  அதிக விலைக்கு விற்பனைபவர்களிடம் விட்டு விடாமல் பொது சுகாதாரத் தேவைகளின் தெளிவான மதிப்பீட்டால் நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.   2009 இல் H1N1 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்களின் போது இந்த பிரச்சனை வெளிப்பட்டது. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். மேலும், காப்புரிமை ஏகபோக வாதிகள்  அவசியமான சிகிச்சையின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதைக் கவனமாக தடுக்க வேண்டும்.

சமூக விலகல்  மற்றும் மனித உரிமைகள்..

8. சமூக விலகல் என்பது பொது மக்களுக்கான  விழிப்புணர்வு  மற்றும் ஏற்றுக்கொள்ள வைப்பதால்  செயல்படுத்தப் பட வேண்டும். கட்டாய நடவடிக்கைகள் நியாயமற்றது , உதவாது. சமூகம், மதம், விளையாட்டு தொடர்பான, கலாச்சாரம் அல்லது அரசியல் வெகுஜன கூட்டங்கள், பொது நிகழ்வுகள் இன்னும் சில காலம் நிறுத்தலாம் - ஆனால் தடை செய்யக்கூடாது.

9. வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகள் மூடுதலாலோ சேவைகள் கிடைப்பதில் உள்ள பிரச்சனைகள் காரணமாகவோ சமூக பாதுகாப்பு சலுகைகள் குறைக்கப்படுவோருக்கான சமூக ஆதரவு மற்றும் மேம்பாட்டு சேவைகளை உருவாக்குதல்  வேண்டும்.

வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பவர்களில் பலருக்கு பிற நோய்களும் இருக்கலாம். அவற்றிக்கு தொடர்  மருந்துவ சேவைகள் மருந்துகள் தேவைப்படும். பல குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து திட்டங்கள்  தேவைப்படும். குறிப்பாக அவர்களின் பெற்றோர்களின் வாழ்வாதாரம்  தடைபடும்போது மாற்று வழிகளை உருவாக்காமல் அத்தகைய சேவைகளை நிறுத்துவது நியாயமற்றது.

10. மக்கள்தொகை முடக்கப்படுதல் அல்லது தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படும் போது, இது ஒரு மனிதாபிமான முறையில் செய்யப்படுவதையும், முக்கிய மனித உரிமைகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கைகள் வேண்டும்.

அரசுகளின், மிகவும் நல்ல நோக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளுக்கும் மனித உரிமைகள் நிறுவனங்கள்சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் தீவிரமான ஈடுபாடு தேவை. இந்தப் பிரச்சனைகளும் வழக்குகளுக்கு உட்பட்டதுதான் என்பதாக, மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.

11. தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகள் குறித்து அறிக்கைகள் வெளியிட ஊடகங்களின் சுதந்திரம் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், நோய்த்தொற்றின் பரவலின் தன்மை, ஆதாரம் மற்றும் சிகிச்சையின் அடிப்படை செய்திகளை வெளியிடும்போது அரசாங்க சேனல்கள், சர்வதேச சுகாதார நிறுவன சேனல்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை செய்தி ஊடகங்கள்  கடைபிடிக்க வேண்டும். இந்த ஆதாரங்களுக்கு வெளியில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு வெளியிடும் போது, இது சரிபார்க்கப்படாதது . தவறானதாகவும் இருக்கலாம் என்ற மறுப்புடன்(disclaimer) இருக்க வேண்டும். ஊடக சுதந்திரங்களுக்கு எந்தவொரு ஒட்டு மொத்த தடையும் தேவையற்றது, எதிர்க்க வேண்டியது.

பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்தல் - காரணம் மற்றும் விளைவு..

12. வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளை பராமரித்தல் என்பது முதன்மையாக பெரும்பாலோரின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதாகும். பொது சுகாதார முன்னுரிமையாகவும்   ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இது போன்ற காலங்களில், பொது மக்களின் விழிப்புணர்வு மூலம் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும். சம்பளப் பிரிவு மற்றும் வசதி படைத்தவர்களை விட, உழைப்பாளர்களின்  ஏழைகளின் வாழ்வாதாரம் சீர்குலைப்பதால் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்- இதை புரிந்து கொள்ள வேண்டும். வீட்டு தனிமைப்படுத்தப் படுவதாலும்இத்தகைய அடைபடுதலுக்கு ஆட்படுதலாலும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவர்களுக்கு சமூக ஆதரவும் முதலாளிகளிடமிருந்து  ஆதரவும்  இருக்க  வேண்டும்.

13. பொதுச் செலவினங்களில் உடனடியாக  அதிகரிப்பு இருக்க வேண்டும், இது கூடுதலான  பொது வேலைவாய்ப்புக்கும் சமூக பாதுகாப்புக்கும் ஆதரவளிக்கும். இரண்டின் வடிவத்தில் பரவலான கேட்புப் பக்க ஆதரவுக்கு வழிவகுக்கிறது, இது உலகளாவிய அடிப்படை வருமானத்தை உறுதி செய்கிறது.
பெரும்பான்மையினரின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதலை நிவர்த்தி செய்ய இது அவசரமாக தேவைப்படுகிறது, இது ஏற்கனவே ஒரு பத்தாண்டு கால பொருளாதாரக் கொள்கைகளால் சமரசம் செய்யப்பட்டு மூலதனக் குவிப்பை தீவிரப்படுத்தி வாழ்வாதாரங்களை அழித்தது. கார்ப்பரேட  தொழிற்துறையினருக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான கூடுதல் சலுகைகள், எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் . நியாயமற்றதும் கூட.