முதல் பக்கம்

Apr 10, 2012

கணக்கும் இனிக்கும்-புதிய ஆசிரியன் கட்டுரை


 தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை கணக்கு! பிடிக்காத பாடம்  கணக்கு! பிடிக்காத வாத்தியார் கணக்கு வாத்தியார்! கணித ஆண்டு என்று சொன்னதுமே எனக்குச் சில விசயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனத் தோன்றியது. அதன்விளைவுதான் இந்த பகிர்வு. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு. ரோஜா டீச்சர் கணக்கில் வடிவியல் பாடம் நடத்துனாங்க. கையிலே வடிவியல் நோட்டு,  காம்பஸ் எல்லாம் எடுத்தாச்சு. வரையுறேன்.. வரையுறேன்.. தப்புத் தப்பா வருது.. கடைசி வரைக்கும் வட்டம் மட்டும் வரவேயில்லை.  நாங்க என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம். டீச்சர் போட்டாங்க பாருங்க முதுகுல.. அன்னைக்குத் தொடங்கியதுதான் பகை.! ஒரு கட்டத்துல கணக்குப் பாடத்துக்குப் பயந்தே எட்டாம் வகுப்பிற்கு பிறகு நான் படிக்கவில்லை. திராட்சைத் தோட்டத்துக்கு காக்கா விரட்டப் போறேன்னு சொல்லி தெருத்தெருவாக நான் ஓட, எங்கப்பா சைக்கிள எடுத்துக்கிட்டு தேட... அது ஒரு சில வாரங்கள்...

ஒருவழியாக பக்கத்து ஊரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். அங்க ஒரு கணக்கு வாத்தியார். இன்னிக்கும் கூட சுருளிமுத்து வாத்தியார்`னா பலபேருக்கு டவுசர் நனைஞ்சுடும். அந்த அளவுக்கு அதிரடி மன்னன் அவரு. ஏண்டி, கெழவி புருஷா.. இந்தக் கணக்குத் தெரியலையா?ன்னு விட்டு விலாசுவாரு. பொதுத்தேர்விலும் கூட மிகக் குறைந்த மார்க் எடுத்தே நான் தப்பி வந்தேன். மேல்நிலை வகுப்பில் எந்த பிரிவு தேர்ந்தெடுப்பது என யோசிக்கையில் எந்த பிரிவில் படம் வரையும் தொல்லையில்லையோ, கணக்குச் சனியன் இல்லையோ- அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் நான் படிக்கத் தயார் என வணிகவியல் பிரிவில் சேர்ந்தேன்..

அப்படி இப்படின்னு கவுன்சிலிங்கில் சீட் கிடைக்க ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கும் ஒரு கணக்கு வாத்தியார், மனுசன் சிரிக்கவே மாட்டார்.. பாஸ் பண்ணும் அளவுக்கு தியரி இருந்ததால் அங்கும் தப்பித்தேன். இப்ப நான் ஒரு அரசுப் பள்ளியில் வாத்தியார். என்னால் முடிந்த அளவு சின்சியராகப் பணிபுரிகிறேன். ஆனாலும் என் வகுப்பு மாணவர்கள் கணக்கில் அவுட்தான். என்னையும் அறியாமல் எனக்குச் சொல்லிக்கொடுத்த வாத்தியார்கள் போலவே நானும் கணக்கு வகுப்பில் செயல்பட்டிருக்கிறேன். அந்த வகுப்பில் மட்டும் எங்கிருந்துதான் வருமோ.. அவ்வளவு கோபம்! சிடுசிடுப்பு!

பின் நானாக உணர்ந்தேன். கணக்கு, அறிவியல் படிக்காமல் விட்டதால் நான் இழந்த வாய்ப்புகளை நினைத்தேன். நாம் புரிந்துகொண்ட நிலையில் இருந்து கற்பிக்காமல் மாணவர்கள் ஒரு கணக்கை, கருத்தை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என அறிந்து அதற்கேற்றவாறு கற்பிக்கவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஒரு கல்வி கருத்தரங்கில் கிடைத்த பாடம், என்னை அடியோடு மாற்றிவிட்டது என்றே சொல்லலாம். கடினமான பாடங்களை குறிப்பாக கணக்கு, ஆங்கிலம் போன்றவற்றை துவக்கநிலை வகுப்புகளில் கற்பிக்கும்போது குறைந்தபட்சம் அன்புடனாவது கற்பிக்க வேண்டுகிறேன். வகுப்பில் சிறுசிறு பயிற்சிகளின் மூலம் அவனுக்கு எளிய கணக்குகளில்  வெற்றிகிடைக்கச் செய்கிறேன். நம்பிக்கையூட்டுகிறேன். ஏனென்றால் இங்கு வெற்றிபெற வேண்டியது ஆசிரியரோ, கணக்குப் பாடமோ அல்ல.. மாணவன்! அதிக அளவு கணக்கு பாடங்களை நடத்தி அவனை ஒருபோதும் நான் மிரட்டுவதில்லை. விரட்டுவதில்லை. குறைந்த அளவு பாடம்.. அதிக பயிற்சி. விருப்பத்தை ஏற்படுத்திய பிறகு நீங்கள் போதும் என்றாலும் அவன் விடமாட்டான்.


சின்ன வகுப்புல இருந்தே மத்த பாடத்தில் எல்லாம் சிறப்பான மதிப்பெண்கள் எடுக்கும் என்னால் கணக்குல மட்டும் அவ்வளவு எளிதாக தேர்ச்சி கூட பெற முடியலை. காரணம்.. பிடிக்கலை! கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டில் என்னைப்பொறுத்தவரை ஒரே ஒரு வேண்டுகோள், கணக்கும் இனிக்கும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்துங்கள். கணக்குப் பாடம் கடினம் என்பதை உடைத்தெறியுங்கள்! கணக்குப்பாடம் நடத்தச் செல்லும்போது கோபத்தை வாசலில் நிற்க வைத்துவிட்டு நீங்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள்.. நிறைய சிரியுங்கள்.. உடம்புக்கு நல்லது. உங்க மனசுக்கு நல்லது.!

பல நேரங்களில் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் திருக்குறள் ஒன்று உள்ளது...

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை யாதார்.(குறள் 650)

-தேனி.சுந்தர்-9488011128
நன்றி: புதிய ஆசிரியன்,ஏப்ரல்,2012_www.puthiyaaasiriyan.com

No comments:

Post a Comment