முதல் பக்கம்

Nov 28, 2011

ஈரோடு - வாசிப்புமுகாம்


6,7 நவம்பர் 11 இரண்டு நாள் ஈரோட்டில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்த இரண்டு நாளும் நம்மை உலுக்கியெடுத்த நாட்கள். வாசிப்பின் முழுமையான அர்த்தத்தை உணர்த்தியவை. வாசிப்பிற்கு என்று தேர்வு தேவை என்பதை உணர்த்திய முகாம். நாம் யாராக இருக்க வேண்டும் என்கிறோமோ அதற்கான புத்தகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை உணர்த்திய முகாம். குறிப்பாக ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுக்கு இன்றைய கல்விச்சூழலில் என்னமாதிரியான அனுகுமுறை தேவை? அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விடையாக வாசிப்பு ஒன்றே என்பதை ஏற்கொள்ளச்செய்த முகாம். அதற்காக ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல்கள் பற்றிய அறிமுகம். எந்த மாதிரியான நூல்களை தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் என்ற வழிகாட்டல் ஆசிரியர்களுக்கு கிடைத்த அற்புதமான முகாம். முகாமில் நடைபெற்றவற்றை முழுமையாக எழுத்தில் கொண்டுவருவது என்பது சால சிறந்ததாக இருக்கும். ஆனால் என்னால் அந்த அளவிற்கு  கொண்டு வர இயலுமா என்பது தெரியவில்லை. என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி மேற்கொள்கிறேன். இதில் தலைமை அறிமுகம் குறித்த விசயங்களை நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் அங்கே நடைபெற்ற விவாதம், உரை, கருத்துக்கள் ஆகியவற்றை சுருக்கிய வடிவில் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்.

              மதுரையிலிருந்து நானும் இந்திராவும் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டுநாள் வாசிப்பு அரங்கத்தில் பங்கேற்றோம். எங்களோடு சுமார் 28 பேர் கலந்துகொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் மிகச் சிறந்த அனுபவம். ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ள நிமிடமாக அமைந்தது. வாசிப்பும் விவாதமும் மிகத்தரமாக அமைந்திருந்தன. ஜே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் கமலாலயன் ஆகியோரின் பங்கும், பங்களிப்பும் மறக்க முடியாத அனுபவம். உலகலாவிய டைரி குறிப்பு குறித்த கருத்துரை கமலாலயனின் வாசிப்பின் முதிர்ச்சியை நம்மால் உணரமுடிகிறது. வாசிப்புக்காக தன்னுடைய வாழ்க்கைய தொலைத்தவர் கமலலாயன் அவர்கள். அவரை மதுரையில் 90களின் மையப்பகுதியல் தொடங்கப்பட  BGVS  கருத்துககூத்தில் பார்த்தபோது இருந்த அதேவேகம் வாசிப்பில் தற்போதும் இருப்பதை பார்க்கும் போது மிகுந்த வியப்பை எனக்கு ஏற்படுத்தியது.  வாசிப்பின் வேகத்தில் கொஞ்சம் கூட அவரிடம் குறையவில்லை.
                   BGVS கருத்துக்கூடத்தில் அவர் கொடுத்த நூலகத்தின் வரலாறு என்னை இன்னும் எழுப்பிக்கொண்டே இருக்கிறது.   BGVS கருத்துக்கூடம் ஒரு பொக்கிஷமாக விளங்கிய காலம் அது. கருத்துக்கூடத்தில் வளர்ந்ததில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். கருத்துக்கூடம் வாசிப்பு இயக்கத்தை நடத்தியபோது ஏற்பாட்ட அனுபவத்தை முன்வைத்து கமலாலயன் அவர்கள் அன்றைய முதல் உரையை முன்வைத்தார். விருது நகர் கன்னிசேரி புதூர் கிராமத்தில தக்காளி விற்றுவிட்டுச் சென்றவர் 4 ரூபாய்க்கு புகத்தகம் வாங்கிச்சென்றார். மாட்டு வண்டியில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வாசிப்பை மேம்படுத்துவதற்காக கிராமம் கிராமமாக சென்றது இன்னும் என் மனக் கண்ணுக்குள் உள்ளது. இது போன்ற செயல்பாடுகள் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் மக்களை ஒன்று திரட்டுவதற்காக கிராமம் கிராமம்மாக சென்றதாக கமலாலயன் தன்னுடைய நூலக வரலாறு என்ற கட்டுரையில் சொல்லியிருந்தார். அதற்கடுத்தார்போல் கருத்துக்கூடத்தில் தான் அறிவொளிக்கு பிறகு இந்த மாட்டுவண்டி பயணம் நடைபெற்றது. கிராவின் காய்ச்ச மரம் புத்தகத்ததை வாசித்து காட்டியபோது தீப்பெட்டித்தொழிற்சாலையில் பணி செய்த பணியாளர்கள் கண்ணீர் சிந்தியதை பார்க முடிந்தது . ( ஒரு புத்தகத்தின் விலை 1 ரூபாய் மட்டுமே. இதில் இந்திய மொழிகளில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த புத்தகங்களும், வெளிநாட்டு ஆசிரியர்களின் மிகச்சிறந்த புத்தகங்களும் கருத்துக்கூடத்தின் வாயிலாக புதிய கற்றோருக்காக எளிய வடிவில் பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்களைக்கொண்டு உருவாக்கி கொடுக்கப்பட்டவை) அனுபவம் என்பது வசிப்பு இயக்கம் நடைபெற்ற பெரும்பாலான கிராமங்களில் காணப்பட்ட ஒன்று. இன்றைக்கு ஈரோட்டில் நிறைவுறும் ஓராண்டு வாசிப்பு இயக்கமானது பல அனுபங்களை ஆசிரியர் மத்தியில் ஏற்படுதுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
    உரையின் தொடர்ச்சியாகஅவர் பேசும் போது பொதுவாகவே (டைரி) நாட்குறிப்புகளை எழுதுவது என்பதை யாரும் விரும்பாததற்கு காரணம் நாம் எதிலும் மாட்டிக்கொள்வோமோ என்ற நினைவுதான். சில சமயங்களில் அதுவும் உண்மைதான். ஆனால் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்கள் அந்த அந்த காலக்கட்டத்தின் நிலைகளை உணர்துகிறார்கள் என்தை நாம் பார்க்க வேண்டும்.
      பாண்டிச்சேரியில் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஆனந்தரங்கன் பிள்ளையின் நாட்குறிப்பு பிரபஞ்சன் என்ற எழுத்தாளரை 2 நாவல்கள் எழுத தூண்டியது என்றால் அந்த நாட்குறிப்பின் அவசியம் எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணரமுடிகிறது. அந்த நாட்குறிப்பைக்கொண்டு பிரஞ்சு ஆதிக்கத்தில் புதுச்சேரியின் நிலை என்ன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அது தினம்தோறும் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்த நாட்குறிப்பு. உணர்வுகளின் சொற்கம் அந்த நாட்குறிப்பு.
          மார்களி மாதங்களில் பெண்கள் பாடுகின்ற திருப்பாவை என்பதும் 30 நாட்கள் எழுதப்ட்ட நாட்குறிப்புதான். ஆண்டாள் எழுதிய நாட்குறிப்பில் ஒரு இளம் பெண்ணின் உள்ளக்குமுரலை நாம் பார்க்கலாம்.

            யூத குடும்பத்தைச் சேர்ந்த ஆனி ஃபிராங் என்பவர் எழுதிய  நாட்குறிப்பு கிட்லர் காலத்தில் ஜெர்மன் நிலையை படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளதை நாம் பார்க்க வேண்டும். இரண்டரை ஆண்டு காலம் ஒரு தனியரையில் தாய்தந்தையுடன் தங்கியிருந்தபோது எழுதிய நாட்குறிப்பு இது. போருக்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத சாதாரண குடிமக்களின் துன்பத்தை போரின் போது அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை கண்முன் நிறுத்தச்செய்வது இந்த நாட்குறிப்பு. இதே போல அனோனிமா வின் நாட்குறிப்புகள் இரஷ்ய படைகளின் அட்டூலியத்தை காட்டுவதை நாம் பார்க்கலாம். விடுதலைக்காக போராடுகிற ராணுவத்தினரும், சர்வதிகாரத்திற்காக போராடுகிற ராணுவத்தினரும், செயல்பாடுகளில் எந்தவித மாறமும் இருப்பதில்லை என்பதை புரிந்துகொள்ள இந்த இரண்டு நாட்குறிப்புகளும் உதவும்.



            கியூபாவின் புரட்சிக்கு வித்திட்ட டாக்டரின் மோட்டார் சைக்கிள் நாட்குறிப்பு நமக்கு ஒரு புதிய வழியைக் காட்டும்.

நடிகர் சிவக்குமாரின் டைரிக்குறிப்பு அவர் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து எழுதியவை. மிகச்சிறந்த பதிவுகளை கொண்டவை. ஜான்ஹோல்ட் எழுதிய ஆசிரியரின டைரி ஒருமிகச்சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்களுக்கு உதவுவதாக உள்ளது.

இது போன்ற உலகலாவிய நாட்குறிப்புகள் பல உள்ளன. அவைகளை நாம் தேடி படிக்கும் போது ஒரு உத்வேகம் வரும். நீங்கள் அன்றாட நிகழ்வுகளை பதிவு செய்வதன் மூலம் வருங்கால சந்ததினருக்கு இன்றைய சமூகத்தை காட்டுவதற்கு உதவுகிறீர்கள் என்பது அர்த்தமாகிறது. மேலும் ஆசிரியர்கள் தங்களது வகுப்பறை அனுபங்களை ஒவ்வொரு நாளும் பதிவு செய்யும்போது மேலும் நம்மை செலுமைப்படுத்த அந்த நாட்குறிப்பே கூட உதவும். தினம்தோறும் எழுதுவது முடியவில்லை என்றாலும் கூட குறிப்பிட்ட நிகழ்வு உங்களை பாதித்த நிகழ்வை எழுதி வைக்கலாம். இப்போது முதல் நாம் அனைவரும் நாட்குறிப்பு எழுதுவது என்ற உந்துதல்லோடு செல்லலாம் என்று அந்த உரையை முடித்தார்.

அதைத்தொடர்ந்து ஆசிரியரின் அனுபவக்குறிப்பு குறித்து நண்பர் சுடரொளி அவர்கள் சென்னையில் நடைபெற்ற வாசிப்பு முகாமில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பகிர்ந்துகொண்ட அனுபங்கள் காலம் கடந்தும் காயங்கள் ஆறவில்லை என்பதை நமக்கு காட்டியது.

ஒரு ஆசிரியர் தண்டனை குறித்த தன் அனுபவத்தை சொன்னபோது

வகுப்பின் இடைவேளை முடிந்து எல்லோரும் வகுப்புக்குள் புகுந்தனர். ஒரு மாணவிமட்டும் வகுப்பறைக்குள் டிப்பன் பாக்ஸை திறந்து அதிலிருந்த வாழக்காய் துண்டை எடுத்து போட்டு்ள்ளார். சரியாக அந்த நேரம் பார்த்து அந்தவகுப்புக்குள் ஆசிரியை வர அம் மாணவி பாக்ஸை மூடிவிட்டு வாழக்காயை தின்னவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்திருக்கிறார். ஆசியை அம் மாணவியை கூப்பிட்டு வாயை திறக்கச்சொல்லி வாயுக்குள் இருப்பதை ஒவ்வொரு மாணவியிடமும் காட்டிவிட்டு வா! என்று சொல்லி அனுப்பியுள்ளார். அம்மாணவியும் அவ்வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளிடமும் வாயை திறந்தாற்போல காட்டி முடித்தப்பின்னரும் விட்டாரா அந்த ஆசிரியை? இதே போல பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புக்கும் சென்று காட்டி வா என்று சொல்லி, இவள் காட்டுகிறாளா என்பதை கண்காணிக்க ஒரு மாணவியையும் சேர்த்து அனுப்பியுள்ளார் அந்த ஆசிரியை. இப்படியொரு தண்டனையை நாம் யோசிக்க கூட முடியவில்லை. ஒரு மாணவனை அல்லது ஒரு மாணவியை அடிப்பதைக்காட்டிலும் பெரிய தண்டனை இது. இந்த அனுபவத்தைச் சொன்ன ஆசிரியை கண்ணீர் வடித்துவிட்டார். இந்த தண்டணை பெற்றவர் அல்ல இவர். இவர் அந்த மாணவியை கண்காணிக்கச்சென்றவர்.

மற்றொரு அனுபவம், தண்டனை என்னவோ பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என்று நாம் நினைக்கின்றோம். இரு ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஒரு ஆசிரியர் பெற்ற அனுபவம். ஆசிரியர் பயிற்சியில் பயிலும் ஆசிரியர்கள் தங்களை தலை முடிகளை சடை போட்டு கொண்டை போட்டுத்தான் வரவேண்டும். ஒரு நாள் இவர் கொண்டை போடாமல் போய்விட்டார். இதைப் பார்த்த அந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் அவர் தலைமுடியை பிடித்துக்கொண்டே போயி வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் முன்னிலையில் "இவலெல்லாம் டீச்சராகி ஒழுக்கத்தைக் கத்துக்கொடுக்க"  என்று திட்டிவிட்டு சென்று விட்டார். இந்த செய்கைக்கு பின்னர் அந்த ஆசிரியை தற்கொலை செய்துகொள்ள முயன்று தன் குடும்ப சூழலை நினைத்து அதை கைவிட்டுவிட்டார். பின்னாலில் அவர் ஆசிரியரானதும் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குழந்தைகளை கைமொட்டிகளிலேயே அடித்துள்ளார். கையெழுத்து சரியில்லை, நகம் வெட்டவில்லை, தலைவாரவில்லைஎன்றால் போதும் கை மொட்டி பேர்ந்துவிடும். அந்த ஆசிரியரிடம் படிக்கும் மாணவர்கள் முத்து முத்தாக எழுதுவார்கள் என்ற நல்ல பெயரை எடுத்துள்ளார். ஆனால் அதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை அவர் உணரவே இல்லை. தெரியவும் இல்லை. இனிஇந்த மாதிரிசெய்யமாட்டேன் என்று அந்த ஆசிரியை முடிவெடுக்கச்செய்தது ஆய்ஷா என்ற சிறிய புத்தகம்.

இது போன்ற பல அனுபங்களை சுடறொளி பகிர்ந்துகொண்டார். தண்டணை என்பது பிரம்பால் அடிப்பது மட்டுமல்ல மேலே சொல்லப்பட்டது போல தண்டனைகளும்தான். ஒரு வகுப்பில் ஒரு மாணவன் தூங்குகிறான் என்றால் எல்லோரும் பார்க்க "டேய் எழுந்திரு போய் முகம் கழுவிவிட்டு வா" என்பது கூட ஒரு விதமான தண்டனைதான் என்றார். இது போன்ற தண்டணைகளை நாமும் கொணடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இதை தவிற்பதற்கும் இந்தமாதிரி தண்டணைகளை கண்டறிந்து கொள்வதற்கும் வாசிப்பு முகாம்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

பின்னர் கமலாலயன் மொழி பெயர்த்திருந்த பாவ்லோஃபிரெய்ரேவின் எதார்தத்தை வாசித்தலும் – எழுதுதலும் என்னும் சிறிய நூல் அச்சுக்க போகாமலே வாசிப்பறங்கத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டு அதன்மீது விவாதமும் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக இந்த நூலை கல்வியாளர் பாண்டிச்சேரி ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

பாவ்லோஃபிரெய்ரே 1979ல் இந்தியாவிற்கு வந்திருந்தபோது ஆய்வு மாணவர்களுக்கு உரை நிகழ்த்த கூப்பிட்டபோது அவர்சொற்பொழிவிற்கு பதிலாக குழு விவாதங்களில் பங்கேற்க இயலுமானல் தமக்கு மிக்க மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார் என்பதிலிருந்தே அவர் மக்களுடன் எவ்வளவு நெருக்கமுடன் இருந்துள்ளார் என்பதை நமக்கு காட்டுகிறது. ஜே.கே அவர்கள் அந்நூலி சில முக்கிய பகுதிகளை சுட்டிக் காட்டினார். அவை

           



# எனது நாட்டில் நான் (பாவ்லோஃபிரெய்ரே) சிறையினுள் இருந்த காலம் அது 1.70 மீட்டர் நீளமும் 60சென்டிமீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெட்டியினுள் சிறைப்பட்டிருந்தேன். சிறையினுள் இருந்தவாறு வெளியே இருந்த புற உலகத்தைப் பற்றி என் கற்பனையில நான் சிந்திக்க முடியும், என் மனைவியும் – குழந்தையும் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி சிந்திக்க முடியும். ஆனால் நான் சுதந்திரமாக வெளியே போக வேண்டுமென்றால் வெளியே போவதற்குரிய வாயிற்கதவைத் திறந்தால்தான் முடியும் என்பதைக் கூற வேண்டியதில்லை.



# சமூக வர்கங்களுக்கு அழுத்தம் தந்து சொல்லுவதற்கு பதிலாக நான் (பாவ்லோஃபிரெய்ரே) மக்கள் என்பதற்கு அழுத்தம் தந்திருகுக்கிறேன். மக்கள் என்ற கருது கோள் மிகவும் மூடகமானது.



# சமூகத்தின் கலகத்தன்மை மிக்க உருவமாற்றம் தன்னளவில ஒரு புரட்சியாக அமைந்திருப்பது ஒரு கல்விசார்ந்த நடவடிக்கை



# ஒரு புதியக்குழுவுடன் நாம் சேர்ந்து பணியாற்றும் போது நம்முடைய வார்ததையை மேலதிகம் அதிகமாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று நாம் கண்டறிவோம் எனும் பட்சத்தில் 50٪ ஆசிரியர்களாகவும் 50٪ மாணவர்களாகவும் ( நாம் நம்மை ஆக்கிக் கொண்டு) தொடங்குவது மிக நன்றாக இருக்கும். முற்றிலுமாக ஆசிரியர்கள் மட்டுமாய் இருப்பதிலிருந்து நாம் மரணித்து, ஆசிரியர் – மாணவர் என்று மீண்டும் மீள்பிறப்பு எடுப்பதற்கான செயல் முறைக்கு இது உகந்ததாக அமையும். மேலும் முற்றிலும் மாணவர்களாக மட்டுமிருந்த நிலையிலிருந்து மரணித்து மீண்டும் மாணவர் – ஆசிரியர் என மீள்பிறப்பு எடுப்பதற்கு வருமாறு மாணவர்களை அழைப்பதற்கும் இது உகந்த செயல்முறையாக இருக்கும்.



# வரலாற்றை உருவாக்குவதன் வழியாக வரலாற்றில் நாம் கட்டணம் செலுத்தியாக வேண்டும். வரலாறு இலவசமாக உருவாக்கப்பட முடியாத ஒன்று. உலகை நீங்கள் இலவசமாகக் கடந்து செல்ல முடியாது.



            இந்த நூல் குறித்த விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இறுதியில் கமலாலயனும், ஜே.கேவும் தொகுத்து விளக்கினர். மொழிபெயர்ப்பு புத்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அப்படியே மொழிபெயர்கப்பட்டுள்ளதால் கருத்து பிறளாமல் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பு அப்படியே செய்ததால் முதல் சில பக்கங்கள் புரிவதில் சிறமம் ஏற்பட்டது. மேலும் சில புதிய வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொழிப்பெயர்ப்பாளரின் சிந்தனை அந்த நூலை அவர் சொல்லியபடியே கொடுக்க வேண்டும் என்பதுதான் போலும். இதனால் தான் இல்லை, இல்லை, இல்லை என்பது போன்றவை பல இடங்களில் பல முறை வருகின்றன. இந்த நூல் இன்னும் வரவில்லை என்றாலும் கூட இந்நூலை ஒவ்வொரு ஆசிரியரும் படித்தறிய வேண்டிய நூல் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.



            ஜான்ஹோல்ட்  எழுதிய ஆசிரியரின் டைரி என்ற நூல் முழுமையாக வந்திருந்த ஆசிரியர் குழுவால் வாசித்து முடிக்கப்படது. அதற்காக நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டன. புத்தகத்தில் உள்ள பிரிவுகளை உள்ளடக்கி நான்கு குழுக்களும் புத்தகத்தை முழுமையாக வாசித்து இறுதியில் விவாத்தில் ஈடுபட்டன. புத்தகத்தில் பிரிக்கப்பட்டுள்ள நான்கு தலைப்புகள்

திட்டமிடல்
பயமும் தோல்வியும்
உண்மையை கற்றல்
இந்த கல்வி முறை ஏன் தோற்கிறது?

ஜான்ஹோல்ட் தன்னுடைய வகுப்பறையில் நடைபெற்ற சம்பவங்களை மட்டம் குறிப்பிடவில்லை. தன்னுடைய சக ஆசிரியர்களின் வகுப்புகளில் சென்று அமர்ந்துகொண்டு அவர்கள் பாடம் நடத்தும் போது மாணவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதையும் உன்னிப்பாக கவனித்து அதையும் தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியுள்ளார். பொதுவாகவே ஜான்ஹோல்ட் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கொடுத்தமாதிரி தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சம்பவத்தையும் தன்னுடைய நாட்குறிப்பில் குறிப்பிட தவறவில்லை. ஜான்ஹோல்ட் எழுதிய ஆசிரியரின் டைரி ஒரு மாணவனை புரிந்துகொள்ளவும் , வகுப்பறையை தெரிந்துகொள்ளவும், கல்விமுறையை அறிந்துகொள்ளவும் உதவும். நூலை வாசிக்கும் போது அட அடடே இது போல நமது வகுப்பில் கூட மாணவர்கள் இருக்கின்றனறே! என்று நம்மை நமது மாணவர்களை அடையாளம் காட்டும்.  இந்நூலை படிக்கும் போது நாம் மாணவர்கள் பற்றிகொண்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். ஜான்ஹோல்ட் இவர் ஒரு ஆசிரியர் அல்லாத ஆசிரியர். அதாவது ஆசிரியர் பயிற்சி பெறாதவர். அதனால்தான் அவர் சுதந்திரமாக சிந்தித்துள்ளார். அவர் ஒருமுறை கூறும்போது "பள்ளி நடைமுறைகள் குழந்தைகளின் இயற்கையான கற்கும் திறனுக்கு எதிராகச் செயல்படுகின்றன" என்னும் அதிர்ச்சியூட்டும் முடிவுக்கு வந்துள்ளார்.

            ஜான்ஹோல்டை படிக்கும் போது இன்னும் இரு நபர் என் கண்முன் வந்து சென்றார். அவர் விஞ்ஞானி " மெண்டல்". மெண்டலும் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்தான். அவரும் ஆசிரியர் பயிற்சி பெறாத ஆசிரியர்தான். அவர் ஒரு பாதிரயார் என்பதால் அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து பதிலி ஆசிரியராக பல ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளார். இவர் வகுப்பறை மட்டும் எப்போதும் சத்தமாகவும் கூச்சலாகவும் இருக்குமாம். இல்லையென்றால் அவர்கள் வகுப்பறையை தோட்டத்திற்கு கொண்டு சென்றுவிடுவாராம். இயற்கையை மாணவர்களுக்கு மெண்டல் கற்று கொடுத்துள்ளார். இயற்கையின் மீது அவர் கொண்டிருந்த காதல்தான் அவரை பரம்பரையைப்பற்றிய அறிவை வெளிக்கொணரச்செய்துள்ளது. இவரும் கடைசிவரை ஆசிரியராகவே அங்கீகரிக்கப்படவில்லை.

           

            ஜான்ஹோல்ட் எழுதிய ஆசிரியரின் டைரி குறித்து நடைபெற்ற விவாத்ததை முழுமையாக எழுதினால் இந்த இடம் போதாது. புத்தக வாசிப்பில் நீங்கள் அதை உணர்வீர்கள். மறக்காமல் ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நூல்.

           

ஈரோட்டில் வாசிப்பு முகாம் தொடங்கி ஓராண்டு நிறைவை ஒட்டி நிறைவுரை ஆற்றுவதற்காக எழுத்தாளரும், சிந்தனையாளருமான எஸ். ராமகிருஷ்ணன் உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்பதற்காக ஈரோட்டில் இருந்த சிலரும் கூடுதலாக இணைந்திருந்தனர். அவரது உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் மூன்று நாள் 200 ஆசிரியர்களோடு இருந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் ஆசிரியர்கள் கதை சொல்லுவதும், கதை கேட்பதும் இல்லை. இதனால் அவர்களிடம் கற்பனை வளம் வறண்டு காணப்படுகிறது.பல்வேறு உதாரணங்களை அதற்காக அவர் முன்வைத்தார். மேலும் குழந்தைகள் வியப்படைவது இயல்பான ஒன்றாக உள்ளது. அந்த வியப்பை ஏற்படுத்துகிற நிகழ்வு வகுப்பறைகளில் நிகழ்கிறாதா? என்பது கேள்வியாக உள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் ஏதோ ஒருவகையில் சோதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதை ஆசிரியர்களுக்க தெரிவதில்லை.  தொலைக்காட்சி பெட்டி நம்மாணவர்களை அடிமை என்ற சொல்லை பயன்படுத்த சொல்லிக்கொடுக்கிறது. அடிமை என்ற சொல்லை நீக்குவதற்கு 50 ஆண்டுகால போராட்டத்தில் பலரின் உயிர் தியாகத்தில் நீக்கப்பட்டவை. லெகுவாக நம் குழந்தைகளின் மூளைகளில் போட்டுவிட்டு போய்கொண்டே இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் பல்வேறு உதாரணங்கள் எஸ். ராமகிருஷ்ணன் அவருக்கே உரிய பாணியில் கொடுத்துக்கொண்டே சென்றார். இறுதியாக அவர் சொன்னது ஆசிரியர்கள் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும். பயணம் செய்யும் இடத்தின் வரலாற்றையும் அதன் சுற்றுப்புறத்தை அறிந்து வந்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு பாடத்தையும் உணராமல் கற்று கொடுத்தல் என்பது ஈடு பாட்டை ஏற்படுத்தாது. எனவே கிடைக்கும்போதெல்லாம் ஆசிரியர்கள் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும். அடுத்து அவர்கள் படிக்கத்தவறக்கூடாது. பல நூல்களை படிக்க வேண்டும். முக்கியமாக 5 நூல்களை உடனடியாக படிக்க வேண்டும் என்று எஸ். ராமகிருஷ்ணன் சொன்ன நூல்கள்

1. எண்ணும் மனிதன் 2. கெலன் மிலர் 3. அற்புத உலகம் 4. ராபின்சன் குருசோ 5. ........................  நான் எஸ்.ராவின் உரை முடிந்த பிறகு விவாதம் தொடங்கியது. என்னால் இருக்க முடியாத நிலையில் விவாத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

      இந்த வாசிப்புமுகாம் இரண்டு நாலும் உமி அளவிற்கு கூட நேரத்தை வீணடிக்கவில்லை. ஓய்வு என்ற பேச்சுக்கே இடமின்றி போயிற்று. இரவு 10மணிவரை முகாம் தொடர்ந்து இருந்தது. இதற்காக பாடுபட்ட ஈரோடு, சேலம், மாவட்ட த.அ.இ. நண்பர்களுக்கும் குறிப்பாக பேரா. முருகேசன், பேரா. மணி, பாலசரவணம் மற்றும் பலரும் பாராட்டுக்குறியவர்கள்.

அன்புடன்

மொ.பா. மதுரை.

No comments:

Post a Comment