முதல் பக்கம்

Oct 30, 2012

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள்-2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகவும் பள்ளியில் கற்ற அறிவியலை வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பார்க்கவும் ஆண்டு முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றது. குழந்தைகள் அறிவியல் மாநாடு, கோடை அறிவியல் திருவிழாக்கள்,துளிர் அறிவியல் மேளாக்கள்.மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் எளிய அறிவியல் கருவிகள் செய்வதற்கான பயிற்சிகள்,துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டிகள் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிகழ்ச்சிகள் தமிழகத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் நாள்தோறும் நடந்துகொண்டுதான் இருக்கிறது..


அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகளுக்கான பணிகள் இந்த ஆண்டும் துவக்கப் பட்டுள்ளன.ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்கும் பள்ளிகள்,மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. உதாரணமாக கடந்த 2008ம் ஆண்டில் 12525ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2009ல் 15311 ஆகவும் 2010ல் 19831 ஆகவும் 2011ம் ஆண்டில் 23500 ஆகவும் அதிகரித்துள்ளதன் மூலமே தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் இப்போட்டிக்கான வரவேற்பை அறியமுடியும். இந்த ஆண்டும் உங்களின் பேராதரவுடன் மிகச்சிறப்பாக நடைபெறும் என நம்புகிறோம்..


போட்டிக்கான விதிமுறைகள்:

ஆறாம்வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். 6-8 வகுப்புகள் வரை இளநிலை என்றும் 9-12 வகுப்புகள் வரை மேல்நிலை என்றும் இருபிரிவுகளாகத் தேர்வுகள் நடைபெறும். ஐ.டி.ஐ.,பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி வகுப்புகளில் முதலிரண்டு ஆண்டுகளில் பயில்வோறும் இதில் பங்கு கொள்ளலாம்.



இப்போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.100/-(ரூபாய் நூறு மட்டும்) செலுத்திப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். பதிவுசெய்யும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராண்டு காலத்திற்கு ரூ.84 மதிப்புள்ள துளிர் அறிவியல் மாத இதழ்கள் மாதந்தோறும் அனுப்பிவைக்கப்படும். ஜந்தர் மந்தர் (ஆங்கிலம்) இதழ் வேண்டுவோர் பதிவுக்கட்டணமாக ரூ.150/-(ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்)செலுத்தவேண்டும்.



இப்போட்டி 17.11.2012 சனிக்கிழமையன்று ஒரே நாளில், ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் எழுத்துத் தேர்வாக நடைபெறும்.மாணவர்கள் எழுத்துத்தேர்வில் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் வினாத்தாள் அமையும். வினாக்கள் பொது அறிவியலாகவும் துளிர் அறிவியல் செய்திகளாகவும் அறிவியல் விழிப்புணர்வுத் தகவல்களாகவும் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வுத் திறனை வெளிக்கொணரும்வகையிலும் இருக்கும்.

வினாக்கள் 4 விடைகளிலிருந்து 1 விடையைத் தெரிவு செய்யும் வகையிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்கான பங்கேற்கப் பயிற்சியளிக்கும் வகையிலும் இருக்கும்.

பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரணகாரிய அறிவையும் அறிவியல் குறித்த புரிதலையும் தெளிவுபடுத்துவதாக இருக்கும்.

வினாக்கள் தமிழ்,ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இருக்கும்.எனவே ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களும் பங்கேற்கலாம்.

எழுத்துத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதலிடம் பெறும் இரு மாணவர்களுக்கு (இளநிலை மற்றும் முதுநிலை) அறிவியல் பயிலரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும் சிறப்புப்பரிசும் வழங்கப்படும்.

இப்போட்டிக்கான ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள்/ தலைமையாசிரியர்கள் பூர்த்தி செய்த படிவத்துடன் நுழைவுக்கட்டணத்தை வங்கி வரைவாக அல்லது பணவிடையாக மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். வங்கி வரைவு துளிர்,சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுக்கவேண்டும்.(DD in favour of Thulir, Payable at Chennai)

இப்போட்டிக்கான முதல் பதிவுப்பட்டியல் 30.09.2012க்கு முன்னரும் இரண்டாம் மற்றும் இறுதிப்பட்டியல் 31.10.2012க்கு முன்னரும் உரிய வங்கிவரைவு மற்றும் பங்கேற்பாளர் பட்டியல்-முழு முகவரியுடன் மாநில ஒருங்கிணைப்பாளரின் தஞ்சாவூர் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

பள்ளிகளுக்கான பரிசுகள்:

ஐம்பது பதிவுகளுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வுமையமாகச் செயல்படலாம்.

100 மாணவர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று அறிவியல் மென்தட்டுகள்(சி.டி.)

அதிக பதிவுகளின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மாநில அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசு -ரூ.5000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்.
இரண்டாம் பரிசு -ரூ.3000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்
மூன்றாம் பரிசு -ரூ.2,000 மதிப்புள்ள அறிவியல் நூலகம்.


பள்ளிகளுக்கான பரிசுகள் உயர் அளவு பதிவுகளின் அடிப்படையில் தேர்வு
செய்யப்படும்.இதற்கு துளிர் மற்றும் ஜந்தர்மந்தர் பதிவுகள் சேர்த்துக் கணக்கில் கொள்ளப்படும்.

இப்போட்டிகள் குறித்த அதிக விபரங்கள் தேவைப்படுவோர் மாநில ஒருங்கிணைப்பாளரையோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளரையோ தொடர்பு கொள்ளலாம்.


மாவட்ட ஒருங்கிணைப்பாளர்:
பா.செந்தில்குமரன், தலைமை ஆசிரியர்
(மாவட்டத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)
அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, அன்னஞ்சி, தேனி.
அலைபேசி: 99421 12203, 94880 11128


மாநில ஒருங்கிணைப்பாளர்:
எம்.முகமது பாதுஷா
மாநிலச்செயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
14A, கூட்டுறவு காலனி, 4ம் தெரு
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்-641301
அலைபேசி: 94868 27773

Oct 23, 2012

மின்வெட்டும் டெங்கி காய்ச்சலும்

ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற என்ற இரண்டு கொசு வகைகள் தான் டெங்கி (டெங்கு அல்ல) காய்ச்சலுக்கு காரணமானவை. இவை நல்ல தண்ணீரில் தான் இனப்பெருக்கம் செய்யும். பெரும்பாலும் இவை பகலில் தான் மனிதர்களை கடிக்கும். இந்த கொசுக்கள் தான் டெங்கி வைரசுகளை மனிதனுக்குள் ரத்தத்தின் மூலமாக செலுத்தி டெங்கி காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. நான்கு விதமான டெங்கி வைரசுகள் உள்ளன. அவை DENV 1, DENV 2, DENV 3 மற்றும் DENV 4 ஆகும். டெங்கி காய்ச்சல், டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று டெங்கி காய்ச்சலின் வகைகளும் உண்டு. இதில் டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் தான் கொடூரமானது. இதற்கு இதுவரை எந்த தடுப்பு ஊசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல ஊருக்கு ஊர் இதன் வகைகளும் மாறுபடும். பருவமழைக்குப் பின் தான் இதன் தாக்கம் அதிகமாயிருக்கும். இன்னும் ஓரிரண்டு மாதம் தான் பின் அடுத்த பருவ மழைக்காலம் வரை தப்பிக்கலாம். டெங்கி மட்டுமல்ல எந்த வைரசுகளும் நம் உடலில் வந்துவிட்டால் சாகும் வரை நம்முடனே இருக்கும். நாம் பலவீனப்படும் போது அவை தலை தூக்கும். எனவே தான் தடுப்பு ஊசி அவசியம்.

சமீப காலமாக நம் தமிழகம் தாங்க முடியாத மின்வெட்டை சந்தித்து வருகிறது. மின்வெட்டுக்கும் டெங்கி காய்ச்சலுக்கும் தொடர்புண்டு. நினைத்த வேளையில் நம்மால் போர்வெல் இயந்திரங்களை இயக்க முடியாததால் நாம் தண்ணீர் பிடித்து வைக்கிறோம். ஆனால் அவையே இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகிறது. தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தாற் போல வாழக்கற்றுக்கொள்ளுங்கள். தப்பித்துக்கொள்ளலாம்.

முனைவர்.எஸ்.தினகரன்

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?

டெங்கி காய்ச்சல் எப்படி பரவுகிறது?

டெங்கி காய்ச்சலை உண்டு பண்ணும் வைரசை டெங்கி வைரஸ் என்பார்கள். இதில் நான்கு வகைகள் உண்டு. இது பிளேவி வைரஸ் வகைகளை சார்ந்தது. இந்த வைரசுகள் ஆசிய புலிக்கொசு (ஏடிஸ் அல்போபிக்டஸ்), மற்றும் ஏடிஸ் இஜிப்திஐ என்ற கொசுக்களினால் பரவுகிறது. இந்த கொசுக்கள் மனிதர்கள் உபயோகப்படுத்தும் பொருட்களில் (தண்ணீர்த்தொட்டிகள், பாத்திரங்கள், டயர்கள், உடைந்த குடங்கள் மற்றும் பல...) உள்ள நன்னீரில் இனப்பெருக்கம் செய்பவை.

டெங்கி என்ன தான் செய்யும்?

கொசுக்களால் இந்த வைரசுகள் நம் ரத்த நாளங்களில் செலுத்தப்படும். செலுத்திய ஒரு வாரத்திற்குப்பின் தான் நோய்க்கான அறிகுறிகள் தென்படும். உடலில் வலி, மூட்டு வலி, காய்ச்சல், விழி வட்டத்தில் வலி (கண் தீர்ப்பது போல் வலிக்கும்) ஏற்படும். சில சமயம் வாந்தி, குமட்டல், தோலில் புண் என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிகுறிகள் அதிகரிக்கும். நோய் வந்த முதல் கட்டத்தில் டெங்கி காய்ச்சல் ஏற்படும்.

வைரசுகள் நம் உடலில் பெருகப்பெருக நோயின் தீவிரம் அதிகரிக்கும். இது இரண்டாம் நிலை. இந்த காய்ச்சலுக்கு டெங்கி ரத்தப்போக்கு காய்ச்சல் என்று பெயர். விழித்திரையிலிருந்து ரத்தம் வரலாம், தோலில் உள்ள புங்களிளிருந்து ரத்தம் கசியலாம். அடுத்து மிகவும் கொடூரமான மூன்றாம் நிலை டெங்கி சாக் சிண்ட்ரோம். இது நிச்சயமாக உயிரைப் பறித்துவிடும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?


நம் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியம்? பரவலான விழிப்புணர்வும், மக்களின், தொண்டு நிறுவனங்களின், அறிவியல் இயக்கங்களின் பங்கு மிக அவசியம். விரிவாக எடுத்துச் செல்லும் பட்சத்தில் நோயை அடுத்த கட்டத்திற்கு செல்லாதவாறு தடுத்து விடலாம். நோய் முற்றினால் காப்பாற்றுவது கடினம். உண்மையில் டெங்கி ஆட்க்கொல்லி நோயல்ல. பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிக்கப் படுகிறார்கள். முதியோர்களும் அடக்கம்.

ஏதாவது தடுப்பு ஊசி உள்ளதா?

இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புவோம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. இறக்குமதி செய்யவேண்டும்.

இந்தியாவில் மட்டும் தான் இந்த அச்சுறுத்தலா?

வெப்ப மண்டல நாடுகளில் தான் இந்த கொசுக்களின் தாக்கமும், வைரசுகளின் தாக்கமும் அதிகம். நம்மை விட தாய்லாந்துக்காரர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். இலங்கையிலும், சீனாவிலும் இவ்வகை கொசுககள் உள்ளன. அதனால் சர்வதேச முக்கியத்துவம் உண்டு.

இந்த கொசுக்களை அழிக்கவே முடியாதா?

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தில் நாமெல்லாம் நேற்று வந்தவர்கள். கொசுக்கள் எல்லாம் நம்மைவிட லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே பரிணமித்துவிட்டன. நாம் தான் எத்தனை எத்தனை கொசுவிரட்டிகளை (கவனிக்கவும் கொசுவிரட்டி - கொசுக்கொல்லி அல்ல) சந்தித்து விட்டோம். இதன் பயன் கொசுக்களின் சிற்றினங்களிலேயே பல வகைகள் மரபணு மாற்றத்தின் விளைவாக தோன்றி விட்டன. எல்லாவிதமான வேதிக் கொல்லிகளையும் எதிர்கொள்ளும் திறனை இந்த கொசுக்கள் பெற்றுவிட்டது. லார்வாக்களை மட்டுமே அழிக்க முடியும். அதுவும் நீரில் வாழ்வதால் அவை பறந்து தப்பித்துச் செல்ல வாய்ப்பில்லை லார்வாக்களின் வாழ்விடத்தை அழித்தாலே இந்த நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

என்ன தான் செய்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்?


BT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லார்வாக்களின் உண்ணும் திறனை அழித்துவிட முடியும் என்கிறார்கள். மரபு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பொது இடங்களில் பறக்க விட்டு அவற்றை இயற்கையான கொசு இனங்களோடு கலவி செய்து அவைகளை மலடாக்கலாம் என்று எத்தனையோ திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் சுற்றுச் சூழலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு நமக்கே வினையாகப் போய்விட்டால் என்ன செய்வது என்ற குழப்பமும் உள்ளது. தடுப்பு ஊசி தயாரிப்பதில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதிப்பார்கள் என நம்புவோம்.

முனைவர்.எஸ்.தினகரன்

Oct 9, 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பரிந்துரை

கம்பம்:
தொடக்க கல்வித்துறையில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை ரத்து செய்ய தமிழ்நாடுஅறிவியல் இயக்கம், ஆசிரியர் சங்கங்கள் பரிந்துரை செய்துள்ளன. தமிழக அரசு தொடக்க கல்வியில் அறிமுகம் செய்துள்ள "தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு' முறையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் கூறி வந்தன. இத் திட்டம் பற்றி விவாதிக்க, கம்பத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூட்டம் நடந்தது.
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய மாணவர் சங்கம், ஆசிரிய பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்சி மாணவர்கள் என பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்றனர். 
 
நடப்பு கல்வியாண்டில் 9,10 வகுப்புகளுக்கும், 2014-15 ம் கல்வியாண்டில் பிளஸ்-1,பிளஸ் 2 வகுப்புகளுக்கும் இந்த முறைஅமல்படுத்தப்பட உள்ளது, என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். முன் மாதிரி ஆய்வு கால அனுபவங்களையும், நிறை குறைகளையும் ஆராய்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்வைத்துள்ள விஷயங்களை பரிசீலனை செய்து, முழுமையான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை அமல்படுத்திட அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
நன்றி: தினமலர்
நாள்: அக்டோபர்,8,2012

Oct 6, 2012

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்,அக்டோபர்,5,2012

வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 19 ஆண்டுகளாக குழந்தை விஞ்ஞானியர் விருதிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்:

இம்மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் அக்டோபர் 5,2012 (வெள்ளிக்கிழமை) அன்று உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

காலை 10 மணியளவில் துவங்கிய பயிற்சி முகாமிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப்பொதுக்குழு உறுப்பினர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் பி.விஜயலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எஸ்.தினகரன் மாநாட்டின் மையநோக்கம் குறித்துப் பேசி துவக்கிவைத்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் துறைத்தலைவர் முனைவர்.சி.இ.சூர்யமூர்த்தி(ஓய்வு) ஆற்றலின் இன்றைய தேவை மற்றும் வருங்காலத்திற்கான மாற்றுத்திட்டங்கள் குறித்து பேசினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் முனைவர்.எஸ்.கண்ணன் ஆய்வு மேற்கொள்ளும் வழிமுறைகள் மாநாட்டின் விதிமுறைகள் குறித்தும் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச்செயலாளர் மு.தியாகராஜன் மாநாட்டின் மையக்கருத்தான ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (ENERGY: EXPLORE ,HARNESS & CONSERVE) குறித்தும் துணைத்தலைப்புகளான ஆற்றல் வளங்கள், ஆற்றல் அமைப்புகள், ஆற்றலும் சமூகமும், ஆற்றலும் சுற்றுச்சூழலும், ஆற்றல் மேலாண்மை மற்றும் சேமிப்பு, ஆற்றல் திட்டமிடலும் மாதிரிகளும் ஆகியவை குறித்தும் அதன்கீழ் மேற்கொள்ளக்கூடிய மாதிரி ஆய்வுத்தலைப்புகள் குறித்தும் பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார். கல்வி மாவட்டம் முழுவதும் 40 பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான மாவட்ட அளவிலான் குழந்தைகள் அறிவியல் மாநாடு நவம்பர்,4ஆம் தேதி நடைபெறும். பயிற்சி மாலை 4.30க்கு நிறைவுபெற்றது.

Oct 2, 2012

வாத்தியார்கள் சரியில்லை..

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முப்பருவ கல்வி முறை குறித்த கலந்தாய்வு தேனி மாவட்டம் கம்பம் கிளையில் உள்ள ஆசிரியர் இணையத்தால் நடத்தப்பட்டது. சுமார் இருபது பேர் கலந்துகொண்டனர். இதில் ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கொண்ட சிறிய குழுவாக விவாத்தை எடுத்துச் சென்றன. இவ்விவாதம் எவ்வளவு முக்கியம் என்பதை அங்கே பங்கேற்ற எனக்கு உணர்த்தியது. 
காரணம் இன்றைக்கு அரசு எதையும் யோசிக்காமல் அடுத்தடுத்து கல்வியில் மாற்றத்தை கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற திட்டம் நாளைக்கு இருக்குமா? என்ற கேள்வியோடையே ஆசிரியர்கள் இருப்பதால் ரிக்காடிக்கலாக வேலைசெய்தால் போதும் என்ற நிலையில் இருப்பதை நாம் பாக்க முடிகிறது. எதற்கெடுத்தாலும் வாத்தியார்கள் சரியில்லை என்பதையே காரணம் காட்டி இந்த அரசு பள்ளிகளை மூடுவதற்கான வேலைகளை செய்ய துடிக்கிறது. 
ஆசிரியர்கள் பேசும் போது ஏ.பி.எலை கொண்டு வந்து அதை நாங்கள் புரிந்து கொண்டு வேலை செய்ய தயாராக இருந்தபோது இப்போது புத்தகத்தை கொடுத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது. அந்த முறையில் மாணவன் எப்போது அந்த அடைவுகளை முடிக்கின்றானோ அதன்பிறகு அடுத்த நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் இதி்ல் காலாண்டுக்குள் அவன் முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. இது எப்படி பொருந்தும்.

இது பொன்ற பல கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. இது போன்ற சிறிய கூட்டங்கள் ஆங்காங்கே ஆசிரியர்கள் மத்தியில் நடந்தால் கல்வியில் நாம் சரியான வழியை கண்டறிந்து அடுத்த தலைமுறையை அதன் வழியில் நடத்த நம்மால் முடியும்.
மொ.பாண்டியராஜன், மதுரை


முப்பருவக் கல்வி & தொடர் மதிப்பீட்டு முறை: அறிவியல் இயக்கம் அரசுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டு முதலாக 1 முதல் 8 வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை அமுல்படுத்தியுள்ளது. 2013-2014 ஆம் கல்வியாண்டில் உயர்நிலை வகுப்புகளுக்கும், 2014-2015 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளுக்கும் அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

அறிவொளிக்காலம் முதல் ஆரம்பக்கல்வியில் அக்கறை செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழக அரசு அமுல்படுத்தியுள்ள CCE மதிப்பீட்டு முறையை நன்கு ஆய்வு செய்யும்பொருட்டு மாநிலம் முழுவதும் பரிசீலனைக் கூட்டங்களை நடத்தியது.

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்டம்பர்,27,2012 அன்று கம்பம் அக்குபங்சர் அகடமியில் பரிசீலனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய மாணவர் சங்கம், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மாண்வர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர். இக்கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கீழ்க்காணும் நுட்பமான விமர்சனங்களையும் நடைமுறையில் CCE அமுலாகும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் குறித்த கோரிக்கைகளையும் தமிழக அரசின் பார்வைக்கும் உடன் நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழுவின் சார்பில் சமர்ப்பிக்கின்றோம்.

1. முற்றிலும் மனப்பாடத்திறனை மையப்படுத்தி அமைந்திருந்த முறையை மாற்றி, புதிய மதிப்பீட்டு முறையை அமுலாக்கியிருப்பது அடிப்படையில் வரவேற்கத்தக்கதே. ஆனால், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள CCE மதிப்பீட்டு முறை முழுமையான மாற்று மதிப்பீட்டு முறையல்ல என்பதை கவலையோடு சுட்டிகாட்ட விரும்புகிறோம்.

2. பாடத்திட்டம், பாடப்புத்தகம், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், பள்ளியின் உள் கட்டமைப்பு அனைத்துக்கும் CCE மதிப்பீட்டு முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றை மாற்றியமைக்காமல் நடைமுறைப்படுத்தப்படும் CCE முறை நிச்சயம் எதிர்பார்க்கும் பலனைத்தராது.

3. ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் என கல்வியோடு தொடர்புடையவர்கள், அக்கறையுடையவர்கள் என அனைவரிடமும் CCE மதிப்பீட்டு யுத்தி பற்றி விரிவான கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் கருத்துக்களையும் உள்ளடக்கி அமுலாக்க முறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் முறைக்கும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கற்றே தீரவேண்டிய முப்பருவ தேர்வு முறைக்கும் உள்ள அடிப்படை முரண்பாடுகள் களையப்பட்டிருக்க வேண்டும்.

5. எந்தவொரு மாற்றுமுறையும் ஒரு PILOT STUDY க்கு பிறகே அமுல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் CCE மதிப்பீட்டு முறை PILOT STUDY இல்லாமல் அமுலுக்கு வந்தது பெரும் குறைபாடாகும்.

6. தொடர் மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த வழங்கப்பட்ட பயிற்சிகளும் அவசரகோலத்தில் நடத்தப்பட்டன. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு எப்படி மதிப்பீடு செய்வது என்ற தெளிவினைத் தரவில்லை. பயிற்சி அளித்தவர்களுக்கும் குழப்பமே மிஞ்சி நிற்கிறது. CCE மதிப்பீட்டு மாதிரிகள், வழிகாட்டி ஆசிரியர் புத்தகம், மதிப்பீட்டிற்கான ஆதார நூல், புத்தகம் ஆகியவை அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். முதல் பருவம் முடிந்துவிட்ட சூழ்நிலையில் இதுவரையிலும் வழங்கப்படவில்லை.

7. நடைமுறையிலிருப்பதாக கூறப்படும் செயல்வழிக்கற்றலுக்கான கற்றல் அட்டைகள் இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த பருவத்திலாவது வழங்கிட வேண்டும்.

8. சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் நீண்டகாலமாக பிளவுண்டு கிடக்கும் சமூகத்தில் CCE மதிப்பீட்டு முறை மாணவர்களிடம் பாகுபாடு காட்டவும், அவர்களை மிரட்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு என்பதைக் கருத்தில்கொண்டு அதனைத் தடுப்பதற்கான உரிய வழிமுறைகள் செய்யப்படவேண்டும்.

9. CCE மதிப்பீட்டு முறை என்பது படிவங்களை மட்டும் பூர்த்தி செய்யும் நடைமுறையாக மாறிவிடும் அபாயம் தவிர்க்கப்படவேண்டும்.

10. CCE மதிபீட்டு முறை என்பதே அடிப்படையில் 1:20 என்னும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. இந்த ஆசிரியர் மாணவர் விகிதத்தை கவனத்தில் கொள்ளாமலும், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஈராசிரியர் பள்ளிகளின் கற்பிக்கும் சூழலைக் கணக்கில் கொள்ளாமலும் CCE மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

11. CCE மதிப்பீட்டு முறையை முதலில் அறிமுகப்படுத்திய CCE அமுலாக்கத்தில் உள்ள பிரச்சினைகளையும் CCE மதிப்பீட்டு முறைக்கு ஏற்ற வகையில் பாடப்புத்தகங்களையும் கலைத்திட்டத்தையும் மாற்றி அமைக்க மறுபரிசீலனை செய்து வருகிறது. இதனையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

12. முப்பருவ முறைத்தேர்வு என்பது குறைந்தபட்சம் மூன்றாம் வகுப்பு வரை தவிர்க்கப்பட வேண்டும்.

13. நான்காம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் வளரறி தேர்வு-ஆ பகுதியை, கேரளாவில் உள்ளதைப் போல மாணவர்களே சுயமதிப்பீடாக பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்தலாம். அதன்மூலம் மாணவர்களின் சுயமதிப்பீட்டு ஆற்றலும் தலைமைப் பண்பும் வளரும். ஆசிரியர்களின் பணிச்சுமையும் குறையும்.

14. ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதிப்பீட்டு முறையைவிட மேம்பட்ட மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் ஆசிரியர்களின் முழுமையான ஈடுபாடு தேவை. அப்பொழுதுதான் CCE முறை வெற்றி பெறும். அதற்கேற்ப உளவியல் சார்ந்து ஆசிரியர்களின் முழுப்பங்கேற்புடன் கூடிய பயிற்சி முறைகள் கட்டமைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட குறைபாடுகள் பரிசீலனை செய்யப்படாமல் குறைகள் களையப்படாமல் தொடக்கக்கல்வியில் அமுலாக்கப்பட்டிருக்கும் மாற்று மதிப்பீடு உண்மையான பலனைத்தர வாய்ப்பில்லை. எனவே, தமிழக அரசு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி, அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டுகிறோம்.

  • 2012-2013 கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையில் CCE அமுல்படுத்தப்பட்டு இருப்பதை PILOT STUDY PERIOD என அறிவிக்க வேண்டுகிறோம்.
  • 2013-2014 கல்வியாண்டில் 9,10 வகுப்புகளுக்கும் 2014-2015 கல்வியாண்டில் 11,12 வகுப்புகளுக்கும் CCE முறை அமுல்படுத்தப்பட உள்ளது என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்திட வேண்டுகிறோம்.
  • PILOT STUDY PERIOD ல் கிடைக்கும் அனுபவங்களையும், நிறைகுறைகளையும் ஆராய்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்வைத்துள்ள விஷயங்களையும் பரிசீலனை செய்து குறைகளை நிறைவு செய்து முழுமைப்படுத்தி CCE முறையை அமுலாக்க வேண்டுகிறோம்.
மாவட்டச்செயலாளர்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.பெரும்பாலான நோய்கள் அனைத்தும் தடுக்க கூடியவையே.சுகாதாரமான சுற்றுச்சூழலில் இந்த நோய்க்கிருமிகள் உருவாவதையும்,பரவுவதையும் தடுக்க முடியும்.சுகாதாரமான சுற்றுச்சூழல் என்பது கழிவு நீர் தேங்காமல் ஏற்பாடு செய்வது.வெட்ட வெளியில் மலம் கழிக்காதிருப்பது,குப்பை கூளங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது,பாதுகாக்கப்பட்ட குடிநீரை உபயோகிப்பது,வீட்டை சுற்றிய பகுதிகள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது,கண்ட இடங்களில் எச்சில் துப்பாதிருப்பது போன்ற செயல்கள் மூலம் சாத்தியமாகும்.ஏனெனில் சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகள் மற்றும் பூச்சிகள் வளர வாய்ப்பினை உருவாக்கிவிடும்.

டெங்கு,மலேரியா, புளு,வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் மேற்கண்ட சுகாதாரமற்ற சூழலில்தான் ஏற்படுகின்றன.

தற்போது டெங்கு காய்ச்சல் நோய் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவியிருக்கிறது..குறிப்பாக அறந்தாங்கி,அரிமளம்,கீரனூர் வட்டங்களில் பரவியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.எனவே மக்களிடம் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.இதன்காரணமாகவே அறிவியல் இயக்கம் இந்தப்பிரச்சாரத்தை நம்முடைய மாவட்டம் முழுவதும் செய்ய முடிவெடுத்துள்ளது.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

டெங்குக் காய்ச்சல் என்பது கொசுவினால் பரவக்கூடிய புளு காய்ச்சலைப்போன்ற ஒரு நோய்.இது குறிப்பிட்ட வகையான கொசுவால் பரப்பப்பட்டு நான்கு வகையான வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோயாகும்.இது சாதரண வகையிலிருந்து மிகவும் ஆபத்தான நிலைவரை வேறுபடும்.மிகவும் ஆபத்தான நிலை என்பது டெங்குபற்றிய பீதியான நிலை மற்றும் ரத்தக்கசவுடன் கூடிய காய்ச்சலுக்கு இட்டுச்செல்லும்.தற்போது டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து ஏதும் இல்லை.

டெங்குக்காய்ச்சலுக்கான அடையாளங்களும் அறிகுறிகளும்

அறிகுறி என்பது நோயாளி உணர்ந்து வெளியில் சொல்வதாகும். அடையாளம் என்பது மற்றவர்கள்,மருத்துவர்கள் கண்டுபிடிப்பதாகும்.உதாரணமாக தலைவலி என்பது அறிகுறியாகும்.மாறாக புண்கள் போன்றவை நோயின் அடையாளங்களாகும்.

சாதரண டெங்குக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

இதற்கான அறிகுறிகள் வைரஸ்களைப் பரப்பும் கொசுக்கள் கடித்து ஏழு நாட்க்கள் வரையிருக்கும். அதன்பின் மறைந்துவிடும்.இந்தவகைக்காய்ச்சல் மோசமான விளைவுகளையோ மரணத்தையோ ஏற்ப்படுத்தாது.இ ந்த சாதரண டெங்குக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்

Ø தசை மற்றும் மூட்டுகளில் வலி

Ø உடம்பின் தோல் பகுதியில் தோன்றி மறையக்கூடிய புண்கள்.

Ø அதிக காய்ச்சல்

Ø அதிகமான தலைவலி

Ø கண்களுக்குப் பின்புறம் வலி

Ø வாந்தி வருதல் ,உமட்டல்

இரத்தக்கசிவுடன் கூடிய டெங்குக்காய்ச்சல்

இவ்வகைக்காய்ச்சலில் அறிகுறிகள் ஆரம்பத்தில் குறைவாக இருக்கும்.ஆனால் நாட்கள் செல்லச்செல்ல மிகவும் மோசமாகும்.இவ்வகைக்காய்ச்சல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் மரணத்தில் முடியும்.சாதரண டெங்குக்காய்ச்சலுக்குள்ள அனைத்து அறிகுறிகளும் இவ்வகைக்கய்ச்சலுக்கும் இருக்கும்.அதே நேரத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளும் இருக்கும்.

Ø வாய் மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல்

Ø மூக்கில் ரத்தம் வடிதல்

Ø தோல் பகுதிகள் பிசுபிசுப்புடன் காணப்படுதல்

Ø வெள்ளை அணுக்கள் உருவாகும் இடங்களிலும் ரத்த நாளங்களிலும் குறிப்பிட்ட அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்

Ø உடம்பின் உட்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கருப்பாக வாந்தி எடுத்தல் மற்றும் கருப்பாக மலம் வெளியாகுதல்.

Ø இரத்தம் உரைவதற்குத் தேவையன செல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

Ø வயிற்றில் ஒருவிதமான உணர்வு.

Ø தோலுக்கு அடியில் சிறுசிறு இரத்தப்புள்ளிகள் தோன்றுதல்.

Ø நாடித் துடிப்பு குறைதல்

டெங்குபற்றிய பீதியான நிலைக்கான் அறிகுறிகள்.

இந்த நிலையும் மோசமான நிலைக்கும் இறப்புக்கும் இட்டுச்செல்லும்.சாதரண டெங்கு காய்ச்சலுக்குள்ள அறிகுறிகளுடன் கூட கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருக்கும்.

Ø அதிகமான வயிற்றுவலி

Ø நிலை தடுமாற்றம்

Ø இரத்த அழுத்தம் வேகமாக குறைதல்.

Ø அதிகமான் இரத்தக்கசிவு.

Ø தொடர் வாந்தி.

Ø இரத்த நாளங்களிலிருந்து திரவம் வடிதல்.

நோய் வருவதற்கான காரணங்கள்.

டெங்குக்காய்ச்சலுக்குக் காரணமான நான்கு வைரஸ் கிருமிகள் ஏடிஸ் ஏஜிப்டி(Aedes Aegypti)என்ற கொசுவால் பரப்பப்படுகிறது. ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு ஆப்ரிக்காவில் தோன்றியது. ஆனால் தற்போது உலகின் அனைத்து வெப்பப் பிரதேசங்களிலும் மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகளில் பெருகி உள்ளது.வைரஸ் கிருமியால் தாக்கப்பட்ட கொசுவால் இந்நோய் மனிதர்களுக்குப் பரப்பப்படுகிறது.டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை முதலில் கொசு கடிக்கிறது.இந்த கொசு வேறு ஒரு மனிதரைக்கடிக்கும் போது அந்தவைரஸ் கிருமி அவர் உடலுக்குள் சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்குகிறது. ஒருமுறை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்நோய் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது.ஏனெனில் இந்நோய் வெவ்வேறுவித வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.மறுமுறை வரும்போது அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இப்பாதிப்பு அதிகமாக இருக்கும்.ஆனால் முன்பே இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமாதலால் அவர்களுக்கு இரண்டாமுறை தாக்கும் போது பாதிப்பு அதிகமிருக்க வாய்ப்பு குறைவு.

விளைவுகள்:

டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இருவாரங்களுக்குள் உடல் நிலை தேறிவிடுவார்கள்.ஆனால் சிலர் இந்த நோய் தொற்றுக்குப் பின்னால் பலமாதங்கள் களைப்பு மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.இக்காய்ச்சல் மேலும் கடினமான பாதிப்புக்களான இரத்தக்கசிவுடன்கூடிய காய்ச்சல் மற்றும் பீதியளிக்க கூடிய நிலைக்கு இட்டுச்செல்லும்.

டெங்குக்காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்.?


மேற்கூறிய அறிகுறிகளுடன் சாதரண டெங்குக்காய்ச்சல் என்றால் வா ந்தி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்ய சுத்தமான ( கொதிக்கவைத்து ஆறவைத்த ) நீரைக்குடிக்க வேண்டும்.உப்பு சக்கரைக்கரைசலும் அறுந்தலாம். காலதாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.


டெங்குக்காய்ச்சல் வருவதை தடுக்கும் முறைகள் :

டெங்கு வைரஸ் கிருமிகளின் செயல்பாட்டைத் தடுக்கக்கூடிய வகையிலான தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.எனவே இந்நோய் வருவதைத் தடுப்பதற்கு சிறந்தமுறை என்னவென்றால் கொசுக்களால் கடிக்கப்படுவதைத் தவிர்ப்பதேயாகும்.

Ø இயன்றவரை உடலின் எல்லாபாகங்களையும் மூடும் வகையில் உடை அனிய வேண்டும்.

Ø தூங்கும்போது உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு தூங்கவேண்டும்.

Ø கொசுவிரட்டிகளை பயன்படுத்தலாம்.

Ø கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

Ø ஜன்னல்களில் வலை அடிக்கலாம்.

கொசு உற்பத்தி தடுக்கும் முறைகள்

1.சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருத்தல் .தேவையற்ற நீர் தேங்கும் பொருட்களை சேகரித்து புதைத்தல் மற்றும் தீயிட்டு எரித்தல்.

2.டயர்கள்/தகரங்கள்/பலகைகள்/பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்துதல்.

3.தண்ணீர் சேர்த்துவைக்கும் பாத்திரங்களின் ஓரங்களை சுரண்டி கழுவி தலைகீழாக காயவைத்தல்,குளிர் காற்றாடி மற்றும் பூந்தொட்டிகளை வாரம் ஒருமுறை காயவைத்தல்.

4.தண்ணீர் தொட்டிகள் கொசு புகாவண்ணம் மூடிவைத்தல்.

5.மரப்பொந்துகளில் உள்ள நீரை அப்புறப்படுத்தி வைத்தல் மற்றும் எறும்பு தடுப்புகளில் வாரம் ஒருமுறை உப்பு சேர்த்தல்.

6.கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்க களப்பணியாளர்களை அனுமதித்தல்.

சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாப்போம்!

டெங்குக்காய்ச்சலை ஒழிப்போம்!


தே.சுந்தர்
மாவட்டச் செயலாளர்
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்
தேனி மாவட்டம்