முதல் பக்கம்

Oct 2, 2012

முப்பருவக் கல்வி & தொடர் மதிப்பீட்டு முறை: அறிவியல் இயக்கம் அரசுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு இந்தக் கல்வியாண்டு முதலாக 1 முதல் 8 வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையை அமுல்படுத்தியுள்ளது. 2013-2014 ஆம் கல்வியாண்டில் உயர்நிலை வகுப்புகளுக்கும், 2014-2015 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்புகளுக்கும் அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

அறிவொளிக்காலம் முதல் ஆரம்பக்கல்வியில் அக்கறை செலுத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழக அரசு அமுல்படுத்தியுள்ள CCE மதிப்பீட்டு முறையை நன்கு ஆய்வு செய்யும்பொருட்டு மாநிலம் முழுவதும் பரிசீலனைக் கூட்டங்களை நடத்தியது.

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்டம்பர்,27,2012 அன்று கம்பம் அக்குபங்சர் அகடமியில் பரிசீலனைக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, இந்திய மாணவர் சங்கம், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மாண்வர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர். இக்கூட்ட முடிவுகளின் அடிப்படையில் கீழ்க்காணும் நுட்பமான விமர்சனங்களையும் நடைமுறையில் CCE அமுலாகும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் குறித்த கோரிக்கைகளையும் தமிழக அரசின் பார்வைக்கும் உடன் நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்வி உபகுழுவின் சார்பில் சமர்ப்பிக்கின்றோம்.

1. முற்றிலும் மனப்பாடத்திறனை மையப்படுத்தி அமைந்திருந்த முறையை மாற்றி, புதிய மதிப்பீட்டு முறையை அமுலாக்கியிருப்பது அடிப்படையில் வரவேற்கத்தக்கதே. ஆனால், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள CCE மதிப்பீட்டு முறை முழுமையான மாற்று மதிப்பீட்டு முறையல்ல என்பதை கவலையோடு சுட்டிகாட்ட விரும்புகிறோம்.

2. பாடத்திட்டம், பாடப்புத்தகம், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், பள்ளியின் உள் கட்டமைப்பு அனைத்துக்கும் CCE மதிப்பீட்டு முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றை மாற்றியமைக்காமல் நடைமுறைப்படுத்தப்படும் CCE முறை நிச்சயம் எதிர்பார்க்கும் பலனைத்தராது.

3. ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் என கல்வியோடு தொடர்புடையவர்கள், அக்கறையுடையவர்கள் என அனைவரிடமும் CCE மதிப்பீட்டு யுத்தி பற்றி விரிவான கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் கருத்துக்களையும் உள்ளடக்கி அமுலாக்க முறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் முறைக்கும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கற்றே தீரவேண்டிய முப்பருவ தேர்வு முறைக்கும் உள்ள அடிப்படை முரண்பாடுகள் களையப்பட்டிருக்க வேண்டும்.

5. எந்தவொரு மாற்றுமுறையும் ஒரு PILOT STUDY க்கு பிறகே அமுல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் CCE மதிப்பீட்டு முறை PILOT STUDY இல்லாமல் அமுலுக்கு வந்தது பெரும் குறைபாடாகும்.

6. தொடர் மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த வழங்கப்பட்ட பயிற்சிகளும் அவசரகோலத்தில் நடத்தப்பட்டன. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு எப்படி மதிப்பீடு செய்வது என்ற தெளிவினைத் தரவில்லை. பயிற்சி அளித்தவர்களுக்கும் குழப்பமே மிஞ்சி நிற்கிறது. CCE மதிப்பீட்டு மாதிரிகள், வழிகாட்டி ஆசிரியர் புத்தகம், மதிப்பீட்டிற்கான ஆதார நூல், புத்தகம் ஆகியவை அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். முதல் பருவம் முடிந்துவிட்ட சூழ்நிலையில் இதுவரையிலும் வழங்கப்படவில்லை.

7. நடைமுறையிலிருப்பதாக கூறப்படும் செயல்வழிக்கற்றலுக்கான கற்றல் அட்டைகள் இதுவரை வழங்கப்படவில்லை. அடுத்த பருவத்திலாவது வழங்கிட வேண்டும்.

8. சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் நீண்டகாலமாக பிளவுண்டு கிடக்கும் சமூகத்தில் CCE மதிப்பீட்டு முறை மாணவர்களிடம் பாகுபாடு காட்டவும், அவர்களை மிரட்டுவதற்கும் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு என்பதைக் கருத்தில்கொண்டு அதனைத் தடுப்பதற்கான உரிய வழிமுறைகள் செய்யப்படவேண்டும்.

9. CCE மதிப்பீட்டு முறை என்பது படிவங்களை மட்டும் பூர்த்தி செய்யும் நடைமுறையாக மாறிவிடும் அபாயம் தவிர்க்கப்படவேண்டும்.

10. CCE மதிபீட்டு முறை என்பதே அடிப்படையில் 1:20 என்னும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. இந்த ஆசிரியர் மாணவர் விகிதத்தை கவனத்தில் கொள்ளாமலும், தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள ஈராசிரியர் பள்ளிகளின் கற்பிக்கும் சூழலைக் கணக்கில் கொள்ளாமலும் CCE மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

11. CCE மதிப்பீட்டு முறையை முதலில் அறிமுகப்படுத்திய CCE அமுலாக்கத்தில் உள்ள பிரச்சினைகளையும் CCE மதிப்பீட்டு முறைக்கு ஏற்ற வகையில் பாடப்புத்தகங்களையும் கலைத்திட்டத்தையும் மாற்றி அமைக்க மறுபரிசீலனை செய்து வருகிறது. இதனையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

12. முப்பருவ முறைத்தேர்வு என்பது குறைந்தபட்சம் மூன்றாம் வகுப்பு வரை தவிர்க்கப்பட வேண்டும்.

13. நான்காம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களின் வளரறி தேர்வு-ஆ பகுதியை, கேரளாவில் உள்ளதைப் போல மாணவர்களே சுயமதிப்பீடாக பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்தலாம். அதன்மூலம் மாணவர்களின் சுயமதிப்பீட்டு ஆற்றலும் தலைமைப் பண்பும் வளரும். ஆசிரியர்களின் பணிச்சுமையும் குறையும்.

14. ஏற்கனவே நடைமுறையில் இருந்த மதிப்பீட்டு முறையைவிட மேம்பட்ட மதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் ஆசிரியர்களின் முழுமையான ஈடுபாடு தேவை. அப்பொழுதுதான் CCE முறை வெற்றி பெறும். அதற்கேற்ப உளவியல் சார்ந்து ஆசிரியர்களின் முழுப்பங்கேற்புடன் கூடிய பயிற்சி முறைகள் கட்டமைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட குறைபாடுகள் பரிசீலனை செய்யப்படாமல் குறைகள் களையப்படாமல் தொடக்கக்கல்வியில் அமுலாக்கப்பட்டிருக்கும் மாற்று மதிப்பீடு உண்மையான பலனைத்தர வாய்ப்பில்லை. எனவே, தமிழக அரசு பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றி, அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டுகிறோம்.

  • 2012-2013 கல்வியாண்டில் தொடக்கக் கல்வித்துறையில் CCE அமுல்படுத்தப்பட்டு இருப்பதை PILOT STUDY PERIOD என அறிவிக்க வேண்டுகிறோம்.
  • 2013-2014 கல்வியாண்டில் 9,10 வகுப்புகளுக்கும் 2014-2015 கல்வியாண்டில் 11,12 வகுப்புகளுக்கும் CCE முறை அமுல்படுத்தப்பட உள்ளது என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்திட வேண்டுகிறோம்.
  • PILOT STUDY PERIOD ல் கிடைக்கும் அனுபவங்களையும், நிறைகுறைகளையும் ஆராய்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்வைத்துள்ள விஷயங்களையும் பரிசீலனை செய்து குறைகளை நிறைவு செய்து முழுமைப்படுத்தி CCE முறையை அமுலாக்க வேண்டுகிறோம்.
மாவட்டச்செயலாளர்

No comments:

Post a Comment