தேனி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வளர்ச்சி உபகுழுவின் சார்பில் மே,7.2013 அன்று மாதவ் காட்கில் அறிக்கை பற்றிய மண்டல அளவிலான ஒருநாள் பயிலரங்கம் போடி-கிரீன் ராயல் ஹோட்டலில் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துமணிகண்டன் வரவேற்றுப் பேசினார். அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர் முனைவர்.எஸ்.தினகரன் மாதவ் காட்கில் அறிக்கை ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் பேரா.பொ.இராஜமாணிக்கம் அறிக்கை மீதான நமது பார்வையும் தொடர் செயல்பாடுகளும் என்ற தலைப்பிலும் பேசினர். அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் நிறைவுரையாற்றினார். பயிலரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் அறிவியல் இயக்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். செயற்குழு உறுப்பினர் மஹபூப் பீவி நன்றி கூறினார். மொத்தம் 50 பேர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்:
- மாதவ் காட்கில் அறிக்கை பற்றிய செய்திகளை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லுதல்..
- மலைவாழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் வனவளங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிலரங்க தகவல்கள் சில:
- இமயமலையை விட தொன்மையானவை மேற்குத்தொடர்ச்சி மலைகள்..
குஜராத், மகாராஷ்டிரம், கோவா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் தொட்டியாகச் செயல்படுபவை மேற்குத்தொடர்ச்சி மலைகள்..
இந்தியாவில் 40 விழுக்காடு மழைப்பொழிவிற்கு காரணமானவை..
கடந்த 3000 வருடங்களாய் நாம் மேற்குத்தொடர்ச்சி மலைகளைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..
மேற்குத்தொடர்ச்சி மலைகள் யுனெஸ்கோவால் உலக புராதானச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைகள் உலகின் முதல் பத்து உயிரிப்பல்வகைமை நிறைந்த பகுதிகளில் (Hottest Biodiversity Area) ஒன்றாகும்.
1,60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது.
குறைந்தபட்சம் 48 கி.மீ. அதிகபட்சம் 210 கி.மீ. அகலம் கொண்டது இம்மலைகள்..- நமது நாட்டில் 25 கோடி மக்கள் மேற்குத்தொடர்ச்சி மலைகளைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 5000க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் 500க்கும் மேற்பட்ட பறவையினங்களும் 300க்கும் மேற்பட்ட பிற உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.
உலகில் அழிந்து வரும் அபாயத்திலுள்ள 350க்கும் மேற்பட்ட உயிரினங்கள் நமது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருக்கின்றன.
16 ஆறுகள் ஓடுகின்றன..
1845 அணைகள் இம்மலைத்தொடரில் இருக்கின்றன.
அதில் 50 பெரிய அணைகள்..
38 நீர் மின் திட்டங்கள் இருக்கின்றன.
சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் என 39 இடங்கள் இருக்கின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலைகள் பற்றி ஏற்கனவே மோகன்ராம் கமிட்டி, பிரணாப் சென் கமிட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.- மாதவ் காட்கில் கமிட்டி மார்ச்,2010ல் அமைக்கப்பட்டது.
மே,2012ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மாதவ் காட்கில் கமிட்டிக்கும் அடுத்ததாக கஸ்தூரி ரங்கன் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது.
மாதவ் காட்கில் அறிக்கையின் நோக்கம் இயற்கை வளங்களை பாதுகாப்பது, தக்கவைப்பது, புணரமைப்பது..
மக்களை வலுக்கட்டாயப் படுத்தாமல் அவர்களைப் புரியவைத்து அவர்களின் பங்கேற்போடு பரிந்துரைகளை அமல்படுத்துவது..
மோகன்ராம் கமிட்டி, மத்திய மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் சட்டங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது காட்கில் அறிக்கை..
காட்கில் தனது அறிக்கையினை அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியில் மொழிபெயர்த்து வழங்கவேண்டும். தன்னார்வ அமைப்புகள், கிராம சபைகளில் இந்த அறிக்கை விவாதிக்கப்படவேண்டும் என விரும்பியுள்ளார்..
காட்கில் தனது பல்வேறு பரிந்துரைகளையும் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான மக்கள் குழுக்களில் விவாதித்து முடிவெடுக்க வலியுறுத்துகிறார்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளை 9கி.மீ × 9 கி.மீ. என்ற அளவில் 2200 கிரிடூகளாகப் (பாதுகாக்கப்பட்ட பகுதி) பிரித்து அதனை மூன்றாக வகைப்படுத்தி உள்ளார்.
ESZ-1ல் 60% பகுதியும் ESZ-2ல் 25% பகுதியும் ESZ-3ல் 15% பகுதியும் வருகிறது. (ESZ-ECOLOGICAL SENSITIVE ZONE)
நமது தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் ESZ-1ல் வருகிறது. போடிநாயக்கனூர் ESZ-2ல் வருகிறது.
புதிய குடியிருப்புகள் கட்டுவது, ஹோட்டல்கள் கட்டுவது இயலாது.
ஏற்கனவே மலைகளில் வாழ்கின்ற மக்கள் வெளியேற்றப்படமாட்டார்கள்.- அவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பிற்கேற்ப குடியிருப்புகளை விரிவுபடுத்திக்கொள்ளலாம். ஆனால் புதியதாகக் குடியேற, காலனிகள் அமைக்க இயலாது.
புதிய அணைக்கட்டுகள் கட்ட முடியாது. வேதித்தன்மை, நச்சுத்தன்மை உடைய பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி கிடையாது.
வேதி உரங்கள் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தி வருபவர்கள் குறித்த கால நிர்ணயத்திற்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சுரங்கத்தொழில், மணல் அள்ளுதல் கூடாது.
புதிய நீர் மின் திட்டங்கள் கூடாது.
இயற்கைக்கு கேடுவிளைவிக்காத சுற்றுலாக்களை ஊக்குவிக்கலாம்.
இயற்கை வேளாண்மை செய்வோர் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
கஸ்தூரி ரங்கன் அறிக்கை காட்கில் அறிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளது
அறிக்கைகள் எதுவாயினும் இயற்கை பாதுகாப்பு குறித்த அக்கறையும் அதற்கான செயல்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்குவோம்
--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI
No comments:
Post a Comment