முதல் பக்கம்

Nov 30, 2011

இளம் விஞ்ஞானி விருதுக்கு கூடலூர்,விக்ரம் சாரபாய் துளிர் இல்ல ஆய்வுக்குழு மாணவர்கள் தேர்வு

19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து நடத்திவரும் மாநாடு, மிகப்பெரிய அறிவியல் விழிப்புணர்வு இயக்கமாக நடந்துவரும் தேசிய அளவிலான அறிவியல் திருவிழாதான் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என மூன்று கட்டங்களில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் கடந்த நவம்பர்,13ம் தேதி பெரியகுளம் எட்வர்டு பள்ளியில் மாவட்ட அளவிலான மாநாடு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் முப்பது பள்ளிகளில் இருந்து 57 மாணவ ஆய்வுக்குழுக்கள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். அதில் சிறந்த 7 ஆய்வுக்கட்டுரைகள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.

மாநில அளவிலான மாநாடு, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழிநுட்பக்கல்லூரியில் கடந்த நவம்பர்,24,25,26 தேதிகளில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இண்டர்நேஷனல் பள்ளிகள், இரவுப்பள்ளிகள், உண்டு உறைவிடப்பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள், துளிர் இல்லங்கள் என பல்வேறு விதமான பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 ஆய்வுக்குழுக்கள்/ ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்  29 மாவட்டங்களிலிருந்து பங்கேற்று தமிழ்-முதுநிலை, தமிழ்-இளநிலை, ஆங்கிலம்-முதுநிலை, ஆங்கிலம்-இளநிலை என நான்கு பிரிவுகளில் தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.
தேனி மாவட்டத்திலிருந்து  தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி, முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்லம் ஆகியவற்றிலிருந்து மாணவர்கள் பங்கேற்று தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.

தேசிய அளவிலான மாநாட்டிற்கு சிறந்த 30 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் தமிழ்-முதுநிலை பிரிவில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் பொ.சுரேந்தர், தினேஷ்குமார் , பகவதிராஜ், தீபன், சுபாஷ் ஆகியோர் மேற்கொண்ட வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் மனிதர்களால் ஏற்படும் மாசுபாடும் அதற்கான தீர்வுகளும் என்ற ஆய்வும் ஒன்று. ஆய்வு மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர் க.முத்துக்கண்ணன். தேர்வான இவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர்.முருகேச பூபதி அவர்கள் பாராட்டுச்சான்றிதழும் நினைவுப்பரிசும் வழங்கினார்.
இந்த மாணவர்கள் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வுக்குழுத்தலைவர் பொ.சுரேந்தர் வருகின்ற டிசம்பர் 27-31 தேதிகளில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டு தங்களது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளார். மாநாட்டின் நிறைவில் இளம் விஞ்ஞானி விருதும் நினைவுப்பரிசும் வழங்கப்படவுள்ளது. குடியரசுத்தலைவர் அவர்கள் கலந்துகொள்வார்கள்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன், மாவட்டப்பொருளாளர் செ.சிவாஜி மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரின் சார்பில் தேர்வான மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
SUNDAR.D





No comments:

Post a Comment