தேவாரம் : “ஐ.என்.ஓ., திட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்படும் உபகரணங்களைமட்டும் பயன்படுத்துவதால், 'நியூட்ரினோ' தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்,” என மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 'நியூட்ரினோ' ஆய்வகம் அமைக்க ரூ.ஆயிரத்து 580 கோடி மத்திய அரசு அனுமதித்துள்ளது.ஆய்வகம் அமையவுள்ள தேவாரம் பகுதி மக்களுக்கு 'நியூட்ரினோ' குறித்த சந்தேகங்களை போக்கி, தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுந்தது.இதையடுத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேவாரத்தில், நியூட்ரினோ ஆய்வகம் குறித்த விஞ்ஞான விளக்க கருத்தரங்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர்.
அவற்றிற்கு விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் பதில் அளித்து பேசியதாவது: அம்பரப்பர் மலையில் அமைக்கப்படும் பாதாள சுரங்கத்தில், 'மியூவான் நியூட்ரினோ' குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது. பாறையை உடைக்க உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் அதிர்வை 500 மீ., க்கு அப்பால் உணர முடியாது. கிரானைட் பாறைகளை அறுத்தெடுக்க ஏராளமான தண்ணீர் பயன்படுத்தபடும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். முன்னுாறு குடும்பங்கள் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தப்படும். இதனால் நீர் வளம் பாதிக்கபடும் என்ற அச்சம் தேவையில்லை. ஐ.என்.ஓ., மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள உபகரணங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. திட்டம் முழுமையடையும் போது 'நியூட்ரினோ' தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும், என்றார்.
நன்றி: தினமலர் நாளிதழ்
No comments:
Post a Comment