முதல் பக்கம்

Jun 8, 2011

கெத்தேசால் வாசிப்பு முகாம் மே 14--16,2011




 கெத்தேசால், மலைக் கிராமத்தில், வசிப்பு&வாசிப்பு முகாம்..! (அனுபவ பகிர்வு..!)
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்..! 
   நண்பர்களே. தமிழ் நாடு  அறிவியல் இயக்கம் என்ற ஒரு தன்னார்வல இயக்கம் சுமார் 30  ஆண்டுகளுக்கு முன் உருக்கொண்டது. இந்த இயக்கம் ஊர்ந்து, தவழ்ந்து, தளிர்/துளிர் நடை போட்டு இன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை விழுதாகக் கொண்டு,ஆல மரமாக ஆழமாக வேரூன்றி நின்று  மக்களுக்குப் பல பணிகளைச் செய்கிறது. 

அதன் அடிப்படை நோக்கம் அறிவியல் மக்களுக்கே..!அறிவியல் நாட்டுக்கே..! அறிவியல் புதுமை செய்யவே..! என்ற கொள்கைளைக்
 கொண்டு பணிபுரிகிறது. இதன் தலையாய பணி, மக்களிடையே அறிவியல் உணர்வைப் பரப்புவதுதான்.இதன் தலைமையகம் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ளது.


இந்த இயக்கம் நாட்டு மக்களுக்கு பல்வேறு தளங்களில் பல்வேறு பணிகளைச்
செய்து வருகிறது. குழந்தைகளுக்காக, நாம் வெளியே தூக்கி எறியும்
பொருள்களிலிருந்து அருமையான கைவினைப் பொருட்கள் செய்வதுடன்,
அதனைக் கொண்டே, எளிமையான அறிவியல் சோதனைகளைச் செய்து,
குழந்தைகளின் மனதில் அறிவியல் ஆர்வத்தைக் கொண்டு வருகிறது;
அறிவியலை எளிமையாக்குகிறது. பாட புத்தகத்தில் காணப்படும்
 பிழைகளை, கடின பாடங்களை கண்டறிந்து களைய தமிழ் நாடு
அரசின் கல்விப் பணியில் உதவுகிறது.

பிரேமானந்தா கொண்டுவந்த லிங்கம், சாயிபாபா வரவழைத்த விபூதி போன்றவற்றின் பின்னணியிலுள்ள அறிவியல் தகவல்களை விளக்கி,
 மக்கள் ஏமாறாமல் இருக்க வகை செய்கிறது.


ஆர்வமாய் இருக்கும் ஆசிரியர்களுக்கு முகாம் நடத்தி,
மாணவர்களை அன்புடன் மனித நேயத்துடன் நடத்தவும்,
ஒரு மாற்றுக் கல்வி முறையை போதிக்கவும் உதவுகிறது.இயக்க
நண்பர்களுக்கும், கல்வி பெறும் மாணவர்களுக்கும் வானவியல்,
சூழலியல், மரங்களை  & பறவைகளைப் பேணுதல், பூமியைப்
பாதுகாக்க நடத்தும் தகவல்கள்& நடவடிக்கைகள் போன்ற பல்வேறு
 தளங்களில் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பணி செய்கிறது அறிவியல் இயக்கம் .அறிவியல் புத்தகங்கள்பல தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன.



            த. அ.இயக்கப் பணிகள்..!
  பெண்களுக்காக இருபாலாரும் சமம் என்ற நோக்கில் சமம் இயக்கத்தை
 நடத்தி வருகிறது. இதில் பெண்களுக்கு அறிவியல் உணர்வு  , கைத்தொழில்,
 மூட நம்பிக்கை  போக்குதல், போன்றவை பயிற்றுவிக்கப் படுகின்றன. .
 மேலும் பெண்களுக்கான உடல் நலம் போதிக்கப் படுவதுடன், கிராமப் புற
பெண்களுக்கு நேரிடையாக இது கற்பிக்கப்  படுகிறது.

குழந்தைகளின் பருவ வயதில் ஏற்படும் பிரச்சினைகளையும்,
அதற்கான தீர்வையும் மக்களிடையே கொண்டு சென்று, நாட்டில்
நல்ல மனநலமுள்ள குடிமகனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
கருவுற்ற பெண்களுக்கான உடல்நலம் பேணப்பட்டு, அவர்களை
 நன்கு பராமரிக்க போதிக்கப் படுகிறது.

அவர்களுக்கு தேவையான தடுப்பு மருந்து, ஊசி போன்றவையும்
 ஏற்பாடு செய்யப்படுகிறது.பேரிளம் பெண்களுக்கு ஏற்படும்
மாதவிடாய் பிரச்சினைகள் , மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும்
 இன்னல்கள், அதனை எப்படி சமாளிப்பது, அதற்கான மருந்து போன்றவற்றையும் கூறுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கான, ஆராய்ச்சிகள்,
பள்ளிக் குழந்தைகளுக்கான மூன்று மாத அறிவியல் ஆய்வு செய்யும்,
  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடும்( National children's Science Congress), 
அது தொடர்பான செயல்பாடுகளும், அதன் முத்தாய்ப்பாக
, இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்  தலைநகரில்,  இந்தியாவின்
அனைத்து மாநில குழந்தைகளை அழைத்து, இளம் விஞ்ஞானி விருது
கொடுத்து அவர்களுக்கு உரிய பாராட்டு, அந்த  தேசிய மாநாட்டில் தரப்படுகிறது. அதில் குழந்தைகள் குவிக்கப் படுகின்றனர். 

 ஆசிரியர்களுக்காக  விழுது  என்ற காலாண்டிதழ்  நடத்தப் படுகிறது.
அத்துடன், இயக்க  உறுப்பினர்களுக்காக  சிறகு என்ற மாதப் இதழும் வெளிவருகிறது . தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தை சுருக்கமாக TNSF என்று கூறுவோம். இது குழந்தைகளுக்கான ஓர் அறிவியல் மாத இதழையும் நடத்தி வருகிறது.அதன் பெயர் துளிர்.மேலும் அறிவியல் தொடர்பான பல புத்தகங்களையும் வெளியிடுகிறது அறிவியல் இயக்கம். 

     புத்தக . வாசிப்பு முகாம்..!
     கடந்த ஓர் ஆண்டு காலமாக, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின்,
ஈரோடு மாவட்டக் கிளை , குழந்தைகளுக்கான மாற்றுக் கலவியைத் தரவேண்டும்  என்பதற்காக ஆசிரியர்களை அழைக்கின்றனர்.
அங்கே  வாசிப்பு முகாம் என்ற பெயரில் உண்டு உறைவிட முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது.மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் வருகின்றனர்.   


தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துவரும் பணிகளில் ஒன்று
 புத்தக வாசிப்பு இயக்கம்...! என்னடா இது.. புத்தகத்தை தனியாகத்தான் படிப்பார்கள்.. இதில் இயக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ஆம் நண்பர்களே..! 

புத்தகம் சுமந்து கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாய், மாட்டு வண்டியில், மிதிவண்டியில் என  வருவதை, அவற்றை தெருவின்
மந்தைகளில் அனைவரும் இணைந்து கூட்டாக அமர்ந்து  படிப்பதை
 தமிழ் நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி காலத்திலிருந்து
 ஓர்  இயக்கமாகவே நடத்தி வருகிறது.


அதன் ஒரு பகுதிதான், கர்நாடக எல்லையில் அமைந்துள்ள
 கெத்தேசால் என்னுமிடத்தில் நடைபெற்ற உறைவிட புத்தக
வாசிப்பு முகாம்.  ஈரோடு மாவட்டம்,நடத்தும்  இந்த
மூன்றாவது வாசிப்பு முகாமில் தமிழகத்தின் தூத்துக் குடி,
நெல்லை, தேனி, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல்,
 தர்மபுரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின்
பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

          வாசிப்பு முகாமின் துவக்கம்..காவிரியின்.துவங்கு முகத்தில்..!
    வாசிப்பு முகாம் முதல்பதிவு  பவானிசாகர் என்ற இடத்தில் 63 ஆசிரியர்களுடன்துவங்கப்பட்டது.இந்தமுகாமுக்கு ஆசிரியர்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைத்தது.  ஆனால் ஆசிரியர்களில் சிலர், பள்ளிகளில், நிர்வாகத்துக்குப் பயந்து,முகாமில் நடத்துவதாகச் சொன்ன பல விஷயங்களையும், குழந்தைகளை  அணுகும் முறையையும்  கடைப்பிடிப்பதில்லை.

ஆனால் 2011 ,மே 14 -16 நாட்களில் நடத்தப் பட்ட மூன்றாவது  வாசிப்பு முகாமும்,
 அதன் வாழிடமும்  ஒரு பிரத்யேக சிறப்பு வாய்ந்தது. இம்முகாமை,
 ஈரோடு மாவட்ட தலைவரும், தமிழ் நாடு அறிவியல் இயக்க செயலாளர்களில்
ஒருவரான முனைவர்.பேரா. மணி அவர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தார்.

     ஏன் இந்த வாசிப்பு முகாம்..!
 குழந்தைகளை மையப்படுத்திய புத்தகங்களான,   குழந்தைகளைக் கொண்டாடுவோம்,
டோட்டோ சான் (ஜன்னலில் ஒரு சிறுமி), ஏன் டீச்சர் என்னைப் பெயில்லாக்கிட் டீங்க ? ,
முதல் ஆசிரியர், எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும்,எனக்குரிய இடம் எங்கே,
 போன்ற பல புத்தகங்கள் கூட்டாக வாசிக்கப் படுகின்றன.

முகாமில் கூட்டு வாசிப்பின்  பலன் தெரிகிறது. மேலும் என்ன புத்தகம்
 வாசிக்கப்பட வேண்டும் என்ற தகவல் பங்கேற்பாளர்களுக்கு முன்னமேயே
தெரிவிக்கப்படும். அவர்கள் அந்த புத்தகங்களைப் படித்து
உள்வாங்கிய பின், அதற்கான விமரிசனத்துடன்தான்  வருவார்கள்.
அத்துடன் வாசிப்பு முகாமில் புத்தகங்களை வாசித்தபின்,  புத்தகங்கள்  பற்றி
குழுவில் ஆழமாக  விரிவாக விவாதம் செய்யப்படும். ஆசிரியர்களின்
கருத்தும் முகாமின் அமர்வுகளின் சொல்லப்படும்.

கெத்தேசாலின்.. வனப்பு..!   
         கெத்தேசால் என்ற அழகான பசுமைசூழ் மலைக்கிராமம் ,
இது  ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.கடல் மட்டத்திலிருந்து 1224 அடி உயரத்தில் இருக்கிறது.

அடர்ந்த காடு. கெத்தேசால் சத்தியமங்கலத்திலிருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளைத்தாண்டி, 44 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு சோளகர்கள் என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர்.

இங்குதான் சந்தன வீரப்பன் இந்த கிராம மக்கள்மீது கோபம் கொண்டு 7 பேரை வெட்டிப்போட்டானாம்.அதன்பின்னர்தான் அரசு இந்தக் கிராம மக்களிடம், கருணை கொண்டு,ஓர் உண்டு உறைவிடப் பள்ளியைக் கட்டி,அங்கு வாழும் மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தந்து ஒரு நிரந்தர ஏற்பாடு செய்துள்ளது.

 இந்த நிலத்தை அவர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தலாம், உழுது பயிரிடலாம்.ஆனால் விற்பனை செய்ய மட்டும் உரிமை கிடையாது.
இதுதான் வனப்பகுதி செட்டில்மென்ட்(Forest settlement) எனப்படுகிறது .


        கெத்தேசால் மண்ணின் மைந்தர்கள்.. சோளகர்கள்..!..
 கெத்தேசால் கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வாழ்கின்றன.
எல்லோருக்கும் காட்டுப் பகுதி விவசாயம்தான் தொழில்.இந்த மக்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர்.இயற்கை விவசாயம்தான்.
அவர்கள் பயிரிடும் முட்டைகோஸ், பீன்ஸ், உருளை போன்றவைகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லையாம். உழுது வித்தைத்துவிட்டால் அவ்வளவுதான்.தானே வளரும் . ஆனால் காட்டுப் பன்றி போன்றவை வந்து அவற்றைத் தோண்டி தின்னும். 


அந்த ஊரில் 8 ம் வகுப்புவரைதான் குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பு உள்ளது. அதுவும் உங்களைப் போலே, தனியார்/ ஆங்கிலப் பள்ளி எல்லாம் கிடையாது.அரசுப் பள்ளிதான். . 8 க்கு மேலே படிக்கவேண்டுமானால், 40 கி.மீ கீழே இறங்கி சத்தியமங்கலம்    போக வேண்டும்.    நீங்கள் 10 பேர் சேர்ந்து போய்விட்டால்,மக்கள் பயந்து போய் ஓடிவிடுகின்றனர்.அதுவும் பெண்கள் போய் கதவை அடைத்து விடுகின்றனர். அவ்வளவு மிரண்டு போயிருக்கின்றனர்;பாதிக்கப்பட்டிருக்கின்றனர்  நமது பாதுகாப்பு காவல் துறையினரால்..! 

அந்த மக்களின் மேல் பாய்ந்துள்ள காயத்தின் வலி இன்னும் குறையவில்லை.
 அவர்கள் மேல் தொடுக்கப்பட்ட  பாலியல் ரணமும், அதன் தழும்பும் இன்னும்
 ஆறாத தடங்களாய் இருக்கின்றன. அச்சத்தின் விளிம்பிலேயே வாழ்கின்றனர் இம்மக்கள்.. இளம்பெண்களை அலாக்காக தூக்கிப் போய்விடுவார்களாம்.
அதனால், எங்களைப் பார்த்தும் பயந்துபோய் கதவைத் சாத்தினர்.


    சோளகர்களின்  .. வாழ்நிலை..!
    மே 14 ம் நாள் இரவு சோளகர்ளிடம் சென்று அவர்களின் அச்சத்தை நீக்கிப் பேசி, அவர்களின் சமூக வாழ்நிலை பற்றிய தகவலைச் சேகரித்தோம்.  இவர்களுக்கு பெரிதாக பெரிய நோய் எதுவும் வந்ததும் கிடையாது; பெரிய மருத்துவ மனைக்குப் போய் மருத்துவம் பார்த்ததும் இல்லை. எல்லாமே இயற்கை வைத்தியம்தான்.

அவர்களிடையே, ஏன் மகன் கலெக்டர் ஆகணும், கம்யூட்டர் எஞ்சினியர் ஆகணும்,டாக்டர் ஆகணும், என்ற பெரிதான ஆசைகள், கனவுகள், கற்பனைகள் இல்லை.இந்த குடும்பங்களிலிருந்து ஒரே ஒருவர்தான் பட்டப்படிப்பும், ஆசிரியருக்கான ( B.Sc., B.Ed.,) படிப்பும் படித்திருக்கிறார். இவர்களிடையே, நிலபுலம், காசு பணம் இல்லாவிட்டாலும்
 கூட சமூகத்தின் வரதட்சணைத் தாக்கம் இங்கும் விரவிக் கிடக்கிறது.
ஆனாலும் கூட ரொம்பவும் வெள்ளந்தியான மக்கள்தான் அவர்கள். 

ஆனால் இவர்களுக்கு அரசுதான் மாற்றாந்தாய் பிள்ளைகளாக ஓரவஞ்சனை செய்துவருகிறது. அந்த ஊருக்குப் போக ஒரு தார் சாலை கூட கிடையாது. மண் பாதைதான். .அரசின் குடிநீர்க்குழாய்கள் இல்லை. சுனைநீரும் லாரி கொண்டுவரும் நீரும்தான்.அரசு வண்ணத்தொலைக் காட்சி இருக்கிறது.சில வீடுகளில் dish  antenna இருக்கிறது.

  கெத்தேசால்..நோக்கிப் பயணம் ..பயணம்  ..!
 முகாமின் பங்கேற்பாளர்கள் அனைவரும்  ஒரு பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர்.ஆனால் அவர்களின் வயிற்றுக்கு விருந்து படைக்க 8 பேர் கொண்ட குழு ஒன்று,முதல் நாளே போய்விட்டது..! ஏன் தெரியுமா? அங்கு ஒரு டீக்கடை கூட கிடையாதே..!

செவிக்கு விருந்து தருவதற்காக, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து கருத்தாளர்கள் அழைக்கப்பட்டனர்.அவர்கள், பாரதி புத்தகாலய பொறுப்பாளர்  நாகராஜ்,நூல் விமரிசகர்,  எழுத்தாளர்
பேச்சாளர்  மற்றும் பாடகரான  கமலாயன் &ஷாஜகான்(இவர் கவிஞரும் கூட).
மற்றும் தமிழ் நாடு முற்போக்கு சங்கத்தின் பொதுச்செயலரும் எழுத்தாளரான, ச. தமிழ் செல்வன்,
இயற்கையியளாளர் முகமது   அலி,கல்வியாளர்கள் பேரா. ராஜு ,பேரா. விஜயகுமார்,தமிழ் நாடு அறிவியல் இயக்க செயலாளர் பேரா. மணி(ஒருங்கிணைப்பு) மற்றும் பேரா.மோகனா
கலந்துகொண்டனர்.இதில் குழந்தைகள் 8 பேரும் இருந்தனர் என்பது ஒரு வித்தியாசமான நிகழ்வாகும். 



        கோடை வெய்யிலில், இளைப்பாறிய.. அறிவியல் ஆர்வலர்கள்..! 
 கெத்தேசால்கிராமத்தில்,  பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி,நடத்தப்பட்ட ,3 நாட்கள் உறைவிட  மாநில புத்தக வாசிப்பு முகாம்,
 தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,ஈரோடு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்டது.
இதில் சுவாரசியமான, விஷயம் என்ன தெரியுமா? இங்கு நீங்கள் அலைபேசி மூலம் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது நண்பரே..! 

அப்பாடா குடும்ப பந்த்தத்திலிருந்து இரண்டு நாள் விடுதலை என்கிறீர்களா ?என்ன நினைத்தாலு சரி நண்பா..!
இதில்  .குழந்தைகளுக்கான புத்தகங்கள்  முதல் ஆசிரியர், 
வாசித்தாலும் வாசித்தாலும்  தீராத புத்தகம் (இயற்கையை நேசித்தல் தொடர்பாக..அறிதல் தாக்கமாக),எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கிட்டீங்க (ஷாஜகான்) ,,பள்ளிக் கூட தேர்தல்(பேரா.மணி), டோட்டோசாண்(ஜன்னலில் ஒரு சிறுமி), ஓய்ந்திருக்கலாகாது  .. போன்ற புத்தகங்கள்
கூட்டாக வாசிக்கப்பட்டு விவாதம் செய்யப்பட்டன.

இதில் குழந்தைகளை நேசித்தல்,அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல்,
குழந்தை மலர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், அவர்களின் குறும்புகளை ரசித்தல்அதன் பின்னணியிலுள்ள அவர்களின் தேடல், அறிவு போன்றவற்றை தெரிந்து நடப்பதற்காக ஆசிரியர்களுக்கு உணர்த்த வேண்டிதான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.


    முகாம்.. பங்கேற்பாளர்கள்  ...!
     வாசிப்பு முகாமில்  74 மனித  நேயர்கள்( 8 பெண்கள் +8 குழந்தைகள் உட்பட) பங்கேற்றனர்.இந்த முகாமில் ஓர் அற்புதமான ஒரு முரண்தொடை இருந்தது.! என்ன தெரியுமா? 

வாசிப்பு முகாமின் பங்கேற்பாளர்களில், 6 பேர் மாற்றுத்திறனாளிகள்  /பார்வைத் திறனற்றவர்கள்.பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள். அவர்களில் இருவர் கல்லூரிப் பேராசிரியர்,ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியர்.மூவர் ஆசிரியர்கள், இவர்கள் அனைவரும்
மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களில் ஒருவரான ஆத்தூர்அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முருகேசனைப் மாணவர்கள் பக்கம், பக்கமாய் பாராட்டி குவித்திருக்கின்றனர். அவர் பிறந்ததும் அவரைக் கொல்ல குடும்பத்தினர் திட்டமிட்டனராம்.


 அவரது தந்தையும், தாயும் அந்த யோசனைக்கு ஒத்துக் கொள்ளாமல்,
அவரைக் காப்பாற்றி வளர்த்தனராம். அவரின் தாய், முருகேசனை அணுவளவும் பிரியமாட்டாராம்.காரணம்  , கொஞ்சம் பிரிந்தாலும், குடும்பம் அவரைப் போட்டுத் தள்ள திட்டமிட்டு இருந்ததாம்.அவரது விளையாட்டுத்தோழர்கள் கல்லும், குச்சியும்தான். இவைகளுடன்தான் இவர் இளவயதில் பேசுவாராம்;விளையாடுவாராம்.  9 வயதில்தான் பள்ளி சென்றார் ஒரு பெரியவர் உதவியுடன் மற்ற ஆசிரியர்கள் செய்யாத அளவு மாணவர்களிடம், அறிவுபூர்வமாக  பல உதவிகள் செய்வாராம்.

முகேசனின் துணைவியும் பார்வை இழந்தவரே..! அவர்களின் பெண்மகவு..
அழகான கயல் விழியுடன் உருட்டி உருட்டி விழித்து பெற்றோரை
தனது கொஞ்சு மொழியால் அன்பால் கட்டிப் போடுகிறது..!


     கருத்தாளர்கள்..!
   முகாம் மே 14 ம் நாள் காலை 11 .30 அளவில்,பாரதி புத்தகாலய பொறுப்பாளர் திருமிகு.நாகராஜ் தலைமையில் திருமிகு .கமலாலயனின் துவக்க உரையுடன் களை கட்டியது. திருமிகு கமலாலயன் பொதுவான வாசிப்பு,வாசிப்பின் முக்கியத்துவம் போன்றவற்றை சுவைபட எடுத்து பங்கேற்பாளர்களிடம் படைத்தார்.

மதிய உணவுக்குப்பின் முகாம் பங்கேற்பாளர்கள் உறங்கச் செல்லாமல், முதல் ஆசிரியர் மற்றும்  பள்ளிக்கூட தேர்தல்  என்ற புத்தகங்களை  7 குழுக்களாகப் பிரிந்து,வாசித்து, விவாதமும், விமரிசனமும்,
கருத்துப் பரிமாற்றமும் செய்தனர். குழுக்களின் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்.

அன்றிரவுதான், கெத்தேசால் வாழ் சோளகர் இன மக்களிடம் பேசி, சிரித்து, உறவாடி, உணவுண்டு,அவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்நிலை பற்றி அறிந்தனர்.


       
      மனம் கவரும்... காலை வேளை..!
     கெத்தேசால், மே15ம் நாள் காலை அறிவியல் இயக்க நண்பர்களையும் இணைத்துக்கொண்டு குதூகலமாய் விடிந்தது.  முகாமுக்கு வந்த ஆர்வலர்கள், அங்கிருந்த ரேஞ்சர் துணையுடன், மலை ஏற்றத்துக்கு, கொஞ்சம் உப்பையும் பொட்டலம் கட்டிக் கொண்டு கிளம்பினர். உப்பு எதற்கு என்கிறீர்களா?

வழியில் நம் மேல் ஆசையுடன் ஒட்டி பயணம்
செய்ய விரும்பும் அட்டையை, நம் உடம்பிலிருந்து பிரித்து எடுக்கவே .. இல்லையெனில், சீரக அளவில் நம் மேல் ஒட்டும் அட்டை, கொஞ்ச நேரத்தில், நம் உடலிலுள்ள இரத்தத்தை உறிஞ்சி, சும்மா கும் என்று கொழுத்து,உங்கள சுண்டு விரல் அளவுக்கு உப்பிவிடுவார். உப்பிய/ஒட்டிய  அட்டையை   பிரித்தெடுக்க அந்த இடத்தில் உப்பைத் தூவ வேண்டும்.


 நிறைய பேர் அட்டையைச் சுமந்து கொண்டு பயணம் செய்தனர். உப்பு போட்டு
அட்டையை எடுத்துவிட்டாலும், அந்த இடத்திலிருந்து இரத்தம் நிற்காமல் வழியும்.அறிவியல் இயக்க மக்கள் சுமார் 2 மணி நேரம்மலை ஏற்றத்தில்  ரொம்பவும்
சந்தோஷப்பட்டனர்.ஏனெனில் விலங்குகள் வந்து சென்ற தடங்களிலேதான்
  நடந்து போனோம். அங்கே கிழே கிடக்கும் அவைகளின் கழிவுகளிலிருந்து
அங்கே, வந்து போனவை, காட்டுப்பூனை, செந்நாய், நரி,சிறுத்தை, கரடி என்று
 சொன்னார் ரேஞ்சர் . . அன்று அதிகாலை வந்து போன, யானை மற்றும்
காட்டு மாடுகளின் கால்தடமும் பார்த்தோம். கால் நடைகள் மேய்ந்த பின்,
மீண்டும் முளைக்கும் புல், கடினமாக இருக்கும் என்பதாலேயே,
அப்பகுதிகளில் தீ வைக்கப் படுகிறது. அதன் பின் வளரும் புல் மெதுவாக இருக்குமாம்.
மேலும், தீ வைத்த பின்னர்தான், சில மரங்களின் கொட்டைகள் அதன்
 விதையுறைத் தூக்கத்திலிருந்து வெளி வந்து முளைக்கும்.

     வாசிப்பின் சூட்டில் விவாதம்..! 
    பின்னர் முகாமுக்குத் திரும்பி, குளித்து காலை உணவருந்திய பின்,
 ஏன் டீச்சர் என்னைப் பெயிலாக்கிட்டின. (ஷாஜகான்), முதல் ஆசிரியர், ஓய்ந்திருக்க லாகாது என்ற  புத்தகங்களுடன், அடுத்த அமர்வுக்கான, வாசிப்பின் தேடலை, விவாதம், கருத்துரையுடன்
இணைந்தே நடத்தினர். வாசிப்பும் விவாதமும் கன ஜோராய் போய்க் கொண்டே இருந்தது.

இயற்கையியலாளர் திருமிகு முகமது அலி, நாம் எப்படி இயற்கையைமோசமாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம், எப்படி சரி செய்ய வேண்டும் என்பதனை ஆர்வலர்களுக்கு
 மிக எளிய முறையில் எடுத்துரைத்தார்.பின் மதிய உணவை அந்த மலைப்பாங்கான ,மேடு பள்ளம் உள்ள பச்சை பசேல் என்ற மரகதப் புல் தரையில் அமர்ந்து சந்தோஷமாய் பகிர்ந்துண்டனர்.
      வாழும் மண்ணைப் போற்ற வேண்டிய பாடல்..! 
     மதிய அமர்வுக்குப் பின், அனைவரும் , குழந்தைகள் உட்பட வட்டமாக  நின்று, பிங்க் பாங்கு  என்ற நினைவு கூறும் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர். அதன் பின் பங்கேற்பாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.திருமிகு கமலாலயனின்,வாழும் மண்ணை இழந்து விட்டால் அடைய முடியுமா பாடலுக்குப் பின், கவிஞரும், எழுத்தாளருமான, திருமிகு. ஷாஜகான் வாசிப்பும், குழந்தைகளை மையப் படுத்திய
கல்வி பற்றி சிரிக்க, சிரிக்க பேசினார். இரவு முடிந்தாலும் கூட, அறிவியல் ஆர்வலர்கள் ஆர்வ மிகுதியுடன் இரவு வானை நோக்கினர்.

 வடக்கே உள்ள சப்த ரிஷி மண்டலம், அதிலுள்ள இரட்டை விண்மீன்களான
வசிஷ்டர், அருந்ததி விண்மீன்கள், உச்சி வானில் தெரிந்த சிம்மம் விண்மீன் தொகுதி, அதன் கீழே உள்ள கன்னி ராசி தொகுதியும், அதிலுள்ள சித்திரை விண்மீனும்,தெற்குத் திசையின் வழிகாட்டியான திரிசூலம்/தெற்குச் சிலுவை, தென் மேற்கில்தெரிந்த அகத்தியர் போன்றவற்றை,திருமிகு மோகனா, பங்கேற்பாளர்களுக்கு காட்டினார்.திருமிகு உமாசங்கர் இந்த விண்மீன் தொகுதிகளில் இருக்கும் விண்மீன்களையும்,சனிக்கோளையும் தொலை நோக்கி மூலம், பங்கேற்பாளர்களுக்கு அருகே அழைத்து வந்து களிப்பூட்டினார்.

   தாலாட்டித் தழுவும், குளிரின் இதம்..!
    கெத்தேசால் மலைப் பின்னணியில் இரவின் இதமான குளிரும்,
முழு நிலவு நிலையை எட்டியுள்ள சந்திரனின் பால் ஒளியும், கொசுத் தொல்லையற்ற பள்ளிவளாகமும்  ,மக்களைத் தாலாட்டி நிம்மதியாய் உறங்க வைத்தன.ஆனாலும் கூட, மறுநாள் விடிகாலையில் உலகைக் காணப் புறப்பட்ட செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி கோள்களைக் காண , விடிகாலை 4 மணிக்கே மக்கள் எழுந்துவிட்டனர்.
அது மட்டுமா? அப்போது தென்பகுதி வானின் தொடு வானிற்கு கொஞ்சம்
மேலே உள்ள, தனுசு விண்மீன் தொகுதி, அதிலுள்ள பூரம்,உத்திரம் விண்மீன்கள்,தனுசு தொகுதிக்கு வலப்புறம் உள்ள, நம் பால்வழி மண்டலத்தின் மையம், அதன் அருகிலுள்ள புகை போன்ற பால்வழி மண்டலம், தென் மேற்கில் தெரிந்த விருச்சிக விண்மீன் தொகுதி அதிலுள்ள, அனுஷம்,கேட்டை, மூலம் விண்மீன்கள் போன்றவற்றையும்,கோள்கள் தெரியும் மீனம் மற்றும், மேஷம் தொகுதியின் அசுவினி, பரணி விண்மீன்களையும் பார்த்து மகிழ்ந்தனர். அந்தப் பகுதியில் அதிகமான மின்மாசு இல்லாததால்தான் இத்தனை விண்மீன்களையும் பார்க்க முடிந்தது.

குழந்தைக்கான .. பங்களிப்புக்கள்..!
 முகாமுக்கு வருகை புரிந்த குழந்தைகளை மகிழ்வுடன் சோர்வின்றி  வைத்திருக்க,அறிவியல் ஆர்வலர்கள் வந்திருந்தனர். அவர்களுக்காக திருமிகு. உமாசங்கரும்,காங்கயம் சக்திவேலும்,  செய்து காண்பித்த அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா,
போன்றவை குழந்தைகளை களிப்பில் ஆழ்த்தின. மேலும் காலை வானில் தெரிந்த செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி கோள்களையும்,நமது சூரிய மண்டலம் வசிக்கும்

பால்வழி மண்டலத்தையும் சாதாரணக் கண்களாலும், இரு கண் நோக்கியாலும்,தொலை நோக்கி மூலமும்  பார்த்து மகிழ்ந்தனர். இரவில்  நில
வையும் அதன் மேடு பள்ளங்களையும், சனி கோளையும், அதன் வளையத்தையும்,பார்த்துசந்தோஷப்பட்டது குழந்தைகள்  மட்டுமல்ல..!
 பங்கேற்பாளர்களும்தான்..!    "
  

  கெத்தேசாலின் விடிகாலை நேரம். அனைவரும் இருகண் நோக்கி மூலமும்,

 தொலைநோக்கி மூலமும்,ட்தொடுவானின் அருகே பளிச் சென தெரியும்,

 வெள்ளிக் கோளையும், கொஞ்சம் உயரே வெள்ளையாய் தெரியும்

வியாழனையும்  வெள்ளிக்கு கீழே தெரியும் புதனையும்,

வெள்ளி வியாழனுக்கு இடையே தெரிந்த செவ்வாயையும் பார்த்துப்
பரவசித்தோம்  அது மின்னொளி அதிகம் இல்லாத கிராமமாகையால், நமது சூரிய குடும்பம் வசிக்கும்இருக்கும் பால்வழி மண்டலத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். இது ஓர் அரிதான நிகழ்வே..!"


      குழந்தையை ..மையப்படுத்திய..கல்வி..! 
     மூன்றாம் காலையும் மக்கள் சோளகர் குடியிருப்பு, மலை ஏற்றம், அவர்களின்நீர் பிடிப்பு இடம் எனப் பிரிந்து கெத்தேசாலை  வலம் வந்தனர். அங்குள்ள ஒரு கடையில்நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் சின்ன நெகிழி பைகளில் தொங்கின.. பேர் & லவ்லி (Fair& Lovely ))உட்பட. காலை 6 மணிக்கே கடை திறக்கப்பட்டுவிடுகிறது.
பின்னர் மீண்டும் மாற்றுக்கல்வியை முன்னிறுத்தி  வாசிப்பும் , விவாதமும் தொடர்ந்தன.திருமிகுமோகனாவின் வாழ்த்துரைக்குப் பின், எழுத்தாளர் ச. தமிழ் செல்வன்,இன்றைய பள்ளிக் கல்வி முறையும், அதன் மாற்றும் பற்றி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல் செய்தார். விவாதம் மதிய உணவின் போதும் கூட நீண்டது.

     பங்கேற்பாளர்களின்.. பகிர்வும்  ..பகிர்மானமும்..! 
     முகாமின் நிறைவுக்கு, பேரா. ராஜூ தலைமை ஏற்று சிறப்பு செய்தார்.
.அப்போது பங்கேற்பாளர்களின் தங்களின் பின்னூட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.பெரும்பாலோர் இப்படிப் பட்ட முகாம்களே, ஆசிரியர்களின்ஆழ்மனத் திறவுகோலாக செயல்படுகிறது என்று தெரிவித்தனர்.இம்முகாம் வழியே, நிஜமான நல்லாசிரியர்களை
 இனம் காண முடிகிறது என்றும் சொன்னார்கள்.

இந்த முகாம், ஆசிரியர், மாணவரிடையே நல்ல உறவும்  , புரிதலையும் உருவாக உதவும் என்று நம்பினர்.முகாமில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை, கல்வி பயிலும் சின்னச் சிட்டுக்களுக்கு அர்ப்பணிப்பாக செய்கிறோம் என உறுதி அளித்தனர். தமிழ் நாட்டில் வாழும் மற்ற ஆசியர்களுக்கும் இப்படி ஒரு கடமையும், அன்பு உள்ளமும், பிஞ்சு மாணவர்களிடம் வரவீண்டும் என்றும் உரைத்தனர்.

 பார்வைத் திறனற்ற பேரா. முருகேசன், குழந்தைகளை அடித்த பின் வீட்டுக்குக்
 சென்று அதே அடியை உங்கள மேல் போட்டுப் பாருங்கள், வலியின் வேதனையும், துக்கமும் தெரியும் என்று கூறினார்.  இதே போன்ற முகாம்கள், இனி வரும் காலத்தில்,  சென்னை, பாண்டி,சேலம், நெல்லை, மதுரை போன்ற இடங்களில் மண்டல முகாமாக நடத்த வேண்டும் என்றும் விவாதம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் வாசிப்பு முகாமின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது. முழுமையாக, இந்த புத்தக வாசிப்பு முகாம், பங்கேற்பாளர்கள் அனைவரையும் ஒருசேர   ஈர்த்த காந்தப் புலன்  என்றே கூற வேண்டும்.  
-
 என்று தோழமையுடன்,
மோகனா

No comments:

Post a Comment