முதல் பக்கம்

Dec 22, 2010

கல்வி உரிமைச் சட்டம் விழிப்புணர்வுப் பிரச்சாரம்: திட்டமிடல் கூட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்கமும் நமது அறிவியல் இயக்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் கலைக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரம்,பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர்கள், அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலைக்குழு பிரச்சாரத்திற்கான பாடல்,நாடகம் தயாரிப்பிற்காக எழுத்தாளர்களுக்கான பணிமனை ஆகியவை நடந்து முடிந்துள்ளது.

அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் திட்டமிடல் கூட்டம் தேனி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று (டிசம்பர்,21) நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்.எஸ்.எ. முதன்மைக்கல்வி அலுவலர் ஆண்டிபட்டி,தேனி BRC மேற்பார்வையாளர்கள், உத்தமபாளையம் DIET விரிவுரையாளர், VEC ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்கத்தின் தலைவர் செந்தில்குமரன் செயலாளர் சுந்தர் செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி,அம்மையப்பன் மற்றும் மாவட்ட கருத்தாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாம் தேதிகள் இருதரப்பு ஒத்துழைப்பு கலைப்பயணம் குறித்து திட்டமிடப்பட்டது. கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் டிசம்பர் 23,24 மற்றும் டிசம்பர் 27,28 தேதிகளில் தேனி அல்லிநகரம் வட்டார வள மையத்தில் நடைபெறும். அறிவியல் ஆர்வலர்கள் பங்கு பெறலாம். மேலும் விபரங்களுக்கு: 9488011128

Dec 19, 2010

இலவச,கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-விழிப்புணர்வு பிரச்சாரம்.

அனைவருக்கும் கல்வி இயக்கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் இலவச ஆரம்பக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் ஓவ்வொரு அரசு மற்றும், அரசு உதவிபெறும் பள்ளியிலும் உள்ள கிராமக் கல்விக் குழுவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக பிரச்சார இயக்கத்தை நடத்த உள்ளோம்.. 

இப்பிரச்சாரத்தின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமக் கல்விக் குழுவின் பொறுப்பு மற்றும் அவசியத்தை ஒவ்வொரு குழுவும் அறிந்து தங்கள் பகுதி அரசு மற்றும், அரசு உதவிபெறும் பள்ளியை மேம்படுத்தவும், அதனை அனைத்து வகை தகுதிகளும் பெற்ற பள்ளியாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளச் செய்வதுடன் தங்கள் பள்ளிகளை தங்களே முன்வந்து முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்க்கான அனைத்து வகையான வழிகாட்டலும் கிராமக் கல்விக் குழுவிற்கு வழங்கப்பட உள்ளது. 

இதற்காக மாநிலம், மாவட்டம், வட்டார வள மையம் (BRC), பள்ளி தொகுப்பு கலந்தாய்வு மையம் (CRC) அளவிலான பயிற்சிகள் அறிவியல் இயக்க உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், சுய உதவிக்குழுப் பெண்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டார வள மைய பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.. 

எனவே நமது தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரத்திற்கும் மற்றும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பள்ளி தொகுப்பு கலந்தாய்வு மையம் (57) அளவில் இருந்து ஆர்வலர்கள் (அறிவியல் இயக்க உறுப்பினர்கள், மருத்துவர்கள் வழக்கறிஞர்கள்) தேவை உள்ளது. எனவே தங்கள் பகுதியில் கிளையில் உள்ள ஆர்வமான மேற்கண்ட நபர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.மேலும் இவ்வியக்கத்தை வலுப்படுத்த கலைக் குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களும் கிராமம் தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். நமது மாவட்டத்தில் மூன்று வட்டாரத்திற்கு ஒன்று என்ற வகையில் 3 கலைக் குழுக்கள் (3 × 12 = 36 கலைஞர்கள்) தேவை. (கலைஞர்களுக்கு மதிப்புதியம் தரப்படும்). எனவே கலை ஆர்வமும், சமுக தாகமும் கொண்ட நண்பர்கள் தொடர்புகொள்ளவும்.
9488011128

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நமது மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அழைப்பு

வருகின்ற 27 முதல் 31 வரை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நமது மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், கிளை, தகவல் தொடர்பு முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் எந்தெந்த தேதிகளில் கலந்துகொள்ள முடியும் என்பது உட்பட மாவட்ட செயலாளரிடம் (9488011128) தெரிவிக்கலாம்.

பின்பு மாநில செயலாளருக்கு அனுப்பப்பட்டு முன்பதிவு மற்றும் தேவைகளின் அடிப்படையில் தாங்கள் மாநில மையத்தால் அழைக்கப்படலாம் , 

மாநில மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட உத்தேச திட்டங்கள்:

27,28 ,29 மாலை வரையில் ஆய்வறிக்கை சமர்பித்தல்.
27ந்தேதி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள்.
28 - கண்காட்சி
Video conference முறையில் நாட்டிலுள்ள பல்வேறு விஞ்ஞானிகள் உடன் குழந்தை விஞ்ஞானிகள் கலந்துரையாடல் 
30 - அறிவியல் சுற்றுலா அப்துல்கலாம் உடன் கலந்துரையாடல் 
31 - நிறைவு விழா - முதன் முறையாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி (வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள்) பங்கேற்கிறார்.

அறிவியல் இயக்கம்,தேனி.

மாவட்டத்தலைவர்:
பா.செந்தில்குமரன்
_9942112203

மாவட்டச் செயலாளர்:
தே.சுந்தர்
-9488011128

மாவட்டப்பொருளாளர்:
செ.சிவாஜி
-9486258980

மாநிலப் பொதுக்குழு:
திருமிகு.ஹ.ஸ்ரீராமன்
-9443929250

இளைஞர் அறிவியல்
மாநாடு ஒருங்கிணைப்பாளர்:
முனைவர்.ஜி.செல்வராஜ்
-9865073411

குழந்தைகள் அறிவியல்
மாநாடு ஆய்வு ஒருங்கிணைப்பாளர்:
முனைவர்.எஸ்.கண்ணன்
-9442021368

கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்:
வி.வெங்கட்ராமன்
-8870703929

மாணவர்களுக்கு பாராட்டு விழா

கூடலூர் :  தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர்,16,2010

கோவையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அண்மையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தின் சார்பாக கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் சந்தியப்பிரவீன், ஹரிபிரசாத், சரத்குமார், கார்த்திக் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பராட்டு விழா கூடலூர் வீகேன் பயிற்சி மையத்தில் நடந்தது. பொறுப்பாளர் சுரேந்தர் வரவேற்றார். விவசாய அலுவலர் தெய்வேந்திரன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீராமன், துளிர் இல்ல ஆலோசகர் பிரகலாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்துக்கண்ணன், பாஸ்கரன், வெங்கட்ராமன், ராஜசேகர், ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

Dec 17, 2010

13வது அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு(AIPSN) மாநாடு

இந்திய தேசமெங்கும் அறிவியலின் அற்புதத்தை பின்தங்கிய கிராமங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ள பல்வேறு அறிவியல் அமைப்புகளும் ஒருங்கிணைந்த அமைப்புதான் AIPSN என்றழைக்கப்படும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு. 

இந்த அமைப்பின் 13வது மாநாடு வருகின்ற டிசம்பர் 27 முதல் 31 வரை கேரள மாநிலம் திருச்சூரில் ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்மாநாடு  கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களைச் சேர்ந்த 600 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

தமிழ்நாட்டிலிருந்து நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  சார்பில் 30 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அணுசக்தி வளர்ச்சி முகமையின் முன்னாள் தலைவர் டாக்டர்.எ.கோபாலகிருஷ்ணன் மாநாட்டைத் துவங்கி வைக்கிறார். மாநாட்டிற்கான முன்னோட்டமாக ஆற்றல் சேமிப்பு, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் உடல்நலம்&சுகாதாரம் ஆகிய பல்வேறு தலைப்புகளில் மக்கள் சந்திப்பு, பிரச்சார இயக்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 27ம்தேதி அறிவியல் சுயசார்புக்கே! மதச்சார்பின்மைக்கே! வளர்ச்சிக்கே! என்ற தலைப்பில் தேசிய அளவிலான மிகப்பெரிய கருத்தரங்கமும் நடந்து முடிந்துள்ளதாகத் தெரிகிறது. டிசம்பர் 27ந்தேதி காலையில் துவக்கவிழா. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 30 வரை அறிவியல் பரப்புதல், விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல்,பருவகாலமாற்றம்&வளர்ச்சி, அதிகாரப் பரவல், மக்கள் ஜனநாயகம், தொழில்நுட்ப பயன்பாடு, நவீன தொழில்நுட்பங்களும் சுயசார்பும் எனப்பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெறுகின்றன.

மாலைநேரங்களில் கலைநிகழ்ச்சிகளும் கருத்துரைகளும் இடம்பெறுகின்றன. இறுதிநாளான டிசம்பர் 31 அன்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த விவாதமும் நடைபெறுகின்றது. நமது தேனி மாவட்டத்தின் சார்பாக அறிவியல் இயக்க மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ஹ.ஸ்ரீராமன் கலந்து கொள்கிறார்.

மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் மாநாடு வெற்றி பெறட்டும்! 
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மக்களுக்கெல்லாம்...
அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அனைவருக்கும் ஒன்றாய்..."
(பாரதி)

_தேனி சுந்தர்

Dec 16, 2010

பேராசிரியர் மணியின் பள்ளிக்கூடத்தேர்தல் : நியாயமான தேர்தல்

ஊர் ஊராய்.. தெருத்தெருவாய் அவரவர் சக்திக்கேற்ப விருதுகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தினமணி நாளிதழில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரையொன்றில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வீட்டுக்கொரு விருது வழங்குவதாக எந்தக்கட்சி உறுதியளிக்கிறதோ அந்தக்கட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகக் கிண்டலடித்திருந்தார் கட்டுரையாளர். அந்தளவுக்கு விருது மோகம் வேராக விழுதாக எங்கும் வியாபித்துக்கிடக்கிறது.

அதிலும் பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் துவங்கிய பிறகு வல்லுநர் குழுவே வாயடைத்துப் போகுமளவிற்கு "பட்டங்கள்" ஏராளமாய்த் தாராளமாய் நம் கண்ணில் படுகின்றன. இது எங்கபோய் முடியுமோ தெரியவில்லை!

ஆசிரியர்களைப் பொறுத்தவரை நல்லாசிரியர் விருது ஒன்றுதான் அவர்களது ஒரே மற்றும் உயர்ந்தபட்ச எல்லையும்கூட. மாநில அளவிலான  நல்லாசிரியர் விருது தேசிய அளவிலான  நல்லாசிரியர் விருது என இரண்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதுவும் நாடிநரம்பெல்லாம் அடங்கி ஒடுங்கியபிறகு!

துடிப்பாக பணிபுரிகின்ற காலத்தில் புதுமைகள் படைக்கின்ற காலத்தில் விருது வழங்கினாலாவது ஒரு புண்ணியம். விருது கிடைத்த உத்வேகத்தில் சில காலங்கள் சிறப்பாகப் பணிபுரிவதற்கு ஓரளவு வாய்ப்புள்ளது. ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்கின்றபோது கிடைக்கின்ற விருதும் பரிசும் என்னத்துக்கு? பணிக்காலத்தில் தான்புரிந்த சாதனைக்குச் சான்றாக கிடைத்தது என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு விருதையும் படத்தையும் பொழுதுபோகாத நேரங்களில் தூசி துடைத்துத் தூசி துடைத்துப் பார்த்துக் கொள்வதற்குத்தான் உதவும்.

ஒரு உண்மையைச் சொல்வதென்றால் இப்பொழுதெல்லாம் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவதில்லை. நல்ல விலைக்கு வாங்கப்படுகின்றன. சங்கவாதிகள் யாரேனும் விருது வாங்கிவிட்டால் பாராட்டுகள் குவிவதில்லை. மாறாக அவர் இதுவரை செய்த தியாகங்களும் இழந்த இழப்புகளும் கேள்விக்கு  உள்ளாக்கப் படுகின்றன. சந்தேகிக்கப்படுகின்றனர். இதுதான் நல்லாசிரியர் விருதின் இன்றைய லட்சணம்!

ஆனாலும், எது உண்மையான விருது? எது ஆசிரியர் பணியை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது? எது பணியை நேசிக்கும் ஒரு ஆசிரியருக்கு முழுமையான மனநிறைவைத் தருகிறது? மாணவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும்தான்.  ஒரு ஆசிரியரை நல்ல ஆசிரியர், திறமையானவர் எனத் தீர்ப்பு வழங்கும் தகுதியும் திறமையும் மாணவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதைப் பறைசாற்றுவதாக உள்ளது பேராசிரியர் மணியின் பள்ளிக்கூடத்தேர்தல் புத்தகம்!

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணியனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது வருங்கால இளைய தலைமுறை  ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்குமென்று எனக்கிருந்த கருத்தை இப்பொழுது மாற்றிக்கொண்டேன். நாம் பதிவு செய்ய வேண்டியது ஆசிரியர்களின் கருத்தையல்ல.  அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளான மாணவக் கண்மணிகளின் கருத்தைத்தான் நாம் தேடித்தொகுக்க  வேண்டியுள்ளது. அதைக் காட்டிலும் சிறப்பான ஒரு வழிகாட்டிக் கையேட்டை எந்தக் கொம்பனாலும் தயாரிக்க முடியாது..

பள்ளிக்கூடத்தேர்தல்,ஒவ்வொரு ஆசிரியரும் ஆசிரியப்பயிற்சி மாணவரும் படிக்கவேண்டிய பாதுகாக்க வேண்டிய புத்தகம்! நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கவேண்டிய புத்தகம்!

இரட்டைக் குவளை முறைக்கு எதிராகப் போராடிய பொன்னுச்சாமி வாத்தியாரும் தன் வகுப்பில் பாடத்தைக் கவனிக்காமல் ஒரு குழந்தை தூங்கினாலும் மனம் வருந்திக் கண்ணீர் விடும் ஆசிரியரும் கண்ணுக்குள் நிற்கின்றனர். பி.டி.ஏ. ஆசிரியராகப் பணிபுரிந்தபோதும் தன்சொந்தப்பணத்தைச் செலவு செய்து பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அந்த நண்பர் இன்று நிரந்தரப்பணி கிடைத்த பிறகு மாதந்தோறும் தன் சம்பளத்தில் குறுப்பிட்ட தொகையை மாணவர்களுக்காக ஒதுக்குகிறார். நேரில்பார்க்க நெஞ்சம் துடிக்கிறது.

வணக்கம் சொல்லும் குழந்தைகளைத் தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் ஆசிரியர், கண்டிப்புடன் இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர், பெண்டாட்டி மீதான கோபத்தில் மாணவர்களைப் போட்டு அடிக்காத ஆசிரியர், அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டிய ஆசிரியர், வெப்பம் அடைதலில் இருந்து புவியைக்காக்க தன்னால் ஆன முயற்சிகளைச் செய்து மாணவர்களையும் தூண்டிய ஆசிரியர், விடுப்பு எடுப்பதற்கு முன் மாணவர்களிடம் அனுமதி வாங்கிய ஆசிரியர் என பலதரப்பினரும் மாணவர்களின் மனம்கவர்ந்த ஆசிரியர்களாய் இன்றும் திகழ்கின்றனர். 

போகிற போக்கில் பேரா.மணி சொல்கிற இந்த வரிகள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கவும் விவாதிக்கப்படவும் வேண்டியவை... "மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்தும் பொதுப்புத்தியிலும் பொதுவெளியிலும் ஆசிரியர்களைப் பற்றி உருவாக்கப் பட்டிருக்கும் நீதி நெறிகளை மையமாக வைத்தே தங்களை நல்லாசிரியர்களாக வடித்துக் கொண்டிருக்கிறார்களே அன்றி, அறிவியல் பூர்வமான அணுகுமுறையினால் அல்ல!"

எனவே எவையெல்லாம் மாணவர்களைப் பாதிக்கின்றன, எவையெல்லாம் மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றன என்பதை அறியத்துடிக்கும் ஆசிரிய நண்பர்களுக்கும் மாணவர்/குழந்தைகளின் மனம் கவர்ந்தவர்களாய்த் திகழவிரும்பும் யாவருக்கும் "பள்ளிக்கூடத்தேர்தல்" ஒரு அகராதியாகத் துணைநிற்கும். மாற்றுக்கல்வி குறித்துச் சிந்திக்கும், செயல்படும் அனைத்து நண்பர்களும் படிக்கவேண்டிய... பறைசாற்ற வேண்டிய புத்தகம்! இவ்வரிய புத்தகத்தை நமக்களித்த பேராசிரியர் மணி அவர்களின் தலையில் மணிமகுடம் சூட்டலாம்!
_தேனி சுந்தர்

Dec 13, 2010

டிசம்பர் 13, இரவு வானின் பல வண்ண மத்தாப்பூ .. கொண்டாட்டம்

நண்பர்களே வணக்கம்.
வருடத்தில் 9 முறை விண்கற்கள் பொழிவு
(வானின் வண்ணப்
பட்டாசு கொண்டாட்டம் )
வானில் நடக்கிறது.
இது வால்மீன்கள் விட்டுச் சென்ற
தூசுதான்.
இவை எந்த விண்மீன் படலத்திலிருந்து
தெரிகிறதோ, அந்தப் பெயரை
வைத்து,
அந்த விண்கற்கள் பொழிவை அழைக்கிறோம்.
இன்று தெரியப்போகும்
விண்கற்கள்
பொழிவின் பெயர், ஜெமினியாய்டு விண்கல் பொழிவு.
அனைத்து
விண்கல் பொழிவுகளிலும்
ரொம்பவும், வண்ண மயமாக
காட்சி தரும் விண்கல்
பொழிவு இது.
இவைகளில் 65% வெண்மையாகவும்,
26 % மஞ்சளாகவும்,
மீதி 9 %
சிவப்பு,பச்சை, நீலமாகவும் தெரியும்.
இந்த விண்கல் பொழிவு,
பொதுவாக டிசம்பர் 11 -14 தினங்களில் தெரியும்.
இந்த ஆண்டு, டிசம்பர் 13 ம் நாள்

இரவு, நிறைய, ரொம்ப பிரகாசமாய்,
வானில் வண்ணப் பட்டாசாய் கொட்டும்.
இதனை,
இந்த ஆண்டு, அது தெரியும் நேரத்தில்,
நிலவு மறைந்து விடுவதால்
நாம்
நன்றாக கண்டுகளிக்க முடியும்..
சாதாரணக்கண்களாலேயே..!
வானின் வண்ண
மத்தாப்பு,
ஜெமினி படல விண்மீன்களான
காஸ்டர்,போலக்சிலிருந்து,கண்ணிமைக்கும் நேரத்தில்
வண்ண மயமாக, பல திசைகளுக்கும்

வேகமாகச் சென்று மறையும்.
ஜெமினி விண்மீன்கள்,
ஒரையான்(வேட்டக்காரன்)

விண்மீன் தொகுதியிலிருந்து
வடகிழக்கில் உள்ளது.
இன்று இரவு 10 .30
மணிக்கு
மேல்,வடகிழக்கு வானில், சுமார் 50 டிகிரி
உயரத்தில் தெரியும்.

ஆனால் பின்னிரவில்,சுமார் 2 மணிக்கு
மேல்தான் அதிகமான விண்கற்கள்
கொட்டும்.
நீங்கள் வானின் இந்த வேடிக்கையை,
விடிகாலை வரை பார்த்து
மகிழலாம்.
மணிக்கு 50 விண்கற்கள் எரிந்து விழும்.

_பேரா.சோ.மோகனா

Dec 12, 2010

இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா

டிசம்பர் 11,2010
கோவை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த டிசம்பர் 3,4,5 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லத்தின் மாணவன் சத்தியபிரவீன் தலைமையிலான ஆய்வுக்குழு கலந்து கொண்டது. அம்மாணவர்களுக்கான பாராட்டு விழா வீ.கேன்.பயிற்சி மையத்தில் நடைபெற்றது. பயிற்சி மைய பொறுப்பாளர் திருமிகு.எல்.சுரேந்தர் வரவேற்றார்.வேளாண் அலுவலர் திருமிகு.தெய்வேந்திரன் அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ஹ.ஸ்ரீராமன் துளிர் இல்ல ஆலோசகர் திருமிகு.பிரகலாதன்,தமிழாசிரியர் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். வழிகாட்டி ஆசிரியர்கள் திருமிகு.க.முத்துக்கண்ணன், திருமிகு.பி.பாஸ்கர் மாநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். திருமிகு.வி.வெங்கட்ராமன் மற்றும் ராஜசேகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். திருமிகு.ரேணுகா நன்றி கூறினார்.

Dec 9, 2010

NCSC மாநில மாநாட்டில் பங்கேற்பு

கோவை மாவட்டம் கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 3,4,5 தேதிகளில் மாநில அளவிலான 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தேனி மாவட்ட மாநாட்டில் தேர்வுசெய்யப்பட்ட  ஆண்டிபட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேனி மேரிமாதா மற்றும் கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் கோம்பை எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி மற்றும் கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்லத்தைச் சேர்ந்த ஆறு ஆய்வுக்குழுக்கள் [28 குழந்தைகள், 8ஆசிரியர்கள்] கலந்துகொண்டன.
 
நமது மாவட்டச்செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு.க.முத்துக்கண்ணன் திருமிகு.பி.பாஸ்கர் ஆகியோர் கருத்தாளர்களாகக் கலந்து கொண்டனர். நமது மாவட்டத்திலிருந்து கோம்பை எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானி விருதிற்குத் தேர்வுசெய்யப்பட்டனர். தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27 முதல் 31 வரை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு : கோவையில் நாளை துவக்கம்

தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2010,02:23 IST
கோவை :
மாநில அளவிலான, 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கோவையில் நாளை துவங்குகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் நடராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவால் இணைந்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இப்பணிகளை ஒருங்கிணைக்கிறது.

இந்த ஆண்டுக்கான மாநில மாநாடு, கோவை அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் வரும் 3, 4, 5 தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருப்பொருள், "நிலவளம்-வளமைக்காக பயன்படுத்துவோம்; வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம்' என்பதாகும்.

தமிழகம் முழுவதும் இருந்து வரும் 2,000 ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 160 முதல் 200 ஆய்வுக் கட்டுரைகள், மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 1,200 மாணவர்கள், 200 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். 13 அரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் 30 ஆய்வுகள், தேசிய மாநாட்டுக்காக தேர்வு செய்யப்படும்.

மாநாட்டில் பங்கேற்கும் அறிவியலாளர்கள், சாதனையாளர்களுடன் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். எளிய அறிவியல் பரிசோதனைகள், கணித விளையாட்டுக்கள், அறிவியல் போஸ்டர் கண்காட்சி, அறிவியல் விளையாட்டுக்களும் உண்டு.

ஊரக தொழில் துறை அமைச்சர் பழனிச்சாமி, கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலர் பேராசிரியர் மணி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, நடராஜன் தெரிவித்தார்.

நிலவளத்தில் வெட்டி வேரின் பங்கு: மாணவர் ஆய்வு கட்டுரை தேர்வு

கம்பம் :தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2010

இளம் விஞ்ஞானிகளுக்கான
ஆய்வு கட்டுரை போட்டியில்
கோம்பை பள்ளி மாணவர்கள்
ஆய்வு தேர்வு செய்யப்பட்டது.
அறிவியல் இயக்கம் சார்பில்
ஒவ்வொரு ஆண்டும்
இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கட்டுரை
போட்டி நடத்தப்படும்.
கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு,
அகில இந்திய அறிவியல் மாநாட்டில்
சமர்ப்பிக்கப்படும்.
அங்கு தேர்வு செய்யப்படும்
ஆய்வு கட்டுரைகளுக்கு,
சம்பந்தப்பட்டவர்களுக்கு இளம் விஞ்ஞானி
என்ற விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான
ஆய்வு கட்டுரை போட்டி
கோவை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில்
நடந்தது.
தேனி மாவட்டம் கோம்பை கன்னிகாபரமேஸ்வரி
மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்லத்துரை
சமர்ப்பித்த "நிலவளத்தில் வெட்டி வேரின் பங்கு'
என்ற கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.
9 ம் வகுப்பு மாணவர்கள் செல்லத்துரை
தலைமையில் மகேந்திரன், வசந்த்,
காவேரி, அஜித்குமார் ஆகியோர்
கொண்ட மாணவர்கள் குழு தயாரித்துள்ளது.

Dec 6, 2010

அறிவியல் மாநாட்டு தலைப்பு அறிவியல் இயக்கம் அறிவிப்பு

கம்பம் :தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010

இளைஞர் அறிவியல் மாநாட்டிற்கான
தலைப்புகளை தேனி மாவட்ட
அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு:
இவ்வியக்க அறிவியல் மாநாடு
பிப். 28ல் மதுரையில் நடக்கிறது.
இதில் இயற்கை, அறிவியல் மற்றும் சமூகம்
ஆகிய பொது தலைப்பில்
ஆய்வுகள் சமர்ப்பிக்கலாம்.
அறிவியல் தொழில்நுட்ப
வளர்ச்சியின் விளைவுகள்,
மக்கள் வாழ்வும், மூட நம்பிக்கைகளும்
- அதற்கான தீர்வுகளும்,
அறிவியல் பரப்புதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,
பெண்கள் மேம்பாடு,
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்,
ஊரக மேம்பாடு, நகர மயமாதல் மற்றும்
தொழில் மயமாதல் ஆகியவை துணை தலைப்புகளாகும்.

17 முதல் 30 வயதிற்குட்பட்ட
கலை, அறிவியல், பொறியியல்,
மருத்துவம் உட்பட
அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு ஆய்வும் 2 முதல் 4 மாணவர்கள்
குழுவாக இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
பேராசிரியர், ஆசிரியர், அறிவியல் ஆர்வலர்
ஒருவரை வழிகாட்டியாக கொண்டிருக்க வேண்டும்.
தமிழ் அல்லது ஆங்கில மொழியில் சமர்ப்பிக்கலாம்.
ஆய்வு சுருக்கங்களை டிச. 24க்குள்ளும்,
முழுமையான ஆய்வுகளை ஜன.12க்குள்ளும்
தேனி மாவட்ட அறிவியல் இயக்கத்திற்கு
அனுப்ப வேண்டும்.
இவ்வாறு இவ்வியக்க செயலாளர் சுந்தர்
தெரிவித்துள்ளார்.(மொபைல் எண்-94880 11128)