முதல் பக்கம்

Jun 23, 2011

எதுக்கு பள்ளிக்கூடம்?


திங்கள், 10 ஜனவரி 2011 11:50
 
எதிர்பார்த்ததுதான்.
நான் பள்ளியில் நுழையும்போது ஏழெட்டு பேர் அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்தார்கள். வணங்கினார்கள். வணங்கினேன்.
"தலைமை ஆசிரியர் வரட்டும். பேசிக்கலாம்" சொல்லிவிட்டு கையொப்பமிட்டு விட்டு ஆசிரியர் அறைக்குப் போய் விட்டேன். நாங்கள்தான்  வரச் சொல்லியிருந்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் மதியம் மூன்று மணிபோல பதினோராம் வகுப்பு பெண் குழந்தைகள் அலறிக் கொண்டு ஓடி வந்தனர்.
"சார், சிலம்பு  தண்ணியப் போட்டுட்டு வந்து வாந்தி எடுத்துகிட்டு கிடக்கிறான், சார்."
பயமும் அழுகையுமாய் நின்றார்கள். வகுப்புக்குப் போனோம். பெண் பிள்ளைகள் வகுப்பிலிருந்து வெளியேறி மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள். மாணவர்கள் வகுப்புக்குள்ளேயே சுவரோரமாய் ஒதுங்கிக் கிடந்தார்கள்.
மூக்கைப் பிடித்துக் கொண்டோம். தாறுமாறாய் விழுந்து கிடந்தான். தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் செல்வத்தைப் பார்த்தார். பொருளறிந்த செல்வம் ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்தார்.
ஆடோவில் தூக்கிப் போட்டு பையனை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். பணியாட்களைக் கொண்டு வகுப்பைக் கழுவி சுத்தம் செய்தோம். மிரண்டுபோய் நின்ற பெண்பிள்ளைகளிடம் சென்ற தலைமை ஆசிரியர் "பயப்படாதீங்கம்மா, நான் பார்த்துக்கிறேன்" என்றார்.
"எப்பப் பார்த்தாலும் இப்படித்தான் சார்.  பான்பராக் போடுவது, தண்ணியடித்துவிட்டு வருவது என்று ரகளை சார்," கொதித்துப் பதறினார்கள்.
"சரி, நான் பார்த்துக்கரேம்மா. நீங்க அப்பவே சொல்லியிருந்தா கண்டிச்சிருப்பேன்ல,"
"சொன்னாத் திட்டுவான்னு பயம் சார்"
"சரி, சரி, நான் பார்த்துக்கறேன்" என்றவர் "கொஞ்சம் கூட வா எட்வின்" என்றார்.
அதை அவர் சொல்லியிருக்கவே தேவையில்லை.
"என்ன செய்யலாம். ஒரு ஸ்டாப் மீட்டிங் போடலாமா?"
"போடாலாம்னே. நாளைக்குப் போடுவோம். நாமளும் பதறவேண்டாம்."
"ஆமாம் சார். அதுதான் சரி." என்று நான் சொன்னதை ஆமோதித்தார் கனகராஜ் சார்.
"நாளைக்கு உணவு இடைவேளையில் ஸ்டாப் மீட்டிங். சர்குலர் ரெடி பண்ணுங்க."
"சரிங்கண்ணே" என்றேன்.
அடுத்த நாள் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். அவர்களது கொதிநிலை அதிகமாக இருந்தது. அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இறுதியாக பேசிக்கொண்டு வந்து எல்லோரும் ஒரே குரலெடுத்து சொன்னார்கள்,
"அவனுக்கு டி.சி யக் குடுங்க சார். இல்லேன்னா நாங்க எங்க புள்ளைங்க டி.சி.ய வாங்கிட்டு வேற பள்ளிக்கூடம் போய்விடுவோம்," எனப் பொரிந்தனர். மிகுந்த பொறுமையோடும் அக்கறையோடும் அவர்களை அணுகிய தலைமை ஆசிரியர் "பயப்படாதீங்க. எனக்கும் இருபது வயசுல ஒரு பொண்ணு இருக்கா. உங்க வலி என்னன்னு எனக்கும் தெரியும். நான் பார்த்துக்கிறேன். நம்பிப் போங்க" என்றார்.
கட்டுப்பட்டார்கள், கலைந்து போனார்கள். மதியம் கூடிய ஆசிரியர் கூட்டத்திலும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்றே ஏக மனதாய் முடிவெடுக்கப் பட்டது. அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனது பெற்றோரை வரச்சொல்லியிருந்தோம். அவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தலைமை ஆசிரியர் வந்ததும் வணங்கியிருக்கிறார்கள்.
"கொஞ்சம் பொறுங்க, பிரேயர் முடிஞ்சதும் கூப்பிடறேன்."
"சரிங்க சார்"
வகுப்புகள் தொடங்கியதும் சில ஆசிரியர்களை அழைத்தார் தலைமை ஆசிரியர். அந்தப் பையனது பெற்றோர்களையும் வரச் சொன்னார்.
"உங்கப் பையன் என்ன காரியம் செஞ்சிருக்கான் தெரியுமா?"
"கேள்விப் பட்டோங்க சார் இனிமே இப்படி நடக்காமப் பார்த்துக்கறோம் சார். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார். அவன் செஞ்ச தப்புக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம்."
"ஆயிரம் பொம்பளப் பசங்க படிக்கிற பள்ளிக்கூடம் இது. உங்கப் பொண்ணு இங்க படிச்சா  சும்மா விட்டுடுவீங்களா?"
"தப்புதாங்க, தயவு பண்ணி மன்னிச்சுக்கங்க சார்."
இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் நீண்டது. எப்படியாவது மாற்றுச் சான்றிதழை வழங்கிவிட வேண்டும் என்பதில் நாங்கள் பிடிவாதமாய் இருந்தோம். இல்லாது போனால் வருங்காலத்தில் மாணவர்களிடம் பயம் இருக்காது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அப்போதுதான் பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் சமாதானமடைவார்கள் என்பதுதான் எங்கள் எண்ணம்.
அவர்களோ என்ன செய்தேனும் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றி சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள். இறுதியாக வேறு வழியேயின்றி உரத்த குரலெடுத்து தலைமை ஆசிரியர் சொன்னார், "வேற வழியே இல்ல, டி.சி ய வாங்கிட்டுப் போங்க."
அதுவரை கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணீரோடு சுவரோடு சுவராய் சாய்ந்து நின்று கொண்டிருந்த அவனது அம்மா வெடித்தார், "கொடுங்க சார், ஏம்புள்ள எப்படியோ நாசமாப் போகட்டும். நீங்க ஒங்க பள்ளிக்கூடத்தக் கட்டிக்கிட்டு நல்லா இருங்க"
"என்னம்மா பேசுற நீ"
கூட வந்தவர்களும், "நீ செத்த சும்மா இரும்மா. நாங்க பார்த்துக்கறோம், கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நில்லு," என்றனர். இந்த அம்மாவின் பேச்சினால் காரியம் கேட்டுவிடக் கூடாது என்று பயந்தனர்.
"உடுங்கய்யா எல்லோரும். ஏம்புள்ள எப்படியோ  நாசமாப் போகட்டும்" மீண்டும் வெடித்தார்.
"ஓம் பய என்ன செஞ்சிருக்கான். நீ என்னா பேசுற" தலைமை ஆசிரியர் கேட்கவும் "அவன் யோக்கியன்னா சார் சொல்றோம். அவன் குடிச்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு மட்டுமா சார் வரான். தண்ணியப் போட்டுட்டுதான் பல நேரம் வீட்டுக்கும் வரான்."
"அப்பா கண்டிச்சு வைக்க வேணாமா?"
"கண்டிச்சுதான் வைக்கிறேன் சார். ஆனா வீட்ட விட்டு வெளிய துரத்துல"
இதற்கு அடுத்து அந்த அம்மா பேசியதுதான் எங்களை அதிரச் செய்தது.
"வீட்டுக்கு குடிச்சுட்டு வரானேன்னு என்னைக்காச்சும் அவங்கிட்ட 'இப்படிக் குடிச்சுப் புட்டு வீட்டுக்கு வாரயே யாரடா ஒன்னோட கிளாஸ் சார், அவர கூட்டிட்டு வான்னு என்னைக்காவது சொல்லியிருக்கேனா சார்"
"கிறுக்கு புடிச்சுருக்காமா ஒனக்கு?"
"கெட்டுப் போற புள்ளைங்கள வீட்டுக்கு அனுப்பிட்டு மத்தப் புள்ளைங்களுக்கு பாடம் நடத்தறதுக்கா சார் ஸ்கூலு? கெட்டு சீரழியிற பசங்கள நல்ல வழிப்படுத்தி திருத்தற‌துக்குத்தான் சார் பள்ளிக்கூடம், சம்பளம் எல்லாம்" அந்த
அம்மாவை இழுத்துக் கொண்டு போனார்கள்.
பள்ளிகளில், கல்லூரிகளில், ஆசிரியர் பயிற்சியில் விளங்காத ஏதோ ஒன்றை அந்த அம்மாவின் பேச்சு தெளிவுபடுத்தியது.
- இரா.எட்வின் ( eraaedwin@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
thanks:keetru.com

சமச்சீர் கல்விக்கான தடைகள் தகர்ப்போம்


வெள்ளி, 17 ஜூன் 2011 16:16 
எதைத் தந்தாலும் சூத்திர-பஞ்சம சாதியார்க்குத் துப்புரவாய்க் கல்வி தரக்கூடாது என்பது ‘மனுநீதி’யின் உயிரான தத்துவங்களில் ஒன்று. இதைச் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்கு வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் பெரியார். பட்டியல் இன மக்களுக்கு எல்லாம் செய்தவர் மாமேதை அம்பேத்கர். நீதிக்கட்சியும், தன்னலமற்ற அக்கட்சியின் தலைவர்களும், காமராசரும் தமிழகத்தில் காங்கிரசுக்குப்பின் ஆளவந்த திராவிடக் கட்சிகளும் பரந்துபட்ட மக்களுக்குக் கல்வி வழங்குவதில் தனிக்கவனம் செலுத்தின.
என்றாலும், தனியார் மயம், உலக மயத்தின் தாக்குதல் இங்கே தொடங்கியபின் கல்வியைத் தனி யாருக்கு ஒதுக்கிவிட்டு, அவர்கள் அதை விற்பனை செய்ததை எல்லா அரசுகளும் வேடிக்கை பார்த்தன. அதன்விளைவுதான் நாடெங்கும் புற்றீசல் போல் பெருகிவிட்ட பணம் பறிக்கும் தனியார் மற்றும் மெட்ரி குலேசன் உள்ளிட்ட பள்ளிகளாகும். இக்கொள்கை யைத் தடுத்துநிறுத்தவும் அடிப்படைக் கல்வியிலேயே பல்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதை ஒழித்துகட்டவும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பலரும் குரல் எழுப்பி வந்தனர்.
இதனை ஏற்று, கடந்த முறை ஆட்சியில் இருந்த கலைஞர் அரசு சமச்சீர் கல்வி முறைபற்றி ஆய்வு செய்ய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
அந்தக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றுச் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த கலைஞர் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அச்சட்டத்தின்படி 2010-2011ஆம் கல்வியாண்டில் 1 முதல் 6 வகுப்பு வரையி லான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2011-2012-ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரையிலான இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முன் மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் ரூ.200 கோடிச் செலவில் 9 கோடிப் பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் செயலலிதா தலைமையில் அமைந்த புதிய அரசு கடந்த 22.5.2011இல் கூட்டிய தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதென முடிவு செய்துள்ளது. அதுகுறித்துத் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் ‘இப்போது நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் அமையவில்லை. இதற்கென உருவாக்கப் பட்டுள்ள பாடத் திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத் தையும் உயர்த்திட வழிவகை செய்யாது. எனவே கல்வித் தரத்தை மிகச் செம்மையாக நடைமுறைப் படுத்த மீண்டும் வேறொரு குழுவை அமைத்து ஆராய வேண்டும். அதுவரை பழைய பாடநூல் களையே இந்தக் கல்வி ஆண்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான அளவில் பாடநூல்களை அச்சிடப் போதுமான கால நேரம் இல்லாமையால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் சூன் 15ஆம் தேதி திறக்கப்படும்’ என்று கூறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சியாம் சுந்தர் என்னும் வழக்குரைஞர் தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைக்கும் இந்த முடிவை எதிர்த் தும், தொடர்ந்து சமச்சீர் கல்வியைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
நீதிபதிகள் எஸ். இராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட அமர்வின்முன் இந்த வழக்குத் தொடர்பாக விடையளித்த தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருட்டிணன் “பல் வேறு பாடத்திட்ட முறைகளில் இருந்து தங்களுக்கான சிறந்த பாடத்திட்டத்தைத் தேர்வு செய்து கொள்வ தற்குத் தமக்கு வாய்ப்பு இருக்க வேண்டுமென பெற் றோர்களும் மாணவர்களும் விரும்புகின்றனர். இந் நிலையில் ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்திச் செய்ய முடியாது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கக் கூடியது. எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனைக் கருத்தில் கொண்டே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
‘மாணவர்களுக்குப் பயன்தரும் நல்ல கல்வித் திட்டம் எது என்பதையும், எந்த மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்கிற அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. இவற்றைப் பெற்றோர்கள் தீர்மானிக்கக் கூடாது’ என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் அரசு வழக்குரைஞர் வாதாடியுள்ளார்.
இந்நிலையில் சமச்சீர் கல்வி முறையைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் வண்ணம் பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேசாசலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் பி. வில்சன், தற்போது நடைமுறை யில் உள்ள சமச்சீர்கல்வி முறை தமிழகச் சட்டப் பேரவை நிறைவேற்றிய ஒரு சட்டத்தின் மூலம் அமல்படுத்தப்படுவதாகும். இதனை அமைச்சரவைக் கூட்டம் ஒன்றின் கொள்கை முடிவால் நிறுத்தி வைக்க முடியுமா?
மேலும் தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து அப்போதே பல வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன. என்றாலும் தமிழக அரசின் இந்தச் சட்டத்தை உறுதிப்படுத்தி உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமைச்சரவையின் ஒரு கொள்கை முடிவால் தடுத்துவிட முடியுமா? மேலும் தமிழக அரசின் இந்தச் சமச்சீர் கல்விச் சட்டத்தை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. முந்தைய அரசு எடுக்கும் ஒரு கொள்கை முடிவை, அடுத்துப் பொறுப்புக்கு வரும் அரசு மாற்று வது நல்லதல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது’ என-தன் வாதங்களைத் முன் வைத்தார்.
உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதிகளும் ‘சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட ஆய்வுக்குழு, விரிவாக ஆய்வு செய்த பிறகே, சமச்சீர் கல்வி முறையை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதனை யாரும் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. மேலும் முந்தைய அரசின் சார்பில் இதற்கென ஒரு பெருந் தொகை செலவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெருந் தொகையை மீண்டும் செலவிடுவது தேவையானது தானா? இவை பற்றியெல்லாம் ஆய்வு செய்து அரசு வழக்குரைஞர் தனது எண்ணத்தை அரசுக்குச் சொல்ல வேண்டும்’ என்று கருத்துரைத்துள்ளனர். இவ்வழக்கு சூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தமிழக முதலமைச்சர், முன்பிருந்த முதல்வரைப் போல குழப்பவாதியல்ல. ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற தன்மையில் எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக் கூடியவர். வெளிப்படையாகவே அவர் தமிழ்வழிக் கல்விக்கு எதிரானவர். 2001-2006இல் இவர் ஆட்சியிலிருந்தபோது வெளிப்படையாக ஆங்கிலமே பயிற்சி மொழி எனத் தீர்ப்புப் பெற்றவர்.
கருணாநிதி முதல்வராய் இருந்த நேரத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழை ஒரு பாடமொழியாய் அறிமுகப்படுத்தி ஓர் அரசாணை இயற்றினார். இஃது மிகமிகச் சாதாரணமான ஒன்று. தமிழ்நாட்டின் கல்விக் கொள்ளையர்கள், பார்ப்பனிய மேல்சாதிச் சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்ட மலட்டு மண்டையர் தவிர மற்றெல்லாரும், எல்லாக் கட்சித் தலைவர்களும் இந்த அரசாணையை வரவேற்றனர். ஆனால் அன்று இந்த அரசாணையை எதிர்த்த ஒரே அரசியல் கட்சித் தலைவர் செயலலிதா தான்.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகும் இந்த அம்மையார் தமிழ்நாட்டின் தலைமை செயலகத்தில் இருந்தாலும் அல்லது தனது வீட்டில் இருந்தாலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பெரும்பாலும் தமிழில் பேசமாட்டார். தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு ஆளுநர் நிகழ்த்தும் உரையைத் தமிழில் மொழி பெயர்த்துப் படிக்க நேரம் ஒதுக்கமாட்டார். தொண்டர்கள் தம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட வேண்டினால் தமிழ்ப் பெயர்கள் வைக்கமாட்டார். இப்படிப் பல செய்திகளில் இவர் தமிழ் மரபோடு ஒட்டவேமாட்டார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நோக்கும் போது, இவர் தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத் தை நிறுத்தி வைத்துள்ளது எவ்வகையிலும் வியப்பிற் குரியதன்று. “நிறுத்தி வைப்பு” என்பதே குழி தோண்டிப் புதைப்பதற்கான முன்னோட்டந்தான்.
சமச்சீர் கல்வி முறையின் அமலை நிறுத்தி வைக்க முடிவு செய்த அமைச்சரவை, கல்வித் தரத்தை உயர்த்த புதியதோர் வல்லுநர் குழுவை அமைக்கப் போவதாக முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.
தமிழக அரசு, அரசாணை நிலை எண்.159 நாள் 8.9.2006இன்படி அமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி முறை குறித்த ஆய்வுக் குழுவில் கீழ்க்காணும் உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர்.
1.     டாக்டர் ச. முத்துக்குமரன்   தலைவர்
       முன்னாள் துணைவேந்தர்
       பாரதிதாசன் பல்கலைக்கழகம்    
2.     டி. கிருஸ்துதாஸ்   உறுப்பினர்
       தலைவர், தமிழ்நாடு நர்சரி,
       பிரைமரி மெட்ரிகுலேசன் மற்றும்
       உயர்நிலைப் பள்ளிகளின்
       மேலாண்மைக் குழு
3.     சகோதரர். ஜார்ஜ் உறுப்பினர்
       மான்ட் போர்டு பள்ளி, ஏற்காடு
4.     எம்.எஸ். காஜா முகைதீன்    உறுப்பினர்
       தலைமையாசிரியர், நிஜாம் ஓரியண்டல்
       மேனிலைப்பள்ளி, புதுக்கோட்டை
5.     டாக்டர் எஸ்.எஸ்.இராசகோபாலன்   உறுப்பினர்
       தலைமையாசிரியர் (ஓய்வு),
       சர்வ ஜன மேனிலைப்பள்ளி, கோவை
6.     ஜெ. உமாமகேசுவரி   அலுவல்வழி
       தொடக்கக் கல்வி இயக்குநர் உறுப்பினர்
7.     தெ. செகந்நாதன் அலுவல்வழி
       மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர்  உறுப்பினர்
8.     வசந்தி ஜீவானந்தம்   அலுவல்வழி
       அரசுத் தேர்வுகள் இயக்குநர் உறுப்பினர்
9.     இரா. கண்ணன்  அலுவல்வழி
       பள்ளிக் கல்வி இயக்குநர்    உறுப்பினர்-
              செயலர் மற்றும்
              நடத்துபவர்
இக்குழு தமிழகம் முழுவதும் பயணம் மேற் கொண்டது. 1. நர்சரி கல்வி முறை, 2. மெட்ரிகுலேசன் கல்வி முறை 3. ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, 4. ஓரியண்டல் கல்வி முறை, 5. மாநில வாரியக் கல்வி முறை ஆகிய அனைத்துக் கல்வியிலும் கற்பிக்கப்படும் பள்ளிகளைப் பார்வையிட்டது.
தன்னுடைய குழுவின் முடிவு ஒருபக்கச் சார்பாக இருந்துவிடக் கூடாது என்கிற அக்கறையோடுதான் தமிழ்வழிக் கல்வியைக் கேலி பேசும் அரைவேக் காடுகளையும் காசு பண்ணுவதையே ‘அறத்தொண் டாக’ ஏற்றுக் ‘கல்வி வள்ளல்’களாக உலாவரும் போலிகளையும் குழு உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டது.
“பல்வேறு பாடத்திட்ட முறைகளில் இருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பெற்றோர் மாணவர் விருப்பம். ஒரு பாடத்திட்ட முறையில்தான் படிக்க வேண்டுமென எந்தவொரு மாணவனையும் அரசு கட்டாயப்படுத்த முடியாது. இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கக் கூடியது” என்றெல்லாம் இன்று அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். தனியார்ப் பள்ளி பணமுதலைகள் காலங்காலமாக அழுது புலம்பும் அதே ஒப்பாரிப் பாட்டை அரசு வழக்குரைஞரும் பாடி யிருக்கிறார்.
சமச்சீர் கல்வியின் பாடத் திட்டங்கள் சாரமற்ற சக்கைகள். தரமில்லாதவை. தேசியத் தரத்துக்கு உயர்த்தாமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிப்பவை என்கிற போலித்தனமான வாதத்தை முத்துக்குமரன் குழு அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து தோலுரித்துள்ளது.
தொடக்கக் கல்வி நிலையில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் அதிக பாடச்சுமை காரணமாய்ப் புரிதலின்றியும், மகிழ்ச்சி இன்றியுமே தாங்கள் படிப்ப தாகக் கூறினார்கள். இவர்கள் பெற்றோர் உதவியின்றி வீட்டுப் பாடங்களை முடிக்க முடிவதில்லை என்பது பொதுவான கருத்து. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி” பாடல்கள் வெகுவேகமாக நடத்தப்படுகின்றன. மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதைப் பற்றி கவலைப்படாமலேயே ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர் என்று பல பெற்றோர்கள் குறைபடுவதாகக் முத்துக் குமரன் குழுவின் அறிக்கை கூறுகிறது.
தனியார்ப் பள்ளிக் கல்வி வணிகர்கள் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழியாக மட்டுமே கணிச மான அளவில் கொள்ளையடிக்க, பொதிகளைப் போல் கனக்கும் புத்தகச் சுமைகளை மாணவப் பூங்கொத்து களின் முதுகில் ஏற்றுகிறார்கள். அந்தப் பாடநூல் களைக் கற்பிக்கும் திறமான ஆசிரியர்களைத் தம் பள்ளிகளில் அமர்த்தாமல், கொத்தடிமைகளைக் கொண்டு வந்து, சீருடை ஒன்றை மாட்டி ஆசிரியர்கள் என்ற பேரில் கரும்பலகைமுன் நிறுத்தி விடுகிறார்கள்.
அரசுப் பள்ளிகளைவிடத் தங்கள் பள்ளிகள் தர மானவை என்று மார்தட்டிக் கொள்ளும் தனியார்ப் பள்ளி நிர்வாகிகள், பள்ளி நேரம் போக, மீதி நேரத் திலும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களையே மடக்கிப் போட்டுத் தனிப்பாடம் என்ற பெயரில் மேலும் சுரண்டுகிறார்கள். இவையும் போதாதென்று பேராசை பிடித்த பெற்றோர்கள் தம் குழந்தைகளைச் சிறப்புப் பயிற்சி என்ற பேரால் பிற இடங்களுக்கு அனுப்பி வதைக்கிறார்கள்.
‘அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கற்பித்தல் தரமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தனியார்ப் பள்ளிகளிலும் வகுப்பு முடிந்தபின் தனி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அங்குப் படிக்கும் மாணவர்கூட பள்ளிக்கு வெளியே தேர்வு எழுதப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் சேர்ந்து தனிப்பயிற்சி பெறுகின் றனர். அதாவது தேவையான மாணவர்க்கு மட்டுமே தனி வகுப்புகள் என்ற நிலைமாறி எல்லா மாணவர்க் குமே தனியாகக் கட்டணம் செலுத்திப் பாடம் கற்பித்தல் தேவை என்ற நிலை இன்றுள்ளது. இது ஒரு சமுதாயக் கேடு என்றால் மிகையாகாது’ என முத்துக்குமரன் குழு தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இக்கேடுகளுக்கெல்லாம் காரணம் என்ன?
*      பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமை ஆக்காமை.
*      பள்ளிக்கல்வி முழுமையையும் அரசு தன் கட்டுப் பாட்டில் ஏற்காமை.
*      வகுப்புக்கு ஓர் ஆசிரியர் அமர்த்தாமை.
*      எல்லாப் பாடங்களுக்கும் தகுதி பெற்ற ஆசிரியர் அமர்த்தாமை.
*      கல்வி தாய்மொழியில் வழங்கப்படாமை.
*      தேசிய உற்பத்தியில் கல்விக்குப் போதிய நிதி ஒதுக்காமை.
*      வசதிக்கேற்ற பள்ளிகளில் படிப்பதை அரசே ஊக்கு விக்கும் இழிவான நிலை.
‘நம் காலத்தில் நாம்தான் படிக்கவில்லை. நம் குழந்தைகளுக்கேனும் நல்ல தரமான படிப் பைப் பெற்றுத்தருவோமே’ என்று எண்ணும் பெற்றோர்களின் கவலையைக் கல்வி வணிகர் கள் காசாக்கிக் கொள்கிறார்கள். அவர்களின் கொள்ளைக்கு ஆட்சியாளர்கள் அரணாக நிற்கிறார்கள். நேற்றைய ஆளுங்கட்சி இன்றைய எதிர்க்கட்சி - இன்றைய எதிர்க்கட்சி, நாளைய ஆளுங்கட்சி. இதில் எல்லாக் கட்சியிலும் கல்விக் கடை நடத்தும் வணிகர்கள் நிரம்பி வழிகிறார்கள். எனவே புதிய அரசின் அறிவிப்பு அவர்கள் எல்லோருடைய வயிற்றிலும் பால் வார்த்துள்ளது. எளிய மக்களின் தலையில் நெருப்பைக் கொட்டியுள்ளது.
மக்களின் விழிப்புணர்ச்சியும், எஃகு போன்ற மன உறுதியும் எல்லாத் தடைகளையும் தகர்க் கும் ஆற்றல் வாய்ந்தவையாகும். சமச்சீர் கல்விக்கான தடைகளையும் தகர்த்து முன்னேற வேண் டும். சமச்சீர் கல்விகூட குறைகளே இல்லாத முழுமையான கல்வியல்ல. இப்போதைக்கு இந்தத் தடையையேனும் தகர்க்க அணிதிரள வேண்டியது மக்கள் கடன்.
_தமிழேந்தி
thanks:keetru.com.

சந்திர கிரகண புகைப்படங்கள்

 Vizhiyan Photography – Lunar Eclipse June 15
  இரவு வானில் இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகண காட்சிகள் அரங்கேறியது. நிலவை பூமி மெல்ல மெல்ல கவ்வியது லென்ஸ் வழியே அழகாய் தெரிந்தது. நான் கண்ட காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இங்கே நிலவை தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் மிகவும் ரசிக்கும்படியாக இருந்து. இரவு 12 முதல் 1.15 வரை எடுத்த படங்கள் இவை. ஒரு கட்டத்தில் நிலவும் நிழலும் மிக அழகாக இருந்தது. மிக அரிய காட்சி. பெளர்ணமி நாளில் சந்திரகிரகணம் காண்பது அரிதாம்.
1. ஆரம்பம்

2. நிழல் ஆக்கிரமிப்பு

3. ஐய்யோ காப்பாத்துங்க..

4. சோற்றில் மறைத்த பூசணி அக்கா.

5. சர்ப்பம் விழுங்கிய நிலவு

6. அழகிய பள்ளங்கள்

7. தெரியும் என சொன்ன அந்த நட்சத்திரமா?

8. வான் மோதிரம்.
நிச்சயம் 300mm லென்ஸ் போதவில்லை. ஆனாலும் ரசிக்கும்படியாக இருந்தது. லாங் எக்ஸ்போஷர் வைத்தால் நிலவு அசைந்து விடுகின்றது அல்லது மெல்லிய காற்று லேசாக லென்சுஸை ஆட்டி விடுகின்றது. இந்த நூற்றாண்டின் காணக்கிடைக்காத வான் நாடகம் பார்த்ததில் பரம திருப்தி. உங்களுடன் பகிர்வதில் மேலும் திருப்தி.
விழியன்http://vizhiyan.wordpress.com
 

Jun 15, 2011

சந்திரகிரகணம் - சில கேள்வி பதில்கள்

 
செவ்வாய் ( ஜூன் 15, 2011 ) இரவு ஓர் அரிய/அற்புத வான் நிகழ்வு நடக்க உள்ளது. சந்திரகிரகணம் நாளை நம் நாட்டில் தெரிகிறது.

1. ஜூன் 15 2011 சந்திரகிரகணம் ஏன் ஓர் அரிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது?

பூமியின் நிழலில் நிலவு செல்லும்போது சந்திரகிரகணம் ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. பூமியின் நிழல் வானில் ஒரு கூம்பு வடிவில் விழுகின்றது. அக்கூம்பின் விட்டம் பூமிக்கு அருகாமையில் அதிகமாக இருக்கும். எனவே நீள்வட்டப்பாதையில் செல்லும் நிலவு, பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் காலத்தில் பூமியின் நிழலை அதிக தூரம் கடக்கவேண்டியிருக்கும். கிரகணம் நடக்கும் அன்று ஓரளவு பூமியிலிருந்து அருகாமையில் நிலவு உள்ளது. மேலும் இன்று நிழலின் மேலோ கீழோ செல்லாமல் நடுப்பகுதியின் வழியே நிலவு செல்கிறது. நிமிடத்திற்கு 96கி.மீ வேகத்தில் செல்லும் நிலவு சுமார் 9630 தூரத்தை பூமியின் நிழலில் கடக்கவேண்டியுள்ளது. எனவே கிரகணம் 100 நிமிடங்கள் தெரியும். இவ்வாறு நீண்டநேரம் கிரகணம் தெரிவது ஓர் அறிய நிகழ்வே. 


2. முழு சந்திரகிரகணத்தின் போது நிலவை நாம் பார்க்கமுடியுமா?

நம் பூமியின் நிழல் உண்மையில் கருமை நிறம் கிடையாது. பூமியின் வளிமண்டலம் சூரியனின் கதிர்களை ஒளிமுறிவு அடையச்செய்வதால் பூமியின் நிழல் செம்பழுப்பு நிறமாக இருக்கின்றது. எனவே முழு சந்திரகிரகணத்தின் போது நிலவு செம்பழுப்பு நிறத்தில் ( copper red) இருக்கும்.
ஆகையால் நாம் நிலவை கிரகணத்தின் போது காணமுடியும்.




3. ஜூன் 15 சந்திரகிரணதில் ஏதேனும் அற்புதம் உள்ளதா?

ஆம். முந்திய பதிலில் கூறியவாறு பூமியின் நிழல்கூம்பு செம்பழுப்பு நிறமாக இருந்தாலும் அதன் விளிம்பைவிட மையப்பகுதிகளில் கருமை அதிகமாக இருக்கும். இம்முறை நிலவு இம்மையப் பகுதிவழியாக செல்வதால் கிரகணத்தின் நடுசமயத்தில் (ஜூன் 16 காலை 1.42மணிக்கு) வெளிச்சம் மிகக்குறைவானதாகவே இருக்கும். மேலும் கடந்த ஆண்டு ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து வளிமண்டலத்தில் தூசு அதிகரித்து இருப்பதன் காரணமாக பூமிநிழலின் கருமையும் சற்று அதிகரித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. எனவே இம்முறை கிரகணத்தின் நடுசமயத்தில்  நிலவு முழுவதும் மறைந்துவிட வாய்புள்ளதாக வானவியலாளர்கள் கருதுகின்றனர்.

4. முழுசந்திரகிரகணத்தைப் பார்த்தால் தீங்கு ஏதேனும் ஏற்படுமா?

ஒவ்வொரு இரவிலும் நாம் பூமியின் நிழலில்தான் வசிக்கின்றோம். நம்மைப் போன்றே இன்று நிலவும் பூமியின் நிழலில் ஒதுங்குகின்றது. இது இயற்கையின் ஒரு கண்ணாம்பூச்சி விளையாட்டு. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக அறிவியல் பூர்வ ஆதாரம் ஏதும் கிடையாது. தற்போது நிகழும் இவ்வழகிய வான்நிகழ்வு நம் நாட்டிலும் மற்றும் சில ஆசிய நாடுகளில் மட்டுமே நன்கு காணலாம். எனவே நாம் நம் சுற்றத்துடன் கண்டிப்பாக இந்த கிரகணத்தை கண்டு மகிழவேண்டும்.

5. எந்த நேரத்தில் நாம் இந்நிகழ்வைக் காணலாம்?

இந்தியாவில் கிரகணம் ஜூன் 15ம்தேதி இரவு ஆரம்பித்து ஜூன் 16ம்தேதி அதிகாலை முடிகின்றது. கிரகணம் ஏற்படும் பல்வேறு கட்டங்களின் நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15ம் தேதி
1. அரி நிழலில்  (penumbra) நிலவு நுழைதல் : இரவு 10.52:52 
2. கருநிழலில் (Umbra) நிலவு நுழைதல் : இரவு 11:52:24

ஜூன் 16ம்தேதி
3. முழுகிரகணம் ஆரம்பித்தல் :  00:51:57 
4. கிரகணத்தின் நடுப் பகுதி :  1:42:24
5. முழுகிரகணம் முடிதல்:  2:32:50
6. கருநிழலிலிருந்து நிலவு வெளிவருதல் :  03:32:22
7. அரிநிழலிருந்து நிலவு வெளிவருதல் :  04:32:02




அன்புடன்
சே. பார்த்தசாரதி

 

இந்த நூற்றாண்டின், மிக இருண்ட , முழு சந்திர கிரகணம்.. ஜூன் 15, 2011/total lunar Ecipse, June15-16, 2011

 ஆந்திரா, பத்ராசலத்தில், உள்ள 
சீதாராமச்சந்திரா, காளஹமேஸ்த கோயில் & காளஹஸ்தி கோவில்கள் 
மட்டுமே, இந்தியாவில், சூரிய, சந்திர கிரகணங்களின் போது 
திறந்திருப்பவை.
   
கருவுற்ற பெண்கள்
   
   ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான இருக்கிறோம்.கிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ, கட்டாயம் கிரகணத்தின் போது கட்டாயம் பல மேட்டுக்குடி மக்கள் விரதம் இருக்கின்றனர்.கொஞ்சம் நடுத்தர வர்க்கமும்,கொஞ்சம் விபரம் அறிந்தவர்களும், கிரகணத்தின் போது கருவுற்ற பெண்களை, கிரகண நேரத்தில் வெளியே விட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள்.முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப் படுகிறது. கிரகணம் முடிந்த பின், கோயில்களை   கழுவி விடுகின்றனர். மக்கள்  குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க,  உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா? கிரகம் பிடிச்சவனே/வளே என்று திட்டுவது , இந்த கிரகணம் பிடிச்ச கிரகணத்தினால்தானா/காரணத்தினால்தானா ?

கிரகணத்துக்காக மூடியுள்ள திருப்பதி பாலாஜி கோயில்.. அதனக் காவல் காக்கும் இராணுவ வீரர்
     "திருமலை திருப்பதி கோவில் ஜூன் 15 ல் மாலை 6 மணி முதல் ஜூன் 16 அதிகாலை 4.30 வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.வரும் 15 ஆம் தேதி பகல் 12.53 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி கோவில் சுத்திகரிக்கப்பட உள்ளதால் மாலை 6 மணிக்கு கோவில் மூடப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். மேலும் ஜூன் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் வழிபாட்டிற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் கோவிலில் நடைபெற உள்ள திருப்பாவாடை சேவை ரத்து செய்யப்பட உள்ளது." இந்த தகவல் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அறிவிக்க ப்பட்டுள்ளது. 

சூரிய, சந்திர கிரகணம் உருவாதல்
எது..கிரகணம்....?..!

கிரகண உருவாக்கம்
ஜமைக்கா தலைவருடன், கொலம்பஸ், சந்திர கிரக்ணம் பற்றி கூறி மிரட்டுதல்
    கிரகணம் என்றால்.என்ன.? இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ,அவை நகர்ந்து செல்லும்போது,சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது அந்த வான் பொருள்,நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும்.. இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப் படுகிறது.கிரகணம் என்பது சமஸ்கிருத சொல்.இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.    

 30 நாளில்..வானின் ..  மூவகை..விருந்துகள் ..!

2011, ஜூன் 1-ஜூலை 1, 3 கிரகணங்கள்
2011,ஜூன் 1, பகுதி சூரிய கிரகணம், வட துருவத்திற்கு அருகில்
2011, ஜூன் 15-16, முழு சந்திர கிரக்ணம். உலகில் பாதிப்பேர் காணமுடியும்.
2011,ஜூலை 1,பகுதி சூரிய கிரகணம்.
   2011 , ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதிக்குள்( 30 நாட்களுக்குள்.) வானம் நமக்கு மூன்று அற்புதமான விருந்தினை படைக்கிறது..!  ஆமாம். ஜூன் முதல்  தேதி அன்று, பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது,  ஜூன் 15 ம் நாள் 2011ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் உருவாக உள்ளது. இந்த் முழு சந்திர கிரகணத்தின் போது,முழு நிலா நாளில்,  நில்வு முழுமையாக நம் கண்களிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. அட..அது மட்டுமா நண்பரே..! இன்னும் ஒரு விருந்து..!  அடுத்து ஜூலை  முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம்..! எப்படி நம் குடும்ப உறுப்பினர்கள் பட்டையை கிளப்புகிறார்கள் பாருங்கள்..!


        சூரியனைச் சுற்றி..சுற்றி வர ஆசை..! 
     
சூரிய குடும்பம், ஒரு மணல் துகள் போல, பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே  சூரியனைச்  சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது.அது மட்டுமல்ல.சூரியனாவது சும்மா இருக்கிறதா? சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை(MilkyWay galaxy),   தனது குடும்ப உறுப்பினர்களான, கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்து குஞ்சு குளுவான்கள் படை சூழ நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.இந்த நிகழ்வு  முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும்  சொல்லப் படுகிறது 

  பௌர்ணமி நிலவில்.. இருள் விழும் இரவில்..! 

சந்திரனையும் இழுத்துக் கொண்டு, சூரியனைச் சுற்றும் பூமி

அனைத்து கோள்களும் , சற்றே சாய்ந்த நிலையில்
   பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட,5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. . இந்த காலகதியில்,  பூமி, சூரியன் மற்றும் சந்திரன், இவை  மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப் படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப் படுகிறது.. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.  ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை.அது போல எல்லா அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை. 

   எப்படி.. கிரகணங்க..?  
முழு சூரிய, கிரகணம் உருவாதல்
சூரிய, கிரகணம் பாதுகாப்புடன் காணும் குழந்தைகள்
    சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு.அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. இதில்  சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா,நம் குடும்ப தலைவரான,  மிகப் பெரிய சூரியனை மறைத்து, முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும்  இதனாலேதான்.      .
    
Solar eclipses occurring near the Moon's descending node are given even Saros series numbers. The first eclipse of each series starts at the southern limb of the Earth and the eclipse's path is shifted northward with each successive Saros cycle.
எத்தனை.. கிரகணம்.. எத்தனை முழுசு..!  .
   
   பொதுவாக, ஒரு வருடத்தில், 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம்.சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும்.. இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின், மிக நீண்ட நேரம்,என்பது,7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணமே தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய/சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள், (நேரம், வகை போன்றவை,) . 18 வருடம் ,11 நாட்கள் (6.585.32 நாட்கள்) நிகழும்.இதற்கு சாரோஸ் சுழற்சி(Saros  cycle) என்று பெயர். பொதுவாக, கிரகணம், சூரிய உதயத்தில் துவங்கி, பூமியின் , ஏதாவது ஒரு பாதியில்,சூரியன் மறையும் போது, முடிவடைகிறது. . ஒரு வருடத்தில். பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும். இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம்,1,770 கி.மீ./மணி நிலநடுக்கோட்டுக்கு அருகில். ஆனால் .துருவங்களில்., கிரகண வேகம் பொதுவாக ...8,046 கி .மீ/மணி முழு சூரிய கிரகணம் 1 .5 வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம், 269 கி.மீ. பகுதி சூரிய கிரகணம், பூமியின் மற்ற இடங்களுக்கு, முழு கிரகண பாதை தாண்டி,4,828 கி.மீ தூரம் வரை தெரியும்..


நீண்ட நேரம் ..நீடிக்கும்... சந்திர கிரகணம்..!

முழு சந்திர கிரகணம் , பகுதி சந்திர கிரகணம் தெரியும் இடங்கள்..
நீண்ட, கருப்பு முழு சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகணம்
         ஜூன் 15 ம் நாள்  நமக்கு காட்சி அளிக்கப் போவது, முழு சந்திர கிரகணம். பொதுவாக முழு சந்திர கிரகணத்தின், முழு மறைப்பு நேரம் (Totality) அதிக பட்சம்  107 நிமிடங்கள். ஆனால், பூமியில் நிழல் சந்த்திரனைத் தொடுவதிலிருந்து, சந்திரனின்  அடுத்த எதிர் முனையில்  விடுவது வரை உள்ள நேரம் சுமார் 4 மணி நேரம் வரை நீட்டிக்கலாம்.பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும்.சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.   

    இந்த நூற்றாண்டின் .. நீண்ட.. சந்திர..கிரகணம்..!  

2011,ஜூன் 15 ல், சந்திர கிரகணத்தின் போது பூமியின் தோற்றம்
    இந்த  ஆண்டின்(2011)  முதல் சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள் நிகழ உள்ளது.ஜூன் 15ம் நாள் வரவுள்ள  சந்திர கிரகணத்தின் முழு மறைப்பு நேரம் சரியாக 100 நிமிடங்கள். இது சந்திரனின் உயர் சந்திப்பு பகுதியில், தெற்கு ஒபியுக்கசுக்கு(southern Ophiuchus)அருகில்,மேற்கு லாகூன் நெபுலா(Lagoon Nebula ,M8)க்கு 7 பாகையில் நிகழவுள்ளது. இங்கே, சந்திரனில் கருமைப் பகுதி/முழு மறைப்பு நேரம்  100 நிமிடங்கள் அதிகமாக நீட்டிக்கும். இதற்கு,முன் ஜூலை 2000 ஆண்டில்தான், இந்த மாதிரி நீண்ட கிரகணம் வந்தது.   இந்த முழு கிரணத்தின்போது,  சந்திரன், நொடிக்கு ஒரு கி. மீ வேகத்தில் கிரகண பகுதியை கடக்கும்.   கிரகணத்தின் போது, அதன் நிழல் விழும் பகுதியின் கருப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை, முறையே, அம்பரா(Umbra), பெனும்பரா(Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன் , சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசைகளில் அற்புதமாய் தெரியும்.இந்த ஆண்டு, ஜூன் 15ம் நாளில் நிகழ உள்ள கிரகணம் இந்த வகையைச் சேர்ந்தது. இந்த மாலை மயங்கும் வேளையில், நாம் ஒரே நேரத்தில் சூரிய மறைவையும், சந்திர உதயத்தையும் தொடுவானுக்கு அருகில்  பார்க்கும்போது, செலனோஹிலியன்(selenehelion ) என்ற நிகழ்வு உண்டாகிறது.  மேலும் இந்த சமயத்தில் இப்படி சூரிய மறைவு  மற்றும் சந்திர உதயத்தில் சூரிய, சந்திரனுடன், மாலை வேளையில் சந்திர கிரகணம் தெரிவதை படுக்கைவச கிரகணம் என்றும், சொல்கின்றனர்.    

ஜூன் 15 ,நிகழவுள்ள இந்த கிரகண நேரம்: 

முழு சந்திர கிரகணம்.. துவக்கம் முதல்..முடிவு வரை
  • பெனும்பரா(Penumbra) கிரகணம் துவக்கம்: 17 .24 .34 UT. 
  • பகுதி சந்திரகிரகணம் துவக்கம்:   16 .22 .56 UT  
  • முழு  மறைப்பு துவங்குநேரம்:
  • அதிக பட்ச முழு கிரகணநேரம்:  
  • பகுதி கிரகணம் முடியும் நேரம்:   
  • பெனும்பரா கிரகணம் முடியும் நேரம்.
  • .கிரகண நேரம்:
  • முழு மறைப்பு நேரம் : 1 மணி, 40 நிமிடம்,52 நொடிகள் 
  • பகுதி கிரகண நேரம்...:  3  மணி, 39 நிமிடம்,58 நொடிகள்.
  • பெனும்பரா  கிரகண நேரம்: 5 மணி,39 நிமிடம், 1 வினாடி. 
  •  
இந்திய நேரப்படி,2011 , ஜூன் 15 ன், முழு சந்திர கிரகணம்:

  •  பெனும்பரா பகுதிக்குள் : இரவு 10 மணி, 52 நிமிடம், 52 நொடி .ஜூன் 15
  • . கருமைநிற பகுதி சந்திர கிரணத்துக்குள்:11 மணி,52  நிமிடம், 24நொடி
  •  முழு மறைப்பு கிரகணம் :இரவு ௦0.மணி,51 நிமிடம், 57 நொடி ..ஜூன் 16
  • அதிக பட்ச கிரகணம் . ....:விடிகாலை,1 மணி,42 நிமிடம்,24 நொடி ஜூன் 16
  •  முழு மறைப்பின் முடிவு..:காலை 2 மணி, 32 நிமிடம்,50 நொடி 
  • கருமை நிற பகுதி கிரகணம் முடிவு:ஜூன் 16 காலை, 3மணி, 32 நிமிடம், 22 நொடி 
  • நிலா பெனும்பராவை விட்டு விலகுவது: ஜூன் 16 , விடிகாலை, 4 மணி, 32 நிமிடம், 02 நொடி.
  •  
அரிதான.. மிக .. இருண்ட.. சந்திர.. கிரகணம்..!  
   
    இந்த ஆண்டு ஜூன் 15 ம் நாள் ஏற்பட உள்ள முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வே..! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது , சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணிக்கும். இது போலவே  ஒரு முழு சந்திர கிரகணம், கி.பி. 2000  ஆண்டு, ஜூலை 16 ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம், கி.பி.2018 , ஜூலை 27 ம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும்,தென்னமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம், துவங்குகிறது. மேற்கு ஆசியா , ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சில், ஜூன் ௧௬ ம் நாள் சூரிய உதயத்துக்கு முன்,கிரகணம் முடிகிறது. இப்போது வந்துள்ள முழு சந்திர கிரகணம், சாரோஸ் சுழற்சியின் 130  வது வகை. இந்த வகையில் மொத்தம் 72 கிரகணங்கள் நிகழும், இது 34 வது கிரகணம்.இந்த வகை சாரோஸ் சுழற்சி, 1262 ஆண்டுகளில் முடியும். இனி அடுத்த சந்திர கிரகணம், 2011 , டிசம்பர் 10 ம் நாள் ஏற்பட இருக்கிறது. 


       கிரகணம்..!
முழு சந்திர கருப்பு கிரகணம்
பொதுவாக முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் செம்பு வண்ணத்தில் மிளிரும். ஆனால் இம்முறை அப்படி இருக்காது.நிலா கருப்பு நிலாவாக காட்சி அளிக்கும்.  இதனைத் தொடர்ந்து பார்த்து பழக்கமில்லாத  
நண்பர்களுக்கு, கிரகணத்தின் போது, சந்திரனைக் கண்டறிவதே சிரமம்தான். சூரியன், பூமி மற்றும் சந்திரனின் மையங்கள் ஒரே நேர்க் கோட்டில் அமைவதால் /வருவதால்தான் சந்திரன் இப்படி இருட்டாக இருக்குமாம். மேலும் சமீபத்தில் ஐஸ்லாந்தில்  ஒரு எரிமலை வெடித்து புகை மற்றும் சாம்பலை அள்ளி வளி மண்டலத்தில் வீசியதே..! அதுவும் கூட, இந்த இருண்ட முழு சந்திர கிரகணத்தின் ஒரு காரணியாகும். !முழுமையும் வானம் இருட்டாக, சந்திரனைக் காண முடியாமல் போவதால், மிகவும் ஒளி குறைவாய் தெரியும் விண்மீன்களைக் கூட இப்போது பார்க்கலாம். ! இதற்கு முன்னால், இப்படி ஒரு முழு சந்திரகிரகணம், 1971 , ஆகஸ்ட் 6 ம் தேதி ஏற்பட்டது. அடுத்து இது போல ஒரு முழு சந்திர கிரகணம், இன்னும் 47 ஆண்டுகள் கழிந்து, 2058 , ஜூன் 6 ம் நாள் வரவிருக்கிறது. இப்போதுள்ளவர்களில் எத்தனை மனிதர்கள், 47 ஆண்டுகளுக்கு அப்புறம் இப்படியான சந்திர கிரகணத்தைப்  பார்க்கப் போகிறோம்...!  நிச்சயமாய் நானில்லை சாமி..! 

செம்பின்.. நிறத்த. முழு .. சந்திர..கிரகணம்..!  

செம்பு வண்ணம் நிலவில் முழு சந்திர கிரகணத்தின் மீது உருவாதல்
  முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது  போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை.சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக,சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதி பலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான்,அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் , முழு சந்திர கிரகணத்தின் போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது.இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..!

இருண்ட கிரகணத்தில்.. பளிச்சிடும்.. பால்வழி.. மண்டலம்..!

சந்திர கிரகணம் ஏற்பட்ட பின், தெரியும் பால்வழி மண்டலம், விண்மீன்கள்...
பால்வழி மண்டலம்
      சாதாரணமாய்  நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம்,  முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும்.இம்முறை  நீங்களும்  பார்த்து மகிழுங்கள்.இந்த முறை சந்திர கிரகணத்தின் போது, தெற்கு வானில், தனுசு விண்மீன் படலமும்,அதன் பிரகாச விண்மீனான பூரட்டாதி,  அதன் அருகில் வலப்பக்கத்தில், அழகாகத் தெரியும், பால்வழி மண்டலத்தின் மையப் பகுதியையும் கண்டு   ரசித்து மகிழலாம்.அது மட்டுமல்ல. இரவு வானின்  பிரகாச விண்மீன்களான, வடக்கில் உச்சியில் தெரியும் பருந்து/வடக்குச் சிலுவையின் தெனாப்(Denob),அதன் அருகில் உள்ள கழுku (aquis) விண்மீன் படல  திருவோணம்(Altair), கொஞ்சம் தள்ளி யாழ் விண்மீன்(Lyra) படலத்தின் வேகா(Vega), இவை உருவாக்கும், கோடைக்கால முக்கோணம் (Summer Trianle) போன்றவற்றை பார்த்து பரவசப்படலாம்.


..அன்று..வந்ததும்.. அதே.. நிலா... கிரகணம்..
பழங்கால சீனாவில் கிரகணம் காணுதல்
      சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு.சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால்,முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும்.சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம்  , சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய்  குறிப்பிடப் பட்டுள்ளது.

 ஏதென்சை.. வென்ற.. நிலா..கிரகணம்..! 

    பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட  நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர் முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.மதகுருவின் சொல்படி எதெனியர்கள்    நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர்  ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

மக்களை.. மிரட்டிய.. கொலம்பஸ்..!
     
     கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் பெரிய கில்லாடி..! அவர், 1503 , ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி, திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள்  குறித்த, ஒரு காலண்டரை வைத்திருந்தார். அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப் பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, கடவுள் உங்கள மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின்  ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக்  கொள்ளப் போகிறார், என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்கு மூலம் தந்தனர். பின் வழக்கம் போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கம் மகிழ்ச்சி கொண்டனர். எப்படி இருக்கிறது.. இந்த வரலாற்றுத் தகவல்..! எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது தெரிய வருகிறதா? 

மூட நம்பிக்கையால்.. மூடப்பட்ட.. மக்கள்..!

பொதுவாக,தினம் தினம், சந்திரன் உதிப்பதில்லை. காரணம் நாம் அறிவோம். தினமும் சூரியன் நமக்குத் தெரிகிறது. அது நகர்வது போல தோன்றினாலும், அது நகர்வதில்லை. நாம்தான் சூரியனைச் சுற்றுகிறோம். கிரகணத்தின் போது எந்த சிறப்பு கதிரும் சூரியனிடமிருந்து வருவதில்லை . அப்போது வருகிறது என்று சொல்லப்படும் அகசிவப்பு கதிர், காமாக் கதிர்கள், எப்போதும் சூரியனிட மிருந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம் வெயிலில் போனால் உடலோ, பொருளோ சூடாவதுக்கு காரணம் அகச்சிவப்பு கதிர்களே. பிரபஞ்சம் முழுவதும் காமாக் கதிர்கள் உள்ளனவே.ஆனால், கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு அவிழ்த்துவிட்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார்.,. இது எவ்வளவு சரி? அது மட்டுமல்ல, வானுக்கு விண்கலத்தை அனுப்பும், இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.? 
-PROF.SO.MOHANA

Jun 9, 2011

தொலைத்தொடர்பு சாதனங்கள் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம்

தினகரன்
கம்பம்,நாள்:மே 20



கம்பத்தில் தொலைத்தொடர்பு சாதனங்கள் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. உலக தொலைத்தொடர்பு தினமாக மே 17ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகளுக்கு தொலைத்தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பற்றி சிறப்பு பயிற்சி முகாம் கம்பத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை காமராஜர் பல்கலைகழகப்பேராசிரியர் கண்ணன் துவக்கிவைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் பயிற்சி நோக்கம் குறித்து பேசினார். பிஎஸ்என்எல் அலுவலகப் பொறுப்பாளர்கள் ஸ்ரீராமன்,சீனிவாசன் ஆகியோர் ஆரம்பகால தொலை தொடர்பு சாதனமான தந்திக்கருவி முதல் இன்றைய மக்கள் பயன்படுத்தும் செயற்கைக்கோள் தொலைபேசி வரை பல்வேறு மாதிரிகளை குழந்தைகளிடத்தில் காண்பித்து விளக்கி பேசினர்.

சரவணன்,கணேசன் ஆகியோர் முதல் அலைக்கற்றை முதல் நான்காம் அலைக்கற்றை வரையிலான செல்போன் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி பேசினர். அறிவியல் இயக்க கருத்தாளர் ஓவியா அனலாக் கம்ப்யூட்டர் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் வகைகள் பற்றி படவிளக்கத்துடன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் நன்றி கூறினார். கூடலூர்,கம்பம்,கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமய கவுண்டன் பட்டி,புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 10 பள்ளிகளைச்சேர்ந்த 25 குழந்தைகள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பிரசாரம்




பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011,23:45 

கூடலூர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரசாரம் நடத்தப்பட்டது. மதுரை துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
அரசுப் பள்ளிகளில் தற்போது ஏற்படுத்தியுள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், முத்துக்கண்ணன், ஆர்வலர்கள் பாஸ்கரன், ஈஸ்வரன் பங்கேற்றனர்.

ஆசிரியர் அறிவியல் மாநாடு: புவனேஸ்வரில் நடக்கிறது


ஜூன் 07,2009,00:00  IST
கம்பம்: "புவிக்கோளத்தை புரிந்து கொள்வோம்' என்ற தலைப்பில் ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் இயக்கம் சார்பில் புவனேஸ்வரில் நடக்கிறது. ஆசிரியர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தகவல் தொழில்நுட்ப குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டை 2003 முதல் நடத்தி வருகிறது. அறிவியல் கல்வி குறித்து விவாதிக்கவும், எளிய அறிவியல் கருவிகளை கண்டறியும் ஆர்வத்தை தூண்டவும் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு இந்த ஆண்டிற்கான தலைப்பு "புவிக் கோளத்தை புரிந்து கொள்வோம்' என அறிவிக்கப்பட் டுள்ளது. "கற்றல், கற்பித்தலில் புதுமை', தேசிய கலைத்திட்டம் தொடர்பானவை, "மனிதனின் கண்டுபிடிப்புகளின் விளைவுகள்', "தன்னிறைவுடன் கூடிய வளர்ச்சி' ஆகியவை உப தலைப்புகளாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அறிவியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கலாம்.

பங்கேற்பவர்கள் தங்கள் சொந்த ஆய்வை ஜூன் 30 க்குள் தபாலில் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்பட்ட ஆய்வுகளுக்குரியவர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க முடியும். இந்த ஆண்டிற்கான தேசிய அறிவியல் மாநாடு அக்., 1 முதல் 4 வரை ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தரை  (மொபைல் 94880 11128) தொடர்பு கொள்ளலாம். ஆய்வுகளை பேரா.வர்மா, தேசிய ஒருங்கிணைப்பாளர், என்.டி.எஸ்.சி.2009, சயின்ஸ் பார் சொசைட்டி, நியூ பிளாக், கெமிஸ்ட்ரி டிபாட், சயின்ஸ் காலேஜ், பாட்னா பல்கலைக்கழகம், பாட்னா - 800 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆசிரியர் அறிவியல் மாநாட்டில் மதுரை ஆசிரியரின் கட்டுரை தேர்வு



அக்டோபர் 07,2009,00:00  IST
General India news in detail
கம்பம்: தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டில், மதுரையைச் சேர்ந்த ஆசிரியரின் ஆய்வு கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு குஜராத் மாநிலம், புவனேஸ்வரில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து 600 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள், ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்பட்டன.

 300 ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். 30 கட்டுரைகள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் இருந்து 30 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. 26 ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில் மதுரை மாவட்டம், பாப்புநாயக்கன்பட்டி கந்தசாமி வித்யாலயா பள்ளியின் ஆசிரியர் இளமாறன் சமர்ப்பித்திருந்த "விளிம்பு விளைவு தத்துவத்தை' மாணவர்களுக்கு கற்பிக்க உதவும் எளிய அறிவியல் கருவி என்னும் கட்டுரை, சிறந்த ஆய்வு கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டது.

கற்றல் கற்பித்தலில் புதுமை என்ற துணை தலைப்பில் இந்த தேர்வு நடைபெற்றது. தேனி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் சுந்தர் கூறுகையில்; "ஆசிரியர்களிடம் புதுமையான கற்பிக்கும் முறைகளை கண்டறிய இது தூண்டுகோளாக அமையும். தேர்வு செய்யப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்படும். அடுத்த தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது என்றார்.

கணக்குப் பிசாசுகள் (அறிஞர்கள்)

துயில், தூக்கம், உறக்கம், நித்திரை, உண்டமயக்கம் போன்றவைக்கும் கணக்கிற்கும் சம்பந்தமில்லை என்று சாக்ரடீஸ் பார்டி எழுதுகிறார்.


ஜேசன்சாக்ரடீஸ் பார்டி (கார்குலஸ் வார்ஸ்), பால் ஹாஃப்மன் (தி மேன் ஹூ லவ்டு ஒன்லி நம்பர்ஸ்,) ராபர்ட் கானிகல் (தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி) ஆகியவர்கள் கணிதப்பித்தர்களின் வாழ்விற்குள் துழாவி பல அடிப்படை உண்மைகளை வெளியே கொணர்ந்து மிகவும் சுவைபட எழுதிச் செல்வதை வாசித்தபோது உலகில் பிசாசு என்று ஒன்று இருக்குமேயானால் அது கணக்குப் பிசாசாக மட்டுமே இருக்க முடியும் என்றே எழுதத்தோன்றுகிறது. முதலில் கால்குலஸ் வார்ஸ் புத்தகம். நுண்கணிதம் என அழைக்கப்படும் கால் குலஸ் கணித முறை ஐசக் நியூட்டனாலும், ஜெர்மானிய கணிதவியலாளர் லீப்னிஸாலும் (Leilniz) ஒரே சமயத்தில் தனித்தனியே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 1690களில் தொடங்கி 1700களின் முற்பகுதியில் லீப்னிஸ் இறந்துபோகும் 1716 வரை நியூட்டனும், லீப்னிசும் இருவரில் நுண்கணிதத்தை முதலில் அடைந்தது யார் என்பது குறித்து ஒருவித கடும் யுத்தத்தில் உக்கிரமாக ஈடுபட்டதை உலகே கண்டு அது குறித்துவிவாதித்து அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

1665-66ல் நியூட்டன் நுண்கணிதத்தை தனது வானியல் கணக்கீடுகளுக்காக கண்டடைந்து அதற்கு பிளக்ஸியான்ஸ் அண்ட் ஃபுளூயண்ட்ஸ் என்று பெயர் வைத்தார். தனக்கே உரிய பாணியில் நியூட்டன் வாழ்நாளின் பெரும்பகுதி வரை அதைக் குறித்து வெளியிடாமல் ரகசியமாக நிறுத்தியே வைத்திருந்தார். ஒரு சில நட்பு வட்டத்திற்கு மட்டுமே அந்த புதிய கணித முறையை அறிமுகம் செய்தார். லீப்னிஸ் சற்றேறக்குறைய அதே ஆண்டுகளில் நுண்கணிதத்தை அடைந்து அதனை குறியீடுகளுடன் விரிவாக வெளியிடவும் செய்தார். லீப்னிஸ் வெளியிட்டது ஜெர்மனிமொழியில் நியூட்டன் இயங்கியது லத்தீன்மொழியில். ஆனால் நியூட்டன் மீது லீப்னிஸ் அலாதிமரியாதை வைத்திருந்ததையும் ஒரு சக கணித வியலாளராக அவரை மதித்து எப்போதுமே லீப்னிஸ் போற்றியதையும் பார்டி பதிவு செய்யத் தவறவில்லை. இருவருமாகப் பல விதமான கணித (நெருக்கடியான) சவால்களை ஒருவர் மீது ஒருவர் வீசி அவற்றிற்கு தீர்வுகளைக்காண பல இரவுகளை கழித்ததை வாசிக்கும்போது கணித உலகம் எவ்வளவு வினோதமானதென உணர முடிகிறது. 1717ல் நியூட்டன் தொடர்ந்து ஒன்பது நாட்கள் ஒரு நிமிடம் கூட உறங்காமல் இருந்துவிட்டதை தனது நண்பர் பாஷியோவுக்கு கடிதமாக எழுதுகிறார். இந்த புத்தகத்தின் தனிச்சிறப்பு இது கணிதம் மட்டுமே பேசாது அன்றைய காலகட்டத்தின் உலக அரசியல் களத்தையே நம் முன்வைப்பதுதான். நியூட்டனுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பாஷியோ லீப்னிசுக்கும் நண்பராகி இருவரிடம் ஒரு சராசரி சினிமா, (சீரியல்?) வில்லனாக சிண்டு முடிந்து கால்குலஸ் யுத்தத்தை தனது சொந்த நலனுக்காக நடத்தி இருமேதைகளையும் இளைத்து நூலாகிநொடித்துப் போக வைத்த கதை மிகவும் சுவாரசியமானது.

அடுத்து ‘திமேன் ஹ லவுடு ஒன்லி நம்பர்ஸ்’ பால் ஏர்டிஷ் (Panl Erdo”s) எனும் கணித வியலாளர் குறித்த வாழ்க்கை புத்தகம். பிரித்தானிக்காக என்சைக்ளோ பிடியாவை தொகுத்தவர்களில் இளையவரான பால் ஹாப்ஃமன் எழுதியுள்ள கணக்கு வாழ்க்கை. பால்எர்டிஷ் மிகப் பிரபலமான கணிதவியலாளர். ஹங்கேரிக்காரர். உலகிலேயே அதிகமான கணித ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். வாரத்திற்கு ஒரு முறை அபூர்வமாகத் தூங்குவார்.

பொதுவாகவே கணிதமேதைகள் ராக்கோழிகளாக ஏன் இருக்கிறார்கள் என்பதை யாராவது புள்ளி விவரத்துடன் ஆராய்ச்சி செய்தால் பரவாயில்லை. டாக்டர் யூலர் பற்றி பால்நாகின் எழுதிய புத்தகத்தில் கூட (Dr. Eulers Falbulous formula: cures many matha matical jlls) யூலர் ஒரு கணித சவாலை எடுத்து வேலை செய்ய ஆரம்பித்தால் பல நாட்கள் எந்த ஓய்வு ஒழிச்சலும் இன்றி ஒரு தொடர் வேலையாக செய்து முடித்துவிடுவார் என்று குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

தேற்றங்களைவிட கணித சவால்களாக, பெரிய கணக்குகளை உருவாக்கி அதற்கு தீர்வுகளைக் கொண்டு வருவதையே பால்எர்டிஷ் முன் வைத்து வாழ்கிறார். உலகம் முழுவதும் கணிதவியலாளர் மாநாடுகளில் பங்கேற்பது கணித தீர்வுகளை வழங்குபவர்களுக்கு தனது வருமானத்தை மொத்தமாகப் பகிர்ந்து வழங்கிவிடுவது. ஒரே சமயத்தில் மூன்று பல்கலைக் கழங்களில் பேராசியர் வேலை பதினேழுமொழி பேசி எழுதி சரளமாக வாசிப்பது நான்குபேப்பரில் வரிக்குவரி வளர்க்கப்படும் கணக்கை அடுத்த வரியில் மனதுக்குள் போட்டு தாவுவது என எர்டிஷ் உலகை எப்போதும் அதிர்ச்சிவைத்தியத்தி லேயே வைத்திருந்தார். தனது நாசா மற்றும் அணுகுண்டு, ராக்கெட் சோதனை எதற்குமே பயன்படமாட்டார் என்று தெரிந்தபின் அமெரிக்கா, பால் எர்டிஷ் தனது நாட்டிற்குள் நுழைய தடைவிதித்தது. காரணம்? அவர் சிவந்தசீனத்தை ஆதரித்தார். சோவியத் கணித மேதை சோபியா கொவெல்வ் ஸ்காயாவைப் பாராட்டி ஒரு சிறப்பு கணிதப்பேருரை ஆற்றினார். இறுதி வரை தனது கணித கோட்பாடுகளுக்காக எர்டிஷ்க்கு எந்த அங்கீகாரமும் வராது அமெரிக்க அரசு எவ்வளவோ முயன்றும் ஹாலந்தும், சுவீடனும் ஏன் ஜெர்மனியும் அவரைப் போற்றிப் பாதுகாத்து மகுடம் சூட்டின. எண்கோட்பாட்டியலின் சக்கரவர்த்தி பால்ஏர்டிஷ். தூயகணிதத்தின் கடைசி செல்லக் குழந்தை.

மூன்றாவது புத்தகம் டாக்டர் ராமானுஜனைப் பற்றியது. சீனிவாச ராமானுஜம் பற்றி ஒரு சராசரி இந்தியனுக்கு அவர் ஒரு கணிதமேதை என்பது மட்டும் தெரியும். ராபர்ட் கானிகல் செய்திருக்கும் அந்த மாமனிதனைப் பற்றிய தேடல் பாராட்டுக்குரிய ஒன்று. சென்னை போர்ட் டிரஸ்ட் வேலையின்போது அதன் மேலாளர் சீனிவாசன் உதவி இன்றி ராமானுஜம் கேம்பிரிட்ஜ் போயிருக்கவே முடியாது என்பதிலிருந்து, அவர் மட்டும் ஊறுகாயையும், வெத்திலை பாக்கையும் விட்டிருந்தால் முப்பத்தி இரண்டு வயதில் இறந்திருக்க வேண்டாம் என்பதுவரை பல தகவல்கள். டாக்டர் ராமானுஜனை, சீனிவாசராமானுஜ அய்யங்கார் என்றே எழுதுவது சற்று இடிக்கிறது.... ஆனால் ராமானுஜம், சிறுவயதில் நாலாயிர திவ்யபிரபந்தத்தின் நாலாயிரம் பாடலையுமே அட்சரம் பிசகாது மனப்பாடமாக சொல்ல முடிந்ததையும் அதற்கு ஈடாக நாலாயிரம் கணிதத் தேற்றங்களை உருவாக்கி மகிழ்ந்ததையும் வாசித்தால் நமக்குத் தெரியாத ராமானுஜனின் பல பக்கங்கள் பாக்கி இருப்பதைக் காணலாம்.

காகிதங்கள் தேவை. கணக்குப் போட்டு பார்க்க கத்தைகத்தையாக காகிதங்களைத் தேடி ஊர் முழுக்க ராமானுஜம் அலைந்ததை வாசிக்கும்போது மனசு வலிக்கிறது. ராமானுஜம் மட்டுமல்ல, ஆறு டெலிபோன் டைரக்டரிகளை ஒரே நேரத்தில் மனப்பாடமாக, எண் சொன்னால் பெயர் சொல்லி, பெயர் சொன்னால் எண்கூறும் பால்நியூமனும், பன்னிரண்டு வயதில் கணக்கிடும் இயந்திரத்தை வழங்கிய பாஸ்கலும், முதல் 5000 பகா எண்களை தலை கீழாகச் சொல்ல முடிந்த பிப்னாசியும் இந்த மூன்று புத்தகங்களின் வழியாகவும் நாம் அறிய முடிந்த கணக்குப் பிசாசுகளாக இருக்கிறார்கள்.

இந்தியா வந்து கணிதப்பேருரைகள் நிகழ்த்தி வருமானத்தை அப்படியே ராமானுஜத்தின் மனைவியிடம் நேரில் சந்தித்து ஒப்படைத்த பால் ஏர்டிஷ் பற்றி வாசித்து சிலிர்க்கும் அதேசமயம், முதலில் கணித முனைவர் பட்டம் வென்ற பெண் எலினா பஸ்கோபியா, முதலில் கணித விரிவுரையாளரான மரியா அக் எனசி பிரெஞ்சு புரட்சி கண்டெடுத்த கணித பெண்மேதை சோபின் செர்மயின், ஐன்ஸ்டீனின் சார்பு தத்துவத்திற்கு கணித நிரூபணம் வழங்கிய எம்மி நோத்தர் போன்ற கணித (பெண்) நிபுணர்கள் குறித்தும் நூல்கள் எழுதப்படக்கூடாதா என்று ஏக்கம் பிறக்கிறது. பால் ஹாஃப்மன், சாக்ரடீஸ் பார்டி மற்றும் ராபர்ட்கானிகல் ஆகிய மூவரும் கணித வரலாற்று நூலாசிரியர்கள் என்பதை மீறி இன்னொரு செய்தி. தற்போது அறிவியல் வரலாறு எழுத தனி படிப்பு வந்துவிட்டது. எம்.ஏ(சயின்ஸ்ரைட்டிங்) ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கா என்று டைப்செய்து இணையத்தில் துழாவினால் பார்க்கலாம். நம்ம ஊர்போல அஞ்சல் வழி பிஎச்டி, இணையதள கல்யாணம் எல்லாம் அங்கும் உள்ளதாகவே தோன்றுகிறது.

ஒரு விஷயம் உங்கள் ஜுனியர் யாராவது வீட்டில் 1330 குறளையும் அட்சரம் பிசகாமல் நாலடியார், சிறுபஞ்ச மூலம், பதிற்றுப்பத்து, பரிபாடல் மனனம், பெருக்கல் வாய்ப்பாடு தலை கீழாகச் சொல்வது, தூக்கத்தில் கேட்டாலும் நாடு தலைநகரம் காய்கறி விலைப் பட்டியல்... சொல்வது என அசத்துகிறாரா... கட்டாயம் ஒரு கணக்குப் பிசாசோடு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. எதற்கும் பால் ஏர்டிஷ் வாழ்க்கை நூலை (தி மேன் ஹூ லவ்டு ஒன்லி நம்பர்ஸ்) வாங்கி வீட்டில் வைக்கவும்.

இரா.நடராசன்  
புதிய புத்தகம் பேசுது  
முகவரி: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, சென்னை ‍- 18
தொடர்பு எண்: 044-24332424, ஆண்டு சந்தா: ரூ.120
 

Jun 8, 2011

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கருணாநிதி தொடங்கிவைத்தார்

திங்கட்கிழமை, டிசம்பர் 27, 1:44
சென்னை, டிச 27-

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வும் மனப்பான்மையும் உருவாக்குவதற்காக சென்னை பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் 1981-ம் ஆண்டு தன்னார்வ இயக்கமாக உருவாக்கப்பட்டது.
 
தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 1991-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மிக முக்கிய பங்காற்றியது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் அங்கமான தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1993-ம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை தமிழகத்தில் நடத்தி வருகிறது.

இந்தியா முழுவதிலும் உள்ள 10 முதல் 17 வயதுக்குட் பட்ட குழந்தைகள் தங்கள் அறிவியல் மனப்பான்மை யினையும், அறிவையும் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க ஒருங் கிணைந்த வாய்ப்பினை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உருவாக்கித் தருகிறது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமல்லாது இடைநின்ற குழந்தைகளும், பள்ளி சாரா குழந்தைகளும் பங்கேற்கும் வாய்ப்பினை இது அளிக்கிறது. இது எதிர்கால இந்தியாவைப் பற்றி ஒரு கனவினை குழந்தைகளிடையே உருவாக்குகிறது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைந்த கருபொருளை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கூட்டமைப்புடன் இணைந்து 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை நிலவளம் வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாது காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் 31-ந்தேதி வரை நடத்துகிறது.


இம்மாநாட்டில் மாநில அளவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 700 குழந்தை விஞ்ஞானிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களும், தெற்காசிய நாடுகளை சேர்ந்த 40 மாணவர்களும் பங்கேற்கின்றனர். இந்த 5 நாள் அறிவியல் திருவிழாவை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதிலுமிருந்து பல முக்கிய அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 31-ந்தேதி நடைபெறுகின்ற மாநாட்டு நிறைவு விழாவில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஆய்வுக் கட்டுரை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு



First Published : 11 Jun 2009 10:58:02 


 கம்பம், ஜூன் 10: தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.  அறிவியல் கல்வி குறித்து விவாதிக்கவும், எளிய அறிவியல் கருவிகளைக் கண்டறியும் ஆர்வத்தைத் தூண்டவும், தன்னிறைவுடன் கூடிய வளர்ச்சிக்கு தகுந்த செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசிய தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றக் குழு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், மனித வள மேம்பாட்டுத் துறை இணைந்து நடத்தும் தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு 2003 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டுக்கான பொது தலைப்பாக "புவிக்கோளத்தை புரிந்துகொள்வோம்' என்ற தலைப்பு அறிவிக்கப் பட்டுள்ளது.  அத்தோடு கற்றல் கற்பித்தலில் புதுமை, தேசிய கலைத் திட்டம் தொடர்பானவை, மனிதனின் கண்டுபிடிப்புகளின் விளைவுகள், தன்னிறைவுடன் கூடிய வளர்ச்சி ஆகியவற்றை துணைத் தலைப்பாக அறிவித்துள்ளனர்.  இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தங்களது சொந்த ஆய்வை ஜூன் 30-க்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் ஆய்வுகளுக்குரிய ஆசிரியர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க முடியும்.  இதற்கான பயணச் செலவு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அணைத்து வசதிகளும் செய்து தரப்படும்.  ஆய்வுக் கட்டுரைகளை பள்ளி ஆசிரியர்கள் மட்டும் இல்லாமல் ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவியல் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம்.  இந்த ஆண்டுக்கான தேசிய மாநாடு வரும் அக்டோபர் 1 முதல் 4 வரை புவனேஸ்வரில் நடைபெறுகிறது.  சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் விருதும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.  இதுதொடர்பான விவரங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்க தேனி மாவட்டச் செயலாளரும், சுருளிப்பட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளி ஆசிரியருமான சுந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அறிவியல் மாநாட்டிற்கு 26 தமிழக ஆய்வு கட்டுரைகள்

அறிவியல் மாநாட்டிற்கு 26 தமிழக ஆய்வு கட்டுரைகள்

-20-08-2009



கம்பம்: ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் அக்டோபரில் நடைபெறவுள்ள தேசிய அறிவியல் ஆசிரியர் மாநாட்டில் சமர்பிக்க தமிழகத்திலிருந்து 26 ஆசிரியர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேசிய அறிவியல் ஆசிரியர் மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கு ‘புவிக்கோளத்தை புரிந்து கொள்வோம்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களிடமிருந்து ஆய்வு கட்டுரைகள் இந்தியா முழுவதும் இருந்து வரவேற்கப்பட்டது. ஜூலை 25 வரை பீகார் மாநிலம் பாட்னா பல்கலை., பேராசிரியர் வர்மாவிற்கு, ஆய்வு கட்டுரைகள் அனுப்பி வைக்க ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளில், ஒரிசாவில் இருந்து 56, மகாராஷ்ரா, குஜராத் தலா 27, தமிழ்நாடு, ராஜஸ்தான் தலா 26, மத்தியபிரதேசம் 25, <<<உத்தரபிரதேசம் 22, ஆந்திரா 20, புதுச்சேரி 15, கேரளா 14,அசாம் 11, டில்லி எட்டு, பஞ்சாப், அரியானா தலா ஆறு , சட்டீஷ்கர் ஐந்து, மேற்குவங்கம் நான்கு , கர்நாடகா மூன்று, கோவா, காஷ்மீர் தலா இரண்டு, அருணாச்சல், இமாச்சல்,ஜார்கண்ட், மணிப்பூர், மேகலாயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் சுகாஷினியின் ‘தேனி மாவட்டத்தில் பூச்சிகொல்லி மருந்துகளின் பயன்பாடு’ என்ற கட்டுரையும், ராமநாதபுரம் ஆசிரியர் இருளாண்டியின் ‘பூமியும் அதற்கப்பாலும்’, வத்தலக்குண்டு ஆசிரியர் மகமுதா வின் ‘புவிக்கோளமும், பூமியும்’, மதுரை ஆசிரியர் ஞானசேகரனின் ‘பூகம்பத்திற்கு எங்கிருந்து ஆற்றல்’ என்ற கட்டுரை உள்ளிட்ட 26 ஆசிரியர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டுரைகள், புவனேஸ்வரில் வரும் அக்டோபர் ஒன்று முதல் நான்கு வரை நடைபெறும், இந்திய அளவிலான ஆசிரியர் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதிலிருந்து இந்திய அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களை மாநாட்டில் பங்கேற்க அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது.

கெத்தேசால் வாசிப்பு முகாம் மே 14--16,2011




 கெத்தேசால், மலைக் கிராமத்தில், வசிப்பு&வாசிப்பு முகாம்..! (அனுபவ பகிர்வு..!)
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்..! 
   நண்பர்களே. தமிழ் நாடு  அறிவியல் இயக்கம் என்ற ஒரு தன்னார்வல இயக்கம் சுமார் 30  ஆண்டுகளுக்கு முன் உருக்கொண்டது. இந்த இயக்கம் ஊர்ந்து, தவழ்ந்து, தளிர்/துளிர் நடை போட்டு இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை விழுதாகக் கொண்டு,ஆல மரமாக ஆழமாக வேரூன்றி நின்று  மக்களுக்குப் பல பணிகளைச் செய்கிறது. 

அதன் அடிப்படை நோக்கம் அறிவியல் மக்களுக்கே..!அறிவியல் நாட்டுக்கே..! அறிவியல் புதுமை செய்யவே..! என்ற கொள்கைளைக்
 கொண்டு பணிபுரிகிறது. இதன் தலையாய பணி, மக்களிடையே அறிவியல் உணர்வைப் பரப்புவதுதான்.இதன் தலைமையகம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ளது.


இந்த இயக்கம் நாட்டு மக்களுக்கு பல்வேறு தளங்களில் பல்வேறு பணிகளைச்
செய்து வருகிறது. குழந்தைகளுக்காக, நாம் வெளியே தூக்கி எறியும்
பொருள்களிலிருந்து அருமையான கைவினைப் பொருட்கள் செய்வதுடன்,
அதனைக் கொண்டே, எளிமையான அறிவியல் சோதனைகளைச் செய்து,
குழந்தைகளின் மனதில் அறிவியல் ஆர்வத்தைக் கொண்டு வருகிறது;
அறிவியலை எளிமையாக்குகிறது. பாட புத்தகத்தில் காணப்படும்
 பிழைகளை, கடின பாடங்களை கண்டறிந்து களைய தமிழ் நாடு
அரசின் கல்விப் பணியில் உதவுகிறது.

பிரேமானந்தா கொண்டுவந்த லிங்கம், சாயிபாபா வரவழைத்த விபூதி போன்றவற்றின் பின்னணியிலுள்ள அறிவியல் தகவல்களை விளக்கி,
 மக்கள் ஏமாறாமல் இருக்க வகை செய்கிறது.


ஆர்வமாய் இருக்கும் ஆசிரியர்களுக்கு முகாம் நடத்தி,
மாணவர்களை அன்புடன் மனித நேயத்துடன் நடத்தவும்,
ஒரு மாற்றுக் கல்வி முறையை போதிக்கவும் உதவுகிறது.இயக்க
நண்பர்களுக்கும், கல்வி பெறும் மாணவர்களுக்கும் வானவியல்,
சூழலியல், மரங்களை  & பறவைகளைப் பேணுதல், பூமியைப்
பாதுகாக்க நடத்தும் தகவல்கள்& நடவடிக்கைகள் போன்ற பல்வேறு
 தளங்களில் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பணி செய்கிறது அறிவியல் இயக்கம் .அறிவியல் புத்தகங்கள்பல தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன.



            த. அ.இயக்கப் பணிகள்..!
  பெண்களுக்காக இருபாலாரும் சமம் என்ற நோக்கில் சமம் இயக்கத்தை
 நடத்தி வருகிறது. இதில் பெண்களுக்கு அறிவியல் உணர்வு  , கைத்தொழில்,
 மூட நம்பிக்கை  போக்குதல், போன்றவை பயிற்றுவிக்கப் படுகின்றன. .
 மேலும் பெண்களுக்கான உடல் நலம் போதிக்கப் படுவதுடன், கிராமப் புற
பெண்களுக்கு நேரிடையாக இது கற்பிக்கப்  படுகிறது.

குழந்தைகளின் பருவ வயதில் ஏற்படும் பிரச்சினைகளையும்,
அதற்கான தீர்வையும் மக்களிடையே கொண்டு சென்று, நாட்டில்
நல்ல மனநலமுள்ள குடிமகனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
கருவுற்ற பெண்களுக்கான உடல்நலம் பேணப்பட்டு, அவர்களை
 நன்கு பராமரிக்க போதிக்கப் படுகிறது.

அவர்களுக்கு தேவையான தடுப்பு மருந்து, ஊசி போன்றவையும்
 ஏற்பாடு செய்யப்படுகிறது.பேரிளம் பெண்களுக்கு ஏற்படும்
மாதவிடாய் பிரச்சினைகள் , மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும்
 இன்னல்கள், அதனை எப்படி சமாளிப்பது, அதற்கான மருந்து போன்றவற்றையும் கூறுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கான, ஆராய்ச்சிகள்,
பள்ளிக் குழந்தைகளுக்கான மூன்று மாத அறிவியல் ஆய்வு செய்யும்,
  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடும்( National children's Science Congress), 
அது தொடர்பான செயல்பாடுகளும், அதன் முத்தாய்ப்பாக
, இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்  தலைநகரில்,  இந்தியாவின்
அனைத்து மாநில குழந்தைகளை அழைத்து, இளம் விஞ்ஞானி விருது
கொடுத்து அவர்களுக்கு உரிய பாராட்டு, அந்த  தேசிய மாநாட்டில் தரப்படுகிறது. அதில் குழந்தைகள் குவிக்கப் படுகின்றனர். 

 ஆசிரியர்களுக்காக  விழுது  என்ற காலாண்டிதழ்  நடத்தப் படுகிறது.
அத்துடன், இயக்க  உறுப்பினர்களுக்காக  சிறகு என்ற மாதப் இதழும் வெளிவருகிறது . தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தை சுருக்கமாக TNSF என்று கூறுவோம். இது குழந்தைகளுக்கான ஓர் அறிவியல் மாத இதழையும் நடத்தி வருகிறது.அதன் பெயர் துளிர்.மேலும் அறிவியல் தொடர்பான பல புத்தகங்களையும் வெளியிடுகிறது அறிவியல் இயக்கம். 

     புத்தக . வாசிப்பு முகாம்..!
     கடந்த ஓர் ஆண்டு காலமாக, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின்,
ஈரோடு மாவட்டக் கிளை , குழந்தைகளுக்கான மாற்றுக் கலவியைத் தரவேண்டும்  என்பதற்காக ஆசிரியர்களை அழைக்கின்றனர்.
அங்கே  வாசிப்பு முகாம் என்ற பெயரில் உண்டு உறைவிட முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது.மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் வருகின்றனர்.   


தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துவரும் பணிகளில் ஒன்று
 புத்தக வாசிப்பு இயக்கம்...! என்னடா இது.. புத்தகத்தை தனியாகத்தான் படிப்பார்கள்.. இதில் இயக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ஆம் நண்பர்களே..! 

புத்தகம் சுமந்து கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாய், மாட்டு வண்டியில், மிதிவண்டியில் என  வருவதை, அவற்றை தெருவின்
மந்தைகளில் அனைவரும் இணைந்து கூட்டாக அமர்ந்து  படிப்பதை
 தமிழ் நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி காலத்திலிருந்து
 ஓர்  இயக்கமாகவே நடத்தி வருகிறது.


அதன் ஒரு பகுதிதான், கர்நாடக எல்லையில் அமைந்துள்ள
 கெத்தேசால் என்னுமிடத்தில் நடைபெற்ற உறைவிட புத்தக
வாசிப்பு முகாம்.  ஈரோடு மாவட்டம்,நடத்தும்  இந்த
மூன்றாவது வாசிப்பு முகாமில் தமிழகத்தின் தூத்துக் குடி,
நெல்லை, தேனி, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல்,
 தர்மபுரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின்
பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

          வாசிப்பு முகாமின் துவக்கம்..காவிரியின்.துவங்கு முகத்தில்..!
    வாசிப்பு முகாம் முதல்பதிவு  பவானிசாகர் என்ற இடத்தில் 63 ஆசிரியர்களுடன்துவங்கப்பட்டது.இந்தமுகாமுக்கு ஆசிரியர்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைத்தது.  ஆனால் ஆசிரியர்களில் சிலர், பள்ளிகளில், நிர்வாகத்துக்குப் பயந்து,முகாமில் நடத்துவதாகச் சொன்ன பல விஷயங்களையும், குழந்தைகளை  அணுகும் முறையையும்  கடைப்பிடிப்பதில்லை.

ஆனால் 2011 ,மே 14 -16 நாட்களில் நடத்தப் பட்ட மூன்றாவது  வாசிப்பு முகாமும்,
 அதன் வாழிடமும்  ஒரு பிரத்யேக சிறப்பு வாய்ந்தது. இம்முகாமை,
 ஈரோடு மாவட்ட தலைவரும், தமிழ் நாடு அறிவியல் இயக்க செயலாளர்களில்
ஒருவரான முனைவர்.பேரா. மணி அவர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார்.

     ஏன் இந்த வாசிப்பு முகாம்..!
 குழந்தைகளை மையப்படுத்திய புத்தகங்களான,   குழந்தைகளைக் கொண்டாடுவோம்,
டோட்டோ சான் (ஜன்னலில் ஒரு சிறுமி), ஏன் டீச்சர் என்னைப் பெயில்லாக்கிட் டீங்க ? ,
முதல் ஆசிரியர், எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும்,எனக்குரிய இடம் எங்கே,
 போன்ற பல புத்தகங்கள் கூட்டாக வாசிக்கப் படுகின்றன.

முகாமில் கூட்டு வாசிப்பின்  பலன் தெரிகிறது. மேலும் என்ன புத்தகம்
 வாசிக்கப்பட வேண்டும் என்ற தகவல் பங்கேற்பாளர்களுக்கு முன்னமேயே
தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த புத்தகங்களைப் படித்து
உள்வாங்கிய பின், அதற்கான விமரிசனத்துடன்தான்  வருவார்கள்.
அத்துடன் வாசிப்பு முகாமில் புத்தகங்களை வாசித்தபின்,  புத்தகங்கள்  பற்றி
குழுவில் ஆழமாக  விரிவாக விவாதம் செய்யப்படும். ஆசிரியர்களின்
கருத்தும் முகாமின் அமர்வுகளின் சொல்லப்படும்.

கெத்தேசாலின்.. வனப்பு..!   
         கெத்தேசால் என்ற அழகான பசுமைசூழ் மலைக்கிராமம் ,
இது  ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.கடல் மட்டத்திலிருந்து 1224 அடி உயரத்தில் இருக்கிறது.

அடர்ந்த காடு. கெத்தேசால் சத்தியமங்கலத்திலிருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளைத்தாண்டி, 44 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு சோளகர்கள் என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர்.

இங்குதான் சந்தன வீரப்பன் இந்த கிராம மக்கள்மீது கோபம் கொண்டு 7 பேரை வெட்டிப்போட்டானாம்.அதன்பின்னர்தான் அரசு இந்தக் கிராம மக்களிடம், கருணை கொண்டு,ஓர் உண்டு உறைவிடப் பள்ளியைக் கட்டி,அங்கு வாழும் மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தந்து ஒரு நிரந்தர ஏற்பாடு செய்துள்ளது.

 இந்த நிலத்தை அவர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தலாம், உழுது பயிரிடலாம்.ஆனால் விற்பனை செய்ய மட்டும் உரிமை கிடையாது.
இதுதான் வனப்பகுதி செட்டில்மென்ட்(Forest settlement) எனப்படுகிறது .


        கெத்தேசால் மண்ணின் மைந்தர்கள்.. சோளகர்கள்..!..
 கெத்தேசால் கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வாழ்கின்றன.
எல்லோருக்கும் காட்டுப் பகுதி விவசாயம்தான் தொழில்.இந்த மக்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர்.இயற்கை விவசாயம்தான்.
அவர்கள் பயிரிடும் முட்டைகோஸ், பீன்ஸ், உருளை போன்றவைகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லையாம். உழுது வித்தைத்துவிட்டால் அவ்வளவுதான்.தானே வளரும் . ஆனால் காட்டுப் பன்றி போன்றவை வந்து அவற்றைத் தோண்டி தின்னும். 


அந்த ஊரில் 8 ம் வகுப்புவரைதான் குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பு உள்ளது. அதுவும் உங்களைப் போலே, தனியார்/ ஆங்கிலப் பள்ளி எல்லாம் கிடையாது.அரசுப் பள்ளிதான். . 8 க்கு மேலே படிக்கவேண்டுமானால், 40 கி.மீ கீழே இறங்கி சத்தியமங்கலம்    போக வேண்டும்.    நீங்கள் 10 பேர் சேர்ந்து போய்விட்டால்,மக்கள் பயந்து போய் ஓடிவிடுகின்றனர்.அதுவும் பெண்கள் போய் கதவை அடைத்து விடுகின்றனர். அவ்வளவு மிரண்டு போயிருக்கின்றனர்;பாதிக்கப்பட்டிருக்கின்றனர்  நமது பாதுகாப்பு காவல் துறையினரால்..! 

அந்த மக்களின் மேல் பாய்ந்துள்ள காயத்தின் வலி இன்னும் குறையவில்லை.
 அவர்கள் மேல் தொடுக்கப்பட்ட  பாலியல் ரணமும், அதன் தழும்பும் இன்னும்
 ஆறாத தடங்களாய் இருக்கின்றன. அச்சத்தின் விளிம்பிலேயே வாழ்கின்றனர் இம்மக்கள்.. இளம்பெண்களை அலாக்காக தூக்கிப் போய்விடுவார்களாம்.
அதனால், எங்களைப் பார்த்தும் பயந்துபோய் கதவைத் சாத்தினர்.


    சோளகர்களின்  .. வாழ்நிலை..!
    மே 14 ம் நாள் இரவு சோளகர்ளிடம் சென்று அவர்களின் அச்சத்தை நீக்கிப் பேசி, அவர்களின் சமூக வாழ்நிலை பற்றிய தகவலைச் சேகரித்தோம்.  இவர்களுக்கு பெரிதாக பெரிய நோய் எதுவும் வந்ததும் கிடையாது; பெரிய மருத்துவ மனைக்குப் போய் மருத்துவம் பார்த்ததும் இல்லை. எல்லாமே இயற்கை வைத்தியம்தான்.

அவர்களிடையே, ஏன் மகன் கலெக்டர் ஆகணும், கம்யூட்டர் எஞ்சினியர் ஆகணும்,டாக்டர் ஆகணும், என்ற பெரிதான ஆசைகள், கனவுகள், கற்பனைகள் இல்லை.இந்த குடும்பங்களிலிருந்து ஒரே ஒருவர்தான் பட்டப்படிப்பும், ஆசிரியருக்கான ( B.Sc., B.Ed.,) படிப்பும் படித்திருக்கிறார். இவர்களிடையே, நிலபுலம், காசு பணம் இல்லாவிட்டாலும்
 கூட சமூகத்தின் வரதட்சணைத் தாக்கம் இங்கும் விரவிக் கிடக்கிறது.
ஆனாலும் கூட ரொம்பவும் வெள்ளந்தியான மக்கள்தான் அவர்கள். 

ஆனால் இவர்களுக்கு அரசுதான் மாற்றாந்தாய் பிள்ளைகளாக ஓரவஞ்சனை செய்துவருகிறது. அந்த ஊருக்குப் போக ஒரு தார் சாலை கூட கிடையாது. மண் பாதைதான். .அரசின் குடிநீர்க்குழாய்கள் இல்லை. சுனைநீரும் லாரி கொண்டுவரும் நீரும்தான்.அரசு வண்ணத்தொலைக் காட்சி இருக்கிறது.சில வீடுகளில் dish  antenna இருக்கிறது.

  கெத்தேசால்..நோக்கிப் பயணம் ..பயணம்  ..!
 முகாமின் பங்கேற்பாளர்கள் அனைவரும்  ஒரு பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர்.ஆனால் அவர்களின் வயிற்றுக்கு விருந்து படைக்க 8 பேர் கொண்ட குழு ஒன்று,முதல் நாளே போய்விட்டது..! ஏன் தெரியுமா? அங்கு ஒரு டீக்கடை கூட கிடையாதே..!

செவிக்கு விருந்து தருவதற்காக, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து கருத்தாளர்கள் அழைக்கப்பட்டனர்.அவர்கள், பாரதி புத்தகாலய பொறுப்பாளர்  நாகராஜ்,நூல் விமரிசகர்,  எழுத்தாளர்
பேச்சாளர்  மற்றும் பாடகரான  கமலாயன் &ஷாஜகான்(இவர் கவிஞரும் கூட).
மற்றும் தமிழ் நாடு முற்போக்கு சங்கத்தின் பொதுச்செயலரும் எழுத்தாளரான, ச. தமிழ் செல்வன்,
இயற்கையியளாளர் முகமது   அலி,கல்வியாளர்கள் பேரா. ராஜு ,பேரா. விஜயகுமார்,தமிழ் நாடு அறிவியல் இயக்க செயலாளர் பேரா. மணி(ஒருங்கிணைப்பு) மற்றும் பேரா.மோகனா
கலந்துகொண்டனர்.இதில் குழந்தைகள் 8 பேரும் இருந்தனர் என்பது ஒரு வித்தியாசமான நிகழ்வாகும். 



        கோடை வெய்யிலில், இளைப்பாறிய.. அறிவியல் ஆர்வலர்கள்..! 
 கெத்தேசால்கிராமத்தில்,  பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி,நடத்தப்பட்ட ,3 நாட்கள் உறைவிட  மாநில புத்தக வாசிப்பு முகாம்,
 தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,ஈரோடு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்டது.
இதில் சுவாரசியமான, விஷயம் என்ன தெரியுமா? இங்கு நீங்கள் அலைபேசி மூலம் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது நண்பரே..! 

அப்பாடா குடும்ப பந்த்தத்திலிருந்து இரண்டு நாள் விடுதலை என்கிறீர்களா ?என்ன நினைத்தாலு சரி நண்பா..!
இதில்  .குழந்தைகளுக்கான புத்தகங்கள்  முதல் ஆசிரியர், 
வாசித்தாலும் வாசித்தாலும்  தீராத புத்தகம் (இயற்கையை நேசித்தல் தொடர்பாக..அறிதல் தாக்கமாக),எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கிட்டீங்க (ஷாஜகான்) ,,பள்ளிக் கூட தேர்தல்(பேரா.மணி), டோட்டோசாண்(ஜன்னலில் ஒரு சிறுமி), ஓய்ந்திருக்கலாகாது  .. போன்ற புத்தகங்கள்
கூட்டாக வாசிக்கப்பட்டு விவாதம் செய்யப்பட்டன.

இதில் குழந்தைகளை நேசித்தல்,அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல்,
குழந்தை மலர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், அவர்களின் குறும்புகளை ரசித்தல்அதன் பின்னணியிலுள்ள அவர்களின் தேடல், அறிவு போன்றவற்றை தெரிந்து நடப்பதற்காக ஆசிரியர்களுக்கு உணர்த்த வேண்டிதான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


    முகாம்.. பங்கேற்பாளர்கள்  ...!
     வாசிப்பு முகாமில்  74 மனித  நேயர்கள்( 8 பெண்கள் +8 குழந்தைகள் உட்பட) பங்கேற்றனர்.இந்த முகாமில் ஓர் அற்புதமான ஒரு முரண்தொடை இருந்தது.! என்ன தெரியுமா? 

வாசிப்பு முகாமின் பங்கேற்பாளர்களில், 6 பேர் மாற்றுத்திறனாளிகள்  /பார்வைத் திறனற்றவர்கள்.பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள். அவர்களில் இருவர் கல்லூரிப் பேராசிரியர்,ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியர்.மூவர் ஆசிரியர்கள், இவர்கள் அனைவரும்
மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களில் ஒருவரான ஆத்தூர்அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முருகேசனைப் மாணவர்கள் பக்கம், பக்கமாய் பாராட்டி குவித்திருக்கின்றனர். அவர் பிறந்ததும் அவரைக் கொல்ல குடும்பத்தினர் திட்டமிட்டனராம்.


 அவரது தந்தையும், தாயும் அந்த யோசனைக்கு ஒத்துக் கொள்ளாமல்,
அவரைக் காப்பாற்றி வளர்த்தனராம். அவரின் தாய், முருகேசனை அணுவளவும் பிரியமாட்டாராம்.காரணம்  , கொஞ்சம் பிரிந்தாலும், குடும்பம் அவரைப் போட்டுத் தள்ள திட்டமிட்டு இருந்ததாம்.அவரது விளையாட்டுத்தோழர்கள் கல்லும், குச்சியும்தான். இவைகளுடன்தான் இவர் இளவயதில் பேசுவாராம்;விளையாடுவாராம்.  9 வயதில்தான் பள்ளி சென்றார் ஒரு பெரியவர் உதவியுடன் மற்ற ஆசிரியர்கள் செய்யாத அளவு மாணவர்களிடம், அறிவுபூர்வமாக  பல உதவிகள் செய்வாராம்.

முகேசனின் துணைவியும் பார்வை இழந்தவரே..! அவர்களின் பெண்மகவு..
அழகான கயல் விழியுடன் உருட்டி உருட்டி விழித்து பெற்றோரை
தனது கொஞ்சு மொழியால் அன்பால் கட்டிப் போடுகிறது..!


     கருத்தாளர்கள்..!
   முகாம் மே 14 ம் நாள் காலை 11 .30 அளவில்,பாரதி புத்தகாலய பொறுப்பாளர் திருமிகு.நாகராஜ் தலைமையில் திருமிகு .கமலாலயனின் துவக்க உரையுடன் களை கட்டியது. திருமிகு கமலாலயன் பொதுவான வாசிப்பு,வாசிப்பின் முக்கியத்துவம் போன்றவற்றை சுவைபட எடுத்து பங்கேற்பாளர்களிடம் படைத்தார்.

மதிய உணவுக்குப்பின் முகாம் பங்கேற்பாளர்கள் உறங்கச் செல்லாமல், முதல் ஆசிரியர் மற்றும்  பள்ளிக்கூட தேர்தல்  என்ற புத்தகங்களை  7 குழுக்களாகப் பிரிந்து,வாசித்து, விவாதமும், விமரிசனமும்,
கருத்துப் பரிமாற்றமும் செய்தனர். குழுக்களின் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.

அன்றிரவுதான், கெத்தேசால் வாழ் சோளகர் இன மக்களிடம் பேசி, சிரித்து, உறவாடி, உணவுண்டு,அவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்நிலை பற்றி அறிந்தனர்.


       
      மனம் கவரும்... காலை வேளை..!
     கெத்தேசால், மே15ம் நாள் காலை அறிவியல் இயக்க நண்பர்களையும் இணைத்துக்கொண்டு குதூகலமாய் விடிந்தது.  முகாமுக்கு வந்த ஆர்வலர்கள், அங்கிருந்த ரேஞ்சர் துணையுடன், மலை ஏற்றத்துக்கு, கொஞ்சம் உப்பையும் பொட்டலம் கட்டிக் கொண்டு கிளம்பினர். உப்பு எதற்கு என்கிறீர்களா?

வழியில் நம் மேல் ஆசையுடன் ஒட்டி பயணம்
செய்ய விரும்பும் அட்டையை, நம் உடம்பிலிருந்து பிரித்து எடுக்கவே .. இல்லையெனில், சீரக அளவில் நம் மேல் ஒட்டும் அட்டை, கொஞ்ச நேரத்தில், நம் உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி, சும்மா கும் என்று கொழுத்து,உங்கள சுண்டு விரல் அளவுக்கு உப்பிவிடுவார். உப்பிய/ஒட்டிய  அட்டையை   பிரித்தெடுக்க அந்த இடத்தில் உப்பைத் தூவ வேண்டும்.


 நிறைய பேர் அட்டையைச் சுமந்து கொண்டு பயணம் செய்தனர். உப்பு போட்டு
அட்டையை எடுத்துவிட்டாலும், அந்த இடத்திலிருந்து இரத்தம் நிற்காமல் வழியும்.அறிவியல் இயக்க மக்கள் சுமார் 2 மணி நேரம்மலை ஏற்றத்தில்  ரொம்பவும்
சந்தோஷப்பட்டனர்.ஏனெனில் விலங்குகள் வந்து சென்ற தடங்களிலேதான்
  நடந்து போனோம். அங்கே கிழே கிடக்கும் அவைகளின் கழிவுகளிலிருந்து
அங்கே, வந்து போனவை, காட்டுப்பூனை, செந்நாய், நரி,சிறுத்தை, கரடி என்று
 சொன்னார் ரேஞ்சர் . . அன்று அதிகாலை வந்து போன, யானை மற்றும்
காட்டு மாடுகளின் கால்தடமும் பார்த்தோம். கால் நடைகள் மேய்ந்த பின்,
மீண்டும் முளைக்கும் புல், கடினமாக இருக்கும் என்பதாலேயே,
அப்பகுதிகளில் தீ வைக்கப் படுகிறது. அதன் பின் வளரும் புல் மெதுவாக இருக்குமாம்.
மேலும், தீ வைத்த பின்னர்தான், சில மரங்களின் கொட்டைகள் அதன்
 விதையுறைத் தூக்கத்திலிருந்து வெளி வந்து முளைக்கும்.

     வாசிப்பின் சூட்டில் விவாதம்..! 
    பின்னர் முகாமுக்குத் திரும்பி, குளித்து காலை உணவருந்திய பின்,
 ஏன் டீச்சர் என்னைப் பெயிலாக்கிட்டின. (ஷாஜகான்), முதல் ஆசிரியர், ஓய்ந்திருக்க லாகாது என்ற  புத்தகங்களுடன், அடுத்த அமர்வுக்கான, வாசிப்பின் தேடலை, விவாதம், கருத்துரையுடன்
இணைந்தே நடத்தினர். வாசிப்பும் விவாதமும் கன ஜோராய் போய்க் கொண்டே இருந்தது.

இயற்கையியலாளர் திருமிகு முகமது அலி, நாம் எப்படி இயற்கையைமோசமாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம், எப்படி சரி செய்ய வேண்டும் என்பதனை ஆர்வலர்களுக்கு
 மிக எளிய முறையில் எடுத்துரைத்தார்.பின் மதிய உணவை அந்த மலைப்பாங்கான ,மேடு பள்ளம் உள்ள பச்சை பசேல் என்ற மரகதப் புல் தரையில் அமர்ந்து சந்தோஷமாய் பகிர்ந்துண்டனர்.
      வாழும் மண்ணைப் போற்ற வேண்டிய பாடல்..! 
     மதிய அமர்வுக்குப் பின், அனைவரும் , குழந்தைகள் உட்பட வட்டமாக  நின்று, பிங்க் பாங்கு  என்ற நினைவு கூறும் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர். அதன் பின் பங்கேற்பாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.திருமிகு கமலாலயனின்,வாழும் மண்ணை இழந்து விட்டால் அடைய முடியுமா பாடலுக்குப் பின், கவிஞரும், எழுத்தாளருமான, திருமிகு. ஷாஜகான் வாசிப்பும், குழந்தைகளை மையப் படுத்திய
கல்வி பற்றி சிரிக்க, சிரிக்க பேசினார். இரவு முடிந்தாலும் கூட, அறிவியல் ஆர்வலர்கள் ஆர்வ மிகுதியுடன் இரவு வானை நோக்கினர்.

 வடக்கே உள்ள சப்த ரிஷி மண்டலம், அதிலுள்ள இரட்டை விண்மீன்களான
வசிஷ்டர், அருந்ததி விண்மீன்கள், உச்சி வானில் தெரிந்த சிம்மம் விண்மீன் தொகுதி, அதன் கீழே உள்ள கன்னி ராசி தொகுதியும், அதிலுள்ள சித்திரை விண்மீனும்,தெற்குத் திசையின் வழிகாட்டியான திரிசூலம்/தெற்குச் சிலுவை, தென் மேற்கில்தெரிந்த அகத்தியர் போன்றவற்றை,திருமிகு மோகனா, பங்கேற்பாளர்களுக்கு காட்டினார்.திருமிகு உமாசங்கர் இந்த விண்மீன் தொகுதிகளில் இருக்கும் விண்மீன்களையும்,சனிக்கோளையும் தொலை நோக்கி மூலம், பங்கேற்பாளர்களுக்கு அருகே அழைத்து வந்து களிப்பூட்டினார்.

   தாலாட்டித் தழுவும், குளிரின் இதம்..!
    கெத்தேசால் மலைப் பின்னணியில் இரவின் இதமான குளிரும்,
முழு நிலவு நிலையை எட்டியுள்ள சந்திரனின் பால் ஒளியும், கொசுத் தொல்லையற்ற பள்ளிவளாகமும்  ,மக்களைத் தாலாட்டி நிம்மதியாய் உறங்க வைத்தன.ஆனாலும் கூட, மறுநாள் விடிகாலையில் உலகைக் காணப் புறப்பட்ட செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி கோள்களைக் காண , விடிகாலை 4 மணிக்கே மக்கள் எழுந்துவிட்டனர்.
அது மட்டுமா? அப்போது தென்பகுதி வானின் தொடு வானிற்கு கொஞ்சம்
மேலே உள்ள, தனுசு விண்மீன் தொகுதி, அதிலுள்ள பூரம்,உத்திரம் விண்மீன்கள்,தனுசு தொகுதிக்கு வலப்புறம் உள்ள, நம் பால்வழி மண்டலத்தின் மையம், அதன் அருகிலுள்ள புகை போன்ற பால்வழி மண்டலம், தென் மேற்கில் தெரிந்த விருச்சிக விண்மீன் தொகுதி அதிலுள்ள, அனுஷம்,கேட்டை, மூலம் விண்மீன்கள் போன்றவற்றையும்,கோள்கள் தெரியும் மீனம் மற்றும், மேஷம் தொகுதியின் அசுவினி, பரணி விண்மீன்களையும் பார்த்து மகிழ்ந்தனர். அந்தப் பகுதியில் அதிகமான மின்மாசு இல்லாததால்தான் இத்தனை விண்மீன்களையும் பார்க்க முடிந்தது.

குழந்தைக்கான .. பங்களிப்புக்கள்..!
 முகாமுக்கு வருகை புரிந்த குழந்தைகளை மகிழ்வுடன் சோர்வின்றி  வைத்திருக்க,அறிவியல் ஆர்வலர்கள் வந்திருந்தனர். அவர்களுக்காக திருமிகு. உமாசங்கரும்,காங்கயம் சக்திவேலும்,  செய்து காண்பித்த அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா,
போன்றவை குழந்தைகளை களிப்பில் ஆழ்த்தின. மேலும் காலை வானில் தெரிந்த செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி கோள்களையும்,நமது சூரிய மண்டலம் வசிக்கும்

பால்வழி மண்டலத்தையும் சாதாரணக் கண்களாலும், இரு கண் நோக்கியாலும்,தொலை நோக்கி மூலமும்  பார்த்து மகிழ்ந்தனர். இரவில்  நில
வையும் அதன் மேடு பள்ளங்களையும், சனி கோளையும், அதன் வளையத்தையும்,பார்த்துசந்தோஷப்பட்டது குழந்தைகள்  மட்டுமல்ல..!
 பங்கேற்பாளர்களும்தான்..!    "
  

  கெத்தேசாலின் விடிகாலை நேரம். அனைவரும் இருகண் நோக்கி மூலமும்,

 தொலைநோக்கி மூலமும்,ட்தொடுவானின் அருகே பளிச் சென தெரியும்,

 வெள்ளிக் கோளையும், கொஞ்சம் உயரே வெள்ளையாய் தெரியும்

வியாழனையும்  வெள்ளிக்கு கீழே தெரியும் புதனையும்,

வெள்ளி வியாழனுக்கு இடையே தெரிந்த செவ்வாயையும் பார்த்துப்
பரவசித்தோம்  அது மின்னொளி அதிகம் இல்லாத கிராமமாகையால், நமது சூரிய குடும்பம் வசிக்கும்இருக்கும் பால்வழி மண்டலத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். இது ஓர் அரிதான நிகழ்வே..!"


      குழந்தையை ..மையப்படுத்திய..கல்வி..! 
     மூன்றாம் காலையும் மக்கள் சோளகர் குடியிருப்பு, மலை ஏற்றம், அவர்களின்நீர் பிடிப்பு இடம் எனப் பிரிந்து கெத்தேசாலை  வலம் வந்தனர். அங்குள்ள ஒரு கடையில்நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் சின்ன நெகிழி பைகளில் தொங்கின.. பேர் & லவ்லி (Fair& Lovely ))உட்பட. காலை 6 மணிக்கே கடை திறக்கப்பட்டுவிடுகிறது.
பின்னர் மீண்டும் மாற்றுக்கல்வியை முன்னிறுத்தி  வாசிப்பும் , விவாதமும் தொடர்ந்தன.திருமிகுமோகனாவின் வாழ்த்துரைக்குப் பின், எழுத்தாளர் ச. தமிழ் செல்வன்,இன்றைய பள்ளிக் கல்வி முறையும், அதன் மாற்றும் பற்றி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல் செய்தார். விவாதம் மதிய உணவின் போதும் கூட நீண்டது.

     பங்கேற்பாளர்களின்.. பகிர்வும்  ..பகிர்மானமும்..! 
     முகாமின் நிறைவுக்கு, பேரா. ராஜூ தலைமை ஏற்று சிறப்பு செய்தார்.
.அப்போது பங்கேற்பாளர்களின் தங்களின் பின்னூட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.பெரும்பாலோர் இப்படிப் பட்ட முகாம்களே, ஆசிரியர்களின்ஆழ்மனத் திறவுகோலாக செயல்படுகிறது என்று தெரிவித்தனர்.இம்முகாம் வழியே, நிஜமான நல்லாசிரியர்களை
 இனம் காண முடிகிறது என்றும் சொன்னார்கள்.

இந்த முகாம், ஆசிரியர், மாணவரிடையே நல்ல உறவும்  , புரிதலையும் உருவாக உதவும் என்று நம்பினர்.முகாமில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை, கல்வி பயிலும் சின்னச் சிட்டுக்களுக்கு அர்ப்பணிப்பாக செய்கிறோம் என உறுதி அளித்தனர். தமிழ் நாட்டில் வாழும் மற்ற ஆசியர்களுக்கும் இப்படி ஒரு கடமையும், அன்பு உள்ளமும், பிஞ்சு மாணவர்களிடம் வரவீண்டும் என்றும் உரைத்தனர்.

 பார்வைத் திறனற்ற பேரா. முருகேசன், குழந்தைகளை அடித்த பின் வீட்டுக்குக்
 சென்று அதே அடியை உங்கள மேல் போட்டுப் பாருங்கள், வலியின் வேதனையும், துக்கமும் தெரியும் என்று கூறினார்.  இதே போன்ற முகாம்கள், இனி வரும் காலத்தில்,  சென்னை, பாண்டி,சேலம், நெல்லை, மதுரை போன்ற இடங்களில் மண்டல முகாமாக நடத்த வேண்டும் என்றும் விவாதம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் வாசிப்பு முகாமின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது. முழுமையாக, இந்த புத்தக வாசிப்பு முகாம், பங்கேற்பாளர்கள் அனைவரையும் ஒருசேர   ஈர்த்த காந்தப் புலன்  என்றே கூற வேண்டும்.  
-
 என்று தோழமையுடன்,
மோகனா