முதல் பக்கம்

Dec 17, 2010

13வது அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு(AIPSN) மாநாடு

இந்திய தேசமெங்கும் அறிவியலின் அற்புதத்தை பின்தங்கிய கிராமங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ள பல்வேறு அறிவியல் அமைப்புகளும் ஒருங்கிணைந்த அமைப்புதான் AIPSN என்றழைக்கப்படும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு. 

இந்த அமைப்பின் 13வது மாநாடு வருகின்ற டிசம்பர் 27 முதல் 31 வரை கேரள மாநிலம் திருச்சூரில் ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்மாநாடு  கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களைச் சேர்ந்த 600 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

தமிழ்நாட்டிலிருந்து நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  சார்பில் 30 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அணுசக்தி வளர்ச்சி முகமையின் முன்னாள் தலைவர் டாக்டர்.எ.கோபாலகிருஷ்ணன் மாநாட்டைத் துவங்கி வைக்கிறார். மாநாட்டிற்கான முன்னோட்டமாக ஆற்றல் சேமிப்பு, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் உடல்நலம்&சுகாதாரம் ஆகிய பல்வேறு தலைப்புகளில் மக்கள் சந்திப்பு, பிரச்சார இயக்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 27ம்தேதி அறிவியல் சுயசார்புக்கே! மதச்சார்பின்மைக்கே! வளர்ச்சிக்கே! என்ற தலைப்பில் தேசிய அளவிலான மிகப்பெரிய கருத்தரங்கமும் நடந்து முடிந்துள்ளதாகத் தெரிகிறது. டிசம்பர் 27ந்தேதி காலையில் துவக்கவிழா. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 30 வரை அறிவியல் பரப்புதல், விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல்,பருவகாலமாற்றம்&வளர்ச்சி, அதிகாரப் பரவல், மக்கள் ஜனநாயகம், தொழில்நுட்ப பயன்பாடு, நவீன தொழில்நுட்பங்களும் சுயசார்பும் எனப்பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெறுகின்றன.

மாலைநேரங்களில் கலைநிகழ்ச்சிகளும் கருத்துரைகளும் இடம்பெறுகின்றன. இறுதிநாளான டிசம்பர் 31 அன்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த விவாதமும் நடைபெறுகின்றது. நமது தேனி மாவட்டத்தின் சார்பாக அறிவியல் இயக்க மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ஹ.ஸ்ரீராமன் கலந்து கொள்கிறார்.

மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் மாநாடு வெற்றி பெறட்டும்! 
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மக்களுக்கெல்லாம்...
அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அனைவருக்கும் ஒன்றாய்..."
(பாரதி)

_தேனி சுந்தர்

No comments:

Post a Comment