முதல் பக்கம்

Dec 17, 2017

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேனி, குஜராத்தில் தேசிய அளவில் நடக்க உள்ள குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டிக்கு தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டிகள் அல்லிநகரம் அரசு பள்ளியில் நடத்தப்பட்டன. இதில் பெரியகுளம் விக்டோரியா மெமோரியல் அரசு பள்ளி, கெங்குவார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குப்பிநாயக்கன்பட்டி கலைமகள் நடுநிலைப்பள்ளி, தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இப்பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் சென்னை சத்தியபாமா பல்கலையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இளநிலை, முதுநிலை பிரிவுகளில் 282 ஆய்வு குழுவினர் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.  இளம் விஞ்ஞானியர் விருதிற்கு 30 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. 

இதில் தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவிகள் யு.சிரின், கே.பாண்டிமீனா, எம்.பிரதீபா, பி.நித்யஸ்ரீ, வி.ஸ்ரீபுவியா ஆகியோரின் ஆய்வு கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் குஜராத்தில் டிச. 27 முதல் 30 வரை நடக்கும் தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர். கம்மவார் சங்கத் தலைவர் நம்பெருமாள், பள்ளி செயலர் ஸ்ரீதர், இணைச்செயலர் கண்ணன், பொருளாளர் ஜெயராமன், முதல்வர் ஜாய்ஸ், ஆசிரியர் ராம்குமார், தமிழக அறிவியல் இயக்க மாநில செயலர் சுந்தர், மாவட்ட செயலர் ஜெகநாதன், வெங்கட் ஆகியோர் இம்மாணவிகளை பாராட்டினர்.

Nov 15, 2017

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நடந்தது.

மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் பாலசுப்ரமணியன், அம்மையப்பன் முன்னிலை வகித்தனர். கிளைச்செயலர் ராம்குமார் வரவேற்றார். மாவட்ட செயலர் ஜெகநாதன், மாநில செயலர் வெண்ணிலா பேசினர். முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி, குழந்தை விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் நாராயணசாமி வாழ்த்தினர். பேராசிரியர்கள் செல்வராஜ், கோபி, சேசுராஜ் ஆய்வறிக்கையை மதிப்பிட்டனர். சுந்தர் ஆசிரியர் தினப் போட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ஜெகநாதன் கூறியதாவது: நிலைத்த மேம்பாட்டிற்கான அறிவியல் தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற தலைமைப்பில் மாணவர்கள் 40 ஆய்வறிக்கையை சமர்பித்தனர். 25 பள்ளிகளை சேர்ந்த 200 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெறுவோர் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். அங்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கப்படும், என்றார்.

Nov 14, 2017

25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு-தேனி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இளம் விஞ்ஞானியர் விருதிற்கான 25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது.. தேனி கிளைத்தலைவர் தாழைக்குமரன் வரவேற்றார். மாவட்டத் துணைத்தலைவர்கள் ஏ.எஸ்.பாலசுப்ரமணியன், ஆர்.அம்மையப்பன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத்துணைத்தலைவர் அ.வெண்ணிலா மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, கடமலை-மயிலை, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் துளிர் இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகள் இளநிலை, முதுநிலை ஆகிய இருபிரிவுகளில் மாற்றுத்திறனாளிகளின் செயல்பாட்டிற்கு உதவும் வகையில் நிலைப்புறு மேம்பாட்டிற்கான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் என்ற மையக்கருப்பொருளின் கீழ் 36 ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். 

அவற்றில் இருந்து இளநிலை பிரிவில் 4 முதுநிலை பிரிவில் 1 ஆக மொத்தம் 5 ஆய்வுகள் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்த குழந்தை விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அ.வசந்தி, பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வம், உத்தமபாளையம் மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். புதுவிழுது கல்வி இதழின் ஆசிரியர் தே.சுந்தர் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் ஜி.பாண்டியன், உஸ்மான் அலி, ராம்குமார், சுரேஷ்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..


மாநில அளவிலான மாநாட்டிற்கு தேர்வான ஆய்வுகள் விபரம் : 

விளைநிலம் தரிசுநிலமாக மாறுதல் பற்றிய ஆய்வு:  அரசு மேல்நிலைப்பள்ளி, கெங்குவார்பட்டி , குழுத்தலைவர் : ஓவியா , வழிகாட்டி ஆசிரியர் : பொ.சத்யவதி 

தேவதானப்பட்டியில் சந்தனமரங்கள் பற்றிய ஆய்வு : ஊ.ஒ.ந.பள்ளி, டி.வாடிப்பட்டி ,  குழுத்தலைவர்: எஸ்.ஆர்.அருண் , வழிகாட்டி ஆசிரியர் : எஸ்.ஞானசுந்தரி 

ஆற்றல் சேமிப்பு : கலைமகள் ந.நி.பள்ளி, குப்பிநாயக்கன்பட்டி , குழுத்தலைவர்:  பா.தனபாக்கியம் , வழிகாட்டி ஆசிரியர் : கா.தாழைக்குமரன் 

அன்னஞ்சி கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழித்தல் பற்றிய ஆய்வு: தேனி கம்மவார் மெட்ரிக் பள்ளி , குழுத்தலைவர்: ஷெரின் , வழிகாட்டி ஆசிரியர் : ராம்குமார் 

புற்றுநோய்க்கு மருந்தாகும் மாதுளைச்சாறு : வி.எம்.அ.ஆ.மே.பள்ளி, பெரியகுளம் , குழுத்தலைவர்:  முகமது ஆசிக் , வழிகாட்டி ஆசிரியர் : ஆர்.அம்மையப்பன் 

டிச.1,2,3 ஆகிய தேதிகளில் சென்னை அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டு இக்குழந்தைகள் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்க உள்ளனர். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 30 ஆய்வுக்குழுக்களுக்கு மத்திய அரசின் இளம் விஞ்ஞானியர் விருது வழங்கப்படும். அதற்கான தேசிய அளவிலான மாநாடு டிச.27-31 தேதிகளில் மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் நடைபெற உள்ளது.

Nov 10, 2017

கல்லூரியில் கருத்தரங்கு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பெரியகுளம் கிளை சார்பாக விஞ்ஞானி மேரி கியூரியின் பிறந்தநாள் கருத்தரங்கம், புனித அன்னாள் பெண்கள் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. கிளைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். டிரயம்ப் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராம்சங்கர், ஆசிரியை மணிமேகலை முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்கம் மாநில தலைவர் மோகனா, விஞ்ஞானி மேரி கியூரியின் வாழ்க்கை வரலாறும், அவரது சாதனைகள் குறித்து மாணவிகளிடம் விளக்கினார். மாவட்ட செயலாளர் ஜெகநாதன், மாவட்ட தலைவர் மகேஷ், துணை செயலாளர் ராம்குமார், கல்லுாரி முதல்வர் பியூலா பிரக்ரன்ஸ், பேராசிரியர் போதுராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். அறிவியில் இயக்கம்கிளைச் செயலாளர் ஞானசுந்தரி நன்றி கூறினார்.

Nov 2, 2017

அறிவியல் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

இன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் கிளை சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கம்பம் கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஆர்.சுரேஷ்கண்ணன் வரவேற்றார். முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் த.சாரதா முன்னிலை வகித்தார். 



அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தே.சுந்தர் பேரணியைத் துவக்கிவைத்தார். மாவட்டத் துணைத்தலைவர் ஜி.பாண்டியன் நன்றி கூறினார். பேரணி கம்பம் தேவபாலா திரையரங்கம் அருகில் துவங்கி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை வழியாகச் சென்று துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. சுமார் 200 மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். கம்பம் நகராட்சி ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Oct 25, 2017

மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இன்று (அக்.25) மாவட்ட அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா தேனி-கொடுவிலார்பட்டி கம்மவார் ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் போட்டிகளைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டம் முழுவதுமிருந்து சுமார் 30 குழுக்கள் கலந்து கொண்டன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தமிழ், விளையாட்டு, பொது அறிவு ஆகிய சுற்றுகளில் கேள்விகள் கேட்கப்பட்டன.

4,5 வகுப்புகளுக்கான பிரிவில் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளி, போடி சௌண்டேஸ்வரி நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. 6,7,8 வகுப்புகளுக்கான பிரிவில் அரண்மனைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போடி சௌண்டேஸ்வரி நடுநிலைப்பள்ளி, வடுகபட்டி ஸ்ரீமார்க்கண்டேயா நடுநிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன..

9,10 வகுப்புகளுக்கான பிரிவில் லட்சுமிபுரம் அரசுமேல்நிலைப்பள்ளி, சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர் நல்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. 11,12 வகுப்புகளுக்கான பிரிவில் சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் வி.எம். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பெற்றன.

வெற்றி பெற்ற பள்ளிகளுக்கான நினைவுப்பரிசுகளை கம்மவார் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் வழங்கினார். மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட நிர்வாகிகள் வி.வெங்கட்ராமன், ஆர்.அம்மையப்பன், ஜி.பாண்டியன், தாழைக்குமரன், ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர். வினாடிவினா போட்டியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராம்குமார் நன்றி கூறினார்.

Aug 21, 2017

வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 1

ஆக.21 அன்று தேனி மாவட்டம் முழுவதுமுள்ள நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான குழந்தைகள் அறிவியல் மாநாடு- வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உஸ்மான் அலி வரவேற்றுப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் அறிமுக உரையாற்றினார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கணேஷ் , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வீராசாமி ஆகியோர் ஊக்க உரையாற்றினர். மாநிலத் தலைவர் பேரா.மோகனா மாநாட்டு கருப்பொருள் குறித்த விளக்கவுரையாற்றினார். சுமார் 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அறிவியல் இயக்க நிர்வாகிகள் பெரியகுளம் பாலு, ஞானசுந்தரி, போடி கிளைச்செயலாளர் ஸ்ரீதர், தேனி கிளைச்செயலாளர் ராம்குமார் ஆண்டிபட்டி கிளைச் செயலாளர் முருகேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக 85 உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் 54 துளிர் சந்தாக்கள் பெறப்பட்டன.

Aug 18, 2017

தேனியில் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டு விழா


ஆக.18 அன்று பிற்பகல் தேனி மாவட்டத்தில் கடந்த 2016-17 கல்வியாண்டில் 10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற சுமார் 60 பள்ளிகளுக்கான பாராட்டு விழா மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் வரவேற்றுப் பேசினார். மாவட்டத் துணைத்தலைவர்கள் பேரா.செல்வராஜ், ஜான்சன், ஏ.எஸ்.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் தே.சுந்தர் துவக்கிவைத்துப் பேசினார். 




மாவட்டக் கல்வி அலுவலர் (பெரியகுளம்) வீ.செல்வம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பி.என்.கணேஷ் ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். முன்னாள் மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.அம்மையப்பன் நன்றி கூறினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், கிளைச் செயலாளர்கள் ப.ஸ்ரீதர், முருகேசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Aug 15, 2017

மாவட்டச் செயற்குழு

ஆக.15 அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எம்.கே.மணிமேகலை வரவேற்றுப் பேசினார். நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஈ.ஜெகநாதன் பேசினார். மாவட்ட, மாநில மாநாடு பரிசீலனைகள், உபகுழு வேலைப் பகிர்வுகள், குழந்தைகள் அறிவியல் மாநாடு, வினாடி வினா, உறுப்பினர் சேர்க்கை ஆகிய கூட்டப்பொருள்களின் மீது விவாதிக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் தே.சுந்தர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். தேனி கிளைச் செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.

Aug 9, 2017

அறிவியலுக்காக அணிவகுப்போம் இந்தியா பேரணி


“அறிவியல் வளர்ச்சிக்காக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% நிதி ஒதுக்க வேண்டும். கல்விக்காக 10% நிதி ஒதுக்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51 A(h) வலியுறுத்துவதன் படி மக்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். பாடத்திட்டம் மற்றும் நாட்டின் கல்விக் கொள்கைகள் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்..” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.9- நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட நகரங்களில் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் சார்பில் அறிவியலுக்காக அணிவகுப்போம் இந்தியா… என்ற பெயரில் பேரணிகள் நடைபெற்றன..


நமது பகுதியில் கம்பம் நகரில்  ஆக.9  அன்று மாலை பேரணி நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட துணைத் தலைவர் பேராசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் அறிமுக உரையாற்றி பேரணியைத் துவங்கி வைத்தார். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவியல் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர். கம்பம் காந்தி சிலை அருகில் துவங்கி காமராசர் சிலை அருகே நிறைவுற்றது. இறுதியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் ஜெயமுருகன், வாலிபர் சங்க செயலாளர் லெனின், கலிலியோ அறிவியல் மையத்தின் சத்யமாணிக்கம் ஆகியோர் பேசினர். அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார். அறிவியல் இயக்கத்தின் கம்பம் கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன், தேனி கிளைச் செயலாளர் இராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கம்பத்தில் வினாடி வினா போட்டி

ஆக.9 அன்று பிற்பகல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கம்பம் ஒன்றியக் கிளை சார்பில் வினாடிவினா போட்டி கிளைத் தலைவர் மா.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பெரோஷ், வளையாபதி, தலைமை ஆசிரியர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 பள்ளிகள் கலந்துகொண்டன. நிறைவாக மாநிலச் செயலாளர் தே.சுந்தர் ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து உரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் வெங்கட்ராமன், ஜி.பாண்டி, மருத்துவர் இன்பசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தனசேகரன், சோமநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Jul 24, 2017

11ஆவது தேனி மாவட்ட மாநாடு :


தேனி மாவட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11ஆவது மாவட்ட மாநாடு ஜூலை 23- ஞாயிற்றுக்கிழமை முற்பகல் தேனி மாயா கூட்ட அரங்கில் மாவட்டத் துணைத்தலைவர் மா.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ஆர்.அம்மையப்பன், சேசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் இல.நாராயணசாமி மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமன் செயல்பாட்டறிக்கையினையும் மாவட்டப் பொருளாளர் ஞானசுந்தரி வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பித்துப் பேசினர். அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது.



புதிய நிர்வாகிகள் தேர்வு :
அறிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக மா.மகேஷ், மாவட்டச் செயலாளராக ஈ.ஜெகநாதன் மாவட்டப் பொருளாளராக எம்.கே.மணிமேகலை ஆகியோரும் துணைத்தலைவர்களாக பேரா.ஜி.செல்வராஜ், பேரா.சி.கோபி, ஜான்சன், ஜி.பாண்டி, செ.சிவாஜி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக எஸ்.சேசுராஜ், எஸ்.ஞானசுந்தரி, ஆர்.அம்மையப்பன், வி.வெங்கட் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மூட்டா அமைப்பின் துணைத்தலைவர் பேரா.ஆர்.பாண்டி வாழ்த்திப் பேசினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சங்கரநாராயணன் தண்ணீர் நமது உரிமை என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் தே.சுந்தர் மாநாட்டு நிறைவுரையாற்றினார். தேனி கிளைச் செயலாளர் ராம்குமார் நன்றி கூறினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். மேலும் மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தீர்மானம் 1:
நீட் தேர்வை விரும்பாத மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை மீறியும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசனஅமர்வு தீர்ப்பான மருத்துவக் கல்வி பொதுப் பட்டியலில் வருகிறது. எனவே இது தொடர்பான விசயங்களில் மத்திய மாநில அரசுகள் ஒத்திசைந்து முடிவெடுத்து செயல்படவேண்டும் என்று தீர்ப்பை மீறியும் அரசியல் சாசனத்தின் பிரிவு 14 மற்றும் பிரிவு 21 ஐ மீறியும் நீட் தேர்வு விலக்குக்கான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாக்களுக்கு மத்தியஅரசு குடியரசு தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தர மறுக்கிறது. இந்த அராஜக போக்கைக் கைவிட்டு உடனடியாக, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவ சேர்க்கைக்குகாத்திருக்கும் மாணவர்கள் கஷ்டத்தை போக்கவும் மாநில உரிமைகளை நிலைநாட்டவும் உடனடியாக காத்திருப்பில் உள்ள தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இணைந்துஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று தர வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு மத்தியஅரசைக் கேட்டுக் கொள்கிறது...



தீர்மானம்...2:
தமிழக அரசு பள்ளிக்கல்வியில் மேற்கொண்டு வருகின்ற ஆரோக்கியமான முயற்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மனதார பாராட்டுகின்றது..வரவேற்கிறது.. அதே நேரத்தில் பொது பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும் அனைத்து அதிகாரங்களையும்மையப்படுத்துகின்ற வகையிலும் மத்திய அரசு மேற்கொண்டு வருகின்ற அனைத்து முயற்சிகளையும் வலுவான முறையில் எதிர்க்க வேண்டும் எனவும் கல்வியில் மாநிலஉரிமைகளை நிலைநாட்ட வேண்டும் எனவும் தமிழக அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு கேட்டுக் கொள்கிறது...


தீர்மானம்..3
தமிழக அரசு பள்ளிக்கல்வியில் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் பெரும்பாலும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களை மையப்படுத்தியதாகவேஇருக்கின்றது.. ஒட்டுமொத்த மாணவர்களில் பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகள், குழந்தைகள் இருப்பது தொடக்கக் கல்வியில் தான்.. தொடக்கக் கல்வியில் நடைமுறையில் உள்ள செயல்வழிக்கற்றல மற்றும் தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு முறைகளை சரியாகநடைமுறைப்படுத்த போதிய கவனம் செலுத்தப்படாத நிலைமை தொடர்கிறது.. குழந்தைகளின் தொடக்கக் கல்வி சிறப்பாக அமைவதை பொறுத்துதான் அவர்களின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக் கல்வி அமையும்.. எனவே தமிழககுழந்தைகளின் தொடக்கக் கல்வி மேம்பட கல்வியாளர்களை ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்ட மாநாடு கேட்டுக் கொள்கிறது...