முதல் பக்கம்

Apr 2, 2012

தகுதித்தேர்வு-நியாயமான சில கேள்விகள்...



சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள் தமிழகத்தின் கல்விச்சூழலில் சற்றே தணிந்துள்ள நிலையில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு குறித்த குழப்பங்களும் கேள்விகளும் புலம்பல்களும் தமிழகமெங்கும் கேட்டுக் கொண்டே இருக்கிறது..

2010,ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் (ஆங்கிலத்தில் டெட் என்று சொல்கிறார்கள்..) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற கல்வி உரிமைச் சட்டம்-2009ஐக் காரணம் காட்டி, இத்தேர்விற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களின் தரம் குறித்து எவ்வித சமரசத்திற்கும் இங்கே நாம் இடம்கொடுக்க முடியாது.. தகுதியான சிறப்பான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்படவேண்டும் என்கிற கருத்துக்கு மாற்றுக்கருத்து யாரும் சொல்ல முடியாது..

தகுதியான ஆசிரியர்கள் தகுதித்தேர்வும், போட்டித்தேர்வும் எழுதி ஆசிரியர் பணிக்குச் செல்லட்டும் என்கிற வாதமும் ஆசிரியர்களை வடிகட்டியே நியமிக்க வேண்டும் என்கிற கருத்தும் பரவலாக பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.. இவை ஒருபுறமிருக்க பெரும் செலவு செய்து ஆசிரியர் பட்டயப் பயிற்சியோ, இளங்கலை கல்வியியலோ படித்துப் பல ஆண்டுகளாக, பதிவு மூப்பின் அடிப்படையில் நமக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் நண்பர்களின் கனவையும் நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது..

தகுதித் தேர்விற்காக ஒரு நபர் செலவு செய்யும் தொகை ஏறக்குறைய ரூ.600. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான நண்பர்கள் விண்ணப்பிக்கும் சூழலில் அதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானம் மட்டும் ரூ.30 கோடியைத் தாண்டும்.. பயிற்சி முடித்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஓடி ஓடி விண்ணப்பம் வாங்கும் காட்சியைத் தொலைக்காட்சியிலும் நேரிலும் பார்க்கும் போது இதயம் கனக்கிறது.. கண்கள் சிவக்கிறது!

தகுதித் தேர்வில் தேர்ச்சியடையும் நண்பர்கள் தான் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் எனும் சூழல் ஏற்படும்போது தோல்வி அடைந்தவர்களின் கதி? இவர்களுக்கு  ஆசிரியர் பணியாற்ற  தகுதியில்லை எனில் அது அவர்களின் குற்றமா? கோடிக்கணக்கில் வாங்கிக்கொண்டு தெருவெங்கும் திறந்துவிட்ட அரசின் குற்றமா? லட்சக்கணக்கில் வாங்கிக்கொண்டு வந்தவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்ட நிறுவனத்தின் குற்றமா? பயிற்சியளித்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் குற்றமா? முறையாகப் பயிற்றுவிக்காத அவர்களுக்கு ஏன் இவ்வளவு உயரிய சம்பளம்? சரி, இந்த அரசுத்தேர்வுகள் இயக்ககம் எதற்கு? பல்கலைக் கழகம் எதற்கு? பயிற்சி முடிவில் தேர்வு எதற்கு? இதுபோன்று நமக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது?

மாணவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் கல்வியின் நோக்கமெனில் தகுதியான ஆசிரியர்களை ஓராண்டு, ஈராண்டு காலத்தில் கல்வியியல் படிப்பில், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் உருவாக்காத , உருவாக்க முயலாத அரசு/அரசு உதவி/தனியார் கல்லூரிகளை யார் கேள்வி கேட்பது?

ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்தவேண்டும்.. செய்முறைத்தேர்வுகளும் எழுத்துத் தேர்வுகளும் நியாயமான முறையில் நடத்தவேண்டும்.. சுயநிதி கல்வியியல் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.. இல்லையெனில் அவற்றை இழுத்து மூட வேண்டும்.. எந்த சூழலிலும் கல்வி வியாபாரமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.. இவற்றையெல்லாம் அரசு செய்ய முன்வருமா? கல்வியில் தனியார்மயத்தை அனுமதித்ததன் விளைவுதான் மேற்குறிப்பிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் இந்த அரசு உணர்ந்திருக்கிறதா? அல்லது உறங்குவதுபோல் நடிக்கிறதா?

தகுதித்தேர்வும் போட்டித்தேர்வும் கட்டாயம் எனும்சூழலில் ஆசிரியர் கல்வி பயிற்சி கல்லூரிகளும் கல்வியியல் கல்லூரிகளும் அறவே தேவையில்லையே.. பல்கலைக் கழகங்களும் பேராசிரியர்களும் தேவையில்லையே.. சரி, பயிற்சி இல்லாமல் ஆசிரியர் பணியை எவ்வாறு அனுமதிப்பது என்ற கேள்வி எழலாம். மாவட்ட அளவில் அனைத்து நிகழ்வுகளையும் நிர்வகிக்கும் இந்திய ஆட்சிப்பணிக்கு எந்த கல்லுரியில் பாடம் நடத்தப் படுகிறது..

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பனிரெண்டாம் வகுப்பு படித்தாலே போதும்! பட்டதாரி ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும்! தகுதித்தேர்வும் போட்டித்தேர்வும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையைச் செய்யட்டும். எதிர்காலத்தில் ஆசிரியர் பணிக்கு வர விரும்பும்(!) மாணவர்களுக்கு பெரும் தொகையும் காலமும் பெருமளவு சேமிப்பாகும்..

புதுப்புது தேர்வுகளை நடத்தும் அரசு பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துவைத்து ஆசிரியர் பணிக்காக காத்துக்கிடப்போருக்கு  என்ன பதில் வைத்திருக்கிறது? வேறு தொழிலைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லப்போகிறதா?

அரசின் தவறான கல்விக்கொள்கையால் இலாபமடைவது தனியார் கல்வியியல் கல்லூரிகளை நடத்தும் கல்வி வள்ளல்களே! தகுதியான ஆசிரியர்களை உருவாக்காத அவர்களை யார் தண்டிப்பது? எது எப்படியோ.. தலையில் முக்காடு போட்டுக்கொள்ளப் போவது பாவம்.. அப்பாவி பொதுமக்கள்தான்!
-வி.வெங்கட்ராமன்_8870703929

No comments:

Post a Comment