முதல் பக்கம்

Oct 3, 2011

சளி.. என்ற.. கொடுமைக்காரன்..!

 மருதனின்..குழந்தை..
என்ன மருதா எங்க பொறப்புட்டே..கையிலே புள்ளையோட?

ரெண்டு நாளா இதுக்கு சளி.. மூக்கு ஒழுகிக்கிட்டே இருக்கு. என்ன கை வைத்தியம் பாத்தும், ஒண்ணும் சரியாகலே..!

பேசாம நம்ம பட்டு டாக்டர் கிட்டே போ..! ஒரு ஊசிதான்..பட்டுன்னு சளி காய்ச்சல் எல்லாம் ஓடியே போயிடும். ரொம்ப கைராசியான டாக்டர்பா..!

அதான், அவர்கிட்டதான் கூட்டிட்டுப் போறேன். புள்ள சரியா சாப்பிட்டு ரெண்டு நாளாவுது. சரி. நான் வர்றேன்பா..! .என்று சொல்லியபடி குழந்தையுடன் நடையைக் கட்டினார் மருதன்.

சளி..(நெருங்கிய)..நண்பனா?..பகைவனா..?

மருதனின் குழந்தைக்கு மட்டுமா சளி/தடுமன் பிடிக்கிறது? ஆ.. ஆ.. ஆ.. அச்சூ..! பிளீஸ் எக்ஸ்கியுஸ் மி..என்கிறோமே? இது என்ன? இதன் பெயர்தாங்க.. சளி..தடுமன்...ஜலதோஷம்..எல்லாம் .! உலகில் கோடானுகோடி மக்களுக்கு தினமும் சளி/தடுமன் பிடித்துக்கொண்டேதான் இருக்கிறது. சளி, மூக்கு ஒழுகல், இருமல், காய்ச்சல் இவைகளிலிருந்து மனிதன் தப்பவே முடியாதா? முடியவே முடியாது நண்பா..! நீங்கள் எங்கிருந்தாலும் அது வந்து நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். அவ்வளவு பாசம் நம் மேல் அதற்கு ..! நண்பா, நீங்கள் பிறந்ததிலிருந்து உங்களுக்கு எத்தனை முறை சளி பிடித்திருக்கும் என்பதை கணக்கிட்டு சொல்ல முடியுமா? அதே போல,வாழ்வில் சளியே பிடிக்காத மனிதர் யாரையாவது நீங்கள் காட்ட முடியுமா? இரண்டிற்குமே பதில் இல்லை என்பதுதான்..!

சோசலிச...சளி..!
சளி பிடித்தால், சனியன் பிடித்தது போல என்று ஒரு பழமொழி உண்டு..! சனியன் இருக்கோ, இல்லையோ தெரியாது. ஆனால் , யாரும் சளியின் வலைப்பிடியிலிருந்து தப்பவே முடியாது.அதற்கு, ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. ரொம்ப சோசலிசவாதி இந்த சளியார்..! எல்லோரையும் ஒரு கை பார்த்துவிடுவார்.அதனால்தான், இதனை, பொது(ஜன) சளி( common cold) ) என்று அழைக்கின்றனர். இதன் காரணம் என்னவெனில், இதற்கான அறிகுறிகளும், பொதுவாக இது குளிர் பருவத்தில் ஏற்படுவதாலும் , பொதுவான சளி என்று செல்லமாக பெயரிடப்பட்டது. இந்த பெயர் சளியாருக்கு 16 ம் நூற்றாண்டில்தான் சூட்டப் பட்டது.

சளி.. மருந்து.. உண்டா..?
உங்களுக்கு, சளி/தடுமன் பிடித்திருந்தால், மருத்துவரிடம் போனால், ஒரு வாரத்தில் சரியாகப் போகும். போகாவிடில், 7 நாட்களில் சரியாகும் என்று விளையாட்டாய் கூறுவார்கள். இது 100 % உண்மை. ஏனெனில், சளியை முழுதும் கட்டுப் படுத்த உலகில் மருந்தே கிடையாது. வந்தால், அதன் பலனை ஒருவர் அனுபவித்தே தீரவேண்டும். மேலும் சளியின் காரணகர்த்தா, வைரஸ்தான். இதனை அழிக்க, விஞ்ஞானிகள் இனிதான் மருந்து கண்டுபிடிக்கவேண்டும்.சளிக்கு என கொடுக்கப் படும் மருந்துகள், அதனைக் கட்டுப்படுத்தாது. அதன் பக்க விளைவுகளை மட்டுமே சரி செய்யலாம். என்னதான் மருத்துவரிடம் போனாலும், சளியாரின் ஆட்சி குறைந்த பட்சம் 7 நாள்..அதிக பட்சம் 14..நாள்.!

சளியின்...காரணி..வைரஸ்..!
சளிக்குழந்தையின் தாய் ஒருவரல்ல . 200 க்கும் மேற்பட்ட வைரஸ்கள் இதற்கு சொந்தம் கொண்டாடுகின்றன. பொதுவாக நம்மைக் குறி வைத்து தாக்கும் 99% சளி, ஏற்படுவது ரைனோவைரஸ்(rhinovirus) (30%-50%) மற்றும் பைகார்னாவைரஸ்(picornavirus) இவைகளால்தான். இவைகளைத் தவிர, கரோனாவைரஸ்(coronavirus) 10-15%, இன்புளூயன்சா (influenza) 5-15%, மனித பாராஇன்புளூயன்சா வைரஸ் (human parainfluenza viruses ), அடினோவைரஸ் (adenovirus), மற்றும் மெட்டாநிமூமோவைரஸ் (metapneumovirus) போன்ற வைரஸ்களும் சளியை உண்டுபண்ணுகின்றன.உலகில்,மிக மிக அதிகமாக தொற்றும் வியாதி சளிதான். ஏனெனில் சளியை உண்டுபண்ணும் வைரஸ்கள் காற்றின் மூலம் பரவுவதுதான்..!

தொண்டையிலே..கிச்சு..கிச்சு..
அது சரி..! சளி என்றால் என்ன? அது நம்மை என்ன செய்யும்? வந்தால்தானே..அதன் கொடுமை தெரியும் என்கிறீர்களா? அதுவும் சரிதான்..! சுவாசக் குழாயின் மேல் பகுதியைப் பாதிக்கும் ஒரு வைரஸ் மூலம் வரும் தொற்று வியாதிதான் சளி.அதாவது முதலில் மூக்கையும், தொண்டையையும்தான் பாதிக்கிறது. இந்த வைரஸ், மூக்கின் உட்பகுதியிலுள்ள தோலின் வெளிப்புற செல்களைத் தாக்குகிறது. இந்த வைரஸ்கள் இருக்கின்றனவே..இவைகளால், உடலின் செல்கள் தவிர, வேறு எங்குமே வாழ முடியாது. இதன் குணம் என்ன தெரியுமா? சளி முதலில், தொண்டையிலே, கிச்சு, கிச்சுவில்தான் அச்சாரம் போடுகிறது. பின் மூக்கில் நீர் வடிதல், தொண்டை கமறல், தும்மல், மூக்கிலிருந்து தொடர்ந்து நீர் ஒழுகுதல், மூக்கடைப்பு, தொண்டை எரிச்சல், இருமல், பின் சளி இறுகி கட்டியாதல், இதனுடன் உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி,குளிர், முடிவில் சிலருக்கு காய்ச்சலும் வந்துவிடும். வாயில் சுவையுணர்வு இருக்காது. பசி குறையும். இதெல்லாம் சளியார் நமக்குததரும் பலன்கள்.

வைரஸ்..மீண்டும்..மீண்டும்.. தாக்குமா..?
பொதுவாக, வைரஸ் வியாதிகள் ஒரு முறை வந்தால், மறுமுறை வராது; மீண்டும் தாக்காது. ஏனெனில், அதற்கான எதிர்ப்பு சக்தியை, ஒரு முறை வந்தபோதே, உடல் உருவாக்கி விடுவதுதான். ஆனால், மீண்டும்,மீண்டும் சளி பிடிப்பதன் காரணம் என்ன தெரியுமா? சளி 200 க்கும் மேற்பட்ட வைரஸ்களால் உண்டாவதால், ஒவ்வொரு முறையும், நம்மை வேறு,வேறு வைரஸ்கள் தாக்குகின்றன. மேலும் நாம் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல, தகவமைத்து வாழ்வதுபோல, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் தங்களை தகவமைத்துக் கொள்கின்றன. அதுபோலவே, சளிக்கான வைரஸூம் தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு, புதிய வகை வைரஸ்கள் உருவாகின்றன. எனவே, நம்மை ஒவ்வொரு முறை சளி பிடிக்கும்போதும், புதிய, புதிய வகை சளி வைரஸ்களே தாக்குகின்றன. இதனால், நம் உடலில், உலகில் உள்ள ஒவ்வொரு சளிக்கும் எதிரான, தற்காப்புத்திறன் உருவாக வாய்ப்பு இல்லை.
வைரஸ் தாக்கிய பின் தான்,மீண்டும் அந்த வைரஸ் தாக்காதபடி, உடலில் தற்காப்புத்திறன் உண்டாகும். எனவே, எல்லா வைரஸூக்கும் சேர்த்து வைத்து, உடல் தற்காப்புத் திறனை ஒருபோதும், உருவாக்காது.

சின்னக்..குழந்தையின்..சளித்தொல்லை..!

பொதுவாக, ஒரு குழந்தை, பள்ளி செல்லத் துவங்கி விட்டால், அதற்கு, வருடத்திற்கு, 6-12 முறை சளி பிடிக்கும்.பெரியவர்களுக்கு, 2-4 தடவை, சளி வர வாய்ப்பு உண்டு. ஆனால், பொதுவாக குளிர் காலத்திலும், மழைக்காலத்திலும்தான் இந்த தொல்லை அதிகமாக ஏற்படும். வருடத்தின் பிற காலங்களிலும் சளி பிடிக்கலாம். பிறந்த குழந்தையானது, தாற்கலிகமாக சளிக்கான வைரஸை எதிர்க்கும், தற்காப்புத்திறனை, தன் தாயிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. ஆனால், பிறந்து 6 மாதமானதும், இந்த தற்காப்புத்திறன், கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவிடுகிறது. அதன்பின், குழந்தை சுமார் 100 வகை சளி வைரஸ்களின் தாக்குதலை சமாளிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகள் தன் பெற்றோருடனும், மற்ற பெரியவர்களுடனும் நெருக்கமாக உறவாடுவதால், அவர்களுக்கு எளிதில், மற்றவர்களிடமிருந்து சளி தாவிவிடுகிறது.இப்படியே, வயதாக, ஆக, சளி பிடித்து, பிடித்து, சில வகை சளி வைரஸ்களுக்கு, பெரியவர்களின் உடலுக்கு தற்காப்புத்திறன் வந்துவிடுகிறது.

குளிர் நீர்/மழைநீர்..சளியின்..காரணி..?

பொதுவாக, நம் மக்கள் நினைப்பது போலவோ அல்லது இவர்களின் கருத்துப்படியோ, சளி மழையில் நனைவதாலோ, குளிர் காற்றாலோ, குளிர் நீராலோ வருவதில்லை. சளி பிடித்த ஒருவரிடமிருந்தே, சளி மற்றவருக்குத் தொற்றுகிறது. இந்த தொற்று நாம் அறியாமலே நடக்கிறது. எப்படி தெரியுமா? சளிக்கான வைரஸ், ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு பரவுகிறது.சளி பிடித்த ஒருவர், தன் மூக்கைத் தொட்ட கைகளால்தான், எல்லா பொருட்களையும் தொடுகிறார்.சளிக்காரர் தொட்ட பேனா, பென்சில், பேப்பர் மூலமாகக் கூட சளி ஒட்டும். கைகளின் மூலமாக,சளி பரவும் ஊடகமாக பணி புரிபவை பேனா, தேனீர் குவளை,பாத்திரங்கள், கதவின் கைப்பிடி,புத்தகம்,கைக்குட்டை,தொலைபேசி மற்றும் கணினியின் தட்டச்சு போன்றவையே. இவைகளில் ஒட்டிய சளி வைரஸ் பல மணி நேரம், இன்னொரு உயிரின் வருகைக்காக காத்திருக்கும், தன் உயிர் வாழ்தலுக்காக. மேலும் தும்மல் மற்றும் இருமல் மூலமும் சளி பரவுகிறது..அந்த துளி எதன் மேலாவது பட்டு, நீங்கள் தொட்டால்..! குழந்தைகளிடமிருந்தே, பெற்றோருக்கு சளி பரவுகிறது. குளிர் காற்றில் செல்வதால், சளி பரவாது.

சளி..வைரஸின்..ஆட்சிக்காலம்..!

சளி வைரஸ் நம் உடலில் நுழைந்த 8-12 மணி நேரத்தில், தனது வாழ்க்கை சுழற்சியை மீண்டும், மீண்டும் மறு உற்பத்தி செய்கிறது. . இது நுழைந்து 2-5 நாட்களில்,சளிக்கான அறிகுறிகள் நம் உடலில் தோன்றத் துவங்குகின்றன.சிலருக்கு 10 மணி நேரத்துக்குள்ளேயே தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும்.இதன் முதல் பணியே.. அறிகுறியே... தொண்டையிலே.. கிச்சு..கிச்சுதான்..! பின்னர், உங்களுக்கு என்ன வைரஸ் பாதித்துள்ளதோ, அதைப் பொறுத்தே, தும்மல்,இருமல், உடல்வலி, தலைவலி, தொண்டைக் கமறல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். சளி பிடித்த நபர்களிடமிருந்து, முதல் 2-3 நாட்களில்தான், மற்றவருக்கு இது தொற்றும். 7 நாட்களுக்கு மேலாகி விட்டால், இது மற்றவரிடம் ஒட்டாது. பொதுவாக சளியினால் உண்டாகும், சங்கடங்கள், முதல் 7 நாட்களுக்குதான். பின்னர் அதன் வீரியம் குறைந்து விடும். சிலருக்குத்தான், அது இருமலாக மாறி அடுத்த 7 நாட்கள், உடலில் முகாமிட்டுவிடும்.

சளி வைரஸும்...நமது..தற்காப்பு..படையும்..
!
சளி வைரஸ் தாக்கியதும், நமது உடலிலுள்ள தற்காப்பு மண்டலம் வினைபுரியத்துவங்கும். இது,மூக்கிலுள்ள இரத்த நாளங்களை லேசாக வீங்க/விரிய வைப்பதன் மூலம், திறக்க வைக்கும். அதனால்தான், உள்மூக்கின் தோல் பகுதியிலிருந்து, வழ வழப்பான திரவம் சுரந்து வெளியேறுகிறது. இதனால்தான், மூக்கு வடிதலும், மூக்கடைப்பும் ஏற்படுகிறது. பிறகு..தும்மல் வருகிறார்..! நீர் கோர்த்து அதன் வழியே, வைரஸ் நுரையீரலுக்குள் உள்ள செல்களை எட்டிப் பார்க்கிறது. பின்,அங்கும் வழ வழப்பான திரவம் சுரத்தல், பின்னர், அதன் தொடர்ச்சிதான்.. இருமல்.! உடலின் தற்காப்பு மண்டலம், வைரஸூடன் நடத்தும் போரின் வெளிப்பாடுதான், சளி, காய்ச்சல் போன்றவை. போரின் விளைவால், நம் உடலிலுள்ள பல சிவப்பணுக்கள் பலிகடா ஆகின்றன. இறந்த சிவப்பணுக்கள், சளித் திரவத்துடன் கலந்து, நிறம் மாறி, மஞ்சள் நிற கட்டியான சளியாக இருமும்போது, வெளியேறுகிறது.நமது தற்காப்பு மண்டலம், முழுமையாக வைரஸ் அரக்கனை போரிட்டு துரத்திய பின் தான், நமக்கு சளித் தொல்லையிலிருந்து, முற்றிலும் உடல் குணமாகிறது.

சளியிலிருந்து...பாதுகாப்பு..எப்படி..?

நாம், கொஞ்சம் கவனமாக இருந்தால், சளியின் சிலந்தி வலையிலிருந்து தப்பிக்கலாம். எப்படி இந்த சனியனிடமிருந்து தப்பிப்பது என்கிறீர்களா? சளி பரவுவதைத் தடுப்பது என்பது, குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என்பதுதான்..! சோப் வேண்டியதில்லை.வெறுமனே கை கழுவினால் கூட போதுமானது. இதைவிட சிறந்த தடுப்பு முறை வேறு இல்லை. இதன் மூலம் வைரஸ் நம்மேல் பரவுவதைக் தடுக்க முடியும். நம்மை இந்த வைரஸ் தாக்காமலும், தப்பிக்கலாம்.பொதுக் கழிப்பறை, பொது நீர் அருந்துமிடம் இவற்றைத் தவிர்த்தால், கூடியவரை பொது இடங்களில் எதனையும் தொடாமல் இருத்தல் மூலமும்,சளி தொற்றுவதை தவிர்க்கலாம் . குழந்தைகளுக்கும் கைகழுவும் பழக்கத்தை உண்டு பண்ண வேண்டும். நாம் அடிக்கடி தொடும் இடங்களை கிருமி நாசினி போட்டு துடைத்து வைக்க வேண்டும். எப்போதும் வெளியில் போய்விட்டு, வீட்டுக்கு வந்ததும் கைகால்களைக் கழுவ வேண்டியது மிக,மிக அவசியம். கைகால் கழுவுவது என்பது, நம்மை பலவகை கிருமிகளிலிருந்து
காப்பாற்றுகிறது.

சளி..மருந்தால்..நிறுத்தப்படுமா..?

ஒருவர், நல்ல உடல்நிலையில் இருந்து,அவருக்கு சளி பிடித்தால் , மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை. தானாகவே சரியாகி விடும். மேலும், எதிர் உயிரி மருந்துகளால் எந்த பயனும் இல்லை. சிலசமயம், இவற்றால் மோசமான நிலைமையும் கூட உண்டாகலாம். ஆனால், சளியால் ஏற்படும் பக்க விளைவுகளான,மூக்கடைப்பு, தலைவலி, உடல்வலி, போன்றவைகளுக்கு , மருந்து தேவை. சளியின் மூலம் காய்ச்சல் வந்து, 101 டிகிரியைத் தொட்டால், கட்டாயம் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். குழந்தை சளியினால், விழுங்க கஷ்டப்பட்டால், அப்போது மருத்துவரிடம் உடனே போக வேண்டும். ஆவி பிடித்தால், மூக்கடைப்பிலிருந்து தாற்காலிக நிவாரணம் பெறலாம். சளி வைரசை நேரிடையாக தாக்கும், கட்டுப்படுத்தும் நிறுபனம் செய்யப்பட்ட எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்பதே உண்மை. இப்போது கிடைக்கும், கொடுக்கப்படும், எதிர்-வைரஸ் மருந்துகள் எதுவும் முழுமையாக நிரூபிக்கப் படவில்லை என்பதே உண்மை. இதனால் எதிர் விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

சளியின்..ஆட்சியில்..நாம்..செய்ய வேண்டியவை..!
சளி வந்திருக்கும்போது, நிறைய நீர் அருந்த வேண்டும். ஏனெனில் நம் தற்காப்பு மண்டலம் நன்கு பணி புரிய அதிகம் நீர் வேண்டும். மேலும், சளி பிடித்திருக்கும்போது, நிறைய நீர், சூடான உணவு,அதிக உப்பு போன்றவை சளியுடன், நாம் போராட உதவுகிறது. நிறைய பழச்சாறுகள் அருந்த வேண்டும்.முக்கியமாக, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை சாறு போன்றவற்றை குடிக்க வேண்டும். எலுமிச்சை வகை பழங்கள் சாப்பிட வேண்டும். ஏனெனில், இதில்தான் அதிகம் வைட்டமின் சி (C) உள்ளது.இதன் மூலம் தற்காப்புத் திறன் அதிகரிக்கும்.வைட்டமின் சி தான் , நோய்களின் தொற்றை தடுக்கிறது என்பதற்கு நோபல் பரிசு விஞ்ஞானி, லினஸ் பாலிங் (Linus Pauling ), வைட்டமின் சி யும், பொதுசளியும் என்ற புத்தகம் எழுதி உள்ளார். மேலும் சளி வந்தால், அதிக நேரம் தூங்க வேண்டும். தூக்கம்தான், அனைத்துவகை நோய்களையும், விரைவாக குணப்படுத்துகிறது, என ஆராய்ச்சி மூலமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.மேரிலாந்து பல்கலைக்கழகமும், நிறைய தூக்கமும், நிறை நீர் அருந்துவதும் மட்டும்தான், சளிக்கு மிகச் சிறந்த மருந்து எனத் தெரிவித்துள்ளது. 6 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு, சளிக்காக மருந்தோ அன்றி இருமல் மருந்தோ கொடுக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர். குழந்தைகளுக்கு தொடர்ந்து நீண்ட காலம் சளி இருந்தால்/அடிக்கடி பிடித்தால்,சில சமையம் அது காது பிரச்சினையை உண்டாக்கலாம். நீங்கள் சளி வந்திருக்கும்போது, உள்ளுக்கு சாப்பிடும் மருந்துகளைவிட, வெளியில் போடப்படும் கற்பூர தைலம், மெந்தால், நீலகிரி தைலம் போன்ற மருந்துகள் பாதுகாப்பானவை. பிரச்சினை தராதவையாகும் .

சளி வைரசின்.. இருப்பிடம்.. மனித மூக்கே..!

அதிக மன அழுத்தம், தூக்கமின்மை,தற்காப்புத்திறன் குறைவு, புகைப்பவர்கள், போன்றவையும் கூட, சளி எளிதில் நம்மைத் தாக்க உதவுகிறது.மன அழுத்தம் இல்லாமையும், கைகளால் அடிக்கடி முகத்தை தொடாமல் இருந்தாலே, சளி தாக்குவதை தடுக்கலாம் என ஸ்டேன்ஸ் போர்ட் பல்கலை சொல்கிறது. சளிக்கான வைரஸ் மனித உடலில் மட்டும்தான் வாழும். Royalty-free cartoon styled clip art graphic of a human nose characterஅதுவம்,மூக்குதான் அவருக்கு விருப்பமான இடம். மற்ற உடல் பாகங்கள் அல்ல.சிம்பன்சி போன்ற மனித இனத்தை ஒட்டிய விலங்குகளில்தான் வசிக்கும். மற்ற விலங்குகளின் உடலைத் தாக்காது. ஏனெனில், அங்கு இது வாழும் சூழ்நிலை இல்லை. மேலும் எந்த வைரஸும், வெளி சூழலில் வாழாது. உயிர்களின் உடல் செல்கள்தான் இவர்களின் இருப்பிடம். 
 by Mohana Somasundram

8 comments:

  1. தகவலுக்கு நன்றி

    பி.எ. ஜெயதாஸ்

    ReplyDelete
  2. migavum alagaga solli irukirirkal migavum payanullathaga irunthathu nanri..

    ReplyDelete
  3. migavum payanullathaga irunthathu. ipothuthan sali vanthal yen sikkiram sariyavillai enra vinavuku vidai kidaithathu.,mikka nanri..

    ReplyDelete
  4. அறிவியல் பூர்வமான சிறந்த விளக்கங்கள். மகிழ்ச்சி. நாட்டு மருந்து குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு சளியை குணப்படுத்த உதவுமா ?

    ReplyDelete
  5. அறிவியல் பூர்வமான சிறந்த விளக்கங்கள். மகிழ்ச்சி. நாட்டு மருந்து குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு சளியை குணப்படுத்த உதவுமா ?

    ReplyDelete