வணக்கம், துளிருக்கும் எனக்கும் வயது ஒன்று அல்லது இரண்டு தான்
வித்யாசம் இருக்கும். அப்படி என்றால் என்னுடை உறவு துளிரோடு 24 அல்லது 23 ஆண்டுகள்
இருக்கும். எனக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. நான் கல்லூரியில் இரண்டாம்
ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது(1988) எங்க கல்லூரி மாணவர் வெங்கடேஷன் எனுடைய
சீனியரும் கூட, நானும் அவரும் கணிதம் பிரிவில் படித்துக்கொண்டிருந்தோம். அவர் ஒரு
நாள் எங்கஊர் கம்மாகரையில ஒரு புத்தக கட்டை பின்னால் வைத்துக்கொண்டு
போய்க்கொண்டிருந்தார். வழியில் என்னைப்பார்த்த அவர் ”பாண்டி, எங்கிட்ட ஒரு புத்தகம் இருக்கு, இரண்டுரூபா தான் வாங்கிக்க” என்றார். நான் எங்க அம்மாவிடம் 50
காசுக்காக நாள்கணக்கா கெஞ்சி வாங்கிகிட்டு காலேஜுக்கு போரவன். ரெண்டு ரூபா
என்னைக்கு கொடுக்கமுடியுமா? அண்ணே எங்கிட்ட காசு இல்லன்ணே என்றேன். காசெல்லாம் வேணாம் நீ படிச்சா போதும் என்று கொடுத்தார்.
அப்படிதான் எனக்கு துளிர் அறிமுகமானது.
அதன்பிறகு இது எனக்கு தொடர்ந்து கிடைக்காதா
என்று ஏங்கிகொண்டிருந்த போது, பேராசிரியர். ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு ஒரு ஆண்டு சந்தா
செலுத்தி என் வீட்டிற்கே புத்தகம் வர ஏற்பாடு செய்துவிட்டார். ( காரணம் நான் கல்லுரியில ஒரு கையெழுத்து பிரதி நடத்திக்கொண்டிருந்தேன். அதை
படித்துவிட்டு தான் எனக்கு இந்த சந்தாவை செலுத்திருக்கிறார். அது பின்னாலில்
தெரிந்துகொண்டேன்) என்னுடைய விலாசத்திற்கு அதுவரை ஒரு கடிதமோ அல்லது வேறு எதுவுமே
தபால் மூலமாக வந்தது இல்லை. ஆனால் முதன் முதலாக என்னுடைய வீட்டிற்கு தபால் மூலமாக
வந்தது துளிர்தான். அதை முதன் முதலாக தபால் காரரிடம் வாங்கியபோது அந்த
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை தொடர்ந்து படித்துவந்தேன். எங்க வீடு கூறை வீடு
என்பதாலும், ஒரே ஒரு அறைமட்டுமே இருந்ததாலும் என்னால் புத்தகங்களை சேகரித்துவைக்க
முடியவில்லை. மேலும் நான் வைத்திருந்த புத்தகங்களும் கறையான் அரித்துவிட்டது.
மண்சுவர் என்பதால் அதை தடுக்கமுடியவில்லை.
ஆனால் அன்றைக்கு வந்த துளிர் என்னை
அறிவியல் மீது மிகுந்த ஆர்வத்தை தூண்டியது மட்டுமல்லாமல் எழுதவும் தூண்டியது.
துளிருக்கும் நான் எழுதினேன். அப்போது சொந்த பெயரில் எழுதினால் யாரும்
பத்திரிக்கையில் போடமாட்டார்கள் என்று எனக்கு யாரோ சொல்ல நான் ”யுகன்” என்ற புனைப்
பெயரில் எழுதினேன். 1990 வரை எழுதினேன் ம்கும்... ஒரு எழுத்தும் வரவில்லை. நான்
கல்லூரியை விட்டு வந்த பிறகு எனக்கு துளிர் வாங்குவதற்கான வாய்பு போய்விட்டது. 1991,1992
ஆகி ஆண்டுகளில் எனக்கு துளிர் கிடைக்கவே இல்லை. அவைகள் சும்மா வேலை வெட்டி
இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த காலம். ஆனால் ஏ.ஆர்.கே காலனி, எல்டாம்ஸ் ரோடு என்ற
விலாசம் மட்டும் என் மனதைவிட்டு நீங்கவில்லை. அதற்கு நான் எனக்கு கிடைக்கின்ற
தகவல்களோடு அறிவில் மற்றும் கதை பாடல் போன்றவை எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தேன்.
எந்தவித முன்னேற்றமும் இல்லை. புத்தகத்தில் வந்திருக்கிறதா? இல்லையா என்று கூட
என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
அதே நேரத்தில்தான் அறிவொளி இயக்கம் வந்தது.
பேரா.ஸ்ரீகிருஷ்ணன் என் நண்பன் ஜெரால்ட் மூலமாக என்னை அறிவொளிக்கு அழைத்தார்.
துளிர் எனக்கும் மீண்டும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து துளிர் தொடர்ச்சியாக
கிடைத்தது. தொடர்களும் சமயத்திற்கு தேவையான நேரங்களில் அவற்றை பற்றிய அறிவியல்
செய்திகளையும் துளிர் தாங்கி வந்தது. விளையாட்டை பொறுத்தவரை உலக கால்பந்து போட்டியின்
போது அது குறித்த அறிவியல் செய்திகள், உலக சினிமா பற்றிய செய்திகள். கிரிக்கெட்
குறித்த அறிவியல் என்று பல்வேறு தலைப்புகளில் மிக எளிமையாக வந்துகொண்டிருந்தது.
ஆனாலும் நான் எழுதுவதை நிறுத்தவில்லை. 1993ல் கார்த்திகா என்ற பெயரில் நான்
எழுதிய கணிதம் குறித்த ஒரு புதிர் கணக்குத்தான் துளிரில் வெளிவந்த முதல்
என்எழுத்து. அது கூட சுஜாதா அவர்கள் எழுதியது நான்தான் என்று கண்டறிந்து
கொண்டார்கள். வள்ளிதாசனும் சுஜாதாவும் துளிருக்கான படைப்புகளை படைப்பதற்கான பணி
மனைகளை புதுக்கோட்டை தஞ்சதவுர் போன்ற இடங்களில் தொடர்ந்து நடத்தினதன் விளைவுதான் நான் தற்போது எழுதுவதற்கான தூண்டுகோலாக அமைந்தது.
அதுமட்டுமல்ல பல்வேறு
எழுத்தாளர்களைக்கொண்டு எழுதுவதற்கான பயிற்சி மற்றும் எப்படிப்பட் அறிவியல்
தகவல்கள் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவை போன்ற தெரிந்துகொள்வதற்கான
கருத்தரங்குகளையும் தஞ்சை பல்கலைகழகத்தின் நூல்நிலையங்களையும் திறந்துவைத்து
வாய்ப்பை உருவாக்கி கொடுத்தனர். வள்ளிதாசனும் சுஜாதாவும் நடத்திய பயிற்சி
பட்டறைக்கு பிறகு எனக்கு தெரிந்து துளிருக்கான பயிற்சி பட்டறை நடைபெறவேயில்லை
என்றுதான் தோன்றுகிறது. அதன் பிறகு பா.ஸ்ரீகுமார், அவருக்கு பிறகு சீனிவாசன்
அவருக்கடுத்து கணேசன் துளிரை செலுமைப்படுத்தினர். என்னுடைய எழுத்துகள்
அப்போதைக்கப்போது வந்து போகும். என்னால் இயன்ற அளவு பங்களிப்பை தொடர்ச்சியாக
அளித்துவருகிறேன்.
அன்றைக்கு வந்த இதழ்களில் என்னை
மிகவும் கவர்ந்த பல விஷங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். எனக்கு பிடித்த
கணக்கு கண்ணப்பன். கண்ணப்பன் திடீரென்று நின்று போனார். அதற்கு என்ன காரணம் என்று
பின்னால் நான் தெரிந்துகொண்டது அது குறித்த எந்தவித ஆதரவோ விமர்ச்சனமோ வராத
பட்டசத்தில் அதை ஏன் தொடர்ந்து கொண்டுவரவேண்டும் என்று கணக்கு கண்ணப்பன் கேட்டதாக
கேள்விபட்டேன். மற்றொன்று வானை
நோக்குவோம். அதைத் தொடர்ந்து புதிர் கணக்குகள் இன்னும் பல அறிய தகவல்கள்
துணுக்குகள், அறிவியல் அறிஞர்களின் படங்கள், வானை பற்றிய தகவல்கள், ஹேல் பாப் என்ற
வால் நட்சத்திரம் குறித்த தகவல்கள், ஹையாகுட்டாகே வால் நட்சத்திரங்கள் குறித்த
தகவல்கள் இது போன்ற எண்ணற்ற வானியல்
தொடர்பான அறிய தகவல்களை கண்டு அவற்றை நேரடியாக வானில் பார்க்கும் வாய்ப்பை
உருவாக்கி கொடுத்த கொண்டிருக்கிற துளிரின் 25 வது ஆண்டு விழாவான வெள்ளி விழாவில்
நானும் பங்கேற்பது மிக்க மகிழ்சியை அளிக்கிறது. ,இது ஒரு கிராமத்துக்காரனை கடைநிலையில்
இருந்த ஒருவனை தூக்கி வந்து உயர்த்தி நிறுத்திய துளிரின் சாதனை.
No comments:
Post a Comment