முதல் பக்கம்

Sep 29, 2012

பாவ்லோ பிரைரே-ஆசிரியர் இணையக்கூட்டம்

பிரேசில் நாட்டின் கல்வியாளர் பாவ்லோ பிரைரே அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர்,19,2012 அன்று மாலை கம்பத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட அலுவலகத்தில் ஆசிரியர் இணையக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாவ்லோ பிரைரே 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுதில்லி நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விசார் கலந்துரையாடலின் போது நிகழ்த்திய உரையின் நூல் வடிவமான  “எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” என்ற புத்தகத்தை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது.

ஒரு ஆசிரியரோ, கல்வியாளரோ எப்பொழுதும் நடுநிலையாளராக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. அப்படி ஒருவர் சொல்லிக்கொள்வாரேயானால் அது உண்மையில்லை. ஒவ்வொரு ஆசிரியருமே ஒரு அரசியல்வாதிதான் அல்லது கலைஞர்களாகத்தான் இருப்பார்கள்.

கற்பித்தல் என்பதே ஒரு அரசியல் செயல்பாடுதான்.

கல்வியின் மூலமாக மட்டுமே எந்த ஒரு அரசியல், சமூக மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது.

நடைமுறையில் இருக்கின்ற கல்வியும் பள்ளிகளும் நடுநிலையானவை அல்ல. அவை ஆளும் அதிகார வர்க்கத்தின் தத்துவார்த்த நிலையை அடுத்தடுத்த தலைமுறைகளிடம் மீள் உருவாக்கம் செய்கின்ற வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன.

ஆசிரியராக இருக்கின்ற ஒருவர் 50 விழுக்காடு மாணவராகவும், 50 விழுக்காடு ஆசிரியராகவும் இருக்க தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

கல்வி என்பது கற்றல் என்பது உரைவீச்சுக்களின் மூலம் நிகழ்வதாக இருக்கக்கூடாது. மாறாக கலந்திரையாடலின் மூலமாகவே நிகழவேண்டும்.

இவ்வாறு பல்வேறு சிந்தனைகளை, விவாதக்கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்தப்புத்தகம் இருக்கிறது. இவ்விவாதத்தில் அறிவியல் இயக்க நண்பர்கள் ஜெயமுருகன், தே.சுந்தர், மொ.தனசேகரன், வி.வெங்கட்ராமன், க.முத்துக்கண்ணன் மற்றும் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்புத்தகத்தினை எழுத்தாளர் கமலாலயன் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. விலை ரூ.30/- அவசியம் படிங்க.

No comments:

Post a Comment