தினகரன்
கம்பம்,மே 15 ஒரு கல்வியாண்டில் மாணவர்கள் எப்பொழுது
வேண்டுமானாலும் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம்
என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கம்பம் நகரில் முக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளியில்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கல்விசார்ந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார்.
முக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.
குள்ளப்பகவுண்டன் பட்டி ராமகிருஷ்ணா ஆசிரியர்
பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார்.
'குழந்தைகளும் தண்டனைகளும்' என்ற தலைப்பில்
கல்வியாளர் அமல்ராஜ், 'கல்வி உரிமைச்சட்டத்தின் மறுபக்கம்'
என்ற தலைப்பில் பாண்டியராஜன் கருத்துரை வழங்கினர்.
அதனை தொடர்ந்து தண்டனைகள்,பாராட்டுதல்களால்
தங்களது மாணவர்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள்
குறித்த அனுபவங்களை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன்
நன்றி கூறினார்.
கூட்டத்தில் பொதுக்கல்வி முறையை
உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சட்டத்தில் கூறியுள்ளபடி
அண்மைப்பள்ளிகளை திறப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
6 முதல் 14வயது வரையுள்ள
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் 3முதல் 5வயது வரையுள்ள
குழந்தைகளுக்கும் தரமான,சமமான இலவசக்கல்வி கிடைப்பதற்கு
உறுதிசெய்ய வேண்டும்.
கிராமப்புற அரசுப்பள்ளிகளின் தரத்தையும்
பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தவேண்டும்.
ஆசிரியர் நியமனங்களை உடனடியாக
மேற்கொள்ள வேண்டும்.
வசதிகளை மேம்படுத்தாத தனியார் பள்ளிகளுக்கான
அங்கீகாரத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கல்வியாண்டில் மாணவர்கள் எப்பொழுது
வேண்டுமானாலும் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் என்னும்
அதே வேளையில் அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்குவதற்கான
வழிமுறைகளை வகுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment