மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் மற்றும் விஞ்ஞான் பாரதி இணைந்து தேசிய அளவில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் அறிவியல் நிகழ்வை வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் என்ற பெயரில் ஒருங்கிணைத்தன. முதற்கட்டமாக தேசிய அளவில் மாணவர்களுக்கு அறிவியல்தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு, வானவியல், பொது அறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நுழைவுத்தேர்வு நடைபெற்றது.
நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பத்து மாநில மையங்களில் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற்றது. (தமிழகத்தில் சென்னை) மாநில அளவில் செயல்பாட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்து 12 மாணவர்கள் தேசிய அளவில் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் கடந்த மே,25,26 தேதிகளில் நடைபெற்ற அறிவியல் முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 12 மாநிலங்களிலிருந்து சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
6,7,8 ஒரு பிரிவாகவும் 9,10 மாணவர்கள் ஒருபிரிவாகவும், 11,12 மாணவர்கள் ஒரு பிரிவாகவும் தேர்வு செய்யப்பட்டனர். நமது தேனி மாவட்டத்திலிருந்து கலந்துகொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் சுரேந்தர், சுபாஷ் ஆகியோரில் பொ.சுரேந்தர் 11,12 வகுப்பு மாணவர்களுக்கான முகாமில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். அவருக்கு சான்றிதழ், பதக்கம், புத்தகங்கள் மற்றும் ரூ.21000 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது. (முதல்பரிசு: கேரள மாணவர் எ.ஜேம்ஸ், மூன்றாம் பரிசு: மேற்குவங்க மாணவர் ஆகாஷ்)
No comments:
Post a Comment