முதல் பக்கம்

Mar 22, 2020

மிக மோசமான உண்மையையும் சொல்லப் பழகுங்கள்.. -- ஜான் பாரி

1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் நமக்கு கற்றுத் தந்திருக்கும் மிக முக்கியமான பாடம் “அரசாங்கம் பொய் சொன்னது. எல்லாவற்றையும் பற்றி அவர்கள் பொய்யை மட்டுமே சொன்னார்கள் ”: 1918ஆம் ஆண்டு என்ன தவறு நடந்தது என்பது பற்றி வரலாற்றாசிரியர் ஜான் பாரி.
சீன் இல்லிங்
2020 மார்ச் 20, 2020

“நாங்கள் முழுமையான கட்டுப்பாட்டிலே வைத்திருக்கிறோம். சீனாவிலிருந்து வந்திருக்கிற ஒருவரை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இனி ஒன்றும் பிரச்சனை இல்லை”. கொரோனா வைரஸ் குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்று ஜனவரி 22 அன்று சிஎன்பிசி நிருபர் கேட்ட கேள்விக்கு அதிபர் டிரம்ப் தந்த பதில் இது. இப்போது ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தொடர்ந்து அவரது பத்திரிகையாளர் சந்திப்புகள் பொருத்தமற்றவையாக, தவறான தன்மை கொண்டவையாக இருந்தாலும், வைரஸின் அச்சுறுத்தலை முற்றிலும் புறக்கணிக்க முடியாத அளவிற்கு அதிபரின் குரல் மாறியிருக்கிறது.


வைரஸைப் பற்றிய முரண்பாடான செய்திகள், அத்தகைய செய்திகளை ஊக்குவிக்கும் நேர்மையற்ற தன்மை போன்றவை இப்போது மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. மக்களிடம் உண்மையைச் சொல்ல மறுப்பது, அதிக உயிரிழப்பிற்கே வழியேற்படுத்தி தரும். ஏனெனில் சமூக விலகல் போன்ற நடைமுறைகளால், இந்த தொற்றுநோயின் தாக்கத்தை குறைப்பதற்கான நமது முயற்சிகளை இதுபோன்ற நடவடிக்கைகள் பலவீனப்படுத்துகின்றன. மேலும் அவை அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கின்றன. இதுதான் இப்பொஒது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

கேட்பதற்கு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், உண்மையை மட்டுமே தலைவர்கள் சொல்ல வேண்டும் என்பதே 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் நமக்கு கற்று கொடுத்து சென்றிருக்கும் மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது என்று வரலாற்றாசிரியர் ஜான் எம். பாரி கருதுகிறார். 1918ஆம் ஆண்டு தொற்றுநோயைப் பற்றி மிகப் பிரபலமான புத்தகத்தை எழுதியிருக்கும் பாரி, 1918இல் ஏற்பட்ட நெருக்கடியின் தீவிரம் குறித்து தரப்பட்ட பொய்களே அதிக அளவிலான அச்சத்தையும், தனிமைப்படுத்தலையும், அனைவருக்கும் அதிக துன்பத்தையும் உருவாக்கின என்கிறார்.


“நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட்உ இயங்குகின்ற சமூகம், அதிகாரத்தின் மீதான நம்பிக்கையை இழந்தது” என்று அண்மையில் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் பாரி எழுதியிருந்தார். மேலும் “யாரை அல்லது எதை நம்புவது என்று தெரியாத மக்கள் தங்களுக்கிடையே இருந்த நம்பிக்கையை இழந்த போது, அந்நியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடையே இருந்த நெருக்கம் அழிக்கப்பட்டது. ” என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். பொதுமக்களிடம் பொய் சொன்னதால் 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்புகள் குறித்து பாரியுடன் தொலைபேசியில் பேசிய நான், அப்போது அரசாங்கம் செய்த தவறுகளையே இப்போது நாம் மீண்டும் செய்கிறோம் என்று அவர் கருதினால், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதைச் சொல்வதற்கும், வெகுஜன மக்களிடையே பதட்டத்தை உருவாக்காத வகையில் சொல்லாமல் இருப்பதற்கும் இடையிலான நிலையை தலைவர்கள் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? என்று கேட்டேன். எங்களிடையே நடந்த உரையாடலின் உரைவடிவம் பின்வருமாறு.

சீன் இல்லிங்: உங்கள் வாழ்நாளில் 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்க்கு மிக நெருக்கமானதாக கொரோனா வைரஸ் இருப்பதாக நீங்கள் காண்கிறீர்களா?

பாரி: வேறு எதுவும் இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்க்கு பக்கத்தில் செல்ல முடியாது. 2009ஆம் ஆண்டு எச் 1 என் 1 பரவத் தொடங்கிய போது, அது மிகவும் மோசமாக இருக்கக்கூடும் என்ற அச்சங்கள் இருந்தது உண்மைதான். ஆனால் அது மிகவும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியது. மூலக்கூறு உயிரியல் இல்லாதிருந்தால், அது ஒருபோதும் இந்த அளவிற்கு கவனிக்கப்பட்டிருக்காது. 1918 முதல் நாம் கண்டிருக்கும் எந்த நோயும் இப்போது நடந்து கொண்டிருப்பதை நெருங்கவில்லை. இது வெறுமனே ஒரு தலைமுறைக்கான வைரஸ் என்றாகி விட்டால், நாம் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்.

சீன் இல்லிங்: 1918ஆம் ஆண்டு நாம் எதிர்கொண்ட சூழலிருந்து இன்றைய நிலைமை எவ்வாறு வேறுபடுகிறது?

பாரி: மிகப் பெரிய வித்தியாசம் இந்த நோயின் இலக்காக இருக்கும் மக்கள் ஆகும். 1918ஆம் ஆண்டு, இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் 18 வயது முதல் 45 வயது வரை இருந்தவர்கள். அப்போதைய இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு தோராயமாக அந்த வயதினரிடையே இருந்தது. 1918ஆம் ஆண்டில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இறப்புகள் 65 வயதிற்கு குறைவானவர்களிடமே இருந்தன. 1918ஆம் ஆண்டில் இருந்த வயதானவர்கள் தங்களுடைய இளமைப் பருவத்தில், 1918 வைரஸுக்கு நிகரான மிதமான வைரஸ்ஸை எதிர்கொண்டு அனுபவித்திருக்கிறார்கள். அதன் விளைவாக அவர்களிடம் இருந்த இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அந்த வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்குப் போதுமானதாக இருந்தது.


மற்றொரு வேறுபாடு நோயரும்பும் காலம் குறித்ததாக இருக்கின்றது. 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சாவின் சராசரி நோயரும்பும் காலம் இரண்டு நாட்கள் ஆகும். அது நான்கு நாட்களுக்கு மேல் இருந்ததில்லை. ஆனால் கொரோனா வைரஸின் சராசரி நோயரும்பும் காலம் இரண்டு மடங்கு அதிகமானது. அதை இன்னும் சற்று கூடுதலாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்பது ஒரு நல்ல விஷயமாக இருக்கின்ற நேரத்தில், மிகவும் மோசமானதாகவும் இருக்கின்றது.இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்களின் போது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருந்த தொடர்பு, தடமறிதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களுக்குத் தேவைப்படுகின்ற கால அவகாசத்தைத் தருவதாக கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால், அது நன்மை தருவதாக இருக்கிறது. ஆனால் மிக நீண்ட காலத்திற்கு நீள்வதால், மேலும் அதிகமான மக்களைப் பாதிக்கக்கூடும் என்பது இந்த வைரஸைப் பொறுத்த வரை மிகவும் மோசமானதாக இருக்கிறது. இன்ஃப்ளூயன்ஸாவை விட மிக மோசமான தொற்றுநோயாக இது இருப்பது தெரிகிறது.

இங்கே ஒரு நேர்மறையான வேறுபாடும் உள்ளது. இது மிக மோசமான தொற்றுநோயாக இருந்தபோதிலும், இந்த வைரஸால் ஏற்படுகின்ற இறப்பு விகிதம் 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்ஸாவை விட மிகக் குறைவாகவே இருப்பது தெரிகிறது. 1918ஆம் ஆண்டில் இறப்பு விகிதமானது, மேற்குலக நாடுகளில் குறைந்தது 2 சதவீதம் என்ற அளவில் இருந்தது. உலகின் பிற பகுதிகளில் இது இன்னும் அதிகமாக இருந்தது. அப்போது ஈரானின் மொத்த மக்கள்தொகையில் 7 சதவிகிதம் பேர் இறந்து போயினர். மெக்ஸிகோவின் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் பேர் இறந்திருக்கலாம். 1918 காய்ச்சல் ஏற்படுத்திய உண்மையான இறப்பு விகிதம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எவ்வாறாயாயினும், 1918 ஆம் ஆண்டில் மொத்தம் 5 முதல் 10 கோடி உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன.


சீன் இல்லிங்: அரசாங்கங்கள், உள்ளூர் சமூகங்கள், தனிநபர்கள் 1918 ஆம் ஆண்டு செய்த மிகப்பெரிய, மிக மோசமான தவறு எது என்று உங்களால் சொல்ல முடியுமா?

பாரி: அரசு அப்போது பொய் சொன்னது. எல்லாவற்றையும் பற்றி அவர்கள் பொய் சொன்னார்கள். அப்போது நாம் போரில் ஈடுபட்டிருந்தோம். போருக்கான முயற்சியைத் தவிர்க்க விரும்பாததால், அவர்கள் பொய் சொன்னார்கள். பொது சுகாதாரத்தை ஒருங்கிணைத்தவர்கள், இது வேறு பெயரில் உள்ள ஒரு சாதாரண காய்ச்சல் என்று மக்களிடம் கூறினார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் மக்களிடம் சொல்லவே இல்லை.

சீன் இல்லிங்: அந்த பொய்களைத் தகர்ப்பதற்கு, உண்மைக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?

பாரி: அதிக நாள் தேவைப்படவில்லை. நோயின் அறிகுறிகள் முதலில் தோன்றிய 24 மணி நேரத்திற்குப் பிறகு தங்கள் அருகே வசித்து வந்தவர்கள் இறக்கத் தொடங்கியபோதே, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மிக விரைவிலேயே உணர்ந்து கொண்டனர். மூக்கிலிருந்து, வாயிலிருந்து, கண்கள் மற்றும் காதுகளில் இருந்து ரத்தப்போக்குடன் தெருக்களில் மக்கள் காணப்பட்டனர். அது மிகவும் பயங்கரமாக இருந்தது. சாதாரண காய்ச்சல் இல்லை என்பதை அனைவரும் மிக விரைவாகவே புரிந்து கொண்டனர்.

சீன் இல்லிங்: அந்த பொய்யின் விளைவுகள் எவ்வாறு இருந்தன?

பாரி: அது மிகப் பெரிய பேரழிவாகவே இருந்தது. தங்கள் அரசாங்கத்தின் மீது, தங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் மீது, மேலும் ஒருவருக்கொருவர் என்று மக்கள் முழுமையாக நம்பிக்கையை இழந்து நின்றனர். அது மக்களை மேலும் தனிமைப்படுத்தியது. நம்பிக்கை சரிகின்ற போது, இந்த அளவிலான நெருக்கடியில் மிக மோசமான உள்ளுணர்வாக, அனைத்தையும் தாமே சுமந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு விடுகிறது.


பெரும்பாலான பேரழிவுகளின் போது, சமூகங்கள் ஒன்றிணையும். மிகப் பெரிய சமூக கட்டமைப்புகள் அச்சுறுத்தலுக்குள்ளான வேளையில் சில இடங்கள், நகரங்கள் அவ்வாறு இருந்தன. சமுதாயத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் படிப்படியாக நம்பிக்கை எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பது பற்றியும், அதன் விளைவாக ஏற்பட்ட தொடர்விளைவுகளைப் பற்றியும் நான் எனது புத்தகத்தில் எழுதியிருந்தேன். நடைமுறை விளைவுகளும் அப்போது ஏற்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக, அப்போது உருவாகியிருந்த நம்பிக்கையின்மை, முக்கியமான பொது சுகாதார நடவடிக்கைகள் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை கடினமாக்கி விட்டது. தங்களிடம் சொல்லப்படுவதை மக்கள் நம்பவில்லை. நிலைமை குறித்து அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தபோது, அது பெரும்பாலும் தாமதப்படுத்தப்பட்டு விட்டது. வைரஸ் ஏற்கனவே பரவலாக பரவி விட்டது. பொய்யும், நம்பிக்கையின்மையும் இணைந்து ஏராளமான உயிர்களைப் பறித்துக் கொண்டன.

சீன் இல்லிங்: அந்த நேரத்தில் ’பூமியிலிருந்து மறைந்து விடப் போகிறோம்’ என்பதாக, மனித நாகரிகத்திலிருந்து வெளியேறுகின்ற சில வாரங்கள் தொலைவிலேயே நாம் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்த அறிவியலாளர் ஒருவரை நீங்கள் மேற்கோள் காட்டி இருந்தீர்கள். அப்போது நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது?

பாரி: மிகவும் மோசமாக இருந்தது. சில இடங்கள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன என்றாலும் கிராமப்புற சமூகங்களில் மக்கள் பட்டினியால் அவதிப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருந்தது. அவர்களுக்கான உணவைக் கொண்டு சென்று அளிக்க அனைவரும் பயந்தார்கள். பீதியும் பயமும் அப்போது அந்த அளவிற்குத் தீவிரமாக இருந்தது. அந்த நிலைமை சமூகத்தை அதன் விளிம்பிற்குத் தள்ளியது.

சீன் இல்லிங்: பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதைச் சொல்வதற்கும், வெகுஜன மக்களிடையே பதட்டத்தை உருவாக்காத வகையில் அவற்றைச் சொல்லாமல் இருப்பதற்கும் இடையில் இருக்கின்ற கடினமான பதற்றம் குறித்து, 1918 தொற்றுநோய் குறித்து ஆய்வு செய்திருக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


பாரி: இது எப்போதும் இருக்கின்ற கேள்விதான். நான் சொல்வது சரிதான் என்பதை உறுதிப்படுத்துகின்ற அறிவியல் ஆய்வுகள் என்னிடம் இல்லை, ஆனாலும் எனது பார்வை என்னவாக இருக்கிறதென்றால், நிச்சயமற்ற நிலைமையை சமாளிப்பதை விட, யதார்த்தத்தையும் உண்மையையும் மக்கள் எளிதாகச் சமாளிப்பார்கள். நீங்கள் ஒரு திகில் படம் பார்க்கிறீர்கள் என்றால், அதில் வருகின்ற அசுரனை மிகவும் பயமுறுத்துகின்றவனாக பார்ப்பதாகவே உங்கள் கற்பனை எப்போதும் இருக்கும். அந்த அசுரன் திரையில் தோன்றியவுடன், அவன் எவ்வளவு கொடூரமானவாக இருந்தாலும், உங்களுக்குள் அந்த பிம்பம் உறுதியானதும் பயம் குறைந்து போய் விடும். இதனால்தான் ’வருதீங்கு குறித்த அறிவிப்பு’ என்பதை நான் வெறுக்கிறேன். ஏனெனில் அது உண்மை நிர்வகிப்படுவதை குறிப்பதாகவே இருக்கிறது. எனது பார்வையில், நீங்கள் உண்மையை நிர்வகிக்க வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லுங்கள்.

சீன் இல்லிங்: இந்த நெருக்கடி குறித்து அதிபர் ட்ரம்ப்பின் ஆரம்பகட்ட பதில்களாக நோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவது, விமர்சனங்களை எல்லாம் ‘புரளி’ என்று நிராகரித்ததே இருந்தன. மிகஅண்மையில் ஃபாக்ஸ் நியூஸ் அதை குறைத்தே மதிப்பிட்டது. இப்போது அனைவரின் தொனியும் மாறிவிட்டது என்றே நான் நினைக்கிறேன். இருந்தாலும் அந்த ஆரம்பகாலத் தவறுகள் நமக்கு தீங்கிழைக்குமா?

பாரி: நிச்சயமாக. அது நமக்கு தீங்கிழைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், நேர்மை என்பது ட்ரம்பின் சுயநலத்திற்கானதாக இருப்பதுதான். மூடிய கதவுகளுக்குப் பின்னால், இப்போதிருக்கும் நிலைமை குறித்த முழு உண்மைகளும் அவருக்கு சொல்லப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை பகிரங்கமாகச் சொல்வதை அவர் குறைத்துக் கொள்கிறார் என்பது கணக்கிட முடியாத வழிகளில் நமக்கு தீங்கையே விளைவிக்கும்.

சீன் இல்லிங்: 1918இல் இருந்த கூட்டு எதிர்வினையில் எந்த அளவிற்கு இப்போது நமது எதிர்வினை இருக்கிறது?


பாரி: உண்மையில் 1918இல் அவ்வாறு கூட்டு எதிர்வினை இருந்ததாக உங்களால் சொல்ல முடியாது. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்தில் மிகவும் மாறுபட்டதாகவே அது இருந்தது. ஆனாலும் பாருங்கள், அதிபர் பதவியைக் கேவலப்படுத்துகின்ற ஜனநாயக சதி என்று இந்த வைரஸ்ஐக் கூறுபவர்கள் இங்கே இருக்கிறார்கள். இப்போது யாரும் அதைச் சொல்லவில்லை என்றாலும், இந்த சவாலை நாம் கூட்டாக எதிர்கொள்வோமா என்பது பதிலளிக்க வேண்டிய திறந்த கேள்வியாகவே உள்ளது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, நாம் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றோம்.

ஆரம்பகால சோதனைகளை நாம் மோசமாகவே செய்தோம். சமூக விலகலுக்கான அழைப்பை பொதுமக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் விஷயங்கள் விரைவாக மாறிக் கொண்டே இருக்கின்றன. இது எந்த அளவிற்கு மோசமாகப் போகிறது அல்லது தென்கொரியா போன்ற நாடுகளைப் போன்று மிக விரைவாகத் திறம்பட வெல்லப் போகிறது என்பதை, பொதுமக்கள் எந்த அளவிற்கு முன்வருகிறார்கள், பொது சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகளுடன் எந்த அளவு அவர்கள் இணங்கிப் போகிறார்கள் என்பதே தீர்மானிக்கப் போகின்றது. நமக்கும் அதே போன்ற வெற்றி கிடைக்குமா என்பது எனக்குத் தெரியாது. இப்போது அதைச் சொல்ல முடியாது.

நன்றி: https://bookday.co.in

No comments:

Post a Comment