முதல் பக்கம்

Dec 9, 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு : கோவையில் நாளை துவக்கம்

தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2010,02:23 IST
கோவை :
மாநில அளவிலான, 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கோவையில் நாளை துவங்குகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் நடராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவால் இணைந்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இப்பணிகளை ஒருங்கிணைக்கிறது.

இந்த ஆண்டுக்கான மாநில மாநாடு, கோவை அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் வரும் 3, 4, 5 தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருப்பொருள், "நிலவளம்-வளமைக்காக பயன்படுத்துவோம்; வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம்' என்பதாகும்.

தமிழகம் முழுவதும் இருந்து வரும் 2,000 ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 160 முதல் 200 ஆய்வுக் கட்டுரைகள், மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 1,200 மாணவர்கள், 200 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். 13 அரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் 30 ஆய்வுகள், தேசிய மாநாட்டுக்காக தேர்வு செய்யப்படும்.

மாநாட்டில் பங்கேற்கும் அறிவியலாளர்கள், சாதனையாளர்களுடன் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். எளிய அறிவியல் பரிசோதனைகள், கணித விளையாட்டுக்கள், அறிவியல் போஸ்டர் கண்காட்சி, அறிவியல் விளையாட்டுக்களும் உண்டு.

ஊரக தொழில் துறை அமைச்சர் பழனிச்சாமி, கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலர் பேராசிரியர் மணி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, நடராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment