முதல் பக்கம்

Nov 25, 2012

வெள்ளி விழா 2012

நவம்பர்.23 (வெள்ளி) துளிர் வெள்ளி விழா ஆண்டின் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு சென்னை பல்கலை கழக வளாகத்தில் மிக சிறப்பாக துவங்கியது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், துளிர் , சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை, மானுடவியல் துறை இணைந்து ” இந்திய அறிவியல் பத்திரிகை முன்னுள்ள சவால்கள் “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தின் துவக்க நிகழ்ச்சி காலை 10. 30 மணியளவில் சென்னை பல்கலை கழக இதழியல் துறை தலைவர் முனைவர்.G. ரவீந்திரன் தலைமையில் துவங்கியது. இக்கருத் தரங்கத்தில் அறிமுகவுரையினை துளிர் ஆசிரியர் முனைவர். R. இராமானுஜம் ஆற்றினார். இதனை தொடர்ந்து வாழ்த்துரையினை சென்னை பல்கலை கழக மானுடவியல் துறை தலைவர் முனைவர். சுமதி, புதுதில்லி விஞ்ஞான் பிரச்சார் பதிவாளர் முனைவர். T.V.வெங்கடேஸ்வரன் வழங்கினார்கள். இறுதியாக தலைமையுரையினை இரவீந்திரன் ஆற்றினார். துவக்க நிகழ்ச்சிக்கான வரவேற்புரையினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில பொது செயலாளர் திரு.M.S.ஸ்டீபன்நாதனும் துளிர் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. ஹரீஷ் நன்றியினையும் கூறினார்கள்

2வது அமர்வாக முனைவர் . A. வள்ளிநாயகம் தலைமையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க இதழ்களின் அனுபவம் & மற்ற இதழ்களின் அனுபவம் குறித்து அனுபவ பகிர்வு நடைபெற்றது. இதில் கிழக்கு பதிப்பகம் திரு.பத்ரி, ” அறிவியல் ஒளி” சிதம்பரம் ஆகியோர் தாங்கள் நடத்தும் இதழ்களின் அனுபவத்தினை பகிர்ந்துகொண்டனர். இதனை தொடர்ந்து அறிவியல் இயக்க இதழ்கள் சார்பாக ” துளிர்” பற்றி துளிர் இணை ஆசிரியர் திரு.பாலகிருஷ்ணன், ” விழுது ”ஆசிரியர் திரு,மாதவன், ” விஞ்ஞான சிறகு” திரு. இல.நாராயணசாமி, ” அறிவு தென்றல் “ மொ.பாண்டிய ராஜன், ” ஜந்தர் மந்தர் ” ஆசிரியர் முனைவர் இந்துமதி ஆகியோர் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டனர்.

3வது அமர்வாக தமிழ்நாடு அறிவியல் இயக்கதின் மாநில தலைவர் முனைவர்.N மணி தலைமையில் மாநில பொருளாளர் திரு.எஸ்.சுப்பிரமணி முன்னிலையிலும் ” இந்திய பத்திரிகை முன்னுள்ள சவால்கள் குறித்த விவாதம், மற்றும் குழந்தைகள் அறிவியல் பத்திரிக்கை செயல்திட்டம்” பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் முனைவர்.R.இராமனுஜம், C.ராமலிங்கம், புதிய ஆசிரியர் ஆசிரியர் திரு. கி.ராஜூ, வேலூர் மாவட்ட அறிவியல் அலுவலர் திரு.லெனின் தமிழ்கோவன் கருத்துகளை முன்வைத்தனர். மேலும் கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்களின்அனுபவத்தினையும், கருத்துகளையும் தெரிவித்தனர். இறுதியாக நன்றியினை தென்சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் திரு. உதயன் நன்றியினை தெரிவித்துகொண்டனர். இக்கருத்துரங்கத்தில் 120க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தூக்கி நிறுத்திய துளிர்- மொ. பாண்டியராஜன்

வணக்கம், துளிருக்கும் எனக்கும் வயது ஒன்று அல்லது இரண்டு தான் வித்யாசம் இருக்கும். அப்படி என்றால் என்னுடை உறவு துளிரோடு 24 அல்லது 23 ஆண்டுகள் இருக்கும். எனக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது(1988) எங்க கல்லூரி மாணவர் வெங்கடேஷன் எனுடைய சீனியரும் கூட, நானும் அவரும் கணிதம் பிரிவில் படித்துக்கொண்டிருந்தோம். அவர் ஒரு நாள் எங்கஊர் கம்மாகரையில ஒரு புத்தக கட்டை பின்னால் வைத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார். வழியில் என்னைப்பார்த்த அவர் பாண்டி, எங்கிட்ட ஒரு புத்தகம் இருக்கு, இரண்டுரூபா தான் வாங்கிக்க என்றார். நான் எங்க அம்மாவிடம் 50 காசுக்காக நாள்கணக்கா கெஞ்சி வாங்கிகிட்டு காலேஜுக்கு போரவன். ரெண்டு ரூபா என்னைக்கு கொடுக்கமுடியுமா? அண்ணே எங்கிட்ட காசு இல்லன்ணே என்றேன்.  காசெல்லாம் வேணாம் நீ படிச்சா போதும் என்று கொடுத்தார். அப்படிதான் எனக்கு துளிர் அறிமுகமானது. 
 
அதன்பிறகு இது எனக்கு தொடர்ந்து கிடைக்காதா என்று ஏங்கிகொண்டிருந்த போது, பேராசிரியர். ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு ஒரு ஆண்டு சந்தா செலுத்தி என் வீட்டிற்கே புத்தகம் வர ஏற்பாடு செய்துவிட்டார். ( காரணம் நான் கல்லுரியில ஒரு கையெழுத்து பிரதி நடத்திக்கொண்டிருந்தேன். அதை படித்துவிட்டு தான் எனக்கு இந்த சந்தாவை செலுத்திருக்கிறார். அது பின்னாலில் தெரிந்துகொண்டேன்) என்னுடைய விலாசத்திற்கு அதுவரை ஒரு கடிதமோ அல்லது வேறு எதுவுமே தபால் மூலமாக வந்தது இல்லை. ஆனால் முதன் முதலாக என்னுடைய வீட்டிற்கு தபால் மூலமாக வந்தது துளிர்தான். அதை முதன் முதலாக தபால் காரரிடம் வாங்கியபோது அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை தொடர்ந்து படித்துவந்தேன். எங்க வீடு கூறை வீடு என்பதாலும், ஒரே ஒரு அறைமட்டுமே இருந்ததாலும் என்னால் புத்தகங்களை சேகரித்துவைக்க முடியவில்லை. மேலும் நான் வைத்திருந்த புத்தகங்களும் கறையான் அரித்துவிட்டது. மண்சுவர் என்பதால் அதை தடுக்கமுடியவில்லை. 
 
ஆனால் அன்றைக்கு வந்த துளிர் என்னை அறிவியல் மீது மிகுந்த ஆர்வத்தை தூண்டியது மட்டுமல்லாமல் எழுதவும் தூண்டியது. துளிருக்கும் நான் எழுதினேன். அப்போது சொந்த பெயரில் எழுதினால் யாரும் பத்திரிக்கையில் போடமாட்டார்கள் என்று எனக்கு யாரோ சொல்ல நான் யுகன் என்ற புனைப் பெயரில் எழுதினேன். 1990 வரை எழுதினேன் ம்கும்... ஒரு எழுத்தும் வரவில்லை. நான் கல்லூரியை விட்டு வந்த பிறகு எனக்கு துளிர் வாங்குவதற்கான வாய்பு போய்விட்டது. 1991,1992 ஆகி ஆண்டுகளில் எனக்கு துளிர் கிடைக்கவே இல்லை. அவைகள் சும்மா வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலம். ஆனால் ஏ.ஆர்.கே காலனி, எல்டாம்ஸ் ரோடு என்ற விலாசம் மட்டும் என் மனதைவிட்டு நீங்கவில்லை. அதற்கு நான் எனக்கு கிடைக்கின்ற தகவல்களோடு அறிவில் மற்றும் கதை பாடல் போன்றவை எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன். எந்தவித முன்னேற்றமும் இல்லை. புத்தகத்தில் வந்திருக்கிறதா? இல்லையா என்று கூட என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. 
 
அதே நேரத்தில்தான் அறிவொளி இயக்கம் வந்தது. பேரா.ஸ்ரீகிருஷ்ணன் என் நண்பன் ஜெரால்ட் மூலமாக என்னை அறிவொளிக்கு அழைத்தார். துளிர் எனக்கும் மீண்டும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து துளிர் தொடர்ச்சியாக கிடைத்தது. தொடர்களும் சமயத்திற்கு தேவையான நேரங்களில் அவற்றை பற்றிய அறிவியல் செய்திகளையும் துளிர் தாங்கி வந்தது. விளையாட்டை பொறுத்தவரை உலக கால்பந்து போட்டியின் போது அது குறித்த அறிவியல் செய்திகள், உலக சினிமா பற்றிய செய்திகள். கிரிக்கெட் குறித்த அறிவியல் என்று பல்வேறு தலைப்புகளில் மிக எளிமையாக வந்துகொண்டிருந்தது. ஆனாலும் நான் எழுதுவதை நிறுத்தவில்லை. 1993ல் கார்த்திகா என்ற பெயரில் நான் எழுதிய கணிதம் குறித்த ஒரு புதிர் கணக்குத்தான் துளிரில் வெளிவந்த முதல் என்எழுத்து. அது கூட சுஜாதா அவர்கள் எழுதியது நான்தான் என்று கண்டறிந்து கொண்டார்கள். வள்ளிதாசனும் சுஜாதாவும் துளிருக்கான படைப்புகளை படைப்பதற்கான பணி மனைகளை புதுக்கோட்டை தஞ்சதவுர் போன்ற இடங்களில் தொடர்ந்து நடத்தினதன் விளைவுதான் நான் தற்போது எழுதுவதற்கான தூண்டுகோலாக அமைந்தது. 
 
அதுமட்டுமல்ல பல்வேறு எழுத்தாளர்களைக்கொண்டு எழுதுவதற்கான பயிற்சி மற்றும் எப்படிப்பட் அறிவியல் தகவல்கள் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவை போன்ற தெரிந்துகொள்வதற்கான கருத்தரங்குகளையும் தஞ்சை பல்கலைகழகத்தின் நூல்நிலையங்களையும் திறந்துவைத்து வாய்ப்பை உருவாக்கி கொடுத்தனர். வள்ளிதாசனும் சுஜாதாவும் நடத்திய பயிற்சி பட்டறைக்கு பிறகு எனக்கு தெரிந்து துளிருக்கான பயிற்சி பட்டறை நடைபெறவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதன் பிறகு பா.ஸ்ரீகுமார், அவருக்கு பிறகு சீனிவாசன் அவருக்கடுத்து கணேசன் துளிரை செலுமைப்படுத்தினர். என்னுடைய எழுத்துகள் அப்போதைக்கப்போது வந்து போகும். என்னால் இயன்ற அளவு பங்களிப்பை தொடர்ச்சியாக அளித்துவருகிறேன்.
அன்றைக்கு வந்த இதழ்களில் என்னை மிகவும் கவர்ந்த பல விஷங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு பிடித்த கணக்கு கண்ணப்பன். கண்ணப்பன் திடீரென்று நின்று போனார். அதற்கு என்ன காரணம் என்று பின்னால் நான் தெரிந்துகொண்டது அது குறித்த எந்தவித ஆதரவோ விமர்ச்சனமோ வராத பட்டசத்தில் அதை ஏன் தொடர்ந்து கொண்டுவரவேண்டும் என்று கணக்கு கண்ணப்பன் கேட்டதாக கேள்விபட்டேன்.  மற்றொன்று வானை நோக்குவோம். அதைத் தொடர்ந்து புதிர் கணக்குகள் இன்னும் பல அறிய தகவல்கள் துணுக்குகள், அறிவியல் அறிஞர்களின் படங்கள், வானை பற்றிய தகவல்கள், ஹேல் பாப் என்ற வால் நட்சத்திரம் குறித்த தகவல்கள், ஹையாகுட்டாகே வால் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள்  இது போன்ற எண்ணற்ற வானியல் தொடர்பான அறிய தகவல்களை கண்டு அவற்றை நேரடியாக வானில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்த கொண்டிருக்கிற துளிரின் 25 வது ஆண்டு விழாவான வெள்ளி விழாவில் நானும் பங்கேற்பது மிக்க மகிழ்சியை அளிக்கிறது. ,இது ஒரு கிராமத்துக்காரனை கடைநிலையில் இருந்த ஒருவனை தூக்கி வந்து உயர்த்தி நிறுத்திய துளிரின் சாதனை.

பெரியகுளத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

First Published : 23 November 2012 11:11 AM IST 

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து, இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தின.

 பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். மனோகரன் தலைமை வகித்தார். இந்த இயக்கத்தின் பெரியகுளம் கிளைத் தலைவர் ஏ.எஸ். பாலசுப்பிரமணியன், செயலர் எல். ராம்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். தெய்வேந்திரன் வரவேற்றார்.

 மாவட்டச் செயலர் டி. சுந்தர் தொடக்க உரையாற்றினார். இதில், தேனி மாவட்ட அளவில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆய்வுக் குழுவின் 160 மாணவர்கள் கலந்துகொண்டு, தங்களது ஆய்வுகளை சமர்ப்பித்தனர். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜி. செல்வராஜ், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.

 தமிழ்-முதுநிலைப் பிரிவில் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியரின் மின்சாரத் தட்டுப்பாட்டை போக்க தேவையான வழிமுறைகளைக் கண்டறிதல் என்ற ஆய்வு, தமிழ்-இளநிலை பிரிவில் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒனறிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கிராம ஆற்றல் வளங்களை சரியாக பயன்படுத்தாத தால் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வு, பெரியகுளம் எட்வர்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களின் மின்சார சிக்கனம் என்ற ஆய்வு ஆகிய 3 ஆய்வுகளை, மாநில அளவிலான மாநாட்டுக்கு நடுவர்கள் தேர்வு செய்தனர். மேலும், ஆய்வுகளை சமர்ப்பித்த மாணவர்கள் அனைவருக்கும், இம் மாநாட்டின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் எம். பாண்டியராஜன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

 ஏற்பாடுகளை, கார்த்திகேயன், ரமேஷ், முத்துக்கண்ணன், நந்தகுமார் உள்பட பலர் செய்திருந்தனர். எஸ். ராம்சங்கர் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி

பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் எதிராக ஊடகங்கள் செயற்படுகின்றன - பேராசிரியர் ரவீந்திரன்


வெகுசன ஊடகங்கள் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் பிந்திய, எதிரான ஒரு பணியை வேகமாக செய்கின்றன என்று தெரிவித்த சென்னைப் பல்கலைக்கழக இதழியல்துறைப் பேராசரியரும் துறைத்தலைவருமான முனைவர் கோபாலன் இரவீந்திரன் இதற்கு அரசாங்கமே பொறுப்பு என தனது விசனத்தை தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தந்தை பெரியார் அரங்கில் இடம்பெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையும் மானுடவியல் துறையும் துளிர் சிறுவர்களுக்கான அறிவியல் பத்திரிகையும் இணைந்து நடத்திய இந்திய அறிவியல் பத்திரிகைகளின் முன்னுள்ள சவால்கள் என்ற கருத்தரங்கில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றும் பொழுது தமிழக வெகுசன ஊடகங்கள் சமூதாயத்திற்குப் புறம்பாகவும் பகுத்தறிவுக்கு புறம்பாகவும் செயற்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் வெகுசன ஊடகங்கள் இதே அளவில்தான் இயங்கின. தமிழகத்தில் ஊடகம் மோசமான நிலையடைய பல காரணிகள் உள்ளன.

இரண்டு மூன்று வருடங்களின் முன்பு கோடம்பாக்கத்தில் தொடர் கொலை நடந்த பொழுது ஒரு தமிழக வார இதழ் சைக்கோ கொலை என்று ஒரு வருடமாக எழுதியது. தமிழ் பத்திரிகையின் சொல்லாடல்களைப் பார்த்தால் மிக்க வருத்த்திற்குரியதாக உள்ளன. எல்லாக் கொலைகாரரும் சைக்கோ என்று சொல்லுவதோடு குழந்தையையும் முதியவரையும்கூட சைக்கோ என்றும் நமது ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஒரு பத்திரிகை விபச்சாரம் செய்யும் பெண்ணை அழகி என்று சொல்லும் சொல்லலை தனக்கு சொந்தமாக்கியிருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காக செய்யும் தொழிலை அழகியலாக்கி செய்தி வெளிட்ட பெருமை நமக்கு உண்டு. நித்தியானந்தாவை உருவாக்கியதும் ஊடகங்கள்தான். அதே நித்தியானந்தாவை நித்தி என்று கேலி செய்வதும் ஊடகங்கள்தான். கூடங்குளம் பற்றிய பல உண்மைளை மறைக்கும் வேலையையும் நமது ஊடகங்கள்தான் செய்கின்றன.

எந்த வகையில் பாத்தாலும் வெகுசன ஊடகங்கள் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் பிந்திய எதிரான ஒரு பணியை வேகமாக செய்கின்றன. இவைகளுக்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டுமா என்றும் இதில் நமக்கு என்ன பாத்திரம் இருக்கிறது என்றும் நாம் கருதவேண்டியிருக்கிறது. இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணம் நாம் மட்டுமல்ல, நமது ஊடகங்கள் மட்டுமல்ல அரசங்கமும்தான்.

அறிவியல் சார்ந்த கருத்தும் பகுத்தறிவு சார்ந்த கருத்தும் மக்களுக்கு கிட்டக்கூடாது என்று முனைப்போடு பல காரணிகள் செயற்படுகின்றன. முக்கியமான காரணி அரசாங்கம் என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2012 இல் தர்மபுரியில் நடந்த சம்பவத்திற்கு நவீன தமிழகம் காரணமா? என்ன காரணம் என்று நாம் சிந்திக்க வேண்டும். நாம் ஜாதிய நிலப்புரபுத்துவ சமூகக் கட்மைப்புக்குள் தோய்ந்துபோனவர்கள். இந்த கட்டமைப்புக்குள் தோய்ந்துபோன மனம் அறிவியல் சார்ந்த பார்வையையும் பகுத்தறிவு சார்ந்த பார்வையையும் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? என்று  கேள்வி எழுப்பினார் பேராசரியர் இரவீந்திரன்.

நன்றி: உலக தமிழ் செய்திகள்