முதல் பக்கம்

May 27, 2013

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி: அரசுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

தமிழகக் கல்விச்சூழலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பங்களிப்பு மகத்தானது. அறிவொளி இயக்கம், வளர்கல்வி, கற்றலில் இனிமை, செயல்வழிக்கற்றல், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் என அனைத்து விதங்களிலும் சரியான விதத்தில் அறிவார்ந்த முறையில் பங்களித்திருக்கிறது. முப்பருவக்கல்வி, தொடர்மதிப்பீடு போன்ற அரசின் புதிய முயற்சிகளை வரவேற்பதோடு மட்டுமின்றி ஆழமாக விவாதித்து திட்டங்களின் மேம்பாட்டிற்கான நல்ல பல ஆலோசனைகளையும் முன்வைத்திருக்கிறது. அதேபோல் அரசின் புதிய அறிவிப்பான அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி குறித்தும் மாநிலக்குழுவில் ஆழமாக விவாதித்து பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கின்றது..
 
இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில் உலகளாவிய தொடர்பிற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ஆங்கில மொழியின் தேவை இருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது.
 
அதற்காக தாய் மொழிக் கல்வியை புறக்கணித்து, தாய் மொழி வழியாகக் கிடைக்கக்கூடிய நண்மைகளைப் புறக்கணித்து ஆங்கில மொழி வழியாகவே அனைவரும் கற்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல.
 
ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும், படைப்பாற்றல் திறனும், புத்தாக்கத்திறனும் தாய் மொழி வழிக் கல்வி மூலம்தான் மேம்பாடு அடையும் என்பது உலக கல்வியாளர்களின் ஒட்டு மொத்தக் கருத்தாகும்.
 
உலக நாடுகள் பலவற்றிலும் தாய் மொழி வழியாகத்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட அனைத்து கல்விக குழுக்களும் தங்கள் பரிந்துரைகளில் முக்கியமான பரிந்துரையாக பள்ளிக்கல்வி முழுவதும் தாய் மொழி வழியாகத்தன் கற்பிக்கப்பட வேண்டும் என வற்புறுத்திக் கூறியுள்ளன.
 
தற்போதும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கூட பள்ளிக்கல்வி முழுவதும் தாய் மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது.
 
தமிழ் நாட்டிலும் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் மொழியில் பயிற்றுவிக்க வேண்டும், தமிழ் வழி படிப்பவர்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் கூட, இன்னும் முழுமையாக நடைமுறைபடுத்தப் படவில்லை என்பதே உண்மை.

இந்த சூழலில் தமிழக அரசு வரும் கல்வியாண்டில் 1.5 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 3200 அரசுப்பள்ளிகளில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கப்படும் என முடிவு செய்து அறிவிப்பு செய்திருப்பது ஏற்புடையது அல்ல.
 
 ஏற்கனவே கடந்த கல்வி ஆண்டில் 320 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மாணவர்கள் சேரவில்லை எனற் நிலை உள்ளது. தொடர்ந்து ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கினால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளீகளில் தமிழ் நாட்டில் தமிழ் வழிக்கல்வியே இருக்காது என்ற அபாய நிலையும் உள்ளது.
 
ஏற்கனவே தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் ஆங்கில வழியாகப் படித்தாலும் கூட பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். .
 
எவ்விதமான விவாதங்களும்,கருத்து பரிமாற்றங்களும் நடைபெறாமல், எந்தவிதமான முன் தயாரிப்பு பணிகளும் செய்யாமல் உடனடியாக ஆங்கில வழிக் கல்வி என்பது தேவையற்றது..
 
கடந்த ஆண்டு தேசிய அளவில் எடுக்கப்பட்ட 2012 ம் ஆண்டிற்கான கல்வி நிலை அறிக்கையின் படி (அசர்) தமிழகத்தில் 56 சதவிகித மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பில் தமிழ் படிக்கக் கூடத் தெரியவில்லை.
 
தாய் மொழி வழியிலேயே கற்றல் கற்பித்தலில் மேம்பாடு தேவைப்படுகிற நிலையில் அந்நிய மொழியாம் ஆங்கில மொழி வழி கல்வி தேவையற்றது.
 
ஆங்கிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் உண்மையிலேயே புலமை பெற வேண்டும் என அரசு கருதினால், ஏற்கனவே ஆங்கில மொழி ஒரு பாடமாக உள்ளது. அதை திறம்பட கற்பிக்கின்ற வகையில் தேவையான ஆசிரியர்களை தயாரித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்கலாம்.

மேலும் ..
 
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்றாக பேச, எழுத, படிக்க, தேவையான புதிய வழிமுறைகளைக் கண்டறியலாம்.
 
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் முடிவுக்குப் பதிலாக,தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்(தனியார்-மெட்ரிகு
லேசன் பள்ளிகள் உட்பட) தமிழ்வழியாகவே கற்பிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வேண்டுக்கோள் விடுக்கிறது.


தே.சுந்தர், மாவட்டச் செயலாளர்

மத்தியப் பிரதேசத்தில் நடந்த தேசிய அறிவியல் முகாமில் துளிர் இல்ல மாணவர் இரண்டாமிடம்



மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் மற்றும் விஞ்ஞான் பாரதி இணைந்து தேசிய அளவில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் அறிவியல் நிகழ்வை வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் என்ற பெயரில் ஒருங்கிணைத்தன. முதற்கட்டமாக தேசிய அளவில் மாணவர்களுக்கு அறிவியல்தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு, வானவியல், பொது அறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நுழைவுத்தேர்வு நடைபெற்றது. 
 
நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பத்து மாநில மையங்களில் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற்றது. (தமிழகத்தில் சென்னை) மாநில அளவில் செயல்பாட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 12 மாணவர்கள் தேசிய அளவில் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் கடந்த மே,25,26 தேதிகளில் நடைபெற்ற அறிவியல் முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 12 மாநிலங்களிலிருந்து சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டனர். 
 
6,7,8 ஒரு பிரிவாகவும் 9,10 மாணவர்கள் ஒருபிரிவாகவும், 11,12 மாணவர்கள் ஒரு பிரிவாகவும் தேர்வு செய்யப்பட்டனர். நமது தேனி மாவட்டத்திலிருந்து கலந்துகொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் சுரேந்தர், சுபாஷ் ஆகியோரில் பொ.சுரேந்தர் 11,12 வகுப்பு மாணவர்களுக்கான முகாமில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். அவருக்கு சான்றிதழ், பதக்கம், புத்தகங்கள் மற்றும் ரூ.21000 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது. (முதல்பரிசு: கேரள மாணவர் எ.ஜேம்ஸ், மூன்றாம் பரிசு: மேற்குவங்க மாணவர் ஆகாஷ்)

May 26, 2013

குழந்தைகளுக்கான மாநில மாநாடு

 First Published : 07 May 2013 05:28 AM IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் இல்லக் குழந்தைகளுக்கான மாநில மாநாடு திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

சீதபற்பநல்லூரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு துளிர் இல்லக் குழந்தை கே. முத்து இசக்கியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ். கணபதி வரவேற்றார். துளிர் இல்ல மாநில செயல்பாட்டின் அறிக்கையை துளிர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ. அமலராஜன் விளக்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச்செயலர் எம்.எஸ். ஸ்டீபன் நாதன் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார்.

ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரிச் செயலர் ஆ. மதிவாணன், கல்லூரி முதல்வர் கே. ராமர், அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மாநில செயலர் மு. தியாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் எஸ். சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.

தில்லி விஞ்ஞான பிரசார பதிவாளர் டி.வி. வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

பொம்மலாட்ட பொம்மைகள் தயாரித்தல், கற்பனையும் கைத்திறனும் வளர்க்கும் கலை, கணிதத்தில் காகிதம், மரம் பற்றிய ஆய்வு, நாடகப்பயிற்சி, கதை உருவாக்குதல், ஓவியம் வரைதல், கேள்விகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகள் நடைபெற்றன.

இம் மாநாட்டில் 19 மாவட்டங்களில் இருந்து 171 குழந்தைகளும், 67 பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். பேராசிரியர் குமரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலர் சி. பால்ராஜ், மாவட்ட துளிர் ஒருங்கிணைப்பாளர் ஏ. கணேசன் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
 
நன்றி: தினமணி
திருநெல்வேலி

May 23, 2013

அரசு பள்ளிகளில் சேர பிரசாரம்

கம்பம்
First Published : 20 May 2013 12:11 AM

கம்பம் வட்டாரப் பகுதியில் அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கல்வி உப குழு ஒருங்கிணைப்பாளர் வி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் துண்டு பிரசுரத்தை கிளைச் செயலாளர் க.முத்துகண்ணன் வெளியிட, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சின்னபாண்டியன் பெற்றுக்கொண்டார்.

மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கக் கோரி பொதுமக்களிடம் ஆசிரியர்கள் ராஜ்குமார் மற்றும் துளிர் மாணவர்கள் பிரசுரத்தை வழங்கினர். சுருளிப்பட்டி அரசு கள்ளர் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மேகலா தலைமை வகித்தார். கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் ஆசிரியர்கள் சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர். அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்தும் எடுத்து கூறினர்.

நன்றி: தினமணி

May 21, 2013

பாராட்டு விழா

பதிவு செய்த நாள் : மே 20,2013,02:30 

கூடலூர்:பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் நடந்தது. மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டன. துளிர் இல்ல வழிகாட்டி ஆசிரியர் முத்துக்கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன், செயற்குழு உறுப்பினர் நந்தகுமார், ஆசிரியர்கள் ராஜ்குமார், அறிவழகன் ஆகியோர் பங்கேற்றனர். 
 
நன்றி: தினமலர்

May 11, 2013

துளிர் இல்ல மாணவர்களுக்கு பாராட்டு:


 
+2 தேர்விலும் அறிவியல் இயக்கப் பணிகளிலும் சிறந்து விளங்கிய  கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் தலைமையேற்றார். துளிர் இல்ல வழிகாட்டி ஆசிரியர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட் ராமன், செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர் மு.சுபாஸ் நன்றி கூறினார். ஆசிரியர்கள் ராஜ்குமார், அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த துளிர் இல்லத்தை சார்ந்த இம்மாணவர்குழு 2011 ம் ஆண்டு தேசிய இளம்விஞ்ஞானியர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாத்தல் குறித்த பயிற்சி முகாம்

நன்றி: தினமணி
போடி

First Published: May 9, 2013 11:29 AM
Last Updated: May 9, 2013 11:29 AM

யுனெஸ்கோ அமைப்பினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான மாதவ் காட்கில் அறிக்கை குறித்த பயிற்சி முகாமில், அறிவியல் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். யுனெஸ்கோ அமைப்பினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான மாதவ் காட்கில் அறிக்கை குறித்த பயிற்சி முகாமில், அறிவியல் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழகம், கர்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையை, சமீபத்தில் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய இடமாக அறிவித்தது. இதனைப் பாதுகாப்பது குறித்து, சுற்றுச்சூழல், உயிரின ஆய்வியல் அறிவியலாளர் மாதவ் காட்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கை குறித்த பயிற்சி முகாம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்ட வளர்ச்சி உபகுழு சார்பில், போடி முந்தல் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க தேனி மாவட்டச் செயலர் தே. சுந்தர் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் அ. அமலராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன் வரவேற்றார். மாநிலச் செயலர் மு. தியாகராஜன் துவக்கவுரையாற்றினார்.

மாதவ் காட்கில் அறிக்கை குறித்தும், அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பது குறித்தும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக் கருத்தாளர் முனைவர் எஸ். தினகரன், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு நிர்வாகி பேராசிரியர் பொ. ராஜமாணிக்கம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாதவ் காட்கில் அறிக்கையை சிலர் தவறாக சித்தரிப்பதாகவும், மாதவ் காட்கில் அறிக்கை குறித்த விரிவான தகவல்களை பொதுமக்கள், மலைவாழ் மக்கள், அறிவியல் ஆர்வலர்கள் மத்தியில் கொண்டுசென்று, மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்பதன் நோக்கம், அதன் மூலம் உலக வெப்பமயமாதல், தண்ணீர் பற்றாக்குறை போன்றவற்றை போக்குவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மேற்கொள்வது என்றும் விவாதிக்கப்பட்டது. ஆசிரியை மகபூப் பீவி நன்றி கூறினார்.

மாதவ் காட்கில் அறிக்கை பற்றிய ஒருநாள் பயிலரங்கம் -போடி

தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வளர்ச்சி உபகுழுவின் சார்பில் மே,7.2013 அன்று மாதவ் காட்கில் அறிக்கை பற்றிய மண்டல அளவிலான ஒருநாள் பயிலரங்கம் போடி-கிரீன் ராயல் ஹோட்டலில் நடைபெற்றது.



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன் வரவேற்றுப் பேசினார். அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் மாதவ் காட்கில் அறிக்கை ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் பேரா.பொ.இராஜமாணிக்கம் அறிக்கை மீதான நமது பார்வையும் தொடர் செயல்பாடுகளும் என்ற தலைப்பிலும் பேசினர். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். பயிலரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் அறிவியல் இயக்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். செயற்குழு உறுப்பினர் மஹபூப் பீவி நன்றி கூறினார். மொத்தம் 50 பேர் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்:

  • மாதவ் காட்கில் அறிக்கை பற்றிய செய்திகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லுதல்..
  • மலைவாழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் வனவளங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பயிலரங்க தகவல்கள் சில:

  • இமயமலையை விட தொன்மையானவை மேற்குத்தொடர்ச்சி மலைகள்..

  • குஜராத், மகாராஷ்டிரம், கோவா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் தொட்டியாகச் செயல்படுபவை மேற்குத்தொடர்ச்சி மலைகள்..

  • இந்தியாவில் 40 விழுக்காடு மழைப்பொழிவிற்கு காரணமானவை..

  • கடந்த 3000 வருடங்களாய் நாம் மேற்குத்தொடர்ச்சி மலைகளைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

  • மேற்குத்தொடர்ச்சி மலைகள் யுனெஸ்கோவால் உலக புராதானச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மேற்குத்தொடர்ச்சி மலைகள் உலகின் முதல் பத்து உயிரிப்பல்வகைமை நிறைந்த பகுதிகளில் (Hottest Biodiversity Area) ஒன்றாகும்.

  • 1,60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது.

  • குறைந்தபட்சம் 48 கி.மீ. அதிகபட்சம் 210 கி.மீ. அகலம் கொண்டது இம்மலைகள்..
  •  
  •  நமது நாட்டில் 25 கோடி மக்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

  • மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 5000க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் 500க்கும் மேற்பட்ட பறவையினங்களும் 300க்கும் மேற்பட்ட பிற உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.

  • உலகில் அழிந்து வரும் அபாயத்திலுள்ள 350க்கும் மேற்பட்ட உயிரினங்கள் நமது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருக்கின்றன.

  • 16 ஆறுகள் ஓடுகின்றன..

  • 1845 அணைகள் இம்மலைத்தொடரில் இருக்கின்றன.

  • அதில் 50 பெரிய அணைகள்..

  • 38 நீர் மின் திட்டங்கள் இருக்கின்றன.

  • சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் என 39 இடங்கள் இருக்கின்றன.

  • மேற்குத்தொடர்ச்சி மலைகள் பற்றி ஏற்கனவே மோகன்ராம் கமிட்டி, பிரணாப் சென் கமிட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
  •  
  •  மாதவ் காட்கில் கமிட்டி மார்ச்,2010ல் அமைக்கப்பட்டது.

  • மே,2012ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

  • மாதவ் காட்கில் கமிட்டிக்கும் அடுத்ததாக கஸ்தூரி ரங்கன் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது.

  • மாதவ் காட்கில் அறிக்கையின் நோக்கம் இயற்கை வளங்களை பாதுகாப்பது, தக்கவைப்பது, புணரமைப்பது..

  • மக்களை வலுக்கட்டாயப் படுத்தாமல் அவர்களைப் புரியவைத்து அவர்களின் பங்கேற்போடு பரிந்துரைகளை அமல்படுத்துவது..

  • மோகன்ராம் கமிட்டி, மத்திய மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் சட்டங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது காட்கில் அறிக்கை..
    காட்கில் தனது அறிக்கையினை அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியில் மொழிபெயர்த்து வழங்கவேண்டும். தன்னார்வ அமைப்புகள், கிராம சபைகளில் இந்த அறிக்கை விவாதிக்கப்படவேண்டும் என விரும்பியுள்ளார்..
    காட்கில் தனது பல்வேறு பரிந்துரைகளையும் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான மக்கள் குழுக்களில் விவாதித்து முடிவெடுக்க வலியுறுத்துகிறார்.
    மேற்குத் தொடர்ச்சி மலைகளை 9கி.மீ × 9 கி.மீ. என்ற அளவில் 2200 கிரிடூகளாகப் (பாதுகாக்கப்பட்ட பகுதி) பிரித்து அதனை மூன்றாக வகைப்படுத்தி உள்ளார்.

  • ESZ-1ல் 60% பகுதியும் ESZ-2ல் 25% பகுதியும் ESZ-3ல் 15% பகுதியும் வருகிறது. (ESZ-ECOLOGICAL SENSITIVE ZONE)

  • நமது தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் ESZ-1ல் வருகிறது. போடிநாயக்கனூர் ESZ-2ல் வருகிறது.

  •  புதிய குடியிருப்புகள் கட்டுவது, ஹோட்டல்கள் கட்டுவது இயலாது.

  • ஏற்கனவே மலைகளில் வாழ்கின்ற மக்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். 
  • அவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பிற்கேற்ப குடியிருப்புகளை விரிவுபடுத்திக்கொள்ளலாம். ஆனால் புதியதாகக் குடியேற, காலனிகள் அமைக்க இயலாது.

  • புதிய அணைக்கட்டுகள் கட்ட முடியாது. வேதித்தன்மை, நச்சுத்தன்மை உடைய பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி கிடையாது.

  • வேதி உரங்கள் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தி வருபவர்கள் குறித்த கால நிர்ணயத்திற்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  • சுரங்கத்தொழில், மணல் அள்ளுதல் கூடாது.

  • புதிய நீர் மின் திட்டங்கள் கூடாது.

  • இயற்கைக்கு கேடுவிளைவிக்காத சுற்றுலாக்களை ஊக்குவிக்கலாம்.

  • இயற்கை வேளாண்மை செய்வோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

    கஸ்தூரி ரங்கன் அறிக்கை காட்கில் அறிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளது


  • அறிக்கைகள் எதுவாயினும் இயற்கை பாதுகாப்பு குறித்த அக்கறையும் அதற்கான செயல்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்குவோம்

--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

May 8, 2013

புத்தகக் கண்காட்சி


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளையின் சார்பில் ஏப்ரல்-23 உலகப்புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல்,23,24 தேதிகளில் கம்பம் சிக்னல் அருகில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஏராளமான மக்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இரண்டு நாள் நிகழ்வுகளை தே.சுந்தர், வெங்கட்ராமன், முத்துக்கண்ணன், ஸ்ரீராமன், சிவக்குமார், பாண்டி, தனசேகரன் மற்றும் துளிர் இல்ல மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.

துளிர் இல்லக் குழந்தைகள் 2ஆவது மாநில மாநாடு பங்கேற்பு


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கும் துளிர் இல்லக் குழந்தைகளின் 2வது மாநில மாநாடு மே,4,5.2013 தேதிகளில் நெல்லை ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன் துவக்கி வைத்துப் பேசினார். துளிர் இல்ல மாநில ஒருங்கிணைப்பாளர் .அமலராஜன் அறிக்கை சமர்ப்பித்தார்.


முதல் நாள் காகிதத்தில் கணிதம், கற்பனையும் கைத்திறனும், பொம்மலாட்டக் கருவிகள் செய்தல், மரம் ஓர் ஆய்வு எனப் பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. இரண்டாவது நாள் குழந்தைகளும் சுகாதாரமும் குழந்தைகளும் புத்தகங்களும், சுற்றுச்ச்சூழல், குழந்தைகளும் அறிவியல் பரப்புதலும் ஆகிய தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெற்றன. விஞ்ஞான் பிரச்சார் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், புதுதில்லி மற்றும் முனைவர்.எஸ்.தினகரன் உள்ளிட்ட பல கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்டப் பங்களிப்பு:

தேனி மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் கற்பனையும் கைத்திறனும் என்ற அமர்விற்கும் கம்பம் கிளைப்பொருளாளர் மொ.தனசேகரன் குழந்தைகளும் புத்தகங்களும் என்ற அமர்விற்கும் கருத்தாளர்களாகச் செயல்பட்டனர். துளிர் இல்ல மாணவர்கள் சுரேந்தர், சுபாஷ் ஆகியோர் தொண்டர்களாகச் சிறப்பாகச் செயல்பட்டனர்.

அறிவியல் இயக்கம் சின்னமனூர் கிளை துவக்கம்:


ப்ரல்,30,2013 அன்று மாலை சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சின்னமனூர் வட்டாரக்கிளை மாநாடு நடைபெற்றது.. மாவட்டத் தலைவர் பா.செந்தில்குமரன் துவக்கி வைத்துப்பேசினார். மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன்  அறிவியல் இயக்கம் குறித்த அறிமுக உரையாற்றினார். இறுதியாக சின்னமனூர் கிளையின் தலைவராக அ.அழகர்சாமி செயலாளராக பி.வன்னியராஜன் பொருளாளராக ஜெ.வேல்ராஜேஷ் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். உத்தமபாளையம் குமரேசன் உள்ளிட்ட நண்பர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.