தேவாரம் : தேவாரத்தில் நடைபெற்ற "நியூட்ரினோ' நோக்கு கூடம் குறித்த கருத்தரங்கில் பொதுமக் களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காததால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்(டி.என்.எஸ்.எப்.,) சார்பில், "நியூட்ரினோ'-அறிவியலும், அவசியமும் குறித்து விழிப்புணர்வு கூட்டம் தேவாரத்தில் நடந்தது. டி.என்.எஸ்.எப்., மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சுந்தர் துவக்கி வைத்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை முதன்மை விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் பங்கேற்றார். நியூட்ரினோ நோக்கு கூடம் அமைவதன் அவசியம் குறித்து சுந்தர் விளக்கமளித்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்காமல், நியூட்ரினோ ஆய்வகம் அமைவதன் பயன் குறித்து விளக்க மளித்ததால் பொதுமக்கள் கூச்சலிட்டனர். நியூட்ரினோ என்றால் என்னவென்று முதலில் விளக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில், ""பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில்,"மியூவான் நியூட்ரினோ' ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது, இயற்பியல் துறையில் மேற்கொள்ளப்படும் அடிப்படை ஆராய்ச்சி, வேதியல் பொருட்கள் பயன்படுத்த போவதில்லை. பால்வெளி வீதி தோன்றிய காலத்திலேயே நியூட்ரினோ உற்பத்தி துவங்கி விட்டது. இந்த அடிப்படை துகளை குறித்த ஆராய்ச்சி இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.
குணசேகரன், தேவாரம்: ஆய்வகம் அமைக்க துளையிடப்படும் பாறை எந்த வகையை சேர்ந்தது. இத்தகைய பாறை இங்கு மட்டும் உள்ளது என்பதற்கு என்ன உத்தரவாதம். இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகள், ஆய்வு மேற்கொள்ளும் போது ஆபத்து ஏற்பட்டால் எதிர்ப்போம் என தெரிவிக்கின்றனர்.
விஞ்ஞானி: "நியூட்ரினோ' ஆய்வகம் அமைக்க மேற்குவங்க மாநிலத்தில் உள்ள இமயமலை பகுதி, ஊட்டி சிங்காரா வனம், பொட்டிப்புரம் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன. ஜியாலஜிக்கல் சர்வே படி அம்பரப்பர் மலை அடுக்குகளற்ற ஒரே பாறை என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது. திட்டத்தினால் எந்த ஆபத்தும் இல்லை.
செல்வராஜ், டி.புதுக்கோட்டை: ஆய்வகம் அமைந்த பின் அப்பகுதியில் உள்ள மக்கள் குடி யிருப்பு காலி செய்யப் படுமா. வாழ்வாதாரமாக உள்ள ஆடு, மாடு மேய்த்தலுக்கு இடையூறு ஏற்படுமா.
விஞ்ஞானி: திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 66 ஏக்கரில் மட்டுமே பணிகள் நடக்கும். விவசாய நிலமோ, மக்கள் குடி யிருப்பு பகுதியோ கையகப்படுத்தப்படாது.
முருகன், கோம்பை:நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வாங்கும் போது, அணு கழிவு மேலாண்மை என்று கூறப்பட்டுள்ளது. அம்பரப்பர் மலை அணு கழிவுகளை கொட்டி பாதுகாக்கும் புதைகுழியா. உடைத் தெடுக்கப்படும் கிரானைட் பாறைகள் "டாமின்' மூலம் விற்பனை செய்யப்படும் என்றால், பாறைகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தற்போதுள்ள பாதையை பயன் படுத்தூர்களா.
விஞ்ஞானி: இந்தியாவில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் தவறுதலாக அணுகழிவு மேலாண்மை என்ற பட்டியலில் அனுமதி கோரப்பட்டது. பின்னர் திருத்தி வெளியிடப்பட்டது.
நன்றி: தினமலர் நாளிதழ்
No comments:
Post a Comment