ஊர் ஊராய்.. தெருத்தெருவாய் அவரவர் சக்திக்கேற்ப விருதுகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தினமணி நாளிதழில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரையொன்றில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வீட்டுக்கொரு விருது வழங்குவதாக எந்தக்கட்சி உறுதியளிக்கிறதோ அந்தக்கட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகக் கிண்டலடித்திருந்தார் கட்டுரையாளர். அந்தளவுக்கு விருது மோகம் வேராக விழுதாக எங்கும் வியாபித்துக்கிடக்கிறது.
அதிலும் பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் துவங்கிய பிறகு வல்லுநர் குழுவே வாயடைத்துப் போகுமளவிற்கு "பட்டங்கள்" ஏராளமாய்த் தாராளமாய் நம் கண்ணில் படுகின்றன. இது எங்கபோய் முடியுமோ தெரியவில்லை!
ஆசிரியர்களைப் பொறுத்தவரை நல்லாசிரியர் விருது ஒன்றுதான் அவர்களது ஒரே மற்றும் உயர்ந்தபட்ச எல்லையும்கூட. மாநில அளவிலான நல்லாசிரியர் விருது தேசிய அளவிலான நல்லாசிரியர் விருது என இரண்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதுவும் நாடிநரம்பெல்லாம் அடங்கி ஒடுங்கியபிறகு!
துடிப்பாக பணிபுரிகின்ற காலத்தில் புதுமைகள் படைக்கின்ற காலத்தில் விருது வழங்கினாலாவது ஒரு புண்ணியம். விருது கிடைத்த உத்வேகத்தில் சில காலங்கள் சிறப்பாகப் பணிபுரிவதற்கு ஓரளவு வாய்ப்புள்ளது. ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்கின்றபோது கிடைக்கின்ற விருதும் பரிசும் என்னத்துக்கு? பணிக்காலத்தில் தான்புரிந்த சாதனைக்குச் சான்றாக கிடைத்தது என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு விருதையும் படத்தையும் பொழுதுபோகாத நேரங்களில் தூசி துடைத்துத் தூசி துடைத்துப் பார்த்துக் கொள்வதற்குத்தான் உதவும்.
ஒரு உண்மையைச் சொல்வதென்றால் இப்பொழுதெல்லாம் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவதில்லை. நல்ல விலைக்கு வாங்கப்படுகின்றன. சங்கவாதிகள் யாரேனும் விருது வாங்கிவிட்டால் பாராட்டுகள் குவிவதில்லை. மாறாக அவர் இதுவரை செய்த தியாகங்களும் இழந்த இழப்புகளும் கேள்விக்கு உள்ளாக்கப் படுகின்றன. சந்தேகிக்கப்படுகின்றனர். இதுதான் நல்லாசிரியர் விருதின் இன்றைய லட்சணம்!
ஆனாலும், எது உண்மையான விருது? எது ஆசிரியர் பணியை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது? எது பணியை நேசிக்கும் ஒரு ஆசிரியருக்கு முழுமையான மனநிறைவைத் தருகிறது? மாணவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும்தான். ஒரு ஆசிரியரை நல்ல ஆசிரியர், திறமையானவர் எனத் தீர்ப்பு வழங்கும் தகுதியும் திறமையும் மாணவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதைப் பறைசாற்றுவதாக உள்ளது பேராசிரியர் மணியின் பள்ளிக்கூடத்தேர்தல் புத்தகம்!
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணியனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது வருங்கால இளைய தலைமுறை ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்குமென்று எனக்கிருந்த கருத்தை இப்பொழுது மாற்றிக்கொண்டேன். நாம் பதிவு செய்ய வேண்டியது ஆசிரியர்களின் கருத்தையல்ல. அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளான மாணவக் கண்மணிகளின் கருத்தைத்தான் நாம் தேடித்தொகுக்க வேண்டியுள்ளது. அதைக் காட்டிலும் சிறப்பான ஒரு வழிகாட்டிக் கையேட்டை எந்தக் கொம்பனாலும் தயாரிக்க முடியாது..
பள்ளிக்கூடத்தேர்தல்,ஒவ்வொரு ஆசிரியரும் ஆசிரியப்பயிற்சி மாணவரும் படிக்கவேண்டிய பாதுகாக்க வேண்டிய புத்தகம்! நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கவேண்டிய புத்தகம்!
இரட்டைக் குவளை முறைக்கு எதிராகப் போராடிய பொன்னுச்சாமி வாத்தியாரும் தன் வகுப்பில் பாடத்தைக் கவனிக்காமல் ஒரு குழந்தை தூங்கினாலும் மனம் வருந்திக் கண்ணீர் விடும் ஆசிரியரும் கண்ணுக்குள் நிற்கின்றனர். பி.டி.ஏ. ஆசிரியராகப் பணிபுரிந்தபோதும் தன்சொந்தப்பணத்தைச் செலவு செய்து பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அந்த நண்பர் இன்று நிரந்தரப்பணி கிடைத்த பிறகு மாதந்தோறும் தன் சம்பளத்தில் குறுப்பிட்ட தொகையை மாணவர்களுக்காக ஒதுக்குகிறார். நேரில்பார்க்க நெஞ்சம் துடிக்கிறது.
வணக்கம் சொல்லும் குழந்தைகளைத் தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் ஆசிரியர், கண்டிப்புடன் இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர், பெண்டாட்டி மீதான கோபத்தில் மாணவர்களைப் போட்டு அடிக்காத ஆசிரியர், அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டிய ஆசிரியர், வெப்பம் அடைதலில் இருந்து புவியைக்காக்க தன்னால் ஆன முயற்சிகளைச் செய்து மாணவர்களையும் தூண்டிய ஆசிரியர், விடுப்பு எடுப்பதற்கு முன் மாணவர்களிடம் அனுமதி வாங்கிய ஆசிரியர் என பலதரப்பினரும் மாணவர்களின் மனம்கவர்ந்த ஆசிரியர்களாய் இன்றும் திகழ்கின்றனர்.
போகிற போக்கில் பேரா.மணி சொல்கிற இந்த வரிகள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கவும் விவாதிக்கப்படவும் வேண்டியவை... "மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்தும் பொதுப்புத்தியிலும் பொதுவெளியிலும் ஆசிரியர்களைப் பற்றி உருவாக்கப் பட்டிருக்கும் நீதி நெறிகளை மையமாக வைத்தே தங்களை நல்லாசிரியர்களாக வடித்துக் கொண்டிருக்கிறார்களே அன்றி, அறிவியல் பூர்வமான அணுகுமுறையினால் அல்ல!"
எனவே எவையெல்லாம் மாணவர்களைப் பாதிக்கின்றன, எவையெல்லாம் மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றன என்பதை அறியத்துடிக்கும் ஆசிரிய நண்பர்களுக்கும் மாணவர்/குழந்தைகளின் மனம் கவர்ந்தவர்களாய்த் திகழவிரும்பும் யாவருக்கும் "பள்ளிக்கூடத்தேர்தல்" ஒரு அகராதியாகத் துணைநிற்கும். மாற்றுக்கல்வி குறித்துச் சிந்திக்கும், செயல்படும் அனைத்து நண்பர்களும் படிக்கவேண்டிய... பறைசாற்ற வேண்டிய புத்தகம்! இவ்வரிய புத்தகத்தை நமக்களித்த பேராசிரியர் மணி அவர்களின் தலையில் மணிமகுடம் சூட்டலாம்!
_தேனி சுந்தர்
இப் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. விலைரூ.20,421. அண்ணாசாலை, தேனாம்பேட்டை,சென்னை 18,044/24332924
ReplyDelete