முதல் பக்கம்

Aug 7, 2012

ஹிரோஷிமா, நாகசாகி தினம் - ஆகஸ்ட் 6, & 9.

ஹிரோஷிமா தினம்

உலக சமாதனம், சமத்துவம், நிலைத்தகு வளர்ச்சி.
என்றென்றும் நினைவில்: ஹிரோஷிமா..

 

ஆகஸ்ட் 6, 1947. அன்று காலை இனிமையான காலைப் பொழுதாகத் தான் உதயமாகியது. மேகங்கள் அற்ற தெளிவான வானம். இளம் தென்றல் காற்று, வசந்தத்தில் பூத்த மலர்கள் கொண்ட மரங்கள்.. என அன்றைய தினம் வரப்போகும் அவலத்தை அறியாமல் துவங்கியது.

காலை எட்டு மணி. அன்று காலை வழமை போன்றே ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லோரும் காலை பரபரப்பில் இருந்த நேரம். பிள்ளைகள் பள்ளிக்கு போக தயார் நிலையில்; அப்பா, சில வீட்டில் அம்மாவும், வேலைக்கு போக தயார் நிலையில். தாய்மார்கள் மதிய உணவும் காலை உணவும் தயாரிக்கும் மும்முரத்தில்.

தீடிர் என ஒலித்தது சைரன். எதிரி விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை. விமானம் எங்கு குண்டுபோடுமோ, யார் யார் மடிவர்களோ என்ற அச்சமும் பீதியும் அனைவரையும் வாட்டியது.

விமானத்திலிருந்து குண்டு விழும்; பெரும் சப்தம் கேட்கும் என எதிர்பார்ப்புடன் இருந்த அனைவரும் சற்றே வியப்பில் ஆழ்ந்தனர். தலைக்கு மேலே இரண்டு விமானங்கள் பறந்தன. எங்கு குண்டு போதுமோ என அச்சப்பட்டு அண்ணாந்து பார்த்தவர் வியப்பில் ஆழ்ந்தனர். முதலில் வந்த விமானம் பூசணிக்காய் போன்ற ஏதோ ஒன்றைப் பாராசூட்டின் மூலம் கீழே போட்டுவிட்டுச் சென்று விட்டது. இரண்டாவது விமானம் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. சிலர் விமானத்திலிருந்து ஏதோ விழுகிறதே என வேடிக்கை பார்த்து நின்றனர் ... அடுத்து ஏற்படப்போகும் அவலத்தை அறியாமல்.

விமானம் இட்ட குண்டு வெடிக்கவில்லை; பெரும் சப்தம் எதுவும் எழுப்பவில்லை. அனால் எங்கும் பரவியது பெரும் ஓளி. கண்ணை கூசும் ஒளி. ஒளியின் பிரகாசம் அவ்வளவு அதிகமாக இருந்ததால் நிழல் கூட ஏற்ப்படவில்லை. ஒன்றன பின் ஒன்றாக இரண்டு ஒளி வீச்சு. ஒளி வீச்சிற்கு பிறகு சுமார் 20000 அடி உயர்ந்த புகை தூசு மண்டலம் தென்பட்டது. வானம் இருண்டது; அதுவரை தெளிவாக இருந்த வண்ணம் முற்றிலும் தூசு படிந்து இரவு போல் ஆகியது.

ஒளிவீச்சில் பட்டவர்கள் தீடிர் என உணர்த்தனர்; அவர்களது ஆடைகள் எரிந்து போயிருந்தன. சுற்றும் முற்றும் வீடுகள் இடிந்து போயிருந்தன. கண்ணாடி உடைந்து சிதறி பலர் காயம் அடைந்தனர். அந்த நகரமே அழிந்து போயிருந்தது. எல்லாம் ஒரு சில வினாடிகளில். ஒளி வீச்சு அடங்கியதும் எங்கும் பரவியது பெரும் தீ. சற்று நேரத்தில் நகரின் மையப்பகுதி பெரும் தீயில். எரிகின்ற பொருட்கள் எல்லாம் தாமே எரியதுவங்கின; மனிதர்களின் தோல் கூட அணலில் வெந்து உரிந்து.

குண்டு வீச்சின் மையப்பகுதில் கன நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் சட்டென்று பஸ்பமகினர். அவர்களது எலும்பு கூட மிஞ்சவில்லை. எல்லாம் கன நொடியில் எரிந்தது; சம்பல் கூட மிஞ்சாமல் போயிற்று. அவ்வாறு மடிந்தவர்கள் பெரும் வேதனையும் வலியும் இல்லாமல் இறந்து போயினர். அனால் குண்டு வீச்சின் மையப்பகுதியிற்கு சற்றே விலகி இருந்தவர்கள் தீயிலும் இடிபாடுகளிலும் பட்டு வலி வேதனையுடன் மடிந்தனர். எங்கும் அவலக்குரல். காப்பாற்ற, உதவிக்கரம் நீட்ட ஒரு ஆள் கூட மிஞ்சவில்லை.

ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுக்கு பிறகு அடுத்த சில நாட்களில், ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. இந்த அணுகுண்டு வெடிப்பில் சுமார் ஒரு லட்சம் பேர் மடிந்தனர். ஹிரோஷிமா மீது வீசிய அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (LITTLE BOY) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது போடப்பட்ட அனுகுண்டிற்கு மனிதன்’ (FAT MAN) என்று பெயர் சூட்டினர்.

அன்று ஹிரோஷிமாவில் இருந்தவர்களுக்கு தெரியாது தமது நகரத்தின் மீது விழுந்தது அணுகுண்டு என்று. அணுகுண்டு வீச்சுக்கு உள்ளான முதல் நகரம் ஹிரோஷிமா. நகரின் மொத்த மக்கள்தொகையான 3,50,000 நபர்களில் சுமார் 70,000 அந்த சில நிமிடங்களில் மடிந்தனர்; இந்த குண்டு வீச்சு காரணமாக மேலும் 70,000 அடுத்த சில நாட்களில் மடிந்தனர் இதே போல நாகசாகியில் சுமார் 74,000 மக்கள் மடிந்தனர்.. இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.
குழந்தைகள், பொது மக்கள், முப்படைந்தோர் என பலயிரக்கனக்க்னோர் மடிந்த ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடிப்பில் மடிந்தவற்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் “இனி எப்போதும் இப்படிப்பட்ட கொடூரத்தை நடக்க விட மாட்டோம்’ என பொறிக்கப்பட்டுள்ளது. ஆம்; இனி இதுபோன்ற கொடூரம் எங்கும் நடைபெறக்கூடாது.

மால்கம் எக்ஸ் எனும் அமெரிக்க கருப்பின தலைவர் “சமதானத்தை விடுதலையிலிருந்து பிரித்துப் பார்க்க கூடாது ஏன் எனில் விடுதலையில்லாத எவரும் சமாதானமாக இருக்க மாட்டார்கள்” என கூறியதை நினைவு கொள்ளுதல் வேண்டும். உலக சமாதானம் மானுட விடுதலையிலிருந்து பிரிக்க முடியாது.

உலகளாவிய அளவில் மானுட விடுதலைக்கு அச்சுறுத்தலாக அணுகுண்டுகள் மட்டுமல்ல உலக வெப்பமடைதல் பிரச்சனையும் எழுந்துள்ளது. இந்த ஹிரோஷிமா தினத்தில் இவை குறித்து மீள்பார்வை செய்வது பொருத்தமாக இருக்கும்.

அணுகுண்டின் அவலம்

ஹிரோஷிமாவில் குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 28 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கல்லையும் மண்ணையும் தவிர, எரியக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாம்பலாகி இருந்தன. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு 300000 (மூன்று லட்சம்) டிகிரி செல்சியஸ். அடுத்த ஒரு வினாடியில் 280 மீட்டர் சுற்றளவுக்குப் பரவிய வெப்பத்தின் அளவு 5000 (ஐந்தாயிரம்) டிகிரி செல்சியஸ். நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. குண்டு வெடித்த சில நிமிடங்களில், கனத்த புழுதி மேகங்களும் புகையும் வானில் நிரம்பி, பகல் இருண்டது.

ஹிரோஷிமா நகரை அணைத்துக்கொண்டு இரண்டு ஆறுகள் ஓடின, அணுகுண்டு வெடித்தவுடன் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்க இந்த ஆறுகளுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆழத்தைப் பற்றிய பயமே இல்லாமல் சரமாரியாகக் குதிக்க ஆரம்பித்தனர். ஆணா, பெண்ணா, உடலில் துணி இருக்கிறதா, இல்லையா, தனக்கு அடியில் இருக்கும் உடலில் உயிர் இருக்கிறதா, இல்லையா, யாருக்கும் எந்த நினைப்பும் இல்லை. வெப்பத்தை எப்படியாவது குறைத்தால் போதும் என்று எண்ணி, தொங்கிக் கொண்டிருக்கும் சதைகளுடன் ஆற்றில் குதித்த பிறகுதான் தெரிந்தது, ஆற்று நீரும் கொதித்துக் கொண்டிருக்கிறது என்று. சில மீட்டர்கள் தொலைவில் ஐந்தாயிரம் டிகிரி வெப்பம் பரவியபோது, நீர் கொதிக்கத் தொடங்கியதில் வியப்பில்லைதானே!

தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. சற்று நேரத்தில் மழை பொழியத்துவங்கியது. ஆகா, வெப்பத்தைத் தணிக்க மழையாவது பெய்கிறதே என மகிழ்ந்து மழையில் நனைந்தவர்கள் எல்லாம் முட்டாள் ஆகினர். பெய்தது கருநிற அமிலமழை. மழைத்துளிகளில் கதிரியக்கத் துகள்கள் இருந்ததுதான் அமிலமழைக்குக் காரணம். மழை பட்டவர்கள் உடல் அமிலத்தில் அழிந்து மடிந்தனர். இந்த மழைநீர் விழுந்த குளத்திலிருந்த மீன்களும் செத்து மிதந்தன. குண்டால் ஏற்பட்ட ஒரு கறுப்பு மழை காலை 9 மணிமுதல் மாலை வரை நகரின் மேற்குப்பகுதிகளில் விழுந்துகொண்டிருந்தது. வெடிப்பிஹலிருந்து கதிரியக்கத்தை இந்த மழை தரைக்குக் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருந்தது. வெடிப்பினால் உண்டான வினோத வானிலையினால் ஏற்பட்ட வன்மையான சூறைக்காற்று நடுப்பகல் முதல் நான்கு மணிநேரம் நகரை மேலும் தாக்கியது.

நற்புரமும் பரவிய அதிவலை காரணமாக வீடுகள் இடிந்து வழிந்தன. கண்ணாடி வெடித்து சிதறியது. . நகரிலிருந்தவற்றில் அறுபத்தெட்டு சதவீதக் கட்டிடங்கள் முற்றிலும் அழிந்தோ, செப்பனிட இயலாத அளவு சேதமடைந்தோ போயின. நகரின் மையப்பகுதி கற்கள் பரவிய தட்டைப்பரப்பாகி விட்டது. வலுவான கட்டிடங்களின் இடிபாடுகள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன.

இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டு வெளியே வரவும் முடியாமல், முழுதாக உயிரும் போகாமல் பலர் அவலமாக மடிந்தனர். இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த அங்கு சென்ற பார்வையாளர்கள் “சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என குறிப்பிட்டுள்ளனர். எத்தனை மனிதர்கள் இறந்தார்கள் என்பதுகூடத் துல்லியமாகக் கணக்கிடப்படவில்லை. சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துக் காணாமல் போனவர்களைக் கணக்கெடுத்து, அதிலிருந்து இத்தனை பேர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தனர். சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’

அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு அவலத்தை கண்ட பொதுமக்களின் விவரிப்பு நமது மனதை உலுக்கி விடும். நகரெங்கிலும், பெற்றோர்கள் தங்களின் காயம்பட்ட அல்லது உயிரிழந்த குழந்தைகளைக் கண்டெடுத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் தங்களுடைய காயம்பட்ட அல்லது இறந்த பெற்றோர்களைக் கண்டுபிடித்துக் கொண் டிருந்தனர். கருவுற்றிருந்த ஒரு பெண் இறந்து போயிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் மூன்று வயதுள்ள அவள் மகள் ஒரு காலிக்கோப்பையில் தண்ணீர் எடுத்து வந்து தன் தாய்க்கு ஊட்ட முயன்று கொண்டிருந்தாள். ஒரு தாய் தன் குழந்தையைத் தேடித் தேடிப் பாதிப் பைத்தியமான நிலையில் குழந்தையின் பெயரைக் கூவிக் கொண்டிருந்தாள். கடைசியில் குழந்தை கிடைத்தான். அவன் தலை, வேகவைத்த அக்டோபஸ்போலக் காணப்பட்டது. அவன் கண்கள் பாதி மூடியிருந்தன. அவன் வாய் வெளுத்து, உப்பி, வீங்கியிருந்தது.

அவர்களின் முன்புறத்தைப் பார்க்கிறீர்களா, பின்புறத்தைப் பார்க்கிறீர்களா என்று சொல்லமுடியாத அளவில் மக்களின் காயங்கள் இருந்தன. காயமடைந்ததோடு மட்டுமல்லாமல் பலர் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தனர். கதிரியக்க நோயின் ஆரம்ப அறிகுறி அது. உள்ளபடியே, அணுகுண்டு வீச்சின் பின் உடனேயே மடிந்தவர் அதிர்ஷ்டசாலிகள்; அணுகுண்டின் கதிர்வீச்சு தாக்கி அதன் காரணமாக புற்றுநோய் உட்பட பல விதமான அவல நோய்க்கு உள்ளாகினர். நோயினால் துன்பமுற்று வலியில் அவதியுற்று மாதக் கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தவர் துன்பம் சோழ முடிய சோகம்.

குண்டு விழுந்து சில வாரங்கள் ஆனதும் பிழைத்தவர்களின் தோலில் ரத்தக் கசிவால் சிறு புண்கள் தோன்றியிருந்தன. இது இரண்டாம் கட்டம் தோல் வழியே ரத்தம் கசிந்தது. கதிரியக்க நோயின் கடுமையான கட்டம் வந்துவிட்டதற்கு இதுதான் வழக்கமான அறிகுறி. முதல் கட்டத்தில் அடிக்கடி வாந்தி வரும். காய்ச்சல் அடிக்கும். அதீதத் தாகம் எடுக்கும். செல்களின் பெருக்கப் பணியைக் கதிரியக்கம் தாக்குகிறது. ஆகவே, அடிக்கடி பெருகும் செல்கள் மிகவும் தாக்குண்டு போகின்றன. ரத்த செல்கள் அடிக்கடி பெருகும். ஆதலினால் தான் ரத்த தானம் செய்தாலும் சில நாட்களில் புதிய ரத்தம் உருவாகிறது. கதிரியக்கத்தால் பாதிக்கப்பட ரத்த செல்கள் இயல்பான வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இயலாது போகும். வெள்ளை ரத்த அணுக்கள் குறைவு காரணமாக தொற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பு அற்று நோய்த்தாக்குதலுக்கு உள்ளாவர். மேலும், கதிரியக்க தாக்குதலால் ரத்த உறைவுக்குத் துணையாகிற கூறுகளும் பதிக்கப் படும். எனவே, ரத்தக் கசிவு ஏற்ப்பட்டால் இயல்பு போல ரத்தம் உறைந்துவிடாது; கசியும்.

இறுதிக் கட்டமான மூன்றாவது கட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் தலைமயிர் உதிர்கிறது. பேதி ஏற்படுகிறது. குடல், வாய் மற்றும் பிற பாகங்களில் ரத்தப் போக்கு ஏற்படுகிறது. முடிவில் அவர் அவலமாக மடிவார்.

அதிக கதிரியக்க தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உடனே, சில வாரங்களில் மடிந்தனர். குறைவானவ கதிரியக்க தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காலபோக்கில் நோய்ப்பட்டனர். ஆண்டுகள் செல்லச் செல்ல, கண்படலம், ரத்தப் புற்றுநோய், மற்ற வகைப் புற்றுநோய்கள் ஆகியவை வழக்கமான அளவைவிட அதிகமாக மக்களிடையே தோன்றலாயின. அவர்கள் குண்டுவெடிப்புக்கு எவ்வளவு அருகிலிருந்தனர் என்பதற்கேற்ப அவர்களின் நோய் இருந்தது. கருப்பையிலிருந்த கருக்கள் இயற்கைக்கு மாறான தன்மைகளையும் வளர்ச்சியற்ற நிலைகளையும் அடைந்தன. பிறந்த குழந்தைகள் உடல்-மன வளர்ச்சி குன்றிப் பிறந்தன. ‘1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.

அணுகுண்டின் அரசியல்

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் இந்த குண்டுகள் வீசப்பட்டன. ஐரோப்பாவில் போரில் நேச நாடுகள் வெற்றி வாகை சூடிய நேரம் அது. ஜெர்மனி தோல்வியுற்ற நிலை. ஜப்பானுடன் மட்டும் போர் நீடித்த நிலை. போர் முடிவுறும் தருவாயில் அணுகுண்டு போடப்படத்தின்
அமெரிக்க தான் இந்த குண்டை வீசியது. ஏன் இந்த குண்டுகள் விசப்பட்டன; அதுவும் சாதாரண மக்கள் மீது? போர் நெறிமுறையில் போர் வீரர்களை தாக்குவது புரிந்துகொள்ளமுடியும்; ராணுவ முகம், அலுவலகம் முதலிய தாக்குவதும் விளங்க முடியும். அனால் இந்த அணுகுண்டு கொன்றது சாதாரண மக்களை. ஹிரோஷிமா ஒன்றும் அப்படிப்பட்ட ராணுவ நகரம் இல்லை. அப்படியிருந்தும் இந்த நகரம் தேர்வு செய்யப்பட்டதின் காரணம் என்ன?

அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.

முதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியளாலர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகபோரின்போது Manhattan Project என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் எற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டது

உள்ளபடியே வரலாற்று ஆவணகள் அமெரிக்க தான் அணுகுண்டு தயாரித்து சோதனை செய்த உடனேயே இந்த குண்டினை போட்டு பார்த்துவிடுவது என முடிவு செய்தது என்பதை தெளிவு படுத்துகின்றன. இதற்காக, ஓஸகா, கியோத்தோ மற்றும் டோக்கியோ உட்பட, 17 நகரங்கள் பட்டியலிடப்பட்டன. பின்னர், ஒவ்வொரு நகரத்தின் மக்கள்தொகை மற்றும் ஏற்படப்போகும் பாதிப்புகளின் அடிப்படையில், அதிலிருந்து ஹிரோஷிமா கொக்கூரா, நீகத்தா மற்றும் நாகசாகி ஆகிய நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 1944 முதல் ஜப்பானின் மீது தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வந்த அமெரிக்கா, தலை நகர டோகியோ மீது மீட்டருக்கு ஒரு குண்டு வீதம் குண்டு மழை பெய்த அமெரிக்க இந்த நான்கு நகரங்கள் மீது மட்டும் விமானம் கொண்டு குண்டு வீசவில்லை. ஏன் தெரியுமா? அணுகுண்டின் பாதிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிட, இந்த நான்கு இடங்களின் மீது மட்டும் குண்டு வீச்சை நிறுத்தி வைத்தது. மக்கள் நெருக்கம் மிகுந்த நகரம் வேண்டும், பதிப்புகள் குறித்து அறிய வேண்டும் என்பதால் நான்கில் முதல் இலக்காக ஹிரோஷிமா தேர்வானது.

இரண்டாம் உலகப்போர் நடைபெறும் சமயம் எனினும், பல நிபுணர்கள் இந்த குண்டு வீசப்படவேண்டியது இல்லை; எதிரி ஜெர்மனி சரணடைந்து விட்டது; ஜப்பான் தோல்வியை தழுவும் காலம் வெகு தூரமில்லை எனவே அணுகுண்டு எனும் பெரும் அழிவை ஏற்படுத்தும் போர் கருவி பயன்பாடு முறையல்ல என்றும் கூறினார்கள். பிரபல விஞ்ஞானி அல்பிரட் ஐன்ஸ்டீன் அமெரிக்க அதிபருக்கு கடிதம் எழுதினர். தனது கடிதத்தில் அவர், இந்த குண்டினை எங்காவது ஒரு பாலை வனத்தில் வெடித்துக்காட்டி எதிரி நாடுகளை சரணடைய செய்யலாம். இந்த போர் கருவி ராணுவ வீரர்களை மட்டுமல்ல உள்ளபடியே சாதாரண மக்களை தான் பெரும் அளவில் பாதிக்கும் எனவும் வாதிட்டார். இவைகளை பொருட்படுத்தாத அமெரிக்க தனது மேலாண்மையை நிறுவ இந்த குண்டுகளை ஒரு நகரத்தின் மெது மட்டுமல்ல இரண்டு நகரத்தின் மீது போட்டு தம்மை வலியவராக காட்டிக்கொண்டது. ஒரே குண்டில் நாடு நகரங்களை அழித்துவிடுவேன் என அனைவரையும் அச்சுறுத்தவே இந்த குண்டு பயன்படுத்தப்பட்டது என ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

ஆயினும் அமெரிக்க அனுகுண்டினை ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தியது. தனது வலிமை உலகில் பறைசாற்ற வேண்டும்; இரண்டாம் உலகப் போருக்கு பிறகு தான் ஒரு வல்லரசு ஆகவேண்டும் என்பதே குறிக்கோள். உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட குண்டுகள் தாம் இவை. இது வரை போருக்காக பயன்படுத்தப்பட நிகழ்வு இவைகள் தான். ஆயினும் அணுகுண்டுகள் சர்வதேச அரங்கில் மற்றவர்களை அச்சுறுத்த பயன்பட்டு வருகிறது.

பாரபட்ச அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்தம் 

ஹிரோஷிமா நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, இன்றுவரை சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுககாக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கபட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் யூனியண் தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஹைட்ரஜன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு மேலை நாடுகள் வளரும் நாடுகளை அச்சுறுத்த அணுஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.

அமெரிக்க, இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியவை அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகள். பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் உள்ளது: உதாரணமாக, இஸ்ரேல். தென் ஆப்ரிக்கா வெள்ளை ஆதிக்கத்தில் இருந்தபோது அணுஆயுதத்தை செய்தது; கருப்பின மக்கள் விடுதலைக்கு பிறகு, நெல்சன் மண்டேலா தனது நாடு அணுஆயுதங்களை ஒழித்து அனுஆயுதமற்ற நாடக மாறும் என அறிவித்தார்.

அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் முதலாவது இடத்தில் இருக்கிறது. ஆயினும், சில நாடுகளை நம்ப முடியாது; அவர்கள் அணுஆயுதத்தை வைத்திருப்பது ஆபத்து எனக்கூறி அமெரிக்க சில நாடுகளை குறிப்பாக தாக்கி வருகிறது. அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாற்றுகிறது. இது போன்று ஆதாரமே இன்றி குற்றம் சுமதி தான் ஈராக் மீது அமெரிக்க படை எடுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சர்வதேச அரங்கில் நாடுகளிடையே ஏற்ற தாழ்வுகளை உருவாகவும் அணுஆயுத அரசியல் பயன் படுத்தப்படுகிறது. சர்வதேச அளவில் அணுஆயுத நாடுகள் அணுஆயுத அற்ற நாடுகள் என பிரிவு படுத்தி நாடுகளிடையே பாரபட்சம் உருவாக்கியது அமெரிக்க. அணுஆயுத மேலை நாடுகள் தமது ராணுவ பலத்தினை கொண்டு ஏனைய நாடுகள் மீது தமது மேலாண்மையை நிலைநாட்ட முயல்கிறது.

ஐந்து அணுஆயுத நாடுகள் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்துகின்றன. அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்ததில் சரத்துகள் விவாதத்துகுரியவையாக; பரபட்சமனவை. அணுஆயுத ஒழிப்பு குறித்து எவ்வித தீர்மானமான வாக்குறுதிகளும் இல்லை. அனால் வேறு நாடுகள் அனுஆயுதத்தினை வைத்திருக்க கூடாது என்கிறது இந்த அணுஆயுத பரவல் தடை சட்டம். எனவே இந்திய உட்பட சில நாடுகள் இந்த ஒப்ந்தத்தை ஏற்க்க முடியாது என நிலைப்பாடு எடுத்தன. இதன் காரணமாக இந்தியாவின் அணு ஆற்றல் உற்பத்திக்கு உதவமுடியாது என அமெரிக்க மறுத்ததோடு அல்லாமல், வேறு நாடுகளும் உதவக்கூடாது என வற்புருத்திவருகிறது. தான் மட்டும் அணுகுண்டுகளை தேக்கி வைக்கலாம், அனால் ஏனைய நாடுகளுக்கு அந்த உரிமை இல்லை என்பது ஏற்கமுடியாது என இந்திய தார்மிக நிலைப்பாடு எடுத்துவந்துள்ளது. அணுஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்; அதற்கான சர்வதேச ஒப்பந்தம் வேண்டும் எனவும் இந்திய கூறி வருகிறது.

1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன. அனால் நடைமுறையில் இது செயல்பாட்டில் வரவில்லை என்பது மட்டுமல்ல புதுப்புது ஆயுதங்கள், விண்வெளியில் போர் கருவிகள் என ஆயுதத்குவிப்பை அமெரிக்க செய்துவருகிறது. கியூபாவுடனான போர் முதற்கொண்டு, நேரடியாகவும் சூசகமாகவும் அமெரிக்க தனது அணுஆயுதங்களை பயன் படுத்துவேன் என அச்சுறுத்தி வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணுகுண்டு – போர் குற்றம்

இந்த அணுகுண்டு வீச்சினால் உலகம் இதுவரை சந்தித்திராத அழிவு; அவலம் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள், முப்படைந்தோர் என எவ்வித பாரபட்சமும் இன்றி, எந்த நெறிமுறையும் இன்றி அணுகுண்டு கூட்டுக் கொலை செய்தது. இந்த குண்டு வெடிப்பு மனித நேயம் உள்ளவர் அனைவரின் மனசாட்சியை உலுக்கி எழுப்பியது. போரே மனித நேயத்திற்கு விரோதமானது என்றாலும், குறிப்பாக அணுஆயுத பயன்பாடு மனிதகுலத்திற்கு எதிரான குற்ற செயல் என சர்வதேச அரங்கில் கருத்து உருவானது. போரில் பொதுவாக போர்வீரர்களை மட்டும் தான் தக்க வேண்டும் என்ற போர் நெறி உண்டு. பொது மக்களை தக்க கூடாது என்பது விதி. போரின் நடுவே தப்பிதமாக பட்டுவிட்ட பொது மக்கள் குண்டு வீச்சில் மடியலாம்; அனால் வேண்டும் என்றே குறிவைத்து பொது மக்களை; ஆயுதம் எந்தாத மக்களை கொள்வது போர் குற்றம் என சர்வ தேச சட்டம் கூறுகிறது. அனுஆயுததினால் போர்வீரர்களை விட பல மடங்கு பொது மக்கள் மடிவர்; ஒரு நகரமே அழிந்துபோகும். எனவே அணுகுண்டு பயன் படுத்துவது, பயன்படுத்துவதாக அச்சுறுத்துவது எல்லாமே போர்குற்றம் என சர்வதேச நீதிமன்றம் (பெரும்பான்மை நீதிபதிகள் முடிவு) அறிவித்துள்ளது. ஆயினும் இந்து உலகம் முழுமையும் உலகை ஒரு முறை என்ன பல முறை அழிக்க தேவையான அணுஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன. அணுஆயுதங்களை விடாப்பிடியாக வைத்திருக்கும் மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்க, உலக அரங்கில் தாதாவாக செயல்பட்டு மற்ற எல்லா நாடுகளின் மீதும் தமது மேலாண்மையை திணிக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இதில் தென்படுகிறது.

சர்வதேச உறவுகளில் போரின் பயன்பாடு

போர் என்பதை தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் நாடுகள் தங்களுக்கிடையான பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பது சர்வதேச விதிமுறை. ஆனால் போர் என்பதை தனது ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தி வந்துள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஈரானில் உருகுவேயில் கிரேக்க நாட்டில், சீனாவில் பிலிப்பைன்ஸ் புர்டோ ரிகோ, கொரியா, ஈரான், வியத்னாம், கவுத்தமால, எகிப்து, லெபனான், லாவுஸ், கியூபா, இந்தோனேசிய, டொமினிக்கன் ரிபப்ளிக், கிரெனடா, நிகராகுவா, ஹைடி என பற்பல நாடுகளில் தனது ராணுவ வீரர்களை இறக்கி போரிட்டுள்ளது; இராணுவ புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. சமிபத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது அமெரிக்க போர் நாம் அனைவரும் அறிந்ததே. அமெரிக்க உலகின் ஒரே வல்லரசு. தனது ஆயுத பலத்தால் ஏனைய நாடுகளை தனக்கு அடங்கி நடக்க நிர்பந்திக்கிறது. இதன் தொடர்ச்சியே போர்கள். போர் வழி தீர்வு கிடைக்காது. சமாதானம் ஏற்படாது. இன்று முடிசூட மன்னனாக தன்னை கருதிக்கொள்ளும்

புவி வெப்பமடைதல்

புவி வெப்பமடைதல் (global warming) இன்று உலகை அச்சுறுத்தும் உலகளாவிய பிரச்சினையாகும். உள்ளபடியே சூரியனிலிருந்து 1460 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நமது பூமி சராசரி பதினேழு டிகிரி வெப்ப (குளிரான !!!) நிலையில் தான் இருக்க வேண்டும். காஷ்மீர் போல; ஆனால் புவியின் சராசரி வெப்ப நிலை சுமார் முப்பத்தியிரண்டு டிகிரி ஆகும். அதாவது பதினைந்து டிகிரி அதிக வெப்பம். புவியின் சராசரி வெப்ப நிலை வெறும் பதினேழு டிகிரி என இருந்திருந்தால் இங்கு உயிர் தோன்றியிருக்குமா என்பதே கேள்விக்குறி. உறை குளிர் நிலையிலிருந்து வாழ்வுக்கு உகந்த முப்பத்திரண்டு டிகிரி வெப்பம் எப்படி ஏற்படுகிறது?

கிரீன் ஹவுஸ் எபக்ட் (Green house effect) எனப்படும் பசுங்கூட விளைவுதான் இதற்கு காரணம். பசுங்கூட விளைவு என்பது என்ன? மலை பகுதி மற்றும் குளிர் பிரதேசங்களில் தாவரங்களை வளர்க்க சிக்கல் இருக்கும். போதுமான வெப்பம் இல்லாமல் குளிரில் தாவரங்கள் பட்டுப்போகும். தாவரங்களை வளர்க்க இந்த பகுதிகளில் பசுங்க்கூடம் (Green house) என்ற அமைப்பை விவசாயிகள் ஏற்படுத்துவர். இந்த பசுங்க்கூடங்களில் சுற்றுப்புற வெப்ப நிலையை விட சற்று அதிக வெப்ப நிலைஇருக்கும். முன்பு இந்த பசுங்க்கூடங்கள் கண்ணாடி கொண்டு வேய்ந்த கூரை, கண்ணாடி சுவர் என கண்ணாடி வீடு (கிளாஸ் ஹவுஸ்- glass house) போல அமைக்கப் பட்டிருந்தன. கண்ணாடிக் கூரையின் வழி அறையின் உள்ளே சூரிய ஒளி பரவும். பரவிய சூரிய ஒளி தரையில் பட்டு தெறிக்கும். தரையில் படும் ஒளியில் ஒரு பகுதி தரையில் உள்ள பொருட்களால் உட்கவரப் படும். உட்கவரப்பட்ட ஒளி பின்னர் மறுபடி வெளி உமிழப்படும். வெளியே உமிழப்படும் ஆற்றல் பார்வைக்கு புலப்படும் ஒளியாக இருக்காது. தரையில் பட்ட ஒளி மாற்றம் அடைந்து அக சிவப்பு கதிர் (Infra red rays) என வெளிப்படும். கண்ணாடி வழியே ஒளி ஊடுருவும். ஆனால் அக சிவப்பு கதிர் கண்ணாடி வழியே ஊடுருவி பாய முடியாது. செங்கல் சுவற்றின் வழி ஒளி ஊடுருவ முடியாது அல்லவா?; செங்கல் சுவர் ஒளி புக பொருள். அதுபோல, கண்ணாடி ஒளி புகும் பொருளாக இருந்தபோதிலும் அக சிவப்பு கதிர்களுக்கு புகா பொருள். எனவே தரையில் பட்டு தெறிக்கும் ஒளி மறுபடி நிலத்திலிருந்து ஆகாயத்திற்கு பிரதிபலிக்கும்.ஆனால் ஒளியின் ஒரு பகுதி அக சிவப்பு கதிராக மாறி கண்ணாடி அறையில் சிறை பட்டு கிடக்கும். (வெயிலில் நிறுத்தி வைத்திருக்கும் காரின் உள்ளே பெரும் வெப்பநிலை ஏற்படுவதும் இதன் காரணமாக தான். சூரிய ஒளி தோற்றுவிக்கும் அக சிவப்பு கதிர் காரின் மூடப்பட்ட கண்ணாடி ஜன்னல் வழியே வெளியேற முடியாது. ஆகவே உள்ளே வெப்ப நிலை உயரும்)

அக சிவப்பு கதிர் வீச்சு தான் உள்ள படியே வெப்ப கதிர்கள் (thermal radiation). நெருப்புக்கு அருகே இருக்கும் பொது அனல் அடிக்கும் உணர்வு அக சிவப்பு கதிர்கள் நம்மை தாக்குவதால் தான். எனவே கண்ணாடி அறையினில் சிறை பட்ட அக சிவப்பு கதிரின் காரணமாக அந்த அறை சற்றே வெப்பமடையும். மலை பகுதிகளில் மற்றும் குளிர் பிரதேசங்களில் உள்ள குளிர் நிலையில் இந்த கண்ணாடி வீட்டில் வெப்ப நிலை அதிகமாக அமைவதால் தாவரங்கள் எளிதில் வளரும். இன்றும் இவ்வாறு பசுங்கூடங்களை அமைக்கிறார்கள். ஆனால் கண்ணாடி கொண்டு அல்ல. பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஒளி புகும் ஆனால் அக சிவப்பு கதிர் ஊடுருவது என்ற தன்மையுள்ள எந்த பொருளும் பசுங்கூடம் அமைக்க ஏதுவானது.

உள்ளபடியே நமது பூமியை சுற்றி படர்ந்துள்ள வளிமண்டலமும் பசுங்கூட விளைவை ஏற்படுத்தகூடியது. நமது வளிமண்டலம் அடுக்கு அடுக்காக அமைந்துள்ளது. பார்வைக்கு பெரிய விரிந்த ஆகசமாக தெரிந்தாலும், உள்ளபடியே நமது வளிமண்டலம் புவியின் மீது படர்ந்த மெல்லிய போர்வை அவ்வளவே. புவியினை ஆப்பிள் அளவு சுருக்கினால் ஆப்பிள் தொல் அளவு தான் வளிமண்டலம். ஆயினும் இந்த மண்டலம் புவியின் கால நிலை மற்றும் தட்பவெப்ப நிலையை உருவாக்குவதில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.

சூரிய கதிர்கள் அனைத்தும் நேராக வளிமண்டலத்தை ஊடுருவி பாய்ந்து புவித்தரையை அடைந்துவிடமுடியது. தரைக்கு அருகே டீரோப்போஸ்பியர் எனப்படும் அடிவளிமண்டலம் அதற்கு மேல அமைந்துள்ள இடை மண்டல மிசோஸ்பியர் எனப்படும் மீ வளிமண்டலம் முதலிய ஒரு வடிகட்டி போல செயல்படுகிறது. ஒரு சில கதிர்கள் மட்டுமே புவியின் வளிமண்டலத்திணை ஊடுருவ முடியும். மாவு சலிக்கும் சல்லடையில் ஓட்டையின் அளவிற்கு ஏற்ப மாவு சலிக்கப் பட்டு, போடி மாவு கீழே விழும்; பொடியாத மாவு சல்லடையில் தாங்கும். அதுபோல, சூரிய ஒளியை சல்லடை போல சலித்து ஒரு சில கதிர்களை மட்டுமே நமது வளிமண்டலம் புவியின் நிலம் நோக்கி கடத்துகிறது. எல்லாக் கதிர்களும் புவித்தரையை அடையமுடியாது.

சூரியனிலிருந்து வெறும் ஒளி மட்டுமல்ல, புறஉதாக்கதிர், எக்ஸ்ஸ் கதிர் என பற்பல கதிர்களும் பூமியை வந்தடைகின்றன. இவை ஆபத்து விளைவிக்கதக்கவை ஆகும். புவியின் மீ வளிமண்டல அடுக்கு இத்தகைய கதிர்களை தடுத்து நிறுத்துகிறது. இரண்டே இரண்டு ஜன்னல்கள் மட்டுமே திறந்து சூரிய ஒளியின் இரண்டு பகுதிகள் மட்டும் புவியை அடைகிறது. ஒரு ஜன்னலின் வழி நமது கண்கள் காணும் ஒளி; சிறிது புற ஊத கதிர் கசிகிறது. இரண்டாவது ஜன்னலின் வழி ரேடியோ அலைகள் புகுந்து புவிதரையை அடைகின்றான. ஏனைய கதிர்கள் வளிமண்டல அடுக்கினால் தடுத்து நிறுத்தப்படுகிறது. சூரிய ஒளி படர்ந்து புவி ஒளிர்வதும்; ரேடியோ அலைகள் புகுந்து அதன் வழி நாம் புவியில் இருந்தபடிக்கு பிரபஞ்சத்தை ஆராய முடிவதும் இதன் வழி தான்.

நமது வளிமண்டலம் நம்மை பதிப்பு தரும் கதிர்களிடமிருந்து காப்பாற்றும் போர்வை கவசமாக உள்ளது. புற உதா கதிர் மனிதர்களிடோயே தோல் புற்று நோய் ஏற்படுத்தும். உயிர் தோற்றத்தின் போது இந்த கதிர் மிகுந்து இருந்திருந்தால் முதல் உயிரே கூட தோன்ற முயடியாமல் போயிருக்கும். எக்ஸ்ஸ் கதிர்கள் ஆபத்து; மைக்ரோ மிகு அளவில், வேவ் எனப்படும் நுன் அலைகள் பாதுகாப்பானது இல்லை. இவை எல்லாம் புவியின் வளிமண்டலம் வடிகட்டி விடுகிறது என்பது சிறப்பு. மேலும் மேல் அடுக்கு மண்டலமான மீ வளிமண்டலம் சூரியனிலிருந்து எச்சமாக வரும் அக சிவப்பு கதிரை வடிகட்டி விடுகிறது. ஆதலினால் சூரியனிடமிருந்து அக சிவப்பு வெப்ப கதிர்கள் புவியின் தரையை அடைவதில்லை. சூரியனின் சுட்டெரிக்கும் அனல் உள்ளபடியே நேரடியாக சூரியனின் அனல் அல்ல! அப்படியாகின் வெய்யில் காலத்திலும், நாடு உச்சி நண்பகலிலும் அனலாக உணருவது எப்படி?

புவியின் தரையில் ஏற்படும் வெப்ப கதிர்கள் சூரிய ஒளியிலிருந்து தான் வருகிறது. சூரிய ஒளி புவி தரையில் படும் போது சிறிதளவு ஒளி அக சிவப்பு கதிர் என உருமாற்றம் பெறுகிறது. இந்த அக சிவப்பு கதிர் நிலத்திலிருந்து அனலாக பரவுகிறது. கால் பாவ முடியாத படிக்கு நிலம் வெப்பமடைவது இதன்வழி தான்.

இந்த அக சிவப்பு கதிர் மறுபடி ஆகாயம் நோக்கி படரும் போது முதலில் புவிப்பரப்பின் மேல் உள்ள அடி வளிமண்டலத்தில் பாய்கிறது. அடி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இந்த கார்பன் டை ஆக்சைடு அக சிவப்பு கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. புவியிலிருந்து மேல் நோக்கி, விண்வெளி திசையில் படரும் அக சிவப்பு கதிர்களை கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சிவிடுகிறது. அக சிவப்பு கதிர்களை உறிஞ்சிய கார்பன் டை ஆக்சைடு அணு தூண்டப்பட்ட நிலையில் அமையும். தூண்டப்பட்ட இந்த அணு மறுபடி அக சிவப்பு கதிர்களை வெளியிடும். இவ்வாறு தூண்டப்பட்ட கார்பன் டை ஆக்சைடு உமிழும் அக சிவப்பு கதிர் நாற்புறமும் வீசும் என்பதை சொல்ல தேவையில்லை. உமிழப்பட அக சிவப்பு கதிரில் ஒரு பகுதி விண்வெளி நோக்கி வீசப்பட்டு விடும். ஆனால் ஒரு பகுதி மறுபடி புவிதரை நோக்கி பாயும். இவ்வாறு புவிதரை நோக்கி பாயும். எல்லா திசைகளிலும் அக சிவப்பு கதிர் பரவும். இவ்வாறு பரவும் அக சிவப்பு கதிரில் ஒரி பகுதி மறுபடி பூமி நோக்கி பாயும். அக சிவப்பு கதிரையே ‘சூரியன்’ தரும் அனல் என நாம் உணர்கிறோம்! கவிஞர்கள் சுட்டெரிக்கும் சூரியன் என கவிதை பாடுவது எல்லாம் அறிவியல் நோக்கில் சரியில்லை. பாவம், சூரியன். அதனை பழிப்பது சரியல்ல.

பசுங்கூட வாயுக்கள்

கார்பன் டை ஆக்சைடு குறித்து இங்கு நாம் கூறினோம். ஆயினும், கார்பன் டை ஆக்சைடு தவிர, கார்பன், நீராவி, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன், கிளோரோபோரோகார்பன் (Cloroforocarbon- CFC) முதலிய வாயுக்கள் எல்லாம் இந்த பணியை செய்யும் திறன் வாய்ந்தவை. இவை எல்லாம் அக சிவப்பு கதிரை உறிஞ்சி மறுபடி நாற்புறமும் அக சிவப்பு கதிரை உமிழக்கூடியவை. இவ்வாறு அக சிவப்பு கதிரை உறிஞ்சி உமிழும் வாயுக்களை பசுங்கூட வாயுக்கள் என்பார்கள்.

கடுகு சிறுத்தாலும் கராம் குறையாது என்பார்கள்; சிறிய கடையாணி பெரிய குடைவண்டியை குடைசாய்க்க வல்லது. உள்ளபடியே நமது வளிமண்டலத்தில் இந்த பசுங்கூட வாயுக்களின் அளவு மிக மிக சொற்பமே ஆகும். மொத்த வளிமண்டலத்தில் நைடிரஜனின் அளவு 78% ஆக்சிஜனின் அளவு 21%. ஏன் ஆர்கான் கூட 1% அளவு. ஆனால் பசுங்கூட விளைவு ஏற்படுத்தி நமது பூமியை வாழ்க்கைக்கு உகந்ததாக மற்றும் கார்பன் வெறும் 0.0390 அளவு தான்! நீராவி 0.4% அளவு. ஏனைய பசுங்கூட வாயுக்கள் எல்லாம் சேர்த்து 0.01% அளவு தான்.

மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது என்பது போல கார்பன் முதலிய பசுங்கூட வாயுக்கள் சதவிகித கணக்கில் மிக சொற்பமாக இருந்தாலும் புவியின் உயிர் கோளத்திற்கு அச்சாணி; கடையாணி. இந்த பசுங்கூட வாயுக்கள் அளவு சிறுது மாறுபட்டாலும் புவியின் தட்ப வெட்ப நிலை பெரிதும் மாறும்.

நீராவி, மீதேன் என பற்பல பசுங்கூட வாயுக்கள் இருந்தாலும், கார்பன் குறித்துதான் அறிவியலாளர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். சர்க்கரை நீரில் கரையும் தான்; ஆனால் எவ்வளவு சர்க்கரையை வேண்டுமென்றாலும் நீரில் கரைக்க முடியாது அல்லவா? குறிப்பிட்ட நிலைக்கு பிறகு சர்க்கரை கரைக்க முடியாது. நீரின் அடியில் தங்கிவிடும். அதுபோல குறிப்பிட வெப்ப நிலையில் காற்றில் குறிப்பிட்ட ஈரப்பதம் தான் இருக்க முடியும். அதாவது நினைத்தபடிக்கு நீராவியின் அளவை கூட்டியும் குறைக்கவும் முடியாது. ஆனால் கார்பன் அளவினை கூட்ட முடியும்; குறைக்க முடியும்.

கார்பன் போன்ற பசுங்கூட வாயுக்களின் அளவு குறைந்தால் என்னவாகும்? கார்பன் அளவு குறையகுறைய நிலத்திலிருந்து விண்வெளி நோக்கி பரவும் அக சிவப்பு கதிர் உறிஞ்சப்படுவது குறையும். பெருமளவு அக சிவப்பு கதிர் விண்வெளிக்கு பிரதிபலிக்கப் பட்டபின் புவியின் வெப்ப நிலை குறையும். புவியில் படரும் அக சிவப்பு கதிர் குறைந்து போவதால் புவி குளிரும். புவி குளிர்ந்து பனி கோளமாக மாறும். புவியில் பனியுகம் உருவாகும். கார்பன் அளவு கூடினால் இதற்கு நேர்மாறாக புவி வெப்ப நிலை உயரும். அதாவது வளிமண்டலத்தில் கார்பன் அளவிற்கு ஏற்ப புவியின் காலநிலை மாற்றம் காணும்.

வளிமண்டலத்தில் கார்பன் அளவு

பொதுவாக வளிமண்டலத்தில் கார்பன் அளவு சதவிகித கணக்கில் அளவிடுவதில்லை. இரண்டு ஊருக்கு இடையே தொலைவை கிலோமீட்டர் என்ற அளவையில் அளந்தாலும், ஆடை தைக்க துணி மீட்டர் கணக்கில் தான் அளவிடுகிறோம். அதுபோல சொற்ப அளவில் உள்ள கார்பன் அளவிட பத்து லட்சத்தில் பங்கு என பொருள் தரும் ppmv (பார்ட்ஸ் பெர் மில்லியன் முகத்தல் அளவையில்) என்ற அளவை பயன்படுத்தபடுகிறது. அதாவது குறிப்பிட வளிமண்டலத்தை பத்து லட்சம் துண்டுகளாக பிரித்தால் அதில் கார்பன் பங்கு எத்துனை பங்கு என்பதுதான் இந்த அளவை. இன்று வளிமண்டலத்தில் கார்பன் அளவு 385 ppm

வளிமண்டலத்தில் கார்பன் அளவு 200 ppm க்கு குறைந்தால் புவி குளிர்ந்து உறைந்து போய் பனியுகம் உருவாகும். கார்பன் அளவு 250 ppm க்கு மேல் உயர்ந்தால் புவி சற்றே வெப்பமடைந்து வேனில் யுக காலநிலை ஏற்படும். உள்ளபடியே புவி பெரும்பாலும் பனி யுகத்தில் தான் இருக்கும். சில பத்தாயிரம் ஆண்டுகள் தான் இரண்டு பனி யுகங்களுக்கு இடையில் வேனில் யுக பூமி உருவாகும். பனி விலகி தாவரங்கள் செழித்து வளரும். பல்வேறு உயரிகள் பல்கிபெருகும். இன்று நாம் இரண்டு பனி யுகங்களுக்கிடைலான வேனில் யுகத்தில் உள்ளோம். கடந்த சுமார் 10000 ஆண்டுகளாக இந்த வேனில் யுகம் புவியில் நிலவுகிறது. நடப்பில் உள்ள வேனில் யுகத்தை ஹோலோசேன் (Holocene) யுகம் என அழைக்கின்றனர். அதற்கு முன்பு ** என்ற பனி யுகம் இருந்தது. உடல் முழுவதும் மயிர் நிறைந்த மமூத் எனும் பெரும் உருவு கொண்ட யானை இந்த பனி யுகத்தில் வாழ்ந்தது. பனி யுகம் முடியும் தருவாயில், மனிதர்களால் வேட்டையாடப்பட்டு இந்த மமூத் எனும் வகை யானை அழிந்துபட்டது. சுமார் 1,25,000 ஆண்டுகள் முன்பு எமியன் (Eaminan) என்ற வேனில் யுகம் இருந்தது. கடந்த 7,00,000 ஆண்டுகளில் ஏழு முறை பனியுகம் / வேனில் யுகம் என மாறி மாறி வந்துள்ளது. பொதுவே வேனில் யுகம் சுமார் 12000-13000 ஆண்டுகள் தான் நீடிக்கும். மீதமுள்ள காலம் பனி யுகம் தான்.

இந்த பனி யுகத்திற்கு முன்பும் வேனில் யுகம் வந்தது. அந்த சமயத்தில் புவியில் அதிகபட்சமாக வெறும் 280 ppm அளவு கார்பன் தான் இருந்ததது. அதாவது இன்று வளிமண்டலத்தில் உள்ள கார்பன் -385 ppm - இதற்கு முன்பு இருந்த கார்பன் அளவைவிட வெகு அதிகம். கடந்த 4,50,000 ஆண்டுகளில் புவி சந்தித்துள்ள வளிமண்டல கார்பன் அளவை விட இன்று உள்ள கார்பன் அளவு வெகுவாக உயர்ந்துள்ளது என்ற செய்திதான் அறிவியலாளர்களை அதிர்சிக்குள்ளகியுள்ளது. கடந்த 4,50,000 ஆண்டுகளில் இல்லாத அளவு கார்பன் இன்று உள்ளது. 180 ppm முதல் அதிகபட்சமாக 280 ppm வரை தான் இருந்துள்ளது.

1850 களில் தொழிற்புரட்சிக்கு பிறகு தான் வளிமண்டல கார்பன் அளவு உயரத்துவங்கியது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 18590ல் 280ppm என இருந்த கார்பன் அளவு 1998ல் 364 என உயர்ந்தது. 2006ல் 380 என இருந்தது. இது உயர்ந்து 2009ல் 385 ppm என்ற நிலையை எட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக உலக வெப்ப நிலை சுமார் ஒரு டிகிரி அளவு கூடியுள்ளதாக கருதப்படுகிறது. கார்பன் அளவு 450 ppm என கூடினால் உலக வெப்ப நிலை சுமார் 2- 3 டிகிரி உயர்ந்து போகும். கடந்த பணியுகத்திர்க்கும் வேனில் யுகத்திற்கும் இடையே வெறும் ஐந்து டிகிரி தான் வேறுபாடு. எனவே சுமார் நான்கு ஐந்து டிகிரி வெப்ப நிலை உயர்ந்தால் புவியின் சுற்றுச்சுழல் அழியும் என விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர். எனவே தான் 450 ppm என்பதை அதிகபட்ச எல்லை என கருதுகின்றனர். இந்த லட்சுமன் கோட்டை தாண்டினால் உலக கால நிலை தாறுமாறு அடையும் எனவும் கருதுகிறார்கள்.
உள்ளபடியே காலம் தோறும் வளிமண்டல கார்பன் அளவு குறைந்தும் கூடியும் வந்துள்ளது. இது இயற்கை போக்கு. மற்றம் என்பதுதானே இயற்கை நியதி. கடலியல் சுழற்சி; பனிப்பாறை மாற்றம்; புவித் தட்டு நகர்வுகள்; எரிமலைச்சீற்றங்கள் போன்ற செயல்கள் வளிமண்டல கார்பன் அளவை மற்றும். இதன் காரணமாக கால நிலை மற்றம் ஏற்படும். பனி யுகம்; வேனில் யுகம் என மாறி மாறி அமையும். சூரிய ஒளிச்செறிவு, சூரிய சுழற்சி; புவி மைய வேறுபாடுகள் முதலியவையும் காலநிலை மாற்றத்திற்கு காரணமாகலாம். இருப்பினும் இது போன்ற இயற்கை நிகழ்வுகள் வழி நிகழும் காலநிலை மாற்றம் மிக மெல்ல மெல்ல மெதுவாக பற்பல நூற்றாண்டுகள் கொண்டு மாறும். தீடிர் மாற்றமாக இராது.

ஆனால், சமீப ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை சமிக்கைகள் தெரிவிப்பது. வேகமான புவி வெப்பமடைதலுக்கு காரணம் இயற்கை நிகழ்வுகள் அல்ல இவை மனித நடவடிக்கைகளால் நிகழ்பவை என்பதாகும். 1988-ல், உலக வானிலை மையமும் (WMO) ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் திட்டமும் (UNEP) இணைந்து மனித செயல்களினால் உண்டாக்கப்படும், காலநிலை மாறுபாடுகள் குறித்த ஆபத்தினை ஆய்வு செய்வதற்கு காலநிலை மாற்றம் மீதான அரசாங்கங்களுக் கிடையேயான குழுமத்தை ஏற்படுத்தியது. 1990-ல், ஐக்கிய நாடுகள் சபை, காலநிலை மாறுபாடு குறித்த உடன்படிக்கை வடிவத்திற்கான சர்வதேச குழுவை (UNFCCC) உருவாக்கியது. இந்த உடன்படிக்கைக்கான வரையறையானது, சமகால காலநிலை மாறுபாட்டுக்கு மனித செயல்பாடுகளே தோற்றுவாய் என்று விளக்குகிறது.
.
புவி வெப்பமடைதல்- அரசியல் 

மனித செயல்பாடு தான் புவி வெப்பமடைதலுக்கு கரணம் என்பது இன்று வெறும் அறிவியல் கருதுகோள் அல்ல; உறுதியான முடிவு. ஆண்டுதோறும் மேலும் மேலும் அதிக கார்பன் மாசினை நாம் வளிமண்டலத்தில் புகுத்திக்கொண்டிருக்கிறோம். பெருகி வரும் தொழில்மய நடவடிக்கைகளும் அதனால் விளையும் பெருங்கழிவுகளும் (அனல் மின் திட்டங்கள்,துறைமுகங்கள், சுரங்க நடவடிக்கைகள், உரக்கழிவுகளை அதிகரிக்கும் விவசாயத் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் திட்டங்கள், நகர்மயமாதலால் விளையும் கழிவுகள், பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்தும் போக்குவரத்து வாகன அதிகரிப்பு, போன்றவை) வெப்ப நிலை அதிகரிப்பிற்குக் காரணாமாக உள்ளன. இதன் தொடர் விளைவாக புவியின் கால நிலை மாற்றம் அடைந்துவிடலாம் என புவி காலநிலையியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அச்சப்படுகின்றனர். ஆகையால் புவியில் ஆண்டுதோறும் ஏற்படும் மாசின் அளவு குறைக்கப்படவேண்டும்; உடனடியாக இன்று உள்ள அளவிலாவது கட்டுப்படுத்ததப் படவேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.. என்ன செய்வது. யார் தான் பூனைக்கு மணி கட்டுவது?

முதலில் அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகள் மனித செயல்களால் புவி வெப்பமடைகின்றது என்கிற போக்கையே ஏற்க மறுத்தனர். இயற்கை போக்கில் வளிமண்டல கார்பன் அளவு மாறுதலடைகிறது எனவும், இதற்கு மனிதர்கள் பொறுப்பில்லை எனவும் கூறிவந்தனர். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும் என்பது போல சிக்கல்-பிரச்சினையே இல்லை என்று ஒதுக்கிவிட்டனர்.

ஆனால் காலபோக்கில் புவி வெப்பமடைதல் மெய் என்பது உறுதியானதும் தமது நிலைபாட்டை மாற்றிக்கொண்டனர். ஊர் கூடி தேர் இழுப்போம் என்கின்றனர். உலகில் எல்லா நாடுகளும் சமமாக பொறுப்பு ஏற்க வேண்டும் என அமெரிக்க வாதாடத்துவங்கியது . அசப்பில் இது நியாயமானது போன்று தோன்றலாம்.

இந்தியாவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இன்றும் (2001 கணக்குப்படி) 112401 கிராமங்கள் மின் வசதி இல்லாத கிராமங்கள். சுமார் 56.48% கிராமப்புற வீடுகளில் மின் வசதி இல்லை. உலகில் மின்வசதி இல்லாதவர்களில் 35% இந்தியர்கள். எனவே தான் சீனாவோடு ஒப்பிட்டு பார்த்தல் நமது கார்பன் மாசு குறைவாக இருக்கிறது. இதுகுறித்து பெருமிதமல்ல கவலை கொள்ளவேண்டும்.

இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருக வேண்டுமெனில் தொழில் வளர்ச்சி வேண்டும். பல தொழிற்சாலைகள் திறக்கப்படவேண்டும். அவ்வாறு தொழிற்சாலைகள் திறக்கப் பட்டால்; இந்திய குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள்- குடிநீர், மின் வசதி முதலிய – உள்ளபடியே அளிக்கப்பட்டால் இந்திய மென்மேலும் மின்சாரம் முதலிய உற்பத்தி சாய வேண்டும். இதன் காரணமாக கார்பன் மாசு அதிகரிக்கும். முன்பு இருந்ததை விட இந்தியா அதிக கார்பன் மாசு செய்ய வேண்டிவரும்.

சராசரி இந்தியர் நபருக்கு ஆண்டுக்கு 1.3 டன் கார்பன் மாசு ஏற்படுகிறது; அதே சமயம் சராசரி அமெரிக்கர் ஆண்டுதோறும் 20 டன் கார்பன் மாசு செய்கிறார். இதை மறைத்து, இந்திய மொத்தமாக வெளியிடும் கார்பன் மாசு 161 கோடி டன் கார்பன் அமெரிக்க வெளியிடும் மாசு 583 கோடி டன் கார்பன் எனக்கூறி இரண்டு தரப்பாரும் சமமான பொறுப்பு ஏற்க்க வேண்டும் என அமெரிக்கா வாதிடுகிறது. ஜெர்மனி 78 கோடி டன் கார்பன் மாசு செய்கிறது; ஆனால் சராசரி ஜெர்மானியர் வேயளியிடும் மாசு 9.5 டன்; சீனா வெளியிடும் மாசு 653 கோடி டன் கார்பன்; சராசரி சீனர் வெளியிடும் மாசு 4.3 டன் அகவே இந்திய சீனா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்கா அல்லது ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கு சமமாக பொறுப்பு ஏற்க வற்புறுத்துவது முறையாகாது.

இன்று சராசரி அமெரிக்கர் இந்தியரை போல பத்து ஆயிரம் மடங்கு அதிக மின் ஆற்றலை பயன் படுத்துகிறார். மின் வசதியே இல்லாத; இரவில் மின் விளக்கு வசதி இல்லாத இந்தியாவையும், மிகு அதிக அளவில் மின் ஆற்றலை பயன் படுத்தும் அமெரிக்கரரையும் ஒரே தட்டில் வைத்து நிறுத்து பார்க்க முடியாது. ஆகவே இந்தியா போன்ற வளரும் நாடுகளும், ஏற்கனவே வளர்ந்த நாடுகளும் ஒரே அளவு பொறுப்பு ஏற்க கூறுவது பொருத்தமாக இராது; நியாயம் கிடையாது.

அதுமட்டுமல்ல. இன்று உள்ள பிரச்சினை கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாக ஏற்ப்பட்ட ஒன்று. தொழிற்புரட்சியிலிருந்தே வளர்ந்த மேலை நாடுகள் வளிமண்டலத்தை மாசு படுத்தி வருகின்றன. இன்று உள்ள மொத்த கார்பன் மாசில் 29% அமெரிக்க செய்த மாசு; 45% இங்கிலாந்து போன்ற வளர்ந்த மேலை நாடுகள் செய்த மாசு. வரலாற்று மாசில் இந்தியாவின் பங்கு வெறும் 3% தான்; சீனாவின் பங்கு 10% தான். அமெரிக்காவின் மொத்த மக்கட் தொகையை வைத்துப்பார்த்தால் அது வெறும் 5% மாசு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்துள்ளதோ 29% மாசு. இதுவரை செய்கின்ற மாசை எல்லாம் செய்துவிட்டு இன்று இந்திய சீனா போன்ற நாடுகளை சமமான பொறுப்பு ஆக்குகிறது அமெரிக்கா.

வளிமண்டலத்தில் 450ppm அளவு கார்பன் இருக்கலாம்; அதுவே எல்லை எனக்கொண்டால், அந்த அளவு வரை கார்பனை வளிமண்டலத்தில் சேர்க்கலாம். உலகம் முழுமையும் உள்ள மக்களின் பொது சொத்து இது; வளிமண்டல காற்று போல; நீர் போல பொது சொத்து. இந்த சொத்தை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வது போல அமெரிக்காவும் மேலை நாடுகளும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, வளரும் நாடுகளையும், பின்தங்கிய நாடுகளையும் வயிற்றில் பெல்டை இறுக்கி கட்டிகொள்ளுங்கள் எனக் கூறுகின்றன.

இந்த வாதம் இன்று செல்லுபடியாகவில்லை. வளரும் நாடுகள் தமது கோரிக்கையை வலியுருத்த வளர்ந்த நாடுகள் வேறு வழியில்லாமல் சற்றேனும் ஏற்க வேண்டி வந்துள்ளது. இந்த நிலையில் தான் சர்வதேச ஏகாதிபத்தியம் குறுக்கு வழி கண்டுபிடித்துள்ளது. அது தான் கார்பன் வியாபாரம். கார்பன் சந்தை.
கார்பன் சந்தை
இது என்ன சந்தை; வியாபாரம்? எடுத்துகாட்டாக ஒரு தொழிற்சாலைக்கு குறிப்பிட கார்பன் மாசு செய்ய அனுமதி உள்ளது. ஆனால் அவர்களின் தேவை ஒதுக்கப்பட்டதிற்கு மேல் கார்பன் மாசு அவசியம் உள்ளது எனக்கொள்வோம். வேறு ஒரு தொழிற்சாலை அவர்கள் மேற்கொண்ட மாசு கட்டுப்பாடு காரணமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட குறைவான கார்பன் மாசினை தான் செய்கிறார்கள் எனக்கொள்வோம். இந்த இரண்டாவது தொழிற்சாலை தமது சேமிப்பு மாசினை முதலாவது தொழிற்சாலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டலாம். இது போல ஒரு நாடு தனக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட மாசு அளவில் குறைவான அளவே பயன் படுத்தினால் மீதமுள்ள மாசு வாய்ப்பை வேறு ஒரு நாட்டிற்க்கு விற்கலாம். அதுமட்டுமல்ல காடுகள் வளிமண்டல கார்பனை உறிஞ்சி தனக்குள் செமித்துவிடும். இவ்வாறு வளிமண்டல கார்பனை உறிஞ்சி எடுப்பதும் ஒருவகையில் சேமிப்பு அல்லவா? இந்த சேமிப்பையும் விற்பனை செய்யல்லாம்; அல்லது அதற்கு ஈடாக அதிக மாசு செய்துகொள்ளலாம். இதுவே கார்பன் விற்பனை; சந்தை. (உள்ளபடியே காடு வளர்ப்பு என்பது தற்காலிக தீர்வு தான்; காடுகள் வளரும் வரை தான் அவை கார்பனை தன்னுள் வைத்திருக்கும். காடுகள் வளர்ந்த பின்னர், அவை உதிர்க்கும் இலை முதலிய மறுபடி கார்பனை வளிமண்டலத்தில் சேர்க்கும்.)
இதில் எனென்ன பிரச்சனைகள்? முதலாவதாக, இந்த அமைப்பில் மாசின் அளவு குறைவதில்லை; விற்பனை செய்வதால் எல்லாவித மாசு கட்டுப்படும் இறுதியில் வீண்; மொத்த மாசு அளவு அதே அளவு தான் இருக்கும். இது சுற்றுச்சுழலுக்கு உகந்த திட்டம் இல்லை; வியாபார நோக்கு தான் மேலோங்கி உள்ளது.

இரண்டாவதாக, இந்திய சீனா போன்ற நாடுகளை எடுத்துகொளுங்கள். இந்த நாடுகளில் எல்லாம் தமது சுழல் மாசு செய்யும் தொழிற்சாலைகளை மேலை நாடுகள் இடம் மாற்றி அமைத்துள்ளன. இந்த தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நுகர்வோர் மேலை நாடினர். ஆனால் இந்த தொழிற்சாலைகள் செய்யும் மாசு வளரும் நாடுகளின் அக்கௌன்ட் புஸ்தகத்தில். அரிசி அவர்களுக்கு; உமி நமக்கு. ஆக இந்த ஏற்பாட்டில் பாவம் ஒரு இடம், பழி ஒரு இடம் என அமைகிறது.

மூன்றாவதாக ஆப்ரிக்கா நாடுகள் போல சில நாடுகள் தமது கார்பன் மாசு ஒதுக்கிட்டை பெரும் தொகைக்கு மேலை நாட்டு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்துவிடல்லாம். இதனால் உள்ளூர் தொழில் வளராது; முன்னேற்றம் என்பது சாத்தியமில்லாது போகும்; ஏற்கனவே வறுமையில் வாடுவோர் அதிலிருந்து மீள வழி அடைபட்டு போகும். ஆப்ரிக்கா நாடுகள் மட்டுமல்ல, போதிய லாபமில்லை என்ற கணக்கில் எந்த தொழிற்சாலையும் தமது உற்பத்தியை குறைத்துக்கொண்டு, தமக்கு ஒதுக்கப்பட்ட கார்பன் மாசு ஒதுகிட்டை விற்பனை செய்து லாபம் பார்க்கலாம்; நழ்டமடைவது தொழிலாளியும் அந்த சமூகமும் தான்.

மாசு கட்டுப்படிற்கு கார்பன் சந்தை தவிர சந்தை பொருளாதாரம் கண்டுள்ள புது வழி மாசு வரி. மாசின் மீது வரி விதிப்பதன் வழி; குறிப்பிட்ட மாசிர்க்கு மேல் கூடுதலாக மாசு செய்தால் அபராதம் என வழி கூறப்படுகிறது. இத்தகைய வரிக, அபராதங்கள் யார் தாளில் விழும்? இவை பயனளிக்கும? 1991ல் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெட்ரோலுக்கு பேரலுக்கு ஒரு டாலர் வரி விதித்தல் மொத்த உபயோகத்தில் 6.5% பயன்பாடு குறையும் என்பது தெரிய வந்தது. அதாவது வரி விதிப்பின் மூலம் பயன்பட்டு அளவை குறைத்துவிடலாம்; அதன் வழி மாசினை குறைக்கலாம் என்பதுவே இலக்கு. மொத்த பெட்ரோல் பயன்பாடு குறையும்; இந்த குறைப்பை செயப்போவது யார்? மக்கள் தொகையில் ஏழைகளாக உள்ள கடைநிலை 20% மக்கள் தமது ஆற்றல் வாங்கும் சக்தியில் 10\% இழப்பர் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது சுழல் பாதுகாப்பு வரிசுமையால் திண்டடப்போவது ஏழைகளே.

கார்பன் சந்தைக்கு மாற்றாக சர்வதேச கட்டுப்பாடு; கார்பன் மாசினை படிப்படியாக குறைக்க சர்வதேச ஒப்பந்தம் என முற்போக்காளர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். முன்பு ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததும் சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு கிளோரோபோரோ கார்பன் என்கிற வேதிப் பொருள் தான் ஓசோன் ஓட்டை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபிடித்து அதன் பயன்பாட்டின் மீது சர்வதேச கட்டுப்பாடுகள் விதித்தனர். மொன்டீரியல் சர்வதேச ஒப்பந்தம் என இது வழங்கப்படுகிறது. கிளோரோபோரோ கார்பன் பெருமளவில் குளிர்சாதன பெட்டியில் பயன்படுத்தப்பட்டது. கிளோரோபோரோ கார்பன்க்கு மாற்று கண்டுபிடித்து இன்று கிளோரோபோரோ கார்பன் இல்லாத சுழல் பாதுகாப்பான குளிர்சாதன பெட்டிகள் தாம் உலகம் முழுவதும் பயன் படுத்தப்படுகிறது. இந்த சர்வதேச ஒப்பந்தத்தின் படி நவீன தொழில் நுட்பம் வளரும் நாடுகளுக்கு தொழில் நுட்ப பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், வளரும் நாடுகள் தமது தொழில் துறையை நவீன படுத்தி, கிளோரோபோரோ கார்பன் பயன்பாட்டினை குறைத்தனர். இன்று கிளோரோபோரோ கார்பன் முற்றிலும் பயன்பாட்டில் இல்லை. ஓசோன் ஓட்டை இன்று அடைபட்டு சீராகிவருகிறது.

அதே போல நான்கு சக்கர வாகனங்களின் மாசு குறைப்பு. ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டை பல நாடுகள் ஏற்று தமது நாட்டில் படிப்படியாக அமல் படுத்திவருகின்றனர்.இங்கும் தொழில் நுட்ப பரிமாற்றம் உண்டு. இந்த மாசு கட்டுப்பாடு இல்லாத வண்டிகள் பதிவு செய்யப்படுவதில்லை. எனவே காலப்போக்கில் வாகன மாசு குறையும். முதலில் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் இருப்பார்கள்; ஆனால் காலபோக்கில் மீறுவதை விட ஒப்புவதே லாபம் என விளங்கி வழிக்கு வருவார்கள். இவ்வாறு சர்வதேச ஒப்பந்தம்; கட்டுப்பாடு முதலிய நடைமுறை பயன் தரும் என்பது நமது அனுபவம்.

கட்டுப்பாடுகள், சர்வதேச ஒப்பந்தம், தொழில் நுட்ப பரிமாற்றம் என்பதை விடுத்து கார்பன் சந்தை என்பது மோசடி. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளும், பன்னாட்டு கம்பெனிகளும் லாபம் பார்க்கவே கார்பன் சந்தை பயன் தரும். உள்ளபடியே மாசு குறையாது; உள்ளவர்- இல்லாதோர் இடைவெளி குறையாது; அதிகரிக்கும்.

கட்டுப்பாடுகள், சர்வதேச ஒப்பந்தம் முதலிய ஒன்றும் புரட்சிகரமான அல்லது கம்யுனிச கொள்கையில்லை. ஆயினும் உலகமயமாக்கல், தரளமயமாக்கல் சந்தை பொருளாதாரம் முதலிய கொள்கை பிடியில் சிக்கியுள்ள உலக ஏகாதிபத்தியம் உலகினை அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல் பிரச்சினையிலும் சந்தை தீர்வு தான் தேடுகிறது. மாசு குறைப்பு; இயற்கை பாதுகாப்பு; சுழல் பாதுகாப்பு முதலிய பின்னுக்கு தள்ளப்பட்டு சந்தை மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது. உலகம் அழிந்தாலும் கவலையில்லை லாபம் தான் இலக்கு என முதலாளித்துவம் செயல்படுகிறது. .

லாப வெறி மட்டுமே கண்களுக்கு தெரியும் முதலாளித்துவ அமைப்பில் இந்த சர்வதேச பிரச்சனைக்கு தீர்வு உண்டா? இன்று ஏற்படும் கார்பன் மாசின் கணிசமான பங்கு போக்குவரத்து- குறிப்பாக தனியார் போக்குவரத்தில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படுகிறது. தனியார் போக்குவரத்து குறைந்து பொதுப் போக்குவரத்து ஏற்பட்டால் மாசின் அளவு வெகுவாக குறையும். இன்று லாப நோக்கில் திட்டமிட்ட முறையில் வழக்கொழிந்து போக செய்யும் உற்பத்தி முறையும் கார்பன் மாசுக்கு காரணம். ஒரு பொருள் குறைவான காலமே பயனளிக்கும் விதமாக வடிவமைப்பது; அதன் தொடர்ச்சியாக மக்கள் பழையதை ஒதுக்கி, அடிக்கடி புதிய பொருளை வாங்க செய்வது என்கிற இன்றைய பொருளுற்பத்தி முறை மூலப் பொருள் வீண் மட்டுமல்ல, தயாரிப்புக்கு செலவான ஆற்றல் மற்றும் பொருட்கள் வீணே கார்பன் மாசினை ஏற்ப்படுத்தியது என்பதும் பொருள்.

வளர்ந்த நாடுகள் பொருள் பயன்பாட்டில்; வளிமண்டல கார்பன் மாசு பயன்பாட்டை, தாம் மட்டும் அனுபவித்து ஏனைய நாடுகள் பின்தங்கிய நிலையிலேயே இருக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமல்ல; நியாயமானதும் அல்ல.

சுற்றுச்சுழல் நெருக்கடிக்கு தீர்வு வேண்டுமெனில் இரண்டு முக்கிய சவால்களை சந்திக்கவேண்டும். வீண் செய்யும் பொருள் உற்பத்தி முறை மற்றும் பொருள் விநியோக முறை மாறவேண்டும்; இரண்டாவதாக நிலைத்தகு வளர்ச்சியுடைய சமுகம் ஏற்படவேண்டுமெனில் நாடுகளுக்கிடயிலும்; நாடுகளுக்குள்ளும் ஏற்ற தாழ்வான சமத்துவமற்ற நிலை மாறி சமத்துவம் வேண்டும். சந்தை பொருளாதாரம்; உலகமயமாக்கல் மற்றும் புதிய பொருளாதரக் கொள்கை இதற்கு தீர்வு தராது. எனவே இந்த பிரச்னைக்கு சந்தை பொருளாதாரத்திற்கு வெளியே தீர்வு அவசியம். மேலும் தீர்வு தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேசிய தீர்வாகவும் அமைதல் வேண்டும் என்பதும் தெளிவு.

சமுக ஏற்றத்தாழ்வுகள் அகல வேண்டுமென்றால் உற்பத்தி சக்தி வளர்ந்து பல்கிப்பெருகிய நிலை ஏற்பட வேண்டும். பற்றாக்குறை நிலையில் நிலைதகு சமத்துவம் சாத்தியமில்லை. உற்பத்தி சக்தி வளர்ந்து பெருகிய உற்பத்தியில் தேவையற்ற நுகர்வு இருக்காது. இது முரணாக தோன்றலாம். ஆனால் இதுவே மெய்ப்பாடு. எடுத்துக்காட்டாக தேவைக்கு அதிகமாக நீர் கிடைக்கும் நிலையில் மக்கள் ஓரளவுக்கு மேல் நீரை வீணடிப்பதில்லை. அல்லது நீரை பதுக்கி சேமித்து தனக்கு என ஒதுக்கிக்கொள்வதுமில்லை. இதுதானே நமது அனுபவம். அது போன்றே உணவு தட்டுப்பாடு இல்லாத சுழலில் யாரும் தேவைக்கு அதிகமாக வயிறு முட்ட உண்டு வீணடிப்பதில்லை. மாறாக பகுத்தறிவோடு உணவு நுகர்வு எற்படுகிறது. எனவே சுழல் கவலை கொள்ளும் அதே சமயம் எற்றத்தாழ்வுகளை குறைக்கும் வளர்ச்சி மீதும் அக்கறை வேண்டும். நவீன உலகமயமாக்கல் கொள்கை இதற்கு எதிர்; எற்றத்தாழ்வுகளை வளர்கிறது.

முடிவாக.....
ஒரு நாட்டிற்குள் பணமுதலைகள் அங்குள்ள ஏழை எளிய மக்களை சுரண்டுவது போல, வளர்ந்த மேலை நாடுகள் வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகளை எய்கின்றன. பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகளின் வளங்களை சுரண்டி தமது நாட்டில் செல்வத்தை குவித்து அங்குள்ள மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பாமல் பார்த்துக் கொள்கிறது மேலை நவீன சமுக அமைப்பு. உலக சமாதானம், உலக சமத்துவம், உலக சுழல் பாதுகாப்பு, நிலைத்தகு வளர்ச்சி முதலிய வலியுறுத்தி போராடுவது தான் இந்த ஹிரோஷிமா தினத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய சபதம்.

1 comment:

  1. Congras Theni, I wish keep on maintaining the blog .

    ReplyDelete