முதல் பக்கம்

Oct 2, 2012

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.பெரும்பாலான நோய்கள் அனைத்தும் தடுக்க கூடியவையே.சுகாதாரமான சுற்றுச்சூழலில் இந்த நோய்க்கிருமிகள் உருவாவதையும்,பரவுவதையும் தடுக்க முடியும்.சுகாதாரமான சுற்றுச்சூழல் என்பது கழிவு நீர் தேங்காமல் ஏற்பாடு செய்வது.வெட்ட வெளியில் மலம் கழிக்காதிருப்பது,குப்பை கூளங்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது,பாதுகாக்கப்பட்ட குடிநீரை உபயோகிப்பது,வீட்டை சுற்றிய பகுதிகள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது,கண்ட இடங்களில் எச்சில் துப்பாதிருப்பது போன்ற செயல்கள் மூலம் சாத்தியமாகும்.ஏனெனில் சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் நோய்க்கிருமிகள் மற்றும் பூச்சிகள் வளர வாய்ப்பினை உருவாக்கிவிடும்.

டெங்கு,மலேரியா, புளு,வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் மேற்கண்ட சுகாதாரமற்ற சூழலில்தான் ஏற்படுகின்றன.

தற்போது டெங்கு காய்ச்சல் நோய் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவியிருக்கிறது..குறிப்பாக அறந்தாங்கி,அரிமளம்,கீரனூர் வட்டங்களில் பரவியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.எனவே மக்களிடம் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.இதன்காரணமாகவே அறிவியல் இயக்கம் இந்தப்பிரச்சாரத்தை நம்முடைய மாவட்டம் முழுவதும் செய்ய முடிவெடுத்துள்ளது.

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

டெங்குக் காய்ச்சல் என்பது கொசுவினால் பரவக்கூடிய புளு காய்ச்சலைப்போன்ற ஒரு நோய்.இது குறிப்பிட்ட வகையான கொசுவால் பரப்பப்பட்டு நான்கு வகையான வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோயாகும்.இது சாதரண வகையிலிருந்து மிகவும் ஆபத்தான நிலைவரை வேறுபடும்.மிகவும் ஆபத்தான நிலை என்பது டெங்குபற்றிய பீதியான நிலை மற்றும் ரத்தக்கசவுடன் கூடிய காய்ச்சலுக்கு இட்டுச்செல்லும்.தற்போது டெங்கு காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து ஏதும் இல்லை.

டெங்குக்காய்ச்சலுக்கான அடையாளங்களும் அறிகுறிகளும்

அறிகுறி என்பது நோயாளி உணர்ந்து வெளியில் சொல்வதாகும். அடையாளம் என்பது மற்றவர்கள்,மருத்துவர்கள் கண்டுபிடிப்பதாகும்.உதாரணமாக தலைவலி என்பது அறிகுறியாகும்.மாறாக புண்கள் போன்றவை நோயின் அடையாளங்களாகும்.

சாதரண டெங்குக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

இதற்கான அறிகுறிகள் வைரஸ்களைப் பரப்பும் கொசுக்கள் கடித்து ஏழு நாட்க்கள் வரையிருக்கும். அதன்பின் மறைந்துவிடும்.இந்தவகைக்காய்ச்சல் மோசமான விளைவுகளையோ மரணத்தையோ ஏற்ப்படுத்தாது.இ ந்த சாதரண டெங்குக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்

Ø தசை மற்றும் மூட்டுகளில் வலி

Ø உடம்பின் தோல் பகுதியில் தோன்றி மறையக்கூடிய புண்கள்.

Ø அதிக காய்ச்சல்

Ø அதிகமான தலைவலி

Ø கண்களுக்குப் பின்புறம் வலி

Ø வாந்தி வருதல் ,உமட்டல்

இரத்தக்கசிவுடன் கூடிய டெங்குக்காய்ச்சல்

இவ்வகைக்காய்ச்சலில் அறிகுறிகள் ஆரம்பத்தில் குறைவாக இருக்கும்.ஆனால் நாட்கள் செல்லச்செல்ல மிகவும் மோசமாகும்.இவ்வகைக்காய்ச்சல் உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் மரணத்தில் முடியும்.சாதரண டெங்குக்காய்ச்சலுக்குள்ள அனைத்து அறிகுறிகளும் இவ்வகைக்கய்ச்சலுக்கும் இருக்கும்.அதே நேரத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிகுறிகளும் இருக்கும்.

Ø வாய் மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல்

Ø மூக்கில் ரத்தம் வடிதல்

Ø தோல் பகுதிகள் பிசுபிசுப்புடன் காணப்படுதல்

Ø வெள்ளை அணுக்கள் உருவாகும் இடங்களிலும் ரத்த நாளங்களிலும் குறிப்பிட்ட அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்

Ø உடம்பின் உட்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கருப்பாக வாந்தி எடுத்தல் மற்றும் கருப்பாக மலம் வெளியாகுதல்.

Ø இரத்தம் உரைவதற்குத் தேவையன செல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

Ø வயிற்றில் ஒருவிதமான உணர்வு.

Ø தோலுக்கு அடியில் சிறுசிறு இரத்தப்புள்ளிகள் தோன்றுதல்.

Ø நாடித் துடிப்பு குறைதல்

டெங்குபற்றிய பீதியான நிலைக்கான் அறிகுறிகள்.

இந்த நிலையும் மோசமான நிலைக்கும் இறப்புக்கும் இட்டுச்செல்லும்.சாதரண டெங்கு காய்ச்சலுக்குள்ள அறிகுறிகளுடன் கூட கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருக்கும்.

Ø அதிகமான வயிற்றுவலி

Ø நிலை தடுமாற்றம்

Ø இரத்த அழுத்தம் வேகமாக குறைதல்.

Ø அதிகமான் இரத்தக்கசிவு.

Ø தொடர் வாந்தி.

Ø இரத்த நாளங்களிலிருந்து திரவம் வடிதல்.

நோய் வருவதற்கான காரணங்கள்.

டெங்குக்காய்ச்சலுக்குக் காரணமான நான்கு வைரஸ் கிருமிகள் ஏடிஸ் ஏஜிப்டி(Aedes Aegypti)என்ற கொசுவால் பரப்பப்படுகிறது. ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசு ஆப்ரிக்காவில் தோன்றியது. ஆனால் தற்போது உலகின் அனைத்து வெப்பப் பிரதேசங்களிலும் மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகளில் பெருகி உள்ளது.வைரஸ் கிருமியால் தாக்கப்பட்ட கொசுவால் இந்நோய் மனிதர்களுக்குப் பரப்பப்படுகிறது.டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை முதலில் கொசு கடிக்கிறது.இந்த கொசு வேறு ஒரு மனிதரைக்கடிக்கும் போது அந்தவைரஸ் கிருமி அவர் உடலுக்குள் சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்குகிறது. ஒருமுறை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இந்நோய் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது.ஏனெனில் இந்நோய் வெவ்வேறுவித வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.மறுமுறை வரும்போது அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இப்பாதிப்பு அதிகமாக இருக்கும்.ஆனால் முன்பே இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமாதலால் அவர்களுக்கு இரண்டாமுறை தாக்கும் போது பாதிப்பு அதிகமிருக்க வாய்ப்பு குறைவு.

விளைவுகள்:

டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இருவாரங்களுக்குள் உடல் நிலை தேறிவிடுவார்கள்.ஆனால் சிலர் இந்த நோய் தொற்றுக்குப் பின்னால் பலமாதங்கள் களைப்பு மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.இக்காய்ச்சல் மேலும் கடினமான பாதிப்புக்களான இரத்தக்கசிவுடன்கூடிய காய்ச்சல் மற்றும் பீதியளிக்க கூடிய நிலைக்கு இட்டுச்செல்லும்.

டெங்குக்காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்.?


மேற்கூறிய அறிகுறிகளுடன் சாதரண டெங்குக்காய்ச்சல் என்றால் வா ந்தி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்ய சுத்தமான ( கொதிக்கவைத்து ஆறவைத்த ) நீரைக்குடிக்க வேண்டும்.உப்பு சக்கரைக்கரைசலும் அறுந்தலாம். காலதாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.


டெங்குக்காய்ச்சல் வருவதை தடுக்கும் முறைகள் :

டெங்கு வைரஸ் கிருமிகளின் செயல்பாட்டைத் தடுக்கக்கூடிய வகையிலான தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.எனவே இந்நோய் வருவதைத் தடுப்பதற்கு சிறந்தமுறை என்னவென்றால் கொசுக்களால் கடிக்கப்படுவதைத் தவிர்ப்பதேயாகும்.

Ø இயன்றவரை உடலின் எல்லாபாகங்களையும் மூடும் வகையில் உடை அனிய வேண்டும்.

Ø தூங்கும்போது உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு தூங்கவேண்டும்.

Ø கொசுவிரட்டிகளை பயன்படுத்தலாம்.

Ø கொசுவலைகளை உபயோகிக்கலாம்.

Ø ஜன்னல்களில் வலை அடிக்கலாம்.

கொசு உற்பத்தி தடுக்கும் முறைகள்

1.சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருத்தல் .தேவையற்ற நீர் தேங்கும் பொருட்களை சேகரித்து புதைத்தல் மற்றும் தீயிட்டு எரித்தல்.

2.டயர்கள்/தகரங்கள்/பலகைகள்/பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் அப்புறப்படுத்துதல்.

3.தண்ணீர் சேர்த்துவைக்கும் பாத்திரங்களின் ஓரங்களை சுரண்டி கழுவி தலைகீழாக காயவைத்தல்,குளிர் காற்றாடி மற்றும் பூந்தொட்டிகளை வாரம் ஒருமுறை காயவைத்தல்.

4.தண்ணீர் தொட்டிகள் கொசு புகாவண்ணம் மூடிவைத்தல்.

5.மரப்பொந்துகளில் உள்ள நீரை அப்புறப்படுத்தி வைத்தல் மற்றும் எறும்பு தடுப்புகளில் வாரம் ஒருமுறை உப்பு சேர்த்தல்.

6.கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்க களப்பணியாளர்களை அனுமதித்தல்.

சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாப்போம்!

டெங்குக்காய்ச்சலை ஒழிப்போம்!


தே.சுந்தர்
மாவட்டச் செயலாளர்
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்
தேனி மாவட்டம்

No comments:

Post a Comment