முதல் பக்கம்

Jul 13, 2013

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழிக்கல்வி அவசியம் அறிவியல் இயக்கம் அரசுக்கு கோரிக்கை

பதிவு செய்த நேரம்:2013-05-28 11:49:55

கூடலூர், : அனைத்து பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு, தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். 

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் உலகளாவிய தொடர்புக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும், ஆங்கில மொழியின் தேவை உள்ளது. அதற்காக தாய்மொழிக்கலவியை புறக்கணித்து, ஆங்கில மொழி வழியாகவே அனைவரும் கற்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றல் திறனும் தாய்மொழி கல்வி வழிதான் மேம்பாடு அடையும். உலக நாடுகள் பலவற்றிலும் தாய்மொழி வழியாகத்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. 

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிக்கல்வி முழவதும் தாய்மொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும், தமிழ்வழி படிப்பவர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இச்சூழலில் வரும் கல்வி ஆண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3 ஆயிரத்து 200 பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் இரண்டு ஆங்கிலவழி பிரிவுகள் தொடங்கப்படும் என்பது ஏற்புடையதல்ல.

தொடர்ந்து ஆங்கில வழி பிரிவு தொடங்கினால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பள்ளிகளில் தமிழகத்தில் தமிழ்வழி கல்வியே இருக்காது என்ற அபாய நிலையும் உள்ளது. ஆங்கிலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் புலமை பெற வேண்டுமென அரசு கருதினால், ஆங்கிலமொழிப்பாடத்தை திறம்பட கற்பிக்கின்ற வகையில் ஆசிரியர்களை நியமிக்கலாம். மேலும் ஆங்கிலத்தில் பேச எழுத புதிய வழிமுறைகளை கண்டறியலாம். எனவே அனைத்து பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி கற்பிக்க வைக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்’ இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment