முதல் பக்கம்

Oct 20, 2011

சர்வதேச காடுகள் ஆண்டை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் புகைப்படக் கண்காட்சி


காடுகள் அழிந்து வருவதன் அபாயத்தையும் காடுகளைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை 2011ம் ஆண்டை சர்வதேச காடுகள் ஆண்டாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் 33% காடுகள் அவசியம் இருக்கவேண்டும்.அப்படி இருந்தால் மட்டுமே காடுகளை நம்பி இருக்கக்கூடிய அரியவகை பாலூட்டிகளையும் பறவைகளையும் பூச்சிகளையும் அழியாமல் காக்கமுடியும். உலகின் பல்லுயிர்ச் சமநிலையைச் சீராக வைத்துக்கொள்ள முடியும்.



எனவே இந்த கருத்துகளை மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பேராசிரியர்கள், அறிவியல் இயக்கக் கருத்தாளர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களைக் கொண்டு கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்திவருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளையின் சார்பில் அக்டோபர்,8,2011 பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை சர்வதேச காடுகள் ஆண்டை முன்னிட்டு சுருளிப்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் கருத்தரங்கம் மற்றும் அரிய வனவிலங்குகளின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.கம்பம் கிளைத்தலைவர் மா.சிவக்குமார் தலைமை வகித்தார். கிளைப்பொருளாளர் ஓவியா தனசேகரன் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் அறிமுகவுரை யாற்றினார். மாவட்ட உதவி வன அலுவலர் திருமிகு.முத்துக்குமார் கண்காட்சியைத் திறந்துவைத்து, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் காடுகளைப் பற்றி மாணவர்களுக்கு மிக எளிமையாக விளக்கிக் கூறினார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் துறைப்பேராசிரியர் முனைவர்.எஸ்.கண்ணன் வனவிலங்குப் பாதுகாப்பு வாரம்(அக்டோபர் 2-8) அனுசரிக்கப்படுவதின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினார். வன அலுவலர் திருமிகு.இராஜசேகரன் வனப்பாதுகாப்பு தொடர்பான பாடல்களைப் பாடினார். காடுகள், வனவிலங்குகள் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு கருத்தாளர்கள் விளக்கமளித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இன்பசேகரன் நிறைவுரையாற்றினார். கம்பம் கிளைச்செயற்குழு உறுப்பினர் சி.ஈஸ்வரன் நன்றி கூறினார். கம்பம்,கூடலூர்,கே.எம்.பட்டி, சுருளிப்பட்டி,நாராயணத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 6 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்கள் மற்றும் கம்பம் சரக வன அலுவர்கள் கலந்து கொண்டனர். 








(தே.சுந்தர்,மாவட்டச்செயலாளர்,த.அ.இ.

No comments:

Post a Comment