முதல் பக்கம்

Nov 14, 2017

25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு-தேனி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இளம் விஞ்ஞானியர் விருதிற்கான 25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.. தேனி கிளைத்தலைவர் தாழைக்குமரன் வரவேற்றார். மாவட்டத் துணைத்தலைவர்கள் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், ஆர்.அம்மையப்பன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்துணைத்தலைவர் அ.வெண்ணிலா மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் துளிர் இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகள் இளநிலை, முதுநிலை ஆகிய இருபிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளின் செயல்பாட்டிற்கு உதவும் வகையில் நிலைப்புறு மேம்பாட்டிற்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற மையக்கருப்பொருளின் கீழ் 36 ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். 

அவற்றில் இருந்து இளநிலை பிரிவில் 4 முதுநிலை பிரிவில் 1 ஆக மொத்தம் 5 ஆய்வுகள் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்த குழந்தை விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.வசந்தி, பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வம், உத்தமபாளையம் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். புதுவிழுது கல்வி இதழின் ஆசிரியர் தே.சுந்தர் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் ஜி.பாண்டியன், உஸ்மான் அலி, ராம்குமார், சுரேஷ்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..


மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வான ஆய்வுகள் விபரம் : 

விளைநிலம் தரிசுநிலமாக மாறுதல் பற்றிய ஆய்வு:  அரசு மேல்நிலைப்பள்ளி, கெங்குவார்பட்டி , குழுத்தலைவர் : ஓவியா , வழிகாட்டி ஆசிரியர் : பொ.சத்யவதி 

தேவதானப்பட்டியில் சந்தனமரங்கள் பற்றிய ஆய்வு : ஊ.ஒ.ந.பள்ளி, டி.வாடிப்பட்டி ,  குழுத்தலைவர்: எஸ்.ஆர்.அருண் , வழிகாட்டி ஆசிரியர் : எஸ்.ஞானசுந்தரி 

ஆற்றல் சேமிப்பு : கலைமகள் ந.நி.பள்ளி, குப்பிநாயக்கன்பட்டி , குழுத்தலைவர்:  பா.தனபாக்கியம் , வழிகாட்டி ஆசிரியர் : கா.தாழைக்குமரன் 

அன்னஞ்சி கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் பற்றிய ஆய்வு: தேனி கம்மவார் மெட்ரிக் பள்ளி , குழுத்தலைவர்: ஷெரின் , வழிகாட்டி ஆசிரியர் : ராம்குமார் 

புற்றுநோய்க்கு மருந்தாகும் மாதுளைச்சாறு : வி.எம்.அ.ஆ.மே.பள்ளி, பெரியகுளம் , குழுத்தலைவர்:  முகமது ஆசிக் , வழிகாட்டி ஆசிரியர் : ஆர்.அம்மையப்பன் 

டிச.1,2,3 ஆகிய தேதிகளில் சென்னை அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டு இக்குழந்தைகள் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்க உள்ளனர். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 30 ஆய்வுக்குழுக்களுக்கு மத்திய அரசின் இளம் விஞ்ஞானியர் விருது வழங்கப்படும். அதற்கான தேசிய அளவிலான மாநாடு டிச.27-31 தேதிகளில் மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment