அமெரிக்காவில் உள்ள ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி (மானுடவியல்) படித்து வரும் மாணவி எலினார். இவர் தனது படிப்பின்
ஆராய்ச்சிக்காக கிராம மக்களின் வாழ்க்கை, கலாசாரத்தை அறிந்துகொள்ள கடந்த 10
மாதங்களுக்கு முன் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்துக்கு வந்து ஓவியம் ஆறுமுகம்
என்பவருக்குச் சொந்தமான குழும வீட்டில் தங்கினார். இவருக்கு ஆறுமுகத்தின் மகள்
எம்.எஸ்சி படித்த ராஜேஸ்வரி மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல வகைகளில் வழிகாட்டுதலாக
இருந்து வருகிறார்.
மானுடவியல் பாடத்தில் மக்கள் கிராம தெய்வங்களை வழிபடுவது, திருமணங்கள்
நடத்துவது குறித்தும், கோயில் திருவிழாக்கள் கலாசார முறைகளையும் தனது ஆய்வுக்காக
ஊன்றிக் கவனித்து வருகிறார் மாணவி எலினார்.
மேலப்பசலை கிராம மக்களிடத்தில் மாணவி எலினார் அன்பாகப் பழகி வருவதால், கிராம
மக்களும் இவரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வருகின்றனர்.
கிராம மக்களுடன் சேர்ந்து வயல்வெளிகளில் வேலை செய்வது, வீட்டில் சமையல் வேலை
செய்வது, கிராம மக்களுடன் சேர்ந்து திரையரங்குக்குச் சென்று சினிமா பார்ப்பது
போன்றவற்றையும் தனது ஆராய்ச்சி படிப்புடன் எலினார் மேற்கொண்டுவருகிறார்.
மேலும், பெண்கள் வயல் வேலைகளுக்குச் சென்றால் அவர்களுடன் சென்று வயலில் நாற்று
நடுவது, களை எடுப்பது போன்ற வேலைகளையும் செய்து வருகிறார். கிராமத்து வாழ்க்கையை
ரசித்தபடி அனுபவித்துவரும் எலியனார் நம்மிடம் பேசியதிலிருந்து...
""நான் பிரிட்டனில் முதுகலைப் படிப்புப் படித்தேன். தற்போது மானுடவியல்
ஆராய்ச்சி படிப்புக்காக மேலப்பசலை கிராமத்தில் வந்து தங்கியிருந்து, படிப்பு
சம்பந்தமாக ஆய்வு செய்து வருகிறேன்.
படிப்புக்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். எனது படிப்புக்கு அமெரிக்கா,
இந்திய அரசாங்கங்கள் உதவி செய்து வருகின்றன. நான் மேலப்பசலை அருகேயுள்ள கரிசல்குளம்
கிராமங்களில் நடக்கும் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு
நேரிடையாகச் சென்று, ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொண்டுள்ளேன்.
இது எனது ஆராய்ச்சிப் படிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
படிப்பு என்பது வாழ்க்கையில் முக்கியமானதாகும். அமெரிக்க கல்வி முறையானது
படித்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறையில் இல்லை. ஆனால், இந்தியாவில்
படிக்கும் பாடத்திலிருந்து கேள்வி - பதில்களை மனப்பாடம் செய்து, அதையே பதிலாக
எழுதுகிறார்கள். இந்த படிப்பு முறை வாழ்க்கைக்கு உகந்ததல்ல. படிக்கும்
பாடத்திலிருந்து சொந்தமாகப் பதில் எழுத வேண்டும்.
அமெரிக்காவில் அரசுப் பள்ளிகள் தான் சிறப்பானதாக இருக்கும். வீடுகளுக்கு
அருகேயுள்ள பள்ளிகளில்தான் சேர்ந்து படிக்க வேண்டும். ஒரு வகுப்புக்கு 30
மாணவர்கள்தான் இருப்பார்கள். பள்ளிகளில் விளையாட்டு, உடற்பயிற்சி முக்கியப்
பாடங்களாக இருக்கும்.
தமிழகத்தில் விளையாட்டுக் கல்வி முறையும் படிப்பும் மாணவர்களை முன்னேற்றும்
விதத்தில் இல்லை. இரவானால் இங்கு பெண்கள் வெளியில் செல்லத் தயங்குகிறார்கள்.
அமெரிக்காவில் இரவில் வெளியில் செல்ல பயம் கிடையாது.
திருமணத்துக்காக இங்கு போல் வரதட்சிணை வாங்கும் பழக்கம் எங்கள் நாட்டில் இல்லை''
என்றார்.
இவருக்கு உதவியாக உள்ள மேலப்பசலை ராஜேஸ்வரி, ""எலினார் தன்னம்பிக்கையுடன்
சுறுசுறுப்பாக உள்ளார். எந்த நேரமாக இருந்தாலும் எங்கும் செல்லும் தைரியம் இவரிடம்
உள்ளது.
மேலப்பசலை கிராம மக்களின் அன்பைப் பெற்றுள்ள இவர், சிறுவர்களுடன் விளையாடுவது
இளைஞர்களுடன் சகஜமாக பேசி பழகுவது பெண்களுடன் சேர்ந்து வயலுக்கு நாற்று நடவும் களை
எடுக்கவும்கூட செய்கிறார். இதெல்லாம் இவரது சிறப்பாகும்.
இவர் மேலப்பசலைக்கு வந்த பின்னர், இவரது பெற்றோர் ஒருமுறை இங்கு வந்து
சென்றுள்ளனர்''
என்றார்.
ஞாயிறு கொண்டாட்டம்,
No comments:
Post a Comment