முதல் பக்கம்

Jun 23, 2011

எதுக்கு பள்ளிக்கூடம்?


திங்கள், 10 ஜனவரி 2011 11:50
 
எதிர்பார்த்ததுதான்.
நான் பள்ளியில் நுழையும்போது ஏழெட்டு பேர் அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்தார்கள். வணங்கினார்கள். வணங்கினேன்.
"தலைமை ஆசிரியர் வரட்டும். பேசிக்கலாம்" சொல்லிவிட்டு கையொப்பமிட்டு விட்டு ஆசிரியர் அறைக்குப் போய் விட்டேன். நாங்கள்தான்  வரச் சொல்லியிருந்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் மதியம் மூன்று மணிபோல பதினோராம் வகுப்பு பெண் குழந்தைகள் அலறிக் கொண்டு ஓடி வந்தனர்.
"சார், சிலம்பு  தண்ணியப் போட்டுட்டு வந்து வாந்தி எடுத்துகிட்டு கிடக்கிறான், சார்."
பயமும் அழுகையுமாய் நின்றார்கள். வகுப்புக்குப் போனோம். பெண் பிள்ளைகள் வகுப்பிலிருந்து வெளியேறி மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள். மாணவர்கள் வகுப்புக்குள்ளேயே சுவரோரமாய் ஒதுங்கிக் கிடந்தார்கள்.
மூக்கைப் பிடித்துக் கொண்டோம். தாறுமாறாய் விழுந்து கிடந்தான். தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் செல்வத்தைப் பார்த்தார். பொருளறிந்த செல்வம் ஆட்டோவிற்கு ஏற்பாடு செய்தார்.
ஆடோவில் தூக்கிப் போட்டு பையனை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். பணியாட்களைக் கொண்டு வகுப்பைக் கழுவி சுத்தம் செய்தோம். மிரண்டுபோய் நின்ற பெண்பிள்ளைகளிடம் சென்ற தலைமை ஆசிரியர் "பயப்படாதீங்கம்மா, நான் பார்த்துக்கிறேன்" என்றார்.
"எப்பப் பார்த்தாலும் இப்படித்தான் சார்.  பான்பராக் போடுவது, தண்ணியடித்துவிட்டு வருவது என்று ரகளை சார்," கொதித்துப் பதறினார்கள்.
"சரி, நான் பார்த்துக்கரேம்மா. நீங்க அப்பவே சொல்லியிருந்தா கண்டிச்சிருப்பேன்ல,"
"சொன்னாத் திட்டுவான்னு பயம் சார்"
"சரி, சரி, நான் பார்த்துக்கறேன்" என்றவர் "கொஞ்சம் கூட வா எட்வின்" என்றார்.
அதை அவர் சொல்லியிருக்கவே தேவையில்லை.
"என்ன செய்யலாம். ஒரு ஸ்டாப் மீட்டிங் போடலாமா?"
"போடாலாம்னே. நாளைக்குப் போடுவோம். நாமளும் பதறவேண்டாம்."
"ஆமாம் சார். அதுதான் சரி." என்று நான் சொன்னதை ஆமோதித்தார் கனகராஜ் சார்.
"நாளைக்கு உணவு இடைவேளையில் ஸ்டாப் மீட்டிங். சர்குலர் ரெடி பண்ணுங்க."
"சரிங்கண்ணே" என்றேன்.
அடுத்த நாள் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர். அவர்களது கொதிநிலை அதிகமாக இருந்தது. அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இறுதியாக பேசிக்கொண்டு வந்து எல்லோரும் ஒரே குரலெடுத்து சொன்னார்கள்,
"அவனுக்கு டி.சி யக் குடுங்க சார். இல்லேன்னா நாங்க எங்க புள்ளைங்க டி.சி.ய வாங்கிட்டு வேற பள்ளிக்கூடம் போய்விடுவோம்," எனப் பொரிந்தனர். மிகுந்த பொறுமையோடும் அக்கறையோடும் அவர்களை அணுகிய தலைமை ஆசிரியர் "பயப்படாதீங்க. எனக்கும் இருபது வயசுல ஒரு பொண்ணு இருக்கா. உங்க வலி என்னன்னு எனக்கும் தெரியும். நான் பார்த்துக்கிறேன். நம்பிப் போங்க" என்றார்.
கட்டுப்பட்டார்கள், கலைந்து போனார்கள். மதியம் கூடிய ஆசிரியர் கூட்டத்திலும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்றே ஏக மனதாய் முடிவெடுக்கப் பட்டது. அவன் பள்ளிக்கு வரவில்லை. அவனது பெற்றோரை வரச்சொல்லியிருந்தோம். அவர்களுக்கு வேண்டியவர்களை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தலைமை ஆசிரியர் வந்ததும் வணங்கியிருக்கிறார்கள்.
"கொஞ்சம் பொறுங்க, பிரேயர் முடிஞ்சதும் கூப்பிடறேன்."
"சரிங்க சார்"
வகுப்புகள் தொடங்கியதும் சில ஆசிரியர்களை அழைத்தார் தலைமை ஆசிரியர். அந்தப் பையனது பெற்றோர்களையும் வரச் சொன்னார்.
"உங்கப் பையன் என்ன காரியம் செஞ்சிருக்கான் தெரியுமா?"
"கேள்விப் பட்டோங்க சார் இனிமே இப்படி நடக்காமப் பார்த்துக்கறோம் சார். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார். அவன் செஞ்ச தப்புக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம்."
"ஆயிரம் பொம்பளப் பசங்க படிக்கிற பள்ளிக்கூடம் இது. உங்கப் பொண்ணு இங்க படிச்சா  சும்மா விட்டுடுவீங்களா?"
"தப்புதாங்க, தயவு பண்ணி மன்னிச்சுக்கங்க சார்."
இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருமணி நேரம் நீண்டது. எப்படியாவது மாற்றுச் சான்றிதழை வழங்கிவிட வேண்டும் என்பதில் நாங்கள் பிடிவாதமாய் இருந்தோம். இல்லாது போனால் வருங்காலத்தில் மாணவர்களிடம் பயம் இருக்காது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அப்போதுதான் பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் சமாதானமடைவார்கள் என்பதுதான் எங்கள் எண்ணம்.
அவர்களோ என்ன செய்தேனும் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றி சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள். இறுதியாக வேறு வழியேயின்றி உரத்த குரலெடுத்து தலைமை ஆசிரியர் சொன்னார், "வேற வழியே இல்ல, டி.சி ய வாங்கிட்டுப் போங்க."
அதுவரை கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணீரோடு சுவரோடு சுவராய் சாய்ந்து நின்று கொண்டிருந்த அவனது அம்மா வெடித்தார், "கொடுங்க சார், ஏம்புள்ள எப்படியோ நாசமாப் போகட்டும். நீங்க ஒங்க பள்ளிக்கூடத்தக் கட்டிக்கிட்டு நல்லா இருங்க"
"என்னம்மா பேசுற நீ"
கூட வந்தவர்களும், "நீ செத்த சும்மா இரும்மா. நாங்க பார்த்துக்கறோம், கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு நில்லு," என்றனர். இந்த அம்மாவின் பேச்சினால் காரியம் கேட்டுவிடக் கூடாது என்று பயந்தனர்.
"உடுங்கய்யா எல்லோரும். ஏம்புள்ள எப்படியோ  நாசமாப் போகட்டும்" மீண்டும் வெடித்தார்.
"ஓம் பய என்ன செஞ்சிருக்கான். நீ என்னா பேசுற" தலைமை ஆசிரியர் கேட்கவும் "அவன் யோக்கியன்னா சார் சொல்றோம். அவன் குடிச்சுட்டு பள்ளிக்கூடத்துக்கு மட்டுமா சார் வரான். தண்ணியப் போட்டுட்டுதான் பல நேரம் வீட்டுக்கும் வரான்."
"அப்பா கண்டிச்சு வைக்க வேணாமா?"
"கண்டிச்சுதான் வைக்கிறேன் சார். ஆனா வீட்ட விட்டு வெளிய துரத்துல"
இதற்கு அடுத்து அந்த அம்மா பேசியதுதான் எங்களை அதிரச் செய்தது.
"வீட்டுக்கு குடிச்சுட்டு வரானேன்னு என்னைக்காச்சும் அவங்கிட்ட 'இப்படிக் குடிச்சுப் புட்டு வீட்டுக்கு வாரயே யாரடா ஒன்னோட கிளாஸ் சார், அவர கூட்டிட்டு வான்னு என்னைக்காவது சொல்லியிருக்கேனா சார்"
"கிறுக்கு புடிச்சுருக்காமா ஒனக்கு?"
"கெட்டுப் போற புள்ளைங்கள வீட்டுக்கு அனுப்பிட்டு மத்தப் புள்ளைங்களுக்கு பாடம் நடத்தறதுக்கா சார் ஸ்கூலு? கெட்டு சீரழியிற பசங்கள நல்ல வழிப்படுத்தி திருத்தற‌துக்குத்தான் சார் பள்ளிக்கூடம், சம்பளம் எல்லாம்" அந்த
அம்மாவை இழுத்துக் கொண்டு போனார்கள்.
பள்ளிகளில், கல்லூரிகளில், ஆசிரியர் பயிற்சியில் விளங்காத ஏதோ ஒன்றை அந்த அம்மாவின் பேச்சு தெளிவுபடுத்தியது.
- இரா.எட்வின் ( eraaedwin@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
thanks:keetru.com

No comments:

Post a Comment