முதல் பக்கம்

Feb 23, 2011

நான் பிரகதீஸ்வரன் ஆனது எப்படி?

மூலம் : விகடன்
பாரதிதம்பி, படம்: கே.கார்த்திகேயன்

திகாரத்தை எள்ளி நகையாடும் மக்கள் கலைஞன், 'பூபாளம்’ பிரகதீஸ்வரன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக 'த.மு.எ.க.ச’-வின் கலை இரவுகளில் ஒலிக்கிறது, இவரது குரல். நடிப்பு, பாடல், எழுத்துஎனப் பல பரிமாணங்கள் கொண்டவர். கலைவாணரும் எம்.ஆர்.ராதாவும் இணைந்த கலவையாக, நடப்பு அரசியலைப் பகடி செய்யும் பிரகதீஸின் நாடக வடிவம், தமிழின் புதிய களம்!
''என் அம்மா இலங்கை மலையகத்தில் பிறந்த தமிழ்ப் பெண். அவரது சிறு வயதிலேயே அவரை யும் தூக்கிக்கொண்டு தாத்தா இங்கு வந்துவிட்டார். அப்பாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பக்கம் இருக் கும் விளானூர் என்ற கிராமம். படித்தது அங்குதான். பங்குனி, சித்திரை மாதங்களில் எங்கள் ஊரைச் சுற்றி எக்கச்சக்கமான திரு விழாக்கள் நடக்கும். அம்மாவின் அப்பா ஓர்  ஆர்மோனிய இசைக் கலைஞர் என்பதால், எங்கு நாடகம் நடந்தாலும் என்னையும் அழைத்துப் போவார். விடிய விடியநாடகம் பார்ப்போம். என் அப்பாவும் குன்னக் குடி வைத்தியநாதன் கச்சேரி மாதிரி யான நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லும் இசைப் பிரியர். இப்படி கலையும் இசையும் சிறு வயதிலேயே எனக்கு நிறையக் கிடைத்தது.
ப்ளஸ் டூ படிக்கும்போது, சத்தியமூர்த்தி என்கிற என் தமிழாசிரியர் தந்த உற்சாகத்தில் பேச்சு, நடிப்பு, எழுத்து என எல்லாப் போட்டிகளிலும் முதல்முறையாகக் கலந்து கொண்டேன். அனைத்திலும் எனக்குத்தான் முதல் பரிசு. பெரிய உற்சாகம். அதே ஆசிரியர், பிறகு நாடகங்களில் நடிக்கவைத்து என்னை மெருகேற்றினார். அப்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாகப் பல ஊர் களிலும் நாடகங்கள் போடுவார்கள். அந்தக் குழுவில் நானும் இருந்தேன். பயிற்சி கொடுக்க பிரளயன் வந்திருந்தார். அவரால் ஈர்க்கப்பட்டு, 'இனிமேல் நாடகம்தான் வாழ்க்கை’ என முடிவு செய்தேன். அறிவொளி இயக்கம் மிகப் பெரிய களம். ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவது, பாட்டுப் பாடுவது என... பசி, தூக்கம் மறந்து சுற்றுவோம். 'அந்த நாளுல சின்ன வயசுல பள்ளிக்கூடம் நானும் போகலை, ஆத்தாவும் படிக்கலை, அப்பனும் படிக்கலை, படிப்பின் அவசியம் புரியலை... விவரம் சொல்லவும் ஆள் இல்லை, விளையாட்டா காலமும் போயிருச்சே’ என்றெல்லாம் அறிவொளியில் பாடல்கள் பாடிக்கொண்டு திரிந்த நாட்களை எந்த அறிவொளி தன்னார்வத் தொண்டனாலும் மறக்க முடியாது. இப்படிக் கிராமங்களில் நாடகம் போட்டு முடிந்ததும், துண்டு ஏந்தி மக்களிடம் வசூல் செய்வோம். அப்படி வசூல் செய்துகொண்டு இருந்த போது, எங்கள் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். 'உங்க பையன் பிச்சை எடுக்கிறான்’ என வீட்டில் அவர் சொல்ல... அடி, உதை, திட்டு. ஆனாலும், நாடக ஆசை அடங்கவில்லை.
'ஞானக் கிறுக்கன்’ என்ற எனது முதல் த.மு.எ.க.ச. மேடை அனுபவம் புதுக்கோட்டை கலை இரவில் நடந்தது. நான் ஒருவன் மட்டும் மேடையேறி நடிக்கும் ஐந்து நிமிட டிராமா அது. நகைச்சுவையாகத் தொடங்கி, சமூக அவலங்களைக் கோபத்துடன் சொல்லி, இறுதியில் மண்ணை அள்ளி 'இது என்ன?’ என்பேன். மக்கள் 'மண்’ என்பார்கள். 'மண்ணா இது? வெறும் மண்ணா? இது ஜாலியன் வாலாபாக்கில் சிந்திய ரத்தம். பகத்சிங்கின் உயிர். கீழவெண்மணி பாட்டாளிகளின் தியாகம். இது வெறும் மண் இல்லை... என் தேசம். இந்த தேசத்தை மண்ணாக்கிடாதீங்க’ எனச் சொன்னபோது, கூட்டத்தினர் கண்களில் நீர். அதன் பிறகு 'ஞானக் கிறுக்கன்’ அரங்கேறாத மேடைகளே இல்லை.
பிறகு, தனியாக 'பூபாளம்’ குழு தொடங்கினோம். 'மயானம்’, 'சைக்கிள்’ என எத்தனையோ நாடகங்கள் போட்டு இருக்கிறோம். 'வியர்வையின் குரல்’ என்ற பெயரில் ஓர் இசைத்தட்டு வெளியிட்டோம். இடையில் நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இரண்டு முறை சென்னை வந்து தங்கினேன். அப்போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போக, நான் திரும்பிச் செல்ல நேர்ந்தது. இப்போது வரை சினிமாவைத் துரத்திக்கொண்டே இருக்கிறேன். ஆனால், இன்னமும் நாடகத்தில்தான் என் கால்கள் இருக்கின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளே எங்கள் இரவு நேரப் படுக்கையறையாக இருக்கின்றன. முதல் நாள் பாண்டிச்சேரியில் நிகழ்ச்சி, அடுத்த நாள் கன்னியாகுமரி, மறு நாள் சென்னை எனப் பறவை களைப்போல அலைந்து திரிகிறோம். எப்போதும் மக்களுடன் இருப்பதும், மக்களிடம் இருந்து கற்றுக் கொள்வதுமே எங்கள் பலம்.
நாடகத்தில் இப்போது நாங்கள் வந்தடைந்து இருக்கும் வடிவம் முக்கியமானது. இதில் எத்தனை பேரையும் சேர்க்கலாம். எதைப்பற்றியும் பேசலாம். எவ்வளவு நேரமும் நீட்டிக்கலாம், சுருக்கலாம். இந்த நாடக வடிவம்பற்றி தோழர் பிரளயன், 'பிரெஞ்சு நாடகக் கலைஞர் பிரெக்ட், narrative and reporting theatre என்ற வடிவத்தை நாடகத்தில் கொண்டுவந்தார். தமிழ்நாட்டில் இதைச் சிறப்புடன் செய்கிறது பூபாளம் குழு’ என பாராட்டியதை மறக்க முடியாது. என்னுடன் ஆரம்ப நாட்களில் இருந்து உடன் வரும் தோழர் செந்திலும், நானும் இணைந்துதான் இப்போது நாடகங்கள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். மக்கள் தொலைக் காட்சியில் சுமார் 2 வருடங்கள் நாங்கள் நடத்திய 'புதிய கோணங்கிகள்’ நிகழ்ச்சி, உலகம் முழுவதும் எங்களைக் கொண்டு சேர்த்தது. அதன் வீச்சில் எத்தனையோ நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தி வந்தோம்.
நாடகத்துடன் சேர்த்து, வாசிப்புதான் என்னைச் செழுமைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக 'பூபாளம் புத்தகப் பண்ணை’ என்ற பெயரில் நூல்கள் வெளி யிடத் தொடங்கினேன். நாடகத்துக்காக ஒத்திகையோ, முன் தயாரிப்போ எதுவும் எங்களிடம் கிடையாது. பேசு பொருளை மக்களின் வாழ்க்கையில் இருந்துதான் எடுக்கிறோம். முன்பெல்லாம் பள்ளிக் கூடம் மெயின் ரோட்டில் இருக்கும். சாராயக் கடை சந்து பொந்துகளில் இருக் கும். இப்போது சாராயக் கடை மெயின் ரோட்டிலும், பள்ளிக்கூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவது சாராயக் கடை முதலாளி. அதில் படித்துவிட்டு வேலை கேட்டுப் போனால், மறுபடியும் சாராயக் கடையில்தான் வேலை கொடுக்கிறான். ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருஷத்துக்கு 1 லட்சம் கோடி லிட்டர் சாராயம் விற்கும். இதைத் தயாரிக்க குறைந்தது 14 டி.எம்.சி. தண்ணீராவது வேணும். இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில்விட்டால் ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே? ஆனா, நம்ம ஆளுங்க அவ்வளவையும் குடிச்சுட்டு ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்துடுறாங்க. அந்த ஒண்ணுக்கு அடிக்க மூணு ரூபாய் கேட்குறான். 'அரிசியே ஒரு ரூபாய்தான்’னு அவன்கிட்ட நியாயம் பேச முடியுமா? இதைத்தான் மேடையில் நாடகமாகப் போடுகிறோம். அது நடிப்புதான், ஆனால் நடிப்பு மட்டுமில்லை; உணர்வு உள்ள மக்கள் கலைஞர்களின் அரசியலும் அதுதான்!''

No comments:

Post a Comment